Saturday 8 February 2020
Friday 10 January 2020
அசுரனும் தர்பாரும்
திரையரங்கு சென்று படம் பார்ப்பது என்பது அரிதானதால் பார்க்கின்ற அனைத்து தமிழ் திரைப்படங்கள் குறித்து எல்லாம் எழுதுவது என்பது சற்று இடைஞ்சல்தான். அக்டோபர் மாதம் 12ம் தேதி அன்று அசுரன் திரையரங்கு சென்று பார்த்தபோது உடன் வந்தவர்கள் படத்தின் உட்பொருளை புரிந்து கொள்ளமுடியாமல் நிறைய வன்முறையாக இருக்கிறது என்றார்கள். ஆனால் அந்தப் படத்தின் வலியை வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர இயலும்.
ஒடுக்கப்பட்டவர்களின் வலி என்பது அசுரன் போன்ற படைப்புகளின் மூலம் வெளிக்கொண்டு வந்தாலும் சமூகத்தின் மாற்றம் என்பது உடனடியாக நிகழும் நிகழ்வு அல்ல. ஏதேனும் ஒரு வகையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். பணம் இருப்பவருக்கு, செல்வாக்கு உள்ளவருக்கு அதனால் பெரும் பாதிப்பு இல்லை, ஆனால் அல்லல்படுவது எல்லாம் பிறரால் அடக்கி அடிமைப்படுத்தப்பட்டவர்கள்தான்.
கல்வி என்ற ஒன்றே சமூக மாற்றத்திற்கு வழி என்று சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது போல படித்தவர்கள்தான் பெரும்பாலும் புத்தியற்று வலம் வருகிறார்கள். இது இந்த உலகத்தின் சாபக்கேடு. படைப்பாளி எப்படியாவது இச்சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடாதா எனும் ஏக்கத்தில் வெளிக்கொணரும் படைப்புகளில் வலி அதிகம். இந்தப் படைப்புகள் எல்லாம் வெறும் கை தட்டல்களுக்கு அல்ல.
கிராமத்தில் நிலத்தகராறு, வெட்டுக்குத்து, செருப்பை கையில் எடுத்துக் கொண்டு போவது என ஒரு ஒடுக்கப்பட்டச் சமூகத்தினூடே வாழ்ந்து வந்த காரணமோ என்னவோ படைப்பின் ஆழம் நிறையவே பாதித்தது. ஆனால் நகரங்களில் எல்லாம் இப்படி எல்லாம் இருப்பது இல்லை எனும் ஒரு கருத்து உண்டு, அங்கே பணத்தைத் தேடி அலைபவனுக்கு யார் என்ன ஆள் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு ஏது பேதம், இருந்தாலும் கிராமத்தில் இருந்து பயணப்பட்ட பலரின் உள்ளுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் விஷச்செடி முற்றிலுமாக அழிக்கப்பட்டது இல்லை. இனி வரும் சந்ததிகள் வர்க்க பேதங்கள் பார்க்காமல் அனைவருக்கும் உதவி புரிந்து அன்புடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே இன்னும் பல வருடங்களுக்கு பெரும் கனவாகவே இருக்கும். மக்கள் திருந்த நினைத்தாலும் குட்டி குட்டித் தலைவர்கள் மக்களை விடுவதாக இல்லை, ஊர் நாட்டாமைகள் உறங்குவதாகவும் இல்லை.
மிகச் சிறப்பான படைப்பு தந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள். தனுஷ் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இசை அருமை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
அதன்பிறகு திரையரங்கு சென்று இன்று பார்த்த படம். தர்பார். ரஜினி என்பதைத் தவிர வேறு என்ன சொல்லிவிட முடியும். படம் ஆரம்பித்ததில் இருந்தே திரையரங்கில் ஆர்ப்பாட்டங்களும், சப்தங்களும் என இருந்தது. ரஜினியின் படங்களை அமைதியாகப் பார்க்கும் வழக்கம் எங்குமே இல்லை போல. இது ஒரு சினிமா எனும் மனநிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற படங்களை இரசித்து வர இயலும். படம் வேகமாக முடிந்துவிட்டது எனும் திருப்தியும் நிம்மதியும் இருந்தது. இப்போதெல்லாம் எந்தப் படம் என்றாலும் முழுவதுமாகப் பார்த்து விடுகிறேன். எனக்கு இரசனை குறைந்துவிட்டது என்றில்லை, அப்படி என்னதான் ஒரு படைப்பாளி சொல்ல வருகிறார் எனும் ஆர்வக்கோளாறுதான். இது சினிமா அல்ல, மாபெரும் ஒரு படைப்பு என சுயதம்பட்டம் அடிக்கும் இயக்குநர்கள் நிச்சயம் கொஞ்சமாவது அறிவோடு இருந்தால்தான் நல்லது அப்போதுதான் என்ன மாதிரியான வசனம் எழுதுகிறோம், எந்த மாதிரியான காட்சிகள் அமைக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்கும். தமிழ் சினிமா காலா, அசுரன், பரியேறும் பெருமாள், நேர் கொண்ட பாதை போன்ற பாதையில் பயணித்தாலும் பேட்ட, விசுவாசம், பிகில், தர்பார் போன்றவைகளும் தேவையாகத்தான் இருக்கிறது.
இப்படி பிறரது படைப்புகள் குறித்து எழுதும் போது நாம் எழுதுகின்ற படைப்புகள் குறித்தும் ஒரு குற்ற உணர்வு வராமலும் இல்லை. திருக்குறள் தராத சமூக மாற்றத்தை, இராமானுசர் மகான்கள், பெருந்தலைவர்கள் சொன்ன கருத்துக்களால் உண்டாகாத சமூக மாற்றத்தை கொண்டு வர வேண்டி படைப்பாளிகள் பலர் தங்கள் படைப்புகளில் சுமந்து கொண்டு அலைகின்றார்கள். காலம் என்ற ஒன்றே ஒன்றுதான் அத்தனையையும் புரட்டிப் போடும் பேராற்றல் கொண்டது. காலத்தை மாற்றும் வல்லமை மனித இனத்துக்கு வசப்படட்டும்.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...