Showing posts with label உரையாடல் - சிறுகதைப் போட்டி. Show all posts
Showing posts with label உரையாடல் - சிறுகதைப் போட்டி. Show all posts

Friday 26 June 2009

பொதுவாத்தான் சொல்றேன்

பொதுவாத்தான் சொல்றேன் (உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)

மேலப்பட்டி அரசுநடுநிலைப் பள்ளிக்கு அருகில் தான் பாலர் பள்ளியும் அமைந்து இருந்தது. மேலப்பட்டியில் எல்லா சாதியினரும் இருந்தார்கள், அதில் ரெட்டியார்கள் அதிகம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சக்கிலியர்கள் குறைவாகவே இருந்தாலும் அவர்களுக்கென ஊரில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கேதான் அவர்கள் வாழ வேண்டும். ஊருக்குள் எல்லாம் வீடு கட்டி வாழ முடியாது.

இந்த சாதிய முறை எப்படி உருவானது, எதனால் கொண்டு வரப்பட்டது, எத்தனையோ முன்னேற்றங்களை தொழில்நுட்பத்தில் அடைந்தபோதிலும் இன்னமும் பல கிராமங்களில், நகரங்களில் என ஏன் அழியாமல் செழித்தோங்கி இருக்கிறது என ஆராய்ச்சியெல்லாம் செய்து அதற்கு மாற்று வழி கொண்டு வந்துவிட முடியாது. சாதிகளை முற்றிலும் ஒழித்துவிட வழியில்லாமலே இருக்கிறது. மொழி எதிர்ப்பு போராட்டம் வந்தது போல சாதி எதிர்ப்பு போராட்டத்தை ஒருவரும் கூட்டக் காணோம். திரைப்படங்களில், நாடகங்களில், கவிதைகளில், காவியங்களில் என சாதியை எதிர்த்து எழுதப்பட்டதும், கலப்புத் திருமணம் என காதல் திருமணங்கள் பெரிதாகப் பேசப்பட்டதுடன் அப்படியே நின்றுபோய்விட்டது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொன்னதுபோல சாதியில்லாத ஊரிலே வாழ்ந்திருக்கவும் வேண்டாம் என எண்ணுமளவுக்கு ஆகிப்போய்விட்டது. மேலப்பட்டி இதற்கு விதிவிலக்கு அல்ல.

பாலர் பள்ளியில் சேர்ப்பதற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பில் சக்கிலியர் பிரிவினைச் சார்ந்த மாரியப்பன் தனது மகன் வேல்முருகனுடன் தனியாய் ஓரிடத்தில் நின்றான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சிலர் தங்களது குழந்தைகளுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’ என குடும்பக் கட்டுப்பாடு எண்ணம் கொள்ளும்வகையில் இது இருந்தாலும், பலர் தங்களது குழந்தைகளை பணம் கொடுத்து தல்லாநகரில் உள்ள பள்ளியில் சென்றுச் சேர்த்திருந்தனர்.

வரிசையில் நிற்காமல் தனியாய் நிற்கும் வேல்முருகனைப் பார்த்து பாலர் பள்ளியில் சேர இருந்த இலட்சுமி எனும் சிறுகுழந்தை ‘வா’ என கையைக் காட்டி அவனை அழைத்தது. வேல்முருகனும் ஆசையுடன் அங்கே ஓட எத்தனிக்க அவனைப் பிடித்துக்கொண்டான் மாரியப்பன். ‘’இங்கனயே நில்லு’’ என அதட்டினான் மாரியப்பன்.

வேல்முருகன் மறுபேச்சு பேசாமல் அப்படியே நின்றான். இலட்சுமி தன் தந்தையிடம் ‘’கூப்புடுப்பா, கூப்புடுப்பா’’ என மழலையில் கெஞ்சியது. ‘’செத்த சும்மா இரு’’ என அதட்டினார் இலட்சுமியின் தந்தை இராமசாமி. மற்றவர்கள் இலட்சுமியைப் பார்த்தனர். குழந்தைகளைச் சேர்த்துவிட்டு பெற்றோர்கள் திரும்பிய போது சிலர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள். வேல்முருகன் பள்ளியில் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அது. பள்ளியில் சேர்த்துவிட்டுச் சற்று தாமதமாகத் தோட்ட கூலி வேலைக்குச் சென்றான் மாரியப்பன். தோட்ட முதலாளி கணேஷமூர்த்தி மாரியப்பனைப் பார்த்து சத்தமிட்டார்.

