Sunday 6 November 2011

புகழைக் கண்டு அஞ்சுபவரோ?

பாராட்டு மழைக்கு மகிழாதவர்களே இல்லை. நாம் செய்வது நமக்கு திருப்தியாக இருந்தாலும் மற்றவர் அந்த செயலை சுட்டிக்காட்டி பாராட்டினால் மனதில் ஒருவித சந்தோசம் நிலவும். இதை வெளிக்காட்டிக் கொள்ளும் நிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. 

ஒரு செயலை செய்துவிட்டு அதற்கான பாராட்டுகளை எதிர்நோக்கி இருப்போரும் உண்டு. அப்படி பாராட்டு கிடைக்காத பட்சத்தில் எதற்கு அந்த செயலை செய்தோம் என்கிற சலிப்பும் ஆற்றாமையும் ஏற்படுவது உண்டு. 

எனது கடமையை செய்கிறேன், இதன் மூலம் எனக்கு பாராட்டுகளோ, அவமதிப்புகளோ ஏற்பட்டாலும் பரவாயில்லை, எனது வேலையை தொடர்ந்து செய்வதுதான் எனது தலையாய பணி என இருப்பவர்கள் வெகு சிலரே. ஏனெனில் நமது மனம் சின்ன சின்ன அங்கீகாரத்தை எதிர்நோக்கியே பயணத்தைத் தொடர்கிறது.  இந்த சின்ன சின்ன அங்கீகாரம், பாராட்டுதனை  'உந்து சக்தி' என அழைக்கிறார்கள்.

சின்ன சின்ன பாராட்டுகள் மனிதர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வைப்பதோடு மட்டுமன்றி தொடர்ந்து சிறப்புடன் பணியாற்ற வைக்கின்றன. தொழிற்சாலைகள் போன்றவற்றில் இதற்காகவே சிறப்பு விருதுகள், அன்பளிப்புகள், ஊக்கத் தொகை என கொடுத்து பணியாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 

'நாம பண்ற காரியத்தைப் பாத்து நாலு பேரு பாராட்டுனும்யா, அதுதான்யா மனுசனுக்கு அழகு' என்றும் 'செய்ற செயலுக்கு உதவி செய்யாட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் இல்லாம இருந்தா போதும்' என்றும் வழக்கு மொழிகளில் பரிமாறி கொள்பவர்கள் உண்டு. 

இப்படித்தான் மனைவியுடனும், மகனுடனும் நேற்று இரவு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது 'ஒரு செயலை செய்ததற்காக என்னை வெகுவாக பாராட்டினார்கள். அவர்கள் செய்யும் செயலை கூட உங்களோட ராசி, இதை செய்து தாருங்கள், அதை செய்து தாருங்கள் என கேட்டார்கள். நானோ இதில் என்ன இருக்கிறது, எல்லாம் இறைவன் செயல், எனது கடமையை செய்தேன், நடந்தது. இதில் எனது ராசி எல்லாம் எங்கே வந்தது, நீங்களே செய்து கொள்ளுங்கள் என சொன்னேன்' என்றேன். இதைக் கேட்ட 'எனது மனைவியோ, ஊருக்கு எல்லாம் செய்துட்டு தான் ஒண்ணுமில்லை என வந்துவிடுபவர் உனது அப்பா' என்றார். எனது பதினோரு வயது மகன் 'நீ புகழுக்கு அஞ்சுகிறாய்' என்றான்.  எனக்கு எனது மகன் சொன்னதை கேட்டதும் 'உண்மையோ, நான் புகழுக்கு அஞ்சுகிறேனா' எனும் எண்ணம் பரவியது. இதே மாதம் சென்ற வருடம் என்னை நோக்கி 'எதற்கு அந்த தொண்டு நிறுவனத்தில் நீ செயலாளராக பணியாற்றுகிறாய், தலைவராக அல்லவா இருக்க வேண்டும், ஏதேனும் இளைய தலைவர் பதவி இருந்தால் எனக்கு கொடுக்க சொல்' என்றான். 

அவன் சொன்னதை யோசித்துப் பார்க்கிறேன். புகழுக்கு அஞ்சுபவர்கள் இருக்கக் கூடும். பேரும் புகழும் அடைந்துவிட்டால் சுதந்திரம் பறிபோய்விடும் என நினைக்கலாம். நான் ஒரு செயலாளர் என்பது அங்கு வருபவர்கள் பலருக்கு இன்னமும் தெரியாது. என்னை முன்னிலைப்படுத்தி அங்கே ஒருபோதும் நான் நிற்பது இல்லை. எனது எழுத்துகள் மட்டும் பலருக்கு தெரியட்டும், என்னைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாம் என எனது குறிப்புகள் கூட இந்த வலைப்பூவில் இருந்து நீக்கி இருக்கிறேன். எனது நூல்கள் பற்றிய விளம்பரம் கூட விலக்கி இருக்கிறேன்.  அவையெல்லாம் இனி திருப்பி எழுதிவிட வேண்டும், புகழுக்காக அல்ல, விபரத்துக்காக. 

பதவிகளும், பாராட்டுகளும் என்னை யோசிக்க வைக்கின்றன. எல்லாம் சரியாக இருந்தால் ஆஹோ ஓஹோ என பாராட்டும் அதே வாய் வார்த்தைகள் தான் சிறு தவறு இருப்பினும் மாற்றி பேசுகின்றன எனும் அச்சம் வெகுவாக நிலவுவது உண்டு. பாராட்டப்பட வேண்டும் என்றோ, பெருமைப்பட வேண்டும் என்றோ காரியம் செய்ய பலரும் துணிவதில்லை.  விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் பணியாற்றுகிறார்கள். மக்களுக்கென சேவை செய்ய தனது மொத்த வாழ்க்கையை அர்பணித்த, அர்பணித்து கொண்டிருக்கும் மாமனிதர்கள் இந்த பூவுலகில் உண்டு. 

வசதிகள், வாய்ப்புகள் எல்லாம் பெருக பெருக பணிவும், அடக்கமும் அவசியம் என்றே அறிவுறுத்தப்படுகிறார்கள். தலைமையில் இருப்பவர்கள் பிறரை அச்சுறுத்தி வைத்தே காரியங்களை சாதிக்கிறார்கள். பயம் ஏற்படுத்தி சாதித்தல். இல்லையெனில் 'தலயில மிளகா அரைச்சிருவாங்க' என புரிந்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். 'நேர்மையும், நீதியும், தைரியமும் உடையவர்கள்' பிறரை அச்சுறுத்தி வாழ வேண்டிய அவசியமில்லை, பிறருக்கு அச்சப்பட வேண்டிய தேவையும் இல்லை. 

எத்தனையோ மாமனிதர்கள் தங்கள் கடமையை செய்து கொண்டே இருக்கிறார்கள், இவர்கள் புகழுக்கு என ஏங்குவதும் இல்லை, புகழ்தனை கண்டு அஞ்சுவதுமில்லை. 

நாம் செய்யும் பணி பலருக்கும் உதவட்டும், அது ஒன்றே உன்னதமானது. 

5 comments:

SURYAJEEVA said...

அருமையான பதிவு...
புகழ் முதல் நிலை,
செத்த பிறகும் வாழ்வது கடைசி நிலை..

முதலில் புகழுக்கு ஆசைப் பட்டு தான் இறங்குகிறோம், ஆனால் மனம் பக்குவப் பட்ட பின் செத்த பிறகும் வாழ்வோம் என்ற நம்பிக்கை வந்து விடுகிறது. அதனால் தான் பலருக்கு அங்கீகாரம் தேவை படுவதில்லை... அவர்கள் தங்கள் இலக்கை அடைந்து விட்டதாக எண்ணி இருக்க கூடும்... நீங்கள் உட்பட.. அதை நீங்கள் ஆழ் மனதை கலக்கி யோசித்தீர்கள் என்றால் உண்மைகள் வெளி வரும்.. புகழை கண்டு அஞ்சுபவர்கள் ஆமை ஓட்டுக்குள் ஒளிந்து கொள்வது போல் வெளி வரவே அச்சப் படுவார்கள்... நீங்களாவது எழுதுகிறீர்கள், எத்தனை பேர் எழுதாமல் வரலாற்று பக்கங்களில் இணையாமல் ஓடி கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்

முனைவர் இரா.குணசீலன் said...

சின்ன சின்ன பாராட்டுகள் மனிதர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வைப்பதோடு மட்டுமன்றி தொடர்ந்து சிறப்புடன் பணியாற்ற வைக்கின்றன. ]]

வாழ்வியல் நுட்பத்தைத் தாங்கள் சொன்னவிதம் அழகு..

ஹேமா (HVL) said...

//
நாம் செய்யும் பணி பலருக்கும் உதவட்டும், அது ஒன்றே உன்னதமானது.//
இதைப் பின்பற்றவே நான் விரும்புகிறேன்!

Shakthiprabha (Prabha Sridhar) said...

அருமையான ஆழ்மன அலசல்.

Radhakrishnan said...

மிக்க நன்றி சூர்யா. நீங்கள் சொல்வது உண்மைதான்.

மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

மிக்க நன்றி ஹேமா.

மிக்க நன்றி சகோதரி.