Saturday 31 December 2011

புதிதாக என்ன இருக்கிறது?

இன்றைய புதியவகைகள் நாளைய பழையவகைகள் ஆகின்றன. நேற்றைய புதியவைகள் இன்றைய பழையவைகள் ஆகின்றன. புதியவைகள் புதியவைகளாக என்றுமே இருப்பதில்லை. இருந்தும் புதியவகைகள் தரும் மோகத்திற்கு குறைவும் இல்லை.

புதிதாக வாங்கிய ஒன்று தொலைந்து போயிருந்தது. அதை தேடி கண்டெடுக்கும்போது அது பழையவையாக மாறியிருக்க கூடும். புதியவகைளை போற்றி பாதுகாக்க செய்யும் முயற்சியை போல பழையவைகளை போற்றி பாதுகாக்க மனம் முயல்வதில்லை. பழையதுதானே எனும் அலட்சியம் பரவலாகவே ஏற்படுவது உண்டு.

பழையவைகள் தம்மை புதியவைகளாக மாற்றி வலம் வருவதுண்டு.  இருப்பினும் தம்மிடம் இருக்கும் பழமையை முற்றிலும் அவை துறப்பது இல்லை. தாம் பழையவைகள் ஆகிவிடுவோம் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எண்ணற்ற புதியவைகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய சிந்தனைகள் எல்லாம் பழையவற்றில் இருந்தே தோன்றி அந்த புதிய சிந்தனைகள் மீண்டும் பழைய சிந்தனைகள் ஆகின்றன. சிந்தனையற்ற நிலையில் மனம் லயித்து கொண்டிருப்பது என்பது ஒரு கடினமான பயிற்சியாகவே இருக்க கூடும். தியானத்தில் கூட, உறக்கத்தில் கூட ஏதாவது ஒரு சிந்தனையில் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைப் பிடித்து உட்காரவைக்கும் திறன் எவர் கொண்டு இருப்பாரோ?

ஆதியும் அந்தமும் இல்லாத அனைத்திலும் நிரம்பிய இறைவன் மிக மிக பழையது. புதிதாய் தோன்றும் மனிதர்களால் இறைவன் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கிறான் அல்லது இறைவனை  புதுப்பிக்க புதிய புதிய விசயங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

நிறைக்கும் எடைக்கும் வித்தியாசம் உண்டு. மாற்றமில்லா நிறை இந்த பிரபஞ்சத்தில் எங்கும் ஒரே நிலையில் இருக்கும். அதே மாற்றமில்லா நிறையின் எடை கிரகத்துக்கு கிரகம் மாறும். இருக்கின்ற எல்லாமே பழையது. அதில் வந்து அமரும் சிந்தனை, சிந்தனையின் செயல் வடிவம் புதியது.

ஒரு பொருளுக்கு நிறை வந்தது எப்படி எனும் தேடல் புதியது. நிறை என்பது எந்த ஒரு பொருளுக்கும் பழையது. பொருளின் வஸ்து அளவை நிறையை கொண்டே கணிக்கப்படுகிறது. அந்த பொருளில் எத்தனை அணுக்கள் இருக்கின்றன, மூலக்கூறுகள் இருக்கின்றன என்பது மூலமும் எத்தனை சக்தியால் பின்னப்பட்டு இருக்கிறது என வஸ்துவின் அளவை கணிக்கிறார்கள்.

ஒரு பொருளின் சடத்துவதிணிவு என்பது ஒரு விசையை அந்த பொருளின் மீது செலுத்தும்போது அந்த பொருளானது தனது இடப்பெயர்ச்சியை எதிர்க்கும் சக்தியை பெற்று இருப்பதை பொறுத்தே அளக்கப்படுகிறது. ஈர்ப்பு பொருண்மை பொறுத்து பொருளின் வேகம் மாறுபடும். இதுபோன்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் பழையது. அதை தமிழில் மொழிபெயர்த்து சொன்னால் தமிழுக்கு புதியது.

இந்த கவிதை புதியது, அதில் இருக்கும் எழுத்துகள் பழையது.

புதிய ஆண்டுதான்
புதிய எண்கள்தான்
நாம் ஏனோ
பழையது போன்றே இருக்கிறோம்.

ஆசையுடன் வாங்கினேன்
புதிய ஆடை, புத்தாண்டு
என்னிடம் இருந்த
பழைய ஆடையும் புதிதானது
இல்லாதவன்
உடுத்தி கொண்டதால்.

பழையவைகள் எல்லாம் பொக்கிசங்கள்
பெருமிதமாய் சொல்லி வைத்தார்
பழையன கழிதல் என்றே
பொக்கிசங்கள் தொலைந்து போயின.

புதியது பழையது
எல்லாம் மனது
சொல்லி சிரித்தார்
அவரிடமே கேட்டேன்
இனி புதிதாக என்ன இருக்கிறது?


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
   (மொழி வாரியாக, இனம் வாரியாக, நாடு வாரியாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருவது புதிதான பழையது)

Wednesday 28 December 2011

மயக்கம் என்ன வியக்கும் வண்ணம்

சார், எதற்கு ஒரு மாதிரி இருக்கீங்க?

வாழ்க்கையே வெறுத்து போச்சுயா, எதுக்கு இந்த உசிரை பிடிச்சி இருக்கணும்னு தோணுது.

சார், எதுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா உங்க பொண்டாட்டி உங்களை பெரிய லெவலுக்கு கொண்டு போயிருவாங்க, இப்படி விரக்தியா எல்லாம் பேசமாட்டீங்க.

வெங்காயம், அவளால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து உட்காந்துருக்கேன், கல்யாணமாம் கல்யாணம், கிளம்பிரு இல்லை கடிச்சி வைச்சிருவேன்.

சில நேரங்களில் பல விசயங்கள் மிகவும் அதிகபடுத்தபட்டு பேசபடுகிறதோ எனும் ஒரு எண்ணம் தானாக எழுவது உண்டு. பிறர் நமக்கு ஊக்க சக்தியாக இருந்தாலும், நம்முள் ஒரு ஊக்கமும், உந்துதலும் இல்லையெனில் நம்மால் ஒரு காரியத்தை செய்ய இயலாது என்பதுதான் நான் கண்டு கொண்ட கற்று கொண்ட பாடம். எதற்கு இந்த எண்ணம் சிந்தனை எழுந்தது எனில் இந்த விசயத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து ஒரு காந்தி மட்டும் ஏன் உருவானார் என்பதுதான்?

மயக்கம் என்ன படம் சரியில்லை என்று கேள்விபட்டேன், ஆனால் விமர்சனம் எதுவும் படிக்கவில்லை. படம் பார்க்க அமர்ந்ததும் படத்தின் வேகம் சற்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனாலும் மிகவும் பிடித்து இருந்தது. மிகவும் நகைச்சுவையாகவே காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அதுவும் 'ஓட ஓட' எனும் பாடலில் 'சாமி என்ன பங்கம் பண்ணுது' எனும் காட்சி அமைப்பில் சாமி சிலைகள் தலையை தொங்கபோட்டதை கண்டு அதிகமாகவே சிரிப்பு வந்தது. இப்படியாக சென்று கொண்டிருக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனும், அவரது நண்பனும் அழுத பின்னர் 'ரொம்பவே அழுதுட்டோம்' என சொல்லும் போது சிரிப்பு வந்து சேர்ந்தது.

ஒரு படைப்பு என்பது என்ன? அதை படைப்பவரின் வலி எப்படி இருக்கும் என்பதை பிறர் எழுத்து மூலம் அறிந்த நான் இந்த படத்தை பார்த்துதான் காவியமாக தெரிந்து கொண்டேன். நான் ஆராய்ச்சி செய்தபோது நான் எனது ஆராய்ச்சி பற்றி வெளியிட இருந்த அதே விசயத்தை, ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது குறித்து ஏமாற்றம் மட்டுமே என்னால் அடைய முடிந்தது. அங்கே வேலைக்கு என ஒரு வருடம் முன்னர் தான் விண்ணப்பம் போட்டு இருந்தேன். வெளியிட்ட ஆராய்ச்சியில் எல்லா வேலைகளும் அவர்கள் செய்தது, ஆனால் சிந்தனை மட்டும் என்னுடையது. அதே வேளையில் ஆராய்ச்சியில் ஒரே சிந்தனை பலருக்கு வர வாய்ப்பு இருக்கிறது, எனவே நாம் செய்து இருக்கலாம் என்கிற ஒரு ஏக்கம் இருப்பது இயல்புதான். அதே வேளையில் எவர் செய்தால் என்ன எனும் பக்குவம் அந்த நாளில் இருந்து எனக்குள் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் புன்னகையுடன் கடக்க பழகி  கொண்டேன். அதைப் போல இந்த எழுத்துகளை திருடினேன், தாரளாம திருடங்க என பதிவுகளும் போட்டு இருக்கிறேன். ஆனால் தனது வேலையை மட்டுமே நம்பும், உயிராக போற்றும் மனிதரின் வலிகள் மிகவும் அதிகம் தான்.

ஒரு திறமைசாலியின் திறமையை எவராலும் அடைத்து வைக்க முடியாது. ஒரு படம் எடுத்த அந்த கதாநாயகன் அதைப்போல பல படங்கள் எடுக்க இயலும், ஆனால் மனம் உடைந்து போகும் பலவீனனாக காட்டி இருப்பது யதார்த்தம். பலர் தங்களது திறமைகளை உணராமலே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் எடுத்துகாட்டு. உடைஞ்சி போய்ட்டேன் என எத்தனை தடவை எத்தனை விசயங்களில் பேசி இருப்போம். நமக்குள் ஒரு உந்துதல் இல்லையெனில் நம்மால் முன்னேறவே முடியாது. படம் எடுத்தது கதாநாயகன், படத்தை அனுப்பி வைத்தது மனைவி. சில எதிர்மறை விசயங்கள் படத்தில் உண்டு, அதை பற்றி எதற்கு பேசுவானேன்.

ஒரு மனிதன் போராடி சாதிக்கும் போது நமக்குள் கண்ணீர் வந்து சேர்வது இயல்புதான். அதற்கு பின்னணி காரணங்கள் என்னவாக இருந்துவிட்டு போகட்டும். இந்த படத்தை பற்றி இன்னும் இன்னும் எழுதி கொண்டே போகலாம். பல விசயங்கள் கனவாக இருக்கும் என நினைத்தபோது நான் என்ன சீரியலா எடுத்துட்டு இருக்கேன் என இயக்குனர் காட்சிகள் மூலம் நம்மை கேள்வி கேட்பது மிகவும் அருமை.

மயக்கம் என்ன என்கிற வார்த்தையை படத்தின் தலைப்பாக போட்டுவிட்டு மௌனம் என்ன என கதாநாயகனின் மனைவி மூலம் நிறையவே பேசி இருக்கிறார். சில பல நேரங்களில் தவறிப் போகும் மனிதர்களை மன்னித்து அவர்களை நல்ல பாதையில் செல்ல வைக்க இயலும் எனும் இயல்பான வசனங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த மயக்கம் என்ன பலருக்கும் மயக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்.


Tuesday 27 December 2011

டெரர் கும்மி விருதுகளும் டெரரான நானும்

டெரர் கும்மி விருதுகள் - 2011  காண அழுத்துக   உங்களுக்கு பிடித்த உங்கள் பதிவுகளை இணைத்து விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள். 


ஐயா டெரர் கும்மிகளே, வணக்கமுங்க. உங்களோட விருது பற்றிய அறிவிப்பை இங்கே நான் வெளியிடுறதால நான் போட்டியில இணையறது பாதிக்கும்னா அதுபத்தி கவலை இல்லீங்க. நான் என்னோட பதிவுகளை இணைச்சிட்டேன். மறக்காம நடுவர்களுக்கு அனுப்பி வைச்சிருங்க, சொல்லிட்டேன். அப்படி செய்யலைன்னா 'இது ரத்த பூமி' அப்படிங்கிற வசனத்தை 'இது ரத்த உலகம்' அப்படின்னு ஆக்கிபூடுவேன்.

அட சாமிகளா! நான் நினைச்சதை நீங்க செஞ்சிட்டீங்களே! நான் ஒரு பத்தாயிரம் ரூபாயிக்கு ஒரு விருது அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். நிசமாத்தேன், கண்துடைப்புக்கு சொல்லலை. கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டு எழுதுறாங்களே, இவங்க எழுத்தை ஊக்கம் செய்ய ஒரு அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். அதுவும் தமிழ்மணம் இந்த வருஷம் விருது அறிவிப்புகள் இல்லைன்னு சொல்லிருச்சா நல்ல வாய்ப்பா இருக்கும்னு நானும் மனப்பால் குடிச்சேன்.

அதோட மட்டுமா. பல அறிவிப்புகள் எல்லாம் மனசுக்குள்ளார வைச்சிருந்தேன். இணையத்தில் எழுதுறவங்களுக்கு ஏகப்பட்ட ஊக்கத்தொகை, விருதுகள் எல்லாம் அறிவிச்சி எழுதறவங்க நாம வெட்டியா ஒன்னும் எழுதலை அப்படின்னு நினைக்க வைக்கனும்னு. ஆனா என்ன ஒன்னு, பயபுள்ளக நான் விளம்பரம் தேடுறதுக்குதான் இப்படி அலையுதுன்னு மனசை குத்தும் குத்தம் சொல்லிப்போடுவாகனு விட்டுட்டேன்.

 நீங்க மொக்கை பதிவுகளோட கூடாரம் அப்படின்னு சொல்றதை பார்த்தா என் கண்ணுக்கு அப்படி ஒன்னும் தெரியலையே! நீங்க பண்றதெல்லாம் மொக்கை மறுமொழிகளின் ராஜ்ஜியம் அப்படின்னு சொல்றாங்களே, ம்ம்ம். எத்தனை பேரு நாம எழுதற பதிவுக்கு உருப்படியா ஒரு மறுமொழி கூட வரலைன்னு கவலைபட்டு இருக்காங்க. ஒருவேளை நான் எழுதறது கூட மொக்கை பதிவுகள் அப்படிங்கிற உணர்ச்சி இல்லையோ எனக்கு. ஒரு சினிமா படத்தில சொல்லக்கூடிய மிக முக்கிய கருத்தை சீரியஸா சொல்றதை  விட நகைச்சுவையா சொன்னாத்தான் புரியும்னு அந்த காலத்திலேயே என் எஸ் கிருஷ்ணன் ரொம்பவே தீவிரமா செயல்பட்டார், அதுபோல உங்க பதிவுகள் சிலதை படிச்சேன், ரசிச்சேன். நகைச்சுவையை ரசிக்க நான் என்ன நகைக்கடையில செலவு பண்றதுக்கு யோசிக்கிறமாதிரியா யோசிக்கனும். விருது அறிவிப்பு நேரத்தில இப்படி நான் எழுதறது ஒரு வழக்கு நடக்கிற நேரத்துல அந்த வழக்கு பத்தி வழ வழானு எழுதறமாதிரி ஆயிரும், அதுவும் பயபுள்ளைக நான் ஜெயிக்கிறதுக்காக காக்கா பிடிக்குறேனு கோஷம் போடபோறாங்க.

உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் எழுத்து தகராறு வந்ததை படிச்சேன். அந்த எழுத்து தகராருல இப்படி கூட்டமா வெளியே போயிடீங்க அப்படிங்கிற விவரத்தையும் படிச்சேன்.  ரொம்ப பேருக்கு மனசு வருத்தம், ரொம்ப பேருக்கு மனசுல சந்தோசம். நீங்க அடிக்கிற கும்மி எழுத்துல, சீரியஸ் எழுத்து எல்லாம் செத்து போகுதுன்னு ரொம்ப பேரு கவலைபட்டாங்களாம். சீரியசான விசயத்தை படிக்க நாலு பேருதான் இருப்பாங்க அப்படிங்கிற உத்தியை கண்டுபிடிச்சி ரஜினி கணக்கா கலக்கலா பாதை போட்டது நீங்க தான். கும்மி அடிச்சாலும் கம்மியான பதிவுகள் தானே போடறீங்க.

போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். என்னைப் போல பலர் மின்னஞ்சல் மூலமே உங்கள் போட்டியை தெரிந்து கொள்ளும் நிலை இருப்பதாலும், பலருக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்குமென்பதாலும், எனது நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்பதாலும் இந்த இடுகை. அதோட விட்டுருவமா!

இந்த கும்மி பத்தி கொஞ்சம் எழுதிரலாம்.  கீழே தரப்பட்ட தகவல்கள் தமிழ்வு எனப்படும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி.


//புற விளையாட்டுகள்
கும்மியும்     கோலாட்டமும் தமிழக நாட்டுப்புற உழைக்கும் வர்க்கப்
பெண்களிடையே காணப்படும் புற     விளையாட்டுகள் ஆகும்.
இவ்விளையாட்டுகள் பெண்களின் உடல்திறனை வளர்ப்பவையாக
உள்ளன.
 கும்மி
பெண்கள்     வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்தடிக்கும்
விளையாட்டு கும்மி ஆகும்.
நாட்டுப்புறப்     பெண்களுக்கே உரிய விளையாட்டாகவும் பெண்களைத்
தெய்வ வழிபாட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் கருவியாகவும் கும்மி
விளையாட்டு விளங்குகிறது. கும்மி நிகழ்த்துதலின் போது பெண்களால்
பாடப்படு்ம் பாடல் கும்மிப் பாட்டு என வழங்கப் படுகிறது.
கும்மியானது கும்மி கொட்டுதல், கும்மி விளையாட்டு,முளைப்பாரிப்
பாட்டு, கும்மி தட்டுதல், கும்மி ஆட்டம்
 எனப் பலவாறு
கூறப்பட்டாலும் கும்மி தட்டுதல், கும்மிப் பாட்டு என்பதே
பெருவழக்காக உள்ளது.
கும்மி,     திருவிழாக் காலங்களில் இரவு பகல் இருவேளைகளிலும், பிற
நாட்களில் நிலவொளியில் பொழுது போக்குக்காகவும் பெண்களால்
விரும்பி ஆடப்படுகிறது. பருவமுற்ற பெண்களுக்குச் சடங்கு நிகழ்த்தும்
போதும் கும்மி கொட்டுதல் உண்டு.
குலவையிட்டுக்     கும்மி ஆட்டத்தைத் தொடங்குவதும் முடிப்பதும்
கும்மியின் மரபாக உள்ளது. கும்மியில் கொட்டப்படும் கைத்தாளமே
பக்க இசையாகவும் ஆட்டத்தை வழிநடத்தும்     கூறாகவும்
அமைந்துள்ளது. கைதட்டுதலின் தாள எண்ணிக்கையில் ஒருதட்டுக்
கும்மி, இரண்டுதட்டுக் கும்மி, மூன்றுதட்டுக் கும்மி என்று கும்மி
ஆட்டங்கள் தரப்படுத்தப் படுகின்றன.
கும்மி     விளையாட்டின் போது கும்மி கொட்டும் பெண்கள்
பார்வையாளர்களாக     மாறுவதும்     பார்வையாளர்கள்     கும்மி
கொட்டுபவர்களாக மாறுவதும் இயல்பான ஒன்றாகும்.
கைகளை     உட்புறம், வெளிப்புறம் தட்டிக் கொண்டே கால்களை
மாறிமாறி எடுத்து வைத்து வட்டத்தில் முன்னோக்கி நகர்தல், குனிந்து
நிமிர்தல், உட்புறமும், வெளிப்புறமும் தட்டுதல் ஆகிய ஆட்டக்
கூறுகள் கும்மியில் மேற்கொள்ளப் படுகின்றன.
அம்மன்     கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது ஒரு
சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும். அந்நிலையில் கும்மி கொட்டிப்
பாடுவதுண்டு.
தானானே தானானே
தானானே தானானே
கும்மியடிக்கிற ரெக்கத்தில
கூட்டமென்னடி பெண்டுகளா
முந்தாங்கி படுது எந்திரிங்க
மூனுபணந்தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)

கும்மியடிக்கிற ரெக்கத்திலே
கூடியிருக்கிற அண்ணம்மாரே
முந்தாங்கிப்படுது எந்திரிங்க
மூனுபணந் தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)
(ரெக்கத்திலே = இடத்திலே)
வயது     வித்தியாசமின்றி ஆடப்படும் கும்மி விளையாட்டைப்
பெண்களும், சிறு தெய்வச் சடங்குகளும், வழிபாடுகளுமே பாதுகாத்து
வருகின்றன
மகளிர்     விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுது
போக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெண்கள் தங்களின்
அறிவுத் திறத்தையும், உடல் திறத்தையும், கணித அறிவையும்
மேம்படுத்திக் கொள்ள மகளிர் விளையாட்டுகள் வாய்ப்பளிக்கின்றன
எனலாம். //

Monday 26 December 2011

நானெல்லாம் ஒரு அப்பா!

பொறுப்புகளை தட்டி கழித்தே  பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும்,
பிள்ளைகளை பேணி காக்கும் முறையை தவறவிட்ட சிறுபிள்ளையாய்,
ஆசையாய் பேச வரும் பிள்ளையை ஆயிரம் வேலையை காட்டி தள்ளிவிடும்
ஒரு ஆதரவற்ற நிலை செல்லும் ஆதரவற்ற நிலை காட்டும் நானெல்லாம் ஒரு அப்பா!

எடுத்ததற்கெல்லாம் சத்தம், அந்த சத்தத்தில் இதயம் உடையும் பிள்ளை,
 படுத்தி எடுத்துவிட்டு பாவமாய் பார்க்கும் பார்வை மீண்டும் மறந்து
ஏதேதோ உலகம் என எங்கெங்கோ சென்று அலைந்து தொலைந்து
மார்போடு கட்டி அணைத்து மகிழும் கதை பேசாத நானெல்லாம் ஒரு அப்பா!

தாயுமானவனாய் தவமிருக்காமல் தந்தையுமானவனாய் படியளக்காமல்
சேயின் மனமறிந்து சேவகம் செய்யாமல் செத்த நிலை கொண்டு
வேலை வேலை என ஓட்டமும் நடையுமாய் வெந்து போன காலமும்
நினைவில் வந்து மனதை அழுத்த கலங்கிடும் நானெல்லாம் ஒரு அப்பா!

என் அப்பாவை எண்ணி கலங்கியே ஏக்கத்துடன் நகரும் நாட்கள்
என் பிள்ளையை கண்டு கலங்கியே  கலக்கத்துடன் நகரும் நாட்கள்
என் அன்னையை அருகே வரவழைத்து அரவணைக்காத பொழுதுகள்
நல்ல பிள்ளையாய் இருக்க தெரியாத நானெல்லாம் ஒரு அப்பா!

தனது குழந்தையை சீராட்டி பாலூட்டி உறவாய் இருந்து வளர்த்து
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்புடன் சேவகம் செய்து
நானெல்லாம் ஒரு அப்பா என நாணி கொள்ளாமல்
நான் தான் அப்பா என பெருமையுடன் சொல்லி மகிழ இவ்வாழ்வு போதும், எவருக்கும்!

Sunday 25 December 2011

பெண்ணால் பாவப்பட்டேன்

இதோ இந்த இதழை வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தங்களிடம் தருகிறேன் என வீட்டு வாசற்கதவை தட்டிய முன் பின் தெரியாத இரு நபர்கள் தந்தார்கள்.

வாங்கி பார்த்தபோது எழுந்திரு என அந்த இதழின் பெயர் இருந்தது. அவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என புரிந்தது. இப்படி எப்போதாவது வந்து ஒரு சில தாள்களை தந்துவிட்டு போவார்கள். அதை மறுக்காமல் வாங்கி வைத்துவிடும் வழக்கம் உண்டு. சில நேரங்களில் என்ன எழுதி இருக்கிறது என மேம்போக்காக பார்ப்பது உண்டு, அவ்வளவுதான் ஆர்வம்.

சில வருடங்கள் முன்னர் என்னிடம் இது போல ஒரு காகிதம் தந்து இந்த உலகம் அமைதியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேட்ட ஒருவரிடம் அதிக நேரம் பேசியது உண்டு. இறைவன் வந்துதான் இந்த உலகத்தை பாவத்தில் இருந்து காக்க வேண்டுமெனில் அந்த பாவத்தை உருவாக்கிய இறைவன் தனை நீக்கினால் எல்லாம் சரியாய் போய்விடுமே என்று சொன்னதும் அவர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார். வீட்டில் அன்று எனக்கு நல்ல திட்டு விழுந்தது. எவரேனும் இது போன்று வந்தால் அன்பாக உபசரிக்காவிட்டாலும் அவர்களின் மனம் நோகுமாறு பேசாமல் அனுப்பி வைப்பது நல்லது என்றே சொன்னார்கள். அன்றிலிருந்து எவரேனும் வந்தால் பேசாமல் ஒரு புன்முறுவலுடன் வாங்கி வைத்து கொள்வேன்.

பத்திரபடுத்திய அந்த இதழை படிக்க வேண்டும் என நினைத்து பல நாட்கள் கடந்து போனது. இயேசு கிறிஸ்து நினைவுக்கு வந்ததால் அந்த இதழை நேற்று எடுத்து பார்த்தேன். கார்பன் கூட்டாளி எழுதியது போன்றே அந்த இதழில் மரபணுக்கள் பற்றி எழுதி இருந்தது. எப்படி இயற்கையாக இந்த மரபணுக்கள் எழுதி இருக்க முடியும் என கேள்வி இருந்தது. விஞ்ஞானிகள் குறித்து கேலியும் இருந்தது. டி என் ஏ வில் உள்ள இன்றான் எக்சான் குறித்து நேரடியாக சொல்லாவிட்டாலும் அது குறித்து எழுதியும் இருந்தது. தமிழ் ஆக்கம் பண்ணலாம் என நினைத்தேன், எதற்கு என விட்டுவிட்டேன். அதில் ஒரு விசயம் என்னை யோசிக்க வைத்தது. இந்த உலகை ஆறு நாளில் கடவுள் படைத்தார், ஆறாயிரம் வருடங்கள் முன்னர் என்பது போன்ற வசனங்கள் இந்த இறை நூல்களின் மதிப்புதன்மையை குறைக்கின்றன என எழுதி இருந்தது. அதே வேளையில் அந்த வாசகங்கள் சரியே என வாதம் புரிந்தது. ஒரு நாள் என்பது பகலும் இரவும் கூடிய ஒரு நாள் அல்ல என்பதே பொருள் என சொன்னது. ஆறு நாள் முடிந்தது, இப்போது ஏழாம் நாள் நடந்து கொண்டிருக்கிறது என கருத்து சொன்னது. எனவே ஆறாயிரம் வருடங்கள் என்பது பல மில்லியன் வருடங்களுக்கு சமானம் என கருத வேண்டும் என சொன்னது.

உடனே எனது புத்தி வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. யார் இந்த இயேசு கிறிஸ்து? என எண்ண தொடங்கிய மனது எனது பெயர் ஆபிரகாம் என வந்து நின்றது. உடனே விடுமுறையில் தானே இருக்கிறோம் இந்த கிறிஸ்துவ மதம் பற்றி சற்று தெரிந்து கொண்டால் என்ன என தொடங்கி ஆங்காங்கே தகவல்களை இணையத்தின் மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். ஆதாம், ஏவாள் பற்றி வாசித்தபோது கடவுள் ஆதாமை நோக்கி இந்த மரத்தை சாப்பிட்டதால் பாவி ஆகிவிட்டீர்கள் என்கிறார். அதற்கு ஆதாம் சொல்கிறான். 'இதோ எனக்கு துணையாய் இருக்க நீங்கள் என்னிடம் இருந்து உருவாக்கிய எனது மனைவி இந்த மரத்தை சாப்பிட சொன்னாள், அதனால்தான் நான் சாப்பிட்டேன்' என்கிறான். மரத்தில் இருந்த ஆப்பிள் என்பதெல்லாம் பிற்பாடு வந்த கட்டுக்கதை என்கிறார்கள் சிலர். ஆடை இல்லாமல் இருப்பது அத்தனை கேவலம் என அன்று நல்லது எது, தீயது எது என அறிவைத் தரும் மரத்தை தின்றதால் ஞானம் பிறந்து இருக்கிறது என படித்தபோது 'அட தாவரம்'. நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதைப் போன்றே உங்கள் எண்ணமும் இருக்கும் என முன்னோர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

மனைவியின் பேச்சு கேட்க கூடாது என அதனால் தான் சொல்கிறார்களோ என்னவோ? ஹூம்! சரி இயேசு கிறிஸ்து உண்மையா இல்லையா என தேடினேன். இயேசு கிறிஸ்து உண்மை இல்லை, அது ஒரு கதாப்பாத்திரம் என பத்துக்கு ஆறு பேரு சொன்ன கருத்தை கேட்டு ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் கிறிஸ்துவின் பெயரால் விடுமுறை கிடைப்பது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் இத்தனை வருடங்களாக பலரால் நினைவு கூறப்பட்டு வரும் கிறிஸ்து போற்றுதலுக்குரியவர் தான். சரி என எனது பெயர் ஆபிரகாம் என நினைத்தேன் அல்லவா. ஆபிரகாம் பெயரைத் தேடினேன். ஆச்சர்யம்.

இந்த ஆபிரகாம் இறைவனால் அனுப்பப்பட்டவர். இதற்கு முன்னர் நோவோ என்பவர் வாழ்ந்த போது ஏற்பட்ட பாவத்தினால் இந்த உலகை வெள்ளத்தில் அழித்து நோவோ குடும்பத்தை மட்டுமே காத்தாராம் இறைவன். அதற்கு பின்னர் மீண்டும் பாவங்கள் பெருகிய போது வெள்ளத்தினால் உலகை அழிக்கமாட்டேன் என உறுதி தந்த இறைவன் ஆபிரகாம் மூலம் ஒரு புது உலகம் உருவாக்குகிறார். இந்த ஆபிரகாம் பைபிள் மற்றும் குர்ஆனில் அதிகம் பேசப்படுகிறார். ஏறக்குறைய பல விசயங்கள் குரானிலும், பைபிளிலும் ஒன்றாகவே இருக்கிறது என ஓரிடத்தில் படித்தேன். எப்படியும் குரானையும் பைபிளையும் அடுத்த ஏப்ரலுக்குள் படித்துவிட வேண்டும் என இருக்கிறேன்.

இந்த ஆபிரகாம் கதை சுவாரஸ்யமாக இருந்தது. ஆபிரகாமுக்கு சாரா என்கிற மனைவி, சாரா என்கிற மனைவியின் மூலம் குழந்தை பாக்கியம் ஆபிரகாமுக்கு கிடைக்கவில்லை. அப்போது சாரா வீட்டில் வேலை செய்யும் ஹாஜர் எனும் பெண்ணை ஆபிரகாமுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் சாரா. சம்மதம் சொல்கிறார் ஆபிரகாம். ஹாஜர் கருத்தரிக்கிறாள், அதன் மூலம் கர்வம் கொள்கிறாள். இதனால் சாராவை நிந்திக்கிறாள். கோவம் கொண்ட சாராவின் செயலால் ஹாஜர் வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறார். கடவுளின் உத்தரவுபடி மீண்டும் வந்து ஆபிரகாமிடம் சேர்ந்து பிள்ளை பெறுகிறார்.  குழந்தை பெரும் காலகட்டத்தை கடந்த பின்னர் சாரா கருத்தரிக்கிறார். இப்படி இவர்கள் பெற்ற குழந்தைகள் ஐசாக், இஸ்மாயில் எனப்படுகின்றனர். ஹாஜரின் குழந்தையான இஸ்மாயில் சாராவின் குழந்தை ஐசாக் தனை கேலியும் கிண்டலும் செய்ய கோபமுற்ற சாரா அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற ஆபிரகாமிடம் சொல்கிறார். ஆபிரகாம் கடவுளிடம் ஆலோசனை கேட்டு அவ்வாறே செய்கிறார். ஹாஜர் தனது பையனுடன் ஆபிரகாம் தந்த ரொட்டி மற்றும் தண்ணீர் எடுத்து கொண்டு செல்கிறார் என போகிறது கதை. கடவுள் உனது பையன் ஒரு பெரிய நாடாவான் என சொல்வதாக அமைகிறது.

இந்த கதையை படித்ததும் பல சீரியல்கள் ஞாபகத்திற்கு வந்தது. எத்தனையோ வருடங்கள் முன்னர் நடந்த விசயங்கள் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. மேலும் மேலும் படிக்க தொடங்கினேன். அதில் ஆதாம் ஏவாளுக்கு காலையில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையும், மாலையில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையும் பிறந்ததாம். காலையில் பிறந்த ஆண் மாலையில் பிறந்த பெண்ணை மணம் முடித்ததாக அதே போல் மாலையில் பிறந்த ஆண் காலையில் பிறந்த பெண்ணை மணம் முடித்ததாக சொல்லப்பட்டு இருந்தது. இது எல்லாம் எத்தனை உண்மை என புக் ஆப் ஜெனிசிஸ் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது எனக்கு தரப்பட்ட இதழுக்கு திரும்புகிறேன். ஒரு நாள் என்பது எத்தனை மில்லியன் வருடம் எனில் ஒரு காலை என்பது எத்தனை வருடங்கள்? மாலை என்பது எத்தனை வருடங்கள்? புரியவில்லை.

மோசஸ் என்பவருக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் 900 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த 900  வருடங்கள் எந்த கணக்கு? ஏதேதோ கேள்விகள் எழுகின்றன. படித்துவிட்டு பேசலாம் என இருக்கிறேன். 


நன்றாக தெரிந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன். 


கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?

ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பரவாயில்லை சொல், கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி உனக்கு என்ன அக்கறை.

சும்மா சொல், கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் உணர்வதை உன்னால் உணர இயலாது, சொல்லி என்ன பயன்.

பரவாயில்லை சொல், கடவுள்?

உன்னைப் போல நம்பிக்கை இல்லாதவர்கள் பாவப்பட்டவர்கள்.

அந்த வாக்கியத்தில் என்னை பளாரென அறைவது போலிருந்தது. ஆதாமும் ஏவாளும் இறைவனிடம் நம்பிக்கையற்று போனதால் தான் இந்த உலகம் பாவப்பட்டது என்கிறார்களே! உண்மையோ!

Saturday 24 December 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? சுடர்மிகு அறிவும் சுரைக்காயும்

முன்பகுதி இங்கே. 

மரங்கள் ஓங்கி வளர்ந்து இருந்ததை கண்டு இந்த மரங்கள் எல்லாம் எவரால் நடப்பட்டன எனும் சிந்தனை கற்காலம் தாண்டிய மனிதனின் எண்ணத்தில் மலர்ந்தது. விலங்குகளை வேட்டையாடி திரிந்த மனிதன் ஓரிடத்தில் அமர இந்த தாவரங்கள் பெரிதும் உதவியாய் இருந்தன. ரோமங்களால் மூடப்பட்டு இருந்த உடலுக்கு இலைகள் எல்லாம் உடைகள் ஆயின.

இந்த தாவரங்கள் எப்படி உருவாகின? மதம் எனும் கோட்பாட்டிற்குள், மத நூல்கள் தரும் போதையில் சிக்கி கொண்டு இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது எனும் வேதாந்த கருத்தில் மனம் வைத்து சுடர்மிகு அறிவுதனை எரித்து கொண்டிருப்பது எவருக்கும் பயன் அளிக்கப் போவதில்லை. இதை இப்படி பிரித்தோம், அதை அப்படி படைத்தோம் என வியாக்கியானங்கள் எல்லாம் படிப்பதற்கு சுவையாக இருக்கும். அந்த வியாக்கியானங்களை இறைவன் எனும் ஒரு பாகுபாடற்ற தன்மைக்கு அலங்காரம் சூட்டி நம்மை நாமே அடிமைபடுத்தி கொள்வது என்பது இந்த காலகட்டத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் தவிர்க்க கூடிய தைரியம் மிக்க அறிவு எவருக்கும் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. உள்ளூர பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். சனிப்பெயர்ச்சி பலன்கள் என படித்து பரிகாரம் தேடும் அளவுக்கு சுடர்மிகு அறிவுடன் நாமெல்லாம் படைக்கப்பட்டு இருக்கிறோம்! படைக்கப்பட்டு? ஆம், அறிவினை முட்டாள்தனமாக உபயோகிக்க தெரிந்த விதமே பல சீரழிவுகளுக்கு காரணம்.

