Wednesday 16 November 2011

இங்கே சினிமாவுக்கு கதைகள் விற்கப்படும்

'அப்பா நம்ம பங்களா வீடு எனக்கு தந்திருங்க'

'எதுக்குடா'

'தேவைப்படுதுப்பா'

திருமோகூரில் வாழ்ந்து வந்த இருபத்தி மூன்று வயது நிரம்பிய வேல்முருகன் தனது திரைப்பட நிறுவனத்திற்கு வேல்முருகன் சினி லிமிடெட் என பெயர் வைத்தான்.  அதனுடனே வேல்முருகன் இன் என்று ஒரு இணைய தளம் தொடங்கினான்.

அந்த இணையதளத்தில் 'இயக்குநராக ஆசைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள  விளம்பரம் தந்து தனது செல்பேசி நம்பரை இணைத்தான். அவன் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் இருபது பேர் அவனை தொடர்பு கொண்டார்கள்.  ஒவ்வொருவராக அவர்களை சந்திக்கும் திட்டத்துடன் திருமோகூருக்கு தனித்தனி நேரங்களில் அவர்களை வரச் சொன்னான் வேல்முருகன். வந்தவர், வேல்முருகனைப் பார்த்து இத்தனை சின்ன வயசாக இருக்கிறானே, இவனா தயாரிப்பாளர் என யோசித்தார். அந்த யோசனையை அப்புறப்படுத்தினான் வேல்முருகன்.

'எத்தனை வருசமா திரை உலகத்துல இருக்கீங்க'

'பதினைந்து வருசமா'

'என்ன வேலை பாத்துட்டு இருக்கீங்க'

'அசிஸ்டென்ட் டைரக்டர் '

'எத்தனை படங்கள்'

'இருபது படங்கள்'

'சரி, ஒரு கதை சொல்லுங்க, ஒரு வரி கதை'

'நம்ம தமிழகத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்க, அவங்கள ஒருத்தர் எப்படி அழிக்கிறார் அப்படிங்கிறது தான் கதை'

'சரி, எங்களோட பங்களா ஒன்னு இருக்கு, அதுல அடுத்த வாரம் மூணாம் தேதியில இருந்து தங்குங்க, சாப்பாடு எல்லா வசதியும் நான் பண்ணி தரேன், நாம நிச்சயம் படம் பண்ணலாம். மத்தது எல்லாம் மூணாம் தேதி பேசிக்கிறலாம்'

இன்முகத்துடன் அவரை அனுப்பி வைத்தான். இது போல ஒவ்வொருவரிடம் ஒரு வரி கதை கேட்டான் வேல்முருகன். சிலர் ஒரு வரி மேலேயும் சொன்னார்கள். வந்த அனைவரையும் மூணாம் தேதி வரச் சொல்லி அனுப்பினான். ஐந்தாவது, ஏழாவது. பதினான்காவது கதை சொன்னவர்களை மட்டும் தன்னுடன் இருக்க சொன்னான். வந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேச வேல்முருகன் நினைக்க ஒரு படம் இயக்கினா அதுவே பெரிசு, கொடுக்கிறதை கொடுங்க என பெருந்தன்மையாய் வந்தவர் சொன்னார்கள்.

இயக்குநர் ஆகும் கனவோடு வந்தவர்கள் சொன்ன கதைகள்.

1 நம்ம தமிழகத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்க, அவங்கள ஒருத்தர் எப்படி அழிக்கிறார் அப்படிங்கிறதுதான் கதை.

2  கதாநாயகன் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசுவான். அவனை ஒருத்தி காதலிக்கிறா. அவங்களுக்கு பொறக்கிற குழந்தையும் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசுது. இவங்களை சுத்தி நடக்கிற விசயம் தான்  கதை.

3 ஒரு சித்தன் ஊரெல்லாம் சுத்துறான். போற இடத்துல எல்லாம் அழிவு நடக்குது. இந்த அழிவை நடத்தறது யாரு அப்படிங்கிறதை கண்டுபிடிக்கிறதுதான் கதை.

4 ஒரு ரயிலுல வாழ்க்கையை ஓட்டுற சின்ன பசங்களோட கண்ணீர் கதை

5 நெகாதம் செடி அப்படிங்கிற செடியில எல்லா மருத்துவ குணங்களும் நிறைஞ்சி இருக்கு, அந்த ரகசியத்தை தெரிஞ்ச ஒரு பெரியவரும், இளைஞனும் நெகாதம் செடியை அடைஞ்சாங்களானு ஒரு கதை.

6 ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணாம செயற்கையா ஸ்டெம் செல்கள் மூலமா குழந்தை பெத்துக்கிறதை பத்திய ஒரு அறிவியல் சமூக கதை.

7 விவசாயம் அழிஞ்சிட்டு வரதை பொறுக்க முடியாம பெரிய பெரிய தொழிற்சாலையை தரை மட்டமாக்குற ஒரு இளைஞனோட கதை.

8 தாயுக்கும் மகளுக்கும் இடையே நடக்கிற ஒரு பாச போராட்ட கதை.

9 ஒரு கோயில், ஒரு பூசாரி, ஒரு கொலை இதுதான் கதை.

10 இது ஒரு காதல் கதை சார். அண்ணனும் சித்தப்பா மகளும் நேசிக்கிறாங்க, கல்யாணத்துல முடியுமா அப்படிங்கிற கதை.

11 நண்பனுக்காக உயிரை விடற ஒரு பொண்ணோட கதை.

12 ஐந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண விரும்புறாங்க, கல்யாணம் பண்ணினாங்களா, சமூகம் என்ன சொல்லுதுன்னு ஒரு ஆராய்ச்சி கதை.

13 இது ஒரு எழுத்தாளரோட வக்கிரபுத்திய விலாவாரியா சொல்ற உண்மை கதை. கதை டிஸ்கசன்ல முழுசா சொல்றேன்.

14 ஆப்பிரிக்கா நாட்டில இருந்து விவசாயத்துக்கு ஆட்களை இறக்குமதி பண்ற ஒரு பண்ணையாரோட கதை

15 ஊழல் பண்ற அரசியல்வாதி எப்படி வியாதியில சாகுறான் அப்படின்னு ஒரு கதை.

16 ஒரு குடும்பம் எப்படி பண பைத்தியம் பிடிச்சி அழியுது அப்படின்னு கதை.

17 ஒரு பையன் படிக்காமலே எப்படி தன்னோட திறமையால் முன்னுக்கு வர போராடுரானு போராட்டத்தை காமிக்கற கதை. முடிவுல பையன் செத்துருவான் சார்.

18 அம்மாவையும் அப்பாவையும் கொலை பண்ற ஒரு பையனோட போராட்ட கதை.

19 நேர்மையான அதிகாரி எப்படி தான் நினைச்சதை குறுக்கு வழியில நாட்டுக்காக சாதிக்கிறார் அப்படிங்கிறதுதான் கதை. முரண்பட்ட விசயம் சார் இது.

20 வறுமையில வாடறவங்க படிக்காதவங்களை பத்தின கதை. இந்த கதை நிச்சயம் தேசிய விருது பெரும் சார்.

அதைப் போலவே நடிகர்கள், துணை நடிகர்கள், நடிகைகள், துணை நடிகைகள், இசை அமைப்பாளர்கள், நடன ஆசிரியர் என திரைப்படத்தின் அனைத்து பிரிவுகளில் இதுவரை சேர இயலாமல் தவித்து கொண்டு இருந்த நபர்களை இணையதளத்தில் விளம்பரம் செய்து  வரவழைத்து அவர்களுடன் பேசி மூணாம் தேதி வரச் சொல்லி அனுப்பினான் வேல்முருகன்.

வந்த அனைவரது எண்ணிக்கையை கூட்டியபோது முன்னூற்றி முப்பத்தி இரண்டு என வந்தது. வேல்முருகு படம் எடுக்க போகுது என சுற்று வட்டாரம் எல்லாம் பேச தொடங்கினார்கள். அதன் காரணமாக சென்னைக்கு செல்லாமல் திருமோகூரை முற்றுகையிட்டவர்கள் சிலர் இந்த எண்ணிக்கையில் அடங்குவர். அத்தனை பேரையும் தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் ஊரில் செய்தான். ஊரில் உள்ள அனைவரும் வேல்முருகனின் தந்தைக்காக என நினைத்து உதவி செய்தார்கள்.

ஐந்தாவது, ஏழாவது, பதினான்காவது கதை சொன்னவர்களுடன் தினமும் கலந்து ஆலோசித்தான் வேல்முருகன். தினமும் மூவருடன் சென்று வயலில் வேலை செய்வது, ஊரை பெருக்குவது போன்ற விசயங்கள் செய்து வந்தான். அவர்களின் யோசனைப்படியே திரைப்படம் எடுப்பதற்கான கருவிகள், கிராமத்து இசைக் கருவிகள் மிகவும் குறைந்த செலவில் ஒவ்வொன்றாக வந்து இறங்கின. அனைத்தையும் தனது இணைய தளத்தில் எழுதிக் கொண்டே வந்தான். இந்த செய்தி வலைப்பதிவாளர்கள் மூலம் சென்னையில் காட்டு தீயாக பரவியது.

சென்னையில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் குமுறியது. எப்படி படம் வெளி வருகிறது என பார்ப்போம் என ஒவ்வொரு நாளும் அறிக்கை முழக்கமிட்டார்கள்.

மூணாம் தேதி வந்தது. முன்னூற்றி இருபத்தி ஒன்பது பேர் திருமோகூரை அடைந்தார்கள். திருமோகூர் கோவிலுக்குள் அனைவரையும் வரவழைத்து பேசினான் வேல்முருகன்.

'நம்ம படத்தோட தலைப்பு 'நன்செய்'

'தலைப்பை கேட்டதும் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து சம்மதம் சொன்னார்கள். இந்த படத்துக்கு மூணு பேரு இயக்குநர் என ஐந்து, ஏழு, பதினான்காவது கதை சொன்னவர்களை காட்டினான். மத்த பதினேழு பேரு துணை இயக்குநர்கள். அவங்களுக்கு அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு தரப்படும்'.

'என்ன கதை, எல்லோருக்கும் என்ன என்ன வேலை, எப்படி காட்சி அமைக்க போறோம் அப்படிங்கிறதை நாளைக்கு நாம பேசலாம். எல்லாருக்கும் தங்க வீடு, சாப்பாடு எல்லாம் இந்த கிராமத்துல இருக்கிறவங்க மூலம் தயார் செஞ்சிருக்கோம், இன்னைக்கு எல்லோரும் ஊரை எல்லாம் சுத்தி பாருங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, காலையில சரியா ஏழு மணிக்கு இந்த கோவிலுக்கு வாங்க என அனுப்பினான்.

'அப்பா நீங்க கொடுத்த பணத்துல நான் ஒரு லட்சம் கூட இன்னும் செலவு செய்யலை'

'படத்தோட பேரு நல்லா இருக்குடா, வந்தவங்க ஒவ்வொருத்தரும் பேசிகிட்டதை பார்க்கறப்ப அவங்களுக்குள்ள எத்தனை கனவுடா, எதையெல்லாம் தொலைச்சி வாழ்ந்துருக்காங்க, நினைக்கறப்ப கண்ணு கலந்குதுடா'

'இனி அவங்க கலங்க மாட்டாங்கப்பா, நீங்க வட்டிக்கு விடற தொழிலை விட்டுட்டா ரொம்ப நல்லா இருக்கும்'

'நான் என்ன ஏழை பாழைங்க வயித்துல அடிச்சா சம்பாதிக்கிறேன்'

'சரிப்பா, நாளைக்கு நீங்களும் ஏழு மணிக்கு கோவிலுக்கு வந்துருங்க'

'நன் செய்' படம் தொடங்கியதா? அடுத்த பதிவில் காண்போம். 

No comments: