Thursday 2 February 2012

இந்த பிரபஞ்சம் தட்டை தான்

என்னைய நீங்க நொட்டை சொல்லக் கூடாது. இந்த பிரபஞ்சம் தட்டை தான், மட்டைகளா என ஒரு அறிவியல் குழு சொல்லிவிட்டது. நான் மொட்டை தலையை தடவி கொண்டு இருக்கிறேன். 

இந்த பிரபஞ்சம் தட்டை தான். 

ஆச்சர்யமாக இருக்கிறதா? இதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. 

ஐன்ஸ்டீன் இந்த பிரபஞ்சம் சற்று வளைவானது என்று சொன்னதில் இருந்தே இது குறித்து அறிவியலாளர்கள் நிறையவே சிந்தித்து இருக்கிறார்கள். 

ஆனால் சமீபத்தில் அன்டார்டிகா மீது வானில் பறந்த ஒரு பலூன் இந்த பிரபஞ்சம் தட்டை என்றுதான் உறுதி செய்து உள்ளது. 

அதாவது ஈர்ப்பு விசை இல்லாத பட்சத்தில் ஒளியானது நேர்கோட்டில் மட்டுமே செல்லும், வளைந்து செல்லாது என்பது ஒரு விதி. 

அதோடு மட்டுமா, இந்த உலகம் எப்படி பெரு வெடிப்பு மூலம் உருவானதோ அதைப்போல பெரு சுருக்கத்தில் சென்று முடிவடையும் என்று முன்னாளில் நினைத்து இருந்தார்கள். ஆனால் அவ்வாறு இந்த பிரபஞ்சம் பெரு சுருக்கத்தில் முடிவடையாது என சமீபத்தில் ஆய்வின் மூலம் நிரூபணம் செய்து நோபல் பரிசு கூட பெற்று விட்டார்கள் அறிவியலாளர்கள். 

இப்படி தொடர்ந்து விரிவடைந்து அப்படியே உறைந்துவிடும் பிரபஞ்சம் தட்டையாகவே இருக்க இயலும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

நாம் சாப்பாட்டினை சூடு செய்ய உபயோகிக்கும் மைக்ரோ அலைகள் பெரு வெடிப்பு நடந்தபோது உருவாக்கிய கதிரியக்க வெப்பம் தனை கொண்டு பல எப்படி பிரபஞ்சம் விரிவடைகிறது என கண்டறியலாம். 

இதற்காக ஒரு தனிதன்மையுள்ள கருவியை உருவாக்கி இருந்தார்கள். அதில் ஒரு கேலக்ஸியில் இருந்து உருவாகும் ஒளி செல்லும் பாதையை விட முதன் முதலில் உருவான (பெரு வெடிப்பில்) ஒளியானது பிரபஞ்சத்தை ஊடுருவி சென்றது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்ததாம். 

இந்த பிரபஞ்சம் முதன் முதலில் அது கொஞ்ச நேரத்திற்கு வளைவாக இருந்தது, ஆனால் இப்போது தட்டையாகிவிட்டது என்கிறார்கள்.

ஆமாம், வேத நூல்களில் 'தட்டை' என சொன்னது பிரபஞ்சத்தையா, பூமியையா? எதுக்கு சொல்ல வருகிறேன் எனில் சொல்பவர் சொல்வதை புரிபவர் வேறு விதமாக புரியலாம் அல்லவா. 

16 comments:

வவ்வால் said...

ரா.கி,

//இப்படி தொடர்ந்து விரிவடைந்து அப்படியே உறைந்துவிடும் பிரபஞ்சம் தட்டையாகவே இருக்க இயலும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாம் சாப்பாட்டினை சூடு செய்ய உபயோகிக்கும் மைக்ரோ அலைகள் பெரு வெடிப்பு நடந்தபோது உருவாக்கிய கதிரியக்க வெப்பம் தனை கொண்டு பல எப்படி பிரபஞ்சம் விரிவடைகிறது என கண்டறியலாம்.

இதற்காக ஒரு தனிதன்மையுள்ள கருவியை உருவாக்கி இருந்தார்கள். அதில் ஒரு கேலக்ஸியில் இருந்து உருவாகும் ஒளி செல்லும் பாதையை விட முதன் முதலில் உருவான (பெரு வெடிப்பில்) ஒளியானது பிரபஞ்சத்தை ஊடுருவி சென்றது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்ததாம்.

இந்த பிரபஞ்சம் முதன் முதலில் அது கொஞ்ச நேரத்திற்கு வளைவாக இருந்தது, ஆனால் இப்போது தட்டையாகிவிட்டது என்கிறார்கள்.//

நல்ல தகவலுடன் பதிவிட்டுள்ளீர்கள்.

ஒரு புள்ளியில் வெடிக்கும் போது கோளவடிவில் தான் பரவல் இருக்கும் ஒரே அச்சில் எப்படி வெடிப்பு பரவ முடியும்?

பெருவெடிப்பு மீண்டும் சுருங்காது என்று சொல்லி இருக்கலாம் ஆனால் அதனால் தட்டையாகவே ஆகிடுமா?

மைக்ரோ வேவ் என்பதால் சமைக்கப்பயன்ப்படும் மைக்ரோவேவ் இல் இருந்து கண்டுப்பிடித்தார்கள் என்பது போல வருது. நிறைய அலை, அதிர்வெண்களில் மைக்ரோவேவ் இருக்கு. நான் பார்த்ததில் காஸ்மிக் பேக்கிரவுண்ட் மைக்ரோவேவ் ரேடியேஷன் மூலம்னு கண்டுப்பிடித்ததாக பார்த்த நினைவு.

பிரபஞ்சத்தை ஊடுருவி சென்றதா ஒளி , இன்னும் பிரபஞ்சத்தின் எல்லை எதுவெனவே தெரியாது. அப்புறம் அதை தாண்டி ஊடுருவி எங்கே சென்றது. அதற்கப்பால் அப்போ வேறு ஊடு வெளி இருக்கா?

நீங்க தட்டைனு சொன்னதும் , தாமஸ் ஃபிரைட்மேன் எனும் புலிட்சர் விருது பெற்றவரின் "The World is Flat: A Brief History of the 21st Century," என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. படிக்கனும்னு நினைத்துக்கொண்டிருக்கும் ஒன்று. ஆனால் இந்த புத்தகம் உலக அரசியல் , பொருளாதாரம்னு பேசுது போல ,இந்தியாவையும் இணைத்து பேசுதுனு கேள்வி.

ஹி..ஹி பதிவுக்கு சம்பந்தமில்லைனாலும் நீங்க பிரபஞ்சம் தட்டைனு சொன்னதும் , உலகம் தட்டைனு சொன்ன ஒரு புத்தக பேரும் நினைவுக்கு வந்தததால் சொல்வது.

Radhakrishnan said...

வணக்கம் வவ்வால்.
நீங்கள் குறிப்பிட்டது போல காஸ்மிக் மைக்ரோ அலைகள் கதிரியக்கம் தான். எளிதாக புரிந்து கொள்ள நம்மில் சிலர் உபயோகிக்கும் சாதனத்தை தொடர்பு படுத்திவிட்டேன்.
இந்த பிரபஞ்சம் தட்டை தான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாகவே சொல்கிறார்கள். இப்போது உலகம் என்றால் என்ன? பிரபஞ்சம் என்றால் என்ன? என்பதற்கான விடை தெரிந்தால் பல விசயங்கள் தெளிவாகும் என்றே கருதுகிறேன்.

இந்த பிரபஞ்சத்தில் ஒளி ஊடுருவி சென்றது என்பது, ஓரிடத்தில் கிளம்பிய ஒளி பிரபஞ்சத்தில் நேர் கோட்டில் சென்று அது எங்கே சென்று முடியும் என்பதை அறிய இயலாதது. பிரபஞ்சத்தின் எல்லையை பார்க்கும் அளவுக்கு நம்மிடம் கருவி இருக்கிறதா என தெரியவில்லை. மேலும் இந்த ஒளி எல்லாம் எத்தனையோ பில்லியன் ஆண்டுகள் முன்னாள் தொடங்கியவை என்றுதானே சொல்கிறார்கள். நாம் கடந்த காலத்தை நிகழ் காலத்தில் கண்டு கொண்டிருக்கிறோம் என்பதுதானே சரி. விளங்கபடுத்துங்கள், தெரிந்து கொள்கிறேன். மேலும் சில அறிஞர்கள் multiverse என்றுதான் சொல்கிறார்கள்.

பெரு வெடிப்பு நடந்தபோது எல்லா திசைகளிலும் ஒரே மாதிரியாக சிதறியது என்றுதான் இன்றைய மைக்ரோ அலைகளின் மூலம் கண்டு கொண்டார்கள். இப்போது எல்லாம் சீராக விரிவடைந்து செல்லும் போது அவை வளையாவிட்டால் எங்கேயும் ஒரு துருவத்துடன் மற்றொரு துருவம் இணைந்து கொள்வது கடினமே. நீட்சி அடைந்து கொண்டேதான் செல்கிறது என்கிறார்கள்.

பல விசயங்கள் அறிந்து கொள்ள எடுத்தேன். தேடல் தொடரும். தொடர்வோம்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

பல விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறதே. சுட்டியும் கொடுங்களேன். இது பற்றி இன்றைக்கு கூகிள் தேடல் செய்தே ஆகவேண்டும்.

Radhakrishnan said...

Flat Universe எனத் தேடிப்பார்த்தால் பல விசயங்கள் கிடைக்கும் சகோதரி.

சமுத்ரா said...

What do you mean by 'தட்டை'?!
pls explain

Radhakrishnan said...

___________________

இந்த கோடுதான் தட்டை. இந்த கோட்டின் இரு முனைகளும் எக்காலத்திலும் ஒன்றை ஒன்று தொடுவதில்லை.

___________________________________

இப்படியாக இந்த கோடு இருபுறம் நீட்சி அடைந்து கொண்டே போகும்.

வட்டம் பெருத்து கொண்டே போவதற்கும், கோடு நீட்சி அடைந்து கொண்டே போவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

இருப்பினும், தாங்கள் அண்டங்கள் பற்றி அற்புதமாக எழுதி வருவதால் இது குறித்து மேலதிக தகவல்கள் இருந்தால்/தந்தால் தெரிந்து கொள்கிறேன் சமுத்ரா. மிக்க நன்றி.

ராஜ நடராஜன் said...

//பிரபஞ்சத்தை ஊடுருவி சென்றதா ஒளி ,இன்னும் பிரபஞ்சத்தின் எல்லை எதுவெனவே தெரியாது.//

வவ்வால்!அப்ப நான் பார்த்த பிரபஞ்சம் இயக்குநர் சங்கரின் கிராபிக்ஸா!

கூப்பிடுங்க நம்ம வருணை கிராபிக்ஸ்கு அக்ராதி தேட:)

ஹாக்கின்ஸ் சொன்ன் வ்ரைக்கும் பிரபஞ்சம் முட்டை வடிவம்தான்.இனி யாருக்காவது நோபல் பரிசு வேணுமின்னு புதுசா கண்டு பிடிச்சு சொன்னாத்தான் உண்டு.

ராஜ நடராஜன் said...

//சமுத்ரா said...

What do you mean by 'தட்டை'?!
pls explain//

சமுத்ரா!தோசை வட்டமா இல்ல தட்டையான்னு இங்கே குழப்ப பட்டிமன்றம் நடந்துகிட்டிருக்குது!பட்டிமன்ற தலைவர் என்ன முடிவை சொல்கிறாரோ:)

சார்வாகன் said...

அருமை சகோ
ஏன் தட்டையாக இருக்கிறது என்பதும் பெரு விரிவாக்க கொள்கையினால் விள்க்க இயலாத ஒரு விடயம்.ஆகவே ஒரு புதிய கொள்கைக்கான தேடல் தொடர்கிறது.
இது மைக்ரோவேவ் அலைகள்[WMAP] மூலமாகவே உறுதி செய்யப் பட்டது.அது தொடர்பான் சுட்டி இங்கே பார்க்கலாம்.
*************
Recent measurements (c. 2001) by a number of ground-based and balloon-based experiments, including MAT/TOCO, Boomerang, Maxima, and DASI, have shown that the brightest spots are about 1 degree across. Thus the universe was known to be flat to within about 15% accuracy prior to the WMAP results. WMAP has confirmed this result with very high accuracy and precision. We now know that the universe is flat with only a 0.5% margin of error.
*****************
http://map.gsfc.nasa.gov/universe/uni_shape.html

வவ்வால் said...

ராஜ்,

ரா.கி , தான் சொல்லணும் கிராபிக்ஸா என்னனு.உண்மைல எல்லாம் கணினி வரைகலை தான் (கிராபிக்ஸ்ஸ் ) வானொலி அலை தொலை நோக்கியில் ( ரேடியோ வேவ் டெலெஸ்க்கோப்பில் )கிடைக்கும் விவரங்களை வைத்து எல்லாம் கணிணியில் உருவாக்குவது தான், கணினி, மென் பொருள் திறனுக்கு ஏற்ப படம் தெளிவா , உண்மைக்கு பக்கமாக இருக்கும்.

//கூப்பிடுங்க நம்ம வருணை கிராபிக்ஸ்கு அக்ராதி தேட:)//

மொக்கைப்பதிவு, பின்னூட்டங்களும், கூட்டமும் அதிகம், இங்கே அறிவுப்பூர்வமாக பேசுகிறோம் ,கூட்டமே இல்லைனு பேசுங்களேன் ஓடி வந்திடுவார் :-))

-----------

பிரபஞ்சம் ஏன் தட்டைனு சொல்ல ஒரு காரணம் சொல்லி இருக்காங்க, சார்வாகன் சொன்ன சுட்டிய நான் முன்னரும் பார்த்திருக்கேன். ஆனால் அதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

ஆமாம் இவர் பெரிய நாசா விஞ்ஞானி ஒப்புதல் இல்லையாம், என்ன தெரியும்னு கேட்கலாம், ஆனால் ஒரு பொது அறிவின் அடிப்படையிலே ஏற்க முடியவில்லை.

முப்பரிமாணம் என்பது X,Y,Z என்ற அச்சுகளையும், முறையே , X,Y,Z தளங்களையும் கொண்டிருக்கிறது. இப்போது தட்டையாக இருக்க பிரபஞ்ச துகள்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு அச்சில் மட்டுமே விரவி... பெரு வெடிப்பின் விளைவாக விரிந்து செல்வதாக ஆகிறது.

அப்படி எனில் மற்ற அச்சுகளிலும், தளத்திலும் பிரபஞ்ச துகள்(இங்கு நட்சத்திரம்ம், கேலக்க்சி, கோளங்கள் எல்லாமே) விரவுதல் ஏன் இல்லாமல் போயிற்று?

மற்ற அச்சுகளில் பரவுதலை எந்த சக்தி தடுத்தது, தடுக்கிறதது?

இது போன்ற கேள்விகளுக்கு எனக்கு விடைக்கிடைக்கவில்லை, எனவே தட்டை என சொல்லப்படுவது சரியா என்ற சந்தேகம் எழுகிறது.

விஞ்ஞானிகள் ஆய்வு செய்து சொல்லி இருக்கிறார்களே என்றால் இப்போது இருக்கும் வசதிக்கு இவ்வளவு தான் முடியும். மேலும் அவர்களும் ஒரு ஆய்வினை ஒரு திசையிலேயே செய்வதாகப்படுகின்றது.

உதாரணமாக நம் சூரிய குடும்பத்தினை எடுத்துக்கொள்வோம், சூரியன் உட்பட அனைத்தும் ஒரு தளத்தில் இருக்கு. விண்கலனை ஆய்வுக்கு அனுப்பும் போது அடுத்த கோள், சூரிய உள்வட்ட பாதை , வெளிவட்ட பாதை என கிடை மட்டமாகவே அனுப்பி ஆய்வு செய்கிறோம். ஆனால் இது வரை சூரிய குடும்பத்தின் தளத்துக்கு செங்குத்து அச்சில் விண்கலம் அனுப்பி ஆய்வு செய்யவில்லை.

அப்படி எல்லாம் ஆய்வு நடந்திருக்கிரதா, என்ன முடிவுகள் வந்தது என்று எங்கும் படித்தததும் இல்லை.

பிரபஞ்சம் தட்டை எனில் அகலம் அளவிடமுடியாமல் போகலாம் ஆனால் அதன் தடிமன் என்ன என்று கண்டுப்பிடித்து விடலாமே?

அப்படி தடிமனும் அளவிட முடியாமல் விரிவடைகிறது எனில் ஒரு கனசதுரம் , கன செவ்வகம் விரிவடைதாக ஆகிறததே?

சார்வாகன் said...

@நண்பர் வவ்வால்
அருமையான் கேள்விகள்.
அதாவது பிரபஞ்சம் தட்டை என்பதற்கான ஆதாரமாக நாசா மைக்ரோவேவ் அலைவீச்சு கொடுப்பது ஏற்கும் படி இல்லை என கூறுகிறீர்கள்.நன்று.
அதனை இப்படியும் கூறலாம். நாசா கொடுப்பது அறிந்த பிரபஞ்சம் பற்றி மட்டுமே என்பதால் அறியாதது தெரியாத போது முழு பிரபஞ்சத்தின் வடிவம் பற்றி அறுதியிட்டு கூற இயலாது.
பிரபஞ்சம் தோன்றி இருந்தால் எல்லை இருக்க வேண்டும்.பிரபஞ்சம் என்பது எல்லையற்றதா என்னும் கேள்வியும் இபோதைய விடை தெரியா கேள்வியே.
இருப்பினும் அறிந்த பிரப்ஞ்சம் தட்டை என்பதை ஏற்கலாம்,இது கொஞ்சம் விவரம் குறித்து தேடி பதிவிடுகிறேன்.

பிரபஞ்சத்தின் தடிமன் பற்றி கேட்டீர்கள் அதாவது பிரபஞ்சம் தட்டை என்பது அது இரு பரிமாணத்தில் விரிவடைகிறது என்பதைதான் குறிக்கிறது.அறிந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கேலக்ஸிகளும் பிரபஞ்ச தளத்திலேயே உள்ளதா அல்லது கொஞ்சம் சாய்ந்து உள்ளதா என்பதை பொறுத்தே தடிமன் கண்க்கிடப் படலாம். அனைத்தும் ஒரே தளம் எனில் அதிக தடிமன் கொண்ட கேல்க்ஸியின் தடிமனே பிரபஞ்சத்தின் தடிமன். கேலக்ஸிக்கு நட்சத்திர மண்டலங்கள்.ஹி ஹி

ஒரே தளத்தில் இல்லையென்றால் கேலக்ஸிகளின் தடிமன்,பிரபஞ்ச தளத்தை பொறுத்த‌ சாய்வு ஆகியவற்றை பொறுத்தே முடிவு செய்யலாம்.

ஆனால் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்லும் போது கேலக்ஸிகளின் வடிவம் மாறுகிறதா என்பது குறித்தும் சரியான் விவரம் இல்லை.

குழப்பி விட்டு விட்டிரே!!!!!!!!!!!!

Radhakrishnan said...

மிகவும் சரிதான் வவ்வால். இப்போதைக்கு நமக்கு தெரிவது எல்லாம் நமக்கு உட்பட்ட அறிவுக்கு பொருத்ததே என்பதை மறுக்கவியலாது.

நீங்கள் சொன்னதை நமது வாமணன் செய்து விட்டாரே. உலகை அளந்த வாமணன் அவர்களிடம் வித்தையை கற்று கொள்ள மறுத்துவிட்டோம், அவரும் எப்படி அளந்தார் என்பதை மிகவும் விபரமாக சொல்லாமல் விட்டுவிட்டார்.

அதைப் போல சிவபெருமானின் அடியும், முடியும் இதுவரை எவரும் கண்டதில்லை என்பதை கூட அருமையாக பிரபஞ்சத்திற்கு என சொல்லிவிட்டார்கள். எனவே நீளம் அகலம், உயரம் எல்லாம் ஒரு கணக்கீடுதான். இதுதான் என அறுதியிட்டு சொல்ல இயலாது.

வாமணன் விசயத்திற்கு வருகிறேன். இப்போது நாம் பூமியில் இருந்து பார்க்கும் ஆகாயம் பூமிக்கு சொந்தமானதா என்று சொல்லுங்கள். அப்படி பூமிக்கு சொந்தமில்லை எனில் அந்த ஆகாயத்தையும் வாமணன் அளந்து இருக்க வேண்டும்.

இப்போது பூமிக்கு ஆகாயம் சொந்தமில்லை என வரும்போது பூமியின் பரப்பளவு தாண்டிய ஒரு உலகத்தின் உயரம என்ன? நமது சூரியக்குடும்ப பரப்பளவு என வைத்துக் கொள்வோம். இப்போது நமது சூரிய குடும்பம் ஒரு நீள்வட்ட வடிவத்தில் சுற்றி கொண்டு வருகிறது. இந்த நீள்வட்ட வடிவத்தை நீட்சி அடையக் கொண்டே சென்றால் ஒரு காலகட்டத்தில் எல்லாம் தட்டையாக முடிந்துவிடும் என்பதை எவரேனும் விரைவில் சொல்வார்கள். எல்லா கேளக்சிகளும் வட்டமாகவே இருப்பதாகவே சொல்கிறார்கள். ஒளி வட்டமடிக்கிறதா, அல்லது ஒளி வட்டம் தெரிகிறதா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அது போலவே இந்த பிரபஞ்சத்திற்குள் இருப்பவை வட்டமாக/நீள்வட்டமாக சுழன்று கொண்டே இருக்கிறது, ஆனால் பிரபஞ்சம் மட்டும் தட்டையாக இருக்கிறது என கொள்ளலாம்.

உங்கள் கேள்விக்கு விரைவில் வருகிறேன். நன்றி வவ்வால்.

வவ்வால் said...

ரா.கி,

நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு, நடுவில ,வாமனன் ,சிவனின் அடி,முடி, பூமிக்கு வானம் சொந்தமில்லைனு ,எல்லாம் ஏன்?

வாமனன் ஒரு அடில உலகை அளந்தார் ,அடுத்த அடில வானம் என்றால் , வானம்,பூமி எல்லம் தட்டையா அடுத்தடுத்து வரிசையா இருக்கா? பூமிக்கு நேர் மேல வானம் இருக்கு அப்பொ 180 டிகிரிக்கு இங்கிட்டு ஒரு கால் அங்கிட்டு ஒரு கால்னு விரிக்கனும் :-))

அப்புறம் இடம் பத்தாம மகாபலி மண்டைல அடி எடுத்து வச்சார்(அவ்ளோ பெரிய மண்டையா) இப்போ மஹாபலி எங்கே நின்னார், வாமனன் எங்கே நின்னார் ? எல்லாம் பூமில தானே ,அதான் முன்னரே ஒரு அடில பூமி அளந்தாச்சே ?

எனவே வேதாந்த ,புராணங்களை வைத்து அறிவியலை விளக்குவது சிறுவர் கதைகளுக்கு ஏற்ற ஒரு கரு :-))

ஆகாயம் என்று நீங்கள் சொல்வது மேகங்கள் கொண்ட நீல நிற பரப்பையே என நினைக்கிறேன். அது பூமிக்கே சொந்தம் , வளிமண்டலம் தான் அது, ஸ்டாரட்டொஸ்பியரில் ஆரம்பித்து அயனோ ஸ்பிஅர் வரைக்கும் சுமார் அதிகபட்சமாக ஒரு 1000 கி.மீ தூரத்திற்கே வளிமண்டலம் வியாபித்து இருக்கு அதன் பின்னர் கருமையான விண்வெளி மட்டுமே.

அதுவும் மேகங்கள் இருப்பது ஸ்ட்ராட்டோவில் மட்டுமே. சாதாரண பயணிகள் விமானமே மேகத்திற்கு மேல் பயணிக்கும்.ட்ரபோ ஸ்பியர் தாண்டிவிட்டால் வாயுக்களும் அடர்த்தி குறைந்துவிடும். இதெல்லாம் பூமியோடு இருக்க காரணம் புவியீர்ப்பு விசையே.எனவே ஆகாயம் என்பது பூமிக்கே சொந்தம்.


பூமிக்கு மேலவும் உலகம் இருக்கா? சூரியக்குடும்பமும் பெருவெடிப்பு போல விரியுதா? இல்லையே.அப்புறம் எப்படி ?

மேலும் இப்போ தட்டையா இருக்குனே வெச்சுக்கிட்டாலும் நீள ,அகல வாட்டில் மட்டும் விரிவடைகிறதா ஆகிடுமே. அப்போ மேலே ,கிழே மெலிதாக இருக்கும் பிரபஞ்ச எல்லை கண்டுப்பிடித்து சொல்லி இருக்க மாட்டாங்களா?

Radhakrishnan said...

//வவ்வால் said...

எனவே வேதாந்த ,புராணங்களை வைத்து அறிவியலை விளக்குவது சிறுவர் கதைகளுக்கு ஏற்ற ஒரு கரு :-))//

ஹா ஹா, மிகவும் ரசித்தேன் வவ்வால். நான் புராணங்கள் மூலம் சில விசயங்களை விளங்கி கொள்ள முயல்கின்றேன், எப்படி மனிதர்கள் இப்படியெல்லாம் சிந்திக்க முயற்சித்தார்கள், எங்கிருந்து இவர்களின் சிந்தனை வந்தது என்பதை அறியும் ஒரு சின்ன ஆவல்.

நீங்கள் குறிப்பிட்ட செங்குத்து வடிவான சிந்தனை குறித்து முதலில் என்னால் பிரமிப்பு மட்டுமே அடைய முடிந்தது என்பதுதான் உண்மை.

//ஆகாயம் என்று நீங்கள் சொல்வது மேகங்கள் கொண்ட நீல நிற பரப்பையே என நினைக்கிறேன். அது பூமிக்கே சொந்தம் , வளிமண்டலம் தான் அது, ஸ்டாரட்டொஸ்பியரில் ஆரம்பித்து அயனோ ஸ்பிஅர் வரைக்கும் சுமார் அதிகபட்சமாக ஒரு 1000 கி.மீ தூரத்திற்கே வளிமண்டலம் வியாபித்து இருக்கு அதன் பின்னர் கருமையான விண்வெளி மட்டுமே.//

மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன் வவ்வால்.

//பூமிக்கு மேலவும் உலகம் இருக்கா? சூரியக்குடும்பமும் பெருவெடிப்பு போல விரியுதா? இல்லையே.அப்புறம் எப்படி ?//

பூமிக்கு உட்பட்ட ஆகாயத்திற்கு மேலே உள்ள கருமையான விண்வெளி உலகமா? பிரபஞ்சமா? உலகத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் வேறுபாடு இருப்பதாக நினைக்கிறேன். பல்வேறு உலகங்களால் ஆனது பிரபஞ்சம்.

இப்போது ஒரு பேருந்தில் ஒரு நிலையில் ஒரு ஈ பறந்து கொண்டிருக்கிறது. ஈயின் வேகம் பேருந்தின் வேகத்தை விட அதிகமா, குறைவா?

இப்போது இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உலகங்களும் விரிவடைய வேண்டிய அவசியம் உண்டா?

இப்போது ஒரு எலாஸ்டிக் ஒன்றை எடுத்து கொள்வோம் அதனை நான்கு புறமும் சீராக இழுப்போம். ஒரு சாதாரண இயற்பியல் தத்துவத்தில் அதில் ஒட்டப்பட்டு இருக்கும் பொருட்கள் நான்கு புறமும் இழுத்து கொள்ள வேண்டும், அதாவது அதன் நிலை மாற வேண்டும். ஆனால் ஒரு விசையின் அடிப்படையில் செயல்படும் போது அந்த பொருட்கள் அந்த அந்த நிலையிலேயே இருந்திட எலாஸ்டிக் மட்டுமே விரிவடைய சாத்தியம் உண்டு என்பதைத்தான் இந்த பிரபஞ்சம் காட்டி கொண்டிருக்கிறது. இது நிச்சயம் ஏதாவது ஒரு இயற்பியல் விதியில் சென்று முடியும்.

//மேலும் இப்போ தட்டையா இருக்குனே வெச்சுக்கிட்டாலும் நீள ,அகல வாட்டில் மட்டும் விரிவடைகிறதா ஆகிடுமே. அப்போ மேலே ,கிழே மெலிதாக இருக்கும் பிரபஞ்ச எல்லை கண்டுப்பிடித்து சொல்லி இருக்க மாட்டாங்களா?//

நான் கோடு போட்டு காட்டிய படம் தவறான ஒன்றுதான் என்பது இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.விரிவடைதலை குறிப்பிடும் போது சற்று தடித்த கோடு ஒன்றை போட்டு இருக்க வேண்டும். :)

பிரபஞ்சம் எல்லா திசைகளிலும் விரிவடைகிறது என்றுதான் பொருள் கொள்ளும் பட்சத்தில் மேலும் கீழும் விரிவடைதல் மூலமும் தட்டையாக இருக்க கூடிய சாத்திய கூறுகள் உண்டு அல்லவா.

சிந்திக்கத் தூண்டும் தங்களின் கருத்துகளுக்கு நன்றி.

Radhakrishnan said...

//வவ்வால் said...
முப்பரிமாணம் என்பது X,Y,Z என்ற அச்சுகளையும், முறையே , X,Y,Z தளங்களையும் கொண்டிருக்கிறது. இப்போது தட்டையாக இருக்க பிரபஞ்ச துகள்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு அச்சில் மட்டுமே விரவி... பெரு வெடிப்பின் விளைவாக விரிந்து செல்வதாக ஆகிறது.

அப்படி எனில் மற்ற அச்சுகளிலும், தளத்திலும் பிரபஞ்ச துகள்(இங்கு நட்சத்திரம்ம், கேலக்க்சி, கோளங்கள் எல்லாமே) விரவுதல் ஏன் இல்லாமல் போயிற்று?

மற்ற அச்சுகளில் பரவுதலை எந்த சக்தி தடுத்தது, தடுக்கிறதது?

இது போன்ற கேள்விகளுக்கு எனக்கு விடைக்கிடைக்கவில்லை, எனவே தட்டை என சொல்லப்படுவது சரியா என்ற சந்தேகம் எழுகிறது.//

நமக்கு தெரிந்தது நான்கு திசைகள், எட்டு திசைகள், ஆனால் உண்மையிலேயே எத்தனை திசைகள் உண்டு?. அதைப்போலவே நமக்குத் தெரிந்தது முப்பரிமாணம், நான்காம் பரிமாணம் தற்போது ஐந்தாம் பரிமாணம். ஆனால் இவ்வுலகில் இதையெல்லாம் தாண்டிய பரிமாணங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதை தெரிந்து கொள்ளும் நிலையில் நம்மிடம் வசதி வாய்ப்புகள் இல்லை.

எவர் சொன்னது இப்பிரபஞ்சம் ஒரே ஒரு அச்சில் மட்டுமே விரிவடைகிறது என? நமக்கு தெரியாது இருக்கின்ற ஒவ்வொரு அச்சிலும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து சென்று கொண்டிருக்கிறது. நமக்கு எளிதாக விளங்கி கொள்ள ஒரு அளவுகோலை வைத்து கொண்டு அதற்கேற்ற கணக்குதனை வைத்து கொண்டு விளையாடி வருகிறோம். அதன் காரணமாகவே நமக்கு பல விசயங்கள் புரிபடுவதில்லை. இந்த சொல்லப்பட்ட விசயங்களை எல்லாம் தாண்டிய ஒரு சிந்தனை நம்முள் எழ வேண்டும், அப்போதுதான் ஒரு தெளிவு கிடைக்கும். இதன் இதன் காரணங்களால் இது இது என வரும்போது, காரணங்கள் அற்ற பல விசயங்களின் முக்கியத்துவம் அழிந்து போகிறது. நீங்கள் எப்படி தட்டையாக இருக்க வாய்ப்பு இல்லை என சில சிந்தனைகளுடன் வலம் வருகிறீர்களோ அதைப்போலவே தட்டையாக வாய்ப்புண்டு என சில சிந்தனைகளுடன் வலம் வருகிறார்கள்.

இந்த பிரபஞ்சம் தட்டை தான். 'கறந்த பால் மடி புகா'. இறப்பு, பிறப்பு, இறப்பு, பிறப்பு என்பதெல்லாம் இல்லை. யுகங்கள் எல்லாம் இல்லவே இல்லை. 'பெரு வெடிப்பு கொள்கை' கூட தவறு என சிந்தித்து கொண்டிருப்போர்கள் உண்டு.

இந்த கேள்விக்கான விடை நீங்களே அறிந்து கொள்ளும்போது சொல்லுங்கள். நானும் தேடிக் கொள்கிறேன்.

அப்பாதுரை said...

பிரபஞ்சம் = universe?
யூனிவர்ஸ் தட்டை என்றோ தட்டை இல்லையென்றோ இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் data நேற்றைவிட அதிகம். நாளைக்கு இதைவிட. இன்னும் நூறு வருடங்களில் இதே விவாதம் நடக்கும் என்றே நினைக்கிறேன்.
அருமையான கட்டுரை, பின்னூட்டங்கள்.