‘’இதுதான் வேலைக்கு வர நேரமாடா’’

‘’பையனை ஸ்கூலுல சேர்த்துட்டு வரேன் சாமி’’

‘’ஸ்கூலுக்குப் போயிட்டா அப்புறம் இங்க உனக்கப்பறம் யாரு வேலைப் பார்க்குறது’’

‘’அந்த யோசனை உங்களுக்கு முன்னமே இல்லாமேப் போச்சே சாமி’’

‘’பேசுவடா பேசுவ, பேச்சுல ஒன்னும் குறைச்சலில்ல, போயி வேலையக் கவனி’’

கணேஷமூர்த்திக்கு இரு மகன்கள், ஒரு மகள். அனவைரும் நன்றாகப் படித்து இருந்தார்கள். விவசாய நிலத்தை கூலிக்கு ஆட்கள் வைத்து அவரேப் பராமரித்து வந்தார்.

அன்று மாலையில் பள்ளியைவிட்டு வந்த வேல்முருகன் ‘அ’ என தரையில் கரித்துண்டால் எழுதிக் காட்டினான். ‘என் பிள்ளைக்குப் படிப்புல அக்கறை இருக்கு’ என மாரியப்பன் தனது மனைவி மூக்காயியிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டான். படித்தே வளர்ந்தான் வேல்முருகன்.

அதே பள்ளியில் மூன்று வரைப் படித்த தனது தங்கை பூங்குழலி படிப்பை பாதியிலெயே நிறுத்திவிட்டாள். வேல்முருகன் வற்புறுத்தியும் அவள் படிக்க விருப்பம் இல்லாமல், தாயுடன் தோட்டத்துக்கும், முள் பறிக்கவும் சென்றாள். மாரியப்பன் பலமுறைக் கண்டித்தும் அவள் கேட்பதாக இல்லை. படிக்காமலே வளர்ந்தாள் பூங்குழலி.

வேல்மூருகன், தொட்டு விளையாடும் விளையாட்டுக்களில் எல்லாம் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தாங்கள் தீண்டத்தகாதவர்கள் எனவும் ‘ஹரிஜன்ஸ்’ எனவும் அவன் வளர வளர அவனுக்குப் புரிந்துப் போனது.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ வரியைக் கேட்கும்போது அவனுக்கு வேதனையாக இருந்தது. இலட்சுமிக்கும், வேல்முருகனுக்கும் பள்ளியில் அதிக போட்டி இருந்தது. இலட்சுமியே எல்லா த் தேர்விலும் முதல்நிலை மாணவியாக வந்தாள். வேல்முருகனுக்கு முதல்நிலை நிராகரிக்கப்பட்டே வந்தது. எட்டாவது வரை அங்கேயே படித்தார்கள்.

வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த முதல் மகனுக்கும், இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடத்தி அழகுப் பார்த்த கணேஷமூர்த்தி தன் கடைசி மகனுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து வைத்தார். கல்யாணத்தை வெகுச் சிறப்பாகச் செய்ய ஏற்பாடு செய்து இருந்தார்.

மாரியப்பன் தனது மகனின் மாற்றுச் சான்றிதழழைப் பள்ளியில் பெற்றுக் கொள்ளச் சென்றான். பள்ளி தலைமையாசிரியர் நடராசன் மாரியப்பனிடம் பேசினார்.

‘’பையனை நல்லாப் படிக்க வைச்சிட்ட, பொண்ணு ம் படிச்சி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’’

‘’ஏதோ அவன் பொழப்பைப் பார்த்துக்குவானுட்டுதான் படிக்க வைக்கிறேன் சாமி, இந்த வேகாத வெயிலுல படாதபாடு பட்டாலும் கா வயிறுக்குத்தானே கஞ்சி கிடைக்குது, போடறதுக்கு ஒரு துணி எடுக்க முடியுதா சாமி’’

’குருவி சேர்க்கறதப் போல சேர்க்கனும், நீங்க எடுக்கற சம்பளத்துல பாதிய குடிச்சித் தீர்த்துறீங்க, கால காலமா அடிமைப்பட்டேத்தானே கிடக்குறீங்க, உங்களுக்கு போராடுறேனு கொடி கட்டிக்கிட்டு அவனவன் வயித்தை நிரப்பிட்டுத் திரியறானுக, உங்களுக்குத் தேவையின்னா நீங்கதான போராடனும், படிக்க எவ்வளவோ வாய்ப்பு இருக்கு, வேலைக்கு வாய்ப்பு இருக்கு, எத்தனையோ வசதிக செஞ்சு கொடுத்தும் நீங்க எப்பவும் இப்படித்தானே இருக்குறீங்க, இந்த அடையாளத்தை முதல மாத்தனும், நீங்க தாழ்த்தப்பட்ட பிரிவினரா காட்டிக்கிற அடையாளத்தைப் போக்கனும், எல்லோரோடையும் சமமா இருந்தாத்தான் ஒரு தன்னம்பிக்கை வரும், வளரும். ஆனா அது நடக்காது நடக்கவும் விடமாட்டீங்க. இப்படியே இருந்தா ஒரு வேல்முருகனோ, ஒரு பால்பாண்டியோ மட்டும்தான் முன்னேறுவான்’’

‘’சாமி தப்பா எடுத்துக்காதீக, இன்னைக்குதான் எங்கிட்ட இவள பேசறீக சாமி. முதல்ல நம்ம ஸ்கூலுல இருக்கிற வேறுபாட்டை நீங்க மாத்திட்டாலே பெரிய விசயம் சாமி, எம் பையன் எங்கன உட்கார்ந்து படிச்சான், எப்படி விளையாடுனான் அவன் மனசுல ஆறாத ரணமா இருக்கு சாமி’’

‘’அது இந்த ஊர் கட்டுப்பாடுனு இருக்கு’’

‘’அதேன் சாமி, இந்த நாட்டுக் கட்டுப்பாடும், எதைச் செய்யனுமோ அதைச் செய்யமாட்டாக, வீராப்பா பேசிக்கிருவாக, தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சிங்கோங்க சாமி, அடக்கத்தைக் கூட அடிமைத்தனமாப் பார்க்குற பூமியிது’’

நடராசன் எதுவும் பதில் பேசாது இருந்தார். பள்ளி மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு வேல்முருகனுடன் வெளியேறினான் மாரியப்பன். வேல்முருகனை காரியனேந்தலில் ஒன்பதாம் வகுப்புச் சேர்த்துவிட்டான் மாரியப்பன். இலட்சுமியும் அங்கேயே சேர்ந்தாள்.

கணேஷமூர்த்தியின் கடைசி மகன் திருமணம் பெரும் பொருட்செலவில் நடந்து முடிந்தது. மாரியப்பனுக்கும் மூக்காயிக்கும் வழக்கம்போல சேலை, வேஷ்டி எடுத்துக் கொடுத்திருந்தார் கணேஷ மூர்த்தி.

கணேஷமூர்த்தியின் மூத்த மகன் விநாயகபிரபு மாரியப்பனிடம் ‘’நம்ம ஊருல சாதிப் பிரச்சினை, வெளியேப் போனா இனப் பிரச்சினை, மனுசனுக்கு மனுசன் வெறுப்போடதான் வாழுறாங்க, எங்கே நம்ம சொத்தை அள்ளிட்டுப் போயிருவானோனு கெளரவம் பார்த்துட்டுதான் இருக்காங்க, இனத்துக்காரனு இல்லாம மனுசனா யாருமே நினைக்க மாட்டாங்க, ஏன்னா இனம் பெரிசுனு பேசிட்டு தன் இனத்தையே அழிக்க வழி செய்வாங்க. அது இருக்கட்டும், பையன் படிப்புச் செலவுக்குத் தேவைப்பட்டா எனக்கு தகவல் சொல்லு மாரியப்பா, எப்படி கேட்குறதுனு இருந்திராதே’’

‘’முதலாளி தருவாரு சாமி, தரலைன்னா கேட்கறேன் சாமி’’

‘’நீ எப்போதான் இந்த சாமியை விடப்போற, வெளியிலேப் போய் பாரு நீயும் நானும் வேற ஊருல நடந்தா நீ இந்த குலம், நா அந்த குலம் னு நாம நடந்துக்கிற முறையும், போட்டுக்கிற உடையும் தான் அடையாளம் காட்டும், யாருமே உன்னை தாழ்த்தப்பட்டவராவோ என்னை மேல் சாதிக்காரனாவோப் பார்க்கமாட்டாங்க, எல்லாம் இந்த ஊருக்கு மட்டுந்தான், எதுலயும் சாதியை முன்காட்டி எதையும் செய்யாத, அப்படி செய்யாம இருந்தாலே சாதி செத்துரும். ஆனா இங்க சாதியை வைச்சித்தான் எல்லாம் நடக்குது. மதத்தையும் தனக்கு அடையாளம் காட்டிக்கிர மனுசங்களும் ரொம்ப அதிகம், உம்பையன் டாக்டரா வரட்டும், இந்த ஊரிலேயே ஒரு ஆஸ்பத்திரி கட்டித் தரேன்’’

வேல்முருகன் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கினான். இலட்சுமியும் அதிக மதிப்பெண்கள் வாங்கினாள். இருவருக்குமே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டியது. தன்னிடம் பணம் இல்லாத குறைதான் பெரிதாக மாரியப்பனுக்குப் பட்டது. மாரியப்பன் கணேஷமூர்த்தியிடம் பண உதவிக்காக நின்றான்.

கணேஷமூர்த்தி தன்னிடம் கொடுப்பதற்கு இல்லை கல்யாணத்திற்கு அதிக செலவு பண்ணிவிட்டேன் என மறுத்து விட்டார். விநாயகபிரபுவிடம் பணம் கேட்டான் மாரியப்பன். சொன்னதுபோலவே விநாயகபிரபு பணத்தை உடனே அனுப்பி வைத்தான். சிலநாட்களுக்குப் பின்னர் இந்த விசயம் கணேஷமூர்த்திக்குத் தெரியவர மூத்தமகன் மேல் கடுங்கோபம் கொண்டார். மாரியப்பனை வேலையை விட்டு நிறுத்திவிட நினைத்தாலும் அவனைப் போல் உழைக்க ஆளில்லை என பேசாமல் இருந்துவிட்டார்.

வேல்முருகனும், இலட்சுமியும் நன்றாகப் படித்து மருத்துவராக வெளிவந்தார்கள். பூங்குழலிக்கு வெளியூரில் அவன் வசதிற்கேற்ப திருமணம் முடித்து வைத்தான் மாரியப்பன்.

விநாயகபிரபு தனது சொந்த செலவில் மேலப்பட்டியில் மருத்துவமனை ஒன்றைக் கட்டினான். இதைக் கண்டு கொதித்துப் போனார் கணேஷமூர்த்தி. அதே மருத்துவமனையில் வேல்முருகனையும், இலட்சுமியையும் மருத்துவராகப் பணியாற்றுமாறுக் கேட்டுக் கொண்டான் விநாயகபிரபு.

அருகிலிருந்த ஊர்க்காரர்களெல்லாம் மருத்துவம் பார்க்க வந்தார்கள். எந்த மருத்துவரைப் பார்ப்பது என்பதில் அவர்கள் பேதம் பார்க்கவில்லை. ஆனால் உள்ளூர்காரர்கள் வேல்முருகனிடம் செல்வதைத் தவிர்த்தார்கள். இலட்சுமி ஒரு வேலை விசயமாக சில நாட்கள் வெளியூர் சென்று இருந்தாள்.

அப்பொழுது கணேஷமூர்த்தி மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் வேல்முருகன் மட்டுமே இருப்பதை அறிந்த கணேஷமூர்த்தி தன்னை நகர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொன்னார். நிலைமை மோசமாக இருக்கவே வேல்முருகன் அவரை அந்த ஊரின் மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சைப் பார்க்கச் சொன்னான். அருகிலிருந்த மாரியப்பன் சொன்னான்.

‘’சாமி நான் வேலைப் பார்த்த விவசாய நிலம் தானே சாமி சோறு போட்டுச்சு, அதை நீங்க வேணாம்னு ஒதுக்கலையே, மோட்டாரு தூக்கி வைக்கறப்ப, மூட்டைத் தூக்கறப்ப உங்க கையை என் கையி உரசுச்சே சாமி, இப்போ அவ என் மகன் இல்லை சாமி, இந்த ஊரு டாக்டரு’’

கணேஷமூர்த்தி மயக்கநிலையை அடைந்தார். வேல்முருகன் எதையும் யோசிக்காமல் உடனடி சிகிச்சைத் தந்தான். சில மணி நேரங்களுக்குப் பின்னர் கண்விழித்துப் பார்த்தபோது கணேஷமூர்த்தியின் கண்களில் ‘’கணேஷமூர்த்தி பொது மருத்துவமனை, மேலப்பட்டி’’ எனும் வாசகம் மிகவும் பிரகாசமாக தெரிந்தது.

முற்றும்