Friday 26 June 2009

பழங்காலச் சுவடுகள் - 9

விவிட்டிடம் அகிலா பேசினாள். இனிமேலாவது ஒரு சமுதாயம் உருவாக்கும்போது அன்பே உருவான சமுதாயமாக உருவாக்குமாறு கேட்டுக்கொண்டாள். விவிட் சிரித்தான். அது மட்டும் ஒருபோதும் உருவாக்கப்போவதில்லை என்றான். பொக்கிஷங்கள் எல்லாம் வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்க்கக்கூடியதாக இருப்பதாக கூறினாள். வேதநூல்கள் சொல்லும் நல்வழியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினாள். ஆனால் விவிட் எதையுமே கேட்பதாக இல்லை. அனைவருக்கும் அங்கே சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்து நாம் விடுதிக்கு செல்வது என நல்லது என கூறினார். இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். வாகனத்தில் வாகன ஓட்டி காத்துக்கொண்டிருந்தான். விடுதியை அடைந்தனர். சின்னச்சாமி நிம்மதியாய் உணர்ந்தார்.

''உலகம் எவ்வளவு மாறிவிட்டது, இப்படி பழமையிலே ஊறிப்போய் ஒருவரையொருவர் எப்படி வெட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்''

''வாழ்கிறார்களா? சாகிறார்களா? ம்ம் நீயும் தான் முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் இன்னும் சொல்லித்தந்து கொண்டிருக்கிறாய், போரினால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லி இனிமேல் போர் என்பதே நடக்கக்கூடாது என எந்த வரலாறு புத்தகமாவதுச் சொல்லித் தருகிறதா? இந்த மனிதர்கள் எப்பொழுது மூன்றாவது உலகப்போர் வரும் என விஷ விதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் போரினால் படும் அவலநிலைகள் என ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான், இலங்கை என நாடுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம், விவிட் சொன்னதுபோல் மனிதம் அற்றவர்களாக நாம் தான் இருக்கிறோம், பழங்காலத்தில் நடந்தது இன்று அதிக அளவில் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை நீயும் நானும் மறுக்க முடியுமா''

''தேன்நிலவுக்குத்தான் வந்தோம் ஆனால் இப்படி கொடூரமான வாழ்க்கை முறையை கண்டதும் இனிவரும் சந்ததியினர் பற்றி அச்சமாக இருக்கிறது''

''அன்பை போதிக்கும் முறை அழிந்து போய்விடுமோ என அச்சமாகவும் இருக்கிறது, அதே மனிதர்களிடம் நான் எப்படி நடுங்கிக்கொண்டே இருந்தேன் தெரியுமா, ஒன்று பேசுவதற்குள் ஒன்றாக நின்றுகொண்டே வாளினை எடுக்கிறார்கள், எதிரெதிர் நின்று கொள்கிறார்கள் பார்க்கவே உயிர் பறந்து போய்விடும் போலிருக்கிறது''

''பெரு நாட்டிற்குச் செல்ல வேண்டுமா''

''செல்லத்தான் வேண்டும்''

எகிப்தில் சிலநாட்கள் இருந்து பிரமிடுகள், கோவில்கள் எல்லாம் பார்த்தார்கள். நைல்நதியின் ஓரத்தில் செல்லவே அச்சமாக இருந்தது. ஆனால் பெரு செல்லும் நாளன்று வாகன ஓட்டியை விவிட் இருக்கும் பகுதிக்கு வாகனம் செலுத்தச் சொன்னாள். அங்கே அதே இடத்தில் சில குடிசைகள் முளைத்திருந்தன. பெரிய அழிவு நடந்ததிற்கான ஆதாரமே இல்லாது போன்று இருந்தது. ஒரு சுவடும் தெரியாமல் அழித்துவிட்டார்களே, ஆனால் என்றோ நடந்த போர்கால சரித்திரங்களை மட்டும் இன்னும் பாதாள அறையில் பாதுகாத்து வருவது ஏனோ என எண்ணிக்கொண்டே இருக்க விமானநிலையம் வந்து அடைந்தார்கள். வேதநூல்களும், நூலக நூல்களும் வைத்திருப்பதை நினைக்கையில் அகிலாவுக்கு மனம் என்னவோ செய்தது.

பெரு நாட்டினை அடைந்தார்கள். தென் அமெரிக்க நாடுகள் பெரும்பாலும் ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்தவை. பெரு நாட்டினை அடைந்ததும் கோவில்கள் தென்பட்டன. அனைவரு்ம் புன்னகை புரிந்தார்கள். என்ன உதவி வேண்டும் என தேடி வந்து கேட்டார்கள். வணங்கினார்கள். அகிலா ஆச்சரியம் அடைந்தாள்.
விடுதியை அடைந்தபோது விடுதியில் இருந்தவர்களும் மிகவும் அன்போடு உபசரித்தார்கள்.

சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு ஒரு கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இருந்தவர் பல உலக ரகசியங்கள் இங்கே புதைந்து இருப்பதாக சொன்னார். இந்தியாவுக்கும் பெருவுக்கும் பெரிய தொடர்பு இருப்பதாக கூறினார். கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. மாயன்கள் அஜ்டெக்குகள் பற்றி சொன்னார். அவர் சொல்ல சொல்ல ஆர்வமாக கேட்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)

No comments: