Wednesday 26 February 2014

நுனிப்புல் மதிப்புரை - எஸ். ஐஸ்வர்யா

மதிப்புரை 

நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் கிடைத்துவிட்டால் தேடல்கள் முடங்கிவிடும். பதில் கிடைக்கப் போவதும் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது தெரிய வேண்டுமெனில் நாம் ஓர் எல்லையை கடந்து தேடுதலை விரிவுப்படுத்த வேண்டும். இந்த நாவலும் இதை நோக்கிய செல்கிறது, சென்று நம்மை தேடுதல் என்னும் மலை அடிவாரத்தில் நிறுத்தி பின் மலை உச்சியில் இருக்கும் உண்மையினை அறிய யாத்திரையை தொடர்கிறது. அப்படிப்பட்ட ஓர் களத்தில் தான் ஆசிரியர் கதாபாத்திரங்களை பயணிக்க செய்துள்ளார். கதாபாத்திரங்கள், நம்முள் பலமுறை தோன்றிய கேள்விகளின் எதிரொலி எழுந்து நின்று விடை தேட முயற்சிக்கின்றனவோ என்பது போல் தோன்றியது.

இயற்கைத் தாயின் அரவணைப்பில் செழித்துக் கொண்டிருக்கும் கிராமத்தில் இருந்து கதை தொடங்கிகிறது. சாதாரண விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை முறையைத் தொட்டு, சமூக சிந்தனையை தெளித்துஅறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பி பின், கடவுளிடம் வந்து நின்று உள்ளக்கதவை தட்டிவிடுகிறது.

அறிவியல் சார்ந்த பல நுண் கருத்துக்களை விளக்கி கூற முயற்சித்தது வரவேற்கதக்கது. உயிர் ஆக்கம் செயல்பாடு குறித்தும், மரபியல் ரீதியான ஆராய்ச்சிகள் குறித்தும் கதாபாத்திரங்கள் மூலமாக பேசப்பட்டது நன்று. இன்னும் பேசப்பட்ட அறிவியல் கூற்று சிந்திக்க வைப்பவையாக இருந்தது 

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களின் நோக்கத்தை முன்நிறுத்தியே அனைத்தும் செல்வதாக காட்டினாலும் பின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கும் தொடர்புடையவையே என்ற உலகின் முக்கிய நியதியை முன்கொண்டு வந்து மெய்யூட்டிவிடுகிறது .

பெரியவர், பாரதி,மாதவி, திருமால், பெருமாள், பூங்கோதை போன்ற பாத்திரங்கள் நம்மை கவர்ந்தது மட்டுமின்றி அவர்களின் சுமைகளை நாம் சிறிது சுமந்தது போல் எண்ணத் தோணிற்று.

பெரியவர்களை போற்றுதல், அனைவரிடமும் அனுசரித்தல் போன்ற தனிமனித குணத்திலும்குழந்தைகளுக்கு பாடங்களையும் நற்கருத்துகளையும் போதித்தல், ஊர் பொறுப்பை ஏற்று மக்களை வழிநடத்தல்தன் நலமின்றி பிறர் நலத்திற்க்காக உழைத்தல் போன்ற சமூக அக்கறை கொண்டவனாகவும், மனஎழுச்சியின் போது தாயிடம் குமுறுவது, அறிந்தும் அறியாமலும் தன்னுள் உறங்கிகொண்டிருக்கும் கேள்விகள் எழும் தருவாயில் விடை தேடும் மனப்போராட்டங்களின் போது என அத்தனை இடங்களிலும் தன் பரந்த மனதைக்கொண்ட இக்கதாநாயகன் வாசன் நம் மனதில் வாசம் செய்துவிடுகிறான்.

ஆனால் இந்த யாத்திரை முழுவதும் ஆசிரியர் நம்மை இக்கதையின் இன்னொரு நாயகனை உடன் வைத்து கொண்டே அவனை நோக்கி  பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் அவன் தன் பாத்திரத்தை வேண்டியளவு மட்டுமே வெளிப்படுத்துவது போன்றே கதை நகர்கிறது. அந்த நாயகனே நாராயணன் .

நுனிப்புல் மேய்தல் ஒவ்வொருவரையும் அடி முதல் முடி வரை நோக்கி உள்பொதிந்திருக்கும் கருத்தை திறந்து எடுக்க மனையின் வாசலில் நாம் காத்திருக்கும் நிலையை ஏற்ப்படுத்துகிறது!.

நன்றி


எஸ். ஐஸ்வர்யா

மிக்க நன்றி ஐஸ்வர்யா .

Tuesday 25 February 2014

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - பாபிலோன் ஓரினச்சேர்க்கை

எகிப்தியர்கள் பற்றி தொடர்ந்து பார்க்கும் முன்னர் பாபிலோனியா குறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் செல்வோம். பாபிலோன் எனும் தலைநகராக கொண்டு உருவானதுதான் பாபிலோனியா பேரரசு. தற்போதைய ஈராக் அன்றைய பாபிலோனியா. அஷ்ஷிரியர்கள் குறித்து முன்னரே பார்த்து இருந்தோம். அவர்களுடன் ஒரு போட்டி அரசாக உருவானதுதான் இந்த பாபிலோனியா. கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு வருடங்கள் முன்னர் உருவாக்கி இருநூறு வருடங்கள் கோலோச்சி நின்ற அக்காடியன் எனும் பேரரசுவில் இருந்து ஹமூராபி எனும் அரசனால் உண்டாக்கப்பட்டது இந்த பாபிலோனியா. இந்த பகுதிகளில் வாழ்ந்த பலரும் செமிடிக் மக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். செமிடிக் அல்லாத மக்கள் சுமேரியன் என அழைக்கப்பட்டார்கள். இந்த பாபிலோனியர்கள், அஷ்ஷிரியர்கள் எல்லாம் அக்காடியன் என்பதுடன் செமிடிக் மக்கள் தான்.

ஒரு மொழி எப்படி அழியும் என்பதற்கு இந்த பாபிலோனியர்கள் ஒரு சாட்சி. அதாவது நமது சமஸ்கிருதம் எப்படி வழக்கொழிந்து இந்தி கோலோச்சி கொண்டு இருக்கிறதோ அதைப்போலவே இந்த பாபிலோனியர்கள் காலத்தில் சுமேரியன் மொழியானது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அக்காடியன் மொழி வடிவம் ஏற்றுக்கொண்டது. இறைவழிபாடுக்காக மட்டுமே சுமேரியன் மொழி இருந்ததை கூட பாபிலோனிய பேரரசு உருவானபின்னர் சுமேரியன் பேச்சு மொழியாக கூட இல்லை.

பாபிலோன் நகரம் ஒரு கலாச்சார, வழிபாட்டு தலமாக மட்டுமே அக்காடியன் பேரரசு காலத்தில் இருந்தது. பாபிலோன் முன்னால் என்ன இருந்தது என்பது குறித்து பின்னர் பார்ப்போம். சுமேரிய நகரங்கள் என்பது ஒரு தனிக்கதை. எலாம் பிடியில் இருந்து பாபிலோன் நகரத்தை மீட்டவர் இந்த ஹமூராபி.


                                                            படம் நன்றி: விக்கிபீடியா

இந்த ஹமூராபி அப்படியே பக்கத்தில் உள்ள நகரங்கள் எல்லாம் தனது பிடியில் கொண்டு வந்து பாபிலோனிய பேரரசு ஒன்றை உருவாக்கினார். இந்த ஹமூராபி அஷ்ஷ்ரியர்களின் பேரரசுவின் இடங்களை கூட தனதாக்கி கொண்டார். இவரது ராணுவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு நாட்டிற்கு என்ன சட்ட திட்டங்கள் தேவை என்பதை சுமேரியர்கள், அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் எழுதியதை எல்லாம் தொகுத்து ஹமூராபி கொள்கை என கொண்டு வந்தவர் இவர். இந்த கொள்கைகளை படித்துப் பார்த்தபோது மனுசாஸ்திரம் சொன்ன பல விசயங்கள் இதில் தென்பட்டது. 1901ம் வருடம் இந்த ஹமூராபி கொள்கை கண்டு எடுக்கப்பட்டது.

பாபிலோன் நகரம் தோன்றுவதற்கு முன்னர் நிப்பூர் எனும் நகரில் என்லில் எனப்படும் கடவுள் போற்றப்பட்டு வந்தார். ஒரு அரசர் உருவானதும் தலைநகரம் மாறுவது அந்த காலகட்டத்தில் வழக்கமாக நடைபெறுவது உண்டு. அப்படித்தான் ஹமூராபி பாபிலோனியா பேரரசு உருவான பொது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாம் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை ஹமூராபிக்கு உண்டு.

வணிகம், அறிவியல், கலை, கட்டிடம் என கோலோச்சிய பாபிலோனியா சிதைந்து போனது எவ்வாறு நான் எப்பவோ கூறியது போல நாம் எவ்வித மதத்துக்காரராக இருந்தாலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூல்களை புறக்கணிக்காமல் படித்து வந்தால், அதாவது கடவுள் இது செய்தார், அது செய்தார் என்பதை தவிர்த்து, நமது மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து வந்தார்கள் என்பது புலப்படும்.

ஒரு பெரிய கப்பலில் சின்ன துளை இருந்தால் தண்ணீர் உட்புகுந்து எப்படி அந்த முழு கப்பலும் கடலில் மூழ்கிவிடுமோ அதை போன்றே தெற்கு மெசொப்டொமியா பகுதியானது வலுவிழந்து இருந்தது. ஹமூராபி இறந்தபின்னர் சரியான அரசர் வழிநடத்த கிடைக்காமல் தெற்கு மெசொப்டொமியா பகுதி முதலில் கைப்பற்றபட்டது. அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் இதுதான் தருணம் என சில பகுதிகளை அவர்கள் கைவசம் கொண்டு வந்தார்கள். ஹிட்டிடைஸ் மற்றும் கச்சிடிஸ் போன்றவர்களின் தாக்குதலால் இந்த பாபிலோனியா சிதறுண்டு போனது.

பாபிலோனியர்களின் தொங்கு தோட்டம், ஹமூராபியின் கோட்பாடு போன்ற பல விசயங்கள் காணும் முன்னர் ஜெனிசிஸ் குறித்து வைத்த இரண்டு நகரங்கள் பற்றி இப்போது காண்போம். இந்த இரண்டு நகரங்கள் சுடோம் மற்றும் கொமோரா. இந்த நகரங்கள் உண்மையிலேயே இருந்தனவா என்பதற்கு ஆதாரங்கள் தேடி அலுத்து போனார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரங்கள் இருந்தன என சொல்லுமளவிற்கு சில ஆதாரங்கள் இருக்கிறது என்றே தற்போது சொல்லப்படுகிறது. முழுவதுமாக ஜெனிசிஸ் படிக்காமல் இந்த இரண்டு நகரங்கள் குறித்து எழுதவியலாது என்றாலும் சில குறிப்புகள் குறித்து பார்ப்போம்.

சுமேரியர்கள் அரசர் உர்குர் ஒரு செமிடிக் மன்னன். அப்போது நிறைய கோவில்கள் உருவாக்கப்பட்டன. உர்குர் இதற்கு முன்னர் எந்த அரசரும் செய்யாத விசயங்களை செய்து வந்தான். வெள்ளம் ஏற்பட்டால் அதை தடுக்கும் பொருட்டு ஐந்து ஏக்கர் நிலத்தில் எட்டு அடி உயரத்தில் செங்கற்கள் கொண்டு ஒரு பெரிய பரப்பு  நிப்பூர் நகரத்தில் எழுப்பினான். இதன் அடிப்புறத்தில் தண்ணீர் சென்று வரும்படி  கலைவடிவத்துடன் உருவாக்கப்பட்டது. இதற்கு மேல் ஜிக்குரட் எனப்படும் டவர் ஒன்று எழுப்பப்பட்டு அது ஒரு கோவில் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாறு பல கோவில்கள் எழுப்பப்பட்டு பிற்காலத்தில் பாபிலோனியர்களின் வழிபாட்டு தலங்களாக மாறின. இந்த ஜிக்குரட் பைபிளில் என்லில் எனப்படும் தேவனுக்காக எழுப்பட்ட ஆலயம் என்றே குறிப்பிடுவதாக சொல்கிறார்கள்.

இந்த தருணத்தில் தான் ஏலமிடிஸ் பெரும் தாக்குதலை சுமேரியர்கள், அக்காடியர்கள் மீது ஏற்படுத்தியது. அப்போதிருந்த பாபிலோன் அரசன் சுமு அபி எனப்பட்டான். அவன் சுமேரியர்கள், அக்காடியர்கள் செமிடிக் மக்களுடன் போராடிக்கொண்டு இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. ஏலமிடிஸ் எல்லா வரலாற்று விசயங்களையும் அழித்தார்கள். எல்லா கோவில்களும் சிதறடிக்கப்பட்டன. இப்படி சில விசயங்கள் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது பாபிலோனியா வரலாறை குறிப்பிடுகிறது என்கிறார்கள்.

சாக்கடல் அல்லது செங்கடல் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நகரங்களை தனது கரைகளாக கொண்டது. இந்த கடலின் கரைகளில் எழுப்பப்பட்ட நகரங்கள் தான் சுடோம், கொமோரா. இந்த சுடோம், கொமோரா நகரங்கள் ஒழுக்கத்தின் முறைகேடுகளாக, ஓரினச்சேர்க்கை கொண்டவர்களாக திகழ்ந்தது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நகரத்தின் அடிப்படையில் சுடோமி என்ற ஆங்கில வார்த்தை காமம் சம்பந்தமான விசயங்களை குறித்து அதற்குரிய சட்டங்களும் சுடோமி விதிகள் என குறிக்கப்பட்டன. இந்த ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள், அதுவும் மிருகங்களுடன் கலவி முறை எல்லாம் சுடோம் கொமாரா நகரங்களில் தலைவிரித்து ஆடியது அதனால் தான் அந்த நகரங்கள் பேரழிவுக்கு கடவுளால் பணிக்கப்பட்டது என்கிறது ஜெனிசிஸ். இதனுடன் சேர்த்து மூன்று நகரங்கள் ஜெனிசிசில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நகரங்கள் இயற்கை பேரழிவினால் அழிந்து இருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.

                                படம் நன்றி: சாக்கடல், செங்கடல் விக்கிபீடியா

ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடி இந்த நகரங்களை காத்திட பத்து நல்லவர்கள் இருந்தால் போதும் என கண்டதுதான் லாட் எனப்படுபவன். ஏஞ்சல்கள்  லாட் என்பவனை சந்தித்து சாப்பிட்டதாகவும், லாட்டிடம் உனக்கு வந்த விருந்தினரை எங்களுடன் கலவி செய்ய அனுமதி என அந்த நகரத்து மக்கள் கேட்டதாகவும், லாட் அதற்கு மறுத்து தனது இரண்டு கன்னி மகள்களை தருவதாக சொன்னதாக குறிப்பு இருக்கிறது. அதை மறுத்து அந்த மக்கள் லாட்டினை தாக்க முற்பட இந்த ஏஞ்சல்கள் லாட்டினை காப்பாற்றி பத்து நல்லவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாததால் லாட் குடும்பத்துடன் இந்த ஏஞ்சல்கள் வெளியேறின. லாட் மனைவி கெட்டவள் என்பதால் அவளை அந்த நகரத்திலேயே விட்டுவிட்டு போனதாக கதை சொல்கிறது. இப்படி ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள் மூலம் அழிந்ததுதான் இந்த நகரங்கள். இதே நிலைமை பாபிலோனுக்கும் வந்து சேரும் என்றுதான் குறிப்பில் உள்ளதாம்.

பலதார மணத்தினை இந்த மெசொப்டொமியா நகரங்களில் கொண்டு வந்த காரணம் கலவியில் அதிக ஈடுபாடு கொண்ட மக்கள் என்பதை தவிர வேறு என்ன பதில் இருக்க இயலும். பாபிலோனியா அழிவிற்கு காரணம் காமம் ஓரினச்சேர்க்கை என்றே சொல்லிட ரோம பேரரசும் ஆமாம் அதுதான் என சொல்லி செல்கிறது.

இதே ஓரினச்சேர்க்கை விவகாரம் இன்றைய காலகட்டத்தில் கூட பெரிதாக விவாதிக்கப்படும் அவலம் பார்த்தீர்களா. அதுதான் வரலாறு திரும்புகிறது என சொல்வார்கள். இன்றைய சமூகத்தில் GAY, LESBIANS ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தினர் என்பது ஏற்றுக்கொள்வதை தவிர வேறு என்ன வழி. இன்றைய இளைய தலைமுறையினர் இதை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. We like it, we follow it, keep your nose out என்பதே தாரக மந்திரம். இப்படி எல்லாம் இந்த சுடோம், கொமோரா, பாபிலோன் நகரங்கள் இருந்ததை இறைவன் பொறுக்கவில்லை என்கிறது ஒரு கதை.

உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எதுவெனினும் தயவு செய்து விட்டொழியுங்கள். நம்மை அழித்துவிட கடவுள் தேவை இல்லை, நாம் போதும். 

பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் பற்றி இன்னமும்

(தொடரும்)

Monday 24 February 2014

கதிர்வேலனின் வில்லாவில் பிரியாணி

சினிமா பார்ப்பது போன்று ஒரு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. அதுவும் பாப்கார்ன் கொறித்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதைகளை ரசிப்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. இதை பண விரயம் என்றெல்லாம் சொல்லி முடித்து விடமுடியாது. சினிமா எதையோ மக்கள் மனதில் காலம் காலமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறது. ஆனால் மக்கள், ஆமா இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதாக்கும் என்றே மனபாவத்தில் படங்களை அணுகுகிறார்கள்.

இது கதிர்வேலனின் காதல். ஒரே வரிக்கதை. அப்பாவின் சம்மதத்துடன் தனது காதலியை கரம் பிடித்துவிட  நினைக்கும் காதலன். இப்போது இதை சுற்றி ஒரு திரைக்கதை பின்னப்பட வேண்டும். அவ்வளவே. காதலிக்கு ஒரு கெட்ட நண்பன், காதலியின் அப்பாவுக்கு ஒரு பலமில்லாத எதிரி. காதலுனுக்கு ஒரு நகைச்சுவை நண்பன், ஒரு காதலித்து ஓடிப்போன அக்கா, காதலை எதிர்க்கும் தந்தை. இப்படியாக திரைக்கதை முடித்தாகிவிட்டது. காதலில் ஒரு தவிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதை படம் முழுவதும் தெளித்து இருக்கிறார்கள். மனதில் எதுவுமே ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. காதல் புளித்துப் போன ஒன்றாகிவிட்டது.

அப்படியே வில்லா பக்கம் போனால் பில்லி சூனியம் இதற்கு ஒரு அறிவியல் பின்னணி, நரபலி என்றெல்லாம் சொல்லி தமிழ் உலகம் இன்னும் மாறவில்லை என்றே சொல்லி முடிக்கிறார்கள். ஓவியத்தில் வரையப்பட்டது எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு தோரணையை உருவாக்கி இருக்கிறார்கள். திகிலும் இல்லை ஒண்ணுமில்லை. படம் மெதுவாக ஊர்ந்தால் அது இலக்கியத் தரமிக்கது என்றெல்லாம் தமிழ் சினிமா நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு காதல். தனது காதலியை தான் மணமுடித்து கொல்ல வேண்டுமே என இறந்து போகும் காதலன், கதைநாயகன். ஆனால் அந்த மணவாளன் வேறு என முடியும் படம். ஒரு சுறுசுறுப்பு வேண்டாம். இது பிட்சா எனும் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லி இருந்தார்கள், பிட்சா படத்தின் முதல் பாக கதை மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து அதுபோன்று தமிழில் சினிமா வர இயல்வதில்லை இதனால் தான் ஜில்லா, ஆரம்பம் போன்ற மசாலா படங்கள் எப்போதும் தமிழில் கொடிகட்டி பறக்கின்றன.

