Sunday 28 June 2009

கலையாத கனவும் விளங்காத இயல்பும்

முன்னுரை:

கனவும், இயல்பும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகத் தோன்றும். இயல்பாக நடக்கும் விசயத்தை இது கனவா என எண்ணும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவருக்குள் கேள்விக்குறியை ஏற்படுத்திவிட்டுப் போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. கனவு சாதாரணமாக கலைந்து போகும் நிலைத்தன்மையற்றது. நடக்கின்ற விசயத்தின் அடிப்படையில், இயல்பு சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியும் தன்மை உடையது. ஆனால் அப்படி இல்லாமல் கலையாத கனவாகவும், விளங்காத இயல்பாகவும் இருக்கும் இறைத்தன்மை முரண்பட்ட இரண்டு விசயங்களை ஒன்றாக்கி வைத்து இருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது.

கனவுலகில் சஞ்சரிப்பவர்கள்:

இப்பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து இந்நாள்வரை இந்த உலகம் எப்படி தோன்றியது என்பது எவரும் அறியாத நிலையில் 'அவனின்றி ஒரு அணுவும் அசையாது' என சொன்னதின் அர்த்தம், கலையாத கனவின் அடிப்படை, விளங்க முடியாத இயல்பின் துவக்கம் என கொள்ளலாம்.

இருந்ததை எண்ணி, நடக்கின்ற இயல்பின் அடிப்படையை வைத்து 'தகுதியுள்ள இனமே வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ளும்' என சார்லஸ் டார்வினின் விளக்கமும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மிகவும் பிரபலமான சக்தி, நிறை மற்றும் ஒளி தொடர்பான வாய்ப்பாடும், கிரிகரி மெண்டலினின் மரபியல் தத்துவமும் என ஒவ்வொரு மனிதரும் இருக்கின்ற இயல்பை விளங்கிக் கொண்டனரேயன்றி எவராலும் இதுவரை முதல் கனவை கலைக்க இயலவில்லை எனலாம்.

மொத்த மனித இனமும் விதவிதமாக கண்ட அந்த இறையை பற்றிய கனவு கலைந்து போவதற்கு வழியற்றுப் போனது. உண்மையான கனவு என்பது தானாக வருவது, ஆனால் இந்த கனவு வாழையடி வாழையாய் காணாமலே கண்டது போல் ஆகிப் போனது. விழித்த நிலையில் காணும் கனவு என சொல்வது போல் ஆனது. இப்படி கலையாத கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்களாக நாம் இருப்பது விளங்கிக் கொள்ள முடியாத இயல்பாகிறது.

இதை மாணிக்கவாசகர் அருமையாக தனது திருவாசகத்தில் பாடுகிறார்.

'புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிப்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய்ச்
செல்லாய் நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்'

வெடித்துச் சிதறிய வேதாந்தம்:

பூமியும், சூரியனும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த மனித இனத்திற்கு, எண்ணற்ற நட்சத்திரங்களும், நட்சத்திரங்களுக்கான கோள்களும் கண்டு இது எப்படி சாத்தியமானது என எண்ணிக் கொண்டு இருக்காமல் ஒரு அற்புதமான கனவு காணத் தொடங்கியதன் விளைவாக 'நட்சத்திரம் வெடித்துச் சிதறியது' என கண்ட கனவு ஒரு கலையாத கனவுதான். வெஞ்சினரின் 'எல்லா நிலப்பரப்பும் ஒன்றாக இருந்தது' எனும் கனவும் கலையாத கனவுதான், ஆனால் இவை விளங்க முடியாத இயல்பாக இருக்கின்றன.

இந்த விளங்க முடியாத இயல்பை விளக்கிக் கொள்ள எண்ணற்ற பொருட்செலவில் நடக்கும் ஆய்வுகளும், வெளி கோள்கள் மற்றும் வெளி நட்சத்திரங்கள் நோக்கியப் பார்வைகளும் பெரும் ஆர்வத்தை நம்மிடையே ஏற்படுத்தி இருக்கின்றன. இயல்புநிலை விளங்கிக் கொண்டதன் காரணமாக பல கனவுகள் தகர்ந்து போயின. எழுத்தாளர்களின் அதீத கற்பனை வளமும், கிடைக்கும் சிறு விசயத்தை வைத்து அறிவியலாளர்கள் காணும் கனவும் சாதாரண மனிதனை கனவு காணும்படி வைத்துள்ளது. இந்த கனவுகள் கலையாமல், விளங்கிக் கொள்ள முடியாமல் தொடர்வது ஒரு இலக்கைத் தொட்டுவிட உதவும், அந்த இலக்கோடு நிற்காமல் தொடர்ந்து பயணிக்க கலையாத கனவுகள் மிக அவசியம். வேறு கிரகத்தில் உயிரினங்கள், அதிக அறிவுள்ள உயிரினங்கள் என காணும் இந்த கனவுகள் நனவாக வேண்டும் என்ற எந்த ஒரு அத்தியாவசியமும் இல்லை. அது ஒருவகையில் அநாவசியம் கூட.

'எந்நிலை கொண்டு என்னை விளக்கும் முயற்சியில்
தன்னிலை மறந்து வாழும் மனிதருள்
ஒளியாக கண்டிடும் காணும்
ஒளியால் பிறிதொரு
உலகமது'

இறைவனான என்னை விளங்கிக் கொள்கின்ற இந்த முயற்சியில், ஒளியாய் என்னை உள்ளத்துள் காண்பது போல், ஒளியினை அடிப்படையாக கொண்டு பிறிதொரு உலகத்தை இம்மனிதர்கள் காண்பார்கள் என்பது இக்கவிஞனின் கலையாத கனவு, ஆனால் விளங்க முடியாத இயல்பு.

முடிவுரை:

'கனவுகள் இல்லையேல் வாழ்வு சுகப்படாது' என்பது என் மொழி. கலைந்து போகும் வீணான கனவுகளை கண்டு வேதனைப்படுவதைவிட, இருக்கின்ற இயல்பின் அடிப்படையில் நாம் காணும் கனவு நிச்சயம் நனவாகி மகிழ்வைத் தரும். இறைவன் எனும் கலையாத கனவுடனும், விளங்கிக் கொள்ள முடியாத இயல்புடனும் நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நமது அன்றாட கனவானது உலகம் செழிப்புற இருக்க வேண்டுமென ஒவ்வொருவரும் நனவாக்க பாடுபட்டு இருப்போமெனில், நமது இயல்பு நிலை விளக்கம் பெறும், அந்த இறைவனும் மகிழ்ச்சி கொள்வான்.

No comments: