Friday 11 November 2011

தாம்பத்ய வாழ்க்கையும் தத்து பிள்ளையும்

பாரதியாரின் கவிதை வரிகளை கண்கள் மேய்ந்து கொண்டிருந்தது. 

பாயுமொளி நீ யெனக்கு பார்க்கும்விழி நானுனக்கு
தோயுமது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு 
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம்; 
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!   

தொடர்ந்து அந்த கவிதை வரிகளை அசைபோட்டுக் கொண்டிருந்தபோது மனதுக்குள் சின்ன வரி ஒன்று முளைத்திருந்தது. 

காலமடி நீ யெனக்கு காதலடி நானுனக்கு

சந்தம் சரியாகவே அமைந்து இருந்தது போலிருந்தது. ஏதேனும் இலக்கணப் பிழைகள் இருக்குமோ என அணி பிரித்துப் பார்க்க தோணவில்லை. இந்த சின்ன வார்த்தைகளை பாரதியாரின் இந்த  கவிதை வரிகளில் தேடியபோது தென்படவில்லை. கவிதையினை முடிக்கும் தருவாயிற்கு வந்து சேர்ந்தது கண்கள். 

ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

பாரதியாரின் இந்த கவிதையின் கடைசிவரிகள் கண்டபோது பாவ்லோவ் எனும் ஒரு ஆராய்ச்சியாளனின் சோதனை மனதில் நிழலாடியது. பாவ்லோவ் எனும் ஆராய்ச்சியாளன் தான் வளர்த்த நாய்க்கு தினமும் காலையில் உணவு வைப்பானாம். உணவு வைத்தவுடன் ஒரு மணியை ஒலிப்பானாம். உணவினை கண்டதும் அந்த நாய்க்கு எச்சில் ஊறுமாம். இவ்வாறு தொடர்ந்து சில தினங்கள் செய்த பாவ்லோவ் ஒரு தினம் உணவு வைக்காமல் மணியை மட்டும் ஒலித்தானாம். அந்த மணி ஓசையை கேட்டதும் நாயின் வாயில் எச்சில் ஊறியதாம். இந்த சோதனையை சில முறை செய்து ஊர்ஜிதப்படுத்திய பாவ்லோவ் இதை நரம்புகளின் தன் உணர்ச்சிகள் என வரையறுத்தானாம்.

இந்த சோதனையை போலவே தன் காதலியை நினைக்கும்போது மனதில் இனிய சுவை ஏற்படுவதாக, தனது கற்பனை காதலி என்பவர் ஊனமற்ற நல்லழகு பொருந்தியவராக இருப்பவர் எனும் சாதாரண மனிதனின் கற்பனை மகாகவியின் கவிதை வரியில் தென்பட்டது.  

காலமடி நீயெனக்கு காதலடி நானுனக்கு

அர்த்தம் கொண்டா இந்த வரிகள் என்னுள் முளைத்தன?! இந்த வரிகள் முளைத்ததும் அர்த்தம் தேடிச் சென்றேனா என்பதே  புரியாதபோது மீண்டும் சில வரிகள் வந்து முளைத்தன. இசையின் சந்தத்திற்கு ஏற்ப வரிகள் அமைத்துக் கொள்வது சற்று எளிதுதான்.

கோலமடி நீயெனக்கு கெஞ்சுமொழி நானுனக்கு

தாம்பத்ய வாழ்க்கை. உறவுகளில் ஒழுக்கம் வேண்டும் என்பதற்காக, ஒருவனுக்கு ஒருத்தி என்று   உணர்த்தப்பட்ட வாழ்க்கை. திருமணம் என்பது இந்த தாம்பத்ய வாழ்க்கைக்கு அளிக்கப்பட்ட ஒரு அங்கீகாரம். இஷ்டப்பட்டவருடன் இணைந்து வாழ்ந்து விட்டு, கஷ்டம் மனதில் வரும்போது பிரிந்துவிடலாம் என்பதை மறுபரிசீலனை செய்ய சொல்லும் வாழ்க்கை. இந்த தாம்பத்ய வாழ்க்கையின் உன்னதம் குறித்த சிந்தனை அதிக அளவில் எழுவதில்லை. 

காமத்தின் இச்சை தணிக்கவோ, உடலோடு உடல் கொள்ளும் உறவுக்காகவோ அமைந்தது அல்ல இந்த தாம்பத்ய வாழ்க்கை. திருமணம் என்பது தேவையற்ற ஒன்று, ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழலாம் என்பதுமாய், ஒரு குடும்பம் என்றால் என்ன என்கிற உணர்வு குறைந்து போய்விட்ட இக்கால சூழலில் இந்த தாம்பத்ய வாழ்க்கை குறித்த சிந்தனை அதிக அளவில் எழுவதும் இல்லை. 

