Showing posts with label தொடர்கதை ஒரு கட்சி. Show all posts
Showing posts with label தொடர்கதை ஒரு கட்சி. Show all posts

Saturday 16 April 2016

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு -9

பகுதி 8   பகுதி 7 பகுதி 6  பகுதி 5 பகுதி 4  பகுதி 3 பகுதி 2 பகுதி 1

9. 

ரகுராமன் தான் சொன்ன நாளுக்கு முன்னதாகவே கல்லூரியில் இருந்து தோணுகாலுக்குச் சென்றான். அவனைப் பார்த்த அழபா, பழனிச்சாமி சுப்பிரமணியன் என எல்லோரும் சந்தோசம் கொண்டார்கள். எத்தனை நாள் இருப்ப என்றவர்களுக்கு சனிக்கிழமை காலையில் கிளம்ப இருப்பதாக கூறினான். அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

ரகுராமன் முதலில் தனது ஊரில் உள்ள அனைவரையும் தனது பக்கம் திருப்ப வேண்டும் என ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஊரின் மந்தையில் அனைவரையும் வெள்ளிக்கிழமை இரவு வருமாறு கூறினான். பெயர், சின்னம், கொடி  எல்லாம் தனது மனதில் பதித்துக் கொண்டு தன்னோடு எடுத்துக் கொண்டான். ஆனால் எவருமே அவனது பேச்சை கேட்டது போலத்  தெரியவில்லை. இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என ஊரில் இருந்தவர்கள் சத்தம் போட்டார்கள். எதையும் பொருட்படுத்தாமல் ரகுராமன் சின்ன கூட்டமாவது வர வேண்டும் எனத் தொடர்ந்தான். ரகுராமனுடன் கிரிக்கெட் விளையாடும் நபர்கள் ஆதரவு தருவதாக சொன்னார்கள். 

அன்று இரவு கொஞ்ச நபர்கள் வந்து மந்தையில் அமர்ந்தார்கள். ரகுராமனின் வீட்டில் அனைவருமே வந்துவிட்டார்கள். ரகுராமன் ஊருக்குப் பொதுவான ஒலிப்பெருக்கி மூலம் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ஊர் மக்கள் வந்து சேர்ந்தார்கள். 

''நான் மக்கள் ஒற்றுமை இயக்கம் அப்படின்னு கட்சியை இந்த இடத்தில் வைச்சி நான் ஆரம்பிக்கிறேன், அதுக்கு உங்களுடைய ஆதரவுதான் வேண்டும். கட்சியோட சின்னம் இதயம். இதை எப்படியும் நடத்திக்காட்டுவேன். நம்ம ஊருல இருக்க எல்லாரும் இனிமே இந்த மக்கள் ஒற்றுமை இயக்கத்தோட உறுப்பினராக மாறனும்''

கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்தார். 

''கால காலமா நாங்க ஆதரிக்கிற கட்சியை விட்டுட்டு வானு சொன்னா நாங்க வர முடியுமா? அதுவும் நீ சின்னப்பையன் வேற உனக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும்னு கட்சி ஆரம்பிக்கிற. பேசாம எங்க நேரத்தை நீ வேஸ்ட் பண்ணாத''

ரகுராமன் அவரை அமரச் சொன்னான். அவரும் மறு பேச்சு பேசாமல்  அமர்ந்தான்.

''நீங்க வேற வேற கட்சி உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனா நான் நம்ம ஊருக்காரன் ஒரு கட்சி ஆரம்பிக்கிறப்ப நம்ம ஊரே என்னை ஏத்துக்கலைன்னா அப்புறம் எப்படி மத்த ஊர்க்காரங்களை எல்லாம் சம்மதிக்க வைக்கிறது. நம்ம ஊர்த்தலைவர் ராமசுப்பு ஐயா என்னோட கட்சியை ஆதரிக்கனும். அப்படி நீங்க ஆதரிக்காட்டியும் பரவாயில்லை இதுதான் கட்சி, இதுதான் சின்னம். கட்சிக்கொடி ஒரு வெள்ளை நிற பின்னணியில் ஒரு சாம்பல் நிற புறா''

ராமசுப்பு எழுந்தார். 

''நீ கட்சி ஆரம்பி ஆதரவு கேளு ஆனா ஆதரிக்கிறதா, வேணாமானு அவங்க அவங்க முடிவு செய்யட்டும், என்னோட கட்சியை விட்டுட்டு நான் மாறமாட்டேன். நான் கிளம்பறேன்''

ஊர்த் தலைவர் ராமசுப்பு கிளம்பிச் சென்றதும் அவரோடு பலரும் கிளம்பிப் போனார்கள். இன்னும் பலர் அமர்ந்தபடியே இருந்தார்கள். 

''அடுத்த வருசத் தேர்தலுக்குள்ள நம்ம கட்சியை பெரிசாக்கி எல்லாத் தொகுதியிலும் தனிச்சி நிக்கணும். எந்த கட்சிகாரங்களையும் நாம திட்டிப் பேசக்கூடாது. நீங்க எல்லோரும் வந்து இந்த கட்சி பெயர், சின்னம், கொடி இதை எல்லாம் ஆசிர்வதிக்கணும்''

பலர் எழுந்து வந்து ஆசிர்வாதம் பண்ணினார்கள். ரகுராமனின் அம்மா, அப்பாவும் வந்தார்கள். 

''சொல்லச் சொல்ல கேட்க மாட்ற, ஆனா முடிவு பண்ணிட்ட அதுக்கான வழியைப் பாரு''

ரகுராமனின் அப்பாவின் வார்த்தை அவனுக்குள் பெரும் பலம் ஒன்றை உருவாக்கியது. ரகுராமன் தனது நண்பர்களை எல்லாம் அழைத்தான். 

''ஒவ்வொரு சனிக்கிழமை இங்கே வருவேன். நீங்க என்ன பண்ணனும்னா நம்ம ஊரை சுத்தமா வைச்சிருக்கணும், ஒருத்தருக்கு உதவினா ஓடோடிப் போய்  செய்யணும். கிரிக்கெட் விளையாடறது எல்லாம் மறந்துருங்க. காசு விசயத்தில் சரியா இருங்க. கல்குறிச்சி, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி அப்படின்னு முதலில் போவோம்''

அழகர்பாண்டி குறுக்கிட்டான். 

''அருப்புக்கோட்டை வேணாமா''

''போவோம், புதிய கட்சி உதயம்னு ஒரு பெரிய விளம்பரம் தருவோம்''

''பணம் செலவாகுமே, நீ வேலைக்குப் போனா பரவாயில்லை, படிக்க வேற செய்ற''

''விவசாய நிலத்தில வர பணம் கொஞ்சம்  ஒதுக்குவோம், நீங்க எல்லாம் வேலை செய்ற பணம் இதுல போடுவோம். நமக்கு ஆதரவு தர பெரியவங்க எல்லாம் கட்சி உறுப்பினர்களாக மாத்துவோம்''

எல்லாம் விபரமாக சொல்லி முடிக்க இரவு பத்து ஆனது. ரகுராமன் வீட்டிற்குச் சென்றான். 

''விளையாட்டுத்தனமில்லை, இப்பவே உனக்கு எதிரிங்க தயாராகி இருப்பங்க''

அப்பாவின் எச்சரிக்கை மனதில் ஓடியது. எவரைப் பற்றியும் குறை சொல்லாமல் மக்களுக்கு நிறை செய்வதே பணி  என்று இருந்தால் எதற்கு எதிரிகள் உருவாகப் போகிறார்கள் என யோசித்தான் ரகுராமன். 

ஊரில் இருந்தே தொடங்க வேண்டும் எனும் தனது எண்ணத்தால் தன்னுடன் சண்முகப்பிரியாவை அழைத்து வரவில்லை. நாளை சண்முகப்பிரியா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் எல்லாம் சிறப்பாகச் செய்ய வேண்டும் என உறங்க ஆரம்பித்தான். 

மக்களுக்காக உழைக்கும் நோக்கம் உடைய கட்சிகள் தனித்தனியாக இருப்பதன் அவசியம் என்ன, கொள்கைகள் அற்ற கட்சிகள், கொள்கைகள் வெவ்வேறான கட்சிகள் கூட்டணி என அமைத்துக் கொள்வதன் அவசியம் என்ன? மக்கள் எப்போதும் தமது சிந்தனைகளை தமக்குள் மட்டுமே வைத்துக் கொள்கிறார்கள். 

(தொடரும்) 

Thursday 1 July 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8

இருவரும் கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்ததும், இருவரையும் புன்முறுவலுடன் நாகராஜன் வரவேற்றார். தனது மேசையின் முன்னால் இருந்த இருக்கையை காட்டினார்.

''உட்காருங்க''

இருவரும் தயக்கத்துடனே அமர்ந்தார்கள்.

நாற்பத்தி எட்டு வயது நிரம்பிய நாகராஜன் திடகாத்திரமான தோற்றம் கொண்டவர். முகத்தில் எப்போதும் ஒரு புன்முறுவல் இருந்து கொண்டே இருக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் மிகவும் மரியாதையாகவே பேசும் வழக்கம் கொண்டவர். இவருக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. இவரது தந்தை நிறுவிய இந்த கல்லூரியை தொடர்ந்து நிர்வகித்து வருகிறார். வயதாகிப் போனாலும் இவரது தந்தை அவ்வப்போது இந்த கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.

''மக்கள் ஒற்றுமை இயக்கம், கட்சியோட பேரு ரொம்ப நல்லாருக்கு, ஆனா நம்ம கல்லூரிக்குள்ள கட்சி நடவடிக்கைகள் எல்லாம் இருக்க வேணாம். உங்க கட்சி நடவடிக்கைகள், கூட்டங்கள் எல்லாம் உங்களோட படிப்பை பாதிச்சிராம பார்த்துக்கோங்க. படிச்சி முடிச்சிட்டு இதைச் செய்யுங்கனு நான் சொல்லலை, தாராளமா கட்சி ஆரம்பியுங்க‌''

''ரொம்ப நன்றி சார், நிச்சயம் கல்லூரிக்குள்ள கட்சி நடவடிக்கைகள் எதுவும் செய்யாம பாத்துக்கிறோம் சார்'' என்றான் ரகுராமன்.

''பிரியா, சமூக நல சேவகியா வருவீங்கனு பார்த்தேன், அரசியல் தலைவியா புது குறிக்கோள் எடுத்து இருக்கீங்க, பாராட்டுகள்'' என சிரித்தார் நாகராஜன்.

''அரசியல் மூலம் சமூக சேவை சிறப்பா செய்யலாமே சார்'' என நிறுத்தினாள் சண்முகப்பிரியா.

''தாராளமா செய்யலாம், ரகுராமன் நீங்க என்னை சாயந்திரம் என் வீட்டுல வந்து பாருங்க, ம்ம்... ஒரு ஆறு மணிக்கு, நிறைய பேசனும்''

''நன்றி சார்''

இருவரும் அறையைவிட்டு வெளியே வந்ததும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

''பிரியா, நீ வீட்டுல பேசிட்டுதான் எல்லாம் செஞ்சியா''

''இல்லை, இன்னும் இதைப்பத்தி நான் வீட்டுல பேசலை. உன்கிட்ட பேசிட்டு போனதும் நேரா நான் இருக்கற‌ சமூக நல அமைப்புல விசயத்தைச் சொல்லி கொஞ்சம் பேரை காலையில இங்க வர சொன்னேன்''

''வீட்டுல சொல்லி இருக்கலாமே''

''ம்ம்... சரி ஃபிரெண்ட்ஸ்ங்க கேட்டா பிரின்சிபால் என்ன சொன்னாரோ அதை மட்டும் சொன்னாபோதும்''

மதிய உணவு வேளையில் அனைவரும் என்ன ஆனது என விபரம் தெரிந்து கொண்டார்கள்.

''இதுதான் நம்ம பிரின்சிபால்கிட்ட எனக்கு பிடிச்சது'' என்றான் ஒருவன்.

சந்தானலட்சுமி, ரகுராமனிடம் 'இனிமேலாவது காலேஜுல இதைப் பத்தி எதுவும் பேசாத' என எச்சரித்தாள். ரகுராமன் அதன் பின்னர் கட்சியைப் பற்றி மாலை முழுவதும் பேசவே இல்லை.

மாலையில் சரியாக ஆறு மணியளவில் நாகராஜனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ரகுராமன். வீடு மிகவும் பளிச்சென இருந்தது. முன்புறத்தில் மலர்ச்செடிகள் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது. வீட்டு வாசலில் நாகராஜனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இவனுக்காக காத்திருந்தவர் போல நாகராஜன் ரகுராமனை வரவேற்றார்.

வீட்டின் உள்ளே சுவர்களில் இயற்கை காட்சிகள் அடங்கிய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தது. இருக்கைகள் அழகாக இருந்தது. ஆங்காங்கே வரையப்பட்டஓவியங்களும் தென்பட்டன. வீட்டின் அழகில் பிரமித்துப் போன ரகுராமன் நின்று கொண்டிருந்தான்.

''உட்காருங்க ரகுராமன்''

ரகுராமன் அமர்ந்தான்.

''பிரியா இங்கே வாம்மா''

சண்முகப்பிரியா அங்கே வந்தாள். அவளையும் அமருமாரு சொன்னார்.

''காபி, டீ என்ன குடிக்கிறீங்க ரகுராமன்''

''காபி குடிச்சிட்டுதான் வந்தேன் சார், அதனால எதுவும் வேணாம் சார்''

''என்னோட பொண்ணு இந்த கட்சி விசயத்துல சம்பந்தபட்டு இருக்காங்கனு உங்களை கூப்பிடலை ரகுராமன், எனக்கும் உங்களை மாதிரி உங்க‌ வயசுல கனவு இருந்தது. அதெல்லாம் எதுக்கு, நம்மாள முடிஞ்ச அளவு சமூகத் தொண்டு புரிவோம் அப்படினு எங்க அப்பாவோட அறிவுரையை கேட்டதோட இல்லாம அதுதான் சரினு எனக்கு மனசுக்குப் பட்டதால அந்த கனவை அப்படியே விட்டுட்டேன். நிறைய நல்ல மாணவர்களை உருவாக்கலாம்னு மனசுல என்னோட அப்பாவோட கல்லூரி கனவுல என்னையும் இணைச்சிட்டேன். ஆனா இந்த கல்லூரி ஆரம்பிக்க நாங்க பட்ட கஷ்டம் நிறைய. நாங்க ஆரம்பிக்க நினைச்சது பொறியியல் கல்லூரியோ, மருத்துவ கல்லூரியோ இல்லை. இப்போ இருக்கிற வணிகவியல், பொருளாதாரவியல், சமூகவியல் அப்படினு ஒரு கல்லூரி ஆரம்பிக்க நினைச்சப்போ எத்தனை தடைகள், அதையெல்லாம் தாண்டி இப்போ ஒரு நல்ல சிறந்த கல்லூரியா உருவாகி இருக்கறதுக்கு காரணம் நல்ல மாணவர்கள், நல்ல ஆசிரியர்களோட ஒத்துழைப்பு''

''என் மகன் நிறைய மதிப்பெண்கள் வாங்கி பொறியியல் துறை படிக்க போறேனு சொன்னார், படிக்கட்டும்னு விட்டேன். இன்னைக்கு அவர் அமெரிக்காவில இருக்கார். பிரியாவுக்கு மருத்துவமோ, பொறியியலோ இஷ்டம் இல்லை. இவங்க என்ன படிக்க விருப்பப்படறாங்களோ படிக்கட்டும்னு இருந்துட்டேன், நீங்கதான் உங்க வாழ்க்கையை தீர்மானிக்கனும்''

பேசிக்கொண்டிருந்த போதே பலகாரங்கள், இனிப்புகள் தண்ணீர் என மேசையில் வந்து வைத்தார் நாகராஜனின் மனைவி மகேஸ்வரி.

''எடுத்துக்கோங்க ரகுராமன்''

''நன்றி சார்''

''ஒரு கட்சியோட முழு வெற்றி அந்த கட்சியில இணையற உறுப்பினர்களோட செயல்பாடுல, கட்சித் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளார்களுனு நிறையவே இருக்கு. எல்லாம் நல்லா அமையனும், அல்லது அமைச்சிக்க கடும் முயற்சி எடுத்துக்கனும். இன்னைக்கு கல்லூரி வாசலுல‌ காலையில நடந்த விசயத்தை வைச்சித்தான் எல்லா விசயமும் எனக்கு கொண்டு வந்தாங்க. கல்லூரியில இதை பேச வேணாம்னுதான் உங்களை இங்க வரச் சொன்னேன்''

''சரி மாநில கட்சி, தேசிய கட்சி எது உங்களோடது?''

''எனது நோக்கம் தேசிய கட்சிதான் சார், முதல தேவையான வாக்குகள் சேகரிச்சி மாநில கட்சி அங்கீகாரம் தேர்தல் ஆணையம் மூலமா பெறனும், அப்படியே கட்சியை பக்கத்து மாநிலங்களுக்கு விரிவடைய செஞ்சி முதல் கட்டமா ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா அப்படினு நம்ம தமிழ்நாட்டோட சேர்த்து நல்ல வாக்குகள் வாங்கி தேசிய கட்சி அங்கீகாரம் பெறனும் சார்''

இதைக் கேட்டதும் நாகராஜன் ரகுராமனது கைகளைப் பிடித்து குலுக்கினார். அவரது கண்களில் பெரும் நம்பிக்கை தெரிந்தது.

''உங்களுக்கு என்ன உதவி வேணுமோ, அதை என்கிட்ட தயங்காம கேளுங்க ரகுராமன், நிச்சயம் செஞ்சி தரேன், என்னை மாதிரி எத்தனையோ பேர் நிச்சயம் இருப்பாங்க''

''ரொம்ப தேங்க்ஸ்பா''

ரொம்ப நன்றி சார்''

''படிப்புலயும் கவனம் இருக்கட்டும்''

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ரகுராமன் மிகவும் சந்தோசத்துடன் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

தனது கனவுகள் சாத்தியப்படாதவைகள் என ஒதுங்கிப் போய்விடும் மனிதர்கள் யாவரும் சற்று சிந்தித்து அந்த கனவுகளை அடைய வேண்டிய முயற்சியில் இறங்கினால்தான் என்ன? கனவு மெய்ப்பட வேண்டும் என பாரதிக்கு மட்டும் தான பாட வருமா?

(தொடரும்)

Wednesday 30 June 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 77.

ரகுராமன் தனக்கு எவரும் ஆதரவு தரவில்லை என்பதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டான். இதை சந்தானலட்சுமியிடமும் சொன்னான். அதற்கு அவளும் 'நீ பட்டுதான் தெரிஞ்சுக்கவேனு இருந்தா என்ன செய்ய முடியும்' என ஒரே வாக்கியத்தில் முடித்தாள்.

எத்தனை திரைப்படங்கள் சமூக அக்கறை பற்றி வந்திருக்கிறது. எத்தனை கதைகள் சமூக அக்கறை பற்றி எழதப்பட்டு இருக்கிறது. எத்தனை சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. எத்தனை சமூக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் சமூகத்தில் சில விசயங்கள் அப்படி அப்படியேதான் இருக்கின்றன.

ரகுராமனின் யோசித்துக் கொண்டிருக்கும்போதே சண்முகப்பிரியா அவனை நோக்கி வந்தாள். சண்முகப்பிரியா சமூக அக்கறையில் அதிகம் நாட்டம் கொண்டவள். ஆனால் தனது சமூக அக்கறையை பிறரிடம் சொல்லிக் கொண்டதில்லை. தலைமுடியை பின்னலிட்டு கொள்வதில் அவளுக்கு அலாதிப் பிரியம். சுடிதார் அணிவதை விட அதிகம் தாவணி அணிவதில்தான் அவளுக்கு ஈடுபாடு. தமிழ் நிறம் என்றோ வட இந்திய நிறம் என்றோ சொல்லிவிடமுடியாதபடிதான் இருந்தாள்.
 

''ரகு, உன்கிட்ட பேசனும்'' என்றாள் சண்முகப்பிரியா.
 

''சொல்லு பிரியா, என்ன விசயம்'' என்றான் ரகுராமன்.

''நீ கட்சி ஆரம்பிக்கப் போற விசயம் பத்தி நானும் கேள்விபட்டேன், ஏன் பெண்கள் இதில் ஈடுபாடோட இருக்கமாட்டாங்கனு நினைச்சிதான் எங்க யாருகிட்டயும் நீ கேட்கலையா'' என்றாள்.

''லட்சுமிகிட்ட பேசினேன்'' என்றான் ரகுராமன்.

''நான் உன் கட்சியில சேர்ந்துக்கிறேன், ஆனா ஒண்ணு இப்போ இருக்கிற எந்த கட்சியைப் பத்தியோ, அவங்களோட கொள்கையைப் பத்தியோ நீ எப்பவும் தாக்கிப் பேசக்கூடாது. நம்ம கட்சியோட கொள்கை, நாம மக்களுக்கு எப்படியெல்லாம் நல்லது செய்வோம் அப்படிங்கிற எண்ணம்தான் நமக்கு இருக்கனும்'' என்றாள்.

''பிரியா, நிசமாத்தான் சொல்றியா, உங்க வீட்டுல ஏத்துப்பாங்களா, நாளைக்கே நீ கல்யாணம் பண்ணிப் போனப்பறம் புகுந்த வீட்டுல சரினு சொல்வாங்களா, நல்லா யோசிச்சிக்கோ பிரியா'' என்றான் ரகுராமன்.

''ரகு, நீ அதைப்பத்தியெல்லாம் அநாவசியமா கவலைப்படாதே, நீ என்னை உன் கட்சியில சேர்த்துக்கோ, அவ்வளவுதான்'' என்றாள்.

''கட்சியோட பேரு பிடிச்சிருக்கா'' என்றான் ரகுராமன்.

''மக்கள் ஒற்றுமை இயக்கம், நல்லாத்தான் இருக்கு, கட்சியை எப்பத் தொடங்கலாம்'' என்றாள்.

''சீக்கிரமா, ரொம்ப தேங்க்ஸ் பிரியா'' என ரகுராமன் சொன்னபோது அவனுக்குள் நம்பிக்கை பிரகாசமிட்டது.
 

இந்த விசயத்தை சந்தானலட்சுமியிடம் பகிர்ந்து கொண்டான் ரகுராமன். 'என்னை கழட்டிவிட்டுடமாட்டியே' என்றாள் சந்தானலட்சுமி. ரகுராமன் சிரித்துக்கொண்டே 'நான் செய்றதைப் பாத்துட்டு நீ என்னை கழட்டிவிடாம இருந்தா சரி' என்றான். 'அப்படி நடந்துக்கிரமாட்டேனு நினைக்கிறேன்' என சொல்லிவிட்டு கிளம்பிப் போனாள்.
 

அன்று இரவே கட்சியின் கொள்கைகள் என எழுத ஆரம்பித்தான் ரகுராமன். முதல் கொள்கை என சண்முகப்பிரியா சொன்னதையே எழுதினான்.
 

1. சக மனிதர்களை மரியாதையுடனும், அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும்விதமாக நடந்து கொள்வது கட்சியினரின் முதன்மை கடமை.
 

எழுதிய பின்னர் வாசித்துப் பார்த்தான். நன்றாக இருந்ததுபோல் இருந்தது. இதை சண்முகப்பிரியாவிடம் காட்டலாம் என எண்ணியவன் பாடப்புத்தகங்களை எடுத்து படிக்கலானான்.
 

கல்லூரி வாசலில் சற்று தள்ளி ஐம்பது பெண்களுடன் சண்முகப்பிரியா நின்று கொண்டிருந்தாள். அவர்களைச் சுற்றி அந்த ஊர்க்காரர்களும் நின்று கொண்டிருந்தார்கள். எவருக்கும் என்ன ஏதுவென புரியவில்லை. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர யார் என்னவென சொல்லிக்கொள்ளவும் இல்லை.
 

கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மாணவியர்களும் நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ரகுராமன் கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். வழியில் அவனை மறைத்த சண்முகப்பிரியா 'இதோ இவங்க எல்லாரும் நம்ம கட்சியில உறுப்பினரா சேர விருப்பம் தெரிவிச்சி இருக்காங்க' என்றாள். ரகுராமன் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான்.
 

''பிரியா என்னதிது'' என ஆச்சரியம் விலகாமல் கேட்டு வைத்தான் ரகுராமன்.

''நம்ம கட்சி உறுப்பினர்கள், எனக்குத் தெரிஞ்ச சமூக நலனில் அக்கறை கொண்ட பெண்கள், இன்னும் இருக்காங்க'' என்றாள்.

அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான் ரகுராமன். இந்த வாரம் சனிக்கிழமை ஒரு சின்ன கூட்டம் போட்டு பேசலாம் என தனது எண்ணத்தைத் தெரிவித்தான் ரகுராமன். ஊரில் இருப்பவர்களில் சிலர் விபரம் கேள்விபட்டு தாங்களும் கலந்து கொள்வதாகச் சொன்னார்கள். ரகுராமன் மனதில் கட்சியின் செயல்பாட்டினை வரைய ஆரம்பித்தான்.

கல்லூரியில் பதினொரு மணியளவில் கல்லூரியின் முதல்வர் நாகராஜன் ரகுராமன், சண்முகப்பிரியா இருவரையும் தனது அறைக்கு வரச் சொல்லி உத்தரவு அனுப்பி இருந்தார். அப்போது பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் முகம்மது இருவரையும் கல்லூரி முதல்வரை பாடம் முடிந்ததும் சென்று பார்க்கச் சொன்னார்.

மனித சக்தி என்பது அளப்பரிய சக்தி என்பது அனைவரும் அறிந்துதான் இருக்கிறார்கள். பாரதி மட்டும்தான் பாடி வைப்பாரா? நல்லதோரு வீணை செய்தே என! அனைவருமே எப்போது பாடப் போகிறார்கள் என்பது எப்போதோ?

(தொடரும்)

Friday 18 June 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 6


கல்லூரியில் நாட்கள் இனிதே சென்றது. கட்சி ஆரம்பிப்பது குறித்து தீவிர சிந்தனையாகவே இருந்தான் ரகுராமன். கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான் முதல் சிந்தனையாக இருந்தது. திராவிடர் எனும் அடையாளம் தேவையா எனும் எண்ணம் எழுந்தது. முதலில் இந்த திராவிடர் எனும் அடையாளத்தை அழித்தால்தான் ஆரியர் எனும் அடையாளமும் அழியும். பின்னர் தமிழர் எனும் அடையாளம் தேவையா என சிந்தித்தான். தமிழர் எனும் அடையாளத்தையும் ஒழித்து விடவேண்டும் எனும் எண்ணமும் அவன் மனதில் ஓடியது, இப்பொழுது இது ஒரு பிரச்சினையாகவே பேசப்படும், தமிழ் உணர்வு அற்றவன் என்றே பேச்சு எழும், ஆனால் காலப்போக்கில் இந்த விசயம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் மனதில் சிந்தித்து வைத்தான்.


அதற்கடுத்ததாக சாதியைப் பற்றி சிந்தித்தான். நான் கட்சி ஆரம்பித்தால் இன்னார் சாதி என கண்டிப்பாக‌ தெரிந்துவிடும். உடனே அந்த சாதிக்காரன் என பேசுவார்கள். இவன் நம்ம சாதிக்காரன் என நாலு பேர் உடன் வருவார்கள். நமது சாதி அடையாளத்தை எப்படி அழித்துக் கொள்வது. உண்மையிலேயே உதவி வேண்டுவோர்க்கு நாம் உதவி புரிய அவன் சாதிக்காரனுக்கு மட்டும் செய்றான் எனும் பேச்சு வருமே, அதை எப்படி தடுத்து ஒதுக்குவது. சாதிக்காரன் என எவரேனும் அணுகினால் அவர்களை அருகிலேயே ஒட்டவிடக்கூடாது என நினைத்தான். ஆனால் காலமெல்லாம் மனதில் ஊறிப்போன இந்த சாதிய எண்ணத்தை எப்படி தனிமனிதரின் எண்ணத்திலிருந்து நீக்குவது என மனதில் நினைத்தபோது சந்தானலட்சுமி என்ன சாதி என்பதே தனக்குத் தெரியாமல் இருப்பது கண்டு இந்த சாதி ஒழிப்பு ஒரு சத்திய சோதனைதான் என மனம் எண்ணமிட்டது. 


சாதியை முன்னிலைப்படுத்தக்கூடாது என்பதில் அதிக கவனம் வேண்டும் என நினைத்துக்கொண்டான். இதுவும் கால மாற்றங்களினால் சாத்தியமே. முதலில் பெயர் வைக்கும்போது இந்த சாதிப்பெயர் எதுவும் சேர்த்துக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் நமது எண்ணத்துக்குப் போராட முன்வர வேண்டும். முதலில் எனது கிராமத்தில் இருக்கும் சாதியப் பிரிவினைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அனைத்து மக்களும் ஒன்று என்ற எண்ணத்தோடு தனித்தனி சாதியினராய் கூட்டமாக இல்லாமல் அனைவரும் கலந்திருக்க வேண்டும் எனத் திட்டமிட்டான். ஊரில் என்ன சொல்வார்கள் என நினைக்கும்போதே எப்போதும் தண்ணி அடித்துவிட்டு ரகளை பண்ணும் கோபிநாத் மனதில் தோன்றினார். எப்படியும் தொடங்கித்தான் ஆகவேண்டும், அதற்காக எதிர்ப்பு கண்டு அஞ்சுவதில்லை என முடிவெடுத்தான். 


கூட்டம் போட்டு பேசும்போது தலையாட்டிக் கேட்கும் மனிதர்கள் தனக்குத் தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தான். ஒவ்வொரு மனிதரின் உணர்வுகளுடன் உரசுவது என்பதுதான் தான் செய்யப்போகும் செயல் என்பதில் கவனமாக இருந்தான். ஒவ்வொரு ஊருக்கும் தன்னைப்போல எண்ணம் உடையவர்கள் எப்படி கண்டுபிடிப்பது என்பதை எல்லாம் சிந்தித்துத் தெளிந்தான். கட்சியின் பெயரை மனதில் எழுதினான். 'மக்கள் ஒற்றுமை இயக்கம்'. எவரும் ம ஒ இ என சுருக்கக்கூடாது எனத் தெளிவு கொண்டான். 


தனது எண்ணத்தை சந்தானலட்சுமியிடம் சொன்னதும் அவளது மனம் படபடவென அடித்துக்கொண்டது. காலம் காலமா இருந்துட்டு வரதை மாத்துரது சாத்தியமில்லையே என மனம் நினைத்தது. முதலில் தன்னை, தனது வீட்டை மாத்துவது என்பது எத்தனை கடினமான காரியம் என எண்ணினாள். அதை வெளிப்படையாகவே சொன்னாள்.


''நான் சொன்னா நீ எதுவும் கோவிச்சிக்கமாட்டீயே' எனத் தொடங்கினாள். 'ஆனானப்பட்ட காந்தியையே குறை சொல்லும் கூட்டம், ஆனானப்பட்ட அம்பேத்காரையே குறை சொல்லும் கூட்டம், நீ நினைக்கறது எல்லாம் நடக்க சாத்தியம் சத்தியமா இல்லை, பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டமா, ரெண்டு மூணுனு பெத்துப் போட்டமா, அதை வளர்த்தமா, அதுக பிள்ளைகள கொஞ்சினமானு போகாம எதுக்கு இந்த பொறுப்பில்லா சனத்துக்காக‌ உன் வாழ்க்கைய வீணடிக்கிற' என நிறுத்தினாள்.


''நீ இப்படி பொறுப்பில்லாம பேசுவனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, இந்த சாதி எல்லாம் பின்னால வந்தது, இந்த தமிழ் அடையாளம் எல்லாம் பின்னால வந்தது ஒரு மொழி பேசினா அது அவங்களுக்கு அடையாளமா, ஒரு நாடுனு இருந்தா அது அவகளுக்கு அடையாளமா, நிர்வாகம் பண்றத்துக்கு பிரிச்சி வைக்கலாம், ஆனா பிரிச்சி வைச்சதனாலேயே பிரிவினை பேசக்கூடாது'' என அவளது கையைப் பிடித்தான் ரகுராமன்.


''பொறுப்பு வேற, வாழ்க்கை நிலமை வேற, ஆகாயத்துல கோட்டை கட்டுறது கனவுக்கு சரி, ஆனா அஸ்திவாரம் இல்லாம பலூன்ல வேணும்னா கோட்டை மாதிரி செஞ்சி தொங்கவிடலாம், இப்பவும் சொல்றேன் இதெல்லாம் சாத்தியமே இல்லை, அதுக்கு மீறி நீ நடந்தா உன்னோட நானும் வரேன், இனி மறு கருத்து பேசலை, எப்படி செய்யலாம்னு யோசனை மட்டும் சொல்றேன்' என ரகுராமனின் கைகளை தனது கன்னங்களில் ஒற்றிக்கொண்டாள். 


கல்லூரியில் இவனது எண்ணத்தை கேள்விபட்ட வேறு எவரும் இவனுடன் சேர்ந்து கொள்ள தயாராக இல்லை. புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி அதுக்கு அடையாளம் தேடி, நீ சொல்றதை நடமுறைப்படுத்தி வரதுக்குள்ள நாங்க கிழடாயிருவோம், அதக்கப்பறம் எப்படி பணம் சேர்க்கறது, என்றார்கள்.


பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வாழும் உலகில் எதுவெல்லாம் சாத்தியப்படும் என எண்ணும்போது இந்த பணத்தாலும் சில விசயங்கள் சாத்தியப்படுவதில்லை என்பதை எப்படி மறுக்க முடியும்? 


(தொடரும்)

Tuesday 23 February 2010

இந்தத் தொடர்கதையே ரஜினிக்காகத்தான்

ரஜினியைப் பற்றி எவரேனும் அவதூறு வார்த்தைகள் சொன்னால் ஏனோ மனதில் ஒரு இனம் புரியாத கோபம் வந்து போகிறது. ரஜினியின் அமைதியைப் பார்த்து நானும் கற்றுக்கொள்ள வேண்டியது எத்தனையோ இருக்கிறது, ஒவ்வொரு மூலையிலும் எவரேனும் ஒருவர் ரஜினியைத் திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். இதுகுறித்து ரஜினிக்குத் தெரியும்.

 ஊரார் பேச்சுக்கெல்லாம் செவி கொடுத்துக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல, தனது செயல்களில், எண்ணங்களில் உறுதியாக இருப்பவன் எவனோ அவனே வாழ்க்கையின் சாதனையாளனாகிறான். ஒருவன் சாதனையாளனாவதற்கு வெகுவாக காரணமாக இருப்பவர்கள் மிக மிகச் சாதாரண மனிதர்களே என்பதை எந்தவொரு சாதாரண மனிதனும் புரிந்து கொண்டிருப்பதில்லை.

நூறு பேர் சேர்ந்தால் தான் ஒரு கூட்டம், அதில் ஒருவன் தனித்துத் தெரிவான் எனில் அவனே தலைவன் என்கிற நிலைதான் உண்டு. தனித்துத் தெரியப்படுபவனை தலையில் வைத்து ஆடுபவர்கள் மீதமிருக்கும் தொண்ணூற்றி ஒன்பது பேரும். இந்த தொண்ணூற்றி ஒன்பது பேரும் அந்த தனி ஒருவனால் பின் வரும் காலத்தில் பயமுறுத்தப்படுவார்கள். இதைப் போன்றே பயத்தினால் மட்டுமே பதுங்கி வாழும் வாழ்க்கையைப் பழகிப் போவோர்களே இந்த சாதாரண மனிதர்கள். மனதில் எழும் குமுறல்களை பேச்சுகளாலும், எழுத்துகளாலும் மட்டுமே இவர்களால் வெளிக்காட்ட முடியும்.  இவர்களால் எந்தவொரு ஆதாயமும் இல்லை, எந்தவொரு புரட்சியும் ஏற்பட போவதில்லை. மொத்தமாகக் கத்தும் கொள்ளைக்காரர்கள் இவர்கள், இவர்களில் நானும் ஒருவன்.

தனக்கென்று ஒரு கொள்கையும் இல்லாதவர்கள், கூட்டம் கூட்டமாக சேர்ந்து கும்மாளம் போடுபவர்கள், பொதுநல அக்கறை என கொஞ்சம் கூட இல்லாதவர்கள், இவர்களுக்கெல்லாம் கத்த மட்டுமேத் தெரியும், கற்றுக்கொள்ளத் தெரியாது. அப்படிப்பட்ட ஏக்கங்களுடன் வாழும் பல சாதாரண மனிதர்களிடமும் ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

ரஜினி ஒரு கட்சி ஆரம்பிக்கமாட்டாரா, அதனால் சகல மக்களும் நலம் பெற்று விடமாட்டார்களா என ரஜினி ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகள் இருப்பது போல பல சாதாரண மனிதர்களுக்கும் இருக்கிறது. தவறு ஆட்சியாளர்களிடம் இல்லை, மக்களிடமும்  இருக்கிறது, அதாவது தவறை ஊக்குவிக்கும் இந்த சாதாரண மக்கள் ஆட்சியாளர்களைத் தவறச் செய்கிறார்கள். நான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு எனும் ஒரு தொடர்கதையை ஆரம்பித்தபோது நண்பர் ஒருவர் நகைச்சுவையாகவே சொன்னார் 'அங்கே எல்லாம் ஆட்டோ இல்லையா' என.

சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் இருக்கும் அடித்தட்டு பிரச்சினைகளைச் சரிசெய்யவும், தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை சரி செய்யவும் என அவர்களுக்கு நேரம் சரியாகிப் போகிறது, இந்த இளைஞர்கள் பற்றி என்ன எழுதுவது! பொறுப்பற்ற சமுதாயத்தின் பொறுப்பற்றவர்களில் இவர்கள் தான் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இளைஞர் சமுதாயம் என்னென்ன சாதித்திருக்கிறார்கள் என்று மட்டும் கொதித்து எழுந்து விடாதீர்கள். குப்பை குப்பையாகத்தான் இருக்கிறது, அதுவும் அதிகப்பட்ட குப்பையாய்.

ஒரு கதை எழுதுவதைக் கூட எத்தனை விசயங்களை நினைத்து கதாபாத்திரத்தை ஏற்படுத்தி வருகையில் ஒரு கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்வது என்பது அத்தனை எளிய காரியமா? ரஜினியே கட்சி ஆரம்பித்து ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டால் சாதாரண மக்களின் துயரம் நீங்கிவிடுமா? மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஆனால் நாம் அவ்வாறு செயல்பட இயலாது, ஏனெனில் அன்றாடத் தேவைகள் நமக்கு எது சரியோ அதுவே போதும் என்றுதான் நிலையில் இருப்போம், நான் அப்படித்தான் இருந்தேன், இருக்கிறேன்.

ரஜினி ஆனந்த விகடனோ, குமுதமோ ஒன்றில் பல வருடங்கள் முன்னர் மிகவும் அழகாக பேட்டி கொடுத்திருந்தார், மக்களிடம் மாற்றம் வர வேண்டும் என. யார் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் அதில் நாமும் குளிர் காய வேண்டும் என்றுதானே பலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்துத் தொடங்கியதுதான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு. இந்த தொடர்கதையை எப்படியெல்லாம் கொண்டு போக வேண்டும் என மனதில் முழுத் திட்டமும் தீட்டி வைத்திருக்கிறேன். ஏனெனில் சிறு வயது முதல் நான் கண்ட கனவுகளில் ஒன்று அது.

ரஜினி கட்சி ஆரம்பிக்க நினைத்தால் இன்னும் நன்றாக யோசிக்கட்டும், பிரபலமானவர்கள், சாதனையாளர்கள் மட்டுமே கட்சி ஆரம்பித்தால் தான் நாடு சுபிட்சம் பெறுமா? இதோ எனது கிராமத்தில், எனது நகரில், எனது மாநிலத்தில், எனது நாட்டில் தனித்தே பொதுநல காரியங்கள் செய்து கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று கூடட்டும், ஒரு கட்சி ஆரம்பிக்கட்டும், நம்மில் மாற்றம் ஏற்படட்டும், நாடு சுபிட்சம் பெறும். அவர்களைக் கண்டு தயவுசெய்து பொருமிவிடாதீர்கள்.

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு

அத்தியாயம் 1   அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5

Saturday 2 January 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 5

கல்லூரிக்குக் கிளம்பிச் செல்ல தயார் ஆனான் ரகுராமன். ஊர் மந்தையில் ரகுராமனை கிரிக்கெட் விளையாடுபவர்கள் பலரும் சூழ்ந்து கொண்டார்கள்.

'இனி எப்போண்ணே வருவே' என்றான் சுப்பிரமணியன்.

'ரெண்டு மூணு மாசம் ஆகும்டா சுப்பு, நீயாவது ஒழுங்காப் படி, இதோ இவனுகளை மாதிரி ஆயிராதே' என்றான் ரகுராமன்.

'எங்களுக்கென்னடா குறைச்சல், நினைச்சப்போ வேலை செய்வோம், இன்னொருத்தருக்கு கைகட்டி சேவகம் பண்ற பொழப்பா எங்கது' என்றான் அழகர்பாண்டி

'அழபா, ஃபிலிம் காட்டுறியா' என்றான் பழனிச்சாமி.

'விவசாயம் பாக்குறது தப்புனு சொல்லலை, விவரமா, விவேகமா வாழனும்னுதான் சொல்றேன். பள்ளிக்கூடத்துக்கோ, காலேஜுக்குப் போயோப் படிச்சிட்டா மட்டும் அது படிப்பில்லை, ஒரு சமய சந்தர்ப்பம் வாய்க்கறப்போ எப்படி நடந்துக்குறோம்னு நமக்கு நாமச் சொல்லித்தரதும், பிறர்கிட்ட இருந்து படிக்கிறதும்தான் படிப்பு, அதை வைச்சித்தான் சொல்றேன்' என்றான் ரகுராமன்.

ரகுராமன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான். சுப்பிரமணியன் ரகுராமனிடம்

'அண்ணே, கட்சி எப்போண்ணே ஆரம்பம்' என்றான்.

'கட்டாயமா சொல்றேன்' எனச் சிரித்துக்கொண்டே விலகினான் ரகுராமன்.

கல்லூரியில் எல்லாம் அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. சில தினங்களாக தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை சந்தானலட்சுமியிடம் சொன்னான்.

'அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறியா?'

எனச் சந்தேகத்துடனும் சற்று வெறுப்புடன் சந்தானலட்சுமி கேட்பாள் என சற்றும் ரகுராமன் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் போல எண்ணம் கொண்டவள் என்றே எண்ணிக் கொண்டிருந்த ரகுராமனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

'நீ, நான் எது செஞ்சாலும் கூட இருப்பேனு நினைச்சேன்' என்றான் ரகுராமன்.

'எனக்குப் பிடிக்கலை' என்றாள் சந்தானலட்சுமி.

'மனசுல ஒரு பெரிய திட்டம் போட்டு வைச்சிருக்கேன், அதைச் செய்யனும், நீ பக்கபலமா இருப்பேனு மனசுல உறுதியா இருந்தேன், நீ சொல்றதப் பார்த்தா என்னால கட்சி ஆரம்பிக்க முடியாதுனு நீ நினைக்கிற‌' என்றான் ரகுராமன்.

'சரி, கட்சி ஆரம்பிச்சி என்ன செய்யப் போற?' என்றாள் சந்தானலட்சுமி.

'ம்ம்... ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கப் போறேன், ஏழை எளியோர்கள்னு எல்லாருமே சந்தோசமா இருக்க வழி பண்ணப் போறேன், சாதி சமயம் எல்லாம் இல்லாத ஒரு சமூகமா மாத்தப் போறேன், உழைப்பே மூலதனம்னு நினைக்கிற சமுதாயம் என் லட்சியம்' என வேகமாகப் பேசினான் ரகுராமன்.

சந்தானலட்சுமி விழுந்து விழுந்து சிரித்தாள். 'ஐயோ ரகு, நீ சினிமாவுக்கு வசனம் எழுதப் போகலாம், ஒரு ஹீரோவா வேசம் போடலாம், அரசியல்வாதி கெட்டப் கூட உனக்கு நல்லா இருக்கும். நீ பேசினியே இப்படித்தான் ரொம்ப பேரு வெட்டித்தனமா கனவு கண்டுட்டு இருக்காங்க, இந்த வெட்டித்தனமான கனவை எழுதி காசு பாக்கிறவனு ஒரு பக்கம், அதே கனவை நிஜம் போல சினிமா காட்டி அதைப் பாக்குறவங்களை கனவு காண வைச்சி காசு பாக்குறவனு ஒரு கூட்டம், நம்ம சமுதாயம் ஒரு கனவு காணுறவங்க இருக்கற சமுதாயம். அதுவும் வெட்டித்தனமான கனவு'

'கனவு ஒருநா மெய்ப்படும் லட்சுமி, உலக மாற்றமே சாதாரண மனிசர்களோட கனவுகளில் இருந்துதான் தொடக்கம். நா கட்சி ஆரம்பிக்கிறதாத்தான் இருக்கேன், அதுல எந்த மாத்தமும் இல்லை. இதுக்கான வழிகளை நான் தேடப் போறேன்' என்றான் ரகுராமன்.

'இருக்கற கட்சி போதாதா?, சமூக நலத்துக்காகப் பாடுபடறவங்க கட்சில நின்னு தோத்தக் கதை எல்லாம் உனக்குத் தெரியாதா?, ஏன் இப்படி தேவையில்லாத வேலை உனக்கு'

சந்தானலட்சுமி சொன்னதைக் கேட்டதும் ரகுராமன் மனம் உடைந்தான். தனது மனதை திடப்படுத்திக் கொண்டு சந்தானலட்சுமியிடம் சொன்னான்.

'எங்க ஊருல இருந்துதான் என் கட்சியோடத் தொடக்கம் இருக்கப் போகுது, எனக்குத் தெரிஞ்சவங்க, என்னோடப் படிச்சவங்கனு எல்லார்கிட்டயும் விரிவாப் பேசப் போறேன், என்னோட முழுத்திட்டத்தையும் எழுதி வைச்சிட்டு உன்கிட்ட பேசறேன். அப்போவாவது எனக்கு நீ சப்போர்ட் பண்றியானுப் பாக்குறேன்' என்றான் ரகுராமன்.

'நீ உண்மையிலே உறுதியா இருக்கியா, எனக்குப் பிடிக்கலை... ஆனா நீ உறுதியா செய்யப் போறதா இருந்தா உன்கூட நான் எப்பவும் இருப்பேன்'

சந்தானலட்சுமியின் அந்த வார்த்தைகள் ரகுராமனுக்கு அளவில்லாத தைரியம் தந்தது.

தட்டிக் கொடுப்பவர்கள் எவரேனும் ஒருவர் இருந்தால் போதும், தைரியம் இல்லாத செயல்கள் கூட தைரியம் பெற்றுவிடுகின்றன. தட்டிக் கழிப்பவர்கள் அதிகம் இருந்த காரணத்தினாலேயே, தன்னைத் தானேத் தட்டிக் கொடுக்கும் வகையில் தனக்கு ஒரு மாபெரும் சக்தி ஒன்று உதவுதாக நினைத்துக் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து சாதித்து இருக்கிறார்கள். தடுமாறி, தடம் மாறி விழுந்த போதும் எழ வேண்டும் எனும் எண்ணம் இல்லாத உயிரினம் ஏதேனும் உண்டா உலகில்?

(தொடரும்)

Thursday 15 October 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 4

4.

ரகுராமன் வீட்டுக்கு வந்ததும் கட்சிக்கான கொள்கைகள் எதுவெல்லாம் என யோசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது தந்தை ரங்கராஜ், ரகுராமனை அழைத்தார்.

''எதோ கட்சி ஆரம்பிக்கப் போறியாமே''

''யாருப்பா சொன்னா''

''கட்சி கொள்கை, எந்த கட்சிக்கு ஓட்டுப் போடறீங்கனு வேற கேட்டுட்டு இருக்கியாமே''

''ஆமாம்பா, அப்படியொரு எண்ணம் இருக்கு''

''இருக்கும் இருக்கும், கட்சி கொள்கை, கட்சி கொள்கைனு பேசறியே, உனக்குனு ஒரு கொள்கை எப்பவாச்சும் வைச்சிருக்கியா?ஒவ்வொரு தனி மனிசன் சேர்ந்ததுதான் ஒரு கூட்டம், அமைப்பு எல்லாம். அந்த அந்த தனி மனிசனுக்குனு ஒரு கொள்கை இருக்கும், இருக்கனும். ஆனா கொள்கையோட இருக்கிற ஒரு தனிமனுசனக் காட்டுப் பாக்கலாம், ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்னு கொள்கை மாத்திட்டே இருக்கறவனுகதான் எல்லாரும், நேரத்துக்கு, காலத்துக்கு ஏத்தமாதிரி தன்னை மாத்திக்கிர பயலுகதான் எல்லாரும். புரிஞ்சிக்கோ!

ஒரு கூட்டத்தில இருக்கிற எல்லா தனி மனிசனுக்கும் ஒரே கொள்கை இருக்குமானு உன்னால சொல்ல முடியுமா! ஒரு தனிமனிசனோட கொள்கையை கையில வைச்சிக்கிட்டு செம்மறியாடு கூட்டம் மாதிரி அந்த கொள்கைக்குப் பின்னால போறவங்கதான் பெரும்பாலானவங்க. அவங்க அவங்களுக்கு ஒரு ஒழுங்கான கொள்கையா இருந்தா அந்தத் தலைவரோட கொள்கை, இந்தத் தலைவரோட கொள்கைனு அநாவசியமாப் பேசிட்டு எவனும் இருக்கமாட்டான், அவனவனோட கொள்கையை நிறைவேத்திரதுல உறுதியா இருப்பான், அதைப் புரிஞ்சுக்கோ முதல்ல, கட்சி ஆரம்பிக்கப் போறேனு பட்சி சொல்லிச்சினு அடிப்படை விசயத்தைப் புரிஞ்சிக்காம உலகத்தைத் திருத்த நினைக்காதே, இதுதான் உனக்கு நான் கடைசியா சொல்றது, பொழப்ப பாரு அவ்வளவுதேன், போ!''

ரகுராமன் விக்கித்து நின்றான்.

''என்ன நின்னுட்டே இருக்கே, போயி காலேஜுல ஒழுங்காப் படிக்க வழியப் பாரு. இதோ பாரு, அரசியல் ஒரு சாக்கடைனு சொல்வாங்க, ஆனா அந்த சாக்கடை உருவாக காரணமே நம்மளைப் போல இருக்கிறவங்கதானு ஒரு பயலும் நினைச்சிக்க மாட்டான், எப்படியாவது உலகத்தை மாத்திப்புடனும், அவர் வந்தா நல்லா இருக்கும், அவர மாதிரி ஆட்சியத் தரனும் பேசற எவனுமே தன்னோட செயலை ஒரு நிமிசம் கூட பரிசோதிக்க மாட்டான் அதை தெரிஞ்சிக்க''

ரகுராமன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவனது தந்தை இத்தனை கடுமையாக எப்போதுமே அவனிடம் பேசியதில்லை. அவர் செய்யும் தொழிலில் நேர்மையாகவும், பிறரிடம் அன்பாகவும், கரிசனையுடன் மட்டுமே அவர் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கிறான். எந்தவொருப் பிரச்சினையெனினும் மிகவும் சுமூகமாகவே பேசித் தீர்த்துக் கொள்வதில் மிகவும் வல்லவர் அவர். அவரை கிராமத்தில் மதித்து நடப்பவர்கள் அதிகம். தேவையில்லாத சச்சரவுகளில் நேரத்தைச் செலவழிப்பதை விட ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாம் என எப்போதும் ஒரு துடிதுடிப்புடன் செயலாற்றுபவர்.

ரகுராமன் தனது அறையில் அமர்ந்தான். தனக்கென என்ன கொள்கை இருக்கிறது என நினைத்துப் பார்த்தான். ஒரு கொள்கையும் தென்படவில்லை. அவனது மனதின் ஓரத்தில் சந்தானலட்சுமி தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சந்தானலட்சுமி, ரகுராமனுடன் படிக்கும் பெண். இருவருக்குமிடையிலான காதல் பலருக்கும் கல்லூரியில் தெரிந்தே இருந்தது.

இத்தனை பேசிய தந்தை ஏன் ஒரு கட்சிக்கு என இன்னமும் வாக்கு அளித்துக் கொண்டிருக்கிறார் என எண்ணினான் ரகுராமன். உலகில் நடக்கும் அநியாய செயல்களைப் புறக்கணிக்கிறோம் என வாக்கு அளிக்காமல் இருப்பது சிறந்தது என எப்படி சொல்லலாம், ஒரு மாற்றம் வேண்டுமெனில் அதற்கான ஆயத்தங்கள் மிகவும் அவசியம் என தோணியது ரகுராமனுக்கு.

பேசிப் பேசியேப் பொழுதைக் கழித்து மாற்றம் தேவையெனினும் அவர் மாறட்டும், இவர் மாறட்டும் என வறட்டுத்தனமாகப் பேசி வாழ்க்கை கழிக்கும் மனிதர்கள் இருக்கும் வரை, தவறெனினும் சகித்துக்கொண்டு, தானும் அந்த தவறில் உழன்று வாழும் மனிதர்கள் உள்ளவரை குறையுள்ள உலகமாகவே இருக்கும் என்பதுதானே எழுதாத வரலாறு!

(தொடரும்)

Thursday 1 October 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 3

ரகுராமன் சுப்பிரமணியின் கேள்விக்கு நிதானமாகவே பதில் சொன்னான்.

''ஆமாடா சுப்பு, ஒரு கட்சி ஆரம்பிக்கத்தான் போறேன்''

''அண்ணே, நெசமாவாண்ணே, நம்ப முடியலண்ணே''

அனைவரும் ரகுராமனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

''இன்னைக்கு கட்சி பேரு, உடனே ஒரு கட்சி கொடி, நாளைக்கு கட்சி மாநாடுனு ஆரம்பிச்சி என்ன ஏதுனு பேசத் தெரியாம பேசப் போற கட்சியா இது இருக்காது, அதுக்கு நாளாகும், இப்ப விளையாடலாம்''

ரகுராமன் சொன்னதும் அவர்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்கள். ஊருக்குத் தலைவராக வழியக் காணோம், இந்த நாட்டுக்குத் தலைவராகப் போறாராம்.

விளையாட ஆரம்பித்தார்கள். ரகுராமன் வீசிய பந்தினை சுப்பிரமணி ஓங்கி அடித்திட மட்டை உடைந்து போனது.

''இருக்கறதே ஒண்ணு, அதையும் உடைச்சிப் பூட்டியாடா, நொண்டிக்கார மவனே''

சுப்பிரமணியை பழனிச்சாமி அடிக்க ஓடி வந்தான். பிறர் தடுத்தார்கள். வேணும் என்றா அவன் செய்தான் என பழனிச்சாமியைத் திட்டினார்கள்.

''நாம சேர்த்த காசை வைச்சி ஒரு பேட் வாங்கிரலாம், பழனி, எவ்வளவு பணம் இருக்கு இப்போ?''

ரகுராமன் கேட்டதும் பழனிச்சாமியின் முகம் சற்று வித்தியாசமானது.

''ரகு, எந்த பணமும் என்கிட்ட இல்ல''

''டேய் பழனி, முன்னூறு ரூபா இருக்குனு என்கிட்ட அன்னிக்கி சொன்ன, என்ன விளையாடுறியா''

''அழபா, அன்னிக்கி சொன்னேன், இன்னிக்கி இல்ல''

''இவனிட்ட பணத்தைக் கொடுக்காதீங்கனு அன்னிக்கே நான் சொன்னேன், எவனும் கேட்கலை, இவன் சீட்டாட்டத்துக்கும், குடிக்கும் அந்த காசை தொலைச்சிருப்பான்''

''அழபா, அடிச்சேனா செவுலு பிஞ்சிரும்''

''அடிராப் பார்க்கலாம், காசை தின்னுட்டு மிரட்டுறியா''

''ரெண்டு பேரும் நிறுத்துங்க, பழனி, நீ காசை ஏற்பாடு பண்ண வழியப் பாரு, சுப்பு நீ இனிமே காசு பொறுப்பு ஏத்துக்கோ, நாளைக்கு அவங்ககிட்டயே பேட் வாங்கிக்குவோம், முடியாதுனு சொன்னா மேட்சை கேன்சல் பண்ணிருவோம்''

''ரகு, என்ன உடனே பொறுப்பில இருந்து என்னைத் தூக்குற, நீ வைச்சதா சட்டம்? அந்த காசையெல்லாம் திருப்பித் தரமுடியாது, அது போனது போனதுதான்''

பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கும்போதே அழகர்பாண்டி பழனிச்சாமியை ஓங்கி அடித்தான். இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. ரகுராமனும் மற்றவர்களும் அவர்களை விலக்கி விட்ட பின்னரும் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்கள்.

''பழனி, அழபா, நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு விளையாட வேணாம், ரமேஷூ நீயே நாளைக்கு கேப்டனா இரு''

ரகுராமன் சொன்ன முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். பழனிச்சாமியும், அழகர்பாண்டியும் கோவித்துக் கொண்டுச் சென்றார்கள்.

இரவு வீட்டினில் உட்கார்ந்து ரகுராமன் கட்சிக்கான கொள்கை எது என யோசிக்கலானான். சொந்த ஊர் அணியில் நடக்கும் பிரச்சினைகளை சமாளிப்பது என்பதே எத்தனை அசெளகரியமாக இருக்கிறது என மனம் சஞ்சலம் அடைந்தான்.

அடுத்த நாள் காலையில் வக்கானங்குண்டினை அடைந்தார்கள். பழனிச்சாமியும், அழகர்பாண்டியும் வந்திருந்தார்கள். சண்டை போட்டுக் கொள்ளமாட்டோம் என இருவரும் சொன்னதும் இருவரையும் அணியில் சேர்த்துக்கொண்டான் ரகுராமன்.

போட்டி ஆரம்பித்தது. வக்கனாங்குண்டு அணியினர் முதலில் மட்டை பிடித்தனர். இருபது ஓவர்கள் என நிர்ணயித்துக் கொண்டார்கள். போட்டியில் வக்கனாங்குண்டு அணியினரே வழக்கம் போல வெற்றி பெற்றனர். பணத்தை கொடுத்துவிட்டு ரகுராமனும் மற்றவர்களும் திரும்பி நடந்தபோது பழனிச்சாமி நடுவர்களிடம் சென்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தான். என்னவென ஓடிச் சென்றுப் பார்த்தனர்.

''டேய் ரகு, இவனுங்க ரெண்டு பேரும் ஃபிக்ஸ் பண்ணி நம்மளைத் தோக்க வைச்சிட்டானுங்கடா''

இரண்டு அணியினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த இரண்டு நடுவர்களுமே வக்கனாங்குண்டுக்காரர்கள் பணம் தருவதாக சொன்னார்கள் என ஒப்புக்கொண்டனர். பழனிச்சாமி அவர்களை மிரட்டி கொடுத்தப் பணத்தைத் திரும்ப வாங்கினான்.

''டேய் ரகு, உன்னை மாதிரி இருந்தா உன் கட்சி உருப்படாதுடா, என்னை மாதிரி அடிதடினு இருந்தாத்தான் எதையும் இந்த உலகத்தில சாதிக்க முடியும், என்னை மாதிரி ஆளுகளையும் தயார் பண்ணு''

''அண்ணே, அடாவடித்தனம் பண்ணித்தான் எதையுமே நடத்தனுமாண்ணே''

சுப்பிரமணியின் தோய்ந்த குரலைக் கேட்டபோது ரகுராமனின் முகம் சோகத்தில் மூழ்கியிருந்தது.

நேர்மை, சத்தியம், ஒழுக்கம் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது என்றும், சாதாரண மக்களுக்கு அதுபற்றிய விபரங்களில் அக்கறை தேவையில்லை என சின்ன சின்ன விசயங்கள் தானே என தவறி நடக்கும் மக்கள் தங்களைத் தாங்களே எப்பொழுது திருத்திக் கொள்வது?

(தொடரும்)

Friday 4 September 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2

ரகுராமன் வீட்டிற்குச் சென்று தனது பாட்டியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

''போய் பொழப்பப் பார்க்க வழியப் பாரு, எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டனுட்டு''

''சொல்லுங்க பாட்டி''

''போறியா என்னடா, வந்துட்டான்''

பாட்டி எரிச்சலில் இருந்தார். ரகுராமன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். தாத்தாவிடம் கேட்டான் ரகுராமன்.

''நம்ம நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடினவங்க உண்டு பண்ணின கட்சி, அந்த கட்சிக்கு ஓட்டுப் போடாம வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுறது?''

''ஆனா இப்போ அந்த காங்கிரஸ் இல்லையே தாத்தா, இப்போ இருக்கிறது இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியோட கொள்கை என்ன தாத்தா?''

''உனக்கு என்ன வேணும் இப்போ, நானே உன் பாட்டி என்கிட்ட கோவிச்சிக்கிட்டு அப்படி ஓரமாப் போய் உட்கார்ந்திட்டானு கவலையா உட்கார்ந்திருக்கேன், போய் ரங்கசாமி கடையில எங்க ரெண்டு பேருக்கும் வடை வாங்கிட்டு வா''

''காங்கிரஸ் கட்சி கொள்கை என்னனு சொல்லுங்க தாத்தா, போய் வாங்கியாரேன்''

''அது அ.தி.மு.க வோட சேர்ந்தா அந்த கட்சியோட கொள்கை, தி.மு.க வோட சேர்ந்தா அந்த கட்சியோட கொள்கை, போடா, வாங்கிட்டு வெரசா வாடா''

ரகுராமன் கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு ரங்கசாமி கடையில் வடை வாங்குவதற்காக நின்றான். விவசாயம் பார்த்துக் கொண்டும், கிரிக்கெட் விளையாடித் திரியும் அழகர்பாண்டி ரகுராமனிடம் சொன்னான்.

''ஏலே ரகு, நீ என்னமோ கட்சி ஆரம்பிக்கப் போறீயாம்மே, எனக்கு ஒரு பதவி இருக்குல, நம்ம டீமுக்கு கேப்டன் பதவியே வேணாம்பா, கட்சிக்கு தலைவரு போஸ்டு வேணாம்னு சொல்லுவியல''

''சும்மா இருடா அழபா, பழனி பத்த வைச்சிட்டானுக்கும்''

''உடனே ஆரம்பி, இந்த கேப்டன் கட்சியை விட நிறைய ஓட்டு வாங்கி நாமதான் பெரிய கட்சினு சொல்லிக்குவோம், என்ன சொல்ற? அதில்லாம எவன் எவனோ கட்சினு ஒரு கொடியை வைச்சிட்டு அதை கிழிக்கப் போறேனு, இதை கிழிக்கப் போறேனு வாய் கிழியாத குறையா பேசறான், நாம் என்ன அவன் பேசறதையெல்லாம் கேட்டுட்டு இருக்கோம், நம்ம பொழப்ப நாம பார்க்கறதில்லையா. அதிருக்கட்டும், நாளைக்கு நீ மேட்சுக்கு வரலியனு வைச்சிக்கோ, வத்தனாங்குண்டுகாரங்கே நம்மளை ஒரு வழி பண்ணிருவானுங்க''

''எல்லோரும் என்னையவே பார்க்கறாங்கடா, அடக்கி வாசிடா, கருமம், கருமம்''

''தலைவா''

கடையின் பின்புறம் மறைந்திருந்த பழனிச்சாமி ரகுராமனின் காலில் சடாரென ஓடி வந்து விழுந்தான். ரகுராமன் திடுக்கிட்டான்.

''என்ன நக்கலா?''

''நீ கட்சி ஆரம்பிக்கிற தலைவா, நாங்க உன்கூட இருக்கோம் தலைவா, டேய் அழபா, கட்சியை நாளைக்கு வத்தனாங்குண்டுல வச்சி ஆரம்பிச்சிரலாம்டா''

ரகுராமன் கோபத்துடன் பேசாமல் இருக்குமாறு அவர்களை சத்தம் போட்டான். கடைக்காரர் ரங்கசாமி கட்டிக்கொடுத்த வடையை வாங்கிக் கொண்டான்.

''தம்பி நீ இந்த வெட்டிப் பயலுகளோட சேந்து வீணாப் பூராதே''

''யோவ் ரங்கு, சாமியாப் போயிருவ, யாரை வெட்டிப்பயகனு சொல்ற, தரிசு நிலத்தை வெளச்சல் நிலமா மாத்தினவங்க நாங்க, என்னடா அழபா''

''விடுறா, விடுறா, காபி போட்டு ஆத்திக்கிட்டு இருக்காரு, மூஞ்சியில ஊத்தினாலும் ஊத்திருவாரு, விவரங்கெட்ட மனுசன்''

''டேய் இப்படியே அலம்பல் பண்ணி அந்த தம்பியக் கெடுத்து குட்டிச்சுவராக்கிராதீங்கடா''

ரகுராமன் கடையை விட்டு நடக்கத் தொடங்கினான். பழனிச்சாமி ரகு பின்னால் ஓடினான்.

''ரகு என்னடா பேசாமப் போய்கிட்டு இருக்க, அவரு அப்படித்தான் டா''

''இது அப்படியே என் அப்பாகிட்ட போகும், அவரு ஏகத்துக்கும் கவலைப் படுவாரு, சும்மா வாயை வச்சிட்டு இருக்கமாட்டியா, விளையாடப் போங்க, நா சாயந்திரமா வரேன்''

தாத்தாவிடம் சென்று வடைப் பொட்டலத்தைத் தந்தான் ரகுராமன். பாட்டி சமாதானமாகி இருந்தார்.

''அடுத்த வருசம் எந்த கட்சிக்குத் தாத்தா ஓட்டுப் போடுவீங்க''

''எப்பவும் போலத்தான்''

பதிலைக் கேட்கப் பிடிக்காமல், ரகுராமன் ஊர் தலைவர் ராமசுப்புவினை சென்றுப் பார்த்தான். பஞ்சாயத்துத் தலைவராக இருப்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டான்.

''இந்த பஞ்சாயத்துத் தலைவராகிறதுக்கு நான் பட்டபாடு இருக்கே, என்னத்த சொல்றது, ஊருலயே ஒத்துமையா இருக்க மாட்றானுங்க, அந்த கட்சி இந்த கட்சினு நீ வேற சாதி, நான் வேற சாதினு ஒரே அடிதடி. நீயும் தானப் பாத்துக்கிட்டு இருக்க. போட்டி பொறாமைனு ஏண்டா பொது வாழ்க்கைக்கு வந்தோம்னு இருக்கு இப்போ, எல்லோரும் கூடி என்னை இதுல இழுத்து விட்டுட்டாங்க, இனி ஒதுங்கிப் போக முடியாது, ஏன் இவ்வள அக்கறையா கேட்கற''

''அடுத்த வருசம் நடக்கப் போற தேர்தலுல ஓட்டுப் போடனும் அதான் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுறதுனு முடிவு பண்ணலாம்னு கேட்டேன்''

''என்ன இதுக்குப் போய் ஒரு வருசம் முன்னமே யோசிக்கிற, நம்ம கட்சிக்கு கண்ணை மூடிட்டு ஓட்டுப் போடு, நம்ம கட்சியில உன்னை உறுப்பினராச் சேர்த்துவிடுறேன்''

''வேணாம்''

ரகுராமன் கிரிக்கெட் விளையாடும் மைதானத்துக்குச் சென்றான்.

''பழனியண்ணன் சொல்லுச்சு, நெசமாவே கட்சி ஆரம்பிக்கப் போறியாண்ணே''

இடது கை ஆட்டக்காரன் சுப்பிரமணி அப்பாவியாய் கேட்டான். ரகுராமன் ஒரு கட்சி ஆரம்பித்தால்தான் என்ன என அசட்டுத்தனமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் உடனடியாக செயல்படத் துணிந்து விடுகிறோம், ஆனால் மொத்த மக்களின் ஒட்டு மொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏன் தயங்கி பின்னடைகிறோம்?

(தொடரும்)

Sunday 2 August 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)

தோணுகால் ஊரின் மந்தையில், அடுத்த வருடத் தேர்தலில் தனக்கு ஓட்டு அளிக்கும் வாய்ப்பு இருப்பதைப் பற்றியும், எந்த கட்சிக்கு ஓட்டு அளிக்கலாம் எனும் யோசனையுடன் அமர்ந்திருந்தான் ரகுராமன்.

அவனது யோசனையை கலைக்கும் விதமாக அங்கு வந்து சேர்ந்தான் பழனிச்சாமி.

''டேய் ரகு, என்னடா இங்க வந்து உட்கார்ந்திருக்க, வக்கனாங்குண்டுக்காரங்கே நாளைக்கு மேட்ச் விளையாட கூப்பிட்டாங்கடா, 50 ரூபா மேட்ச், நீ வரியல''

''ம் வரேன், பழனி நீ அடுத்த வருசம் தேர்தலுல முத ஓட்டுப் போடனும்ல''

''ஒரு கள்ள ஓட்டு அடுத்த தொகுதியில நடந்த இடைத்தேர்தலுலப் போய் போன வருசமே போட்டு வந்துட்டேன், முத ஓட்டா?''

''எந்த கட்சிக்குப் போட்ட, ஏன் அப்படி போட்ட?''

''நீ காலேஜுல படிக்கிற, நான் ஊர் சுத்திட்டுத் திரியறேன், நூறு ரூபா கொடுத்தானுங்க, பசக்குனு ஒரு குத்து குத்திட்டு வந்துட்டேன், எந்த கட்சினு சொன்னேனு வைச்சிக்கோ அப்புறம் அந்த கட்சிக்குத்தான் அவமானம், சரி கிளம்பு பிராக்டிஸ் பண்ணலாம்''

''அடுத்த வருசம் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவ''

''ஓட்டு ரகசியத்தை எல்லாம் வெளியிலச் சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்றேன். எவன் அதிக காசு தரானோ அவனுக்குத்தான் என் ஓட்டு. அந்த ஒருநாள் கூத்துக்கா இப்படி யோசிச்சிட்டு இருக்கே''

''நீங்க எல்லாம் விளையாடப் போங்க, நான் சாயந்திரமா வரேன்''

ரகுராமனுக்கு பழனிச்சாமி சொன்ன பதிலில் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியது. தனது தாத்தா காலத்திலிருந்து தனது வீட்டில் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சி போட்டியிடாதபோது அதன் கூட்டணி கட்சிக்கும் என வாக்களித்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஏன் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் வாக்கு அளிக்கிறீர்கள் என அவன் ஒருநாளும் கேட்டதில்லை. இன்று கேட்டுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளாராகப் பணியாற்றும் பாண்டுரங்கன் ஆசிரியர் ஞாபகம் வந்தது. அவரது வீட்டு வாசலில் சென்று நின்றான் ரகுராமன்.


''அடடே வா ரகுராமா, படிப்பு எல்லாம் எப்படி போகுது?''

''நல்லாப் படிக்கிறேன் ஐயா''

''ம்ம்... என்ன சாப்பிடுற''

''வேணாம் ஐயா. நீங்க எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டு வரீங்க, எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவீங்க''

''அரசியல் அறிவியல் படிக்கிறதால இப்படி ஒரு கேள்வியா? ம்... நான் எப்பவும் தி.மு.க தான். உதயசூரியன் சின்னத்தில ஓட்டுப் போட்டேப் பழகிப் போச்சு''

''ஏன்? அந்த கட்சிக் கொள்கை ரொம்ப பிடிச்சதா ஐயா?''

'' நான் கலைஞரோட அபிமானி. அவரோடப் பேச்சு, எழுத்துல கவரப்பட்டவன், அதனால் எப்பவும் தி.மு.க வுக்கும், கூட்டணிக்கும் தான் என் ஓட்டு''

''கட்சிக் கொள்கையைப் பார்க்கறதில்லையா ஐயா?''

''தி.மு.க வோடதா, கூட்டணி கட்சிகளோடதா?''

''பொதுவா''

''பார்ப்பேன், பார்ப்பேன், உதயசூரியன் அப்படினாலே இருளைப் போக்குபவனு அர்த்தம், இதைவிட தனியா என்ன கொள்கை வேண்டி இருக்கு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதாதா?''

ரகுராமன் யோசித்தான். தி.மு.க. அ.தி.மு.க பெரிய கட்சிகள். வளர்ந்து வரும் கட்சிகள்னு சில கட்சிகள். சுயேட்சையாகப் போட்டியிடப் போகிற பலர். எதிர் வரும் நபரிடம் எதேச்சையாகக் கேட்டான்.

''அண்ணே, அடுத்த வருசத் தேர்தலுல எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவீங்க''

''பச்சைக் குத்திருக்கோம் பாரு, எப்பவும் இரட்டை இலை தான்''

அவரது கையைப் பார்த்தான் ரகுராமன். கண்களில் ஏக்கம் நிலவியது. பொறுப்பற்ற மக்கள் இருக்கும்வரை ஒரு பொறுப்பானத் தலைவரை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?

(தொடரும்)