Friday 26 June 2009

பழங்காலச் சுவடுகள் - 8

இருவரும் ஒருவழியாய் விடுதியை அடைந்தார்கள். பிரமை பிடித்தது போல் இருந்தது. இனிமேல் இப்படி ஒரு தவறை செய்யக் கூடாது என சின்னசாமி எச்சரிக்கை செய்தார்.

''விவிட் அம்மா இறக்கும்போது இந்தியா இந்தியா என சொன்னார்களே''

''இப்ப என்ன வேணும் உனக்கு, இப்பதான் உயிர் தப்பிச்சி வந்திருக்கோம்''

''விவிடோட அப்பா எங்க இருக்காருனு சொல்லலையே''

''இப்ப என்ன வேணும் உனக்கு''

''நாளைக்கு அந்த இடத்துக்கு நாம போகனும்''

''உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அகிலா''

''போய்த்தான் ஆகனும்''

''பெரு நாட்டுக்கு கூட போக வேண்டாம், நாளைக்கே நாம இந்தியா போவோம்''

''நீங்க போங்க நான் வரலை''

''இங்க இருந்து என்ன பண்ண போற, நானே பயத்துல செத்துகிட்டு இருக்கேன்''

''பயம் தற்காப்புனு என்ன என்னமோ சொன்னீங்க''

''நீ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிட்ட''

''பொக்கிசங்கள் பாக்கனும்''

''தீயில போட்டு பொசுக்கப் போறான்''

அகிலா பிடிவாதம் பிடித்தாள். சின்னசாமி கோபம் அடைந்தார். ஆனால் அகிலா விடாமல் அடம்பிடித்தாள். இரவெல்லாம் யோசித்தார் சின்னசாமி. காலை முதல் வேலையாய் விடுதியை காலி பண்ணும் திட்டத்துடன் உறங்கினார். ஆனால் அகிலா வேறு திட்டம் வைத்து இருந்தாள். காலையில் எழுந்ததும் அகிலா தனது விருப்பபடியே நடக்க வேண்டும் என கூறினாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சின்னசாமிக்கு. சாவது என முடிவாகிவிட்டது என மெத்தையில் பொத்தென விழுந்தார் சின்னசாமி. அகிலா அவசரப்படுத்தினாள்.

வாகன ஓட்டி யாரும் வர மறுத்தார்கள். பெரும் சேதம் நடந்து இருப்பதாகவும் அந்த இடத்துக்கு செல்வது ஆபத்து எனவும் கூறினார்கள்.

''காவல் துறை எதுவும் செய்வதில்லையா''

''அப்பகுதியில் வாழும் மக்களிடம் யாரும் தொடர்பு வைத்து கொள்வதில்லை. இது போன்று இவர்களுடன் சேர்த்து மொத்தம் மூன்று கூட்டமைப்பு இருக்கிறது. அது அவர்களின் தனி பிரதேசம். இம்முறை பெரிய சேதம் நடந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. நைல் நதியை ரத்த நதியாக்கும் கூட்டங்கள். இந்நேரம் மற்ற இரு கூட்டங்களும் அங்கே வந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது''

''சற்று தொலைவில் எங்களை விட்டு விட்டு வாருங்கள்''

சின்னசாமி மிகவும் எரிச்சல் அடைந்தார்.

''அதான் வரமாட்டோம்னு சொல்றாங்கள இனி உன் பாடு''

''...''

ஒரு வாகன ஓட்டி சம்மதம் சொன்னார். சற்று தொலைவில் இறக்கிவிடுவதாக அழைத்துச் சென்றார். அகிலா வற்புறுத்தவே சற்று அருகிலேயே கொண்டு நிறுத்தினார்.

''காத்திருக்க முடியுமா''

''என்னை யாராவது தாக்காமல் இருந்தால் இங்கேயே இருப்பேன்''

சின்னசாமி திட்டிக்கொண்டே நடந்தார். அகிலா அப்பகுதியை அடைந்தாள். மக்கள் நடமாட்டம் இருந்தது. இடம் சுத்தமாக்கப்பட்டு இருந்தது. அருகில் நடந்து சென்றபோது இவர்களை நோக்கி ஒருவன் ஓடிவந்தான். சின்னசாமி தைரியம் வரவழைத்துக் கொண்டார். விவிட் அவன் பின்னால் ஓடி வந்தான். ஓடி வந்தவன் திரும்பி பார்த்து நின்றான். விவிட் அகிலாவிடம் கேட்டான்.

''இப்போ எதற்கு இங்கே வந்தீர்கள்''

''பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''...''

''என்ன நடக்கிறது இங்கே''

''எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது''

''நேற்றுதானே அமங்கலம் நடந்தது''

''நேற்று இன்றைய கணக்கில் வருவதில்லை''

''இவர்கள் எல்லாம் யார்''

''எங்கள் உறவினர்கள்''

''நேற்று நடந்தது பற்றி கவலை இல்லையா''

''பழையதை பற்றி பேச வேண்டாம்''

''அப்படியெனில் எதற்கு பொக்கிசங்கள் காக்கப்படுகிறது''

விவிட் திணறினான்.

''நீ சிந்து பெண்ணல்லவா அதுதான் இப்படி பேசுகிறாய்''

''நாங்கள் பெரு நாட்டுக்கு செல்ல வேண்டி இருக்கிறது, பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''சரி வாருங்கள்''

விவிட் அகிலாவையும் சின்னசாமியையும் பற்றி சொன்னான். ஒருவன் வாளை எடுத்தான். மற்றொருவனும் வாளை எடுத்தான். விவிட் கத்தினான். இரண்டு கூட்டமும் தனித்தனியாய் வேக வேகமாக நின்றது.

''என்னை பார்க்க வந்து இருக்கிறார்கள், விடுங்கள்''

அகிலாவுக்கு சுய நினைவில் இருப்பது போன்று எதுவும் தெரியவில்லை. சின்னசாமி முகம் வெளிறிப் போனது. சின்னசாமியின் கைகளைப் பிடித்தாள் அகிலா.

''அப்பவே சொன்னேன் கேட்டியா, சாமி வந்தது போல குதிச்ச''

''...''

பாதாள அறைக்குள் நுழைந்தார்கள். இருவரின் முகம் ஆச்சரியத்தில் அப்படியே கண்களை நிலை குத்தி நிற்க வைத்தது.

''இவை எல்லாம் சிந்து பகுதியையும் அதன் அருகில் இருக்கும் பகுதியையும் சார்ந்ததுதான், இதுதான் அலெக்சாண்டர் தந்த கேடயம்''

''உங்கள் தந்தை எங்கே''

''சிந்து பகுதிக்கு சென்று இருக்கிறார் அவர் வர ஒரு வருட காலம் ஆகும்''

''இவை வேத நூல்கள் அல்லவா''

''ஆம் எனது தந்தை மொழி பெயர்த்து எழுதியது அதோ அங்கே இருக்கிறது''

''மரண செய்தி கேட்டால் அவரின் நிலை''

''அதற்கெல்லாம் கவலைப்படமாட்டார்''

''நீங்கள் மானிட பிறவிகள் தானா''

''நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''வேத நூல்கள் வைத்து இருக்கீர்கள் ஆனால் மனிதம் அற்றவர்கள் என சொல்கிறீர்கள்''

''ஆம் மனிதம் அற்றவர்கள் நாங்கள்''

''வேதம் படித்தவர்களுக்கு நீங்கள் செய்வது இழுக்கு அல்லவா''

''மேலே வாளுடன் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லுங்கள்''

''என்ன பைத்தியகாரத்தனம் இது''

''இந்த சமவெளியில் நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம் எங்களிடம் துவேசத்தை நிரப்பினார்கள். நாகரிகம் வளர்த்த எங்களை மனிதம் அற்றவர்கள் ஆக்கியவர்கள் வேதம் என வேசம் போடுகிறார்கள்''

''புரியவில்லை''

''கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைகிறார்கள்''

''ஒரு சமுதாயமே அழிந்ததன் காரணம் நீங்கள்''

''ஒரு சமுதாயம் மட்டும் தான் அழிந்ததை பார்த்தீர்கள், மொத்த சமுதாயத்தையும் வேதம் பெயர் சொல்லி அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்''

''நீங்கள் பேசுவது தன்னையே அழித்துக்கொண்டு பிறரை குற்றம் சாட்டுவது போல இருக்கிறது''

''இதைப் பாருங்கள்''

அகிலா அதிர்ச்சியில் உறைந்து போனாள். சின்னசாமி சின்னாபின்னமாகிப் போனார்.

''இது ரோமப் பேரரசு. இது கிரேக்கப் பேரரசு. கிரேக்கன் காட்டிய கடவுளையெல்லாம் ரோமன் பெயர் மாற்றி காட்டினான் எங்கு பார்த்தாலும் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றனர் இவையெல்லாம் ரத்தம் தோய்ந்த ஆடைகள்''

''...''

''இதோ வாளுடன் புறப்பட்ட மனிதமே அற்றவர்கள், தலையை சீவினார்கள். உங்கள் சிந்து பகுதியில் எடுத்தது''

''...''

''அடுத்தவர்களை வெட்டிக் கொல்வதிலே மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்ட கூட்டம் அதுதான் சொல்கிறேன் நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''இப்பொழுது மாறிவிட்டது அல்லவா''

''ஆம் வாளுக்கு பதில் வான வேடிக்கை நடக்கிறது நாங்கள் வாளுடன் மட்டுமே இருக்கின்றோம்''

''மனிதம் வளர்க்கலாம் அல்லவா''

''என் தந்தை சொல்வார். நிறம் பார்த்து வெட்டிக் கொல்லும்் கூட்டம் இருக்கிறதாம். இனம் வேறுபாடு பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நிலை பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நாங்கள் அழிய வேண்டும் என வெட்டிக் கொள்பவர்கள்''

''சிந்து பகுதிக்கு ஏன் சென்று இருக்கிறார்''

''ரத்தம் தோய்ந்த ஆடைகள் எடுக்க''

''...''

''பொக்கிசங்கள் பார்த்தாகிவிட்டதா''

''பார்க்க சகிக்கவில்லை''

''வேத நூல்களிலும் ரத்தம் படிந்து இருக்கிறது பாருங்கள்''

''துடைத்து தூய்மையாக்குங்கள்''

''எழுத்துக்கள் சேர்ந்து அழிந்து போகும்''

அகிலாவும் சின்னசாமியும் மேலே வந்தார்கள். பெண் தயாராக இருந்தார். விவிட் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டான். பாதாள அறைக்கு மேல், வீட்டினை உடனே எழுப்பினார்கள். குடிசையாய் தான் வெளியில் தெரிந்தது. உள்ளே குகையாய் அமைத்தார்கள். அகிலா அசையாமல் நின்று கொண்டிருந்தாள். சின்னசாமி மனிதம் பற்றி யோசிக்கலானார்.

(தொடரும்)

No comments: