Sunday 26 February 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - ஹிட்டிடேஸ்

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி, என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். இந்த வரிகள் உலகில் உள்ள பலருக்கும் பலவாறு பொருந்தும். சுடர்மிகு அறிவுடன் இருப்பவர்களே முட்டாள்தனமாக செயலாற்றும்போது அறிவற்று இருப்பவர்களின் நிலை குறித்து எதுவும் பேச வேண்டியதில்லை. எது சரி, எது தவறு என்பதில் காலமும், சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என வரும்போது அங்கே எதுவுமே உறுதியாய் நிற்பதில்லை.

ஹிட்டிடேஸ் என்பவர்கள் இந்திய-ஐரோப்பா மொழி பேசும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போதைய துருக்கி நாடும், அன்றைய பெரும்பகுதியான அனடோலியா எனப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள். இந்த அனடோலியா எனும் பகுதியானது கடல்களால் சூழப்பட்டதாகும். வடக்கே  கருங்கடல். மேற்கே ஏகன் கடல். தெற்கே மெடிடேரியன் கடல். மற்றும் மலைகளால் சூழப்பட்ட இடமாகும்.



இவர்களின் கலாச்சாரமும், நாகரிகமும் மறந்து போன ஒரு வரலாறாகவே ஆகிப்போனது. மேசபோடோமியா நாகரிகத்தில் உட்பட்ட ஒரு பிரிவினர் இவர்கள் என்றே தெரிய வருகிறது. இந்த அன்டோலியா பல்வேறு நாகரிகங்களுக்கு அடித்தளமிட்ட ஒரு இடமாகும். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டு, துருக்கியில் உள்ள ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் எழுத்து மாத்திரைகள் இவர்களது வாழ்க்கை முறை, சட்ட திட்டங்கள் எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இப்படியொரு நாகரிகம் இருந்தது என்பது தெரிய வந்தது. இவர்கள் மிகவும் தொன்மையான இந்திய-ஜெர்மானிய மொழி தெரிந்தவர்களாகவும், பல எழுத்து முறைகளை அறிந்தவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள். குறிப்பாக குநெய்பாரம் எனும் எழுத்து வடிவமாகும். சுமேரியன் காலத்தில் இந்த எழுத்து ஐயாயிரம் வருடங்கள் முன்னர் பயன்படுத்தபட்டவை. இவர்களின் மொழி நேசாலி என்றும் ஹட்டி என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் பற்றிய குறிப்பு பைபிளில் இருப்பதாக தெரிகிறது. அதனாலேயே இவர்கள் ஹிட்டிடேஸ் என அழைக்கப்படுகிறார்கள் என்கிறது வரலாறு.

இவர்களின் தோற்றம் மூவாயிரத்து எண்ணூறு வருடங்கள் முன்னர் என்றே அறியப்படுகிறது. இவர்கள் கிட்டத்தட்ட நானூறு வருடங்கள் போராடி பல பிரதேசங்களை தங்களின் ஆளுமைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். இவர்களின் காலம் வெண்கல காலம் ஆகும். அதற்கு பின்னர் இரும்பு காலத்தில் அடியெடுத்து வைத்தவர்களும் இவர்களே. இந்த இந்திய-ஐரோப்பா ஹிட்டிடேஸ் மக்கள் ஹட்டி எனும் ஒரு அரசமைப்பை அனடோலியாவில் இருந்த மக்களுடன் சேர்ந்து உருவாக்கியதாக குறிப்புகள் தென்படுகிறது. இவர்கள் வணிக வியாபாரம் செய்ய நகரங்களை உருவாக்கியபோது பக்கத்து பிரதேச மக்களுடன் சண்டை போட வேண்டி வந்ததால் ஹட்டுசா எனும் இவர்களின் நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் ஹட்டுசி எனும் அரசரால் அலெப்போ எனும் இடம் கைப்பற்றபட்டதும், ஹட்டுசா மீண்டும் அதி வேகத்துடன் உருவானது.

பின்னர் இவர்கள் சிரியா, லெபனான் போன்ற இடங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். லெபனான், சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், வன்முறைகள், கொலைகள் எல்லாம் எதன் அடிப்படையில் என்பதை இப்போது ஆராய வேண்டியது இல்லை. அந்த காலத்தில் எதிர்ப்புகள் மற்றும் பஞ்சங்கள் ஏற்பட்டதால் தேலேபினு எனும் அரசர் ஒரு அரசியல் அமைப்பை கொண்டு வந்தார். தேலேபினு கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் கோவில் இடங்கள், ராணிகள் இடங்கள் எல்லாம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. சரியாக நடைமுரைபடுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் மரண தண்டனைகள், வாரிசு நடைமுறை எல்லாம் அழித்தார் தேலேபினு.

ஹிட்டிடேஸ் சூரியனை கடவுளாக கும்பிட்டு வந்தார்கள். அதே வேளையில் ஆயிரம் கடவுளர்களை கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். புதிய புதிய கடவுளர்களை அவர்கள் அறிமுகபடுத்தி கொண்டே வந்தார்கள். இவர்களின் கடவுள் கலாச்சாரம் பெருமளவுக்கு இன்றைய இந்திய நாகரிகங்களுக்கு சரியாகவே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஒரு கடவுள் என்கிற கோட்பாடு பெருமளவில் இருந்து இருக்கிறது. ஹிட்டி ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் சுப்பிழுலியுமா என்பவர். உள் நகரங்கள், வெளி நகரங்கள் என பிரித்ததோடு இல்லாமல், ஹட்டுசாவை மிகப்பெரிய தலைநகரமாக மாற்றினார். ஒரு காலகட்டத்தில் எகிப்து நகரமே இவர்களின் கட்டுபாட்டிற்கு வர வேண்டிய சூழலில் எகிப்துவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பெண் கேட்டு சென்ற ஹிட்டிடேஸ் இளவரசர் சுட்டு கொல்லப்பட்டதால் இவர்களுக்கு எந்த உறவும் இல்லாமல் போனது என்பதை விட உறவு சீரழிந்தது.

இதனால் எகிப்துவுக்கும் இந்த ஹட்டி நாட்டு பகுதிக்கும் வணிகத்தில் பெருமளவு சண்டை ஏற்பட தயாராக இருந்தது. வாழ்க்கையில் சீரழிய என்ன வேண்டும்? போர் தொடங்கியது. எகிப்து இளவரசர் ராம்செஸ் ஹிட்டிடேஸ் பகுதியை வென்றாலும் ஒரு கட்டத்தில் அவர் ஹட்டி அரசரால் கொல்லப்பட்டார். அதற்கு பின்னர் வந்த அரசர் அமைதி ஒப்பந்தம் தனை போட்டதால் இந்த இரண்டு ராஜ்ஜியங்களுக்கு இடையே நல்ல உறவு வளர்ந்தது. ஆனாலும் எல்கை அதிகரிப்பதில் ஹட்டி அரசர்கள் பின் வாங்கவில்லை. சைப்ரஸ் நாட்டினை வளைத்தார் துடாலியா. அங்கே பெருமளவு கோவில்கள் கட்டப்பட்டன.

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதற்கேற்ப இவர்களின் ராஜ்ஜியத்தை அடக்க வந்தார்கள் வேறொரு மக்கள். அதே வேளையில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடின. சரியாக மூவாயிரம் வருடங்கள் முன்னாள் மொத்த ஹட்டுசாவும் அழிக்கப்பட்டது, அவர்களின் நாகரிங்களும் தொலைந்து போனது. ஒரு அருமையான வாழ்க்கையை வாழ்ந்து ரசித்து இருக்க வேண்டிய அந்த ஹிட்டிடேஸ் மக்கள் எப்படி சீரழிந்ததற்கு நல்லுறவு பேணாமையே காரணம். அறிவுடன் இருக்க தெரியாதவர்கள் அழிவை நோக்கியே பயணிக்கிறார்கள்.

இந்த ஹிட்டுசாவை அழித்தவர்கள் யார்?

3 comments:

அப்பாதுரை said...

சுவாரசியமான கட்டுரை.. அழிவைத் தேடிக்கொண்டார்கள் என்பது சரியா? எகிப்துடன் சண்டை போடுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு (2000) முன்பாகவே வளர்ந்த இனம்.. நீங்கள் சொல்லியிருப்பது போல இன்னொரு வல்லவன் (அலை) வரும்பொழுது பழையன் கழிந்து புதியன புகுந்தது என்று நினைக்கிறேன். இவர்கள் அழியாவிட்டால் சீஸர் அரசு வளர்ந்திருக்குமா என்றும் கேட்கலாம்? சீஸர் அரசு வளராதிருந்தால் இன்றைய அரசியல் நாகரீகத்தின் சில (நல்ல) வேர்கள் கிடைத்திருக்குமா என்று கேட்கலாம்..:))
இது போன்ற கட்டுரைகள் பதிவுலகில் வருவதில்லை.. ப்லீஸ் தொடருங்கள்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

சுவையான பதிவு. தெர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. நன்றி.

//இது போன்ற கட்டுரைகள் பதிவுலகில் வருவதில்லை.. ப்லீஸ் தொடருங்கள்.
//

வழி மொழிகிறேன்.

Radhakrishnan said...

நீங்கள் குறிப்பிடுவதும் சரிதான், ஆனால் பழையவைகள் எல்லாம் பொக்கிசங்கள் போன்று பாதுகாத்து வைத்திருந்தால் பயனுள்ளதாகவும் இருந்திருக்க கூடும்.

நன்றி அப்பாதுரை.

நன்றி சகோதரி, ஆம் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள நினைத்தாலும் நமக்கு இருக்கும் கால அளவுகள் மிக மிக குறைவு.