Monday 29 June 2009

வேத நூல் - 1

அத்தியாயம் 1.

கி.மு 10400.

பேச மட்டுமே வழக்கத்தில் இருந்த மொழி. எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்படாமல் இருந்த காலம். ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள ஒரே விதமான ஒரே மொழி. ஒரு வார்த்தைக்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே. இப்படிப் பேசும் மொழியை முதலில் எழுத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தவன் சாங்கோ.

சாங்கோவின் நண்பர்கள் மிபலோ, குவ்விலான். குவ்விலானுக்கு பேச வராது. வெறும் சைகை மட்டுமே. இதனால் குவ்விலான் மனதில் இருக்கும் விசயங்களை அவன் சொல்வதற்கு ஏற்றபடி எழுத்தை உருவாக்க வேண்டும் என எட்டு வயதாக இருக்கும்போது சாங்கோவுக்கு ஒரு எண்ணம் உருவானது.

சாங்கோ இருந்த இடம் தானேஸ்ரா என அப்பொழுது அழைக்கப்பட்டது. மொத்தக் குடும்பங்கள் பதினெட்டு. இது தற்போதைய கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இடமாகும். அந்த ஊரில் இருப்பவர்கள் கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டு வருவதும், காட்டில் சென்று வேட்டையாடி வருவதும் தான் முக்கியத் தொழில்.

மிபலோ எப்பொழுதும் அமைதியாகவே இருப்பவன். அவனது ஆழ்ந்த சிந்தனையைக் கண்டு சாங்கோ பொறாமைப்படுவான், ஆனால் நண்பர்களாக இம்மூவர் மட்டுமே சேர்ந்து இருந்தனர். விளையாட்டு, உறக்கம் இதுதான் அந்த ஊர்ச் சிறுவர்களின் தொழில். ஆனால் சாங்கோ, மிபலோ, குவ்விலான் மூவரும் தங்களது தந்தையர்களுடன் வேட்டையாட, மீன் பிடிக்கச் செல்வார்கள்.

குரு என்றால் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. அன்னையும் தந்தையும் மட்டுமே குருவாக விளங்கினர். மிகவும் அச்சத்துடனே வாழ்ந்து வந்தவர்கள், அச்சத்தை எதிர்த்துக் கொள்ள ஆயுதம் செய்து வைத்துக் கொண்டனர். இந்த ஆயுதங்கள் எல்லாம் மிபலோவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. சாங்கோவிடம் இப்படி உயிர் வதைப்பதை நிறுத்த வேண்டும் என சிறு வயதிலேயே சொல்வான் மிபலோ. மிபலோ தனது பெற்றோர்களிடம் இவ்விசயத்தைக் கூறியபோது பயந்தால் ஒன்றும் நடக்காது, வீரமுடன் இருக்க வேண்டும் எனச் சொல்லி அடக்கி வைத்தார்கள்.

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல ஒரு மாத காலம் ஆகும். எனவே ஊர்த் தொடர்பு எல்லாம் ஒரு சில ஊர்களுக்கு மட்டும் தான். சிரகமெரா எனும் சிறுமிக்கு சாங்கோவை மிகவும் சிறு வயதிலேயேப் பிடித்து இருந்தது. சிரகமெராவைக் கண்டால் மகிழ்ச்சியில் துள்ளுவான் சாங்கோ.

எழுத்தை உருவாக்கும் முயற்சியில் சாங்கோ இறங்கியபோது அவனுக்கு பத்து வயதாகி இருந்தது. ஒருநாள் மிபலோ ஆர்வத்துடன் நீ எழுத்தை உருவாக்கி விடுவாயா, அப்படி உருவாக்கினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றான். அதற்கு சாங்கோ நிச்சயம் உருவாக்குவேன் எனக்கு குவ்விலான் மனதில் இருப்பதை அறிய ஆவல், அவனது சைகை எனக்குப் புரியமாட்டேன்கிறது என்றான்.

குவ்விலானுக்கு மட்டும்தான் எழுத்தை உருவாக்குகிறாயா, எனக்காக உருவாக்கமாட்டாயா? எனக் கேட்டான் மிபலோ. ஏன் நீதான் பேசுகிறாயே என்றான் சாங்கோ. நான் பேசுகிறேன் ஆனால் எனது ஆழ்ந்த சிந்தனைகள் அனைத்தையும் ஒன்றாக எழுதி வைக்க வேண்டும் என்றான் மிபலோ. அப்படியெனில் நீயே உருவாக்கிக் கொள் என்றான் சாங்கோ. எனக்கு எழுத வராது, மணலில் நான் வரைந்த படம் எல்லாம் பார்த்தாயா எப்படி இருந்தது என பரிதாபமாகச் சொன்னான் மிபலோ. அது மணல் அழியத்தான் செய்யும் என்று சொன்ன சாங்கோ எழுத்தை உருவாக்கலாம் ஆனால் அதை எதில் எழுதுவது என யோசித்தான்.

என்ன யோசனை எனக் கேட்டான் மிபலோ. எதில் எழுதுவது என்றான் சாங்கோ. இந்த விசயத்தையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த குவ்விலான் அவர்களை அழைத்துச் சென்று பெரிய இலையைக் காட்டினான். சந்தோசமானான் சாங்கோ. பக்கத்தில் இருந்த ஒரு மரத்தை பிடித்து பழங்களை உலுக்கினான் குவ்விலான். பழங்களை சாறாக்கினான். சாறு கருப்பாக இருந்தது. ஒரு சின்னக் குச்சியை எடுத்து அச்சாறில் தொட்டு இலையில் ஒரு கோடு போட்டான் குவ்விலான். சாங்கோ உற்சாகமானான். மிபலோ ஆழ்ந்த சிந்தனையில் அப்பொழுதே அமர்ந்தான்.

(தொடரும்)

4 comments:

கோவி.கண்ணன் said...

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் என்று ஆசிரியர் குறித்து சொல்லுவார்கள்.

எழுத்து தோன்றிய வரலாறு, உங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் பல புழக்கத்தில் இன்னமும் உள்ளன. தனது வடிவத்தை மாற்றிக்கொண்ட மொழிகளும் இன்று வழக்கத்தில் உள்ளன. ஒரு தேவையைப் பொருத்தே ஒன்று உருவாகி இருக்க வேண்டும், மேலும் ஒரு தேவையைப் பொருத்தே ஒன்று நிலைத்து நின்று கொண்டிருக்க முடியும்.

அந்த ஆசிரியர்கள் யாரிடம் கற்றார்கள் எனப் பார்க்கும்போது எவரோ ஒருவர் தனக்குத்தானே ஆசிரியராக இருந்து இருக்கிறார் என்றே காணமுடியும்.

பிறர் மூலம் கற்றுக்கொண்டாலும் தனக்குத்தானே கற்பித்துக் கொள்பவனே வாழ்க்கையில் பல விசயங்களை ஒழுங்காகக் கற்றுக்கொள்கிறான்.

தங்கள் பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி ஐயா.

கோவி.கண்ணன் said...

//பிறர் மூலம் கற்றுக்கொண்டாலும் தனக்குத்தானே கற்பித்துக் கொள்பவனே வாழ்க்கையில் பல விசயங்களை ஒழுங்காகக் கற்றுக்கொள்கிறான்.
//

மிகச் சரிதான். தனக்குதானே கற்றுக் கொள்ள காலம் எடுக்கும், அப்படிக் கற்றுக் கொண்டால் எளிதில் மறக்காது. எனது அனுபவம்

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.

கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்பதைத்தான் அவ்வாறு எழுதினேன்.