Monday 11 January 2016

தட்சாயினியும் கல்யாண உறவும் -1

எனது பெயர் தட்சாயினி, வயது 23. சராசரிப் பெண்ணைப் போலவே இருப்பேன். சராசரி என்றால் என்னவென்று சொல்ல, சாதாரணம் அல்ல. கணக்கியல் படித்து வேலையில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகிறது. எனது கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.

எனக்கு ஒரு மூத்த சகோதரன் உண்டு. அவனுக்கு திருமணம் ஆகியிருக்கக்கூடாது என்றுதான் இன்றும் வேண்டுகிறேன். எங்களது குடும்பம் ஒரு விவசாய குடும்பம். கல்யாணம் முடித்த ஒரு மாதத்தில் எங்களுடன் இருந்த தொடர்பை என் அண்ணன் முற்றிலுமாகத் துண்டித்துவிட்டான். எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னை கரை சேர்ப்பான் என்ற எனது பெற்றோரின் நம்பிக்கை வீணாகிப் போனது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த நேரம் இது. பணம் சேர்த்து படித்து முடிக்க போதும் போதும் என்றானது.

என் அண்ணனைப் பார்த்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. வேலை கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. சில மாதங்கள் விவசாயம் செய்தேன். அதற்குள் பலவாறு பேச்சுக்கள். எப்படியோ ஒரு வேலை கிடைத்து அது எனக்குப் பிடித்துவிட்டது. இந்த வேலையில் சேர்ந்தபின்னர்தான் நிம்மதியாக இருந்தது.

பதினோராவது படிக்கும்போது அருண் என்பவனை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். பன்னிராண்டாவது முடித்ததும் எனது காதலை அவனிடம் சொன்னேன். சந்தோசப்பட்டான் ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. இன்று கூட அவனை எதேச்சையாக சந்தித்தேன். வேலை கிடைத்த விஷயத்தை சொன்னேன். வாழ்த்துக்கள் சொன்னவன் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தான். என்ன பண்ற என்ற எனது கேள்விக்கு விவசாயம் பார்க்கிறேன் என்ற பதில் தந்தவன் சரி பார்ப்போம் எனப்  போய்விட்டான். இன்றுவரை எனது காதலுக்கு அவன் பதில் சொல்லவே இல்லை. அவனைத்தவிர வேறு எவரையும் காதலிக்க மனமும் இல்லை. அவனை இன்னமும் எனக்குப் பிடித்து இருக்கிறது. அவனுக்கு என்னைப் பிடித்து இருக்கிறதா என கேட்கும் மன தைரியம் எனக்கு இருந்தது இல்லை.

''தட்சா  பொண்ணு கேட்டு வராங்க என்ன சொல்லட்டும் என்று அம்மா கேட்டதும் ஒரு மூனு வருஷம் போகட்டும்மா என்றேன். சரிம்மா என அம்மா அமைதி ஆனார். அருணுக்கு திருமணம் ஆகிவிடக்கூடாதே என்ற கவலை எனக்கு இருந்தது. எப்படியும் என்னை மணம்  முடிப்பான் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அருண் எனது ஊரில் இருந்து ஒரு 15கி மீ தொலைவில் உள்ள ஊரில் இருக்கிறான். அந்த ஊர்ப்பக்கம் சிலமுறை சென்றது உண்டு. ஆனால் அந்த ஊருக்குள் ஒரே ஒருமுறை சென்றது உண்டு. சின்ன கிராமம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அருண் அன்று ஊரில் இல்லை. பின்னர் அந்த ஊருக்குள் செல்லும் தைரியம் வந்தது இல்லை.

நான் வேலைப் பார்க்கும் ஊருக்குத்தான் அவன் பொருள் விற்க வாங்க வர வேண்டும். எங்க ஊருக்கும் இதுதான் விற்பனை இடம். அப்பா இங்கேதான் வருவார். அப்பாவின் கண்களில் பட்டு இருக்கலாம். ஆறு மணிக்கு அப்பா ஊரில் இருந்து கிளம்புவார். ஒன்பது மணிக்கு வீடு வந்து பின்னர் தோட்டம் செல்வார். வாரத்தில் மூன்று நாட்கள் நிச்சயம் செல்வார். இதுவரை நான் அந்த விற்பனை பகுதிக்கு சென்றது இல்லை. இப்போது அந்த இடம் எதுவெனப் பார்க்கத்தான் ஆர்வம் உண்டானது. அன்று இரவு அப்பாவிடம் பேசினேன்.

''என்னம்மா புது அக்கறை''

''சும்மா தோனிச்சிப்பா''

''நாளைக்கு என்னோட வாம்மா''

சனி அன்று அப்பாவுடன் சென்றேன். அப்பா கொண்டு போன காய்கறி மூட்டைகள் வெகுவேகமாக விற்றது. என்னை பலரும் விசாரித்தார்கள். அருணை எனது கண்கள் வேறு எவருக்கும் தெரியாமல் தேடித் தவித்தன.

''வாம்மா போகலாம், இன்னைக்கு நீ வந்த வேளை எல்லாம் சீக்கிரம் வித்துருச்சி''

''அப்பா வேற விற்பனை இடம் இங்கே இருக்கா''

''இல்லைம்மா, இது ஒரே இடம் தான். ஆனா பொருள் பொருத்து மாறும். வத்தல் எல்லாம் தெற்கால விப்பாங்க''

அப்பாவுடன் இத்தனை சுலபமாக இன்றுதான் பேசி இருக்கிறேன். ஒருவித பயம் எப்போதும் இருக்கும். ஆனால் அருண் பற்றிய நினைப்பில் பயம் விலகும்.

''பொங்கல் இந்த கடையில் நல்லா இருக்கும், வாம்மா சாப்பிட்டுப் போகலாம்''

நான் பார்க்காத ஒரு புதிய கடை அது. எவரைப் பார்க்க நினைக்கிறோமோ அவரைப் பார்த்தே தீர்வோம் என்று புரிந்த தருணம் அது. அருண் அந்த கடையில் இருந்து வெளியே வந்தான்.

(தொடரும்)