மோகமடி நீயெனக்கு முள்ளுமடி நானுனக்கு 

மனதோடு உடலும் சேர்வதுதான் தாம்பத்ய வாழ்க்கை. ஒருவரின் ஒருவர் உணர்வை அறிந்து, இருவருக்குமாய் சேர்ந்து ஏற்படுகின்ற உணர்வில் வருவதுதான் பேரின்பம். உணர்வற்ற நிலையில் ஒருவரும், தன் உணர்வை தீர்க்க வேண்டிய உறுதியில் மட்டுமே ஒருவருமாய் நடந்து கொள்கின்ற முறை  சரியான முறையும் அல்ல. உடலின் இச்சை தீர்க்க வேண்டி பரத்தையர் கூட்டம் நாடும் உடலைப் போன்றே காம இச்சையின் பொருட்டு கற்பனை உலகில் ஆடும் மனம் கொடியது. 

திருமணம் முடிந்த சில மாதங்களில் அந்நியோநியத்தை வெளிப்படுத்த ஒரு முத்திரையாய் குழந்தை. பிடிக்காமலே ஆடவரும், பிடிக்காமலே பெண்டிரும் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட பெற்றுக் கொள்வதற்காக இந்த மண்ணில் வந்து விழுந்த குழந்தைகள் ஏராளம். இந்த குழந்தைகளின் வாழ்விற்காக போராடும் போராளிகளாய் மாறியபின்னர் தாம்பத்ய வாழ்க்கை ஒரு சம்பிராதயமாகிப் போகிறது. 

காமமடி நீ யெனக்கு, குழந்தையடி நானுனக்கு 

இந்த குழந்தை பெற்றுக் கொள்தல் வரம்.  இந்த வரம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. மலடி என்ற சொல், மங்கையருக்கு மழலைச் செல்வம் வாய்க்காத தருணத்தில் வந்து வாய்க்கின்ற ஒரு பெயர். அறிவியல் அறிவு குறைந்த கால காரணத்தினாலும், ஆடவன் வலிமை உடையவன் என்கிற ஆணவத்தினாலும் மலடன் என்ற சொல் முளைக்காமலே போனது.  'ஆண்மையற்றவர்' என்பதை வீரத்திற்கு சேர்த்துப் பொருத்திப் பார்த்தது உலகம். 

இன்றைய அறிவியல் வளர்ந்த சூழலில் எப்படி குழந்தை பிறக்கிறது என்பது குறித்த சிந்தனை பன்னிரண்டு வயது குழந்தைக்கும் கல்வி சொல்லித் தரப்படுகிறது. கற்றுக் கொள்பவரும், கற்றுத் தருபவரும் முறையோடு இருந்து கொண்டால் கற்றுக் கொள்வதில் தவறில்லை. காமத்தில் குரூரம் இல்லாதபோது காம உணர்வின் தலைவன் மன்மதனும், காமனும் இலக்கியங்களில் போற்றப்படும் தெய்வமாகிறார்கள். 

இந்த குழந்தை பிறப்புக்கு என பெண்களில் ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஷ்டீரோன் மட்டுமல்லாது, FSH (Follicular Stimulating Hormone), LH (Leutinising Hormone) முக்கிய பங்கு வகிக்கிறது. வயதுக்கு வந்துவிடுதல் என்பதன் அடையாளமாய் ஆணுக்கு குரல் மாற்றமும், அங்கங்களில் அங்கங்கே முடி வளர்வதுமாய் இருந்திட, பெண்ணுக்கு அடையாளமாய் அங்கத்தில் சில மாற்றமும், குரல் மாற்றமும் , மாதவிடாய் எனப்படும் ரத்த வெளியேற்றமும் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் பத்து பன்னிரண்டு வயதுகளில் இந்த ஹார்மோன்களால் ஏற்படுகிறது. 

முட்டை செல்கள் உருவாக்கிட ஈஸ்ட்ரோஜென், FSH (Follicular Stimulating Hormone) பெரும் உதவியாய் இருக்கிறது. மாதவிடாய் தொடங்கி பதினான்கு நாள்களில் LH (Leutinising Hormone) உதவியின் மூலம் இந்த முட்டை செல்களானது முட்டைப்பையில் (ovary) இருந்து வெளிப்பட்டு (oviduct) கருக்குழலில் பயணிக்கின்றது. கருத்தரித்தல் நடைபெறாத பட்சத்தில் ப்ரோஜெஷ்டீரோன் அளவு குறைந்து ரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது. இப்பொழுதெல்லாம் சுத்தம் பற்றிய விழிப்புணர்வும், இந்த மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்த வேண்டி வாங்க சொல்லும் துணி உறை விளம்பரங்களும் அதிகரித்து, 'வீட்டுக்கு விலக்காகி இருக்கேன்' என தனியாய் எவரும் போவதில்லை. 

இந்த கருக்குழலில்தான் முட்டை செல்லும், விந்து செல்லும் இணைந்து கருத்தரித்தல் நடக்கிறது. கருத்தரிக்கப்பட்ட முட்டையானது பயணித்து கருப்பை(uterus)தனை வந்து அடைகிறது. இப்பொழுது ரத்த நாளங்கள் உடைந்து போகாமல் தேவையான உணவுப் பொருட்கள் கிடைத்திட குழந்தை உருவாகி கருப்பையில் வளர்கிறது. இப்படி உருவாகும் குழந்தையை கடமைக்காக பெற்றுக் கொள்தல் என்பதும், காம இச்சையின் காரணம் மட்டும் கொண்டே உருவாக்கி அந்த குழந்தையை பேணி காக்காமல் உலகில் அல்லல்பட விடுவது எவ்விதத்தில் நியாயம்.  

'கர்வமடி நீ யெனக்கு, ஆர்வமடி நானுனக்கு' 

இந்த குழந்தையை பெற இயலாமல் போராடும் தம்பதிகள் அதிகம் உண்டு. பெண்ணின் கருவாயில் ஏற்படும் அடைப்பு, ஆணின் விந்துகுழாயில் அடைப்பு போன்றவைகளால் பெரும்பாலும் இயற்கையாக கருத்தரித்தல் நடைபெற வாய்ப்பில்லாமல் போகும். கருப்பையின் பலவீனம் கூட முக்கிய காரணமாகவும்  அமைகிறது. இத்தனை வருஷம் ஆச்சா? இன்னுமா குழந்தை பெத்துக்கிரலை? ஒரு குழந்தை போதுமா? இன்னொன்னு பெத்துகிறது? போன்ற வாக்கியங்கள் சர்வசாதாரணம். 

உடலுக்குள் கருத்தரித்தல் நடைபெற இயலாத பட்சத்தில் உடலுக்கு வெளியே கருத்தரிக்கும் முறையானது invitro fertilisation (IVF) கையாளப்பட்டு கருவினை பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையை உருவாக்குவது இன்றைய சூழலில் அதிகரித்தாலும் இந்த முறைக்காக ஆகும் செலவுகள் அதிகம், (வெற்றி சதவிகிதமும் குறைவு, பக்க விளைவுகளும் அதிகம்,) மேலும் இந்த சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்படும் தம்பதிகள் பெரும்பாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். 

வாடகைத் தாய், எவரோ ஒருவரின் முட்டை செல், விந்து செல் மூலம் குழந்தை பெறுதல்  என்கிற அளவுக்கு எல்லாம் உலகம் முன்னேறிவிட்டது. செல்வதுக்குள் எல்லாம் செவிச்செல்வம் அச்செல்வம் மழலைச் செல்வம் என்றாகிப் போனது. குடும்பஸ்தன் என்பற்கான ஒரு அடையாளமாகவே இந்த சந்ததிகள் விளங்குகிறார்கள். 

'தேர்வுமடி நீ யெனக்கு, தீர்வுமடி நானுனக்கு' 

பெண் பார்த்து திருமணம் செய்த நாட்கள் என்பது போய் எப்படிப்பட்ட பிள்ளை வேண்டும் என்கிற அளவுக்கு, கருவில்தனிலே எந்த வியாதி இருக்கிறது என்பதை முதற்கொண்டு தீர்மானித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவ முறைகள் அதிகரித்துவிட்டன. இதை கருத் தேர்வு (embroyinic screening) என அழைக்கலாம். பெண்ணுக்கு என்ன குரோமோசோம்கள், ஆணுக்கு என்ன குரோமோசோம்கள் என தீர்வை கண்டபின்னர் 'பொட்ட பிள்ளைய பெத்துட்டே' என பெண்ணை திட்டும் காலம் போய்,  பெண் பிள்ளைக்கு ஆண்தான் காரணம் என சட்டம் பேச வாய்ப்பு வந்துவிட்டது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிற காலம் பழுதாகிப் போகுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. 

''என்னங்க, நமக்குன்னு ஒரு குழந்தை இருக்கு. இன்னொரு குழந்தை பெத்துக்கிறதை விட ஒரு குழந்தைய தத்து எடுத்துகிரலாமா?'' வார்த்தைகள் வீரியமாய் வந்து விழுந்தன. 

''எதற்கு தத்து எடுக்க வேண்டும்?'' வார்த்தைகளில் கோபம் சிதற எத்தனித்தது. 

''எனக்கு பெண் குழந்தை ஆசையாய் இருக்கிறது, நாம் ஒன்று பெற்றுக் கொள்ள நினைத்து அதுவும் ஆணாக பிறந்துவிட்டால் என்ன செய்வது?'' வார்த்தைகளில் மென்மையான வலி தெரிந்தது. 

''எப்படி தத்து எடுப்பாய்? குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செல்வாய். அதில் எந்த குழந்தை அழகாக இருக்கிறது என கண்களால் அளவு எடுப்பாய். எந்த குழந்தை அறிவாக இருக்கிறது என தேர்வு ஒன்று வைப்பாய். அத்தனை குழந்தைகளில் ஒரு குழந்தை ஒன்றை உனது மனதுக்குப் பிடித்தது போல எடுத்து வருவாய். அத்தனை குழந்தைகளையும் ஏக்கம் கொள்ள செய்துவிட்டு ஒரு குழந்தையை மட்டும் தனியே எடுத்து வருவது சரியாகவே எனக்குப் படவில்லை.  தத்து எடுப்பதாக இருந்தால் மொத்த ஆதரவற்றோர் குழந்தை இல்லத்தை தத்து எடு'' மனதில் உறுதியாய் இருப்பது சரியோ தெரியவில்லை. 

''ஒரு குழந்தையை வளர்க்கத்தான் தத்து எடுக்க சொன்னேன்'' வார்த்தைகள் வலுவிழந்து இருந்தன. 

இந்த தத்துப் பிள்ளையும், மருத்துவ முறையால் தேர்வு செய்யப்படும் பிள்ளைக்கும் சின்ன வித்தியாசம் மட்டுமே உண்டு. குழந்தைகள் பெற இயலாத தம்பதிகள் இந்த தத்து எடுக்கும் முறைக்கு செல்ல பயப்படுகிறார்கள். சொந்த குழந்தை போல வருமா என்கிற உணர்வுடன் வாழ்வதாகவே சொல்கிறார்கள். ''உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினார்கள்'' என குழந்தையிடம் சொன்னால் பெற்ற தாய் எங்கே என மனம் அல்லாடத்தான் செய்யும். அதைப்போலவே தத்து எடுத்துக் கொண்டாலும் மனம் விலகிய வண்ணம் இருக்கும் என்பதை உறுதிபடுத்த வழியில்லை. 

'என்ன தவம் செய்தனை, தாயே யசோதா 
என்ன தவம் செய்தனை
பரபிரம்மம் உன்னை அம்மாவென அழைக்க 
என்ன தவம் செய்தனை'

பல வழிகளில் முயன்று குழந்தை பெறுகின்ற வழி அடைக்கப்பட்டால் காலத்தை வீணாக்காமல் ஒரு குழந்தையாவது தத்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென குழந்தை இருந்தாலும் எவரோ பெற்று விட்டார்கள் நமக்கென்ன தலையெழுத்தா என்று இருக்காமல் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம்  ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வுலகம் குழந்தைகளின் கையில் உள்ளது. 

'நாம குழந்தைய தத்து எடுத்துகிரலாம்' வார்த்தைகள் வண்ணமிட்டுக் கொண்டிருந்தன. 

'நிசமாவா சொல்றீங்க' சந்தோசமாக விரிந்த கண்களில் 'அம்மா' என எங்கோ ஒரு குழந்தையின் அழுகுரல் ஒலிக்கக் கேட்டு, சில வரிகள் முளைத்த மனதில் ஆனந்தமும், பாரதியாரின் கவிதைகளை மேய்ந்த கண்களில் கண்ணீரும் எட்டிப் பார்த்தது. காலமடி நீ யெனக்கு, காதலடி நானுனக்கு.

வானமடி நீ யெனக்கு, வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு 
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

2 comments:

G.M Balasubramaniam said...

எனக்குத் தெரிந்த ஒரு தம்பதி குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தபோது அந்தப் பெண் தானிருந்த உயர்பதவியை உதறிவிட்டு இரட்டைக் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறார். அவர்களைக் காணும்போதெல்லாம் மனதில் ஒரு நிறைவும் நெகிழ்வுமுண்டாகிறது.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. தாங்கள் சொன்ன செய்தி நெகிழ்வாக இருக்கிறது.