Monday 14 November 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? வக்கத்தவனும் போக்கத்தவனும்

தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் மனிதர்கள் கல்தனை பல வேலைகளுக்கு உபயோகப்படுத்தி வந்தார்கள் என்பதை அறியலாம். இந்த கற்காலம் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வருடங்கள் வரை மனித வாழ்வில் பெரும் இடம் பெற்று உள்ளது. தற்போது கூட இந்த கல்லானது மனித வாழ்வில் பெரும் பங்கு வகித்தாலும் அவை உபயோக பொருளாக இல்லாமல் உபய பொருளாக மாறிவிட்டது. கல்லிலே கலைவண்ணம் கண்டான் என சிலாகித்து பாடும் வண்ணம் இந்த கல் பெருமை பெற்றது. சில வேதிவினை ஆராய்ச்சிகள் மூலம் ஒரு கல்லானது எப்படி இருக்கிறது, எதற்காக உபயோகப்படுத்தபட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். சில கல்லின் அமைப்புகள் அவை பல விசயங்களுக்கு உபயோகபடுத்தபட்டு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.


                                                         நன்றி : விக்கிபீடியா   


விலங்குகளை வெட்டி உண்ணும் பழக்கம் உடையவராக இந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இரும்பு, தாமிரம் போன்ற தகடுகள் உபயோகத்தில் இல்லை. எனவே இந்த கல்லினை கூறு செய்து அதை ஆயுதமாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அன்றைய மனிதர்கள் மட்டுமா கல்லினை ஆயுதமாக உபயோகம் செய்தார்கள்? இன்று கூட கல்லினை எடுத்து வாகனங்களை உடைப்பது, அடுத்தவரின் மண்டையை உடைப்பது என கல்லினை இன்றைய மனிதர்களும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.

இந்த கல்லினை ஆயுதமாக உபயோகபடுத்தியது மட்டுமில்லாமல் இந்த கல்லை தங்களுக்கு தரும் ஒரு பாதுகாப்பு இடமாகவும் உபயோகப்படுத்தி வந்து இருக்கிறார்கள். மரக்கிளைகள் கூட இந்த கால கட்டத்தில் ஆயுதமாக இருந்து இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் மண்ணோடு மண்ணாக மக்கி இன்றைக்கு அவை நிலக்கரியாகவோ, வாயுவாகவோ, எண்ணையாகவோ மாறி இருந்து இருக்கலாம். எனவே தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த தடயங்கள் எதுவும் கிடைக்காமல் போனது ஆச்சரியம் இல்லை.

இந்த கல் மூலம் பல விசயங்களை செய்த இந்த காட்டுமிராண்டி நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்த கல்லில் இருந்து எப்பொழுது உலோகங்களை  கண்டு கொண்டனரோ அப்பொழுது இந்த கற்காலம் மறைந்து உலோக காலம் தொடங்கியது. அந்த கால கட்டத்திற்கு சற்று முன்னர் தான் விவசாயம் எனும் முறையை இந்த மனிதர்கள் கற்றறிந்து இருந்தார்கள். பன்னிரண்டு ஆயிரம் வருடங்கள் முன்னர் தான் இந்த விவாசய முறை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறை படுத்தப்பட்டது. அப்பொழுது அவர்களிடம் இருந்த காட்டுமிராண்டி நாகரிகம் குறையத் தொடங்கியது. அதோடு மட்டுமில்லாமல் முதன் முதலில் தாமிரத்தை கல்லில் இருந்து பிரித்தெடுக்கும் முறையை எட்டாயிரம் வருடங்கள் முன்னர் மனிதர்கள் கண்டறிந்தார்கள். தாமிர கத்தி போன்றவை உருவானது. அதற்கு பின்னர் தாமிரத்தையும் பிற தனிமங்களுடன் கலந்து உருவாக்கும் தன்மையை கண்டறிந்து இருக்கிறார்கள்.

இந்த மனிதர்களுக்கு எந்த வாத்தியார் சொல்லி கொடுத்தார்? இந்த மனிதர்களுக்கு எந்த காவல்காரர் காவல் இருந்தார்? எதன் காரணமோ வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை என சொல்லி வைத்தார்கள். நாம் கற்று கொள்ள எந்த ஆசிரியரும் அவசியம் இல்லை, நம்மை பாதுகாத்து கொள்ள எந்த போலிசும் அவசியம் இல்லை. ஆனால் நமது அறிவு வளர்ச்சியானது ஆசிரியர்களை கொண்ட பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் ஊருக்கு ஊர் காவல் நிலையங்களை உருவாக்கி வைக்கச் சொல்லிவிட்டது. இந்த வாழ்க்கை சீரழிவுக்கு உப்டடுத்தபட்ட நாம் காட்டுமிராண்டி நாகரிகத்தை விட கேவலமான நாகரிகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் மறுத்தாலும் நான் மறுக்கப் போவதில்லை.

புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த பலர் பள்ளிக்கூடங்களில் இவைகளை கற்றுக்கொண்டதில்லை. பள்ளிக்கூடங்கள், இவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்றுதான் கற்றுத் தருகிறது. எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என எந்த பள்ளிக்கூடமும் கற்றுத் தருவதில்லை. கற்றுக் கொள்தல் என்பது அவரவர் ஆர்வத்தை உள்ளடக்கி உள்ளது. எண்களை கண்டுபிடித்தவருக்கு எந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்? இதோ இந்த கணினி எப்படி உபயோகிப்பது என்பது குறித்து எந்த ஆசிரியரிடம் நாம் கற்றுக் கொண்டோம்? ஒருவர் உருவாக்குகிறார், அதன் பயனை பலர் அனுபவிக்கிறோம். அந்த கற்றுக் கொள்தலை பிறருக்கு சொல்லி தருகிறோம், அப்படி சொல்லித் தருவதால் நாம் ஆசிரியர் ஆகிறோம், இதன் காரணமாகவே கல்வி ஒரு வியாபார பொருளாகிப் போனது.

கொலை, கொள்ளை, திருட்டு என்பதெல்லாம் காட்டுமிராண்டி நாகரிகத்தில் இல்லாமல் இல்லை. அப்பொழுது பணம் என்பது இல்லாமல் போனதன் காரணமாக, தனது உடைமைகள் என எதையும் பாதுக்காக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாததன் காரணமாக அவையெல்லாம் பெரிய விசயமாகவே இல்லை. மனிதர்களை கொன்று தின்னும் நரமாமிசர்கள் இருந்தார்கள் என்கிறது வரலாறு, இன்னும் ஆங்காங்கே இருந்து தொலைக்கிறார்கள் எனும் செய்தியும் உலவுகிறது. இந்த காட்டுமிராண்டி நாகரிகத்தில் பலியிடுதல் எனும் கொடுமைகள் இல்லை. கொன்றால் அவை உணவு என்றுதான் இருந்தது. இப்பொழுது திருடர்கள், அவர்கள் திருட்டுக்கு தண்டனை, தண்டனை கொடுக்க சட்டம், அதை பாதுகாக்க சட்ட நிபுணர்கள், காவல் அதிகாரிகள். அறிவு வளர வளர பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும், ஆனால் பயம் அதிகரித்துப் போனது நம்மிடம்.

இரும்பு போன்றவைகளை உபயோக செய்யும் அறிவு கிட்டத்தட்ட இரண்டாயிரத்து முன்னூறு வருடங்கள் முன்னரே உருவானது. அந்த இரும்பு உலோகம் இன்று வீச்சருவா, வெட்டருவா, வேல், கத்தி என பரிணாமம் கொண்டது. இந்த உலோகங்களின் தன்மையினால் அவை துப்பாக்கிகளாகவும், பீரங்கிகளாகவும் பரிணமித்தது. வானில் பறக்கும் விமானம் கூட ஆயுதமாக மாற்றப்பட்ட கேவலமான நாகரிகம் நம்முடையதுதான். அந்த கேவலத்தை செய்ய ஒரு மதம் காரணமாக காட்டப்பட்டது காட்டுமிராண்டித்தனத்தினை விட மிகவும் கேவலமானது.

வாழ்க்கையில் சீரழிய முட்டாளாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அறிவினை முட்டாள்தனமாக உபயோகபடுத்த தெரிந்தால் அது போதும்.

முட்டாள்தனமான அறிவு குறித்து தொடர்வோம்.

---------

To earn money thorough Bingo Liner, click here

3 comments:

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துகள்.

கோவி.கண்ணன் said...

//தனது உடைமைகள் என எதையும் பாதுக்காக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாததன் காரணமாக அவையெல்லாம் பெரிய விசயமாகவே இல்லை.//

:)

பூட்டுகளையும் கள்ள சாவிகளையும் செய்து கொண்டு நாம் நாகரீக மனிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். முரண்பாடு தானே.

#நல்லப் பதிவு # நல்ல கருத்துகள்

Radhakrishnan said...

நன்றி ஐயா.

நன்றி கோவியாரே.