Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Wednesday 24 September 2014

கற்றறிந்த கயவர்கள்

ஒருவன்  தனது நண்பனிடம் சொல்லி தான் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரப்ப சொல்கிறான். அந்த நண்பனோ வற்புறுத்தலின் பேரில் அவனது நண்பன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை வெளியிடுகிறான். இதைப் படிக்கும் நபர்கள் சிலர் பதறுகிறார்கள். அவரவருக்கு எவ்வளவு வேலை இருக்கும், அதை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு செல்பேசியில் அழைக்கிறார்கள். அந்த செல்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இதெல்லாம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நடந்து இருக்கும். அதில் ஒரு சிலர் இப்படி நடந்து இருக்காது எனவும் சொல்கிறார்கள். எனக்கோ என்னை அறியாமல் ஒருவித படபடப்பு. எங்கள் ஊரில் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட அத்தனை நபர்களும் கண் முன் வந்து போகிறார்கள். இத்தனைக்கும் இந்த செய்தி வெளியிட சொல்லும் நபர் அவ்வப்போது நல்ல நல்ல விசயங்கள் எழுதக்கூடியவர்.

திடீரென் எழுத சொன்ன நபரே வந்து உண்மையை வெளியிடுகிறார். எனக்கு கோபம் அதுதான் அப்படி எழுத சொன்னேன். கோபம் வந்தால் மௌனமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் அடுத்தவரை வருத்தம் கொள்ள வைக்கத் தோன்றும். அடப்பாவி, சே என உலகம் இது. என்ன உள்ளம் இது என்றே அந்த இடத்தை கடந்து போய்விடுகிறேன்.

இருப்பினும் அதனால் ஏற்பட்ட அந்த சில நிமிட மன அதிர்வுகளை அவன் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. எனக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எழுத்துக்கு எழுதுவதோடு சரி. முகம் தெரியாத மனிதர்களுடன் என்ன அத்தனை பிடிமானம் வேண்டி கிடக்கிறது என எண்ணியபோது நல்லவரோ கெட்டவரோ ஒரு மனிதரின் மரண செய்தி எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிடும். நாம் சாதாரண மனிதர்கள், ஞானிகள் அல்ல என்றே எழுத தோணியது. எவரேனும் அடிபட்டு கிடந்தால் கண்ணை திருப்பிக் கொள்ளும் உலகம் அல்ல இது. பதறிக்கொண்டு ஓடும் பாரதம் இன்னும் உள்ளது.

இணையம் என்பது எத்தனை அபாயகரமானது என்பது பலர் உயிருடன் இருக்கும்போதே இறந்து போனதாக செய்தி வெளியிடும் வக்கிரம் எண்ணம் கொண்டது.

மனிதர்களின் மரணம் என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறுபிறப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். உடல் உறுப்புகளே வெட்டப்பட்ட பின்னர் மறுபிறப்பு எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

இப்படி மரண நிகழ்வுகள் தொடர்பாக பல வதந்தி விசயங்கள் இந்த கற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது. 

போதும் உங்கள் வக்கிர விளையாட்டு கற்றறிந்த கயவர்களே. 


Tuesday 31 January 2012

கூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்

நான் internet explorer அதிகம் உபயோகம் செய்வது கிடையாது. நான் மிகவும் விரும்பி உபயோகம் செய்வது google chrome. மின்னல் வேகத்தில் வேலை செய்யும். அதைப்போல எதாவது தளம் வைரஸ் போன்ற விசயங்களால் தாக்கப்பட்டு இருந்தால் காட்டி கொடுத்துவிடும். அதனால் எப்போதும் கூகுள் குரோம் தான் எனக்கு சிறந்த ஒன்று. 

அதுவும் இந்த வலைப்பூ எழுதுவது என்றால் குரோம் அல்லது ஆப்பிள் சஃபாரி. ஆப்பிள் சஃபாரியில் என்ன பிரச்சினை என்றால் நேரடியாக பின்னூட்டத்தில் தமிழ் வைத்து எழுத முடியாது. கூகுள் சென்று அங்குதமிழில் மாற்றி எழுதி அதை கொண்டு வந்து பின்னூட்டத்தில் வந்து பதிவிட  வேண்டும். அதனால் படிக்கும் வலைப்பூக்களுக்கு என்னால் எளிதாக பின்னூட்டம் இடவே முடிவதில்லை. அதனால் சுயநலமியாக எனது வலைப்பூவில் மட்டும் பின்னூட்டம் எழுதிவிட்டு அவ்வப்போது ஒவ்வொரு வலைப்பூவிற்கு பின்னூட்டம் இடுவது உண்டு. 

கூகிள் குரோம் என்னவென்றால் பதிவுக்கு கீழே வைத்திருக்கும் பின்னூட்ட பெட்டியில் மறுமொழி பதிவு போட இயலாது. அதுவே மற்றொரு பக்கத்தில் வரும் பின்னூட்ட பெட்டி என்றால் எளிதாக பின்னூட்டம் எழுத முடியும். இப்படி இருப்பதால் குரோமில் படித்துவிட்டு பின்னர் எக்ஸ்ப்லோறேர் சென்று போதும் என்றாகிவிடும். 

பொதுவாக பின்னூட்டம் எழுதுவது அந்த நேரத்தில் எழுதுவதும், சிறிது நேரம் பின்னர் எழுதுவதும் வித்தியாசமாக இருக்கும். சிந்திக்க அவகாசமே தரக்கூடாது என்பதுதான் நான் படிக்கும்போது நினைப்பது. படித்தவுடன் பளிச்சென ஒரு எண்ணம் வரும், அதுதான் எனக்குப் பிடித்த  பின்னூட்டம். சிறிது நேரம், சிறிது நாட்கள் கழித்து எழுதினால் மொத்த சிந்தனையும் வேறு மாதிரி இருக்கும். 

நண்பர் கிரி பதிவில் குரோம் பற்றி எழுதி இருந்தார். இந்திய மக்களுக்கு நான் அனுபவிக்கும் சோதனைகள் வருமோ என்னவோ. 

சில மாதங்கள்தான் இந்த பிரச்சினை. அதுவும் புதிய வலைத்தள வடிவமைப்புக்கு சென்ற பின்னர் என கருதுகிறேன். ஏதாவது தொழிநுட்பம் தெரிந்தால் சொல்லுங்கள். 

இத்தருணத்தில் மேலும் சில நாட்கள் நீட்டித்தமைக்கு நேசம் குழுவுக்கு நன்றி. கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன். தமிழ் படுத்தும் பாடு!