Wednesday 23 November 2011

முஸ்லீம் வீட்டு திருமணம்

மதம் சார்ந்து மனிதர்கள்  வாழ ஆரம்பித்த பின்னர் மதம் எதற்கு என கேட்பவர்கள் சற்று வெளியே நின்று வேடிக்கைப்  பார்க்கவும். 

நான் அடிப்படையில் ஒரு இந்து மதம் ஒட்டிய சமூகத்தை சேர்ந்தவன். எனது உறவினர்கள், உற்றார்கள் என அனைவரும் இந்து மத சமூகத்தை சார்ந்தவர்கள். 

இதற்காக நான் முஸ்லீம் வாத்தியாரிடம் படிக்கமாட்டேன் என்றோ, கிறிஸ்துவ வாத்தியாரிடம் படிக்க மாட்டேன் என்றோ அடம் பிடித்தது கிடையாது. 

என்னுடன் இந்து சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பழக வேண்டுமென ஒரு கட்டாயம் கொள்வதும் கிடையாது.

இந்து சமூகத்தை சார்ந்தவன் என்றாலும், பிற மத சம்பிராயதங்களை அதனதன் பாட்டுக்கு விடுவதில் மட்டுமே எனக்கு உரிமை உண்டு. அதை சகட்டுமேனிக்கு விமர்சிக்க எனக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

இப்படி ஒரு மதத்தை சார்ந்து வாழ்வது எனினும், அனைவரும் மக்கள் என்கிற உணர்வு இருக்கும் என்கிற படசத்தில் இந்த மதங்களே அவசியம் இல்லை என்றாகிவிடுகிறது. ஆனால் இந்த மதங்கள்  ஒரு சாத்திர சம்பிராதய அடையாளங்களாக இருந்து வருவதை  மாற்றுவது சற்று கடினமானது. 

என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தோழி ஒருவர் முஸ்லீம் மதத்தினை சார்ந்தவர் என்பதை அறிய கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிப்போனது எனக்கு. பொதுவாகவே பெண்களிடம் கலகலப்பாக நான் பேசுவது இல்லை. மேலும், ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் எனக்கு அத்தனை இல்லை. 

நான்கு வருடங்கள் பின்னர் தான் எனது ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பெண் இருவரும் கணவன் மனைவி என்பதே எனக்கு தெரிய வந்தது. 

இப்படியெல்லாம் இருக்க இந்த தோழி எனக்கு நல்ல பழக்கமானாள். அப்பொழுதுதான் இவளது திருமணம் நிச்சயிக்கப்பட போவதாகவும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற போவதாகவும் சொன்னாள். திருமண பேச்சு பற்றிய விபரம் தெரிந்த பின்னரே இவர் ஒரு முஸ்லீம் என தெரிய வந்தது. அதோடு மட்டுமில்லாமல் நான் சில வருடங்களாக உதவி புரிந்த மற்றொரு பெண் முஸ்லீம் என தெரிய வந்தது. 

முஸ்லீம் என்றால் பர்கா போட்டு இருக்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள் இல்லாமல் இவர்கள் சாதாரணமாக இருந்ததால் இவர்கள் எந்த மதம் என எவராலும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. இப்படித்தான் அடையாளங்கள் ஏதும் நாம் அணியாமல் போனால் நமக்கு மத முத்திரை குத்தப்படமாட்டாது. மேலும் மதம், கடவுள் பற்றிய விசயங்களை எவரும் ஆய்வகங்களில் அத்தனை பெரிதாக விவாதித்தது இல்லை. 


நான் சில நாட்களாக தாடி வளர்த்து இருந்தேன். சில தினங்கள் முன்னர் கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த சிவாச்சாரியார், ஐயப்பனுக்கு மாலை போடப் போறீங்களா என கேட்டார். இல்லையே என சொன்னபிறகுதான் தெரிந்தது, அட தாடி. பிறகுதான் தெரிந்தது இந்த தாடி முஸ்லீம்களின் அடையாளம் என.

சில மாதங்களுக்கு முன்னரே திருமணத்திற்கு வருகிறோம் என இவரிடம் உறுதி கொடுத்தாகிவிட்டது. இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் திருமணம் நடக்க இருக்கும் ஊரை அடைந்தோம். ஒரு ஹோட்டலில் அன்று இரவு தங்க அறை எடுத்து இருந்தோம்.

மதியம் மூணு மணிக்கெல்லாம் சென்று விட்டதால் அந்த ஊரை சுற்றிப் பார்க்க சென்றோம், எங்கு பார்த்தாலும் ஆசிய மக்கள். சரவண பவன், சென்னை தோசா, என தமிழ்கடைகள் இருந்தன. சற்று தள்ளிப் போனால் இண்டிகோ, பீஸ்ட் இந்தியா என்றெல்லாம் கடைகள். நான்கு மணி ஆகி இருந்தது, சாப்பிட வேண்டும் என மனைவியும் மகனும் விரும்பியதால் இண்டிகோ ஹோட்டலில் சாப்பிட்டோம். இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் திருமணத்திற்கு சென்றுவிடுவோம், அங்கு சென்று சாப்பிடலாம் என நினைத்து இருந்ததால் குறைவாகவே சாப்பிட்டேன்.

சில கடைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, லண்டனில் இல்லாத துணி எல்லாம் இங்கே இருக்கிறது, மறுமுறை இந்த ஊருக்கு வர வேண்டும் என நினைப்புடன் ஹோட்டலுக்கு சென்று இந்திய உடையில் ஏழு மணி முப்பது நிமிட திருமணத்திற்கு ஆறு மணி நாற்பத்தினைந்து நிமிடத்திற்கு சென்று விட்டோம்.

மிகப்பெரிய கட்டிடம், அழகாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வெகு சிலரே ஆங்காங்கே அமர்ந்து இருந்தார்கள். எங்களை சைவம் என குறிப்பிட்டு இருந்த ஒரு மேசையில் அமர வைத்தார்கள். எனது வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நண்பர்கள் வர இருப்பதாக சொன்னார்கள், ஆனால் எவரையும் காணவில்லை. மணமேடை போடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கே யாரும் இல்லை. மணி ஏழு முப்பது தொட்டது. மணமேடையில் எவருமே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். யார் எந்த மதத்தினர் என அடையாளம் காண இயலவில்லை. தோழியின் அம்மாவும், அப்பாவும் எங்களை வரவேற்பு செய்து விட்டு போனார்கள். தாடி முஸ்லீம்களின் அடையாளம் அல்ல, தனி மனிதர்களின் விருப்ப அடையாளம் என புரிந்தது.

மணி எட்டு ஆனது. எனது நண்பர்கள் வந்தார்கள், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மேசையில் சென்று அமர்ந்து கொண்டார்கள். மணி எட்டு முப்பது தொட்டது. திருமண மேடை அப்படியேதான் இருந்தது. அப்பொழுதுதான் அப்பளம் வைத்து விட்டு போனார்கள். அப்பாடா என இருந்தது, அதுவரை தண்ணீர், மற்றும் பழச்சாறு மட்டுமே! நல்லவேளை சாப்பிட்டோம் என நினைத்து கொண்டோம்.

இந்த வேளையில் எங்களது மேசையில் எவருமே அமர வரவில்லை. இரண்டு வாலிபர்கள், அவர்களது அம்மா வந்தார்கள். இது சைவ மேசை என்றதும், இன்னும் எத்தனை மேசை மாற வேண்டுமோ என எழுந்து சென்றார்கள். அதன் பின்னர் ஒரு கணவர், மனைவி வந்தார்கள். ஆனால் அவர் முஸ்லீம் என பார்த்தவுடன் அடையாளம் சொல்ல இயலவில்லை. அவர் எங்களுடன் பேசினார். அப்பொழுதுதான் முஸ்லீம் திருமணம் குறித்து பல விசயங்கள் சொன்னார். இத்தனை நேரமாகிறதே என்றபோது குடும்பத்தை பொறுத்தது என்றார். எனது கல்யாணம் இங்குதான் நடந்தது, சரியான நேரத்தில் நடந்து முடிந்தது, மேலும் முஸ்லீம்களில் வெவ்வேறு சமூகம் உண்டு என சொல்லிக் கொண்டார். எனது தோழி இருக்கும் சமூகத்தில் அத்தனை கட்டுப்பாடு இல்லை எனவும், ஆனால் மணமகனின் சமூகம் மிகவும் கட்டுப்பாடானது என்று சொன்னார்.

அப்பொழுது மணமகன் வந்துவிட்டார் என அறிவிப்பு வந்தது. நிறைய மேசைகள் மண மேடையின் அருகில் காலியாகவே இருந்தது. நாங்கள் கூட என்ன இப்படி இருக்கிறதே என நினைத்து இருந்தோம். சிறிது நேரத்தில் மணமகனுடன் பெரிய பட்டாளமே வந்து இறங்கியது. அனைவரும் சென்று அமர அனைத்து மேசைகளும் நிறைந்தன. தோழியை காணவே இல்லை. பாகிஸ்தான் பேருந்து ஒன்றில் மாப்பிள்ளை வந்து இறங்கினார் என பேருந்தினை காண ஓடினோம். பேருந்து அலங்கரிக்கப்பட்டு அருமையாக இருந்தது.

மணமகன் மேடைக்கு செல்லவே இல்லை. சிறிது நேரத்தில் மணமகனுடன் பலர் இணைந்து முதல் மாடிக்கு சென்றார்கள். மணி பத்து ஆகிவிட்டது. சிறிது நேரம் முன்னர் தான் ரொட்டியும், காய்கறி வகைகளும் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் சைவ மேசை என அமர்ந்து இருக்க அசைவம், சைவம் என எல்லாம் கொண்டு வந்து வைத்தார்கள். மனிதர்களால் எங்கள் மேசையும் நிறைந்துவிட்டது.

மணமேடையில் திருமணம் நடக்கும் என நினைத்தால் திடீரென திருமணம் முடிந்துவிட்டது என சொன்னார்கள். மாடியில் நின்று படம் எடுத்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்மணியிடம் விசாரித்தோம். இமாம் என்பவர் இந்த திருமணத்தை கீழே நடத்த சம்மதிக்கவில்லை, அதனால் மாடிக்கு சென்று நடத்தி இருக்கிறார் என்றார். எங்கே மணமகள் என்றோம்? மணமகள் வர தேவையில்லை. மணமகளிடம் தனியாக சம்மதமா என மூன்று முறை கேட்பார்கள், சம்மதம் சொன்னதும் இரண்டு நபர் சென்று சம்மதம் சொல்வார்கள். திருக்குரானில் ஒரு பகுதி ஓதப்படும். பின்னர் இருவருக்கும் விவாகரத்து நடந்தால் மணமகளுக்கு எவ்வளவு பணம் தருவது குறித்து பேசி ஒரு கையொப்பம் இடுவார்கள். மணமகன் தரும் வரதட்சணை. இந்த பணம் உடனே தர வேண்டிய அவசியம் இல்லையாம்.

அப்படி கையொப்பம் இட்டவுடன் திருமணம் முடிந்ததாக அறிவிக்கப்படும் என்றார். எனக்குள் ஒலித்தது திருமணம் நடக்கும் முன்னரே விவகாரத்தா? அதற்கேற்றார்போல முஸ்லீம்கள் மிகவும் பிராக்டிகலாக இருக்க விருப்படுகிறார்கள், திருமண வாழ்வில் எதுவும் நடக்கும் என்பதால் பெண்ணுக்கு பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்கிறார்கள் என்றார். அது அந்த காலத்து சம்பிராதயம் என்றே தோன்றியது. ஏனெனில் அந்த காலத்தில் முஸ்லீம் பெண்கள் வேலைக்கு செல்வதில்லை, எனவே அவரது குடும்பம் கணவனை நம்பியே இருக்கும், அதனால் இப்படி ஒரு சட்டம் இருக்கலாம் என தோன்றியது.

பின்னர் மணமகன் மேடையில் அமர, மணமகள் வந்தார். அதற்குள் சோறு, சாம்பார் என சாப்பிட்டு முடித்து இருந்தோம். மணி பதினொன்று மேல் ஆனது. வாழ்த்துகள் தெரிவித்து விட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

புரோகிதர், யாகம் வளர்த்தல், மந்திரம் செபித்தல் என எதுவும் இல்லாமல் இந்துக்கள் நடத்தும் சீர்திருத்த கல்யாணம் என்பது முஸ்லீம்களின் கல்யாணம் தான் போல.

எங்களை இந்து என்று எவருமே அடையாளம் காணவில்லை. :) மதம் நமக்கு அவசியமில்லாத ஒன்று என்பது எனக்கு மிகவும் அழுத்தமாகவே புரிந்தது. 

6 comments:

வேகநரி said...

மதம் நமக்கு அவசியமில்லாத ஒன்று.ஆனால் முஸ்லீம்களை பொறுத்தளவில் அதீத கனவு.

Radhakrishnan said...

மதம் குறித்தான சில விசயங்கள் தனி மனிதர்களை புண்படுத்தும் என்பதால் தவிர்த்தல் நலம் என்றே கருதுகிறேன்.

நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இந்த மத விசயத்தில் மிகவும் 'சென்சிடிவாக' இருக்கிறார்கள். கவனத்துடன் இருப்பது நமது பொறுப்பு.

கபீஷ் said...

// மதம் நமக்கு அவசியமில்லாத ஒன்று என்பது எனக்கு மிகவும் அழுத்தமாகவே புரிந்தது. // :))

மிருதங்கம் க்ளாஸ் எப்படி போகுது? இந்த போஸ்ட் பத்தி நோ கமெண்ட்ஸ்:)

Radhakrishnan said...

மிருதங்க வகுப்பு மிகவும் சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வித்தியாசமான முயற்சி.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Radhakrishnan said...

முகநூலில் பகிர்ந்தமைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.