Monday 20 February 2012

ரிவிட் அடிப்பது எப்படி? பகவத் கீதையை தீண்டியபோது - 4

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்னர் நான் எழுதியவைகள் இவை. இனிமேல் மீண்டும் பகவத் கீதையை படித்துவிட்டு எழுதலாம் என இருக்கிறேன். சகோதரி ஒருவர் அவரது பார்வையில் பகவத் கீதை பற்றி எழுத மறுமொழியாக நான் எழுதிய விசயங்கள் பல. அந்த விசயங்களை திரும்பி படிக்கும்போது எதற்கு எழுதினோம், எப்படி எழுதினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் ஒரே ஒரே எழுத்தின் மூலம் மொத்த பகவத் கீதையையும் அவமானபடுத்திவிட்டதாக, கேலி செய்துவிட்டதாக அன்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்து இருந்தார். நான் அனைத்து அத்தியாயங்க்ள படித்து முடித்த நிலையில் எழுதிய அந்த கடைசி எழுத்துகளும் அதனால் சினமுற்ற நண்பரின் எழுத்துகளும், அப்படியும் கூட எதையும் மனதில் கொள்ளாமல் நான் எழுதிய பதில்களும் என இந்த பகவத் கீதையை தீண்டியபோது எனும் பகுதியை நிறைவு செய்கிறேன். இதற்கு முன்னர் எழுதி இருந்த விசயங்களை தொகுத்து எழுதுவது எனக்கு நானே தீங்கிழைப்பது போன்றது என்பதை தமிழ் விரும்பி ஐயாவின் பின்னூட்டத்தில் இருந்து தெளிந்து கொண்டேன். இந்த பகுதிக்கு அடுத்து தொடர இருக்கும் பகவத் கீதையை தீண்டியபோது சற்று வேறு கோணத்தில் பார்க்கலாமா என யோசிக்கிறேன். 

---

மனதை என் மேல் செலுத்த வேண்டும் என கண்ணன் சொல்கிறான், அதோடு மட்டுமா என்னை உன்னத இலக்காக கொண்டால் என்னையே வந்தடைவாய் என்கிறான். அது சரி, கண்ணனிடம் சென்று நாம் அடைவதால் நமக்கு என்ன ஆகப்போகிறது?

மேலும் இந்த பகவத் கீதையை தவம் இல்லாதவர், பக்தி செய்யாதவர், சேவை மனப்பான்மை அற்றவர், கேட்க விரும்பாதவர், என்னை பழிப்பவர் போன்றோருக்கு ஒருபோதும் கூறாதே என்கிறான் கண்ணன். எனக்கு இந்த வரிகளை பார்த்ததும் 

அட கண்ணா!!! நீ சொன்ன இரகசியம்தனை சஞ்சயன் திருதிராஷ்டிரனுக்குச் சொல்லிக் கொண்டிருந்ததை அறிந்தாயோ என்னவோ!!! இல்லை நான் அறியாது போனேனோ என்னவோ!!!

நீ சொன்னதை சந்தேகிக்காதே என சொல்லியபோதே, சொன்னதில் உனக்கு எத்தனைச் சந்தேகம் இருந்திருக்கிறது, மேலும் கேள்வி எழுப்பும் உள்ளத்திற்கு நீ சொன்னதன் அர்த்தம் தெரிந்துவிடும் என நினைத்தாயோ! நீ குறிப்பிட்டவர்களில் தான் நிறையபேர் இவ்வுலகில் வாழ்கிறார்கள், என்ன அர்ஜூனன் அவர்களிடம் உன் இரகசியம் சொல்லவில்லை, அவ்வளவே. மற்றபடி உன் இரகசியம் உலகமெல்லாம் தெரிந்திருக்கிறது. 

நானே சத்தியமும் ஜீவனுமாகியிருக்கிறேன். 

ஹா ஹா கண்ணா! பாவம், நீயும்தானே இறந்தாய்? ஆனால் நீ இறக்கவில்லை எனவும் அப்படியே நீ வைகுண்டம் போனதாகவும் சொல்லிவிடுவார்கள், அதுமட்டுமன்றி ஜோதியோடு ஜோதியாய் கலந்ததாய் கதையும் சொல்வார்கள். இதில் நாங்கள் என்ன விதிவிலக்கு! பிறப்பும் இறப்பும் நிரந்தரமல்ல! அது சரி! 

யாருக்கு இங்கே மரண பயம்? எவருக்குமில்லை. இருந்தால் அனைவரும் முறையான வாழ்க்கையை முறையாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். உன்னை எல்லாம் ஒரு பொருட்டாகவே கருதியிருக்கவும் மாட்டோம் கண்ணா. நீ நடத்திய நாடகம் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பல பகுதிகளில். இன்னும் பல பகுதிகளில் அதன் சுவடு கூடத் தெரியாமல் இருக்கிறது அறிவாயோ? 

நீ உதவியது நிலச் சண்டைக்குத்தானே, அது மட்டும் தர்மம், இங்கே உன் வழிநடத்துதலன்றி மக்கள் சண்டை போட்டால் அது அதர்மம். அதென்ன ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்வது அப்புறம் ஏன் அழியும் உடலுக்கு அது செல்ல வேண்டும்! தனித்து இயங்க முடியாதா ஆன்மாவினால். 

பாவத்தின் மொத்த சொரூபமே நீதான் என உன்னை நான் குற்றம் சாட்டினால் என்ன செய்வாய் கண்ணா. உன்னை பழித்தேன் எனச் சொல்வாயா? மிகச்சரியாகவே உண்மை உரைத்தேன் எனத் தட்டிக்கொடுப்பாயா? நீ எதுவும் சொல்லப் போவதுமில்லை, உன்னால் எதுவும் சொல்ல இயலுவதுமில்லை. உன்னைச் சரணடைய வேண்டுமாம், பாவம் தீர்ப்பாயாம். நல்ல நகைச்சுவை கண்ணா. 

ஆனால் ஒன்று கண்ணா நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி உன் கூற்றுப்படி எவரும் இங்கே பலகாலம் இருக்கப்போவதுமில்லை. அப்புறம் உனக்கு எதுக்கு இந்த வேலை? கர்மம் எனச் சொல்வாயோ! கர்மம் அர்த்தப்படும் விதம்வேறு. 

நானும் சாம்பலும் வேறல்ல! எதிர்மறையான தத்துவம் இது. நான் வேறு; சாம்பல் வேறு! ஒரு திருநீறு அணிந்தோமோ இருந்தோமோ என இல்லாமல் எதை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு வாழச் சொல்கிறார்கள். 

இறந்துவிடுவோம் அதனால் நன்றாக வாழவேண்டும் என நினைப்பை விதைப்பதை விட, வாழ்கிறோம் அதனால் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பு வரவேண்டும். சாகாமல் இருந்தால் எல்லா அட்டூழியங்களும் செய்யலாமோ என்னவோ? 

எப்படியெல்லாம் உதாரணங்களும் உவமேயங்களும் இறைவனிடம் நம்மை அர்பணிக்க வேண்டுமென பணிக்கின்றன. இதையெல்லாமா ஒரு இறைவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்! 

“ அகங்காரம் இல்லாத இடத்தில் இறையின் ஸ்வரூபம் தெரிவதில் ஆச்சரியமில்லை” 

அப்படியென்றால் அகங்காரம் நிறைந்த சபையில் இவர் ஸ்வரூபம் காட்டியதும், அனைவரும் கண்டதும் என்னவாம்!!! 

எது எப்படியோ பிரபஞ்சமே மாயை என எல்லாருக்குமே தெரிந்து இருக்கிறது ஒருவிதத்தில் அதில் கண்ணனைத் தெரியாதோரும் அடக்கம். ---------


இப்படி நான் எழுதியதும் 'நன்றாக ரிவிட் அடித்து விட்டீர்கள்' என ஒரு நண்பர் சொல்ல எனக்கு அப்போது புரியவில்லை. காரணம் எவரது மனமும் புண்படுமாறு நான் எழுத முனைவது இல்லை. மீண்டும் மீண்டும் படித்தபோது கூட என்னால் விளங்கி கொள்ள இயலவில்லை. தவறு செய்பவருக்கு தவறு கண்களுக்கு தெரிவது இல்லையோ என்னவோ? இப்படி எழுதியதன் மூலம் எவர் எவரின் கோபத்தை விலைக்கு வாங்கினேனோ அதுபற்றி தெரியவில்லை. பின்னர் நான் எழுதியது கண்டு மனம் வருந்தினேன் என சொன்னவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன் என்பது வேறு. ஒரு கருத்தை மத நூல்களில் மீதோ, மற்ற விசயங்கள் மீதோ எழுதும்போது அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாகிறது. 


-----


நண்பர்: கேள்விகள் கேட்கவேண்டும் என்பதற்காக கேட்டு, ஏன் உங்கள் அறியாமையை எல்லோருக்கும் தெரியும் படி செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

நான்: தெளிவின் எல்லைக்குப் போனாலும் அறியாமை நிழல் துரத்துகிறதே ஐயா, என்ன செய்வது? எப்பொழுதும் அறியாமையில் தான் இருக்கிறேன். இதை கேள்விகள் கேட்பதற்காக கேட்டால் என்ன, பதில்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கேட்டால் என்ன! யாருடைய நம்பிக்கையையும் உரசும்போது எப்பொழுது ஒருவர் சிதறாமல் இருக்கிறாரோ அவரே அந்த நம்பிக்கையில் உறுதியானவர் என்பது எனது தீர்மானம். 

நண்பர்: மரண பயம் என்று நீங்கள் எதைச்சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. மரண பயம் இல்லாத ஜீவன்களே கிடையாது. மரணத்தை சந்தோஷமாக வரவேற்கும் ஞானிகளைத்தவிர மற்ற எல்லோருக்கும் மரணம் என்றால் பயம் தான். விமானத்தில் கோளாரு என்று கேப்டன் சொன்னால், எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்களா, பயத்தில் இருப்பார்களா?... கண்ணன் எந்த சபாவில் நாடகம் போட்டார் என்று தெரியவில்லை, அது எங்கு ஓடுகிறது என்றும் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் நானும் அதை பார்க்க வேண்டும்.

நான்: எனக்கு இல்லை மரணம் பற்றிய பயம், நான் ஞானியுமில்லை. இளங்கன்று பயமறியாது என்பதை அறிந்திருப்பீர்கள் ஐயா. மரணம் என்ன என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகளும் பாரினில் உண்டு. அவர்கள் ஒன்றும் ஞானிகளில்லை. தீவிரவாதிகளும்தான் மரணத்தை சந்தோசமாக வரவேற்கிறார்கள். ஆஹா... நாடகம் என்றதும் சபா எல்லாம் கேட்கிறீர்களா? மகாபாரதப் போர் கண்ணன் நடத்திய நாடகம் அல்லவா! 

நண்பர்:அதர்மம் என்று கண்ணன் எங்கு சொன்னான்?

அதானே கண்ணன் எங்கு சொன்னான்?! எனது கருத்தைத்தானே சொன்னேன். 

நண்பர்:மின்சாரத்துக்கு சக்தி இருக்கிறது. அது எத்தனையோ ஹை வோல்டேஜில் கண்டம் விட்டு கண்டம் போகிறது. ஆனால், அது இயங்க வேண்டும் என்றால் அதுக்கு ஒரு சாதனம் தேவைப்படுகிறது இல்லியா. சாதனம் இல்லாவிட்டால் மின்சாரத்திற்கு உபயோகம் ஏது. அதுமட்டுமில்லாமல் பருப்பொருளுக்கு அழிவில்லை என்பதை நமது அறிவியல் சொல்கிறது நமது உடலில் இருக்கும் அந்த அழியா பொருளுக்கு பேர் தான் ஆன்மா.

அருமையான விளக்கம் ஐயா, ஆனால் ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்லிவிட்டு அழியும் பொருளைப் பற்றி அவதிப்படுவானேன் என்பதுதான் என் கேள்வி

நண்பர்:கடலில் இருந்து வந்து சேர்ந்த கடல் தவளையிடம் கிணற்றுத்தவளை, "கடல் இந்த கிணறை விட பெரிதா? நல்ல நகைச்சுவை, பெரிதாக இருக்கவே முடியாது, " என்றதாம்.

தங்களை போல் தான் துரியோதணனை சேர்ந்தவர்களும் கண்ணனின் முன்னாடியே நீ பாவத்தின் மொத்த சொரூபம், கபடதாரி, ஏமாற்றுக்காரன், மாயஜால வித்தகன் என்றெல்லாம் கூறி எள்ளி நகையாடினர். அவற்றுக்கு எல்லாம் ஒரு அழகிய புன்னகையை தானே பதிலாக கொடுத்தான். 

கண்ணன் என்னையை சரணடைய என்று சொன்னது, அவனுடைய கருத்துக்களை ஏற்று நடங்கள் என்ற அர்த்தத்தில். அப்படி நடக்கும் பட்சத்தில் எந்த பாவ காரியத்திலும் ஈடுபட முடியாது என்பது தான். பாவம் செய்த நீ சொல்லும் கருத்து எப்படி பாவத்திலிருந்து விடுவிக்கும் என்று கேட்பதாக இருந்தால், வேறு வழியில்லை திரும்பவும் நீங்கள் கருத்து ஆழத்துடன் படிக்க வேண்டி இருக்கும்.

நான்: ஹா ஹா! மன்னிக்கவும் ஐயா. கண்ணனால் எந்த பதிலும் சொல்ல இயலாது என்று சொல்லிவிட்டேன் ஐயா, புன்னகைதான் தரமுடியும். ஐயா நீங்கள் முழு பகவத் கீதையையும் படித்துப் பாருங்கள், அப்படி பாவத்திலிருந்து இந்த கண்ணனும் அவன் சொன்ன பகவத்கீதையும் விடுவிக்குமெனில் அர்ஜூனன் போரே செய்து இருக்கக்கூடாது. உயிர்களைக் கொல்வது பாவம் என்பது உலக தத்துவம் அது நுண்ணுயிர்களாய் இருந்தாலும் கூட.

நண்பர்: எங்கு சொன்னான் பலகாலம் இருக்கப்போகிறார்கள் என்று? எல்லோரும் எப்படியும் இறந்து விடப்போகிறோம் என்று யாராவது சாப்பிடமால் இருக்கிறார்களா? இல்லை வேறு எந்த காரியமும் செய்யாமல் இருக்கிறார்கள். அவனுக்கு சரி என்று பட்டதை அவன் செய்தான். அதை எதற்கு செய்தான் என்று கேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

நான்: அவனைக் கேள்வி கேட்க எனக்கு தகுதி இருக்கிறது ஐயா. எப்படி வேண்டுமெனிலும் அவனைக் கேட்பேன். அவன் புன்னகை தருவான், தராமல் போவான்.

நண்பர்: இரண்டும் எப்படி வேறுபடும். இறந்தபின் நமது உடலில் இருந்து மிஞ்சுவது சாம்பல் மட்டும் தானே. அது புரியாமல் நான் என்ற அகங்காரத்தில் செய்வது எல்லாம் துன்பத்தில் கொண்டு சேர்க்கும் என்று சொல்வது தேவையில்லை என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை நான் எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும், எனக்கு எதற்கு நினைவுபடுத்தவேண்டும் என்று கேட்பது போல். தீ சுடும் என்பதையோ, தண்ணீரில் மூழ்கினால் அபாயம் ஏற்படும் என்பதையோ ஏன் குழந்தைகளுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று கேட்பது மாதிரி இருக்கிறது.

நான்: ஹா ஹா! மன்னிக்கவும் ஐயா. இறக்கும் முன் நான் வேறு தானே. இறந்தபின்னால் என்னை புதைத்தால் நான் எப்படி சாம்பலாவேன். இருப்பினும் சாம்பல் வேறு தான். நான் செய்வதையெல்லாம் சாம்பல் செய்ய இயலாது. சாம்பலுக்கு உயிரும் கிடையாது. சட்டதிட்டங்களை அறிந்து கொண்டு வாழ்வதை விட நியாய தர்மங்களை அறிந்து கொண்டு வாழ்வது சாலச் சிறந்தது. 

நண்பர்:நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இறைவனுக்கு இதுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் மருத்துவர். வலியுடன் வருபவரிடம். இந்த மருந்தை சாப்பிடு என்று நீங்கள் கொடுத்தால். நான் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால், இதில் மருத்துவரான உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதே போல், எனக்கு இந்த மருந்து வேண்டாம், நான் வேறு ஒரு மருந்து சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொன்னாலும் இதில் மருத்துவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆக இது வலி இருப்பவர் தேர்ந்தெடுக்க வேண்டியது. ஆனால், ஏன் மருத்துவர் எனக்கு இந்த மருந்தை கொடுத்தார், அவரை யார் இதை செய்யச்சொன்னது என்று நாம் கேட்க முடியாது. வலியில் இருப்பவரின் நன்மைக்கா சொன்னது அதன் படி கேட்டு வலி குறைந்தவர் அந்த மருந்தை மீண்டும் வலி வரும்பொழுது எடுத்துக்கொள்வார். அது அவர் அவரின் விருப்பம்.

நான்:அப்படியெனில் நான் சொன்ன கருத்துக்களெல்லாம் என் விருப்பம் தானே! ஏன் இப்படி கேள்வி எழுப்பினாய், நீ எழுப்பியிருக்கவே கூடாது என்பது எந்த விதத்தில் சரியாகப்படும் ஐயா. எப்படியோ உங்களுடன் கண்ணன் என்னை இப்படி பேசச் சொல்லிவிட்டான்.

நண்பர்: அகங்காரம் இல்லாத இடம் என்பது அகங்கார தோரணை இல்லாத ஜீவன் என்று பொருள். அது ஒரு இடத்தை குறிப்பதல்ல.

நான்: அகங்காரம் நிறைந்த ஜீவன்கள்தான் ஐயா
மிக்க நன்றி, நல்லவேளை அறியாமை அகன்றுவிட்டது போலும்!

12 comments:

R.Puratchimani said...

சார் நீங்க பயங்கரமா சிந்திக்கிறீர்கள்...அருமை....
நானே சத்தியமும் ஜீவனுமாகியிருக்கிறேன்

தருமி said...

//நீ எதுவும் சொல்லப் போவதுமில்லை, உன்னால் எதுவும் சொல்ல இயலுவதுமில்லை. உன்னைச் சரணடைய வேண்டுமாம், பாவம் தீர்ப்பாயாம். நல்ல நகைச்சுவை கண்ணா. //

அடக் கடவுளே!

ராஜ நடராஜன் said...

புரியாத சமஸ்கிருத வார்த்தைகளா அல்லது கர்ணன் படம் பார்த்த தாக்கமா
தியான யோகம் ஒன்றைத் தவிர பகவத் கீதையில் எதுவும் மனதில் ஒட்டவில்லை.

தருமி said...

மிக நல்ல தொகுப்பு. ஒரு முறைதான் வாசித்தேன். ஆழமான சிந்தனையின் தொகுப்பென நம்புகிறேன். மீண்டும் வாசித்து, பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.நன்றி

Radhakrishnan said...

//R.Puratchimani said...
சார் நீங்க பயங்கரமா சிந்திக்கிறீர்கள்...அருமை....
நானே சத்தியமும் ஜீவனுமாகியிருக்கிறேன்//

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை புரட்சிமணி ஐயா. சிந்தித்த அந்த மாபெரும் மனிதர்களை பிரமிப்புடன் மட்டுமே பார்க்கிறேன். மிக்க நன்றி.

Radhakrishnan said...

//தருமி said...
//நீ எதுவும் சொல்லப் போவதுமில்லை, உன்னால் எதுவும் சொல்ல இயலுவதுமில்லை. உன்னைச் சரணடைய வேண்டுமாம், பாவம் தீர்ப்பாயாம். நல்ல நகைச்சுவை கண்ணா. //

அடக் கடவுளே!//

:) நன்றி தருமி ஐயா.

Radhakrishnan said...

//ராஜ நடராஜன் said...
புரியாத சமஸ்கிருத வார்த்தைகளா அல்லது கர்ணன் படம் பார்த்த தாக்கமா
தியான யோகம் ஒன்றைத் தவிர பகவத் கீதையில் எதுவும் மனதில் ஒட்டவில்லை.//

மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும். இந்து மத நூல், கண்ணன் ஒரு அவதாரம் என்பதையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டும் இதைப் படித்து பாருங்கள். மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

எழுதியவரின் சிந்தனையில் இருந்து பார்க்கும்போது மிகவும் பிரமிப்பு அடைய செய்யும். கிட்டத்தட்ட பதினெட்டு யோக நிலைகளை விளக்கும் வண்ணம் கேள்வி பதில்கள் வழியில் அமைக்கப்பட்டது அல்லவா.

'மூளை சலவை செய்வது எவ்வாறு' எப்படி எனும் அவசியத்தை மிகவும் தெளிவாகவே உணர்த்தும்.

Radhakrishnan said...

//தருமி said...
மிக நல்ல தொகுப்பு. ஒரு முறைதான் வாசித்தேன். ஆழமான சிந்தனையின் தொகுப்பென நம்புகிறேன். மீண்டும் வாசித்து, பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.நன்றி//

ஒரு கதாநாயகனை நிற்க வைத்து கேள்வி கேட்பது போன்ற சிந்தனைதான் என நினைக்கிறேன் ஐயா.

R.Puratchimani said...

//'மூளை சலவை செய்வது எவ்வாறு' எப்படி எனும் அவசியத்தை மிகவும் தெளிவாகவே உணர்த்தும். //

சார் இந்த விஷயத்துல குரான அடிச்சுக்க முடியாது

Radhakrishnan said...

அது சரிதான். நன்றி புரட்சிமணி ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

:)

...
ஒன்றே ஒன்று...கண்ணன் "என்" என்று கூறுவதை ஒரு மனிதன் கூறியதாகக் கொள்ளாமல், உருவமற்ற ஆதி இயற்கையின் கூற்றாகக் கொள்ளுங்கள்
...

:)

Radhakrishnan said...

ஆஹா சகோதரி, எல்லாம் மிகவும் சுலபமாக போய்விட்டது. மிக்க நன்றி.