Friday 26 June 2009

அறிவுரைக்கு

''இந்த உலகத்துல எல்லாரும் எப்படி இருக்கனும், எப்படி இருக்கக்கூடாதுனு வரையறை இருக்கானு பார்த்தா இருக்கு, ஆனா இல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நினைப்பு வைச்சிட்டு வாழ்ந்துட்டு வராங்க, ஆனா எல்லாரும் ஒரே நினைப்பா இருக்காங்களானு பார்த்தா இருக்கு, ஆனா இல்ல. இப்ப நான் கூட இந்த உலகத்திலே இருக்கேனானு கேட்டா, இருக்கேன் ஆனா இல்ல. ம்ம் என் பேச்சை யாரு கேட்கப் போறா, நானும் இப்படி திண்ணையில உட்கார்ந்துட்டு தினமும் என்பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் வர்ரவன் போறவன் எல்லாம் இந்த கிழம் எப்போ போய்ச் சேருமோனு மனசு கூசாம, வாய் கோணாம பேசிட்டே போறான். ம்ம் எப்பத்தான் விடிவு காலம் பொறக்குமோ?''

''தாத்தா பொலம்ப ஆரம்பிச்சாச்சா? இந்தா இந்த கஞ்சியை குடிச்சிட்டு படு''

''எனக்கு எதுவும் வேணாம்டா, பச்சை தண்ணிகூட குடிக்காம பட்டினியா கிடந்தாச்சும் இந்த உசிரை எமன் எடுத்துட்டுப் போவட்டும்''

''தாத்தா சாகறதைப் பத்தியே நினைச்சிட்டு இருக்கியே, வாழனும்னு ஆசை இல்லையா''

''ஏண்டா உன் வயசுல வாழ ஆசை இருக்கும், என் வயசுல சாக ஆசை இருக்கும், கஞ்சியை வச்சிட்டுப் போடா''

''குடிச்சிட்டுப் படு தாத்தா''

''பதினைஞ்சி வயசு ஆகுது, படிக்கிறானாம் படிப்பு. வீட்டுக்கு காவலுக்கு இருக்கிற மாதிரி வெளியே படுக்கையை போட்டுக்கொடுத்துட்டான் இவன் அப்பன், இவ அம்மா கஞ்சி வந்து கொடுத்தா அவ ஆயுசை நா எடுத்துருவேனேன்னு பயம், இந்த கஞ்சியை நா குடிச்சி போற உசிரை பிடிச்சி வைக்கவா''

''கஞ்சி எல்லாம் பலமா இருக்கு?''

''யாரு இது? ரோசாப்பூவா, இந்தாடா எடுத்துக் குடிச்சிட்டுப் போ, பலமா இருக்குனு எதுக்கு பீடிகை போடுற. எப்போ கஞ்சி வைப்பானு பார்த்து அதுல பங்கு போட வந்துருவியே, குடி குடி மிச்சம் வைக்க மனசு இருந்தா வையி, இல்லைன்னா முழுசும் துடைச்சிட்டுப் போ''

''என்னதான் இருந்தாலும் உனக்கு மிச்சம் வைக்காம குடிப்பேனா, ஊறுகாய் வைக்கலையா பொடிப்பைய, ஒரு அப்பளம் வைக்கக்கூடாது''

''ஊறுகாயாவது உன் வீட்டுல இருந்து எடுத்துட்டு வரவேண்டியதுதானே, வக்கனையாப் பேசற''

''நீயே கஞ்சிய குடி, இன்னைக்கு இது வேணாம். என் வீட்டை எதுக்கு ஞாபகப்படுத்துற நீ உசிரோட இருந்தா எனக்கு ஒரு வாய் கிடைக்கும்''

''நீ குடிச்சிட்டுப் போ, இல்லைன்னா உன்னைப் பத்தியே கவலையா இருக்கும்''