மசாலா படங்கள் கொடி கட்டி பறக்கின்றன என பிரியாணி பக்கம் போனால் அது என்ன கதை என நினைத்து கூட பார்க்க இயலவில்லை. வெஜிடபிள் பிரியாணியா, சிக்கன் பிரியாணியா. சிக்கன் பிரியாணி கதை தான். எதிர்பாராத திருப்பங்கள் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்க முயற்சி செய்து இருந்தார்கள். யார் கொலையாளி என்பதை படம் முழுக்கத் தேடவிட்டு இருந்தார்கள். சினிமா என்றால் பொழுதுபோக்குதான். அதை சற்று கனகச்சிதமாகவே இந்த பிரியாணி முடித்து இருந்தது. இந்த காட்சி எதற்கு, அது எப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பாமல் வாசமிக்க பிரியாணி தான்.

இப்போது தமிழ் சினிமா இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது. நாங்க எங்க இஷ்டத்துக்கு படம் எடுப்போம், அது எங்களுக்குப் பிடிச்சி இருக்கு. உங்களுக்கு பிடிச்சி இருந்தா எங்க தயாரிப்பாளுருக்கு லாபம் இல்லைன்னா நஷ்டம். மத்தபடி படைப்பாளிக்கு ஒரு படைப்பு எப்பவுமே உசத்திதான். மோசமான படம் என நினைத்தால் தயாரிப்பாளர், இயக்குனர் அந்த படத்தை தயாரிக்க இயக்க முன்வருவாரா, இல்லையே. படைப்புதனை தர வேண்டும், அதில் பணம் பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் சற்று சிந்திப்பது நலம். எவர் இதை எல்லாம் கருத்தில் கொள்ளப்போகிறார்கள்.

இந்த திரைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் கிடைப்பது குறித்து பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். வெளிநாடுகளுக்கு தியேட்டரில் படம் வருகிறதோ இல்லையோ புத்தம் புது காப்பி என டிவிடி கிடைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சில படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என நினைக்கும் மக்களையும் இந்த விமர்சகர்கள், கருத்து சொல்லிகள் படம் வந்த முதல் நாள் அன்றே படத்தை குறித்த கருத்துகளை இணையதளத்தில் தெளித்துவிடுவதால் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று கணிசமாக கூடவோ குறையவோ  செய்கிறது. விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் என்பது கூட கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

எனவே இனிமேல் தமிழ் சினிமா கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து ஒரு படம் எடுப்பதைவிட குறைந்த பணத்தில் அற்புதமாக படம் படைத்து நகர வேண்டும் என்பதே ஒரு வேண்டுகோள். எவரும் செவிமடுக்க போவதில்லை என்பது வேறு விஷயம். 

Thursday 20 February 2014

காமத்தின் மீதேறி

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' இப்படித்தான்  ஒரு விளம்பரத்துடன் கூடிய வாசகம் ஒரு தொலைகாட்சியின்  நிகழ்ச்சியின் ஊடே வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது. 

ஒரு பெண் ஆணை கற்பழிப்பு செய்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. ஆனால் திருமணம் ஆனபின்னும் மனைவியின்  சம்மதம் இல்லாமல் கணவன் உடல் உறவு கொள்ள முனைவானேயானால் அதுவும் கற்பழிப்புக்கு சமம் என்றே இந்த வாசகம் சொல்லிக்கொண்டு இருந்தது. 

அப்படியெனில் ஆணுக்கு என்று ஒரு மனம் இருக்கும் இல்லையா, அவனுக்கும் கற்பு எல்லாம் இருக்கும் தானே. கணவன் விருப்பம் கொள்ளாத சமயத்தில் மனைவி வற்புறுத்தினால் அதுவும் கற்பழிப்பு என்றே சொல்லலாம். ஆனால் அது இல்லை. அந்த விளம்பரத்தில் பெண்ணை ஆண் துன்புறுத்துவதாகவே அமைகிறது. 

கண்ணீருடன் அந்த பெண் திரும்பி படுத்துக் கொள்ளும் காட்சி கண்டு மனம் திடுக்கிடவே செய்தது. மனைவியின், கணவனின் விருப்பம் இல்லாமல் தாம்பத்ய வாழ்க்கை  என்பது கொடுமையான விஷயம். ஆனால் உலகில் நடப்பது வேறு. 

தனது இச்சைகளை தீர்த்து கொள்ளும் போக பொருளாகவே ஒரு பெண் பெரும்பாலும் இல்லறத்தில் நடத்தப்படுகிறார். உங்க வீட்டுல எப்படி என்று எல்லாம் எந்த கேள்வியும் இங்கே எழ வேண்டிய அவசியம் இல்லை, எவருடைய அந்தரங்க வாழ்விலும் தலையீடு செய்ய எனக்கோ உங்களுக்கோ உரிமை இல்லை. 

ஆனால் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. எப்ப பார்த்தாலும் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சலித்து போய்விட்டது, அப்பப்ப ஹோட்டல் சாப்பாடு நல்லது என குதர்க்கமாக பேசும் ஆண் சமூகத்திற்கு ஈடாகவே பெண் சமூகம் பேசும் எனில் ஒரு பிரளயம் நடந்தே தீரும். பெரும்பாலான மனைவிகள், கலவிக்கு எங்களை வலுக்கட்டாயமாக கணவன்மார்கள் ஈடுபட செய்கிறார்கள் என்கிறது ஒரு நிகழ்வு. இதையெல்லாம் வெளியில் சொல்லித் திரிய வேண்டி அவசியமில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு. 

குறிப்புணர்தல் என்பது எப்போது மனைவி தயாராக இருக்கிறார் என்பதை அறிந்தே அதன் பின்னர் இந்த தாம்பத்யம் நிகழ வேண்டும் என்கிறது இலக்கியம். அதாவது ஆண் குறித்து எந்த இலக்கியமும் கவலை கொள்ளவில்லை. ஆண் இது குறித்து பேசுவான் எனில், சிந்திப்பான் எனில் அவனை காமுகன் என்றே பட்டம் கட்டிவிடுகிறது சமூகம். தலைவன் தலைவி எனும் இலக்கியம் குறித்து எழுதிட கண்ணகி, மாதவி, கோவலன் போதும். 

இது ஒரு இல்லற வாழ்க்கை. பெரும்பாலான விவகாரத்துகளின் அடிப்படை இதுதான். இல்லற தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு காரணம் ஆகிறது. கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்றவைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடு, ஆனால் கலவியை அன்பின் வெளிப்பாடு என எண்ணாமல்  இச்சையின் வெளிப்பாடு என்றே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆணோ, கலவி என்பது அன்பின் வெளிப்பாடு என நினைப்பது நியாயமா என தெரியாது. 

திருமணம் கூட கலவிக்கான ஒரு கட்டுப்பாடு, தீர்மானம், சுதந்திரம் என்றே சமூகத்தில் ஒருவித எண்ணம் உண்டு. ஆனால் அதைக்கூட விருப்பத்துடன் செய் என்றே சொல்லி முடிக்கிறது கோட்பாடு. இருவரின் விருப்பத்துடன் நடைபெற வேண்டும் திருமணம், அதுபோலவே எல்லா விசயங்களும் இருவரின் விருப்பத்திற்கேற்ப நடந்தால் ஆயிரங்காலத்து பயிர் செழிப்பாக வளரும். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை 
அடைத்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
வலி தான். 

காமத்தின் மீதேறி 
அன்பின் வழியதை
திறந்து விட்டால் 
வாழ்நாள் எல்லாம் 
சுகம் தான். 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு''  இந்த வாசகம் திருமணம் முடிந்தவர்களுக்கு  மட்டுமா. திருமணத்திற்கு முன்னர் உடலுறவு என்பது தவறு என்றே சமூகத்தில் ஒரு எண்ணம் உண்டு. இதற்கு சமூகத்தின் எச்சரிக்கை என்னவெனில் வேண்டாத குழப்பங்கள் வந்து சேரும் என்றும் பாதுகாப்பு அற்ற வாழ்வு என்றும் சமூகத்தில் பெயர் கெடும் என்பதுவே. ஆனால் ஒரு பெண், ஒரு ஆண் காதலில் திளைத்து இருக்க காமத்தின் மீதேறி களவு செய்வாரெனில் அவரை எவர் தடுக்க இயலும். களவொழுக்கம் என்றே இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அது அவரவர் விருப்பம், ஆனால் அதற்கு பின்னர் ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்தே இந்த சமூகம் அக்கறை கொள்கிறது. சீர்கெட்டு விடாதே என்றே சொல்கிறது. 

விபச்சாரம் என்பது விருப்பமில்லாத ஒன்று பலருக்கு. ஆனால் பணத்தின் மீது  விருப்பம் கொண்டே இதை ஒரு தொழிலாக கொள்வோர் சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை எதிர்த்து போரிடாத சமூகம் வியப்புக்குரியது. அவை பாலியல் பலாத்காரம் என்றே சொல்லப்படுவதில்லை. எந்த பெண்கள் சமூக அமைப்புகளும் அது குறித்து போர்க்கொடி உயர்த்தியதாக தெரியவில்லை. அங்கே அனைவரும் விருப்பம் கொண்டா இருக்கிறார்கள், ஆனால் அவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்றே சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது. 

மேலிருக்கும் வாசகம் மீண்டும் அந்த நிகழ்வில் ஓடுகிறது. 

''விருப்பமில்லாத ஒருவருடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு'' 

இவர்கள் மீது எல்லாம் எதற்கு கற்பழிப்பு சட்டங்கள் பாய்வதில்லை. இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரு விஷயம் இந்த கற்பழிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற அட்டூழியங்கள் தான். 

உலகில் இந்த காம உணர்வை கட்டுக்குள் வைத்துவிடும் மருந்து ஒன்று உண்டா என்றே தெரியவில்லை ஆனால் காம உணர்வை நீடித்து வைக்க மருந்து உண்டு. 

காமத்தின் மீதேறி
பணம் பண்ணும் 
கயமைத்தனம் சமூகத்தில் 
புரியவொண்ணா செயல் 
காமத்தின் மீதேறி 
இளம் பிஞ்சுகளை 
இயந்திர பொருளாக்கி 
பெண் இனத்தை 
பேதலிக்க செய்யும் 
கொடிய சமூகம் 

நிகழ்ச்சி முடிவடைகிறது. 

காமத்தின் மீதேறி கயமைத்தனம் போகும் எனில் காதல் திளைத்து இருக்கும். 

Wednesday 19 February 2014

ஆண் கேட்க வந்தவள்

அடேங்கப்பா ஆண்டாள் - 4

பெண் பார்க்க போறது எல்லாம் ஒரு வைபவம் மாதிரியே நடக்கும். முதலில காமிப்பாங்க, அப்புறம் ஜாதகம் பார்ப்பாங்க இதெல்லாம் சரியா இருந்தா பெண் பார்க்க போவாங்க. அப்புறம் பெண் பார்க்க போற இடத்தில் பெண்ணுக்கு என்ன என்ன தெரியும்னு கேட்டுட்டு பையனுக்கு என்ன வேலை, எவ்வளவு சம்பளம் வரைக்கும் பேசி அப்புறம் பலகாரங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொடுத்து அதோட ஒரு காப்பி கொடுப்பாங்க.

இந்த பொண்ணு அன்னைக்குன்னு சும்மா ஜெகஜோதியா அலங்காரம் பண்ணி உலகத்திலே இல்லாத வெட்கத்தை எல்லாம் ஒரு சேர முகத்தில் சேர்த்து அன்னப்பறவை நடை சேர்த்து குனிஞ்ச தலை நிமிராமல் அப்படியே பாத்தும்  பாக்காமல் காபி கொடுத்துட்டு போவாங்க. பொண்ணு பிடிச்சி இருந்தா அந்த நேரத்தில் பையன் முகத்தில் தெரியும் கலக்கமிகுந்த சந்தோசம் ஒருவித  வெட்கம்தான்.

இப்ப எப்படி ஊருல பொண்ணு பார்க்கும் வைபவம் எல்லாம் நடைபெறுகிறதுன்னு தெரியலை. இதே மாதிரிதான் கிட்டத்தட்ட இருக்கும்னு வைச்சிக்கிரலாம். கல்யாணத் தரகர் பண்ண வேண்டிய வேலையை திருமண இணையதளங்கள் பண்ணி கொடுக்குது இப்ப.

