Monday 29 June 2009

வேத நூல் - 2

அத்தியாயம் 2.

''என்ன யோசனை'' என்றான் சாங்கோ. மிபலோ தான் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகக் கூறினான். சாங்கோ சிரித்தான். ''உன் ஆழ்ந்த சிந்தனைக்கு வழி செய்கிறேன்'' என சொல்லிவிட்டு தான் ஒரு வார்த்தைச் சொல்லி அதற்கான எழுத்தை வரைந்தான் சாங்கோ. குவ்விலான் அதே போல மணலில் எழுதிக் காட்டினான். மிபலோவை எழுதச் சொன்னபோது அதிலெல்லாம் ஆர்வமில்லாதவன் போல சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தையில் உள்ள எழுத்துக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தான் சாங்கோ. ஒரு எழுத்துக்கு ஒரு வடிவம் என்பதிலே கவனமாக இருந்தான். இப்படியாக தினமும் இவர்கள் இவ்வாறு செய்ய சாங்கோவின் தந்தை சாங்கோவின் எண்ணம் அறிந்து பாராட்டினார். சில எழுத்துக்கள் உருவாக்கிய பின்னர் அந்த எழுத்தை வைத்தே சிரகமெராவுக்கு ஒரு கவிதை எழுதினான் சாங்கோ.

''காதல் மனதோடு களிக்கும்'' என அர்த்தம் தந்தது அந்த மூன்று வார்த்தை கவிதை. சாங்கோ அதை குவ்விலானிடம் வாசித்துக் காட்ட குவ்விலான் ''காதல் கண் காண்பதில்லை'' என எழுதினான். அதில் வந்த ஒரு எழுத்தைப் புரியாத சாங்கோ என்ன எனக் கேட்டான். ''புது எழுத்து'' என எழுதினான் குவ்விலான். சாங்கோ கோபம் கொண்டான். ''நான் உருவாக்குவது மட்டுமே எழுத்து, நீயாக உருவாக்குவது எனில் நீயே செய்து கொள், ஏன் நான் உருவாக்கவேண்டும்'' என கோபத்துடன் கூறினான். பக்கம் பக்கமாக எழுத இயலாமலேயே இருந்தது. மிஞ்சிப் போனால் பத்து வார்த்தைகளையே எழுத முடிந்தது.

சாங்கோவும் குவ்வில்லானும் எழுத்து வடிவத்தை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வயதும் ஆகிக் கொண்டிருந்தது. தனது கவிதை என சிரகமெராவிடம் சாங்கோ ஒருமுறை சொல்ல சிரகமெரா தனது கண்களை மூடியும் திறந்து காட்டிவிட்டு ''கண் பேசாதோ காதல்கவிதை'' என சொல்லிவிட்டு ஓடினாள். சாங்கோ துள்ளினான். குவ்விலானிடம் ''காதல் கண் காண்பதில்லை, கண் காதல் பேசும்'' என சொன்னதும் குவ்வில்லான் கைதட்டி ஆரவாரம் செய்தான். ஆனால் மிபலோ சீரிய சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான். பதினைந்து வயது ஆகி இருந்தது. ஓரளவுக்கு எல்லா எழுத்துக்கும் வடிவம் கொடுத்து வைத்தான் சாங்கோ. அத்தனையும் பத்திரமாக சேமித்தான். குவ்விலான் சாங்கோ சொன்னதிலிருந்து எழுத்தை உருவாக்கவில்லை, ஏனெனில் என்ன எழுதுகிறோம் என புரியாது என விட்டுவிட்டான்.

ஒருநாள் மிபலோ ''எழுத்துக்கள் தயாரா? என் எண்ணங்கள் தயார்'' என சொன்னான். ''கொஞ்சம் நாளாகட்டும்'' என்றான் சாங்கோ. குவ்விலான் தனது மனதில் தோன்றுவதை ஒவ்வொருமுறை எழுதிக் காட்டினான். ஒருமுறை ''சிரகமெரா எனக்குப் பிடித்தமானவள்'' என குவ்விலான் எழுதி வைக்க சாங்கோ கோபத்தின் உச்சத்திற்கேப் போனான். ''உன்னை வேட்டையாடி விடுவேன் அவள் எனக்கானவள்'' என்றான் சாங்கோ. குவ்விலான் ''நான் அவ்வாறு அர்த்தம் கொள்ளவில்லை'' என எழுதிவிட்டு அன்றிலிருந்து எழுதுவதையே விட்டுவிட்டான். சாங்கோ தினமும் கடும்பயிற்சி மேற்கொண்டான். குவ்விலான் எழுத்து வடிவம் மறக்க ஆரம்பித்தான்.

குவ்விலானிடம் சாங்கோ மன்னிக்குமாறு கூறியவன் எழுத்து வடிவம் கற்றுக்கொண்டு மனதில் உள்ளதை எழுது என சொன்னான் சாங்கோ. குவ்விலான் அதன்பின்னர் எழுத்து வடிவம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். சிரகமெராவிடம் குவ்விலான் எழுதியதை ஒருநாள் சாங்கோ விளையாட்டாக சொல்ல சிரகமெரா குவ்விலான் மேல் பரிவு கொண்டாள். தினங்கள் நகர பதினெட்டு வயதை அடைந்தார்கள். மிபலோ பொறுமையிழக்காது இருந்தான். சாங்கோ ஆச்சரியமாக மிபலோவிடம் கேட்டான் ''உனக்குப் பொறுமை போகவில்லையா?'' மிபலோ சொன்னான், ''நீ தயாராக இருந்தால்தானே என் எண்ணங்கள் சொல்ல முடியும், உன்னை அவசரப்படுத்த எனக்கு விருப்பமில்லை, என் சிந்தனைகள் மேலும் மெருகேறும்'' என்றான் மிபலோ. அப்போது குவ்விலான் ''நான் எழுதுகிறேன், நீ சொல்'' என்றான். இதுதான் தருணம் என நினைத்த சாங்கோ ''நாம் இருவரும் எழுதலாம்'' என்றான்.

எட்டு வருடத்தில் எழுத்தை எழுத பலவிதமாக முயன்று எழுதுகோலும், மையும் உருவாக்கி இருந்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என யாருமே கண்டுகொள்ளவில்லை. யாருக்கும் அக்கறை இல்லை. சிரகமெரா குவ்விலான் எழுத்தைப் போற்ற ஆரம்பித்து இருந்தது சாங்கோவுக்கு எரிச்சல் தர ஆரம்பித்து இருந்தது, ஆனால் தனது மனதில் கொண்ட திட்டம் நிறைவேற சாங்கோ வெளிக்காட்டாது அமைதியாக குவ்விலான் என்ன எழுதினானோ அதையே சிரகமெராவுக்கும் மிபலோவுக்கும் வாசித்துக் காட்டினான். குவ்விலான் எழுத்து வடிவம் அழகாக இருந்தது.

மிபலோ முதல் வார்த்தை சொன்னான். ''கடவுள்'' மிபலோ சொன்னதும் குவ்விலான் ''கடவுள்'' என எழுதினான். சாங்கோ ''சாத்தான்'' என எழுதி வைத்தான்.

(தொடரும்)

No comments: