Showing posts with label தொடர்கதை வேதநூல். Show all posts
Showing posts with label தொடர்கதை வேதநூல். Show all posts

Thursday 2 July 2009

வேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)

சிரகமெராவின் செயலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மிபலோ ''ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று கேட்டான். ''கொல்ல நினைத்த காரணத்திற்காக எனக் கூறிய சிரகமெரா இதில் நான் குற்றவாளி என்றால் நாளை நீங்கள் உயிர் மாய்த்திட்டால் நீங்களும் குற்றவாளி என்பதை மறுக்க வேண்டாம், மறக்க வேண்டாம்'' என கூறினாள்.

''நீ செய்தது தவறு, இதை நியாயப்படுத்திக்கொண்டிருக்க முடியாது, இதற்கானத் தண்டனையை நீயே பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றான் மிபலோ. ''நான் தண்டனையைப் பெற்றுக்கொள்கிறேன் ஆனால் உங்களுக்கு யார் தண்டனை தருவது'' என்றாள் சிரகமெரா. ''நான் உயிரை மாய்த்துக்கொள்ளமாட்டேன், அதுவாகப் போகும்'' என்றான் மிபலோ. ''இது என்ன காற்றா? தானாக உள்ளே வருவதற்கும் தானாக வெளியே செல்வதற்கும்'' என்றாள் சிரகமெரா. ''என் உயிரை நானாக மாய்த்துக்கொள்ளமாட்டேன் என உறுதி கூறுகிறேன்'' என்றான் மிபலோ.

அன்று அங்கேயே தங்கினாள் சிரகமெரா. காலையில் கிரகமெஸ்டிடம் நடந்த விபரங்களை கூறினான் மிபலோ. சூரியன் தாமதித்துக் கொண்டிருந்தது. கிரகமெஸ்ட் பரவாயில்லை திடீரென இறந்துவிட்டான் எனச் சொல்லிவிடலாம் எனச் சொன்னான். மிபலோவால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ''இவளே கொலை செய்தாள் அதனால் இவளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்'' என்றான் மிபலோ. சிரகமெராவை நோக்கி ''இவனையும் சேர்த்து கொலை செய்துவிடு'' எனச் சிரித்தான் கிரகமெஸ்ட்.

''தலைமையிடத்தில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது'' என்றான் மிபலோ. ''ஒன்று செய், நீ தலைமையிடத்தில் சில நாட்கள் இல்லாது இருந்தாய் அல்லவா அதுபோல இப்பொழுதும் இருந்துவிடு. நீ தவறு செய்வதாய் ஆகிவிடாது'' என்றான் கிரகமெஸ்ட். மிபலோவுக்குப் புரியும் மொழியில்தான் பேசி அசத்தினான் கிரகமெஸ்ட். ''நன்றாக பேசுகிறாய் என் மொழியில் நீ பேசுவதால் நான் மாறிவிடுவேன் என நினைத்தாயா'' என்றான் மிபலோ.

சிரகமெரா மிபலோவிடம் ''என்ன தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறேன்'' என்றாள். அதற்குள் சாங்கோ ஆதரவாளர்கள் சாங்கோ இறந்து கிடப்பதைப் பார்த்து மிபலோவின் அவையினை முற்றுகையிட்டார்கள். பலத்த சப்தம் எழுந்தது. சிலர் கற்களை கொண்டு வீசினர். மிபலோ ஒரு கொலையாளி எனக் கூச்சலிட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்காத கிரகமெஸ்ட் வீரர்களை அழைத்து உடனடியாக அவர்களை ஒடுக்குமாறு ஆணையிட்டான். மிபலோ தடுத்தான்.

சூரியன் உதித்தது. கிரகமெஸ்ட் தடுத்தும் கேளாது மிபலோ அவர்கள் முன் தோன்றினான். கற்களால் அவனை அடித்தார்கள். ஒருவன் பெரிய கல்லை எடுத்து மிபலோவின் மேல் போட்டான். மிபலோ அஸ்தமனமானான். சிரகமெரா கதறினாள். மிபலோவை அடித்துக் கொன்றவர்களை அன்றே மொத்தமாக அழித்தான் கிரகமெஸ்ட்.

தானேஸ்ராவில் குவ்விலானுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியுடன் குவ்விலான் எகிப்து நோக்கி பயணம் தொடங்கினான். சிறிது நாட்கள் பின்னர் சிரகமெராவை தன் மனைவியாக்கிக் கொள்ள நினைத்தான் கிரகமெஸ்ட். ஆனால் சிரகமெரா மறுத்துவிட்டாள். சாங்கோவை பின்பற்றியவர்கள் கிரகமெஸ்டை நினைத்து கதிகலங்கினார்கள்.

மாதங்கள் நகர குவ்விலான் தன் மனைவியுடன் எகிப்து வந்தடைந்தான். நடந்த விபரங்களை அறிந்த குவ்விலான் சத்தமின்றி அழுதான். அங்கே இருக்கப் பிடிக்காமல் குவ்விலான் பெருசியா நோக்கி பயணமானான். சிரகமெரா,சாங்கோ ஆதரவாளர்கள் குவ்விலானுடன் பயணமானார்கள். நைல் நதியில் சில வாரங்கள் பின்னர் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. மிபலோ கட்டிய பிரமிடினை அந்த வெள்ளம் ஒரு அலசு அலசியது. கிரகமெஸ்ட் வெள்ளத்தின் சீற்றம் கண்டு அச்சமுற்றான். வெள்ளம் பல உயிர்களை பலிவாங்கியது. வெகு சிலரே உயிர் தப்பினர்.

பெருசியா சென்றடைந்த குவ்விலான் தனக்கு நினைவில் இருந்ததையெல்லாம் எழுதத் தொடங்கினான்.அதைப் படித்த சாங்கோ ஆதரவாளர்கள் இதுதான் உண்மையான வேதம் எனப் பின்பற்றத் தொடங்கினார்கள். சாங்கோ தங்களை ஏமாற்றிவிட்டதாகவே உணர்ந்தவர்கள் மிபலோவின் மரணத்தை நினைத்து வருத்தப்பட்டார்கள்.

சிரகமெராவையும் திருமணம் செய்துகொண்டான் குவ்விலான். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது. பெருசியாவில் பெரும் போர் நடந்தது, பலர் உயிர் இழந்தார்கள். அதைக் காண சகிக்காமல் சில காலம் அங்கே இருந்துவிட்டு தானேஸ்ரா திரும்பினான் குவ்விலான்.

அனைத்து விசயங்களையும் மீண்டும் எழுதி வைத்தான் குவ்விலான். அதை மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தபோது அவனது உயிர் பிரிந்தது.

மிபலோ சொன்ன எண்ணங்கள் அடங்கிய வேதம் குவ்விலானால் எழுதப்பட்டு அந்த பிரமிடுக்குள் தினமும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை வெளியே எடுக்க வழியில்லாது போகும்படி குவ்விலான் தான் எழுதியதை எவரிடமும் சொல்லாமல் பாதுகாப்பாக வைத்துவிட்டு திடீரென மறைந்தான்.

பல பிரமிடுகள் பின்னர் கட்டப்பட்டன. அந்த வேதம் எந்த பிரமிடுக்குள் இருக்கிறது என தெரியாமல் போனது. குவ்விலானின் சந்ததிகளுக்கும் தெரியாததாகவே இருந்தது.

தற்போது அகழ்வாராய்ச்சியில் பார்த்தபோது குவ்விலானால் இவ்வாறு தொடங்கப்பட்டு இருந்தது.

சாத்திரங்கள் செய்தாரடி அதில்
ஆத்திரங்கள் வைத்தாரடி பல
பாத்திரங்கள் பண்ணிபண்ணிப் புத்தி
பேதலிக்கச் செய்து போனாரடி.

(முற்றும்)

Wednesday 1 July 2009

வேத நூல் - 9

கிரகமெஸ்ட் மிபலோவைக் கைது செய்ய முடியாது எனக் கூறியதும் சாங்கோ மிகவும் எரிச்சல் அடைந்தான். அன்று இரவே மிபலோவைக் கொல்வது என முடிவு செய்தான் சாங்கோ. அதற்கானத் திட்டத்துடன் மிபலோவைச் சந்தித்தான் சாங்கோ. மிபலோ மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தான்.

''சாங்கோ நான் என்னுடைய உயிர் போய்விடும் நிலைக்கு வந்துவிட்டது. எனது எண்ணங்கள் எல்லாம் சிதைந்து போய்விட்டது, குவ்விலான் அன்றே நீ எழுதுவதைத் தடுத்துவிடக் குறிப்பிட்டதைக் கேட்காமல் நான் விட்டுவிட்டேன், இன்றோ நீ செய்த மாற்றங்களையே இங்கே பரப்பி இருக்கிறாய், தானேஸ்ராவிலும் நீ செய்த செயல் கண்டுதான் நான் உடனடியாகத் திரும்ப வேண்டியதாகிவிட்டது. அனைவருக்கும் எழுத்துச் சொல்லிக் கொடுத்து உனது எண்ணங்களை நிலைநாட்டிக் கொண்டாய். ஆனால் அனைத்துமே கொடூரங்களையும், கொலைகளையும் முன்னிறுத்தியே நீ செயல்பட்டதால் எனக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது சூரியன் வந்தபின்னர் நான் அஸ்தமனம் ஆகிவிடுவேன்'' என்றான் மிபலோ.

''நீ சொன்னதை எல்லாம் நான் மாற்றி எழுதவில்லை, நீ சொன்னதற்கு மாறாக சிந்தித்து எழுதினேன். எனது சிந்தனை இது, உனது சிந்தனை அது, இதைக்கூட உனக்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையெனில் உன் உயிர் போகத்தான் வேண்டும்'' என்றான் சாங்கோ.

''மனிதர்களுக்கு நல்லவிசயங்களையேப் பரப்ப வேண்டும், தீமைகளைச் சொல்லி நன்மைகளின் பலன் சொல்லக் கூடாது, நன்மையை மட்டுமே பேச வேண்டும் என நான் வலியுறுத்தியக் கருத்துக்கள் சிதைந்துவிட்டதே'' என்றான் மிபலோ.

''அது உன் தவறு, அன்றே நீ எழுதும் முறைக் கற்றிருந்தால் இன்று உனக்கு ஏன் இந்தப் பிரச்சினை. உன்னை யார் உனது எழுத்துக்களைப் பிரமிடுக்குள் போட்டு பூட்டி வைக்கச் சொன்னது, எந்தக் காலத்திலும் உன் எழுத்தை எவராலும் எடுக்க முடியாது, இனி எதிர்காலம் கேடு செய்வது கேடுடன் வாழ்வது பற்றியே சிந்திக்கும்'' எனச் சொல்லிவிட்டு மிபலோ உயிர் துறந்துவிடுவான் என நம்பிக்கையில் வெளியேறினான் சாங்கோ.

சிரகமெராவிடம் சொல்லிச் சிரித்தான் சாங்கோ. சிரகமெரா அளவிலா கோபம் கொண்டாள். அன்று இரவே சாங்கோவை மிகவும் நுணுக்கமான முறையில் கொலை செய்தாள் சிரகமெரா. அவனைக் கொலை செய்துவிட்டு நேராக மிபலோவிடம் சென்றாள்.

''நான் சாங்கோவை கொலை செய்துவிட்டேன்'' என்றாள் சிரகமெரா. மிபலோ அதிர்ச்சியடைந்தான். இரவு நீடித்தது.

(தொடரும்)

வேத நூல் - 8

மிபலோ குவ்விலானுடன் தானேஸ்ரா பயணத்தைத் தொடங்கினான். சாங்கோ சிரகமெராவுடன் எகிப்தில் இறங்கியபோது மிபலோ குவ்விலானுடன் தானேஸ்ராவில் இறங்கினான். தானேஸ்ரா சில மாற்றங்களைப் பெற்றிருந்தது. மிபலோவின் பெற்றோரும் குவ்விலான் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சாங்கோ எகிப்து சென்ற விசயம் அறிந்து மிபலோ அச்சம் கொண்டான்.

எகிப்தில் இறங்கிய சாங்கோ மிபலோ தானேஸ்ரா சென்றது அறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தான். மிபலோ கட்டிய பிரமிட் கண்டு பிரமித்து நின்றான். கிரகமெஸ்ட்டிடம் விபரங்கள் கேட்டான். அப்பொழுது குவ்விலான் எழுதிய விபரங்களை பிரமிட்டிற்குள் மூடிவைத்து இருப்பதாகச் சொன்னான் கிரகமெஸ்ட். சாங்கோ உற்சாகமானான்.

மொத்த பிரமிட்டையும் மூடினால் தான் அந்த விபரங்கள் பாதுகாப்பாக என்றும் இருக்கும் என அறிவுரை சொன்ன சாங்கோ தன்னிடம் இருந்த விபரங்களை அங்கிருந்த சிலரிடம் பரப்ப ஆரம்பித்தான். எழுத்துக்களைச் சொல்லிக்கொடுக்கவும் செய்தான் சாங்கோ. சாங்கோ மேல் பலருக்கு நல்ல நம்பிக்கை ஏற்படத் தொடங்கி இருந்தது. சிரகமெரா சாங்கோவின் செயல்பாடுகள் கண்டு வெறுப்பு கொள்ள ஆரம்பித்தாள். சில தினங்களிலேயே சாங்கோவைப் பின்பற்றும் ஒரு கூட்டம் உருவானது. அந்த நிலையைக் கண்ட கிரகமெஸ்ட் சாங்கோவிடம் தானும் உடன் சேர்வதாக அறிவித்தான்.

ஊரில் இருப்பதில் பயன் இல்லை என உணர்ந்த மிபலோ குவ்விலானுடன் கிளம்பினான், ஆனால் குவ்விலானுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தடுத்துவிட்டார்கள். எனவே சில வேறு நபர்களுடன் மிபலோ எகிப்து பயணமானான்.

எகிப்தில் இறங்கிய மிபலோ சாங்கோவின் புகழினைக் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆனால் அனைவரும் சாத்தான் என்றே சொல்ல மிபலோ கலக்கமடைந்தான். தனது எண்ணங்களை எடுக்க பிரமிட் சென்றபோது அந்த பிரமிட் வழிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க கிரகமெஸ்ட்டிடம் விபரம் கேட்டான் மிபலோ. சாங்கோவின் ஆலோசனை என்றான் கிரகமெஸ்ட். செய்வதறியாது விழித்தான் மிபலோ. சாங்கோ கிரகமெஸ்ட்டிடம் மிபலோவை கைது செய்யுமாறு கூறினான்.

(தொடரும்)

வேத நூல் - 7

மிபலோ முன்னேறிச் சென்றதைத் தடுத்தான் கிரகமெஸ்ட். ஆனால் ரேவிரன் மிபலோவிற்கு வழிவிடுமாறு கூறினான். மிபலோ ரேவிரனிடம் சென்று தனது கையில் இருந்த எழுத்துக்களைக் காட்டினான். அதைப் பார்த்த ரேவிரன் அதைப் பறித்து பக்கத்தில் நின்ற காவலாளியிடம் கொடுத்து இதனை உடனடியாக எரித்துவிடு எனச் சொன்னான். காவலாளியும் அதனை வாங்கிச் சென்று தீயில் போட்டான். மிபலோ செய்வதறியாது விழித்தான். குவ்விலான் அழுதான்.

கிரகமெஸ்ட்டிடம் படகில் தாங்கள் சென்றுவிடுவதாகவும் தங்களை கொன்றுவிட வேண்டாம் என சாங்கோ சொன்னான். மிபலோ கண்களை மூடி ரேவிரன் முன்னர் அமர்ந்தான். சூரியன் அனலாக சுட்டெரித்தது. இதோடு மட்டுமல்லாமல் இடியையும் மின்னலையும் கேட்டு ரேவிரன் அச்சம் கொண்டான். தனது செயல்தான் இதற்கு காரணம் என அவனது மனம் அவனை வதைக்கத் தொடங்கியது. அனைவரையும் அமைதியாக இருக்குமாறு பணித்தான் ரேவிரன். நால்வரையும் எதுவும் செய்து விடவேண்டாமெனக் கேட்டுக்கொண்டான. ஆனால் மிபலோ மூடிய கண்களைத் திறக்கவில்லை. பனி உருகத் தொடங்கி கடலின் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. நைல் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

கண்களைத் திறந்தான் மிபலோ. மிபலோவிடம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு பணித்தான் ரேவிரன். மிபலோ ஏற்றுக்கொண்டான். ரேவிரன் சிலநாட்களிலேயே மரணத்தைத் தழுவினான். கிரகமெஸ்ட் மிபலோவிற்கு உதவி புரிவதாக வாக்கு அளித்தான். தான் சொன்ன விசயங்கள் எல்லாம் தொலைந்து போனது குறித்து மிகவும் வேதனையுற்றான் மிபலோ. ரேண்ட்டர் சாங்கோவுடன் தனது ஊர் நோக்கிச் செல்லத் திட்டமிட்டார்.

அப்பொழுது ஏற்பட்ட இந்த பெரும் பிரளயத்தால் அட்லாண்டீஸ் எனும் நிலப்பரப்புபகுதி அப்படியே கடலுக்கடியில் மூழ்கியது. அங்கிருந்து தப்பித்து வந்த அட்லாண்டீஸ்காரர்கள் பலர் எகிப்தில் தஞ்சம் புகுந்திடத் தொடங்கினார்கள். எகிப்தில் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது.

அட்லாண்டீஸ்லிருந்து தப்பி வந்த மக்களுடன் நல்லதொரு தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டான் மிபலோ. சாங்கோ மிபலோ மேல் அதிகம் பொறாமை கொண்டான். மிபலோ தான் மிகப்பெரிய பிரமிட் ஒன்றை கட்ட வேண்டும் என எனும் எண்ணம் கொண்டு அட்லாண்டீஸ்காரர்களுடன் இணைந்து திட்டத்தைத் தொடங்கினான். எரிச்சலுற்ற சாங்கோ அதிக செல்வங்களுடன் ரேண்ட்டருடன் தனது ஊருக்கான பயணத்தைத் தொடங்கினான். தான் எழுதி வைத்திருந்த அனைத்தையும் பத்திரப்படுத்தினான் சாங்கோ. அவர்களை வழியனுப்பி வைத்தான் மிபலோ.

மிபலோ மீண்டும் குவ்விலானை எழுதச் சொன்னான். கடவுள். குவ்விலான் கடவுள் என்று மட்டுமே எழுதினான்.

பத்து வருடங்கள் போராடி மாபெரும் பிரமிட் ஒன்றைக் கட்டி முடித்தான் மிபலோ. இந்த பிரமிட் தனது எண்ணத்தால் அலங்கரிக்கப்படட்டும், இந்த பூமியில் ஏற்பட்ட இந்த பிரளயத்தையும், அட்லாண்டீஸ்காரர்களின் சிறப்பைச் சொல்லட்டும் என்றான் மேலும். பிரமிட்டில் பாதுகாப்பான அறை ஒன்றில் தான் சொல்லி குவ்விலான் எழுதியதை எல்லாம் உள்ளே வைத்து பூட்டினான்.

பத்து வருடத்திற்குப் பின்னர் சாங்கோ சிரகமெராவுடன் எகிப்து நோக்கி பயணம் செய்தான்.

(தொடரும்)

வேத நூல் - 6

சாங்கோ அசையாது அப்படியே நின்றான். மூவரும் திரும்பிப் பார்த்தபோது சாங்கோ தொடர்ந்து வராததைக் கண்டு ரேண்ட்டர் கோபம் கொண்டார். ஏனிவன் இப்படி நடந்து கொள்கிறான் என அவனை அழைக்கச் சென்றார். சாங்கோ ரேண்ட்டரிடம் ''இது நம்மைப்போன்றவர்கள் வாழும் பகுதியாகத் தெரிகிறது, இல்லையெனில் இத்தனைப் பெரிய கல் தானாக உயர்ந்து இருக்காது. எதற்கு ஆயுதங்களைத் தயார்நிலையில் வைத்திருப்போம்'' என்றான். ''ஏன் விலங்கினங்களை வேட்டையாடியது போதாதென்று மனிதர்களையும் வேட்டையாடப் போகிறாயா? எனது குறிக்கோள் இங்கிருந்து செல்வங்களை அள்ளிச் செல்வது மட்டுமே'' என்றார் ரேண்ட்டர். ''சரி நடக்கலாம்'' என்றான் சாங்கோ.

சிறிது நேரத்தில் அவர்களை வழிமறித்து நிறுத்தினான் ஒருவன். தன்னை கிரகமெஸ்ட் என அறிமுகப்படுத்தியவன், யார் எவர் என விபரங்கள் விசாரித்துவிட்டு அவர்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டுச் சென்றான். அவர்கள் பேசியதை கிரகமெஸ்ட் புரிந்தவன் போல் தலையாட்டினான். எந்த இடம் செல்கிறோம், என்ன நடக்கும் என அறியாமல் அவனைப் பின் தொடர்ந்தார்கள். ஆனால் சாங்கோ தன் தந்தையிடம் அந்த நபரை அடித்துப் போட்டுவிடலாம் என சொன்னான்.

இதைக்கேட்ட மிபலோ சாங்கோவிடம் ''தேவையில்லாது பிரச்சினைகளை வளர்க்காதே, அமைதியாக இரு, இது புதிய இடம்'' என்றான். கிரகமெஸ்ட் அவர்களை ஒரு கல் கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்றான். அவர்களைப் பார்த்ததும் ''அட்லாண்டீஸ் காரர்களா'' என்றான் தலைமை அதிகாரியாய் அமர்ந்து இருந்த ரேவிரன். ''இல்லை, தமிழ்காரர்கள்'' என்றான் கிரகமெஸ்ட். ''அட்லாண்டிஸ்காரர்கள் போல் இவர்களும் பிரமிட் கட்டப் போகிறார்களா?'' என்றான் ரேவிரன். ''இங்கேயிருந்து திருடிச்செல்ல வந்திருக்கிறார்கள்'' என்றான் கிரகமெஸ்ட்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என அறியாது இருந்தாலும் சூழ்நிலையை அறிந்தான் மிபலோ. ''திருட வந்திருக்கிறார்களா?, அவர்களைக் கொன்றுவிடு'' எனச் சொல்லி அனுப்பினார். ''வாருங்கள் போகலாம்'' என அழைத்தான் கிரகமெஸ்ட். மிபலோ, குவ்விலான் எழுதியிருந்த எழுத்தை வாங்கிக்கொண்டு ரேவிரனை நோக்கி முன்னேறினான்.

(தொடரும்)

வேத நூல் - 5

அந்த நிலப்பரப்பை ஒட்டியே படகை செலுத்தச் சொன்னான் மிபலோ. சாங்கோ அதிக ஆத்திரம் அடைந்தான். இங்கேயே இறங்கிக் கொள்ளலாம், இனியும் படகை செலுத்துவது என்பது அவசியமற்றது என்றான் சாங்கோ. ஆனால் ரேண்ட்டர் மிபலோ என்ன சொன்னானோ அதையே செய்வேன் என்றார். அது சாங்கோவுக்கு மேலும் ஆத்திரத்தை அதிகமாக்கியது.

என்னை இந்த நிலப்பரப்பில் இறக்கிவிட்டுத் தாராளமாகச் செல்லுங்கள் என்றான் சாங்கோ. குவ்விலான் பேச முடியவில்லையே என வேதனையில் இருந்தான். குவ்விலான் சாங்கோவுக்கு எழுத்து மூலம் எண்ணம்தனை காட்டிட எண்ணி எழுதினான். மிபலோ சொல்லுமிடத்துக்கேச் செல்லலாம்.

அதைப்படித்த சாங்கோ சட்டென அமைதியானான். மிபலோவுக்கும் ரேண்ட்டருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உணவு சேகரித்துக் கொண்டு நிலப்பரப்பின் ஓரத்திலேயே படகைச் செலுத்தி ஓரிடம் அடைந்ததும் மிபலோ நிறுத்தச் சொன்னான். நிலப்பரப்பில் இறங்கி நடக்க ஒரு பெரிய பிரமிட் தெரிந்தது.

இங்கேதான் நான் வர நினைத்தேன் எனத் துள்ளினார் ரேண்ட்டர். மிபலோ இதுநாள்வரை என்ன சொல்லி இருந்தானோ அதையெல்லாம் கோர்வையாக எடுத்து வைத்திருந்தான் குவ்விலான். ஆனால் சாங்கோ முரணாக எழுதியதோடு தொகுப்பாக வைக்காது இருந்தான். பிரமிட் நோக்கி மூவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)

வேத நூல் - 4

ரேண்ட்டர் எல்லா வசதிகளுடன் பயணத்தைத் தயார் செய்தார். ஆனால் சிரகமெராவை வரவேண்டாம் என ரேண்ட்டர் சொன்னதால் சாங்கோவும் செல்ல மறுத்தான். பின்னர் சமாதனமாகி சாங்கோ மட்டுமே செல்வதாக முடிவு செய்தான்.

ரேண்ட்டர் தான் நிறைய செல்வங்களை ஒரு நிலத்தில் இருந்து அள்ளிக்கொண்டு வரப்போவதாக மட்டுமேச் சொன்னார். ஆனால் எந்த திசையில் செல்வது எப்படிச் செல்வது என எதையும் முடிவு செய்யாமலே கடலில் பயணிக்க எண்ணியது சாங்கோவுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் மிபலோ மிகவும் சந்தோசமாக இருந்தான். எழுதுவதற்குத் தேவையான அளவு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டான் சாங்கோ.

அந்த ஊரில் இருந்தவர்கள் ரேண்ட்டரை கடுமையாக எச்சரித்தார்கள். மேலும் இனிமேல் நீ திரும்பி வரப்போவதில்லை என்பதை உறுதி செய்கிறோம் எனவும் பயமுறுத்தினார்கள். மிபலோவையும், குவ்விலானையும் செல்ல வேண்டாம் என அவர்கள் வீட்டில் தடுத்தார்கள். ஆனால் இந்த பயணம் சிறப்பாகவே முடியும் என மிபலோ உறுதியுடன் சொன்னதைக் கேட்டு இருவர் வீட்டிலும் அமைதியானார்கள்.

பயணத்திற்காக பலநாட்களாகத் தயாரிக்கப்பட்ட படகில் நால்வரும் அமர்ந்ததும் மிபலோ மேற்கே நோக்கி படகைச் செலுத்தச் சொன்னான். அலைகளின் மேல் மிதந்தது. அலைகளும் வழி தந்தது. மிபலோவின் எண்ணங்களைச் சொல்லச் சொன்னான் சாங்கோ.

''இரவும் பகலும் சூரியக் கதிர்களால் உருவாகிறது. சூரியக் கதிர்களை ஓரளவுக்கு மறைக்கும் தன்மை பூமியின் மேலிருக்கும் வான்படலத்துக்கு உண்டு'' என்றான் மிபலோ. குவ்விலான் எழுதினான். ரேண்ட்டர் மிபலோவை ஆச்சரியமாகப் பார்த்தார். சாங்கோ யோசித்து வரிகளை மாற்றினான்.

''இரவு பகலை உருவாக்குகிறது, பகல் இரவை உருவாக்குகிறது. இந்த இரண்டும் உருவாகக் காரணம் சாத்தான்'' என எழுதினான் சாங்கோ. சாங்கோ என்ன எழுதினான் என்பதைப் படிக்க நினைத்த குவ்விலான் பார்த்தான். எழுதியதைப் படித்ததும் குவ்விலான் மிபலோவிடம் சைகையால் எதுவும் சொல்லாதே என நிறுத்தச் சொன்னான். ஆனால் மிபலோ நான் சொல்வதை நீ அப்படியே எழுதிக் கொண்டு வா, அவன் இஷ்டத்துக்கு எழுதட்டும் என்றான்.

ரேண்ட்டர் படகினை வேகமாகச் செலுத்தத் தொடங்கினார். நிலப்பரப்பு தென்பட்டது. படகை நிறுத்தினார். அங்கே ஆட்கள் யாருமே தென்படவில்லை. ஆனால் விலங்கினங்கள் தென்பட்டது. தன்னிடம் இருந்த ஆயுதங்களை எடுத்து வேட்டையாடத் தயாரானார் ரேண்ட்டர். மிபலோ தடுத்தான். ரேண்ட்டர் அதிசயமாக ஆயுதங்களை கீழே வைத்தார். சாங்கோவுக்குப் புரியாமல் இருந்தது. ஆனாலும் மிபலோ தடுத்தும் ஒரு விலங்குதனை வீழ்த்தினான் சாங்கோ.

சாங்கோ அந்த விலங்கினை அங்கேயே சமைத்தான். இது மிபலோவுக்குப் பிடிக்காது இருந்தது. அங்கேயிருந்த பழங்களை உண்டான். குவ்விலானும் மிபலோவின் வழியிலேயே சென்றான். ரேண்ட்டர் மிபலோவிடம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார். ஆனால் மிபலோவும் குவ்விலானும் மறுத்தார்கள்.

அங்கேயிருந்து படகினைச் செலுத்த பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. கொண்டு வந்த உணவும், சேகரித்த உணவும் குறையத் தொடங்கியது. எங்கேதான் செல்கிறோம் எனக் கேட்டான் சாங்கோ, பொறுமையுடன் இரு என ரேண்ட்டர் அறிவுறுத்தினார். இந்த பயணத்தின்போது மிபலோ மிகச் சில விசயங்களையே சொல்லி இருந்தான். வழக்கம்போல சாங்கோ மாற்றிக்கொண்டே வந்தான். பலநாட்கள் பயணத்தின் பின்னர் ஒரு நிலப்பரப்பு தென்பட்டது. அனைவரும் உற்சாகமானார்கள்.

(தொடரும்)

Tuesday 30 June 2009

வேத நூல் - 3

சாங்கோ மிபலோவிடம் விளக்கம் சொல்ல சொன்னான். மிபலோ விளக்கம் தெரியாது என்றான். பிறகு ஏன் அந்த வார்த்தையைச் சொன்னாய் என்றான் சாங்கோ. அந்த வார்த்தையைக் குறித்துத்தான் நான் இத்தனை நாட்களும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறேன் என்றான் மிபலோ. சாங்கோவுக்கு கோபம் வந்தது. ஏன் எண்ணங்கள் தயார் என்றாய் என்றான் சாங்கோ.

சாங்கோ கோபம் அடைந்ததைப் பார்த்த குவ்விலான் சில வரிகள் எழுதினான். ''கடவுள் - எந்த ஒரு சுவடும் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கும்''. குவ்விலான் எழுதியதைப் பார்த்த சாங்கோ கடும் கோபம் கொண்டான். குவ்விலானைப் பார்த்து கிழித்துப் போடு எனக் கத்தினான்.

மிபலோ என்ன சொல்கிறானோ அதை மட்டுமே நாம் எழுத வேண்டும், நீ சொல்ல நினைப்பதை தனியாக எழுதிக் காட்டு, இப்படி ஒன்றுடன் ஒன்று கலக்காதே என சீறிட்டான். இதையெல்லாம் கேட்டு மிபலோ பொறுமையாகவே இருந்தான். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டான் சாங்கோ மறுபடியும். அப்பொழுது மிபலோ சொன்னான். ''அர்த்தமற்று இருக்கும், ஆனால் அர்த்தம் பொதிந்து இருக்கும், எனக்கு அர்த்தம் தெரியாது'' என்றான் மிபலோ.

சாங்கோ எரிச்சல் அடைந்தான். சாத்தான் என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் எழுதுவது என முழித்தான். சரி மேலே சொல்லு என்றான் சாங்கோ. ''கடல், ஆகாயம் நமக்குக் கிடைத்த ஆதாயம்'' என்றான் மிபலோ. அவன் சொன்னதைக் கேட்டதும் குவ்விலானிடம் எழுதிக்கொள், எழுதிக் கொள் இவனைப் பெரிய சிந்தனையாளன் என நினைத்தேன், சரியான முட்டாளாக இருக்கிறான் என்றான் சாங்கோ. சொல்லிக்கொண்டே கடல் ஆகாயம் சாத்தானால் உருவானது என எழுதினான் சாங்கோ. மிபலோ சிரித்துக்கொண்டு நாளைத் தொடரலாம் என எழுந்தான். இவ்வளவுதானா? என்றான் சாங்கோ. நிறைய இருக்கிறது என நடந்தான் மிபலோ. அப்படியென்றால் இன்னும் சொல் என்றான் சாங்கோ.

சாங்கோவை நோக்கி ''என் சிந்தனையை வெல்ல உன் சிந்தனைக்கு எப்படி வலிமை வந்தது'' என்றான் மிபலோ. சாங்கோ அதிர்ச்சி அடைந்தான். குவ்விலானுக்கு ஒன்றும் புரியவில்லை. சாங்கோவின் கையில் இருந்ததை பறித்த குவ்விலான் அதைப் படித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ''நான் சொன்னதை மாற்றி எழுதுகிறான் இவன்'' என்றான் மிபலோ. மிபலோ சொன்னதை கேட்டதும் ஆம் எனத் தலையாட்டினான் குவ்விலான்.

''இருவரின் கை அசைவுகளும் எழுத்து வடிவமும் வேறாக இருப்பது கூடவா எனக்குத் தெரியாது'' என சொன்னான் மிபலோ. சுதாரித்துக் கொண்ட சாங்கோ நான் சரியாகவே எழுதுகிறேன், இவனே மாற்றி எழுதுகிறான் என சொன்னான் சாங்கோ. மிபலோ சாங்கோ சொன்னதை நம்பிட தயாராக இல்லை. ''இனிமேல் என் சிந்தனைகள் நீ எழுதாதே, குவ்விலானே எழுதட்டும்'' என மிபலோ சொன்னதும் சாங்கோ கோபத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

மிபலோ குவ்விலானிடம் ''நீ நான் சொல்வதை அப்படியே எழுதுவாய் என்ற என் நம்பிக்கையை சிதறடித்துவிடாதே'' என்றான். குவ்விலான் கண்கள் பணித்தான். இருவரும் சாங்கோவைத் தேடிச் சென்றார்கள். சாங்கோ சிரகமெராவிடம் இவ்விருவரைப் பற்றிக் கத்திக் கொண்டிருந்தான். சிரகமெரா சமாதனம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

''சாங்கோ நீ எங்களுடனே எப்போதும் போல் இருக்க வேண்டும் நீ எப்படி வேண்டுமெனினும் எழுது'' என்றான் மிபலோ. குவ்விலான் மன வருத்தம் கொண்டான். ஆனால் வெளிக்காட்டாமல் இருந்து கொண்டான். சாங்கோவின் தந்தை அன்றே தான் கடல்வழிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொன்னதும் சாங்கோ தானும் வருவதாக சொன்னான். மிபலோவும் இணைந்து கொள்வதாக சொன்னான். குவ்விலான் வேறு வழியின்றி சேர்ந்து கொண்டான்.

எந்த திசை செல்லலாம் என சாங்கோவே முடிவை எடுத்தான். மிபலோ சிந்தனைகளை மேலும் மெருகேற்றத் தொடங்கினான். அன்றே பயணத்திற்கான நாளைக் குறித்தார் சாங்கோவின் தந்தை ரேண்ட்டர். சிரகமெரா சாங்கோவிடம் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். சாங்கோ மறுப்பு தெரிவிக்க சிரகமெரா ஆர்பாட்டம் பண்ணினாள். சரி என்றான் சாங்கோ.

(தொடரும்)

Monday 29 June 2009

வேத நூல் - 2

அத்தியாயம் 2.

''என்ன யோசனை'' என்றான் சாங்கோ. மிபலோ தான் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகக் கூறினான். சாங்கோ சிரித்தான். ''உன் ஆழ்ந்த சிந்தனைக்கு வழி செய்கிறேன்'' என சொல்லிவிட்டு தான் ஒரு வார்த்தைச் சொல்லி அதற்கான எழுத்தை வரைந்தான் சாங்கோ. குவ்விலான் அதே போல மணலில் எழுதிக் காட்டினான். மிபலோவை எழுதச் சொன்னபோது அதிலெல்லாம் ஆர்வமில்லாதவன் போல சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தையில் உள்ள எழுத்துக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தான் சாங்கோ. ஒரு எழுத்துக்கு ஒரு வடிவம் என்பதிலே கவனமாக இருந்தான். இப்படியாக தினமும் இவர்கள் இவ்வாறு செய்ய சாங்கோவின் தந்தை சாங்கோவின் எண்ணம் அறிந்து பாராட்டினார். சில எழுத்துக்கள் உருவாக்கிய பின்னர் அந்த எழுத்தை வைத்தே சிரகமெராவுக்கு ஒரு கவிதை எழுதினான் சாங்கோ.

''காதல் மனதோடு களிக்கும்'' என அர்த்தம் தந்தது அந்த மூன்று வார்த்தை கவிதை. சாங்கோ அதை குவ்விலானிடம் வாசித்துக் காட்ட குவ்விலான் ''காதல் கண் காண்பதில்லை'' என எழுதினான். அதில் வந்த ஒரு எழுத்தைப் புரியாத சாங்கோ என்ன எனக் கேட்டான். ''புது எழுத்து'' என எழுதினான் குவ்விலான். சாங்கோ கோபம் கொண்டான். ''நான் உருவாக்குவது மட்டுமே எழுத்து, நீயாக உருவாக்குவது எனில் நீயே செய்து கொள், ஏன் நான் உருவாக்கவேண்டும்'' என கோபத்துடன் கூறினான். பக்கம் பக்கமாக எழுத இயலாமலேயே இருந்தது. மிஞ்சிப் போனால் பத்து வார்த்தைகளையே எழுத முடிந்தது.

சாங்கோவும் குவ்வில்லானும் எழுத்து வடிவத்தை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வயதும் ஆகிக் கொண்டிருந்தது. தனது கவிதை என சிரகமெராவிடம் சாங்கோ ஒருமுறை சொல்ல சிரகமெரா தனது கண்களை மூடியும் திறந்து காட்டிவிட்டு ''கண் பேசாதோ காதல்கவிதை'' என சொல்லிவிட்டு ஓடினாள். சாங்கோ துள்ளினான். குவ்விலானிடம் ''காதல் கண் காண்பதில்லை, கண் காதல் பேசும்'' என சொன்னதும் குவ்வில்லான் கைதட்டி ஆரவாரம் செய்தான். ஆனால் மிபலோ சீரிய சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான். பதினைந்து வயது ஆகி இருந்தது. ஓரளவுக்கு எல்லா எழுத்துக்கும் வடிவம் கொடுத்து வைத்தான் சாங்கோ. அத்தனையும் பத்திரமாக சேமித்தான். குவ்விலான் சாங்கோ சொன்னதிலிருந்து எழுத்தை உருவாக்கவில்லை, ஏனெனில் என்ன எழுதுகிறோம் என புரியாது என விட்டுவிட்டான்.

ஒருநாள் மிபலோ ''எழுத்துக்கள் தயாரா? என் எண்ணங்கள் தயார்'' என சொன்னான். ''கொஞ்சம் நாளாகட்டும்'' என்றான் சாங்கோ. குவ்விலான் தனது மனதில் தோன்றுவதை ஒவ்வொருமுறை எழுதிக் காட்டினான். ஒருமுறை ''சிரகமெரா எனக்குப் பிடித்தமானவள்'' என குவ்விலான் எழுதி வைக்க சாங்கோ கோபத்தின் உச்சத்திற்கேப் போனான். ''உன்னை வேட்டையாடி விடுவேன் அவள் எனக்கானவள்'' என்றான் சாங்கோ. குவ்விலான் ''நான் அவ்வாறு அர்த்தம் கொள்ளவில்லை'' என எழுதிவிட்டு அன்றிலிருந்து எழுதுவதையே விட்டுவிட்டான். சாங்கோ தினமும் கடும்பயிற்சி மேற்கொண்டான். குவ்விலான் எழுத்து வடிவம் மறக்க ஆரம்பித்தான்.

குவ்விலானிடம் சாங்கோ மன்னிக்குமாறு கூறியவன் எழுத்து வடிவம் கற்றுக்கொண்டு மனதில் உள்ளதை எழுது என சொன்னான் சாங்கோ. குவ்விலான் அதன்பின்னர் எழுத்து வடிவம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். சிரகமெராவிடம் குவ்விலான் எழுதியதை ஒருநாள் சாங்கோ விளையாட்டாக சொல்ல சிரகமெரா குவ்விலான் மேல் பரிவு கொண்டாள். தினங்கள் நகர பதினெட்டு வயதை அடைந்தார்கள். மிபலோ பொறுமையிழக்காது இருந்தான். சாங்கோ ஆச்சரியமாக மிபலோவிடம் கேட்டான் ''உனக்குப் பொறுமை போகவில்லையா?'' மிபலோ சொன்னான், ''நீ தயாராக இருந்தால்தானே என் எண்ணங்கள் சொல்ல முடியும், உன்னை அவசரப்படுத்த எனக்கு விருப்பமில்லை, என் சிந்தனைகள் மேலும் மெருகேறும்'' என்றான் மிபலோ. அப்போது குவ்விலான் ''நான் எழுதுகிறேன், நீ சொல்'' என்றான். இதுதான் தருணம் என நினைத்த சாங்கோ ''நாம் இருவரும் எழுதலாம்'' என்றான்.

எட்டு வருடத்தில் எழுத்தை எழுத பலவிதமாக முயன்று எழுதுகோலும், மையும் உருவாக்கி இருந்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என யாருமே கண்டுகொள்ளவில்லை. யாருக்கும் அக்கறை இல்லை. சிரகமெரா குவ்விலான் எழுத்தைப் போற்ற ஆரம்பித்து இருந்தது சாங்கோவுக்கு எரிச்சல் தர ஆரம்பித்து இருந்தது, ஆனால் தனது மனதில் கொண்ட திட்டம் நிறைவேற சாங்கோ வெளிக்காட்டாது அமைதியாக குவ்விலான் என்ன எழுதினானோ அதையே சிரகமெராவுக்கும் மிபலோவுக்கும் வாசித்துக் காட்டினான். குவ்விலான் எழுத்து வடிவம் அழகாக இருந்தது.

மிபலோ முதல் வார்த்தை சொன்னான். ''கடவுள்'' மிபலோ சொன்னதும் குவ்விலான் ''கடவுள்'' என எழுதினான். சாங்கோ ''சாத்தான்'' என எழுதி வைத்தான்.

(தொடரும்)

வேத நூல் - 1

அத்தியாயம் 1.

கி.மு 10400.

பேச மட்டுமே வழக்கத்தில் இருந்த மொழி. எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்படாமல் இருந்த காலம். ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள ஒரே விதமான ஒரே மொழி. ஒரு வார்த்தைக்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே. இப்படிப் பேசும் மொழியை முதலில் எழுத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தவன் சாங்கோ.

சாங்கோவின் நண்பர்கள் மிபலோ, குவ்விலான். குவ்விலானுக்கு பேச வராது. வெறும் சைகை மட்டுமே. இதனால் குவ்விலான் மனதில் இருக்கும் விசயங்களை அவன் சொல்வதற்கு ஏற்றபடி எழுத்தை உருவாக்க வேண்டும் என எட்டு வயதாக இருக்கும்போது சாங்கோவுக்கு ஒரு எண்ணம் உருவானது.

சாங்கோ இருந்த இடம் தானேஸ்ரா என அப்பொழுது அழைக்கப்பட்டது. மொத்தக் குடும்பங்கள் பதினெட்டு. இது தற்போதைய கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இடமாகும். அந்த ஊரில் இருப்பவர்கள் கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டு வருவதும், காட்டில் சென்று வேட்டையாடி வருவதும் தான் முக்கியத் தொழில்.

மிபலோ எப்பொழுதும் அமைதியாகவே இருப்பவன். அவனது ஆழ்ந்த சிந்தனையைக் கண்டு சாங்கோ பொறாமைப்படுவான், ஆனால் நண்பர்களாக இம்மூவர் மட்டுமே சேர்ந்து இருந்தனர். விளையாட்டு, உறக்கம் இதுதான் அந்த ஊர்ச் சிறுவர்களின் தொழில். ஆனால் சாங்கோ, மிபலோ, குவ்விலான் மூவரும் தங்களது தந்தையர்களுடன் வேட்டையாட, மீன் பிடிக்கச் செல்வார்கள்.

குரு என்றால் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. அன்னையும் தந்தையும் மட்டுமே குருவாக விளங்கினர். மிகவும் அச்சத்துடனே வாழ்ந்து வந்தவர்கள், அச்சத்தை எதிர்த்துக் கொள்ள ஆயுதம் செய்து வைத்துக் கொண்டனர். இந்த ஆயுதங்கள் எல்லாம் மிபலோவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. சாங்கோவிடம் இப்படி உயிர் வதைப்பதை நிறுத்த வேண்டும் என சிறு வயதிலேயே சொல்வான் மிபலோ. மிபலோ தனது பெற்றோர்களிடம் இவ்விசயத்தைக் கூறியபோது பயந்தால் ஒன்றும் நடக்காது, வீரமுடன் இருக்க வேண்டும் எனச் சொல்லி அடக்கி வைத்தார்கள்.

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல ஒரு மாத காலம் ஆகும். எனவே ஊர்த் தொடர்பு எல்லாம் ஒரு சில ஊர்களுக்கு மட்டும் தான். சிரகமெரா எனும் சிறுமிக்கு சாங்கோவை மிகவும் சிறு வயதிலேயேப் பிடித்து இருந்தது. சிரகமெராவைக் கண்டால் மகிழ்ச்சியில் துள்ளுவான் சாங்கோ.

எழுத்தை உருவாக்கும் முயற்சியில் சாங்கோ இறங்கியபோது அவனுக்கு பத்து வயதாகி இருந்தது. ஒருநாள் மிபலோ ஆர்வத்துடன் நீ எழுத்தை உருவாக்கி விடுவாயா, அப்படி உருவாக்கினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றான். அதற்கு சாங்கோ நிச்சயம் உருவாக்குவேன் எனக்கு குவ்விலான் மனதில் இருப்பதை அறிய ஆவல், அவனது சைகை எனக்குப் புரியமாட்டேன்கிறது என்றான்.

குவ்விலானுக்கு மட்டும்தான் எழுத்தை உருவாக்குகிறாயா, எனக்காக உருவாக்கமாட்டாயா? எனக் கேட்டான் மிபலோ. ஏன் நீதான் பேசுகிறாயே என்றான் சாங்கோ. நான் பேசுகிறேன் ஆனால் எனது ஆழ்ந்த சிந்தனைகள் அனைத்தையும் ஒன்றாக எழுதி வைக்க வேண்டும் என்றான் மிபலோ. அப்படியெனில் நீயே உருவாக்கிக் கொள் என்றான் சாங்கோ. எனக்கு எழுத வராது, மணலில் நான் வரைந்த படம் எல்லாம் பார்த்தாயா எப்படி இருந்தது என பரிதாபமாகச் சொன்னான் மிபலோ. அது மணல் அழியத்தான் செய்யும் என்று சொன்ன சாங்கோ எழுத்தை உருவாக்கலாம் ஆனால் அதை எதில் எழுதுவது என யோசித்தான்.

என்ன யோசனை எனக் கேட்டான் மிபலோ. எதில் எழுதுவது என்றான் சாங்கோ. இந்த விசயத்தையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த குவ்விலான் அவர்களை அழைத்துச் சென்று பெரிய இலையைக் காட்டினான். சந்தோசமானான் சாங்கோ. பக்கத்தில் இருந்த ஒரு மரத்தை பிடித்து பழங்களை உலுக்கினான் குவ்விலான். பழங்களை சாறாக்கினான். சாறு கருப்பாக இருந்தது. ஒரு சின்னக் குச்சியை எடுத்து அச்சாறில் தொட்டு இலையில் ஒரு கோடு போட்டான் குவ்விலான். சாங்கோ உற்சாகமானான். மிபலோ ஆழ்ந்த சிந்தனையில் அப்பொழுதே அமர்ந்தான்.

(தொடரும்)