இந்த தாவரங்கள் எல்லாம் அப்படி அப்படி முளைத்தது அல்ல, அப்படி அப்படி பிடுங்கப்பட்டு நடப்பட்டது அல்ல. எப்பொழுதாவது இந்த தாவரங்கள் கண்டு பிரமிப்பு அடைந்தது உண்டா. இவைகளுக்கு மனம் இல்லை, பேசும் வாய்ப்பு இல்லை, நடந்து திரியும் பழக்கமும் இல்லை. ஆனால் கூட்டம் கூட்டமாக நிலப்பரப்பை அழகு படுத்தி கொண்டிருக்கும். பாறைகள் உடைபட்டு அதிலிருந்து வெளிப்பட்ட தாது பொருட்கள், மண்ணின் அமிலத்தன்மை, மண்ணில் இருக்கும் தண்ணீர், நுண்ணுயிர்கள் என்பவையே தாவர வளர்ச்சிக்கான காரணிகள். நிலத்தில் உள்ள தாது பொருட்கள் உட்கொண்டு முதலில் சிறு தாவரம் உருவாகும். அந்த தாவரத்தை பின்பற்றி மற்றொரு தாவரங்கள் உருவாகும். இப்படியாக பெரிய தாவரங்கள் உருவானதும் அங்கே ஒரு மர கூட்டத்தின் நாகரிகம் முடிவடையும். இதை அழகு தமிழில் மண் தொடர் மாற்றம் என குறிப்பிடுவார்கள். இந்த மண் தொடர் மாற்றம் என்பது இரண்டு நிலைப்படும். முதல் மண் தொடர் மாற்ற நிலை, இரண்டாம் மண் தொடர் மாற்ற நிலை. இது ஒரு சுழற்சியாகவும் தொடரலாம். பாலைவனங்களில் கூட வளரும் தன்மை கொண்ட தாவரங்களை நேரில் கண்டபோது உங்களை எவர் படைத்தது என கேட்டுவிடத்தான் தோணியது!

முதல் மண் தொடர் மாற்ற நிலையில் சில தாவர வகைகள் வரும், அதற்கு பின்னர் அந்த தாவர வகைகள் மாறி இரண்டாம் மண் தொடர் மாற்ற நிலையில் வேறு தாவர வகைகள் வரும். இந்த தாவரங்களின் பயன் மூலமே விலங்கினங்கள் உருவானது என்பது பின்னர் தான் தெரிந்தது. நிலத்து தாவரங்கள் போல நீர் தாவரங்களும் உண்டு. எந்த ஒரு அவதாரமும் தாவரமாக உருவெடுத்ததாக நமது அறிவு சிந்திக்க மறுத்துவிட்டது. சுரைக்காய்!

இப்படி தாவரங்கள் உருவானது போலவே மனிதர்களும் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தார்கள். இப்படியாக நாகரிகம் என தொடங்கியது  கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றுதான் காலக்கணக்கீடு காட்டுகிறது. ஆறுகள் நாகரிகத்திற்கு வழிகாட்டியாக அமைந்து இருக்கலாம் என்பது மதிப்பீடு. மீசொபோடோமியா மற்றும் எகிப்து போன்ற இடங்களே மனிதர்கள் ஓரிடத்தில் முதலில் அமர்ந்தார்கள் என்கிறது வரலாறு. முதலில் ஒரு சிலர் சென்று அங்கே தங்குவார்கள், பின்னர் கூட்டமாக வந்து சேருவார்கள், அது கிராமம், நகரம், நாடு என பிரிந்தது என்பதுதான் நாகரிகத்தின் வெளிப்பாடு. இந்த மரங்களை எல்லாம் பார்த்த மனிதர்களுக்கு அவைகளை வைத்து விவசாயம் செய்ய இயலுமா எனும் சுடர்மிகு அறிவுதான் ஒரு நாகரிகத்தை உருவாக்கியது.

இந்த சிந்தனை எவர் விதைத்தது? தாவரங்களை உட்கொண்ட, வேட்டையாடி விலங்குகள் உண்ணும் பழக்கம் இல்லாத மனிதர்கள் ஒரு பிரிவாக உருவாகி இருக்கலாம். அவர்களின் சிந்தனையே இந்த மாபெரும் மாற்றத்திற்கு காரணம். ஒரு நண்பரிடம் விளையாட்டாக கேட்டேன், இன்னமும் விலங்குகள் கொன்று அதை சமைத்துதான் நமது உடலை வளர்க்க வேண்டுமா என! அதற்கு நண்பர் பதில் சொன்னார், மத நூலில் சொல்லப்பட்டிருக்கிறதாம், விலங்குகள் நீங்கள் உண்பதற்காகவே படைத்தோம் என! பிரமித்து போனேன்.  எந்த ஒரு எழுத்தையும், நூலையும், மத நூல் உட்பட, முழுவதும் படித்து பொருள் உணராமல் நாமாக கற்பனை செய்து பேசுவது, இட்டுகட்டி எழுதுவது, காலத்திற்கு ஏற்ப அதனை மாற்றியமைத்து கொள்வது போன்றவை மிகவும் மோசமான விளைவுகளை தரும். அதாவது இருக்கும் உண்மையை அப்படியே மாற்றி போட்டு விடும். அப்படிப்பட்ட சுடர்மிகு அறிவில் தான் நாம் ஜொலித்து கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் இருந்திருக்க கூடும் என கிடைக்கும் செய்திகளில், எழுதப்பட்ட விசயங்களில் அடிப்படையில் தான் நமது அறிவு மின்னி கொண்டிருக்கிறது.

மழை இல்லாத காலத்தில் தண்ணீருக்கு என்ன செய்வது என்பதுதான் ஆறுகளின் ஓரங்களில் மனிதர்கள் குடியேறினார்கள்.  இந்த நாகரிகம் ஒருவரை பார்த்து ஒருவர் தொடர்ந்ததா என தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையவில்லை. தற்போது ஒரே சிந்தனை உடைய மனிதர்கள் உலகெலாம் பரவி இருப்பதை போல ஆங்காங்கே குடியமர்ந்த மக்களில் இந்த சிந்தனை எழ வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. சிந்து சமவெளி, கிரேக்க சமவெளி, சைனா சமவெளி, இன்கா, அஜ்டேக் என ஆறுகள், கடல் ஓரங்களில் உருவான நாகரிகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என பார்க்கும் போது சைனாவில் உருவான நாகரிகம் வெளித் தொடர்பே இல்லாமல் தான் இருந்து வந்திருக்கிறது, அதனால் தான் இன்னமும் சைனா அதே மன நிலை கொண்ட நாடாக இருக்கிறது என்பார் சிலர். இந்த நாகரிகங்கள் வளர்ந்த சமயங்களில் அவர்களது அறிவு படம் வரைவதிலும், எழுதி வைப்பதிலும் கவனம் செலுத்தியமையே பல விசயங்களை வெளிக்கொணர்ந்தது.

இப்படியான அறிவுதனில் எப்படி இறைவன் உள்ளே வந்தார் என்பது பயம் எனும் உணர்வும், இயற்கை சக்தியை போற்றி வளர்ந்த தன்மையும் என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். ஒரு சீரற்ற சமூக அமைப்புக்கு சீரான வழிகாட்டுதல் எப்படி தருவது என்கிற சிந்தனையில் உருவானதுதான் கோட்பாடுகளும், வாழ்க்கை நெறிமுறைகளும். அவ்வாறு நெறிபடுத்தப்பட்ட போது ஏற்பட்ட பிரிவினைகள் இன்னமும் வாழ்வினை சீரழித்து கொண்டுதானிருக்கிறது.

தொலைந்த நாகரிகங்கள் மூலம் முட்டாள்தனமான அறிவு குறித்து மேலும் அறிய முயல்வோம்.

Friday 23 December 2011

இங்கே குப்பைகளை கொட்டாதீர்கள்

மிகவும் அருமையான எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அது. பச்சை பசேலென எங்கு பார்த்தாலும் ஆகாயத்துடன் போட்டி போட்டு கொண்டு பூமி பசுமையாய் காட்சி அளித்து கொண்டிருந்தது. அழகிய சாலைகள் மிகவும் சீராக அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாம் அவரவர் வீட்டினை சுத்தம் செய்வதோடு சாலைகளை சுத்தமாக வைத்து இருந்தார்கள். அந்த கிராமத்தில் எவரை கண்டாலும் அத்தனை சுத்தமாக இருந்தார்கள். மணலில் சோறு போட்டு சாப்பிடும் மாந்தர்கள் எல்லாம் அந்த கிராமத்துக்கு சென்றால் மிகவும் தைரியமாக தெருக்களில் சோறினை போட்டு சாப்பிடலாம், அத்தனை சுத்தமாக இருந்தது. அப்படிப்பட்ட கிராமத்தில் இருக்கும் வீடுகள் பல கண்டு கோவில் என கும்பிட்டுவிட்டு செல்லலாம்.

அந்த கிராமத்தில் திருஷ்டி பொட்டு வைப்பது போல ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் சுப்பிரமணியம் மட்டும் வசித்து வந்தார். அவருக்கு அறுபது வயதாகிவிட்டது. முப்பத்து ஆறு வருடங்களுக்கு முன்னாள் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு திருமணம் ஆகவில்லை, உடன் பிறந்தோர் என அனைவரும் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வசித்தார்கள். பெற்றோர்கள் இருவரும் இப்போது உயிருடன் இல்லை. இந்த சுப்பிரமணியம் வீட்டினை பார்த்தால் மொத்த குப்பைகளின் கூடாரம் எனலாம். ஆனால் ஊராரின் கண்ணுக்கு குப்பைகள் என தெரிந்தவை எல்லாம் அவருக்கு மிகவும் அவசியமாகவே தென்பட்டது. இவரது அன்னை உயிரோடு இருந்தவரை இந்த வீடு ஆலயமாகவே தென்பட்டது. அன்னையின் மறைவிற்கு பின்னர் சுப்பிரமணியத்திடம் ஒருவித பழக்கம் தொற்றி கொண்டது. மனிதர்கள் பல்வேறு பழக்கங்களுக்கு அடிமையாகும் மனதை பெற்று இருக்கிறார்கள்.

இந்த பழக்கங்களுக்கு அடிமையாகும் மனிதர்கள் ஒரு நோயாளியாகவே கருதப்படுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு தாங்கள் ஒரு மன நோயாளி என்பதை உணரும் சக்தி எதுவும் இருப்பது இல்லை. இந்த அடிமை பழக்கவழக்கத்தால் தன்னிலை மறந்து கோபமும் வெறுப்பும் அதிகமாகி உலகமே தன்னை எதிர்ப்பது போன்ற உணர்வினை பெறுகிறார்கள். கதைக்குள் ஒரு கதை விடுகிறேன். ஒரு முறை துரியோதனர்களிடமும், பாண்டவர்களிடமும் உங்களு வீட்டுக்கு வருகிறோம், உங்கள் வீட்டினை நீங்கள் நிரப்பி வையுங்கள் என முனிவர் சொல்லி செல்கிறார். முனிவர் துரியோதனன் வீட்டிற்கு செல்கிறார். வீட்டின் கதவை திறக்க முடியாமல் வெளியில் நிறுத்தப்படுகிறார் முனிவர். என்ன என விசாரித்தபோது வீட்டினை வைக்கோலால் நிரப்பி விட்டேன் என துரியோதனன் சொல்லி பெருமைபட்டு கொள்கிறான். ஆனால் முனிவரோ என்ன மடத்தனம் என திட்டிவிட்டு போகிறார். அடுத்து பாண்டவர் வீட்டிற்கு செல்கிறார் முனிவர். அங்கே உள்ளே வரவழைத்து முனிவரை உபசரிக்கிறார்கள். உடன் துரியோதனனும் செல்கிறான். வீட்டில் அகர்பத்திகளை ஏற்றிவைத்து வீடெல்லாம் மணம் பரப்பி கொண்டிருந்தது. அந்த மணத்திலும், உபசரிப்பிலும் மனம் லயித்து பாண்டவர்களை வெகுவாக பாராட்டி செல்கிறார் முனிவர்.

இப்படி வைக்கோலால் எப்படி துரியோதனன் வீட்டினை ஒரே நாளில் நிரப்பினானோ அதைப் போல முப்பத்து ஆறு ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் ஒருவித மன நோயாளி தன்மையை இந்த சுப்பிரமணியம் பெற்றார். தான் வாங்கும் நாளிதழ்களை சேகரித்து வைப்பது, சின்ன சின்ன பொருட்களை எல்லாம் வீட்டிலேயே வைத்துவிடுவது போன்ற பழக்கம் ஆரம்பித்து அவரது வீட்டின் பின்புற தோட்டத்து இடத்தில் குப்பைகள் எல்லாம் சேர்த்து வைக்கத் தொடங்கினார். வீடு எல்லாம் கடந்த முப்பத்து ஆறு வருடத்தில் நாளிதழ்கள் என எல்லாம் நிரம்பி வாசற்படியையே அடைக்கும் அளவுக்கு வந்துவிட்டது. வாசற்படியில் ஊர்ந்து சென்றால் தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சமையல் அறை, படுக்கை அறை என எல்லாம் நாளிதழ்கள் மேல் ஊர்ந்து சென்றால் மட்டுமே முடியும். படுக்கை அறையில் ஒரு தொலைக்காட்சி, சின்ன மேசை, ஒரு நாற்காலி மட்டுமே இருந்தது. அதில் தான் உறக்கம். தினமும் இரண்டு முட்டையும் ஒரு ரொட்டி மட்டுமே சாப்பாடு.

ஊரார்கள் சுப்பிரமணியம் மீது வழக்கு போட்டார்கள். ஆனால் வழக்கில் சுப்பிரமணியமே வெற்றி பெற்றார். எவர் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. இப்படியாக இருந்த சுப்பிரமணியத்திற்கு அவருக்கு குப்பைகளை சேகரிக்கும் நோய் இருக்கிறது என ஒரு மருத்துவர் உதவ வந்தார், அந்த உதவியை நிராகரித்தார் சுப்பிரமணியம், தனக்கு எதுவும் இல்லையென சாதித்தார். வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி போட சம்மதிக்கவே இல்லை. கடந்த ஏழு வருடங்களாக குளிக்கவே இல்லை. ஆனால் மன நோய் தவிர்த்து வேறு எந்த நோயிற்கான அறிகுறியும் தென்படவில்லை.

இவரது வீட்டிற்குள் நுழையவே அதிகாரிகள் சிரமப்பட்டார்கள். அந்த ஊரில் இருந்தவர்கள் எல்லாம் இவர் வழக்கில் வெற்றி பெற்றதால் கோபமும் ஆத்திரமும் கொண்டார்கள். ஆனால் அந்த ஊர்ருக்கு புதிதாக குடிவந்த ஒருவர் இவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்து தோட்டத்து பக்கம் ஒரு அடைப்பை ஏற்படுத்தினால் குப்பைகள் வெளியில் இருப்பவருக்கு தெரியாது என சொல்லி ஒரு அடைப்பை ஏற்படுத்தினார். இவருடன் மெதுவாக தினமும் பேச்சு கொடுத்து தோட்டத்தில் இருந்த குப்பைகள் கொஞ்சம் அகற்றினார். எதற்குமே சம்மதிக்காத சுப்பிரமணியம் இந்த மனிதரின் பேச்சில் சற்று இறங்கி வந்தார். அதற்கடுத்து ஊரில் இருந்த ஒரு சிலர் குப்பைகளை அகற்ற வந்தார்கள். குப்பைகள் எல்லாம் ஒரு சில வாரங்களில் அகற்றப்பட்டது. தோட்டப்பகுதி சுத்தமானதை கண்டு மற்றவர்கள் சந்தோசபட்டார்கள், ஆனால் சுப்பிரமணியம் இரண்டுவித மன நிலையிலேயே இருந்தார்.

பின்னர் அவரது வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. தனது மனநிலையை முதலில் உணர்ந்து கண்ணீர் விட்டார் சுப்பிரமணியம். தான் ஒரு நோயாளி என்பதை அறிந்தாலும் தன்னிடம் மாற்றம் ஏற்பட சில காலங்கள் ஆகும் என்றார். தன்னால் உடனே இந்த குப்பைகள் சேகரிக்கும் பழக்கத்தை கைவிடமுடியாது என சொல்லிக்கொண்டார். ஆனால் முதல் முறையாக பல வருடங்கள் பின்னர் குளித்தார். அவரது மன அழுக்கு நீங்கியதை போல உடல் அழுக்கு நீங்கியது. உதவி செய்ய வந்த நபர் மூலம் வீட்டில் இருந்த குப்பைகளும் அகன்றது. ஊரில் இருந்தவர்கள் நாங்கள் எவ்வளவோ சொன்னோம், ஆனால் கேட்கவில்லை, சொல்லத்தான் செய்தோம், உதவி என கேட்டால்தான் உதவுவது என இருந்தோம் என சொன்னார்கள். ஆனால் நிலைமையை உணர்ந்த ஒருவர் செய்த உதவியின் மூலம் இன்று சுப்பிரமணியம் அனைவரிடம் நன்றாக பழகுகிறார், சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார் என பெருமைப்பட்டு கொண்டார்கள்.

சுப்பிரமணியம் இப்போதெல்லாம் குப்பைகளை சேகரிப்பது இல்லை. அவ்வப்போது சுத்தம் செய்துவிடுகிறார். இந்த சுப்பிரமணியம் போல இன்னும் எத்தனையோ விதவிதமான சுப்பிரமணியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் திருந்த ஒரே ஒரு அன்பு உள்ளம் தேவை! அந்த அன்பு உள்ளத்தை எங்கே தேடுவது?!

Wednesday 21 December 2011

கருப்புதனை கருப்புனு சொல்றது தப்பா?

 எங்க ஊருல கருவாயன் அப்படின்னு என்னை கூப்பிடுவாங்க. நான் ஒரு நாள் கூட என்னை கூப்பிட்டவனை திருப்பி அடிச்சது இல்லை. நிற வெறியை கிளப்புறானு இனவெறியை சொல்றான்னு ஒருநாளும் கத்துனது இல்லை.

கஞ்சா கருப்பு அப்படின்னு ஒரு நகைச்சுவை நடிகரு கூட இருக்காரு. அவர் ஒரு நாள் கூட தன பேருல கருப்பு இருக்கேன்னு கவலைப்பட்டு இருப்பாரானு தெரியலை.

சினிமா பாட்டு எழுதி தேசிய விருது வாங்குன விஜய் கூட கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு அப்படின்னு ரொம்பவே கருப்பு கலரை புகழ்ந்து எழுதுனாரு. கருவண்ண கண்கள், கரு மேக கோலங்கள் அப்படி இப்படி கருப்பு பத்தி நம்ம ஊருக்காரங்க அத்தனை பெருமையா பேசுறாங்க.

ஆனா கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு சொன்னா அது இனவெறி, நிறவெறியாம். எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகமா இருந்துச்சு. கருப்பு இனத்தவர்கிட்ட போய் இதை கேட்டு பாக்கலாமா அப்படினுட்டு ஒரு கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு கூப்பிட்டேன். பொளார் அப்படின்னு ஒரு அறை விட்டதுல  என் கன்னம் கருப்பா பழுத்து போச்சு. அன்னைக்குல இருந்து எது எது என்னைய சொன்னா எனக்கு வலிக்குமோ அதுமாதிரி அது அது மத்தவங்களை சொன்னா வலிக்கும்னு நினைச்சேன். ஆனா நினைப்பு நினைப்போட இருந்துச்சு.

'யே குண்டு' அப்படின்னு ஒருத்தரை கூப்பிட்டேன். 'என்னடா சொன்ன, அப்படின்னு அந்த பொண்ணு காலுல இருக்க செருப்பை தூக்கி என் மேல எறிஞ்சிருச்சி' வலி தாங்கலை. குண்டா இருக்கவங்களை 'குண்டு' அப்படின்னு சொல்றது கூட தப்புதானாம். ஒல்லியா இருக்கிறவங்களை 'ஒல்லி பச்சான்' அப்படின்னு சொல்றதும் குத்தம் தானாம். இருக்கறதை இருக்கறமாதிரியே சொன்னா எல்லாரும் அடிக்க வராங்க. 'டூ யூ நோ ஹௌ ஐ ஃபீல்? அப்படின்னு கேட்கறாங்க.

இது மாதிரி என்னை ஒருதரம் 'போடா முட்டாபயலே' அப்படின்னு ஒருத்தர் திட்டினதும் எனக்கு ஜிவ்வுன்னு கோவம் தலைக்கு மேல ஏறிருச்சு. எதுக்குடா அப்படி சொன்ன? அப்படின்னு கேட்டேன். 'முட்டாபயல முட்டாபயனு திட்டாம அறிவாளினா திட்டுவாங்க' அப்படின்னு சொல்லிட்டு விடுவிடுன்னு போய்ட்டான்.

ஹூம், முட்டாளத்தான இருக்குமோ அப்படின்னு நினைக்கிறப்போ ஒரு கருப்பு இனத்தவரு போனாரு.

வாய் வரைக்கும் வார்த்தை வந்துச்சி. அன்னைக்கு வாங்குன அடி நினைவுக்கு வந்ததால மனசுக்குள்ளார சொல்லிக்கிட்டேன். டே கருப்பு! அவனுக்கு கேட்கபோறதும் இல்லை, என்னை அவன் அடிக்கப் போறதும் இல்லை.

அப்புறம் தான் செய்தி தாளைப் பார்த்தேன். கருப்பு அப்படின்னு ஒரு கருப்பு இனத்து விளையாட்டு வீரரை ஒரு வெள்ளை இனத்து விளையாட்டு காரர் கூப்பிட்டாருன்னு அந்த வெள்ளை இனத்தவரை எட்டு போட்டிகளில் தடை பண்ணிட்டாங்க. அவரும் என்கிட்டே பாவமா கேட்டாரு. கருப்புதனை கருப்பு அப்படின்னு சொல்றது தப்பா!

ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு அப்படின்னு ஆறுதல் சொல்லிட்டு இனிமே மனசுக்குள்ள சொல்லிக்கோ அப்படின்னு போய்ட்டேன். ஒரு சில வார்த்தைகள் இனத்தை கேலி பண்ணுவதாகவும், நிறத்தை கேலி பண்ண கூடியதாகவும் இருக்கு, அதை எல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கிரனும் அப்படின்னு புது டிக்சனரி போடலாம்னு போய்கிட்டு இருக்கேன்.

டே கருவாயா! எவனோ என்னை கூப்பிட்டான். அவனை சொல்லி குத்தமில்ல!

Monday 19 December 2011

இறுமாப்பு

சரியாக மதியம் ஒரு மணிக்கு எல்லாம் விமானம் கிளம்பிவிடும் என்பதால் காலை எட்டு மணிக்கு எல்லாம் தயார் ஆகி பயணம் தொடங்கியாகிவிட்டது. சரியாக மூன்று மணி நேரம் முன்னர் விமான நிலையம் சென்று சேர்ந்து விடலாம் எனும் எண்ணம் மனதில் ஓடியது. விமான நிலையத்திற்கு செல்ல மூன்று வழிகள் உண்டு. இரண்டு வழிகளை புறக்கணித்துவிட்டு ஒரு வழி தேர்ந்தெடுத்தாகிவிட்டது.

பாதையெல்லாம் சரியாய் இருக்க பயணம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சென்ற சாலையில் விபத்து நடந்து இருக்கிறது என வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. இன்னும் நேரம் இருக்கிறதே என காத்துக் கொண்டிருக்க காலம் காத்திருக்கவில்லை. பாதையில் இருந்து விலகி செல்ல வேறு வழியும் இல்லை.

எப்படியும் சென்று விடலாம் எனும் இறுமாப்புடன் காத்திருக்க காலம் கடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாய் பாதை சரியாக வேகமாக செல்ல வழியின்றி வழி நெடுக வாகனங்கள். அரை மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையம் சென்று அடைய இனிமேல் விமானத்தில் சென்று செல்ல முடியாது என்றே விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

எப்படி விமானத்தை எல்லாம் தவற விடுகிறார்கள் என்றே ஏளனமாக நினைத்தது உண்டு, இறுமாப்பில் விமானத்தை தவற விட்ட போதுதான் எப்படி வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புண்டு என புரிய முடிந்தது.

எவர் என்ன செய்துவிடுவார்கள், எவர் என்ன சொல்லி விடுவார்கள், எவர் என்ன சொன்னால் நமக்கென்ன எனும் இறுமாப்பு எப்போதும் இருப்பது உண்டு. அந்த இறுமாப்பில் பலரோடு இணக்கங்கள் பிணக்கங்கள் ஆனது கண்டு இறுமாப்புதனை தளர்த்தி கொள்ள விழைகின்றேன்.

அகங்காரம் கொண்டால் அடுத்தடுத்த பிறப்பு வருமென்றும், ஒவ்வொரு பிறப்பிலும் அந்த இறைவனை நினைத்து கொண்டே இருக்கலாம் என்றும் கவிதை வடித்தது நினைவில் வருகிறது. அகங்காரம் அழிவை தரும் என படித்து இருந்தாலும் அகங்காரம் அவ்வப்போது அலங்காரம் பூசி கொள்கிறது.

இறுமாப்பு கொள்வது இருப்புக்கு ஆகாது
இறுமாப்பு இன்னல் தராமல் போகாது
இறுமாப்பிடம் இன்பங்கள் ஒருபோதும் சேராது
இறுமாப்பு இனிமேல் எனக்கு ஆகவே ஆகாது.


பைத்தியகாரர்கள் சங்கமம்

இவர்கள் ஏனோ குழுமமாய் திரிகிறார்கள். இவர்கள் நோக்கங்கள் எவரேனும் அறிந்தது உண்டா!
இணையத்தில் எழுதுகிறார்கள். எழுதியதால் இணைகிறார்கள். வருடம் ஒருமுறையோ சிலமுறையோ கூடி கழிக்கிறார்கள், களிக்கிறார்கள். 

எழுத்து பைத்தியங்கள் இவர்கள். பைத்தியகாரத்தனத்தை பதிவு செய்தும் வைக்கிறார்கள். இவரின் பராக்கிராமங்களை  படித்துப் பார்த்தது உண்டா! கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றே கண்டதையும் சொல்லித் திரிகிறார்கள், பிரிகிறார்கள். 

அறியா சங்கங்கள் வைத்ததால் நாடு பலன் பெற்றது உண்டா! ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொண்டதை அறியாதோர் போல் நடந்தே செல்கிறார்கள். மன அழுத்தத்தில் முகம் தனை மறைத்தே உலவுகிறார்கள், உறைகிறார்கள். 

சின்னதாய் ஆரம்பித்தே பெரியதாய் மாறப்போகும் தன்மை கண்டது உண்டா! ஈக்கள் மொய்த்தால் பண்டங்கள் கெட்டுவிடும்.எங்கும் பைத்தியங்கள் மீண்டும் மீண்டும் சங்கமித்தால் இவ்வுலகம் கெட்டுவிடும்.  கலாச்சார சீரழிவின் கரையை தொடுகிறார்கள், ஓடுகிறார்கள். 

பாராட்டு மழையில் நனைந்ததோ சிலர். பார்த்து ரசித்ததோ பலர். தாங்கள் செல்ல முடிந்தும் இதுபோன்ற பைத்தியகாரதனத்தில் ஈடுபட மனமின்றி விலகி நின்றோரை கண்டதுண்டா! வரமுடியவில்லையே என வருத்தம் தெரிவிக்கிறார்கள், அறிவிக்கிறார்கள். 

வெளிநாட்டில் வாழ்ந்தும் உள்நாட்டில் மனம் வைத்திருப்போர். வழி தெரியாது தவித்திருப்போர். எட்டாத கனியை கண்டு ஏக்கம் கொண்டு நிற்பார்கள் பார்த்தது உண்டா! கனவுலகம் என்றே அறிந்தே காலையும், மாலையும் பாராது அலைகிறார்கள், சிலைகளாகிறார்கள்.

இன்னும் இன்னும் எப்படியோ! எவரேனும் ஏதேனும் சொல்லித் திரிவார்கள். துவண்டு போய் தொலைந்து போய்விடுவோமோ! பிறர் பார்வையில் பைத்தியங்களாகவே இருந்துவிட்டுப் போவோம். குறைந்த பட்சம் இந்த பைத்தியங்கள் மூலமாவது இந்த உலகம் சுபிட்சம் பெறட்டும். 

விதை மெதுவாய் வளரட்டும். விருட்சம் ஆகட்டும். விழி கொண்டு பார்த்தே மகிழட்டும். விடை பெறும் தருணமிது. வியக்கும் நாள் அது வருமது. கனவுகள் கலைகிறது, மனிதர்கள் கவலைகளால் கதறிக் கொண்டே இருக்கிறார்கள், மரிக்கிறார்கள். 

Sunday 18 December 2011

பின்னூட்ட புண்ணாக்கு

புண்ணாக்கு எனப்படுவது மாட்டு தீவனத்தில் ஒன்று. இந்த புண்ணாக்கு பொதுவாக எண்ணை நிறைந்த வித்துகளில் இருந்து எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படுகிறது. அதாவது தமிழில் சக்கை என சொல்வார்கள். இந்த சக்கையில் என்ன சத்து இருந்து விடப்போகிறது என நினைக்காமல் அதை ஒரு தீவனமாக பயன்படுத்திய முன்னோர்களின் அறிவு!

தாவரங்கள் ஒளியின் உதவியால் உணவை உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உட்கிரகித்து அவற்றை நீருடன் இணைத்து ஆக்சிஜனையும், குளுக்கோசையும் உருவாக்குகிறது.  இந்த உணவு உருவாக்கும் முறையானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று ஒளியின் உதவியால் நடைபெறுகிறது மற்றொன்று ஒளியின் உதவியின்றி நடைபெறுகிறது. நீரினை பகுத்திட ஒளி பயன்படுகிறது. அத்துடன் ஒளியின் வேலை முடிவடைந்து விடுகிறது. அதன் பின்னர் எலக்ட்ரான்கள் உயர் ஆற்றல் நிலை அடைவது, புதிய ஆற்றல் மூலக்கூறு நடைபெறுவது என வேலை தொடர்கிறது. அதற்கு பின்னர் ஒளியற்ற நிலையில், கால்வின் சக்கரம், குளுக்கோஸ் உருவாக்கப்படுகிறது. இலையின் பசுமை நிறத்து காரணியான குளோரோபில் எனப்படும் பொருளின் மூலமே இந்த உணவு தயாரிக்கும் முறை நடைபெறுகிறது, ஏனெனில் இந்த குளோரோபில் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. மனிதரின் செல்களில் இந்த குளோரோபில் போன்ற ஒன்றை உருவாக்க இயலுமா என்பதுதான் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சி கனவு. அதாவது மரங்களே இல்லாத சூழல் ஒன்று வருகிறது என வைத்து கொள்வோம், அப்பொழுது மனிதர் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கு தாங்களே உணவு தயாரிக்க இயலுமா என்பதுதான் பரிணாம, மரபணு வழியில் வந்த ஒரு புது சிந்தனை. பார்க்கலாம்.

ஒளி தாயரிப்பு எப்படி ஏறடுகிறது என்பதற்கான வேதிவினை இது.

                                                       ஒளி
கார்பன் டை ஆக்சைடு + நீர் --------------------------> குளுக்கோஸ் + ஆக்சிஜன்
                                                    குளோரோபில்

இந்த குளுக்கோஸ் பலவகையில் மாற்றம் கொள்கிறது. இந்த குளுக்கோஸ் செல்களில் உள்ள செல்லுலோசாக மாற்றம் கொள்கிறது. அதாவது பாலிமர் என இதை குறிப்பிடுகிறார்கள். இந்த குளுக்கோஸ் பல குளுக்கோஸ்களுடன் ஒரு இணைப்பு சங்கிலி ஏற்படுத்தி உருவாவதுதான் செல்லுலோஸ்.

மேலும் இந்த குளுக்கோஸ் எளிதாக நீரில் கரையும் தன்மை உடையதால் எதிர்கால சேமிப்புக்கு என இவை அப்படியே இருக்க முடியாது என்பதால் இவை ஸ்டார்ச் எனும் மற்றொரு பாலிமர் போன்று தன்னை மாற்றி கொண்டு சேமிப்பாக மாறிவிடுகிறது. இந்த ஸ்டார்ச் பிறிதொரு நாளில் தாவரங்கள் உணவு தயாரிக்க முடியாது போகும் பட்சத்தில் குளுக்கோஸாக மாற்றம் உடைந்து பயன்படுகிறது. இந்த ஸ்டார்ச் கரையும் தன்மை அற்றது. இந்த ஸ்டார்ச் அமைலோஸ், அமைலோபெக்டின் எனும் இரு பொருட்களால் ஆனது. இந்த இரண்டுமே பல குளுக்கோஸ் இணைந்து உருவான சிறிது வேறுபாட்டுடன் கூடிய இரட்டை பிள்ளைகள்.

இப்படியான குளுக்கோஸ் தாவர விதைகளில் எண்ணையாக மாற்றம் கொள்கிறது. மேலும் இந்த குளுகோஸ் பழங்களில் வேறொரு இனிப்பாக சுக்ரோஸ், பிரக்டோஸ் என மாற்றம் கொண்டு அதிக இனிப்பு தன்மையை உருவாக்குகிறது. மேலும் இந்த குளுக்கோஸ் நைட்ரெட் போன்ற தாது பொருட்களுடன் இணைந்து அமினோமிலங்கள் உருவாக்கி பின்னர் புரதம் உருவாக்குகிறது. மிக முக்கியமாக ஆற்றலை தருவது இந்த குளுக்கோஸ் தான். செல்களில் நடைபெறும் சுவாச வேதி வினையின் காரணமாக இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாறுகிறது.

குளுக்கோஸ் + ஆக்சிஜன் ------------------> கார்பன் டை ஆக்சைடு + நீர் + ஆற்றல் (சக்தி)

இப்படி தாவர விதைகளில் எண்ணையாக மாறிய குளுக்கோஸ் தனை விதைகளை நசுக்கி, பிழிந்து எண்ணையை பிரித்தெடுத்து விடுகிறார்கள். சில நேரங்களில் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணையை ஆவியாக்கி பின்னர் குளிரூட்டி பிரித்து விடுகிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சக்கையானது இந்த குளுக்கோஸ் மூலம் உருவான பல பொருட்களால் ஆனது. அதைத்தான் புண்ணாக்கு என அழைக்கிறார்கள். இது சக்கை என்றாலும் இதில் உள்ள பொருட்களை செரிக்கும் தன்மையை இந்த மாடு போன்ற விலங்கினங்கள் கொண்டுள்ளன. நம்மால் இந்த பொருட்களை செரிக்கும் திறன் கிடையாது, எனவேதான் கரும்பில் இருக்கும் திரவத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை துப்பி விடுகிறோம். வாழைப்பழ தோலை தூக்கி எறிவதும் இதன் காரணமே. ஆனால் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் இவைகளை உண்டு செரித்து கொள்கின்றன.

புண்ணாக்கு பெயர்க்காரணம் கூறுக. தாவர விதையை காயப்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள் என்பதால் புண்ணாக்கு என அழைக்கப்பட்டது. புண் + ஆக்கு = புண்ணாக்கு என கொள்ளலாம்.  பிண்ணாக்கு =பிண்ணம் +ஆக்கு , அதாவது சிதைத்து பின்னர் உருவாக்கியது, விதைகளை கூழாக நசுக்கி பின்னர் கிடைப்பது எனப்பொருள், ஹி..ஹி இது ஏதோ நினைவில் இருந்து எழுதுகிறேன், சரியானு தமிழ் ஆர்வலர்கள் தான் சொல்லனும்! (நன்றி வவ்வால்) இந்த புண்ணாக்கு கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு போன்ற எண்ணை விதைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

புண்ணாக்கு என ஒருவரை அழைப்பது அவரிடம் சரக்கு எதுவும் இல்லை என்பதை குறிக்கவே. அதாவது மிகவும் பயன்பாடான எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உள்ள சக்கையை போல அவர் இருக்கிறார் என சொல்லாலம், ஆனால் அது கூட ஒருவகை தவறுதான், ஏனெனில் புண்ணாக்கு கூட பயன்பாடான பொருளாகவே இருக்கிறது என்பதை அறிந்தோம். ஜீரோ எழுத்தில் எழுதப்பட இருப்பதை போல எந்த ஒரு பொருளும் ஒன்றும் இல்லாமல் இல்லை. அதாவது எதுவுமே இல்லாமல் எதுவுமே இல்லை.

மதிப்பிற்குரிய எனது நண்பர் ஒருவர் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது தவறு என சொன்னார். அதாவது இந்த வலைப்பூ எழுதுவதன் மூலம் பிறர் பயன்பட வேண்டும் என்றும் கருத்து பரிமாற்றம் நிகழ வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். பலர் வந்து மறுமொழியோ, பின்னூட்டங்களோ எழுத வேண்டும், அப்படி எழுதி கருத்துகளை பரிமாற வேண்டும். ஒரு எழுத்துக்கு  பின்னூட்டங்கள், மறுமொழிகள், எழுதுபவரை உற்சாகத்தில் வைத்திருக்கும், இல்லையெனில்  ஈ ஓட்டுவது, காற்று வாங்குவது என பொருள்படும் என்பது அவரது கருத்து. ஆனால் எனக்கு சொல்லி தந்த ஆசிரியரோ எவருமே செருப்பு அணியாத இடத்தில் சென்று செருப்பு விற்பவனே அதி புத்திசாலி என சொல்லிக் கொடுத்தார். ஒன்றை விரும்பாத, ஒன்றை அறியாத மக்களிடம் சென்று புதுமையை புகுத்துவது. அதன் மூலம் அவர்களை அந்த விசயத்திற்கு அடிமையாக்குவது என்பதாகும்.

நீங்கள் வலைப்பூக்களில் சென்று இடும் உங்கள் பின்னூட்டங்கள் புண்ணாக்கா? எண்ணையா?

Thursday 15 December 2011

இவர்கள் எல்லாம் ஏன் எழுதுவதில்லை

சேவல் கூவும் முன்னர் எழுந்திருந்து, சூரியன் உதிக்கும் முன்னர் வாசல் தெளித்து, கோலம் இட்டு பழைய சோற்றினை பாங்காய் உண்டு களை எடுத்திட காட்டுக்கு விரைந்து நெற்பயிர்களும், சோலைக் கதிர்களும் வளர வழி செய்து, ஆட்டுக்கும், மாட்டுக்கும் புல் கட்டு சுமந்து ஓயாமல் ஆடியாடி ஓடியாடி வேலையே கதியென கிடக்கும் இவர்கள் ஏன் எழுதுவதில்லை?

பூமியை தோண்டி அதற்குள் சிமேண்ட்டையும், கற்களையும் குழைத்து போட்டு வீடு கட்ட செங்கலும், சுண்ணாம்பு கலவையும் சுமந்து திரியும் சித்தாள்களும், பிதாகரஸ் தியரம் தெரியாது போனாலும், அல்ஜீப்ரா, டிரிக்நோமேட்ரி என எதுவும் புரியாது போனாலும் விழுந்து விடாத வீட்டை வலுவாக கட்டி வைக்கும் கொத்தனார்களும் ஏன் எழுதுவதில்லை?

உயிருக்கு போராடும் மாந்தருக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாது இரவும் பகலும் கண் விழித்து வாந்தியையும் வாடையையும் பொருட்படுத்தாது உயிர் காப்பாற்ற உழைக்கும் நர்ஸ்களும், சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் அறுவை சிகிச்சை அறையிலேயே அடைந்து கிடக்கும் மருத்துவர்களும் ஏன் எழுதுவதில்லை?

மௌனமாய் மரத்தின் கீழ் அமர்ந்து மாபெரும் சோதி கண்டபின்னும் தான் கண்டது கடவுளென கூறாமல் கலையாத தவம் கொண்டோர்களும், குப்பை நிறைந்த சாலைகளை துப்புரவாக்கி, பசியென அலையும் பலருக்கு அன்னம் தயாரித்து சமூக சேவகமே தனது சிந்தனையாய் போராடுபவர்கள் ஏன் எழுதுவதில்லை?

உரிமைகள் தொலைந்தது என உயிரை தந்து உரிமை மீட்டிட ஒரு வாய் சாதம் கூட நிம்மதியாய் உட்கார்ந்து சாப்பிட வழியின்றி சமூக அவலங்களை துடைத்திட துடியாய் துடிப்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

கருமமே கண்ணாய், காரியமே கருத்தாய் கண்ணீர் துடைப்பதே செயலாய் முதியோர்களுக்கு குழந்தைகளாய், ஆளில்லார்க்கு ஆளாய் அவதியை இன்பமாய் பாவித்து வாழ்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

Wednesday 14 December 2011

கன்னத்தில் முத்தமிட்டால் கறை படியும்

ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை கேட்டுக் கொண்டே இருக்கையில் இந்த படத்தை பார்க்கவே இல்லையே எனும் ஒரு வேண்டாத ஆசை வந்து சேர்ந்தது. இந்த படம் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

ஈழத்து தமிழர்கள் பற்றிய படம் என்றெல்லாம் கேள்விபட்டது மட்டுமே உண்டு. பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசக் கேட்டது உண்டு. விடைகொடு எங்கள் நாடே எனும் பாடல் அத்தனை துயரங்களை சொல்லி செல்லும்.

அப்படி என்னதான் படம் என பார்த்தால் ஒரு எழுத்தாளரும், ஒரு குழந்தையும் பற்றிய கதை. ஈழத்து நிகழ்வுகளை பற்றி கதை கதையாக பேசி ஈழம் வெளிநாடுகளில் மலர்ந்து விட்டது என கூவி கோடிக்கணக்கான  மக்களின் கனவுகள் சிதைந்து போன தேசமாக இப்போது இலங்கை இருந்து வருகிறது. இந்த இலங்கை அற்புத தேசம் எனவும் சுற்றுலா தளங்களில் மிகவும் சிறந்தது எனவும் சொல்லப்படுவது உண்டு.

ஒரு குழந்தையின் ஏக்கம் தனை படம் முழுக்க காட்டப்பட்டு சினிமா நடிக்க வேண்டும் என, வீட்டுக்கு பயந்து என வீட்டை ஓடிப் போகும் குழந்தைகள் போல தாயை தேடி அகதி முகாம் செல்லும் வரை என குழந்தையின் மன நிலையை இளங்கன்று பயம் அறியாது என காட்டி இருந்தது நன்றாகவே இருந்தது.

ஒரு சாதாரண மனிதருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை வேட்கையை தற்கொலை மனிதராக காட்டியது திடுக்கிடத்தான் செய்தது. ஒரு கிராமத்தில் வாழும் பூசாரி அந்த இறைவன் வந்து காப்பற்ற மாட்டாரா எனும் ஏக்கம் எல்லோர் மனதிலும் நிறைந்தே இருக்கும். இப்படி காட்சிக்கு காட்சி என ஒரு திரைப்படம் கவிதையாக வடிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு இனம் புரியாத சோகம் மனதில் இழையோடிக் கொண்டே இருந்தது. எட்டு ஆண்டுகள் முன்னர் கள்ளத்தோணி பிடிச்சி வந்தேன் என கண்ணீர் கதையை சொன்ன நண்பரை கட்டிபிடித்து என்ன செய்யலாம் என கேட்டபோது இங்கே இருந்தே அவங்களுக்கு சாவு மணி அடிக்கலாம் என்றார். அவரை அதற்கு பின்னர் நான் காணவே இல்லை. ஈழத்தில் நடந்த விசயங்கள் சாதாரண விசயங்கள் என எவரேனும் சொன்னால் அவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், இடுக்கண் வருங்கால் நகுக என இளித்து கொண்டு போக கூடியவர்கள். ஆனால் வாழ்க்கை அத்துடன் நிற்கவில்லை. தினமும் எவரும் இந்த நிகழ்வுகள் நினைத்து அழுது கொண்டிருக்கவும் இல்லை. இதுதான் பூமி கண்ட கோட்பாடு. செத்தாருக்கு சொல்லி அழு. அழுதவுடன் எல்லாம் தீர்ந்தா போய்விடுகிறது! வடுக்கள் ஏற்பட வழியில்லா ரணம் ஆறிட வழி இல்லை. சொந்த மண்ணை கீறி எரிதழலில் போட்டு பொசுக்கி போன பின்னர், எதுவுமே நடக்கவில்லை என்றா இளைய தலைமுறை வரலாறு கற்று கொள்ளும்? வெறுப்பு எப்படி எல்லாம் வளர்ந்து தொலைக்கிறது!!!

இப்பொழுது ஈழம் எப்படி இருக்கும்? சிங்களவர்கள் அனைவருமே கெட்டவர்கள் அல்ல என இருந்தாலும் சிங்களவர்கள் எனும் நினைப்பே தமிழர்களுக்கு ஒருவித எரிச்சல் தந்துவிட்டு போகிறது. எனக்கு தெரிந்த சிங்கள நண்பரிடம் பேசும்போது வார்த்தை தடுமாறுகிறது. அவரோ சகஜமாகவே பேசுவார், என்ன செய்வது சில கோணங்கி புத்தி உடையவர்களால் மொத்த இனமே வேறுபாட்டினை கொள்கிறது என்பார். ஆனால் சில கோணங்கி புத்தி இல்லை, ஒரு இனமே கோணங்கி புத்தி உடையதாக அல்லவா இருக்கிறது என அவரிடம் சொல்லிவிட்டு, நீங்கள் புலம் பெயர்ந்து வந்ததால் அந்த உணர்வு இருக்க வாய்ப்பு இல்லை என நகர்ந்து விடுவேன். அதுவும் எத்தனை உயிர்கள் மாய்க்கப்பட்டன, எத்தனை சிறார்கள் சிதறடிக்கப்பட்டார்கள், இது போன்ற காணொளி எல்லாம் இணையதளத்தில் உலவியபோது அதை பார்க்கும் தைரியம் எதுவுமே இல்லை. மருத்துவ உதவி செய்யப்போன புலம் பெயர் தமிழர் சொன்ன கதையை கேட்டு, போர் நிறுத்தம் செய்ய கூறி போராட்டம் நடத்தப்பட்ட வெளிநாடுகளில் கூடிய கூட்டம் கண்டு ஈழம் மலர்ந்து விடும் என்றே கனவுகள் உண்டு. ஆனால்... ஐம்பது வருட போராட்டம் கண்டது... இப்பொழுது இலங்கை அரசு மீதான நடவடிக்கைகள் எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஈழம் பற்றிய அக்கறை இனி எவருக்கும் வரப்போவது இல்லையோ! எல்லாம் போச்சு! என்றுதான் என்னிடம் ஒரு நண்பர் பிரபாகரன் மரணம் அடைந்த செய்தி வந்ததும் சொன்னார். ஒரு நல்ல இலக்கியம் ஒன்றை தமிழுக்கு படையுங்கள் என ஒரு நண்பர் கேட்டார். கதைகளும், காவியங்களும் எவருக்கு தேவை, கண்ணீருடன் வாழ்ந்து மடியும் இனங்கள் உள்ளபோது என இருந்தாலும் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு இருப்பது வேதனைக்கு உரியது. கறைபடிந்த வரலாறாக மாறக்கூடாது.

இலங்கைக்கு சென்று வரும் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டு கொள்வதோடு, அங்கே செல்வதால் பயம் இல்லையா என்று கேட்டால் 'எனது தாய் மண்' என்றே பெருமிதம் கொள்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன.

இருபது வருடங்கள் முன்னால் எழுதிய கவிதை தொலைந்து போய்விட்டது. மயானத்தில் கூட அமைதி, அந்த அமைதியையா இந்த போர் வேண்டி நிற்கிறது என வரும் அந்த கவிதை. போர்  எல்லாம் அமைதிக்கான வழியே இல்லை, இருப்பினும் எதிரிகளின் கன்னத்தில் முத்தமிட்டால் நமது உதடுகளில் கறைபடிந்து விடுவதை துடைக்க வழிதான் தெரிவதில்லை. 

Tuesday 13 December 2011

அணையை உடைச்சிட போறானுங்க

முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் தற்போது பெரிய அளவில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இரண்டு மாநில அரசியல் தலைவர்களின் மதி கெட்ட செயல்களால் பாதிப்புக்கு உள்ளாகப் போவது மக்கள் தானே தவிர அரசியல் தலைவர்கள் அல்ல. நீதியை முறையாக கடைபிடிக்கும் நாடாக, பிரச்சினைக்குரிய விசயங்களில் சமயோசிதமாக நடக்கும் நாடாக  இந்தியா இன்று இருந்து இருக்கும் எனில் பல பிரச்சினைகள் எளிதாக முடிந்து இருக்கும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக பல பிரச்சினைகள் இழுவையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு நீதி ஒன்றும் பொருட்டு அல்ல!

எதற்கு மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அரசு நடந்து கொள்ள மறுக்கிறது என தெரியவில்லை. இந்த அணை கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூற்றி பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது. சில வருடங்கள் முன்னர் இந்த அணையில் சிறு கசிவு ஏற்பட்டதால் அணையின் ஸ்திரதன்மை பாதிக்கப்பட்டு இருக்கலாமோ எனும் அச்சம் வருவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அதையே காரணம் காட்டி மொத்த அணையும் உடைந்துவிடும் என அடிப்படை காரணம் இல்லாமல் அவதூறு பரப்புவது நியாயம் இல்லை. இதற்கு தூபம் போடும் வகையில் வெளிவந்த ஒரு திரைப்படம் DAM999 இந்த படத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருந்து இருந்தால் இன்று இத்தனை பிரச்சினை வந்திருக்குமா என தெரியாது. இந்த திரைப்படத்தை தடை செய்வது முதற்கொண்டு இவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டு கொண்டார்கள். இன்று தேனி போன்ற மாவட்டங்களில் பெரும் போராட்டங்களும் கடை அடைப்புகளும் நடந்தேறி கொண்டிருக்கின்றன. இதற்கு தகுந்த தீர்வை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என இல்லை. அந்த அந்த பகுதி வாழ் மக்கள் புரிந்துணர்வுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம், ஆனால் தற்போது நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது போன்ற நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. நதிகள் தேசியமயமாக்கப்படுவது குறித்து மக்கள் புரட்சி செய்தாக வேண்டும். இப்பொழுது கூட கேரளா அரசு வேறு ஒரு அணையை கட்ட எவரும் தடை விதிக்க முடியாது எனும் ஒரு நிலை வந்தால் பெரும் பிரச்சினைதான். முல்லை பெரியாறு அணியின் பின்னணி சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

முதன் முதலாக கட்டப்பட்ட அணையானது வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பின்னர் பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னி குக் தலைமையில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் போராடி கட்டப்பட்ட அணை தான் இந்த முல்லைப் பெரியாறு அணை. ராமநாதபுரம் சமஸ்தானத்தை சார்ந்த பிரதானி முத்து இருளப்ப பிள்ளை என்பவர் தான் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் முன்னர் செயல்படுத்த திட்டமிட்டவர். இந்த் அணையின் மூலம் தமிழக மாநிலங்கள் பயன்பெறும் எனவும், ராமநாதபுரம் அதிக பயன் பெரும் எனவும் திட்டமிட்டவர். முத்துராமலிங்க சேதுபதி சிறுவராக இருந்ததால் முத்து இருளப்ப பிள்ளை ஆட்சி பொறுப்பினை ஏற்றார். ஆட்சிக்கு வந்த இந்த முத்து இருளப்ப பிள்ளை பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் முத்துராமலிங்க சேதுபதி தான் வளர்ந்த பின்னர் இவரின் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லி முத்து இருளப்ப பிள்ளையை ஒரு துரோகியாகவே சித்தரித்து இருப்பதாக வரலாறு சொல்கிறது. இதனால் வெறுப்புற்ற முத்து இருளப்ப பிள்ளை தனது அமைச்சர் பதவியை துறந்தார், அத்துடன் இவரது வரலாறு மறக்கடிக்கப்பட்டது.

பென்னிகுக் பற்றி அந்தோணி முத்து பிள்ளை அன்றைய காலத்தில் பெரிதாக போற்றினார். தண்ணீரில் உனது பெயர் எழுதப்பட்டு இருந்தாலும் இந்த பெரியார் ஆறு ஓடும் வரை உனது பெயர் இருக்கும் என்றார். அப்படிப்பட்ட பெரும் பாரம்பரியம் மிக்க பெரியார் அணையை இப்பொழுது ஏதேதோ காரணம் காட்டி உடைத்துவிட்டு புதிய அணையை வேறொரு இடத்தில் கட்ட இருப்பதாக கேரளா அரசு சட்டசபையில் மசோதா இயற்றி இருப்பது வேடிக்கைக்கு உரியது.

புதிய அணையை கட்டுவதைவிட இருக்கும் அணையை பராமரித்தல் என்பது ஒன்றும் பிரச்சினைக்குரிய விசயம் இல்லை. அணை கட்டப்பட்டு இருக்குமிடம் கேரளா என்றாலும் 999 வருட குத்தகைக்கு தமிழக அரசு இந்த அணை மற்றும் அணையை சுற்றியுள்ள இடங்களை பராமரிக்கும் பொறுப்பினை ஏற்று உள்ளதுதான் பிரச்சினை.

இந்த அணை உடைந்து போகும் அபாயம் என சொல்லி அவதூறு பிரச்சாரங்களை கேரளா அரசு மேற்கொண்டு வருவது மூலம் தமிழர்கள் மலையாளிகள் இடையே உள்ள நல்லுறவை குலைக்கும் வண்ணம் சிலர் செயல்படுவது கண்டனத்துக்குரியது. கேரளாவில் தான் படித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்றால் முட்டாள்களும் நிறைய இருக்கிறார்கள் என காட்ட இந்த கேரளா அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது வேதனைக்குரியது. செம்மறியாடு போன்ற குணங்கள் கொண்ட மக்கள் பலரை இரண்டு அரசுகளும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதனால் பொதுவுடைமை பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் பலர் ஈடுபடுவதால் பதட்டம் நிலவுவதை தவிர்க்க இயலாது. ஒருவர் உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார், மற்றொருவர் அதைப் பார்த்து உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். இந்த உண்ணாவிரதம் மூலம் இவர்கள் உயிர் போகாது என்பது இவர்களுக்கு தெரியும் என்பதால் இது போன்ற வித்தைகளை காட்டி மக்களுக்காக போராடுகிறேன் என பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

இந்த பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் உரிய வசதிகள் இல்லாமல் வாடும் ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசும் சரி, இதற்கு முந்தைய அரசுகளும் சரி என்ன செய்தது?

தண்ணீர் கொள்ளளவு 142 அடி என இருந்தால் பிரச்சினை வரும் என்கிறது கேரள அரசு. அணையானது வலுவாக இருப்பதாக சில மாதங்கள் முன்னர் ஆராய்ந்த குழு சொல்லியாகிவிட்டது. இந்த மாதம் கூட மேலும் ஒரு குழு சோதனைக்கு வர இருக்கிறதாம். ஒரு அணை வலுவா இல்லையா என்பதை எப்படி சோதிக்கிறார்கள்?

கேரளா அரசு தனது காரியத்தில் சாதிக்க வேண்டுமென நினைத்து எது வேண்டுமெனிலும் செய்துவிடுமோ எனும் அவசியமற்ற அர்த்தமற்ற அச்சம் எழத்தான் செய்கிறது. ஆனால் இதை அரசியல்வாதிகள் பேசினால் பெரும் பிரச்சினை ஆக வாய்ப்புண்டு. அதோடு மட்டுமில்லாமல் சோதனை செய்கிறேன் என செல்பவர்களும், போராட்டம் செய்கிறேன் என அணையின் மீது ஏறி நின்று போர்க்கொடி தூக்குபவர்களும் அணையை உடைச்சிட போறானுங்க எனும் கவலை மட்டுமே எஞ்சி நிற்கிறது ஒரு பாபர் மசூதியை தொலைத்தது போல!

Monday 12 December 2011

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 1

ஓம் நமோ நாராயணாய நமஹ 

நீ என் மிக அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை.

ஒரு விசயத்தை பற்றி எழுதும்போதோ, அது குறித்து பேசும்போதோ, போதிய ஞானம் இல்லாத பட்சத்தில் அந்த விசயம் குறித்து மிகவும் தெளிவுபட எழுதவோ, பேசவோ இயலாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன். தமிழ் மொழியை தவிர நான் கற்று கொண்ட பிறிதொரு மொழி ஆங்கிலம் மட்டுமே. இந்தி மொழியை சிரத்தையுடன் ஒரு நண்பரின் உதவியால் கல்லூரி காலங்களில் கற்றுகொண்டாலும், தொடர்ந்து கற்று கொள்ளாத காரணத்தினால் இந்தி மொழி மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே ஆகிவிட்டது.

இந்த ஸ்ரீமத் பாகவதம்தனை எடுத்து வாசிக்கும் போது அதில் இருக்கும் மொழி பரிச்சயப்பட்டது போன்றே தென்பட்டது. எனினும் எனது சிற்றறிவுக்கு வாசிப்பது அத்தனை எளிதாக இல்லை. மேலும் இறைவன் எனும் ஒரு விசயத்தில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டதால் வாசிக்கும்போதே ஏதேதோ கேள்விகள் எழுந்து கொண்டே இருப்பதை தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் ஸ்ரீமத் பாகவதம் மட்டுமே எழுதிட விழைகின்றேன். அன்பர் ஒருவர் ஸ்லோகங்கள் கேட்டதால் அதையும் எழுதிவிட வேண்டுமென முயற்சியுடன் எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க.

இந்த முதல் அத்தியாயத்தில் மொத்தம் இருபத்தி மூன்று ஸ்லோகங்கள் இருக்கின்றன. இந்த அத்தியாத்தில் சௌனகர் என்பவர் சூத முனிவரிடம் தங்களுக்கு பகவான் பெருமையை பற்றி சொல்லுமாறு கேட்பதாகவே அமைந்து உள்ளது. இதில் இந்த ஸ்ரீமத் பாகவதம்தனின் பெருமையை சௌனகர் சொல்கிறார். எப்படியாவது இந்த ஸ்ரீமத் பாகவதம் தனை கேட்க வேண்டும் எனும் ஆவலில் நிறையவே புகழ்ந்து தள்ளுகிறார். அதோடு மட்டுமின்றி தனக்கும் சில விசயங்கள் தெரியும் என்பதை காட்டி கொள்கிறார். அதாவது தனது ஆர்வத்தை பறைசாற்றுகிறார். இந்த ஸ்ரீமத் பாகவதம் தனை போன்ற புராணங்களை தொகுத்தவர் வியாச முனிவர் என்பது எனது அறிவுக்கு தெரிந்த தெளிவு.

இந்த ஸ்லோகங்களுக்கு நேரடியாய் அர்த்தம் கொள்வது என இருந்தாலும் மொழி பெயர்ப்பு என வரும்போது என்னைப் பொறுத்தவரை மூல ஜீவன் ஒரு வகையில் கொல்லப்படத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு பகவான் என சொல்லப்படும் ஸ்லோகங்களில் மஹா விஷ்ணு எனும் மொழி பெயர்ப்பு சரியானதா என கேள்வி எழுந்தாலும் இங்கே மஹா விஷ்ணு போற்றபடுவதால் அது சரியாகப்படலாம். மேலும் எழுதியவரின் மனநிலை நாம் கொள்வது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.

இப்பொழுது எனக்கு சௌனகரின் வரலாறோ, சூத முனிவரின் வரலாறோ, வியாச முனிவரின் வரலாறோ முழுமையாக தெரியாது. காலப்போக்கில் அவர்கள் பற்றி நான் அறிய நேரிடலாம். அப்பொழுது அவர்கள் யார் என்பது குறித்து எழுதுகிறேன். மேலும் மூன்று வகை குணங்கள், அஷ்டமா சித்திகள் போன்ற எனது அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்கள் எல்லாம் நான் இப்பொழுது பேசப் போவதில்லை. இப்போதைய எனது நோக்கம் ஸ்ரீமத் பாகவதம் எழுதுவது மட்டுமே. ஒவ்வொரு ஸ்லோகத்தையும் வாசித்து, அதற்கான தமிழ் பொழிப்புரையை வாசித்து புரிந்து கொள்வது சிரமமான காரியமாகவே இருக்கிறது. அத்தியாயங்களில் எனக்கு எழுந்துள்ள கேள்விகள் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன.

மொத்த ஸ்லோகங்களையும் கடைசியாக தந்துவிடுகிறேன். தமிழை தொடர்ந்து வாசித்து வர தடை இல்லாமல் இருக்கும், அதைப் போலவே ஸ்லோகங்கள் வாசிக்கவும் தடை இல்லாமல் இருக்கும்.

                         ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 1 


1  ஆகாயம் முதலிய கார்ய வஸ்துகளில் ஸ்த்ரூபியாய் தொடர்வதாலும், ஆகாஷபுஷ்பம் முதலிய அகார்யாவஷ்துகளில் தொடராததாலும் எந்த பரமாத்மாவிடமிருந்து இவ்வுலகின் உற்பத்தி, வளர்ச்சி, நாசம் இவைகள் உண்டாகின்றதோ, ஸ்ர்வக்ஞரும் சுயமாகவே பிராகசிப்பவருமான பரமாத்மா ஆதிகவியின் பொருட்டு எந்த வேதத்தில் மகாகவிஞரும் மோட்சத்தை அடைகின்றனரோ, அந்த வேதத்தை மனதினால் உணர்த்தினரோ, தேஜஸ், ஜலம் பிருத்வி இவைகளையுடைய ஒன்றில் மற்றொன்றின் தோற்றம் போல் எந்த பரமாத்மாவிடத்தில் மூன்று வகை குணங்களுடன் பூதம், இந்திரியம் தேவதை என்றவைகளின்  ஸ்ருடியானது சத்தியமாக தோன்றுகிறதோ, பேரொளியால் எப்பொழுதும் போக்கடிக்கபட்ட மாயா தீத காரியங்களை உடையவரும், ஷ்த்யஸ்வரூபியுமான அந்த பராமத்மாவை தியானஞ் செய்வோம்.

2   ஸ்ரீமன் நாராயணரால் முதலில் உபதேசம் செய்யப்பட இந்த பாகவதத்தில் பொறாமையற்ற மக்களுக்காக, அடியோடு அகற்றப்பட்ட கபடத்தையும், பலா பிசிந்தியையும் உடையதான மிக உயர்ந்ததான பாகவத தர்மம் கூறப்பட்டு இருக்கிறது. பரமார்த்தமானதும், சேமத்தை அளிப்பதும், அத்யாத்மிகம் முதலிய தாபங்களை வேருடன் அகற்றுவதுமான பரமாத்மவஷ்துவானது அறிய முடிந்ததாக இருக்கிறது. மற்ற சாஸ்திரங்களில் பரமாத்மா இருதயத்தில் உடனே நிலைநிறுத்தபடுகின்றாரா என்ன, ஆனால் இந்த ஸ்ரீமத் பாகவத்திலோ, கேட்க விருப்பம் கொண்டவர்களின் இருதயத்தில் உடனே நிலை நிறுத்தபடுகிறார்.

3  ரசிக்கும் தன்மை உடையவர்களே, ரஷவிஷேசத்தை அறிவதில் சிறந்தவர்களே, வேதமாகிய கற்பகவிருட்சதினில் இருந்து சுக முனிவருடைய பூமியில் விழுந்ததும், அமிர்த துளிகளோடு கூடியதும், ரஸஸ்வரூபமாக உள்ளதுமான ஸ்ரீமத் பாகவதம் எனும் பலம் தனை மோட்ச சாம்ராஜ்யம் அடையும் வரை அடிக்கடி அனுபவியுங்கள்.

4  நைமிஸ்ரன்யத்தில் சௌனகர் முதலான மஹாரிஷிகள் சுவர்க்கத்தை அடைவதன் பொருட்டு ஆயிரம் ஆண்டு அனுஸ்டிக்கதக்க யாகத்தை செய்தார்கள்.

5 ஒரு சமயம் ப்ராதகாலத்தில் அந்த மகரிஷிகளே நித்யனநமித்தக காரியங்களின் பொருட்டு ஹோமம் செய்யப்பட அக்னியை உடையவர்களாய் நன்கு உபசரிக்கப்பட்டு அமர்ந்திருப்பவரான சூத மஹரிஷியை அன்போடு கூடிய மேற்சொல்லப்போவதை கேட்டனர்.

6  பாபமற்றவரான உம்மில் பாரதம் முதலான இதிகாசஙகளோடு கூடிய புராணங்களும் எந்த தர்மசாஸ்திரங்களுண்டோ அவைகளும் கற்கபட்டன மேலும் உபதேசிக்கப்பட்டன.

7 புராணம் முதலியவற்றை அறிந்தவரும் சிரேஸ்டரான வியாச பகவான் எந்த இதிகாசம் முதலானவற்றை அறிந்தாரோ மற்ற நிர்குண ஸ்குணபராமங்களை அறிந்த மஹாரிசிகளும் அறிந்தார்களோ.

8 எல்லாவற்றையும் வியாசாதி மகரிஷிகளின் அனுக்ரகத்தால் சாதுவான சூத மகரிசே நீர் உள்ளது உள்ளபடி அறிகிறீர். பிர்யமுள்ள சீடனுக்கு ஆசாரியர்கள் பரம ரகசியத்தையும் கூட சொல்வார்களன்றோ

9 தீர்க்கமான ஆயுளை உடையவரே, புராணங்களில் மக்களுக்கு நித்ய ஸ்ரேயஸ்ஷாக உள்ள யாதொன்று தாங்களால் நிச்சயிக்கப்பட்டதோ அதை விரைவில் எங்களுக்கு சொல்வதற்கு யோகயராகிறீர்கள்

10 சாதே, இந்த யுகத்தில் ஜனங்கள் அநேகமாக அற்பமான ஆயுளை உடையவர்களாகவும் சோம்பல் உள்ளவர்களாகவும் மிகவும் மந்தமான அறிவை உடையவர்களாகவும் தீ வினைப்பயன் உடையவர்களாகவும் வியாதிகள் பீடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்களன்றோ

11 முறைகளுடன் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாக்கள் இருக்கின்றன. அதைப் போல கேட்கவேண்டிய சாஸ்திரங்கள் அனேகம இருக்கின்றன. மகரிசே இவைகளில் யாதொன்று சாரமானதே எதனால் புத்தியானது நன்கு அமைதி அடையுமோ தங்களது அறிவுத்திறத்தால் அடுத்து கேட்பதில் சிரத்தையோடு கூடிய எங்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

12 சூத மகரிசே உமக்கு நன்மை உண்டாகட்டும். பக்தர்கெல்லாம் பதியான பகவானை எந்த காரியத்தை விருப்பங் கொண்டு வசு தேவருக்கு மனைவியான தேவகியிடத்து தோன்றினதை நீர் அறிவீர்.

13 சூத மகரிசே அதனை கேட்க விருப்பமுள்ளவர்களான எங்களுக்கு எடுத்து சொல்வதற்கு யோக்யராகிறீர். பகவானின் அவதாரமானது சகல ஜீவராசிகளினுடைய சேமத்தினை பொருட்டும் காப்பாற்றுதலின் பொருட்டும் உள்ளது.

14 காலவசத்தை அடைந்து மிக பயங்கரமான சம்சார பந்தத்தில் ஈடுபட்டு கொண்டு பகவானின் நாமத்தை சொல்கிறவனை கொண்டு அந்த சம்சார பந்தத்தில் இருந்து உடனே விடுபடுகின்றானோ அந்த நாமாவிற்கு பயமானது பயப்படுகிறது.

15 சூத மகரிசே அமைதியை அடைந்தவர்களும், பகவானின் பாத சேவையை அடைந்தவர்கள் மகரிசிகளால் தொடப்பட்டவர்கள் உடனே பரிசுத்தம் ஆகின்றனர். கங்கை ஜலத்தை சேவிப்பதினாலும் பரிசுத்தமாகுகிறது.

16 மஹாநீயர்களால் சோஸ்த்திரம் செய்யப்பட்ட வியாபாரத்தை உடைய மஹா விஷ்ணுவால், கலியில் தோன்றும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் கீர்த்தியை பரிசுத்தம் ஆக விரும்பும் எவர் தான் கேட்கமாட்டார்.

17 தனது லீலைகளால் பிரம்மாவாகவும், ருத்ரனாகவும் உள்ள சொரூபத்தை தரிசிக்கின்ற அந்த பகவானுடைய பெரியவகைளும் நாரத மகரிஷிகளினால் எடுத்து சொல்லபட்டதுமான செய்கைகள் எங்களுக்கு சொல்லுங்கள்.

18 அறிவில் சிறந்தவரே தனது லீலா விநோதத்தினால் இஷ்டப்படி பல்வேறு லீலைகள் செய்பவரான மஹா விஷ்ணுவின் நன்மையை தரத்தக்க மாய அவதார கதைகளை பிறகு சொல்லலாம்.

19 நாங்களோவேனில் பகவானுடைய ப்ராக்ராமங்க்களை கேட்பதில் திருப்தி அடையோம். எந்த பகவானின் பண்புகள் கேட்கின்றவர்களை ரசத்தை அறிந்தவர்களும் ஒவ்வொரு கணமும் கேட்க கேட்க இனிமை அளிக்க கூடியதாகும்.

20 மாய மனுஷன் ஆனவனும் அறியப்படாதவனும் இறைவன் கிருஷ்ணன் பலராமனோடு கூடியவராய் மனித சக்திக்கு அப்பாற்பட்ட வீர்யம் மிகுந்த செய்கைகள் செய்தார் அல்லவா.

21 கலியுகமானது வந்ததை அறிந்து இந்த விஷ்ணு சம்பந்தமான நைமிசாரன்யத்தில் நீண்ட யாக நிமித்தமாக உட்கார்ந்தவர்களால் மஹா விஷ்ணுவின் கதைகளை கேட்பதில் அடையப்பட்ட சந்தர்ப்பங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா.

22 மக்களின் சக்தியை அபகரிக்க கூடியதும், கடக்க முடியாததுமான கலியுகமாகிய கடலை கடக்க முயலுகின்றவர்களான எங்களுக்கு படகோட்டி போன்று நீர் காணப்படுகிறீர்

23 கர்மத்தை காப்பாற்றுபவரும் யோகிகளுக்கு ஈஸ்வரரும் பரமேஸ்வரரூபியான பரமாத்மா தற்போது தனது எல்லையை அடைந்த அளவில் யாரை சரணமாக அடைந்தது என சொல்லுங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------

1  ஜன்மாத்யஷ்ய யதொன்ஷ்வ்யாதிதர்ஸ்சர்தேஸ்வபிஜ்ஞ: ஸ்வராட் 
    தேனே ப்ரஹ்ம ஷ்தொய யா ஆதிகவயே முஹயந்தி யத் ஷூரேய
    தேஜோ வாரிம்ருதாம் யதா சூநிமயோ யாத்ரா த்ரிஷ்ர்கோ ம்ருஷா 
    தாம்நா ஷ்வென ஸ்தா நிரஸ்த குஹம் ஷ்த்யம் ப்ரம்தீமஹி 

2  தர்ம ப்ரோஜ்ஜிதகைதவோஷ்த்ர ப்ரமோ நிர்மத்ஸ்ராணாம் ஸ்தாம்
    வேத்யம் வாஸ்தவமத்ர வஸ்து ஸ்ரிவதம் தாபத்ரயோன்மூலம்
    ஸ்ரீமத்பாகவதே மகாமுனிக்ருதே கிம் வா பரைரீஷ்வர
    ஸத்யோ ஸ்ருத்யவருத்யதேஷ்த்ர க்ருதிபி ஆஷ்ரூஷிபிஸ்தத்நாத்


3  நிகமகல்ப தரோர்களிதம் பலம் ஷோமுகதம்ருதத்ரவ ஸ்ம்யுதம்
    பிபத பாகவதம் ரஷமால்யம் முஹீரஹோ ரஷிகா புவி பாவுகா   


4  நைமிஷேமுனிமிச சேத்ரே ருஷய சௌனகாதய
   ஸ்தரம் ஸ்வர்காய லோகாய ஸ்ஹஸ்ர ஸம மாஸத


5  த ஏகதா து முயை பராதர்ஹூதஹீதாக்யை 
   ஸ்த்க்ருதம் ஹூதமாஷீனம் பப்ரச்சுரிதமாதராத் 


6  த்வயா கழு புராணனி ஹேபதிஹாசாணி சாகை 
    ஆக்யாதான்யப்யத்தானி தர்ம ஷாஷ்த்ராணி யான்யுத 


7 யானி வேதவிதாம் ஸ்ரேஸ்டோ பகவான் பாதநாராயண 
   அன்யே ஸ முயை சூத பரவரா விதோ விது 


8 ஷித்த தவம் ஸௌமய தத்ஸ்ர்வம் தத்வதததநுக்ரஹாத்
    ப்ரூயு ஸ்நிக்தாஸ்ய சிஷ்யஸ்ய குரவோ குஹ்யமப்யுத 


9  தத்ர தத்ராஞ்ஜஸாஆயுஷ்மன்பவதா யத்விநிஷ்தம் 
    பும்சாமேகந்தத ஸ்ரேயஸ்தன்ன ஸ்ம்சிதுமர்ஹசி 


10 ப்ரயேனால்பாயுச ஸ்ம்ய காலவஸ்மின்யுகே ஜனா 
     மந்தா சீமந்தமதயோ மந்தபாக்யா ஹயுபத்ருதா 


11 பூரிணி பூரிகர்மாணி ஸ்ரோத்வயானி விபாகச 
     அத ஸ்தோ அதர யத்சாரம் சமுத் த்ருத்ய மநீசயா 
     ப்ரூஹி ந சரத்த தானானாம் யேனாத்மா ஸ்மப்ரஸீததி 


12 சூத ஜானாசி பத்ரம் தே பகவான் சாத்விதாம் பதி 
    தேவக்யாம் வசூதேவஷ்ய ஜாதோ யஸ்ய சிகீர்ஷ்ய 


13 தன்ன ஹோஹ்ரூதமான நாமார் ஹஷ்யங்கா நுவர்நிதம் 
     யஸ்யயாவதாரோ பூதானாம் சேமாயா ஸ பாவாய ச 


14 ஆபன்ன ஸ்மருதிம் கோராம் யன்நாம விவசோ க்ருணன் 
     தத ஸ்த்யோ விமுச்யேத யத்பிபேதி ஸ்வயாம் பயம் 


15 யத் பாதசம்ஸ்ரயா சூத முயை ப்ரஹமாயனா 
     ஸ்த்ய புநந்யுபசப்ருஸ்டோ ஸ்வர் துனயாபோ ஆனுசேவாய 


16 கோ வா பகவதஸ்தஸ்ய புண்யஸ்ளோகேட்யாக்ர்மண
      ஷீத்த்காமோ ந ஸ்ருனுயாத்யச கலிமலாபஹம் 


17 தஸ்ய கர்மான்யுதாராணி பரிகீதானி ஸ்ரீபி 
     ப்ரூஹி ந ஸ்ரத்ததாநாநாம் லீலயா ததத கலா 


18 அதாக்யாஹி ஹரோர்தீம்ன அவதாரகதா ஹீபா
     லீலா விததத ஸ்வைரமேஸ் வரஸ்யாத் ம மாயயா 


19 வயம் து ந வித்ருப்யம் உத்தமஸ் லோகவிக்ரமே 
      யஸ்ஸ்ருன்வதாம் ரசஞாநாம் ஸ்வாது ஸ்வாது பதே பதே 


20 க்ருதவான் கில வீர்யாணி ஸ்ஹ ராமென கேசவ 
     அதிமாத்யாணி பகவான் கூட கபடமானு 


21 கலிமாகதமாஜஞாய சேத்திர ஆச்மின்ன விஷ்ணுவே வயம் 
      ஆசிநா தீர்கஸ்தரேன கதாயம் ஸ்ஹநா ஹரே 


22 த்வம் ந ஸ்ந்நர்சிதோ தாத்ரா துஸ்தரம் னிஸ்திதீர்ததாம் 
     கலிம் ஸ்த்வ ஜரம் பும்சாம் கர்னதார இவார்நுவ 


23 ப்ரூஹி யோகேஸ்வர கிருஷ்ணா ப்ரஹமன்யே தர்மவர்மனி 
      ஸ்வாம் காஷ்டா மதுநோபேத தர்ம கம் ஹீரணம் கத 

Saturday 10 December 2011

மனைவியின் மயோர்கா - 4

பாதை மிகவும் மோசம் என சொன்னாலும் பளிங்கு போல சாலை பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனால் சாலையின் இருபுறங்களிலும் எவ்வித பாதுகாப்பு இன்றி இருந்தது. அதன் காரணமாகவே அதை மோசமான சாலை என சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும் என நினைத்து கொண்டேன்.

மலைகளின் மீதான பயணம் வெகு சிறப்பாக இருந்தது. இயற்கை காட்சிகள் அதி அற்புதமாக இருந்தன. எல்லாம் கடந்து ஓரிடம் சென்றால் அங்கு கடற்கரை ஒன்று இருந்தது. அந்த கடற்கரையில் உற்சாகமாக மக்கள் நீந்தி கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு மீண்டும் பயணம் தொடங்கினோம்.

முதன் முதலில் பார்த்த ஹோட்டல் பக்கம் செல்லலாம் என அந்த பாதை சென்றோம். சாலைகளில் பயணித்து கொண்டே பல இடங்களை பார்த்தாகிவிட்டது. ஒரு முறை ஒரு காரினை பின் தொடர்ந்து செல்ல அந்த காரோ வழி தெரியாமல் வேறு வழி செல்ல நாங்களும் பாதை மாறினோம், ஆனால் விரைவாக சுதாரித்து அருகில் சென்ற சாலையில் மாறி நேர் வழிக்கு வந்தோம். பாதை மாறிய மற்ற காரோ பரிதவித்து நின்று கொண்டிருந்தது. இப்படித்தான் சில ஊர்களுக்கு செல்லும்போது பாதை தெரியாமல் அவதிப்பட்டது உண்டு.

அங்கிருந்து ஒரு சின்ன கிராமம் சென்றோம். அந்த கிராமம் எனது ஊரில் இருக்கும் சாலைகளை நினைவுபடுத்தியது. கட்டை வண்டிகளும், டிராக்டரும் செல்ல கூடிய பாதைகள் கொண்ட எனது ஊரில் அவ்வப்போது கார்கள் வந்து போகும். அதைப் போலவே மிகவும் குறுக்கும் நெடுக்குமாக இருந்த கிராமத்து சாலையில் பயணம் செய்தோம். முன்னே கார் வந்தால் விலக முடியாத சூழல். எவரேனும் திட்டிவிடுவர்களோ எனும் அச்சம் வேறு.

முத்துகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை தேடி சென்றோம். அந்த தொழிற்சாலை சென்று அடையும் முன்னர் சாலையில் காட்டப்பட்டிருந்த விளம்பரத்தை கண்டு பாதை மாறி வேறு இடம் சென்றோம். பெரிய தலைவலியாக போய்விட்டதே என நினைத்தாலும் எந்த இடங்களும் முன்னர் பார்க்காத இடங்கள் என்பதால் பயணம் வெகு சிறப்பாகவே இருந்தது. சிறிது நேரத்தில் முத்துகள் செய்யும் தொழிற்சாலை அடைந்தோம். இந்த காலத்தில் விடுமுறை என தொழிற்சாலை பூட்டப்பட்டு இருந்தது ஏமாற்றத்தை தந்தாலும் அருகில் இருந்த பெரிய விற்பனை தளத்திற்கு சென்றோம். அங்கே விற்பனையாளர்கள் அதிகம் இருந்தார்கள். வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். இந்த மயோர்கா முத்துக்களுக்கு பிரபலம் என சொல்லிக் கொண்டார்கள்.

முத்து மாலை பல பார்த்தோம், அதில் சில பிடித்து இருந்தது. ஆனால் விலையோ மிகவும் அதிகம். வாங்குவதா வேண்டாமா என மனப் போராட்டத்தில் இருக்கும் இருப்பினை நினைத்து வேண்டாம் என வேண்டா வெறுப்பாக வெளியில் வந்தோம். 'இனி எப்போ இங்க வரப்போறோம், வாங்கலாம் எனும் மனைவியின் ஆசையை அங்கேயே நிராகரிக்க வேண்டிய சூழல் வந்தது' சில நேரங்களில் சில விசயங்கள் நமது கட்டுபாட்டுக்குள் நம்மால் கொண்டு வர இயலும், ஆனால் பெரும்பாலும் அதன்படி நாம் நடப்பதில்லை.

அங்கிருந்து ஒரு வியாபர நகர் சென்றோம். அங்கே வித விதமான பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். பல கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. மாலை நேரம் நெருங்கி வர ஹோட்டல் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் பல்மா எனும் நகரின் அழகை ரசித்தோம். எங்கேனும் நிறுத்தலாம் என நினைத்தால் இடமே இல்லை. இந்த பல்மா நகரின் அழகை சுற்றிப் பார்க்காமல் மயோர்காவின் பல இடங்களுக்கு சென்று வந்துவிட்டோம் என தோணியது. மறு நாள் பல்மா நகர் என முடிவானது. வரும் வழியில் டேஸ்ட் ஆப் இந்தியா எனும் மற்றொரு கடையை அங்கே பார்த்தோம். அதே போல வேறொரு பிரபலமான சாப்பாடு  கடை ஒன்று இருந்தது.  நாளை வரலாம் என பயணித்தோம்.  பல்மா நகரின் சிறு சிறு சாலைகளில் கட்டிடங்களுக்கு இடையில் எல்லாம் பயணித்தோம். நாம் செல்லும் பாதை சரியா தவறா என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் சரியாகவே வழிகாட்டி வழி காட்டியது என கடைசியாக தெரிந்தது. அன்று இரவும் ஹோட்டலுக்கு அருகில் உள்ள அதே கடையில் சாப்பிடாமல் மற்றொரு இந்தியர் கடையில் சாப்பிட்டோம். சாப்பாடு அந்த அளவுக்கு சரியாக இல்லை. பேசாமல் நேற்று சென்ற கடைக்கே சென்று இருக்கலாம் என தோணியது.

இரவு மீண்டும் அதே பாடல் காட்சி. உறக்கம். காலையில் எழுந்ததும் இன்னும் ஒரு நாளில் இந்த மயோர்கா விட்டு பிரிய வேண்டுமே எனும் ஏக்கம் வந்து சேர்ந்தது. பல்மா நகருக்கு விரைந்தோம். ஓரிடத்தில் காரினை நிறுத்திவிட்டு நடையாய் நடந்தோம். கட்டிடங்கள், படகுகள் கூடிய கடல் என பல இடங்கள் பாத்தோம். வியர்த்து விறுவிறுத்து போனது. எங்கு பார்த்தாலும் கடைகள் என தேவாலயம் எல்லாம் சென்றோம். அதே தொலைவு நடந்து திரும்பினோம். மதியம் ஆனபோது அந்த பிரபலமான கடை மூடி இருந்தது. டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்பிட்டோம்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் காரை திருப்பி தர வேண்டும் என்பதால் வேறு எங்கும் செல்லாமல் வீடு திரும்பலாம் என நினைத்தோம். இருப்பினும் ஒரு கடற்கரை சென்று திரும்பலாம் என புதிய இடத்தை அடைந்தோம். அப்பொழுதுதான் தெரிந்தது மொத்த மயோர்காவையும் சுற்றி முடித்தாகிவிட்டது என்று. கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு காரை திருப்பி ஒப்படைத்தோம்.

பணம் எதுவும் அதிகமாக வாங்கவில்லை. எந்த பிரச்சினையும் செய்யவில்லை. ஊருக்கு கடிதம் அனுப்புவார்கள், பணம் அதிகம் எடுப்பார்கள் என இணையத்தில் படித்து இருந்ததை போல எதுவும் நடக்கவில்லை. காரை விட்டபின்னர் எங்களை பத்திரமாக ஹோட்டல் வந்து சேர்த்தார்கள். அங்கே காருக்கு பெட்ரோல் போட செல்லும் இடங்களில் வேலை பார்க்கும் பையன்கள் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே எல்லாம் நாங்களகாவே பெட்ரோல் போடும் வழக்கம் உண்டு. அதிலும் ஓரிரு இடங்களில் தானியங்கிகள் தான்.

ஹோட்டல் வந்து அடைந்ததும் அதற்கடுத்து டென்ரீப் என மனைவி சொன்னார். சிறிது காலம் போகட்டும் என நினைத்து இருந்தேன். இங்கே தான் கார் ஓட்டியாகிவிட்டதே மாட்ரிட் போன்ற ஐரோப்பா இடங்கள் போகலாம் என சொன்னார். பார்க்கலாம் என அடுத்த நாள் விமானம் ஏறி ஊர் வந்தோம்.

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த எனது காரில் ஏறி அமர்ந்தபோது இந்த காரை எடுத்து சென்று இருக்கலாம் என தோணியது.

முற்றும். 

Friday 9 December 2011

எனது எழுத்துகள் சுடப்படுகின்றன - ஸ்ரீமத் பாகவதம்

இஞ்சிக்கொல்லை சிவராம சாஸ்திரிகளால் 1908ம் வருடம்  தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஸ்ரீமத் பாகவதம்தனை தொடர்ந்து இந்த வலைப்பூவில் எழுதப் போகிறேன்.

இந்த ஸ்ரீமத் பாகவதத்தில் நிறைய விசயங்கள் இருப்பதாக கேள்விப்பட்ட காரணத்தினால் அதைப் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் மிஞ்சியது. ஆனால் சில பல காரணங்களால் என்னால் படிக்கவே இயலவில்லை. அவ்வப்போது ஆவல் எழும் போதெல்லாம் ஸ்ரீமத் பாகவதம் தேட ஆரம்பிப்பேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதம் கண்ணுக்கு தென்படும். 

ஸ்ரீரங்கத்தில் எனது தாத்தா ஒருவர் விஷ்ணுபுராணம் புத்தகம் வைத்து இருந்தார். அதைப் படிக்கும்போது 'என்ன எழுதி இருக்கிறார்கள்' என அன்று தூக்கி போட வைத்துவிட்டது. அன்றைய காலத்தில் குமுதமும், ஆனந்தவிகடனும், ராணியும், கல்கியும் பெரிய விசயங்களாக இருந்தன. 

இந்த ஸ்ரீமத் பாகவதம் புத்தக வடிவில் கிடைக்கின்றன. அவையெல்லாம் இணையத்தில் தொகுத்து வைத்தால் என்ன எனும் எண்ணத்தின் விளைவாக இந்த பணியை எடுத்து இருக்கிறேன். மொத்தமாக எழுதினால் கூட எத்தனை வருடங்கள் ஆகும் என தெரியாது. எனது நேரத்தில் இதற்காக தினமும் செலவிடலாம் எனும் எனது எண்ணத்திற்கு அந்த நாராயணரே அருள் பாலிக்கட்டும். 

ஸ்ரீமத் பாகவதம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு எந்தவிதமான ஆவலும் இருக்கப் போவதில்லை. இத்தனை புத்தகங்களை வாங்கி படிப்பார்களா என தெரிய வாய்ப்பும் இல்லை. 

சினிமா பதிவுகள், அனுபவ பதிவுகள், பயண கட்டுரைகள், அறிவியல் பதிவுகள் என எத்தனையோ எழுதி வைத்துவிட்டாகி விட்டது. அந்த பதிவுகள் எல்லாம் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதை நிறுத்தி வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஸ்ரீமத் பாகவதம் என்ற ஒரு அற்புதத்தை வெட்டி ஒட்டுதல் என இல்லாமல் கைப்படவே எழுத இருக்கிறேன். 

எவரோ செய்த அற்புத பணி, நூற்றி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அதை இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் இங்கு எழுதுகிறேன். இந்த முயற்சிக்கு பாலமாக இருக்க போகும் சிவராம சாஸ்திரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

ஸ்ரீமத் பாகவதம் விரைவில் தொடரும்.  


Thursday 8 December 2011

எப்பவுமே சாம்பார் தானா!

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் இருக்கும் தீராத பிரச்சினை சமையல் பிரச்சினை.

கூட்டு குடும்பமாக இல்லாமல் தனிகுடித்தனகாரர்களாக இருந்தால் இந்த பிரச்சினை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

அதிகாலை எழுந்து சமையல் செய்து சாப்பிட்டு செல்லும் நிதானம் எல்லாம் இந்த ஊரில் இல்லை.

சாம்பார், கூட்டு என டிபன் கேரியரில் மதிய சாப்பாடுக்கு தூக்கி செல்லும் வழக்கம் எல்லாம் இங்கே இல்லை.

மாலை வேளையில் வந்து நிம்மதியாக சமைத்து சாப்பிடும் அளவிற்கு நேரமும் இல்லை.

எல்லாம் ஒருவித சோம்பலோ என எண்ணத் தோன்றினாலும் வேலைக்கு சென்று வரும் அலுப்பு, சமையல் பண்ணியதும் அந்த சமையல் பாத்திரங்களை அலச வேண்டும் என்கிற நினைப்பு பாடாய் படுத்தும். ஒரு போனை எடு. இது இது என சொல்லிவிடு. வாசலில் வந்து நிற்கும் சாப்பாடு எனும் வழக்கம் அதிகமாகவே உண்டு. இருப்பினும் அவ்வப்போது வீட்டு சமையலும் உண்டு, வார இறுதி நாட்களில் மனைவியின் கைவண்ணத்தில் அற்புத சாப்பாடு என்றும் உண்டு.

வார வேலை நாட்களில் இருப்பதோ மூன்று பேரு, எதற்கு சமையல் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் வருவது இயல்புதான். தோசையா, இட்லியா? மாவாட்ட தேவையில்லை. அரைத்த மாவே விற்பனைக்கு கிடைக்கிறது. அரைத்த மாவை வாங்கி தோசைக்கு சட்னி அரைத்து சாப்பிடும் முன்னர் சரவண பவனில் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டு பொழுது கழித்துவிடலாம் என்கிற நினைப்பு வரும். ஒரு பர்கர், ஒரு பிச்சா அதோடு கூடிய சிப்ஸ் வாழ்க்கை ரொம்பவே எளிதாக போனது.

இருந்தாலும் நம்ம ஊரு வழக்கப்படி சோறு ஆக்கியும் தீர வேண்டி வரும். அதற்கு என்ன குழம்பு வைப்பது. வேலையில் இருந்து வேகமாக வீடு சென்றுவிட்டால் சிரமம் பாராது சோறு ஆக்கி சாம்பார் வைத்து விடும் வழக்கம் உண்டு. எனக்கு சாம்பார் தவிர இதுவரை வேறு குழம்பு வைத்தே பழக்கம் இல்லை. நான் சமைத்தால் 'எப்பவுமே சாம்பார் தானா' என பையன் கேலி பண்ணும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

சரியென ஒரு நாள் அவனுக்கு அருமையான குழம்பு வைக்கலாம் என மிராவின் கிச்சன் பக்கம் போனேன்.

அங்கே ஒரு கத்தரிக்காய் கார குழம்பு இருந்தது. மிகவும் வசதியாக போய்விட்டது என வீட்டில் என்ன இருக்கிறது என தேடினேன். சிறிய பிஞ்சு கத்தரிக்காய் தேடினேன். இல்லை. பெரிய கத்தரிக்காய் இருந்தது, அதை பிஞ்சு பிஞ்சாக வெட்டி போட்டேன். சின்ன வெங்காயம் தேடினால் பெரிய வெங்காயம் தான் இருந்தது. அதை சின்ன சின்னதாக வெட்டி போட்டேன். பூண்டு இருந்தது. அப்பாடா என நினைக்கும்போதே தக்காளியை காணவில்லை. கடைக்கு சென்று தக்காளி வாங்கும் அளவுக்கு பொறுமை இல்லை. எனவே தக்காளி இல்லாமல் சமைப்பது என முடிவு கட்டினேன்.

தேங்காய் துருவலும் இல்லை, முந்திரியை அரைக்க மனசும் வரல்லை. கறிவேப்பிலையும் காணலை, தனியா தூளும் தனியாவே இல்லை. சோம்பு, உளுத்தம் பருப்பு எல்லாம் எங்கே என தெரியவும் இல்லை. காரக் குழம்பு வைக்க சொன்ன வகையில் பல பொருட்கள் வீட்டில் இல்லவே இல்லை. என்ன செய்வது, இந்த குழம்பு வைத்தே தீர்வது என இறங்கினேன்.

கொஞ்சூண்டு புளியை அதிகமாக தண்ணீரில் கரைத்து வைத்திருந்தேன்.

நல்லெண்ணெய் ஊற்றி கடுகையும், வெங்காயத்தையும் நன்றாக வதக்கினேன். அதோடு கத்தரிக்காய், பூண்டு தனையும் போட்டு வதக்கினேன். காத்திருந்த புளி தண்ணீர்தனை எடுத்து ஊற்றினேன். பார்க்க ரசம் போலிருந்தது. 'வத்தகுழம்பு பொடி' அலமாரியிலே தேமே என இருந்தது. அதை எடுத்து மூன்று ஸ்பூன்கள் போட்டேன். நன்றாகவே கொதிக்க விட்டேன். இரண்டு வத்தலை கிள்ளிப் போட்டேன். இன்னும் ரசம் போலிருந்தது.

என்ன செய்வது என முடிந்தவரை கொதிக்க வைத்துவிட்டு நிறுத்திவிட்டேன். பையனும் வந்தான், இணையதளத்தில் இருந்த படத்தை காட்டி இந்த குழம்பு வைத்தேன் என சொன்னேன். யாரது காஞ்சனா ராதாகிருஷ்ணன் என்றான். சமையல் சொல்லி தரும் அம்மா என்றேன். சிரித்தான். எனது பெயர் போலிருக்கவே யார் எனும் தேடல் அவனுக்கு.

நான் வைத்த குழம்புவையும், காஞ்சனா அம்மா வைத்த குழம்பு படத்தையும் பார்த்தான். 'அந்த குழம்பு போல இல்லையே' என்றான். 'எதோ எனக்கு தெரிஞ்சி வைச்சது' என்றேன்.

சாப்பாடு எடுத்து வைத்து குழம்பு (தண்ணீராகவே இருந்தது) ஊற்றி சாப்பிட்டான். நன்றாக இருக்கிறது என்றான். பாவம் பசி. கொஞ்சம் காரம் அதிகம் என்றான். தயிர் பக்கத்தில் வைத்து கொள் என்றேன். காளான் வறுத்து வைத்திருந்தேன்.

'எப்பவுமே சாம்பார் வைக்கிறேன் என சொல்வாய் அல்லவா, அதற்குதான் இந்த குழம்பு' என்றேன். சாப்பிட்டு முடித்த பின்னரும், அந்த படத்தில் இருப்பதை போல வைத்து இருக்கலாம் என்றான். 'இந்த சாப்பாடு கூட இல்லாமல் எத்தனையோ பிஞ்சு குழந்தைகள் வாடுகிறார்கள்' என எனது வழக்கமான பாடலைப் பாடினேன். 'அதற்காக எப்படி வேண்டுமெனினும் சமைப்பதா' என எதிர் கேள்வி கேட்டான். 'நன்றாக சமையல் கற்று கொள்ள வேண்டும்' என மனதில் உறுதி கொண்டேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மனைவி வந்தார். சட்டியை திறந்து பார்த்தார். என்ன குழம்பு என்றார். கத்தரிக்காய் கார குழம்பு இணையத்தில் இருந்து பார்த்து செய்தேன் என்றேன். 'பேசாம சாம்பாரே வைச்சிருக்கலாம்' என்றார். நான் அசடு வழிந்தேன்.

சாப்பிடு, இன்று வெளியில் சாப்பாடு வாங்கும் எண்ணம் இல்லை என்றேன். சாதம் எடுத்து வைத்து குழம்பினை ஊற்றி சாப்பிட்டார். சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்தேன்.

சாப்பிட்டுவிட்டு நன்றாக இருந்தது என்றார். கார குழம்பு செய்ய அனைத்து வகைகள் இல்லாவிட்டாலும் இருந்தவற்றை கொண்டு அன்போடு சமைத்த அந்த குழம்பு அன்று நிறையவே மணம் வீசிக் கொண்டிருந்தது.

 மிரா கிச்சன் நடத்தும் காஞ்சனா அம்மாவுக்கு நன்றி. 

Tuesday 6 December 2011

போராளி பேரொளி

சமீபத்தில் திரு. விஜய ராஜேந்தர் அவர்களின் பேச்சுதனை கேட்க நேரிட்டது. அந்த பேச்சில் இருந்து அவருக்கும் ஆனந்த விகடனுக்கும் அவரது படம் சம்பந்தமாக மன வருத்தம் என புரிந்து கொள்ள முடிந்தது. எதுக்கு விமர்சனம் எழுதுற, எதுக்கு மார்க் போடுற என ஆனந்த விகடனை பிடி பிடி என பிடித்துவிட்டார். உன்னால ஒரு நல்ல தமிழ் படம் எடுக்க முடியுமா? உன்னால சின்னத்திரையிலதான் எல்லாரையும் அழ வைக்க முடியும், ஒரு படம் எடுத்தியே அது எப்படி இருந்துச்சி என ஏகத்துக்கும் பேசிவிட்டார், ஏசிவிட்டார்.

விமர்சனம் என்பது என்ன? ஒருவரின் படைப்பை, செயலை உண்மையிலேயே மனம் திறந்து குறைகளை மட்டுமே சொல்லாமல் நிறைகளையும் சுட்டி காட்டுவதுதான். பெரும்பாலான விமர்சனங்கள் எப்படி அமைகிறது என்பது அவரவரின் மனோபாவத்தைப் பொறுத்து அமைகிறது. ஒருவர் இப்படி என்பார், மற்றொருவர் அப்படி என்பார். இந்த இரண்டையும் கேட்டுவிட்டு படைப்பை பார்ப்பவர் இப்படி அப்படி என்பார். 

'போராளி' என பேரு வைச்சிருக்காங்களே அப்படின்னு நினைச்சா, நட்பு பற்றிய கதை என அரசல் புரசலாக தெரிய ஆரம்பித்தது. பொதுவாகவே முழு விமர்சனங்கள் படம் பார்க்கும் முன்னர் நான் படிப்பது இல்லை. அதைப்போல முழு விமர்சனங்கள் படத்தைப் பற்றி நான் எழுதுவதும் இல்லை. ஏனெனில் மேலே சொன்ன திரு. விஜய ராஜேந்தர் அவர்களின் வரிகள் தான். 

போராளி என்பவர் யார்? போராளி என்பவர் சொந்த பந்தம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கமால் தனது சமூகத்திற்காக பாடுபடுவர். அதாவது சொந்தங்களும் அதில் உள்ளடக்கம். இந்த போராளிகள் தனக்கென குடும்பத்தை வைத்து இருந்தாலும், இவர்களது போராட்டம் எல்லாம் சமூக அவலங்களை களை எடுப்பதுதான். இவர்களுக்கு தனது சமூகமே அவர்களது குடும்பம்.  இந்த போராளிகள் ஒரு இலக்கோடு தங்களது பயணத்தைத் தொடங்குவார்கள். அந்த இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள். இந்த போராளிகள் தனி தனி குழுக்களாக செயல்படுவார்கள். இந்த போராளிகளுக்கு என ஒரு தலைவர் இருப்பார். இப்படிப்பட்ட போராளிகளால் சமூகங்கள் விழிப்புணர்வு அடைவது உண்டு. ஆனால் இந்த போராளிகளை விட தொழிலாளிகளே மேல் எனும் கருத்து நிலவுவது உண்டு. தொழிலாளிகள் தங்களது அடிமைத்தனத்தில் இருந்து தங்களை தாங்களே மீட்க தெரிந்து கொண்டால் இந்த போராளிகள் உருவாகும் சாத்தியம் இல்லை. 

சரி இந்த திரைப்படத்திற்கு வருவோம். படத்தில் சில பல காட்சிகள் பார்க்கும்போது இயக்குனரை, படக் குழுவினரை பாராட்ட வேண்டும் என மனம் சொல்லிக் கொண்டது. இப்படியெல்லாம் படம் எடுப்பதன் மூலம் சமூகத்தில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்த முடியாதா என்கிற சின்ன அபிலாசை இந்த இயக்குனருக்கு இருக்கலாம். இந்த படத்தில் காட்டப்படும் கதாநாயகரைப் போல ஆங்காங்கே ஓரிரு மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறருக்கு உதவும் குணம். 

அன்பிற்காக, அரவணைப்பிற்காக ஏங்கும் மனிதர்கள் இவ்வுலகில் மிகவும் அதிகமாகவே உண்டு. நான் வேலைக்கு செல்லும் வழியில் சுரங்க பாதையில் எப்போதும் உறங்கி கொண்டிருப்பது போன்று இருக்கும் நபர்களை காண்பது உண்டு. ஏதாவது சில்லறை தாருங்கள் என கேட்பார்கள். அவர்கள் மிகவும் உடல் வலிமையுடனே காணப்படுவார்கள். மனதில் இவர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் என அவர்களை சட்டை செய்யாமல் சென்று விடுவது உண்டு. வீடு இல்லாதவர்களுக்கு என ஆதரவு கரம் இந்த அரசு அளித்தாலும் இவர்கள் உழைக்க முயற்சி செய்வது இல்லை, அல்லது உழைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுவது இல்லை. எப்படித்தான் இந்த குளிரிலும் இவர்களால் இப்படி வாழ முடிகிறது எனும் ஆச்சரிய குறி எழுந்துவிட்டு போகும். 

நான் கடவுள் எனும் திரைப்படம் எப்படி ஒரு அவல நிலையை சுட்டி காட்டி அதற்கு ஒரு முட்டாள்தனமான தீர்வு சொன்னதோ, அதை விட பல மடங்கு மேலாக நல்லதொரு தீர்வை இந்த படத்தில் சொல்வதாகவே தெரிகிறது. ஆனால் நட்பு என்பதை தூக்கி நிறுத்துகிறோம் என்கிற பெயரில் அதே பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுத்து குடும்பம், சொந்தங்களை கொச்சை படுத்தி இருக்கிறார்கள். கொச்சை படுத்தி இருக்கிறார்கள் என்பதை விட நடப்பதை காட்டி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 'கிட்ட இருந்தால் முட்டப் பகை'

குடும்பங்கள், உறவினர்கள் என்றாலே சொத்து சிக்கல்கள் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. இது காலம் காலமாகவே நடைபெற்று வரும் ஒரு பொல்லாத விசயம். பணம் இது ஒன்றுதான் பிரதானம். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாகவே செல்கிறது, அதுவும் நகைச்சுவையுடன் நளினம் ஆடுகிறது. 'தொட்டதெற்கெல்லாம் குற்றம் சொல்லும் மனைவி' 'குடித்தும் தன்னிலை மறவா பாத்திரம்' மிகவும் அழகாகவே நகர்கிறது. படத்தின் கருவில் ஒரு மாபெரும் குறை இருக்கிறது! எவர் எவரையோ நல்வழி படுத்தும் கதாநாயகர் தனது சொந்தங்கள் மீது வெறி கொள்வது எதற்கு. சொந்தங்களின் பேராசையை புரிந்து கொண்டு விலகி முன்னரே விலகி இருந்தால் பல இழப்புகள் நேர்ந்து இருக்காது. இது போன்ற சொந்தங்களின் உறுதியை வலுப்படுத்தும் கதைகள் வந்திருக்கின்றன என்பதாலும், தான் கொண்ட நட்பு உயர்ந்தது என்பதாலும் அதற்காக மட்டுமே இந்த அன்பு உபயோகப்படுவதாக கட்டம் கட்டி இருக்கிறார்கள். 'இன்னா செய்தாரை ஒறுத்தல்'

அன்பு, அரவணைப்பு இல்லாத பட்சத்தில் மனநிலை பிறழ்வதற்கான வாய்ப்புகள் அனைவருக்குமே சாத்தியம். இந்த அன்பும், அரவணைப்பும் மனிதர்களின் மனதில் பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தவறு செய்யும் குழந்தையை அடிப்பதை காட்டிலும், அன்புடன் பேசும்போது ஒரு பாதுகாப்பாகவே அந்த குழந்தை உணர்கிறது. மனம் விட்டு பேசுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். எவராவது பிரச்சினை என சொல்லும்போது அவர்களின் வலியை நீங்கள் முதலில் உணர கற்று கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் பிரச்சனைகளை பற்றி பேசினாலே பெரும் பிரச்சனைகளை உருவாக்குபவர்களாகவே நாம் இருக்கிறோம். மேலும் ஒரு திட்டமிட்ட மனநிலை. நான் இப்படித்தான் என்கிற போக்கு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என இல்லாத அக்கறை. 

இதற்கு காரணமாக அறிவியல் விசயங்கள் கூட உண்டு என்கிறார்கள். அதாவது செரோடொனின் எனும் மூலக்கூறானது நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவுதாக கண்டுபிடிக்க பட்டு உள்ளது. 

             

நாம் சந்தோசமாக இருக்கும்போது இந்த மூலக்கூறு நரம்புகளில் இருந்து வெளிப்படுகிறது. இதன் அளவு குறையும் போது நமக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டு அதற்காகவே மன அழுத்தம் தனை குறைக்க செய்யும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல பில்லியன் டாலர்கள் விற்பனை செய்தது. அது ப்ரோஜாக் எனப்படும் மருந்து ஆகும். இந்த ப்ரோஜாக் இந்த செரோடொனின் அளவை அதிகரிக்க செய்து மனதை மகிழ்வாக வைக்க உதவும் என்கிறார்கள்.  


இதற்காகவே நமது முன்னோர்கள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என சொல்லி வைத்தார்கள். இந்த வாசகமும் படத்தில் வருகிறது. சினிமா என்பதால் ரசனைக்கு பஞ்சமில்லை. ஆனால் போராளி சமூகத்திற்காக போராடுபவன். திருந்தும் அல்லது திருத்தப்படும் சில மனிதர்கள் மட்டுமே சமூகம் ஆகிவிட முடியாது!