சில விசயங்கள் மனசுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு எல்லா வைபவங்களும் நடைபெறுது. எப்படினாலும் பெண் கேட்கும் படலம் இருக்கத்தான் செய்து. இது அந்த காலத்தில் கூட உண்டு. சீதையை பெண் பார்க்க வந்த அரசகுமாரர்களுக்கு போட்டி வைத்து அதில் வில் உடைத்து வென்ற ராமனே மணாளான். உண்மையிலேயே ராமன் வில் உடைத்தது அவருடைய பராக்கிரம உடல் வலிமை எல்லாம் கிடையாது. எல்லாம் சீதையின் கடைக்கண் பார்வை வந்த வலிமைதான். என் வலிமை பெண்ணால் வந்ததா அப்படின்னு ராமர் வருத்தப்படமாட்டாரு.

ஆனா ஒரு பெண் ஆண் கேட்க இந்த பூவுலகில் வலம்  வந்தாள். அவள் தான் நம்ம ஆண்டாள். உனக்கு எந்த மணாளன் வேண்டும் எடுத்துக்கொள் என்று எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்குப் பிடித்த மணாளானை தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள். ஆனால் அந்த மணாளானை தான் தேர்ந்தெடுக்கும் முன்னர் பட்ட பாட்டிற்கு தமிழ் பெருமை கொண்டது.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோராச் சோர்வேனை 
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே 

என்னை சேராதிருந்தால் அந்த திருவேங்கடத்தானுக்கு என்ன பெருமை, என்னை இப்படி அழ வைக்கின்றானே, என் பெண்மையை அழிக்கின்றான் என மேகங்களிடம் சொல்லித் தவிக்கும் ஆண்டாள் தவிப்பு மேகங்களிடம் ஆண் கேட்டவள். நீ உடன் இருக்க நான் வேண்டினேன் என்பதுவே இது.

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு 
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் 
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே 

மார்புடன் மார்பாக தான் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் பிறந்து இருக்கிறேன் என சொல்லுமாறு மேகங்களை பணித்த ஆண்டாள், வேங்கடவனின் மார்பில் அந்த நப்பினை பிராட்டி இருப்பதை தெரிந்தேதான் கேட்கிறாள். அடடே ஆண்டாள் பிறரின் கணவன் உனக்கு ஏனடி என்று பெற்ற அப்பா ஓங்கி நாலு அறைவிடாமல் எந்த மணாளன் வேண்டுமென சொல் என்றல்லவா சொல்லி இருக்கிறார் என்பது ஏனெனில் நப்பின்னையே ஒரு ஆண்டாள் உருவம் கொண்டு வந்ததுதான், ஆக அந்த பரந்தாமன் எழுந்தருள வேண்டியதுதான் பாக்கி.

தனக்கு என ஒரு மனைவி இருக்க எப்படியம்மா அவன் கீழிறங்கி வருவான் என்றே நாம் நினைக்க அந்த பரந்தாமன் அருள் பாலித்து வந்தான் என்றே சொல்கிறது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் காதல் தூய்மையானது.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் 
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே 

இந்த பாடலுக்கு ஏதோ ஆண்டாள் பரந்தாமனுடன் ஒருநாளேனும் வாழ்ந்து அதாவது கலவி செய்து விடவேண்டுமென ஆசைப்பட்டு அழைப்பது போல் ஓரிடத்தில் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டாளின் எண்ணம் கலவிக்காக அன்று. அது காதல். ஒரு நாளேனும் அவர் வந்து என்னை அரவணைத்துக் கொண்டால் எனது கொங்கைகளின் மேல் நான் தடவி இருக்கும் குங்கும பூச்சு அழியும், அந்த ஒருநாள் என் உடன் இருக்கும் அன்பு கூட போதும். நான் அந்த நப்பினை பிராட்டியின் அவதாரம் என்றே அந்த பரந்தாமன் அறியமாட்டாவோ என்பதற்கே ஒருநாள் போதும், என் உயிர் வாழும் என்கிறாள்.

அடேங்கப்பா ஆண்டாள், நீ கொண்ட அந்த பரந்தாமன் மீதான காதலில் உனது மார்புக்கு நீ கொடுத்த முக்கியத்துவம் எதற்கு என்றே எண்ணிப் பார்க்கிறேன். காரணம் உனக்கு தெரியாததா ஆண்டாள்.


(தொடரும்) 

Friday 14 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 3

உண்மையிலேயே ஆண்டாள் பற்றி பேச எனக்கு தகுதி இருக்கானு தெரியலைங்க. ஆனால் ஆண்டாள் பற்றி விஜயபாஸ்கர பட்டர் எழுதின புத்தகத்தில் இருந்து ஏராளாமான விஷயங்கள் ஆண்டாள் பற்றி தெரிஞ்சிக்கிரலாம்.

அந்த புத்தகத்தில் ஒவ்வொரு நாச்சியார் திருமொழி எழுதின காரணத்தை சொல்லி இருப்பாங்க. இப்படியா ஒரு பெண் தன்னை அலைக்கழித்து கொள்வார் என்றே எனக்கு தோணியது. எல்லாம் இந்த பெரியாழ்வார் பண்ணின வேலை. சும்மா இருக்காம எப்ப பார்த்தாலும் கண்ணன் கண்ணன் சொல்லி சொல்லியே ஆண்டாளை இப்படி பண்ணிட்டாரு.

ஆண்டாள் அப்படின்னு பேரு கூட பெரியாழ்வார் கொடுத்ததுதான். இந்த பெரியாழ்வார் பத்தின கதை, ஆண்டாள் பத்தின விபரங்கள் எல்லாம் அப்புறம் பாக்கலாம்.

இந்த ஆண்டாள் எதுக்கு இப்படி எழுதினாள் அப்படின்னு நான் நினைச்சிட்டே இருப்பேன். அந்த பாட்டு இப்போ இங்கே.

சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தெனொல்லை விதிக்கிற்றியே

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிருமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மேலிருக்கும் பாடல் எல்லாமே முதல் திருமொழி. இப்போ இதுக்கு இந்த மூணு பாட்டு தேர்ந்தெடுத்தேன் தெரியுமா, எல்லாம் காரணமாகத்தான். எங்க கிராமத்தில எல்லாம் தாய்ப்பால் அப்படின்னு சொல்வாங்க. முலைப்பால் அப்படின்னு ஒருத்தரும் சொல்லமாட்டாங்க. இப்ப எல்லாம் இந்த தாய்ப்பால் விஷயம் எல்லாம் விளம்பரம் பண்ணிற மாதிரி ஆகிப்போச்சு. இந்த தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கடத்தப்படற விஷயம் எல்லாம் அறிவியல் இப்போ சொன்னதுதான். ஆனா இது எல்லா பாலூட்டி ஜீவராசிகளும் வழக்கம் போல செய்வதுதான்.

இந்த பெண்ணின் அங்கம் ஒரு கவர்ச்சி என்ற விதத்தில் மாறிப்போனது நமது துரதிர்ஷ்டம். பாரதியார் கூட கச்சணிந்த கொங்கை மாந்தர் என எழுதினார். அதைவிட அபிராமி பட்டர் ஒருபடி மேலே போய் எழுதி இருப்பார். அவரை பிறகு பார்ப்போம். பைத்தியமாடா உங்களுக்கு என்று இவர்களை ஏசி விடத்தோணுமா, தோணாது. ஆனால் இதை எல்லாம் ஒரு இலக்கியத்தில் வைத்து அழகு பார்த்தார்கள். இந்த வரிகளை படிக்கும்போது ஒருத்தரும் தவறான எண்ணங்களை மனதில் கொண்டு வரமாட்டார்கள், காரணம் என்ன தெரியுமா. அதுதான் அடேங்கப்பா என பிரமிக்க வைக்கும் எழுத்துகளின் ஆளுமை. பெண்களை இப்படித்தான் வர்ணிக்கவேண்டும்  என்பதல்ல. அது காதலின் உச்சகட்டம், கலையுணர்வில் காமம் தெரிவதில்லை என்பதற்கே கல்லில் எல்லாம் நிர்வாண கோலங்களை செதுக்கி வைத்தார்கள். உணர்வில் மறைத்தும், உணர்வற்ற ஒன்றில் வெளிப்படுத்தியும் காட்டியது அன்றைய கலை.

இன்றைக்கு வேண்டாம், எல்லாமே வக்ர துண்டாய தீமஹி என ஆகிவிட்டது. தனது எண்ணத்தை ஆண்டாள் வெளிப்படுத்தினாள், அதைத் தேடிப் படித்து அவள் இப்படி எழுதிவிட்டாள் என சொல்வது நமது குற்றம். கெட்ட நோக்கத்தில் இப்போது சொல்லிவிட்டு ஆண்டாள் மட்டும் எழுதலாமா என்றால் நம்மால் ஆண்டாள் போல் பக்தியை வெளிக்காட்ட முடியுமா என்ன. நினைத்த போதெல்லாம் காதலன், காதலி மாற்றும் நமது சமூகத்திற்கு ஆண்டாள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

இந்த ஆண்டாள் எதற்கு இப்படி எழுதினாள். தனது மார்பகங்கள் குறித்து எழுதவேண்டிய நிர்பந்தம் ஆண்டாளுக்கு வந்தது என்ன காரணம். ஒரு பெண் தனது காதலை இத்தனை வெளிப்படையாகவா சொல்ல இயலும். அதுவும் அந்த மன்மதனிடம் மன்றாடினாள். தான் ஒரு பெண் என்பதையும் அந்த எம்பெருமானுக்கே என்னை கொடுத்தேன் என்பதையும் காதலால் கசிந்துருகி சொன்னாள். இதில் எவ்வித விரசமும் இல்லை. எங்கள் கிராமமும், எங்கள் கிராமத்து அம்மாக்கள் எல்லாம் மிகவும் சகஜமாகவே பேசுவார்கள். ஆனால் இன்றைய நாகரிகம் எல்லாம் மூடித்தொலைத்து காமம் என ஆக்கிவிட்டது. அதுசரி ஆண்டாள் எதற்கு சொல்ல வேண்டும் இதோ அவள் எழுத காரணமான காட்சி.


திருப்பாவை ஒன்றில் இப்படித்தான் பாடினாள்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்


அடேங்கப்பா ஆண்டாள். நீ தைரியமானவள். நான் மிகவும் கோழை.

(தொடரும்)

Thursday 13 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 2

ஸ்ரீவில்லிபுத்தூர் அப்படினாலே எனக்கு ரொம்ப பிடிச்சது பால்கோவா. ஐயோ எப்படி இருக்கும் தெரியுமா. அப்படியே மொத்தமா வாங்கி சாப்பிட்டு பழகி இருக்கேன். எங்க ஊருல ஒரு ஹெல்ப்பர் மாமா இருந்தாங்க, அவரோட பையன் ஸ்ரீதர். ஸ்ரீதர் என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன். இன்னமும் என் மேல மாறாத பாசம் வைச்சிருக்கிறவன். சின்ன வயசுல நிறைய புத்தகங்கள் வாசிப்பான். புத்தகத்தை கூட பத்து பைசா, பதினைஞ்சி பைசான்னு வாடகைக்கு தருவான். எங்க ஊருல இருந்து மல்லாங்கிணறுக்கு மாறி போனாங்க. ஆனாலும் ஊருக்கு வந்தா என்னை பாக்காம போகமாட்டான். நான்தான் ரொம்பவே ஒதுங்கி போயிட்டேன். இந்த வாட்டி தேடி வந்து பாத்துட்டு போனான். சந்தோசமாகவே இருந்தது. 

அப்புறம் அவங்க அருப்புகோட்டை போய்ட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவங்க ஸ்ரீவில்லிபுத்தூர்ல கொஞ்ச வருஷம் இருந்தாங்க. என்னை அங்க வந்து சில நாள்கள் இருக்க சொன்னாங்க. நானும் விடுமுறைக்கு  அங்க போயி ரெண்டோ மூணோ நாட்கள் தங்கி இருந்தேன். மலைகள் அது இதுன்னு இருந்தது. கோவிலுக்கு எல்லாம் போனேன். அங்கே ஆண்டாள் முகம் பாக்கிற கிணறு எல்லாம் காட்டினாங்க. நான் கூட ஆண்டாளோட முகம் எங்கனயாச்சும் ஒட்டிக்கிடாக்கானு பாத்தேன். சும்மா சொல்லலைங்க, எனக்கு ஆண்டாள் அப்படினா அத்தனை இஷ்டம். 

அப்புறம் எப்போ ஸ்ரீவில்லிப்புத்தூர் போனேன்னு எனக்கு தெரியாது. மறந்து போயிட்டேன். சமீபத்துல சில வருடங்கள் முன்னர்  நுனிப்புல் புத்தக விஷயமா நண்பர் ரத்தினகிரியை சிவகாசியில பார்த்துட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போனேன். அங்கே அனந்தசயன பட்டர் எனக்கு நிறைய கதைகள் சொன்னாரு. அதை வைச்சித்தான் நுனிப்புல் இரண்டாம் பாகத்தில் சில கதைகளை கலந்துவிட்டேன். எனக்கு அவருகிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருந்தது. 

எப்படி திருவில்லிபுத்தூர் உருவானது முதற்கொண்டு அந்த கதைகள் இருந்தது. எனக்கு பெரியாழ்வார் வம்சாவழி இருக்காங்களான்னு தேடிப் பார்க்கணும் போல இப்போ இருக்கு. ஆனால் அப்போ எதுவுமே எனக்கு கேட்க தோணலையே. அப்போதான் எனக்கு இந்த பெரியாழ்வார்தான் ஸ்ரீ ஆண்டாள் மாதிரி தன்னை உருவகிச்சி எழுதினாரு அப்படின்னு ஒருத்தர் சேதி சொன்னார். உடனே எனக்கு வந்த வாசகம் தான். ''உண்மையை யார் உண்மையாக இருக்க விட்டது'' அப்படின்னு. இதை முத்தமிழ்மன்றத்தில பார்த்த மணிப்பாண்டினு ஒரு நண்பர் இது ஞான வாக்கு அப்படினு சொன்னார். ஐயோ இது கோப வாக்கு அப்படின்னு மனசுல சொல்லிக்கிட்டேன். ஆமா எதுக்கு பெரியாழ்வார் தன்னை ஆண்டாள் மாதிரி வேஷம் போட்டு பண்ணனும். அவருக்கு வேறு வேலை இல்ல. அன்னைக்கி சொன்னவர்கிட்ட பதிலே பேசாம சிரிச்சிட்டே போய்ட்டேன். 

இந்த ஆண்டாள் யாரு பெத்த புள்ளையோ. என்னை எங்க ஊருல ஒருத்தர் 'உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினாங்க'னு சொன்னதும் ஓனு அழுதுட்டே போய் என்னை தவிட்டுக்கா வாங்கினீங்கனு அம்மாகிட்ட சின்ன வயசில கேட்டு இருக்கேன். அது கிண்டலுக்கு சொல்றதுன்னு அதுவரைக்கும் எனக்கு தெரியாது. எங்கம்மா சொன்னப்பறம் தான் படுபாவி பசங்க இப்படி கூட பண்ணுவாங்க என நினைச்சேன். அப்போதான் எனக்கு இன்னொரு விஷயம் தெரிய வந்திச்சி. இதைக்கூட எங்கேயாச்சும் சொல்லி வைச்சிருப்பேன். 

என்னோட சின்னம்மா அவங்களுக்கு ஆண் வாரிசு இல்லைன்னு என்னை தத்து எடுத்துகிறேன்னு சொன்னப்ப எங்க அப்பா திட்டி விட்டுட்டாராம். அப்படி ஒரு புள்ளைய எப்படி தர முடியும்னு. இப்ப கூட என் சின்னமாவை நினச்சா கஷ்டமா இருக்கும். என்னைய வேணும்னு கேட்டு இருக்காங்களே.ஆனா எல்லா அக்காக்களும் நல்ல முறையில திருமணம் முடிச்சி எல்லாருமே நல்லா இருக்காங்க. ஆண் வாரிசு, பெண் வாரிசு எல்லாம் ஒன்னுதேன். நாங்க வீட்டுல சின்னம்மா, பெரியம்மா எல்லாம் கூப்பிட மாட்டோம், எல்லோருமே அம்மாதான். 

அதிருக்கட்டும், அம்மா அப்பா தெரியாத ஆண்டாள் துளசி செடிக்கு கீழே கிடந்ததை பார்த்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் அப்படின்னு சொல்லுது ஆண்டாள் வரலாறு. அதாவது அந்த மகாலட்சுமியே அவதாரமாக வந்ததா நம்மளை எல்லாம் நினைக்க சொல்லுது வரலாறு. ஆனா நான் அப்படி நினைக்கலைங்க. என் ஆண்டாள் எவராலோ கைவிடப்பட்டவர். இந்த ஆண்டாளை இப்படி தன்னந்தனியா போட்டுட்டு போன பெற்றோர்களை நினைச்சா பரிதாபமாகவே இருக்கும். எப்படி ஒரு அற்புதத்தை தொலைத்துவிட்டார்கள்னு. இல்லைன்னா பெரியாழ்வாருக்கு பெயர் போகுமா. 

இப்போ பெரியாழ்வார் வீட்டில வளரும் ஆண்டாளுக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் அது பெரியாழ்வாரின் பக்தி அப்புறம் இந்த நாராயணன். சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடும் இந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார் பாடுற பாட்டு, நாராயணன் பத்தின அன்பு எல்லாம் சொல்ல சொல்ல தனக்குள்ளே ஆசைய ஆண்டாள் வளர்த்துக்காம என்ன பண்ணுவா. 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறாயிரம் அப்படின்னு சொன்னா எனக்கே சில்லுனு இருக்கே, எப்படி இருந்து இருக்கும் இந்த ஆண்டாளுக்கு. ஆண்டாள் போல இருந்த தோழிகள் எல்லாம் எதுக்கு ஆண்டாள் மாதிரி பாடலை. அதுதான் கொடுப்பினை. சரி, நான் சமீபத்தில ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போனேனா, அந்த ஆண்டாள் பார்த்தேனா. சின்ன பொண் போல என் கண்ணுக்கு தெரிஞ்சிதுங்க, பாத்துட்டே இருந்தேனா, கண்ணீர் கோத்திருச்சி. என்ன ஆச்சின்னு மனைவி கேட்டாங்க. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேன். 

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். அடேங்கப்பா ஆண்டாள். எப்படி இப்படி உன்னால் நினைக்க முடிந்ததுன்னு அப்ப நினைச்சப்ப வந்த கண்ணீர் அது. 

இப்ப கூட எங்கயாச்சும் உட்காந்து ஆண்டாள் பத்தி நினைச்சா கண்ணீர் கோத்துக்கும். என்னை பொருத்தவரை ஆண்டாள் ஒரு கற்பனை உலகத்தை தனக்கு உருவாக்கிகிட்டானுதான் தோணும். 

இந்த ஆண்டாள் நாச்சியார் திருமொழிக்கு காரணமே, திருப்பாவை கேட்டும் மனம் இரங்காத நாராயணன் தான் காரணம்னு சொல்வாங்க. ஒருவேளை இந்த நாராயணன் ஆண்டாள் இப்படி எல்லாம் பாடட்டும்னு நினைச்சி இருப்பாரோ. 

அனங்கதேவன் யாரு தெரியுமாங்க! சிவனால் உடல் எரிக்கப்பட்ட மன்மதன். அடேங்கப்பா ஆண்டாள். 

(தொடரும்)