''பாவம் இவனுக்கும் தான் நாலைஞ்சு புள்ளைக, இங்க வந்து ஒட்டிட்டுப் போறான், இவனுக்காகத்தான் நா சாகாம இருக்கேனோ என்னவோ''

''என்ன தாத்தா குடிச்சிட்டியா, ரோசாப்பூ தாத்தா குடிச்சாரா''

''ஏண்டா உன் அம்மாவுக்கு தெரியாம எங்க ரெண்டு பேருக்கு ஊத்திட்டு வருவியா''

''அம்மாதான் ஊத்திக்கொடுக்கும், உள்ள வந்து படுத்துக்கோ தாத்தா''

''திண்ணைதாண்டா எனக்கு லாயக்கு ஓயாம இப்படி சொல்லாதே''

''உன்னை ஒதுக்கி வைச்சிருக்கோம்னு ஓயாம நினைக்காதே தாத்தா''

''இந்த இருட்டு மட்டும் இல்லாமலிருந்தா இன்னும் என்ன என்னமோ பேசிட்டே இருக்கலாம், இனி எவனும் இந்த பாதை பக்கம் நடக்கமாட்டான். இனி நான் பேசறதை நானே தான் கேட்டுக்கனும் வயசாயிட்டா வாழ்க்கையே இல்லைனு ஆகுறமாதிரில நினைக்கிறானுக. நானும் பாரு காலையில தோட்டத்துப்பக்கம் வரவங்க போறவங்ககிட்ட நக்கலு, மதியானம் ஒரு தூக்கம், அப்புறம் சாயந்திரம் புது புது பேச்சுனு சொகுசாத்தானே இருக்கேன். இப்படி வயசு இருக்கறப்ப இருந்து இருந்தா பேரு புகழு இதைப் பத்தியெல்லாம் கவலை வந்துருக்குமா, அது வேணும் இது வேணும் அந்த வீடு வேணும் இந்த வீடு வேணும், அவனை விட நான் முன்னுக்கு வரனும்னு ஓயாம ஓடி இப்போ உட்கார்ந்து பேசறச்சே ஒரு ஜீவன் கஞ்சி குடிச்சிட்டுப் போகுது மத்ததெல்லாம் எப்போ போகும்னு கேட்டுட்டுப் போகுது''

''தாத்தா நா படிக்கனும் நீ பேசறது என் காதை அடைக்குது தூங்கு''

''போடா போ, படி, படி உலகத்துல நீ மட்டும் தான படிக்கிற! படி நாலு விசயம் புலம்பறதுக்காச்சும் படி''

தாத்தா உறங்கினார். திடீரென கொட்டுச் சத்தம் கேட்டது. விழித்தார்.

''தூங்கின எனக்குத்தான் கொட்டு அடிக்கிறானுகளா''

''அப்பா, உங்க நண்பர் ரோசாப்பூ செத்துட்டார்''

''டேய் டேய் என்னடா சொல்ற, ரோசாப்பூ போய்ட்டானா, டேய் எனக்கொரு உதவி செய்டா இன்னும் கொஞ்ச நேரத்தில நானும் செத்துருவேன் என் பொணத்தை தூக்கிப் போடற செலவுல பாதி செலவு செஞ்சி அவ பொணத்தை தூக்கிப் போட்டுருடா இனி இந்த உசிரு தங்காதுடா''

''அப்பா, என்னப்பா பேசறீங்க''

''அதோடமட்டுமில்லைடா, கதை எழுதுறேனு ஒருத்தன் வந்து என் கதையை கேட்டு அதை அப்படியே எழுதியும் வைப்பாண்டா, என்னமோ உலகத்துல இல்லாததை இவன் பாத்துட்டானு, அவன்கிட்ட என் கதையும் சொல்லி அதுல பாதிய ரோசாப்பூ பத்தியும் எழுதச் சொல்லுடா''

''அப்பா.....''

அழுகை விண்ணை முட்டியது. கொட்டு சத்தம் பாதி பாதியாய் பிரிந்து கேட்டது.

முற்றும்.

No comments: