Monday 7 November 2011

புத்தகங்களும் ஆராய்ச்சி கனவுகளும்

 நுனிப்புல் பாகம் இரண்டு தயாராகி சில வருடங்கள் ஆகிவிட்டது. அந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என நண்பர் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களிடம் சென்ற வருடம் விசாரித்தபோது 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' சிறுகதை தொகுப்பு இன்னமும் அப்படியே இருக்கிறது, நீங்கள் அனுப்பி வைத்த நுனிப்புல் பாகம் ஒன்று நாவல் இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு அறை எல்லாம் புத்தகங்களாக நிரம்பி வழிகின்றன என்றார். சரி என்ன செய்வது சற்று தாமதிக்கலாம் என விட்டுவிட்டேன். சில பல காரணங்களால் வலையுலகத்தில், இணைய உலகத்தில் பழகிய பலர் தொடர்பில் தற்போது இல்லவே இல்லை. இதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என நான் நினைத்தாலும், என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என எவருமே நினைக்கவில்லை என்பது சற்று வித்தியாசமாகவே உணர முடிந்தது. வாழ்க்கை புரிந்து போனது. 

சரி, தம்பி செல்வமுரளியிடம் விசாரிப்போம் என சில வருடங்கள் முன்னர் முதலில் கேட்டபோது, நீங்கள் எந்த புத்தகத்தையும், எந்த பதிகப்பதார் மூலமாவது வெளியிடுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதையை நீங்கள் எழுதி முடித்தபின்னர் எனது பதிப்பகத்தின் மூலம் தான் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். சரி என ஒப்புதல் தந்தாலும் இன்னமும் எழுதி முடிக்கவில்லை. இதில் பல விசயங்கள் இணைத்து, கழித்து பின்னர் வெளியிட வேண்டும். எனவே இன்னும் சில வருடம் கால தாமதம் ஆகலாம். 

எனது மகன் பெறும் 'ப்ளாக் பெல்ட்' கராத்தே சான்றிதழ் வழங்கும் விழா அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடக்கலாம். அதற்கு எனது புத்தகம் ஒன்றை வெளியிடலாம் என கராத்தே மாஸ்டர் சில மாதங்கள் முன்னர் சொன்னபோது எனக்கு மனதில் இருந்த இரண்டு கதைகள் ஒன்று நுனிப்புல் பாகம் இரண்டு, மற்றொன்று அடியார்க்கெல்லாம் அடியார். நுனிப்புல் பாகம் இரண்டு வெளியிட்டால் தான் நுனிப்புல் பாகம் மூன்று அடுத்த வருடம் எழுதலாம் என்கிற யோசனை வேறு. என்ன செய்வது?

ஒரு நல்ல பதிப்பகம் வேண்டும், புத்தகங்களை மட்டும் வெளியிட்டு விட்டு அத்தோடு நிறுத்திவிடாமல் அதை நல்ல முறையில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை பல தொண்டு நிறுவனங்களுக்கு தர வேண்டும். இதை சிரத்தையுடன் செய்வது யார்? எழுதும் ஆசிரியன் எனக்கே இந்த விளம்பர புத்தி இல்லாமல் இருந்தால் எவரைப் போய் குற்றம் சொல்வது? ஆங்கில நாவல் எழுத வேண்டும் என ஆவலுடன் தொடங்கிய எழுத்து ஒரு அத்தியாயம் கூட தாண்டாமல் அப்படியே இருக்கிறது. 

இந்த புத்தகங்களை எல்லாம் சிறப்பாக அச்சிட ஏதேனும் நிறுவனம் கிடைக்குமா? நாமே பதிப்பகம் என போட்டு வெளியிடலாமா எனும் ஓராயிரம் யோசனையுடன் புத்தக கனவுகள் அப்படியே நிற்கின்றன. 

நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இதோடு பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வருடத்தையும் திரும்பி பார்க்கும்போது ஏதோ ஒன்று மிச்சப்பட்டு போனது போன்றே உணர்வுகள். 

பலமுறை கிடைத்த தொடர் தோல்விகள். பலமுறை ஏற்பட்ட தடங்கல்கள். இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும், மக்கள் பயன் பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு மருந்து ஆமை போலவே நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதை செய்து தாருங்கள், அதை செய்து தாருங்கள் என பல ஆய்வுகள் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் மருந்து வெளிவந்தபாடில்லை. 

புதிய மருந்துகள் கண்டுபிடிக்க எண்ணற்ற விலங்குகளை கொன்றது மட்டுமே மிச்சமாக இருக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் சில மூலக்கூறுகளை காப்புரிமை செய்து வைத்திருக்கிறார்கள், ஆனால் எனக்கு அதில் உரிமை என்றே சொல்லிவிட்டார்கள். பல ஆய்வு கட்டுரைகள் வெளியிட முடியாத நிலையில் இருக்கின்றன. எனது ஆய்வு குறித்த முழு விபரங்களும் எங்கேயும் சொல்ல முடியாத நிலைதான் நிலவுகிறது. இரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றே சொல்கிறார்கள். மக்கள் பயன் பெற எவர் பெயர் எடுத்தால் என்ன என்கிற மனநிலையே எனக்கு இருக்கிறது. 
இந்த ஆராய்ச்சி கனவுகள் கூட முழுமை பெறாமல் அப்படியே நிற்கின்றன.

கனவுகள்தனை நிறைவேற்றும் முயற்சிக்கான போராட்டம் தொடரட்டும். 

No comments: