Friday 26 February 2016

மாறா மரபு - 5

7. அறியாதவரை ரகசியம்

‘’தாத்தா உங்க பேரு என்னனு சொல்லலையே’’

‘’ரங்கநாதன்’’

‘’உங்க பேரு’’

‘’ரங்கநாதன்’’

‘’அது இல்லை தாத்தா, உங்களுக்கு உங்க அம்மா அப்பா வைச்ச பேரு’’

‘’ரங்கநாதன்’’

‘’ரங்கநாதன்?’’

‘’ஏன் என் பேரு ரங்கநாதன் அப்படினு இருக்கக்கூடாதா? பேசாம வாரும்’’

சாலை இருமருங்கிலும் கடைகள். மல்லிகைப்பூ வாசமும், குளிர்ந்த காற்றும் என மிகவும் ரம்மியமாக இருந்தது. இத்தனை கடைகளிலும் வியாபாரங்கள் நடந்துகொண்டு இருக்கத்தான் செய்கின்றன, வாங்குவதற்கு மக்கள் கடையில் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் முகமும் பரிச்சயமற்ற முகங்களாகவே சிவராமிற்கு காட்சி அளித்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டே இவர்களை பலர் கடந்து கொண்டு போனார்கள்.

இந்த அறிவியல் உலகில் ஆன்மிகம் எனும் ஒன்று இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் என்னவென ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள் என சிவாரம் எண்ணிக்கொண்டே நடந்தான். ரங்கநாதன் கோவிலின் பிராதன  வாசற்படியைத் தாண்டியதும் வலப்புறம் திரும்பினார். அங்கிருந்து நேராக நடந்து இடப்புறம் திரும்பினார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சிவராம் தன்னைத்தான் பேச வேண்டாம் என சொன்னார், அவராவது பேசலாமே என மனதில் எண்ணிக்கொண்டான். அந்த தெருவானது அத்தனை சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த தண்ணீர்க்  குழாய் ஒன்றில் ஆடவர், பெண்டிர் என தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு சின்ன இடம்  ஒன்றில் சிறுவர்கள் சிறுமியர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருவின் இரண்டு பக்கங்களிலும் வெட்டப்படாத மரங்கள் பூத்து குலுங்கிக் கொண்டு இருந்தன.

ரங்கநாதன் குடிசையின் முன் சென்று நின்றார். அந்த குடிசைக்கு கதவு அவசியமில்லை என்றாலும் கதவு ஒன்று இருக்கத்தான் செய்தது. குடிசையின் இருபுறமும் சன்னல்கள் கூட வைக்கப்பட்டு இருந்தன. கதவைத் தள்ளினார், திறந்தது.

‘’கதவுக்கு பூட்டு போடும் பழக்கம் இல்லையா தாத்தா?’’

‘’இல்லை’’

ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். உள்ளே சமையல் அறை என எதுவும் இல்லை. ஒருபுறம் துணிகள் என சில அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மறுபுறம் பல புத்தகங்கள் இருந்தது.

‘’ரகசியம் அப்படின்னு சொன்னீங்களே’’

‘’சத்ய யுகம் தெரியுமோ?’’

‘’தெரியாது’’

‘’கலியுகம் தெரியுமோ?’’

‘’இப்ப நடக்கிறதுதானே தாத்தா’’

‘’வேத சாஸ்திரங்கள் படிக்கிறது உண்டோ?’’

‘’எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை, சாமி கும்பிடறது எல்லாம் ஒரு சம்பிரதாயம்’’

‘’கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும்’’

‘’படிக்கிறது இல்லை’’

‘’சத்ய யுகத்திலே இருந்த மனுசாளுடோ மரபணுக்கள் வெறும் முப்பதாயிரம் மட்டுமே. அவா உயிரோட வாழ்ந்த வருடங்கள் நூறு வருஷ கணக்கு இல்லை ஆயிர வருஷ கணக்கு. அவாளுக்கு மூப்பு எல்லாம் உடனே வருவது இல்லை. நோய் இல்லை. நொடி இல்லை. இது எல்லாம் ரகசியம்’’

சிவராம் தனது தலையில் கை வைத்துக் கொண்டான். நாம் இன்ட்ரான் எக்ஸ்சான் பத்தி எதுவும் ரகசியம் சொல்வார் என்று நினைத்தால் பழம்பெரும் கதை ஒன்றை சொல்கிறார் என நினைத்து பெருமூச்சு விட்டான்.

‘’இப்போ லோகத்திலே மரபணு பத்தி பெரிசா பேசறா, அதுவும் இன்ட் ரான் எக்ஸான் அதிலும் இன்ட்ரான் எல்லாம் விலக்கப்பட்டு எக்ஸான் மட்டுமே புரதம் உருவாக்க போதும் அப்படினும் இந்த இன்ட்ரான் எல்லாம் எப்படி உருவாச்சுனும் தலையைப் போட்டு பிச்சுக்கிறா. அதுவும் இந்த இன்ட்ரான் எல்லாம் இருக்கிறதாலதான்  மனுசா நிறைய அறிவாளியா உருவானாங்கனு சொல்லிக்கிறா, ஆனா இந்த இன்ட்ரான் இல்லாம இருந்ததால் தான் மனுசா எல்லாம் பேதம் குரோதம் எல்லாம் பாக்காம இருந்தா அப்படின்னு சத்யயுகத்திலே சொல்லப்பட்டு இருக்கு.  எந்தவொரு வர்ணாஸ்ரமம் எல்லாம் இல்லை, மதம் இல்லை, சிலைகள் இல்லை, கோவில்கள் இல்லை அப்போ மனுசாள் மட்டுமே கடவுள்.  எல்லோரிடத்திலும் இறைவன் உண்டு அப்படின்னு சொல்றதுதான் சத்ய யுகம், எக்ஸான் யுகம், சத்ய யுகத்திற்கு அப்புறம் இந்த இன்ட்ரான் மெல்ல மெல்ல உள்ள சேர்ந்தப்ப உண்டானதுதான் மனித வேறுபாடுகள், மனுசாள் எல்லாம் இந்த இன்ட்ரான்களால் தான் குரோதம் கொண்டு இருக்கா’’

சிவராம் தான் என்ன கேட்டுக்கொண்டு இருக்கிறோம் என ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தான். ஒரு விஷயத்தை அப்படியே புராண கதைகளோடு சம்பந்தபடுத்தும் ஒரு புத்திசாலித்தனம் வெகுவாக பரவிக்கொண்டு வருகிறது என சிவராம் மனதில் நினைத்தான், ஆனால் இவர் எப்படி?

‘’இதை வேறு யாருகிட்ட எல்லாம் சொல்லி இருக்கீங்க தாத்தா?, இல்லை இது யாரு உங்களுக்கு சொன்னா தாத்தா?’’

‘’என்னை என்னனு நினைச்சேள்?, விளைச்சல் இல்லா நிலத்தில நீரைப் பாய்ச்சி அறுவடை பண்றதுக்கு எல்லாம் நான் கத்துக்கிட்டது இல்லை. ரகசியம் அப்படின்னு சொன்னேனே, உம்ம காதில விழுந்துச்சோ இல்லையோ, எப்படி வேறு யாருகிட்டயும் இதை சொல்லி இருக்க முடியும்னு நினைக்கிறேள், முத முதலில் இதை உம்மகிட்டதான் நான் சொல்றேன். எனக்கு இது என்னோட தாத்தா சொன்னது, என் தாத்தாவுக்கு அவங்க அப்பா சொன்னது இப்படி பல காலங்களாக சொல்லப்பட்டு வரக்கூடிய ஒன்னு. அவா எல்லாம் சொல்லும்போது இந்த இன்ட்ரான் எக்ஸான் அப்படின்னு சொல்லலை. உள்ளுக்குள்ள இருக்கிற மாற்றம் மனுசாளை மாத்துதுனு சொல்லிட்டு வந்தா. நான்தான் அது என்னவாக இருக்கும்னு யோசிச்சி இந்த ஞானம் தோன்றினது. இன்ட்ரான் இல்லாத குழந்தைகள் உருவாகும் காலம் ஒன்று தோன்றும்போது இந்த கலியுகம் மறைஞ்சி சத்யயுகம் தோன்றும். இது கால சுழற்சி’’

‘’சரி, பேச்சுக்காகவே வைச்சிக்குவோம், இது இயற்கையாகவே நடக்குமா தாத்தா’’

‘’என்ன பேச்சுக்குனு சொல்றேள், எல்லாம் இயற்கை தான், செயற்கைனு நாம பேரு வைச்சிக்கிட்டோம், இங்கே இருந்துதானே எல்லாம் நாம செய்றோம்னோ, உமக்கு அது எப்படி நடந்தா என்ன, கால காலமாக அதுதான் நடக்கிறது. இதுதான் இந்த பிரபஞ்ச உலக ரகசியம். நான் இதை எல்லாம் எழுதலை, இதை நீர் எழுதி பெரிய பேரு வாங்கிக்கும். உம்மகிட்ட சொல்லிய திருப்தி எனக்கு போதும். இந்தாரும் தண்ணீர் அருந்தும்’’

‘’விலங்குகள் கூடவா அப்படி?’’

‘’அவா எப்பவுமே அப்படித்தான், சத்ய யுக தொடக்கத்திலே இந்த கலியுக விலங்கு, மனுசா எல்லாம் இருப்பா, கொஞ்ச வருசத்திலே எல்லாம் அழிஞ்சி போயிருவா. பல்லாயிர வருஷம் பின்னால் மறுபடியும் தோன்றுவா, அடுத்த யுகம் அடுத்த யுகம் அப்படின்னு தொடரும். ஆனா சத்ய யுகம் மட்டுமே எக்ஸான் யுகம்’’

‘’சாப்பாடு, சமைக்க அப்படின்னு சமையல் அறை எதுவும் இல்லையே தாத்தா’’
‘’யாராவது வந்து கொடுத்தால் மட்டுமே நான் சாப்பிடுவேன். இந்த தண்ணீர் கூட ஒருத்தர் வந்து வைச்சிட்டுப் போனதுதான். இந்த குடிசை வீடு என்னோட நிலம் இல்லை. நான் இங்கே தங்க ஒருத்தர் கொடுத்த இடம்தான் இது. மாளிகை எல்லாம் தந்தா, அது நீயே அனுபவினு சொல்லிட்டேன். இந்த புத்தகங்கள் எல்லாம் ஒருத்தர் வந்து தந்தா. நான் எதுவும் விலை கொடுத்து வாங்குறது இல்ல. எனக்கு இருக்க துணி எல்லாம் தட்சணையா வந்தது. ஒரு தடுமல், காய்ச்சல் அப்படின்னு இதுவரை படுத்தது இல்லை, ஆனா முதுமை வந்துடுத்து’’ 

‘’இப்படி இருக்கிறதால என்ன சாதிச்சிட்டதா நினைக்கிறீங்க?’’

‘’என்ன சொல்றேள், சாதிக்கவா இந்த லோகத்தில பிறக்கிறோம்?, வாழனும், நம்ம விருப்பப்படி வேறு எவருக்கும் கட்டுப்படாம சுதந்திரமா வாழனும்’’

‘’அப்படி வாழ்ந்து என்ன உலகத்தில் கண்டீங்க’’

‘’என் ரங்கநாதனை கண்டேனில்லையோ, சத்ய யுகத்தை எனக்குள்ள கண்டேனில்லையோ’’

‘’தாத்தா, வேறு ஏதாவது ரகசியம் இருக்கா?’’

அமர்ந்தவர் கண்களை மூடினார். காற்று வீசும் சப்தம் மட்டுமே கேட்டது. எப்படியும் ஒரு பத்து நிமிடங்கள் மேல் ஆகி இருக்கும். சிவராம் தாத்தா என அழைக்க நினைத்து அமைதி ஆனான். அமர்ந்து இருந்தவர் சட்டென வலது புறம் சாய்ந்தார். சிவராம் அதிர்ச்சி ஆனான். தாத்தா என அலறியவன் தண்ணீர் எடுக்க நினைத்து எழும் முன்னர் சட்டென சாய்ந்தவர் எழுந்து நின்றார்.

‘’இன்ட்ரான் இல்லாத பெண் குழந்தை ஒன்று ஆண் குழந்தை ஒன்று இன்னும் இரண்டு வருடத்திற்குள் இந்த பூமியில் பிறக்கும். அந்த குழந்தைகளே சத்ய யுகத்தைத் தொடங்கி வைக்கப்போகின்ற குழந்தைகள். இன்னும் பல ஆயிரம் வருடங்களில் எக்ஸான் யுகம் மட்டுமே. எதுவுமே பேசாமல் நீர் இனி போகலாம்’’

சிவராம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்.
‘’தாத்தா, நீங்க சொல்றது’’

அதற்குள் ரங்கநாதன் அப்படியே கீழே படுத்து கண்களை மூடிக்கொண்டார். சிவராம் பலமுறை அழைத்தும் அவர் கண்களை திறந்து பார்த்தவர் எதுவும் பேசவில்லை. இனி அங்கு இருப்பதால் எவ்வித பயனும் இல்லை என கருதி வெளியேறினான். சுபாவிடம் தான் நாளை சென்னையில் இருப்பேன் என தகவல் மட்டும் சொன்னான்.

இந்த ரங்கநாதன் தாத்தா சொன்னது எல்லாம் அவனுக்குள் சுழன்று கொண்டு இருந்தது. தான் ஸ்ரீரங்கம் வந்தது, ஜெகனிடம் பேசியது, இவரை சந்தித்தது எல்லாம் கனவாக இருக்கக்கூடும் என்றே எண்ணுமளவு அவனுக்குள் ஒரு பெரும் குழப்பம் வந்து சேர்ந்து இருந்தது.

நமது சிந்தனைக்கு உதவும் மனிதர்கள் நமது வழியில் தென்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் உள்ளது நமது சிந்தனையின் செயல்பாடு. யூகத்தில் பேசும் பேச்சுக்கள் எல்லாம் பலிப்பது இல்லை. பலித்தபின் யூகம் வந்த காரணம் எவரும் விளங்க முடிவது இல்லை.

இதை எல்லாம் சுபாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என எண்ணி பேருந்தில் சென்னை நோக்கி பயணம் செய்தான் சிவராம். அதிகாலையில் வீடு சென்று விரைவாக குளித்து சுபா மருத்துவமனை செல்லும் முன்னர் அவளை வழியில் சந்தித்தான். எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தான்

‘’சிவா, இது எல்லாம் உண்மையா இல்லை நீயா கதை எதுவும் சொல்றியா?’’

‘’நான் சொன்ன விபரங்களை வைச்சி நீ வேணும்னா ஸ்ரீரங்கம் போயிட்டு வா’’

‘’அப்போ அந்த ராம் சொன்னது எல்லாம் நடக்குமா?’’

‘’நடக்கும்னு எனக்கு தோணுது சுபா, ஜெகன் காட்டின படங்கள், மூலக்கூறுகள் வேலை செய்யும் விதம் அப்படியே என் மனசுக்குள்ள இன்னும் இருக்கு. இது உண்மையிலேயே மனித வரலாற்றில் ஒரு மாபெரும் மரபணு புரட்சி, நீ அந்த தம்பதிகளைப் பார்த்தியா, அவங்க உடம்புல எதுவும் மாற்றம் இருக்கா, ஏதாவது சிம்ப்டம்ஸ் சொன்னாங்களா’’

‘’எதுவும் சொல்லலை சிவா, அவங்களை ராம் நேரடியா டீல் பண்றான். நான் அங்கே ஒரு வேடிக்கைப் பார்க்கிற மாதிரிதான் இருக்கேன். ரொம்ப நார்மலா இருக்காங்க. சிவா, அடுத்த தம்பதிகள் பாலகுரு, திவ்யா வர இருக்காக்கங்க, திங்கள் வர வேண்டியவங்களை மாத்திவிட்டுட்டான் ராம். அவங்ககிட்ட பேசட்டுமா?’’

‘’நோ நோ சுபா. நீ இனி பண்ண வேண்டியதெல்லாம் டாக்டர் ராமுக்கு உதவி பண்றது மட்டும்தான். டாக்டர் ராம் கிட்ட போய் நல்லா யோசிச்சிப் பார்த்தேன், ஐ வில் கோ ஆப்பரேட் வித் யூ அப்படின்னு சொல்லு’’

‘’சிவா திஸ் இஸ் நாட் ரைட்’’

‘’சொன்னா கேளு சுபா, அந்த ரங்கநாதன் தாத்தா சொன்னதை கேட்டதுல இருந்து ஐ திங் யூ சுட் ப்லீவ் இட்’’

‘’சரி சிவா, நான் ராம் கிட்ட சொல்றேன். நானும் இந்த வீக்கென்ட்ல ஸ்ரீரங்கம் போயிட்டு வரேன்’’

சுபா மருத்துவமனைக்குள் நுழைந்தாள். டாக்டர் ராம் நிறைய ஆலோசனையில் தனது அறையில் அமர்ந்து இருந்தார். அறையை விட்டு வெளியேறியவர் சுபா வருவதைப் பார்த்ததும் சுபாவை நோக்கி சென்றார்.

‘’டாக்டர் சுபா, இன்னைக்கு வரவங்க கிட்ட எதுவும் சொல்லமாட்டேன்னு எனக்கு உறுதி கொடு’’

‘’சொல்லமாட்டேன் டாக்டர் ராம், நானும் நல்லா யோசிச்சேன் எனக்கு உன் மூலமா வரப்போற பேரை எதுக்கு நான் கெடுத்துக்கணும்’’

‘’வாவ், கிரேட் டாக்டர் சுபா. வாட் எ சர்ப்ரைஸ். ஆனா உன்னோட கிரிமினல் புத்தியை பயன்படுத்த நினைச்சா அப்புறம் நான் டாக்டராக இருக்க மாட்டேன். என்னோட நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும்’’

‘’இல்லை டாக்டர் ராம். சத்தியம். நோ வேர்ட்ஸ். ஐ டேக் இன்சார்ஜ்’’

‘’வெரிகுட், எப்படி இப்படி ஒரு மாற்றம்’’

‘’சுகுமார், தீபா ரொம்பவும் இயல்பா எவ்வித பிரச்சினை இல்லாம இருக்காங்க அதனால எனக்கு நம்பிக்கை வந்தது’’

‘’நைஸ். பாலகுரு இன்னைக்கு தன்னோட மனைவியோட மதியம் இரண்டு மணிக்கு வரார். அதோட இதை நிறுத்திக்குவோம். நாம் கொஞ்ச நாளைக்கு எதுவும் பண்ண வேண்டாம். குழந்தைகள் பிறந்தப்பறம் நாம் அவங்க டெவெலப்மென்ட் பார்த்துட்டு அவங்க இப்படி பிறந்த காரணத்திற்கு என்னவெல்லாம் செய்தோம்னு  உலகத்துக்கு காட்டணும் டாக்டர் சுபா, அந்த ஜெகன் எப்படியும் உன்னை மாதிரி என்கிட்டே வருவான்’’

‘’ஓகே டாக்டர் ராம்’’

சுபாவின் மனமாற்றம் குறித்து ராம் பெரிதாக யோசிக்கவில்லை. தன்னை மீறி சுபா எதுவும் செய்ய இயலாது என ராம் நம்பினார்.

பாலகுரு, திவ்யா நிறைய கேள்விகள் கேட்டார்கள். அதுவும் குறிப்பாக கேப்ச்யூல்ஸ் பற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராம் தெளிவாக பதில் சொன்னாலும் பாலகுரு இதெல்லாம் தேவையா என்றே கேட்டார். ஒருவழியாக அவர்களை சம்மதிக்க வைக்கும் முன்னர் ராம் சரி கேப்ச்யூல்ஸ் வேண்டாம் என சொல்லுமளவுக்கு வந்துவிட்டார். சுபா தான் சில விசயங்களை பேசி அவர்களை முழு மனதோடு சம்மதிக்க வைத்தாள். அவர்கள் சந்தோசமாக கிளம்பி சென்றார்கள். கோபத்தின் உச்சியில் இருந்தார் ராம்.  

‘’டாக்டர் சுபா, நான் ஒரு முட்டாள்னு நீ என்னை நம்ப வைக்க பாக்கிறல, இதுல கேம் விளையாடின உன்னோட லைப்ப முடிச்சிருவேன்’’

சுபா அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் (தொடரும்)


Monday 22 February 2016

ஜீரோ எழுத்து - 10 (கருந்துளை)

முந்தைய பகுதி 

இதற்கு முந்தைய பகுதியை எழுதி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடங்களில் பேரதிசயங்கள் நிகழவே செய்து இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக இந்த கருந்துளை பற்றிய சமீபத்திய ஒரு கண்டுபிடிப்பு பிரமிக்கத்தக்க ஒன்றுதான். 

இந்த கருந்துளைகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்த போதிலும் எதுவுமே விளங்கிக்கொள்ள முடிந்தது இல்லை. தனக்குப் பிடித்த ஒன்றை ஒளித்து வைக்கும் சிறு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சம் தனக்குப் பிடித்த இந்த கருந்துளைகளின் ரகசியங்களை மறைத்து வைத்துக்கொண்டே இருக்கிறது. 

இந்த பிரபஞ்சத்தில் ஒளி அலைகளை வெகு எளிதாக கண்டுபிடித்துவிட்டார்கள், ஆனால் இந்த ஈர்ப்பு அலைகளை அத்தனை எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டீன் இந்த ஈர்ப்பு அலைகள் ஒரு ஈர்ப்பு ஆற்றலாக வெளிப்படும் என்றே தனது கோட்பாடுதனில் குறிப்பிட்டு இருந்தார். இதை இத்தனை வருடங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அதே வேளையில் நிரூபிக்க வழி இல்லாததாகவே தென்பட்டது. நியூட்டனின் கோட்பாடுபடி இந்த ஈர்ப்பு அலைகள் இருக்கவே வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. 

பல வருடங்களாக  இந்த ஈர்ப்பு அலைகள் பற்றி அறிய வேண்டும் என அதற்கான கருவிகளை உருவாக்கிட முனைந்ததன் பலன்  இந்த வருடம் நிறைவேறி இருக்கிறது. 

இந்த கருந்துளைகள் இந்த ஈர்ப்பு அலைகளை கண்டுபிடிக்க உதவி இருக்கிறது. மீண்டும் இந்த இயற்பியல் உலகம் உந்த பிரபஞ்சம் பற்றிய பார்வையினை சற்று மாற்ற வேண்டி இருக்கிறது. 

(தொடரும்) 

மாறா மரபு - 4

6. எவருக்குத் தெரியும்

ஜெகன் சிவராமிடம் பேசிட்டு வா என அனுப்பினான்.

‘’சிவா நீ இப்போ எங்கே இருக்க’’

‘’ஒரு முக்கியமான விசயமா வெளியூர் வந்து இருக்கேன்’’

‘’அதான் எங்கே?’’

‘’திருச்சி’’

‘’எப்போ திரும்பி வருவ?’’

‘’நாளைக்கு வந்துருவேன். என்ன விஷயம்’’

‘’கொஞ்சம் கேப்ஷ்யூல்ஸ் இன்னைக்கு எடுக்கலாம்னு இருக்கேன், அதான் எடுத்த உடனே உங்கிட்ட கொடுக்கணும் இல்லைன்னா பிரச்சினை வந்துரும். ராம் கண் கொத்தி பாம்பா இருக்கான். அவனே இனி வரப்போற தம்பதிகளுக்கு கேப்ஷ்யூல்ஸ் தந்துக்கிறேனு சொல்லிட்டான். அவன் வந்து அதை எடுத்து இடம் மாத்துறப்ப ஏதாவது பண்ணனும்’’

‘’சுபா, நீ எதுவும் பண்ண வேணாம். அந்த கேப்ஷ்யூல்ஸ் வைச்சி நாம ஒண்ணும் பண்ணமுடியாது. அதனால கவலைப்பட வேண்டாம்’’

‘’என்ன சிவா சொல்ற’’

‘’ஆமா, நீ கொஞ்சம் பதறாம இரு. பார்த்துக்கிரலாம்’’

‘’சரி, நீ வந்ததும் எனக்கு தகவல் சொல்லு’’

‘’சரி’’

‘’பேசியாச்சா சிவா. நான் காட்டுற விஷயத்தை கொஞ்சம் கவனமாப் பாரு.

பெரும்பாலான பாக்டீரியாக்களில் எம்ஆர்என் ஏவில் இந்த இன்ட்ரான்கள் கிடையாது, ஆனால் எல்லா உயர்நிலை உயிரினங்களில் இந்த எம்ஆர்என் ஏக்களில் இன்ட்ரான்கள் உண்டு. இந்த எம்ஆர்என் ஏக்களில் உள்ள இன்ட்ரான்களை நீக்கியபின்னரே ஒரு எம்ஆர்என் ஏ புரதம் உண்டாக்கும் நிலைக்குச் செல்லும்.

ஒரு பாக்டீரியா தனது உயிரை பிறவற்றில் இருந்து எப்படி காத்துக் கொள்கிறது என்பதே அவை இன்னமும் இவ்வுலகில் தொடர்ந்து இருக்கக்காரணம். வைரஸ் பாக்டீரியாவை தாக்கும் தன்மை கொண்டது. ஆனால் இந்த பாக்டீரியா தனது டி என் ஏவை வேறு எந்த ஒரு டி என் ஏ வும் தாக்கி கலந்து விட முடியாதபடி தன்னில் இருக்கும் புரத வினையூக்கி மூலம் சரியாக வெட்டிவிடும் தன்மை கொண்டது. இதனால் பிற டி என் ஏ பாக்டீரியா டி என் ஏ வில் கலந்துவிட முடியாது. இதை இந்த பாக்டீரியா மெதிலேசன் வினையூக்கி மூலம் ஒரு மீதைல் மூலக்கூறுதனை தனது டி என் ஏ வில் உள்ள நியூக்ளிக் அமிலங்களில் சேர்க்கும். இப்படி செய்யும் பொது எவை எல்லாம் மீதைல் மூலக்கூறு இல்லையோ அவை எல்லாம் வெளி டி என் ஏ என பாக்டீரியாவில் உள்ள வினையூக்கி முடிவு செய்யும். இப்போது வேறு ஒரு வினையூக்கி வந்து வெட்டப்பட்ட தேவையற்ற டி என் ஏ வை தன்னில் கிரகிக்க வெட்டப்பட்ட தேவையான டி என் ஏக்கள் இணைந்து இப்போது ஒரு முழு டி என் ஏ இருக்கும்’’

‘’அது பாக்டீரியா, ஒரு செல் உயிர். ஆனால் மனிதர்கள் அப்படி இல்லையே. எவ்வளவு பெரிய பிரச்சினை வரும் தெரியும்தானே ஜெகன்’’

‘’அதனால் என்ன, பாக்டீரியா சில நேரங்களில் வைரஸ் டி என் ஏ வை தனதாக்கி கொள்ளும் தன்மை கொண்டது. அப்போது அந்த வைரஸ் டி என் ஏ வை கூட மெதிலேசன் பண்ணி தனதாக்கிக் கொள்ளும். அதைப் போல தான் இந்த இன்ட்ரான்கள். உனக்குத் தெரியாதது இல்லை. இந்த இன்ட்ரான்கள் எப்படி வந்தது ஏன் வந்தது எதற்கு இருக்கிறது என புரியாமல் இருந்தது. உன்னோட ரிசர்ச்ல கூட பண்ணி இருப்ப. இப்போ இந்த இன்ட்ரான்கள் பல முக்கிய வினையூக்கி, புரதம் உருவாக காரணமாக இருக்கிறது. எப்படி பாக்டீரியா செயல்படுதோ அதைப்போல நமது செல்கள் செயல்படுது. எம் ஆர் என் ஏ உருவாகும் முன்னர் இந்த இன்ட்ரான்கள் எப்படி ஒரு வினையூக்கி வெட்டுதுன்னு நான் ரிசர்ச் பண்ணி இருக்கேன். அதை வைச்சிதான் நான் இந்த மூலக்கூறு உருவாக்கி அதே வினையூக்கி போல செயல்பட வைச்சி இருக்கேன். அதாவது டி என் ஏவில் இதை செய்றது. எதுக்கு எம் ஆர் ஏ வரைக்கும் காத்து இருக்கணும்’’

‘’ஜெகன் எனக்கு இது சாத்தியம்னு தோணலை. நீ உருவாக்கின மூலக்கூறு எப்படி வேலை செய்யும்னு உனக்குத் தெரியும்’’

‘’இந்த படத்தைப் பாரு சிவா, இது விந்து அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அது அண்ட அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அதில் எல்லாம் இன்ட்ரான் எக்சான் எல்லாம் இருக்கு. அடுத்ததா நான் மூலக்கூறு  சேர்த்தப்போ எல்லா இன்ட்ரான்களிலும் இந்த மூலக்கூறு போய் இணைகிறது. எப்படி பாக்டீரியா மெதிலேசன் பண்ணுதோ அதே டெக்னிக் நான் பண்ணினேன். அடுத்தது பாரு, நான் இணைச்சதும் வினையூக்கி வந்து நான் மூலக்கூறு இன்ட்ரான் எல்லாம் வெட்டுது பாரு, அடுத்து இன்னொரு வினையூக்கி வந்து அவை எல்லாம் விழுங்குது, இப்போ எக்சான் மட்டும் தான்’’

‘’ஜெகன், என்னால் நம்பமுடியலை’’

‘’அதுக்குத்தான் நான் இதை எல்லாம் படம் எடுத்து வைச்சி இருக்கேன். எப்படி ஒவ்வொரு இன்ட்ரான் எல்லாம் வெட்டப்பட்டு விழுங்கப்படுதுன்னு’’

‘’எல்லா விந்து அணுவிலும் இப்படி நடக்குமா?’’

‘’ஆமா, எழுபது சதவிகிதம் வெற்றி கிடைச்சிருக்கு. அடுத்த கட்டமே எப்படி இந்த மூலக்கூறுதனை கொண்டு போறது அப்படின்னு யோசிச்சி டாக்டர் பாண்டே கிட்ட மூலக்கூறு டெலிவரி பத்தி பேசி இந்த கேப்ஸ்யூல் உருவாக்கினேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற வேற முறை. சிவா நீ இதைப் பத்தி எல்லாம் கவலைப்படாத, இந்த டாக்குமென்ட் ல எல்லா விபரமும் எப்படி ஒவ்வொரு ஸ்டெப் பண்ணனும்னு இருக்கு. நீ அதை மட்டும் கவனமா பண்ணு போதும். இது ஒரு நாள் வேலை இல்லை. எங்கேயாவது ஒரு சின்ன தவறு நடந்தாக்கூட இந்த மூலக்கூறு வேலைக்கு ஆகாது. கேப்ஸ்யூல் எப்படி பண்றதுன்னு இந்த டாக்குமென்ட்ல இருக்கு’’

‘’ஜெகன், எனக்கு இதை பண்ண முடியும்னு தோணலை. அதுவும் நீ சொல்றது எல்லாம் சத்தியமா நடக்க வாய்ப்பே இல்லை. நீ காட்டினது உண்மையா இருந்தாலும் அதுவும் நியூக்ளியஸ்க்குள்ள இந்த மூலக்கூறு போய் இப்படி எல்லாம் பண்ணும்னு உனக்கு எப்படி தெரியும், நீ ஒரு எலி அல்லது வேறு சின்ன உயிரில் முயற்சி பண்ணி இருக்கலாம். இப்படி நேரடியா மனித உயிரோட விளையாடுறது எனக்கு சரியாப்படல’’

‘’சிவா, ஜஸ்ட் மேக் தீஸ் மாலிக்குல்ஸ், ரெஸ்ட் ஐ வில் சீ. ஐ வில் செட்டில் த அமவுண்ட் டு யூ. ப்ளீஸ் டோன்ட் சே நோ அண்ட் டோன்ட் பேக் அவே ப்ரம் திஸ் (just make these molecules, rest I will see. I will settle the amount to you. Please don’t say NO and don’t back away from this)

ஜெகன் எல்லா விபரங்களையும் சிவராமிடம் காட்டினான். ஒவ்வொரு விசயங்களையும் தெளிவாக சொல்ல சொல்ல சிவராம் மனதில் மாற்றம் உண்டானது. எப்படி நியூக்லியஸ் உள்ளே இந்த மூலக்கூறு செல்லும், எப்படி மற்ற செல்களில் சென்று இவை செயல்படாது என ஜெகன் சொன்னபோது சிவாராமிற்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ஜெகன் அத்தனை நேரம் பேசவில்லை என்றால் நிச்சயம் சிவராம் எழுந்து போயிருப்பான். ஆனால் ஜெகனின் விடாத பேச்சு, எல்லாம் அப்படியே நடக்கும் எனும் உறுதிப்பாடு சிவராமிற்கு ஆசையை உண்டாக்கியது.

‘’சரி ஜெகன். பண்ணித்தரேன்’’

‘’வெல்டன், டேக் திஸ் சிவா  கீப் இட் சேப், லெட் அஸ் ஈட் நவ்’’

அன்று மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதாக திட்டம் போட்டான் சிவராம். ஜெகனிடம் சொல்லிவிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனான். இந்த உலகில் இத்தனை விசயத்தையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு எந்த ஒரு மனிதரும் அமைதியாக இருந்து விடவில்லை. அதது அதன்பாட்டில் நடக்கும் எனில் நாம் எதற்கு எனும் சிந்தனையே மனிதனை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த இன்ட்ரான்கள் ஏதுமற்று மரபணுவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கே இருந்த ஒருவர் பாடிய பாடல் கேட்டு சிவராம் அங்கேயே நின்றான்.

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

இந்த பாடலில் உள்ள அர்த்தம் போல இருக்கிறது வாழ்வு என எண்ணினான் சிவராம். தான் செய்யும் செயலில் கொள்ளும் நம்பிக்கைகள் பொய்த்துப் போகாதவண்ணம் இருக்கவே இறைவனின் மீதான நம்பிக்கைகள் மனிதர்களுக்கு உண்டாகி இருக்கக்கூடும். அப்படி என்னதான் இந்த இன்ட்ரான்கள் தம்மில் பெரும் ரகசியத்தைக் கொண்டு இருக்கக்கூடும் என சிவராம் தனது ஆராய்ச்சி மீது ஒரு புதிய கண்ணோட்டம் உண்டாகவேண்டி சிந்தித்தான்.

மீண்டும்அதே வரிகளை அவர் அங்கே பாடிக்கொண்டே இருந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் கூட்டம் அதிகமானது. அங்கிருந்து கிளம்பியவன் பணம் கொடுத்து தரிசனம் செய்வதா, பணம் கொடுக்காமல் தரிசனம் செய்வதா எனும் குழப்பத்தில் நின்றவன் பணம் கொடுக்காமலே வரிசையில் சென்று நின்றான். அங்கே ஒவ்வொருவரின் பேச்சுக்கள் அவனுக்கு சற்று சுவாரஸ்யமாக இருந்தன. இந்த இன்ட்ரான்கள் எக்சான்கள் பற்றி எல்லாம் இவர்களுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதினான்.  இருவரின் பேச்சு அவனுக்கு திகைப்பூட்டியது.

‘’இத்தனை வயசுல உனக்கு என்ன இந்த வரிசையில் நின்னு பெருமாளை சேவிக்கணும்னு தலைவிதியா, அதோ அங்கே பணம் கொடுத்து போக வேண்டியதுதானே’’

‘’உமக்கு என்ன தலைவிதியோ அதுவே எனக்கு இருக்கட்டும். எத்தனை மணி நேரம் வெட்டியா உலகத்தில மனுசா செலவழிக்கிறா, என் ரெங்கநாதனுக்கு இப்படி நான் நின்னு போறதுலதான் இஷ்டம்’’

‘’உன்னைத் திருத்த முடியாது’’

‘’அது என்னோட மரபணுவில ஊறினது, உமக்கு அது பத்தி எப்படி தெரியும், பேசாம வாரும், மத்தவா பாக்கிறா’’

அதிக வயதான முன் தலை எல்லாம் வழித்து பின்னால் குடுமி போட்டு நெற்றியில் நீண்ட ராமம் இட்ட மரபணு என சொன்ன அவரின் பேச்சு சிவராமிற்கு ஆச்சரியம் வரவழைத்தது.

பொதுவாக எல்லோரும் என் ரத்தத்தில் ஊறியது என்றல்லவா சொல்வார்கள், இவரோ என்னோட மரபணுவில் ஊறினது என்கிறாரே
என அவரிடம் பேச்சுக் கொடுத்தான்.

‘’தாத்தா, நீங்க சொன்னதில தப்பு இருக்கு. மரபணுவில் எப்படி ஊறும், ரத்தத்தில் அல்லவா ஊறும்’’

‘’பாக்கறதுக்கு படிச்சவா மாதிரி இருக்க, என்னை சோதிக்கிற மாதிரி கேள்வி கேட்கறளே. என்னை சோதிக்க அந்த ரெங்கநாதனுக்கு மட்டுமே உரிமை உண்டு. உமக்கு மரபணு அப்படின்னா என்னான்னு  தெரியாதா, இல்லை தெரியாதமாதிரி நடிக்கிறேளா’’

‘’தெரியும், ஆனா நீங்க அப்படி சொன்னது எனக்கு ஆச்சரியமா இருந்தது’’

‘’இப்போதான் எல்லாம் ஜீன் ஜீன் அப்படின்னு ஊரு உலகம் எல்லாம் பேசறாளே, ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களுக்கு கருவே கிடையாது அப்படின்றது நோக்கு தெரியுமோன்னோ, இப்போ நான் அதை பேச விரும்பலை. ரெங்கநாதனை சேவிக்க வந்துட்டு எதுக்கு எனக்கு இந்த வியாக்கியானம் எல்லாம், நீர் சேவிச்சிட்டு என்னோட ஆத்துக்கு வந்தா எல்லாம் சொல்றேன். பொது இடத்தில மத்தவாளுக்கு நாம இடைஞ்சலா இருக்கப்படாது. புரியுதுன்னோ’’

‘’சரிங்க தாத்தா’’

கோவிந்தா, கோவிந்தா எனும் சத்தம் அனைவரும் ஒரு சேர எழுப்பினார்கள். ஆனால் அந்த வயதானவர் ஒரு பாடலை தனக்குள் முனுமுனுத்தார்.

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

சிவராமிற்கு அந்த பாடல் தெரியவில்லை, சரியாக கேட்கவும் இல்லை. இவ்வுலகில் எத்தனையோ அதிசயமிக்க மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொருவரும் இவ்வுலகைப் பற்றிய ஒரு கருத்தைக் கொண்டு இருக்கிறார்கள். டாக்டர் ராம் இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிட நினைக்கிறார். இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட பின்னே புரதங்கள் எல்லாம் உருவாகிறது என்றாலும் அந்த இன்ட்ரான்கள் கருவிலேயே இருக்கக்கூடாது என கருதுகிறார். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிறந்தோம், வேலை பார்த்தோம், சந்ததிகள் உருவாக்கினோம் என பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பிறந்து இறந்து போனார்கள் எனும் யோசனையில் நகர்ந்தான் சிவராம்.

வயதானவர் ‘ரெங்கநாதா’ எனும் மெல்லிய குரல் கொண்டு அழைத்து கைகள் மேல்தூக்கி கூப்பியபோது அந்த வயதானவரின் முகத்தில் எத்தனை சந்தோசம் என்பதையே நோக்கினான் சிவராம். ஒரு சில வினாடிகளில் அந்த வேண்டுதல் கடந்து விட்டது. சிவராம் தான் என்ன வேண்டினோம் என்பதையே நினைவில் கொள்ளவில்லை.

‘’ஆத்துக்கு வரேள்தானே, ஆத்துல நா மட்டும் தான் இருக்கேன், ஆத்து அப்படின்னா மாளிகைனு நினைச்சிண்டு வராதேள்’’

சிவராம் சரி என சொல்லியபடி அவருடன் நடந்தான்.

‘’என்ன வேண்டிண்டு வந்தேள்’’

‘’வேண்ட மறந்துட்டேன் தாத்தா’’

‘’நீர் வேண்டித்தான் அந்த ரெங்கநாதன் தருவாரில்லை’’

‘’நீங்க என்ன வேண்டினீங்க தாத்தா’’

‘’ரெங்கநாதானு வேண்டிண்டேன், அது போதும் எனக்கு’’

‘’நீங்க என்ன படிச்சி இருக்கீங்க, என்ன வேலை பாத்தீங்க’’

‘’நான் வேதம் படிச்சி இருக்கேன், கோவிலில பூசாரியா வேலை பார்த்தேன், ரெங்கநாதனுக்கு சேவகம் பண்றதுதான் என்னோட வேலை. நீர் என்ன படிச்சி இருக்கேள்’’

‘’மூலக்கூறு உயிரியல் படிச்சி இப்போ ஆராய்ச்சி பண்றேன் தாத்தா’’

‘’மரபணு ஆராய்ச்சியா, என்கிட்டே ஒரு ரகசியம் இருக்கு, சொல்றேன் வாரும்’’

சிவா திடுக்கிட்டான் (தொடரும்) 

Tuesday 16 February 2016

மாறா மரபு - 3

5 இவன்கண்

ஜெகன் தந்து கணினியை திறந்து பார்த்தபோது எல்லா பைல்களும் திறக்கமுடியாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். இது யாருடைய விஷமம் என அவனால் ஓரளவுக்கு யூகிக்கமுடிந்தது. நிச்சயம் டாக்டர் ராம் எவரையோ வைத்துதான் இதைச் செய்து இருக்க முடியும் என முடிவு செய்தான். நேராக தனது அலுவலகம் சென்று கணினி திறந்து பைல்கள் திறக்க முயற்சித்தபோது அதே பிரச்சினை கண்டு அவனுக்குள் எரிச்சல் கோபம் கொப்பளித்துது.

நேரடியாக தனது சூப்பர்வைசரை சென்று பார்த்தான்.

‘’நான் எனது ஊருக்கு ஒரு மாத விடுமுறையில் செல்ல வேண்டும், எனக்கு மனது சரியில்லை’’

‘’நான் திட்டினது உனக்கு கோபமா ஜெகன், என்னிடம் அனுமதி இல்லாமல் நீ என்ன என்னவோ ரீஏஜென்ட்ஸ் வாங்கி இருக்கிறாய், இதனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. எவ்வளவு பண விரயம், கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் செய்து இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. நீ தாராளமாக போய்விட்டு வா, நான் பேசி சமாளித்துக் கொள்ளவேண்டியதுதான். அதற்கு முன் எனக்கு நீ சில விசயங்களை சொல்ல வேண்டும்’’

‘’இனிமேல் அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’’

‘’அது இருக்கட்டும் அப்படி என்னதான் அந்த ரீஏஜென்ட்ஸ் வைத்து செய்தாய் என நான் தெரிந்து கொள்ள வேண்டும்’’

‘’நான் இன்ட்ரான் சம்பந்தபட்ட நமது ஆராய்ச்சிதான் செய்தேன்’’

‘’இல்லை ஜெகன், என்னிடம் நீ மறைக்க முயலாதே. நீ உபயோகப்படுத்திய சில ரீஏஜென்ட்ஸ் நமது ஆராய்ச்சிக்கு சம்பந்தமே இல்லாதது. அதுவும் அவை சற்று விலை கூடுதல் வேறு’’

‘’இன்ட்ரான் ரிமூவ் பண்ண வேண்டிதான் வாங்கினேன். வாங்கும் முன்னர் உங்கள் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது எனது தவறுதான்’’

‘’அதற்கு என்சைம் போதுமே, எதற்கு இந்த ரீஏஜென்ட்ஸ்?’’

‘’என்சைம் கிடைக்கவில்லை அதனால் இதை வாங்கினேன்’’

‘’இனிமேல் இதுபோன்று செயல்படாமல் இரு, நீ இப்போ ஊருக்கு போறது கூட எனக்கு நல்லதுதான். அப்படியே நான் சொன்னபடி திருச்சியில் அந்த வேலையை சேர்த்து முடித்துக்கொண்டு வந்துவிடு. எப்படியும் இரண்டு மாதங்கள் அங்கே ஆகும். நான் டாக்டர் புருசோத்தமனிடம் பேசிவிடுகிறேன். உன்னால் அடுத்த மாதம் அங்கு போக இயலும்தானே’’

‘’பிரச்சினை இல்லை சார் ’’

‘’நீ ஒரு நம்பத்தகுந்தவன் என்ற முறையில் தான் இம்முறை மன்னித்து அனுப்புகிறேன், கவனமாக இரு’’

ஜெகன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தான். வீடு வந்து சேர்ந்தபோது அப்பாடா என்று இருந்தது. தன்னிடம் இருந்த மெமரிஸ்டிக்  பத்திரமாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டான். தங்கராஜ் ஜெகனைப் பார்க்க வந்து இருந்தான்.

‘’ஜெகன் எங்க போயிருந்த, ஆளையேக் காணோம் உன்னோட மொபைல் கூட இன்னைக்கு காலையில் இருந்து வேலை செய்யலையே’’

‘’சென்னை வரைக்கும் போயிருந்தேன், வரப்ப ஏர்போர்டில மொபைலை தொலைச்சிட்டேன், பக்கத்தில வைச்சிருந்தேன், எவனோ எடுத்துட்டுப் போயிட்டான் ’’

‘’இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்ப. என்ன விசயமாகப் போன’’

‘’டாக்டர் ராம் அப்படின்னு ஒருத்தரைப் பார்க்க போயிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. முன்னரே என் சார் சொன்னமாதிரி நான் இன்னைக்கே பஞ்சாப் போக வேண்டி இருக்கு’’

‘’என்ன விசயம்’’

‘’லேப் சம்பந்தமா வேலை ஒரு மூணு மாசத்திற்கு இருக்கு’’

‘’அப்போ டில்லி?’’

‘’மூணு மாசம் பிறகு வருவேன், இந்த வேலையைத்தான் அங்க செய்ய வேண்டி இருக்கு’’

‘’சரி நான் கிளம்பறேன்’’

‘’அதுக்குள்ளே கிளம்பிட்டே’’

‘’உன்னோட ரூம் திறந்து இருந்தது ஒருவேளை நீ வந்து இருப்பியோனு பார்க்க வந்தேன். வந்தப்ப நீ காணலை. நீ வேலைக்குப் போனியா’’

‘’போனேன் உடனே சார் என்னை கூப்பிட்டு பஞ்சாப் போகச் சொல்லிட்டார். அதான் அப்படியே திரும்பி வந்துட்டேன். ஆமா என்னோட ரூம் மேட் நீ பாத்தியா’’

‘’நேத்து இருந்தானே, அவன்தான் ஆறு மணிக்கு எல்லாம் வேலைக்குப் போறவன் ஆச்சே’’

‘’அவன் வந்தா நான் பஞ்சாப் போயிருக்கிறதா சொல்லு, புது மொபைல் வாங்கித்தான் அவனுக்கு தகவல் சொல்லணும். உனக்கும் நம்பர் அனுப்பறேன்’’

‘’பத்திரமாப் போயிட்டு வா, டிக்கட் லேப்டாப் மூலமா புக் பண்ணப் போறியா. உன்கிட்ட மெமரி ஸ்டிக் இருக்கா’’

‘’அது என்னோட சார் கிட்ட கொடுத்துட்டேன். அதில அவரோட வேலை சம்பந்தமான விசயங்கள் மட்டுமே இருந்தது. எதுக்கு கேட்ட. டிக்கட் இங்க புக் பண்ண நேரமில்லை, லேப்டாப் இங்கேயேதான் விட்டுட்டுப் போகப் போறேன். எதுக்கு தேவை இல்லாத சுமை. அலமாரில பூட்டி வைச்சிட்டேன் சாவி என்கிட்டதான் இருக்கு’’

‘’என்னோட பைல் மாத்தணும் வேலை இடத்தில வைச்சிட்டு வந்துட்டேன் அதான். சரி, நீ கவனமாப் போயிட்டு வா’’

தங்கராஜ் டாக்டர் ராமிற்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். அவசரத்தில் வந்து இருந்ததால் ஜெகன் எந்த சந்தேகமும் இல்லாதமாதிரி இருந்ததாக லேப்டாப், அலுவலக கணினி குறித்து எதுவும் பேசவில்லை என சொன்னான். டாக்டர் ராம் சந்தோசம் கொண்டார். அவனது புதிய எண் தந்ததும் தனக்குத் தரச் சொன்னவர்  மூணு மாசம் எனக்குப் போதுமானது என டாக்டர் ராம் தங்கராஜிற்கு நன்றி சொல்லிக்கொண்டார்.

ஜெகனுக்கு தங்கராஜ் மீது கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். நிச்சயம் இவனது வேலையாகத்தான் இருக்கும் என உறுதி செய்து கொண்டான். டாக்டர் ராம் தன்னை சந்தித்தபோது இவனை சந்தித்து இருக்கக்கூடும் என எண்ணம் கொண்டான். அப்போதே தேவையான பொருட்கள் எடுத்துக்கொண்டு டில்லி விமான நிலையம் விரைந்தான். சென்னைக்கு செல்ல அவனுக்கு ஒரு பயணச்சீட்டு கிடைத்தது. மொபைல் தொலைந்து போனதை தங்கராஜ் நம்பி இருக்க நிறைய சாத்தியங்கள் இருந்தன என எண்ணியவன் தனது தொலையாத மொபைலுக்கு அப்போதே வேறு ஒரு சிம்கார்டு வாங்கிக்கொண்டான். மெமரி ஸ்டிக் தப்பித்த விஷயம் தங்கராஜிற்கு தெரியப்போவது இல்லை என்பதே நிம்மதியாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்படியே திருச்சி சென்று விட வேண்டும் என திட்டம் போட்டான். சிவாவிடம் பேசினால் நல்லது என தோணியது.

‘’சிவா, நான் ஜெகன் பேசறேன். நீ நாளைக்கு ஸ்ரீரங்கம் வர முடியுமா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இன்னைக்கு நைட் கிளம்பினா நாளைக்கு வந்துருவதானே’’

‘’என்ன விஷயம் ஜெகன்’’

‘’இன்ட்ரான் பத்தியது. உன்கிட்ட நான் பேசி ஆகனும். தயவு செய்து வந்துரு. இந்த நம்பருக்கு போன் பண்ணு. யாருக்கும் நீ சொல்லாத’’

‘’ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் பக்கத்தில் வந்து நிற்கிறேன். அங்க வந்துரு’’

சிவராம் ஜெகனின் தொலைபேசி அழைப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் ஏதும் பிரச்சினை இருக்கும் என யூகித்தது சரியாகிவிட்டது. சுபா வேறு கேப்ஸ்யூல் கிடைக்காத நிலையைச் சொல்லி இருந்தாள். சுபாவுக்கு தகவல் சொன்னால் டாக்டர் ராம் சந்தேகம் கொள்ள சாத்தியம் இருப்பதாக எண்ணிக்கொண்டான்.

ஜெகன் சென்னைக்கு  மாலையில் வந்து இறங்கியதும் திருச்சிக்கு பேருந்தில் அங்கிருந்தே பயணம் செய்தான். ஜெகனுக்கு தான் செய்து கொண்டிருப்பது சரியா என புரியவில்லை. தான் ஸ்ரீரங்கம் வந்து இருப்பதுவோ சென்னையில் வேலை செய்ய இருப்பதுவோ டாக்டர் ராமிற்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது யோசனையாக இருந்தது. திருச்சி வந்தடைந்து அங்கிருந்து ஸ்ரீரங்கம் வீட்டிற்கு சென்றபோது இரவு பன்னிரண்டு மணி ஆகி இருந்தது.

மக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொண்டு இருந்தனர். ஸ்ரீரங்கத்து கோபுரம் அந்த இரவிலும் பளிச்சென இருந்தது. ஜெகனை அவனது வீட்டில் எவருமே எதிர்பார்க்கவில்லை. காவிரி ஆற்றில் ஓடும் சிறிது  நீர் கொண்டு வீசிய காற்று சில்லென்று வீசியது. தன்னை வீட்டில் எப்படி எதிர்கொள்வார்கள் என ஜெகன் அப்போதும் யோசித்து இருக்கவில்லை.

அப்பா பூரணசந்திரன், அம்மா பூரணி. இருவருமே ஆசிரியர் வேலை பார்த்து வருபவர்கள். ஜெகனுக்கு ஒரு தங்கை சத்யபாமா. மதுரை மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறாள். இந்த ஸ்ரீரங்கம் தான் அவர்களது பூர்வீகம் எல்லாம். இரண்டு பிள்ளைகள் பிறந்த போதும் தனியாக அவர்கள் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்து ஸ்ரீரங்கநாதர் அவர்களுக்கு துணை. மாலை, சனி ஞாயிறுகளில் கோவில் வாசம் அவர்களுக்கான வேண்டுதல், விரும்புதல்.

வீட்டின் அழைப்பு மணி அழுத்த வீட்டில் விளக்கு எரிய சில நிமிடங்கள் மேல் ஆனது. பூரணசந்திரன் தூக்க கலக்கத்துடன் வந்து கதவின் பக்கம் வந்து நிற்க ஜெகனைக் கண்டதும் ஆச்சரியம் ஏற்பட்டது. வேகமாக கதவைத் திறந்தார். ஜெகன் உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

‘’வாப்பா, என்ன ஒரு தகவலும் சொல்லாம வந்து நிக்கிற’’

‘’ஒரு முக்கியமான லேப் விசயமாக வந்தேன். இன்னும் இங்கேதான் ஒரு மூணு மாசம் இருக்கப் போறேன்ப்பா’’

அதற்குள் ஜெகனின் அம்மாவும் வந்து நின்றார்.

‘’எதுவும் சாப்பிட்டியாப்பா?’’

‘’ம்ம் சாப்பிட்டேன்மா, காலையில ஒரு ஆறு மணிக்கு எழுப்பமுடியுமா. இப்ப தூங்குறேன்’’

‘’காலையில் பேசிக்கிறலாம், தூங்குப்பா’’ என பூரணசந்திரன் சொன்னார்.

அன்று இரவு பத்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பேருந்து நிலையத்தில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்துவிட்டு பதினோரு மணிக்கு ஸ்ரீரங்கம் நோக்கி சிவராம் பயணம் செய்யத் தொடங்கினான்.

பேருந்தில் எங்கேயும் எப்போதும் படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த படத்தினை பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டான். சுபா மனதில் வந்து போய்க்கொண்டு இருந்தாள்.

‘சிவா, டாக்டர் ராம் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. குழந்தைகளோட வாழ்க்கையில் விளையாடுறார்’ என்ற வரிகள் அவனது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருளை பொருட்படுத்தாது பேருந்து வேகமாக சென்று கொண்டு இருந்தது. எங்கேயும் எப்போதும் படம் போல ஆகிவிட்டால் எனும் எண்ணம் அவ்வப்போது அவனுக்குள் வந்து போனது. சரியாக ஐந்து மணிக்கு எல்லாம் திருச்சி வந்து பாதுகாப்பாக இறங்கியாகிவிட்டதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஜெகன் ஐந்து மணிக்கு தானாகவே எழுந்து இருந்தான். ஆறுமணிக்கு எழுப்ப சொல்லிட்டு ஐந்து மணிக்கே எழுந்திட்டியா என அம்மா சொன்னார். திருச்சி வந்துவிட்டதாக சிவராம் தகவல் சொல்லி இருந்தான். ஜெகன் அவசரம் அவசரமாக கிளம்பினான். தனது நண்பர் ஒருவர் வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நேராக அம்மா மண்டபத்தில் சென்று ஜெகனை அழைத்துக்கொண்டு தனது வீடு வந்தான். சிவராமினை தயாராகச் சொன்னான் ஜெகன். அதற்குள் காலை உணவு எல்லாம் தயாராகி இருந்தது.

‘’என்னப்பா முன்னமே சொல்லி இருந்தா நாங்க லீவு போட்டு இருப்போமே’’

‘’அம்மா நீங்க வேலைக்குப் போங்க, இங்கதானே இருக்கப்போறேன், மதியம் நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன்’’

‘’சாதம் வடிச்சி வைச்சிருக்கேன்ப்பா’’

‘’சரிம்மா’’

அதிகாலை எழுந்து எல்லாம் தயார் செய்து வேலைக்கு செல்வது இன்று நேற்றல்ல பல வருட பழக்கம். அனைவரும் காலை உணவு உண்டார்கள். ஜெகன் சிவராமினை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

‘’சிவா நான் ஒரு பிரச்சினையில் மாட்டி இருக்கேன். டாக்டர் ராம் என்னை மிரட்டுறார்’’

‘’எந்த டாக்டர் ராம்’’

‘’பாக்யா வருணன் கிளினிக்ல வேலை செய்றார். டெஸ்ட் டியூப் பேபி பண்றவர்’’

‘’முந்தாநாள் பார்க்க வந்தியே அவரா’’

‘’ஆமா, அவரை நான் டில்லியில் வைச்சி சந்திச்சேன். என்னோட ஆராய்ச்சி பத்தி பேசிட்டு இருந்தோம். அப்போதான் இன்ட்ரான் ரிமூவல் ப்ரம் ஸ்பெர்ம் அண்ட் எக் பத்தி பேசினார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. என்னைப்பத்தி சில ஆர்டிகல்ஸ்ல படிச்சி இருக்கேன்னு சொன்னார். என்னை மெனக்கெட்டுப் பார்க்க வந்தது போல இருந்துச்சி. ஆனா ஒரு மருத்துவ விசயமா வந்தேன்னு சொல்லிட்டு இருந்தார். நானும் தாராளாம பண்ணிரலாம்னு சொல்லிட்டேன். இட் இஸ் வெரி காம்ப்ளிகேட்டட் ஐடியா. ஆனா ரொம்ப சாதாரணமா சொன்னார்.  அண்ட செல், விந்து செல் இவற்றில் இருந்து இன்ட்ரான் நீக்கிட அவை இன்ட்ரான் அற்ற செல்களாக உருவாகும். பின்னர்  அவைகளை ஒன்று சேர வைத்தால் இன்ட்ரான் இல்லாத குழந்தை உருவாகும் அந்த குழந்தை எப்படி நடந்துகொள்கிறது என அறியலாம். இது என்னுடைய சிந்தனை. நீ ஒத்துழைப்பு தந்தால் நாம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அதை நீ எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. இது எனது கனவு. என்னால் தனியாக செய்ய இயலாது நீ இந்தவேலையில் இருப்பதால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உன்னை சந்தித்து ஒப்பந்தம் போட நினைக்கிறேன். என்ன சொல்கிறாய்? (Remove all introns from those gametes, then you will have intron free gametes. Make them fuse together, you will have a child without introns then you see how a child behaves. This is my idea, if you agree to help me we can sign an agreement and you should not breach this at any cost. This is my dream. I could not do this on my own, when I saw you are working on this field I took this opportunity to see you and make an agreement. What do you say?) நானும் யோசிக்காமல் சரி என சொல்லிட்டேன். ஒப்பந்தம்தனில் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்’’

‘’சரி ஆனா எப்படி இன்ட்ரான் நீக்குறது என்ன ரீஏஜென்ட்ஸ் (reagents) உபயோகம்  பண்றதுன்னு அவர் எழுதித் தந்தாரா?’’

‘’இல்லை. அது எல்லாமே என்னோட ஆராய்ச்சி. நான் திட்டமிட்டு பண்ணினது. நான் உருவாக்கி இருக்கிற  அந்த மூலக்கூறு நேரடியா ஸ்பெர்ம், எக் செல்களை அட்டாக் பண்ணும். ஐ மேட் திஸ் கான்செப்ட் டு அட்டாக் 23 குரோமொசொம்ஸ் செல்கள். ( I made this concept to attack those 23 choromosomes cells)’’

‘’ரிப்ளிகேஷன் (replication) ப்ராசெஸ் ட்ரான்ஸ்லேசன் (translation) ப்ராசெஸ் பத்தி யோசிச்சியா’’

‘’எஸ், எல்லாம் யோசிச்சி அட்டெம்ப்ட் பண்ணி இருக்கேன். இட் வில் ஒர்க் அவுட்’’

‘’அப்ப என்னதான் பிரச்சினை’’

‘’அக்ரீமென்ட். என்னால இதை உருவாக்கி வேற ஒருவருக்கு தர முடியாது. டில்லியில் ஒரு டாக்டர்கிட்ட பேசினேன். அவருக்கு ஆர்வம் வந்தது. ஆனா கேப்ஸ்யூல் கொண்டு வந்து தா நான் பரிசோதிச்சிட்டு உனக்கு இதைப் பண்ண மேற்கொண்டு பணம் தரேன்னு சொன்னார். அதை வாங்கத்தான் வந்தேன். ஆனா டாக்டர் ராம் தர முடியாது, இது என்னோட கனவு எல்லாமே நான் பண்ணினது நீ இல்லைனு சொல்லிட்டார்.’’

‘’அக்ரீமென்ட் ரீட் பண்ணாமலா கையெழுத்துப் போட்ட’’

‘’எனக்கு அப்ப அந்த யோசனை இல்லை. நிறைய பணம் தரேன்னு சொன்னார்’’

 ‘’இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லு’’

‘’லுக் நான் எல்லா விபரங்களும் தரேன். நீ அதை இங்கே உருவாக்கு. எனக்கு நீ அனுப்பி வை. நான் அந்த டில்லி டாக்டர்கிட்ட கொடுத்து அடுத்த ப்ரோஜெக்ட்க்கு பணம் வாங்கிருவேன். நாம சேர்ந்து நிறைய செய்யலாம். நீ பண்ண ஆரம்பிச்சதும் பேடன்ட் உன்னோட பேருல அனுப்பிருவோம். டாக்டர் ராம் எதுவும் பண்ண முடியாது. அவர் என்ன பண்ணினார் தெரியுமா? என்னோட லேப்டாப்,வொர்க்  சிஸ்டம் இருந்த என்னோட டாட்டா எல்லாம் தங்கராஜ் அப்படின்னு ஒருத்தன் மூலமா இன்பெக்ட் பண்ண வைச்சிட்டார். அவன் ஒரு கம்ப்யூட்டர் வித்தகன். ஆனா நான் எல்லா விபரத்தையும் இந்த மெமரி ஸ்டிக் ல வைச்சி இருக்கேன். என்ன சொல்ற?’’

‘’எஸ். நான் உனக்கு உதவி பண்றேன், இது நமக்குள்ள இருக்கட்டும்’’

‘’ஐ  ஆம் சோ கேப்பி சிவா. பை த வே டோன்ட் சே டூ தட் கேர்ள் டூ. ஒரு நிமிஷம் இரு. உனக்கு எப்படி என்ன மூலக்கூறு எப்படி குரோமோசோம் எல்லாம் அட்டாக் பண்ணி இன்ட்ரான் ரிமூவ் பண்றதை காமிக்கிறேன். இட் இஸ் ஜஸ்ட் மிராக்கிள் ஹவ் திஸ் ஹுயூமன் ஸ்பீஸிஸ் டெவெலப்ட் யூ நோ’’

‘’ம்ம்’’

‘’ஆமா எப்படி பணத்திற்கு, ரீஏஜென்ட்ஸ் மேனேஜ் பண்ணுவ’’

‘’அதை நான் பாத்துக்கிறேன், ஐ வில் மில்க் சம் மணி பார் திஸ்’’

‘’அப்படின்னா நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டு வைச்சிக்கிருவோம்’’

‘’இல்லை ஜெகன் அது சரிப்பட்டு வராது. நானும் நீயும் இதில் சம்பந்தம் அப்படின்னு தெரிஞ்சா ராம் நம்ம மேல கேஸ் போட வாய்ப்பு இருக்கு. ஆமா ராம் கிட்ட இந்த வொர்க் காப்பி எதுவும் இருக்கா. எதுக்கு டெலிட் பண்ண சொல்லணும்’’

‘’எதுவும் இல்லை’’

‘’இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு ஜெகன். எப்படியும் இது சம்பந்தமான பைல் எல்லாம் தங்கராஜ் சேவ் பண்ணிட்டுதான் இன்பெக்ட்  பண்ணி இருக்க முடியும். நாளைக்கு இதே விஷயத்தை செய்யணும்னா எப்படி ராம் உடனே செய்ய முடியும். இது என்னோட முயற்சி அப்படின்னு எப்படி உரிமை கொண்டாட முடியும்’’

‘’இல்லை. குழந்தை உருவானா போதும். சக்செஸ் ஆயிருச்சினா என்கிட்டே பணம் கொடுத்தே பண்ண முடியும். வேற யாருகிட்டயும் போக வாய்ப்பு இல்லை. அக்ரீமென்ட் வில் வொர்க் பார் கிம். இப்போ என்னை மிரட்டி வைச்சி இருக்கார். நான் அதை யாருக்கும் தரக்கூடாது அதுதான் அவரோட திட்டம். இப்போ நான் சொன்ன ஐடியா வைச்சி நீ கேமிட்ஸ்ல இன்ட்ரான் ரிமூவ் பண்ண முடியாதா? கொஞ்சம் யோசிச்சா போதும். யூ கேன் டூ இட்’’

‘’இல்லை ஜெகன். என்னால யோசிக்க முடியலை’’

‘’சரி இதோ காட்டுறேன்’’


சிவராம் பேரார்வத்தில் அமர்ந்து இருந்தான். அப்போது சுபாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

(தொடரும்)  

Friday 12 February 2016

மாறா மரபு - 2

 3.  இன்ட்ரான் எக்ஸான்

சுபாவுக்கு சிவராம் குறித்து யோசனை வந்தது. அன்று மாலையே சிவராமினை சந்திக்க முடிவு எடுத்தாள். சிவராம், சுபா இருவரும் ஒன்றாக பன்னிரண்டாவது வரை படித்தவர்கள். சிவராம் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) நுங்கம்பாக்கம் அருகில் உள்ள சந்திரா மூலக்கூறு உயிரியல் கல்லூரியில் இளநிலை,  முதுநிலை முடித்து இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறான்.

சிவராம் நல்ல உயரம், நல்ல நிறம். பழகுவதற்கு இனிமையானவன். படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் தான் எனினும் சில மதிப்பெண்களில் மருத்துவம் படிக்க வாய்ப்பின்றி போனது. வேறு எந்த படிப்பும் எடுக்க விரும்பாமல் மூலக்கூறு உயிரியல் அவன் எடுத்தது அவனது வீட்டில் அவன் மீது சற்று வெறுப்பினை உண்டாக்கி இருந்தது. சிவாராமிற்கு உமையாள் எனும் தங்கையும் உண்டு. உமையாள் இப்போது பன்னிரண்டாவது படித்து வருகிறார். சிவராம் படிக்க முடியாத மருத்துவம் படிப்புதனை எப்படியும் உமையாள் படிக்க வேண்டும் என சிவராம் வீட்டில் பெரும் ஆவலுடன் இருந்தார்கள். 

சுபா எப்போதாவது சிவராமினை சந்திப்பது வழக்கம். சிவராம், சுபா ஒருவரை ஒருவர் நேசித்தார்கள் என்றே அவர்களது பள்ளி நாட்களில் பிறர் பேசிக் கொண்டு இருந்தார்கள். எவரேனும் இப்படி பேசும் போதெல்லாம் சுபாவுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அவர்களை அவர்களது படிப்பு சேர்ந்து இருக்கவிடாமல் பிரித்துவிட்டது. 

நுங்கம்பாக்கத்தில் வந்து இறங்கினாள் சுபா. சிவராமினைப் பார்த்து இப்போது இரண்டு மாதங்கள் ஆகி இருக்கும் என மனதில் நினைத்த வண்ணம் அவனது கல்லூரியை அடைந்தாள். இன்றைய சூழலில் எத்தனையோ தொடர்பு தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட போதிலும் நேரில் சந்திப்பது தவிர்த்து வேறு எந்த தொடர்பும் இல்லை என்றே சொல்லலாம். இதற்குமுறை இந்த கல்லூரிக்கு சில தடவை மட்டுமே வந்து இருக்கிறாள். 

சுபாவின் வருகையை எதிர்பார்த்தபடி அங்கு அமர்ந்து இருந்தான் சிவராம். ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டபோது அவர்களுக்குள் ஏற்படும் வெட்கம் அது காதலுக்கு மட்டுமே உரியது. 

''சிவா, எனக்கு ஒரு உதவி வேணும். இந்த இன்ட்ரான்  பத்தி நீ கொஞ்சம் சொல்ல முடியுமா''?

நேரடியாகவே கேள்வியைக் கேட்டு வைத்தாள்  சுபா. 

''என்ன சுபா, வந்ததும் வராததுமா எப்படி இருக்கனு  கூட கேட்காம இப்படி இன்ட்ரான்  பத்தி கேட்கற, வா அங்கே போய்  காபி குடிச்சிட்டே பேசலாம். எதுவும் சாப்பிட்டியா, தினமும் அழகாகிட்டேப் போற, வீட்டில மாப்பிள்ளை எதுவும் பார்க்கிறாங்களா?'' 

''வேலை பதட்டம் சிவா, நல்லாதான்  இருக்கேன்''

இருவரும் கல்லூரி உணவகம் சென்று காபி அதனோடு சேர்த்து சாப்பிட என  ரொட்டிகளும் வாங்கிகொண்டு ஒரு இடத்தில் அமர்ந்தார்கள். அங்கே பல மரங்கள் நல்லதொரு தென்றல் காற்றினை வீசிக்கொண்டு இருந்தன. மழை எப்போது வேண்டுமெனிலும் வரலாம் என்பது போல இருந்து கொண்டு இருந்தது. 

''மாப்பிள்ளை பாக்கிறாங்களா?''

''அதுதான் இப்ப குறைச்சல் சிவா''

''உங்க வீட்டுல நான் ஒரு மாப்பிள்ளை இருக்கேன்னு ஞாபகம் படுத்து, அப்படி இல்லைன்னா அப்புறம் டாக்டர் வருணன் யாரையாவது டாக்டர் மாப்பிள்ளையை உங்க வீட்டுல சொன்னாலும் சொல்வாரு''

''சிவா, அதை இன்னொரு நாளைக்குப் பேசலாம். இப்ப எனக்கு தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு. எப்படி சிவா இன்ட்ரான்  எல்லாம் ரிமூவ் பண்ண முடியும். அது என்ன அவ்வளவு சாதாரண விசயமா. ஏதோ  குழந்தை பெற முடியாதவங்களுக்கு குழந்தை பெற வெளிகருத்தரிப்பு பண்ணி குழந்தை உருவாக்குறது நல்லதுன்னு நினைச்சி நான் டாக்டர் வருணன் கிட்ட விருப்பத்தைச் சொல்ல அவர் இந்த ராம் கிட்ட என்னை அசிஸ்டென்ட் மாதிரி இருக்கச் சொல்லிட்டார். ஆனா இந்த ராம் பண்ற அட்டூழியம் என்னால சகிக்கமுடியலை சிவா''

''ஹே  பொறுமை, போனவாட்டி சந்திச்சப்ப நீ எதுவுமே சொல்லலையே, இந்த ரொட்டி எடுத்து சாப்பிடு''

''சிவா என்னோட சீரியஸ்நெஸ் புரியுதா இல்லையா, இப்ப கேட்கறதுக்கு பதில் சொல்லு, நாம கடையில் போய்  டின்னர் சாப்பிட்டே வீட்டுக்குப் போகலாம்''

''சொல்லு சுபா''

''இன்ட்ரான்  எப்படி ரிமூவ் பண்றது?''

''இன்ட்ரான்  பத்தி என்ன தெரியும் சொல்லு சுபா''

''எனக்கு டீடைல்டா  தெரியாது சிவா. நான் என்ன ஜெனிடிக்ஸா படிச்சேன்''

''அதை ரிமூவ் பண்றது நம்ம மனித பரிமாணத்தோட விளையாடறதுனு  சொல்லலாம். பாக்டீரியாக்களுக்கு  எல்லாம் இந்த இன்ட்ரான்  இல்லை. நமக்கு இந்த இன்ட்ரான் காரண காரியத்தோடத்தான் இருக்கு. என்னை உனக்கு லெக்சர் கொடுக்கச் சொல்வ போல இருக்கே சுபா''

''ப்ளீஸ் சிவா, ரிமூவ் பண்ணினா குழந்தைக்குப் பாதிப்பு உண்டாகுமா, உண்டாகாதா சொல்லு''  

''காபி ஆறப்போகுது குடி சுபா''

காபியை எடுத்துக் குடித்தாள். கொஞ்சம் குடித்து வைத்தவள் சிவாவைப் பார்த்தாள். 

''சொல்லு சிவா, பிரச்சினை ஆகுமா?''

''கண்டிப்பா பிரச்சினை உண்டாகும் சுபா, என்ன பண்ணுறோம்னு தெரிஞ்சிதான் பண்றாரா?. இப்ப நம்ம உடம்புல இருக்க ஜீன் எல்லாம் இன்ட்ரான், எக்சான் அப்படின்னு இணைஞ்சிதான்  இருக்கும். உனக்கு பேசிக் தெரியும்தானே. இந்த எக்சான் எல்லாம் புரோட்டின் உண்டாக்கக்கூடிய எம்என்ஆர்ஏ (mRNA) வா மாறும். அப்படி மாறும்போது இந்த இன்ட்ரான்  எல்லாம் ரிமூவ் ஆகும். இதை ப்ரீ எம்என் ஆர்ஏ  ச்பிளைசிங் (pre mRNA splicing) னு  சொல்வாங்க. இந்த இன்ட்ரான்  ஒரு வேலை செய்யலைன்னு முன்ன நினைச்சாங்க, ஆனா இப்ப இந்த மனித இனம் இப்படி இருக்கிறதுக்கு இந்த இன்ட்ரான்  தான் காரணம்னு சொல்லி இருக்காங்க, ஆகப் பிரச்சினைதான் சுபா''

''எனக்கு தலை சுத்துது சிவா, இந்த பரிணாம வரலாற்றில் அப்படி இப்படினு  பேசுறான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு''

''நீ எதுவும் கவலைப்படாதே, அப்படி எல்லாம் இன்ட்ரான்  எல்லாம் ரிமூவ் பண்ண முடியாது. எந்த ஸ்டேஜ் அப்படின்னு சொன்னாரா?''

''எம்ப்ர்யோ (embryo) உருவாக்கி பண்றதா சொன்னான். இரண்டு கரு வித்தவுட் இன்ட்ரான் , ஒன்னு வித் இன்ட்ரான் வைப்போம், டீல் அப்படின்னு ஏதோ ஒரு நிகழ்ச்சி மாதிரி பேசறான்'' 

''சான்சே இல்லை சுபா, அவர் ஏதோ  விபரீத முயற்சியில் இருக்கார், நீ எதுவும் கவலைப்படாதே. அனிமல்ஸ்ல பரிசோதிக்காம எப்படி இப்படி இறங்கினார். நாங்க இங்க வேற வேற பண்றோம் சுபா. எனக்கும் இந்த இன்ட்ரான்  மேல இன்ட்ரெஸ்ட் உண்டு, ஆனா ரிமூவ் பண்றது இல்லை. எப்படி உபயோகம் ஆகுதுன்னு, ஒரு பண்டிங் கூட அப்ளை பண்ணி இருக்கோம்''

''உன்னோட புரபசர்கிட்ட கேட்க முடியுமா''

''இல்லை சுபா, நான் ஒரு புத்தகம் தரேன். எடுத்துப் போய்  பாரு. இதை நீ அங்க இங்க சொல்லிட்டு இருக்க வேணாம். உன்னை கொலை பண்ணக்கூட தயங்கமாட்டார் டாக்டர் ராம்''

''சிவா.... ''

''நீ அவரை எதிர்த்து எதுவும் பண்ணாதே, சரி வந்த கப்பிள்ஸ்கிட்ட எதுவும் கொடுத்தாரா''

''எப்பவும் போல கேப்ஸ்யூல்ஸ் கொடுத்து அனுப்பினார். ஆனா இந்தவாட்டி ஹஸ்பன்ட் கூட அந்த கேப்ஸ்யூல்ஸ் எடுத்துக்கச் சொல்லி கொடுத்தார். விட்டமின்ஸ்தான்''

''எனக்கு அந்த கேப்ஸ்யூல்ஸ் கொண்டு வந்து தரமுடியுமா''

''எதுக்கு சிவா?''

''கொண்டு வந்து தாயேன், சரி எங்கே சாப்பிட போவோம், அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன்''

''நாளைக்கு தாரேன். உன்னோட சாய்ஸ்''

''லேப்க்கு போவோம், அங்க கொஞ்சம் வேலை முடிச்சிட்டு சாப்பிட போலாம், உன்னோட ட்ரீட், இன்ட்ரான்  ரிமூவ் பண்ணிய சுபா''

சிவா கலகலவென சிரித்தான். சுபாவின் மனம் பயத்தில் இருந்து இன்னும் மீள இயலாவண்ணம் துடித்து கொண்டு இருந்தது. 

லேப்பில் இருந்து இருவரும் சாப்பிங் சென்றுவிட்டு உணவருந்த சென்றனர். சுபா தன்  அம்மாவுக்கு தகவல் சொல்லி இருந்தாள். சுபாவிற்கு சாப்பிட பிடிக்கவே இல்லை. எப்படி ஒரு குழந்தையை இப்படி செய்யலாம் என அவளுக்குள் இருந்த தாய்மை உணர்வு அவளை நச்சரித்துக் கொண்டு இருந்தது. சாப்பிட்டு வெளியே இருவரும் வந்தபோது மணி இரவு எட்டரை ஆகி இருந்தது. 

''ஹே சிவா, இஸ்  ஸீ  யுவர் கேர்ள்  பிரண்ட்?'' பக்கவாட்டில் இருந்து சிவாவின் தோளின்  மீது பட்ட கையை திரும்பிப் பார்த்தான் சிவா. 
4. விசித்திர உலகம்

''ஹே ஜெகன் , எப்படிடா இங்க''

''ஆன்சர் மை கொஸ்டின் பர்ஸ்ட்''

''நோ, சீ  இஸ் டாக்டர், மை ஸ்கூல்மேட். சுபா இவன் ஜெகன், டில்லியில் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான், ஒரு கான்பிறேன்ஸ்ல பார்த்து பழகிகிட்டோம்''

''யூ போத் லுக் மேட்  பார் ஈச் அதர்''

''சரி எப்படி இங்க, என்ன விஷயம், ஒரு கம்யூனிகேசன் எதுவும் இல்லை''

'' ஆம் கியர் டூ சி டாக்டர் ராம்,  காட் டிலேயெட்''

''என்ன விஷயம்''

''நத்திங் சீரியஸ், சீயிங் ஹிம் டுனைட் அண்ட் லீவிங்  டுமாரோ''

''எங்கே தங்கி இருக்க, எதுவும் ரிசர்ச்?''

''பார்க் ஹையாட், நாட் அட் ஆல். வெல் வில் கேட்ச் யூ லேட்டர், சீ  லுக்ஸ் வெரி பிரிட்டி''

''  கே ஜெகன், டேக் கேர்''

சில நிமிட சந்திப்புகள் தான் என்றாலும் இந்த ஜெகன் எதற்காக டாக்டர் ராமினை சந்திக்க வந்து இருக்கிறான் என சுபா சற்று சந்தேகம் கொண்டாள். ஒருவர் மீது சந்தேகம் என வந்துவிட்டால் அதற்குப் பின்னர் தெளிவு பெற வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. 

''சிவா, அவன் என்னை அழகா இருக்கானு சொல்றான் நீ பல்லைக் காட்டுற, அவன் பல்லை உடைக்காம. அவன் பாக்க வந்தது நம்ம ராம் தான''

''சுபா, உன்னை என்ன அசிங்கமா இருக்கேனு சொன்னானா, ஆனா என்னை இப்படி ஞாபகம் வைச்சிக்கிற அளவுக்கு அவன் மனசில பதிஞ்சி இருந்து இருக்கேன் பாரு. எந்த ராம்னு கேட்காம விட்டுட்டோம். ஆனா அவன் சொல்றதப் பார்த்தா நம்ம டாக்டர் ராம் தான். ஆனா நீ எதையும் காட்டிக்கிற வேணாம். நான் மெதுவா இவன்கிட்ட பேசி என்னனு தெரிஞ்சிக்கிறேன்''

''நான் ராம் கிட்ட போன்  போட்டு ஒரு சந்தேகம் உன்னை இப்ப பார்க்க வரலாம்னு கேட்கிறேன், என்ன சொல்றானு  பார்க்கலாம்''

''சுபா நீ துப்புறியும் நிபுணர் போல பேசற, நீ டாக்டர்''

''சிவா, ஒரு நிமிஷம் இரு''

சுபாவின் அழைப்பை எடுத்தார் டாக்டர் ராம்.

''ராம், உங்களை இப்போ பார்க்க வர முடியுமா''

''என்ன விஷயம், இந்த நேரத்தில போன், பார்க் ஹையாட்ல ஒரு நண்பரை சந்திக்கப் போறேன். நாளைக்கு கிளினிக்ல பேசிக்கிறலாம். தலைபோற விஷயம் ஒண்ணுமில்லையே''

''இல்லை, சரி''

பேசிய சில விநாடிகளில் அழைப்புத் துண்டிக்கப்பட்டது. சுபா சிவாவினை நோக்கி ஆச்சரிய கண்கள் உண்டாக்கினாள்.ஜெகன் நிச்சயம் இந்த இன்ட்ரான்  விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருப்பது போன்று சுபா எண்ணினாள். ஆனால் ஜெகன் இதுவரை மருத்துவமனைக்கு வந்தது இல்லை. ராம் ஜெகன் குறித்து சொன்னதும் இல்லை.

''என்ன சுபா, துப்பறிஞ்சிட்டியா?''

''அந்த ஹோட்டலுக்குத்தான் போறான், எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கார் அந்த ஜெகன்''

''இன்ட்ரான் தான். காப்புரிமை விசயம்னு எதுவும் சொல்லிக்கவே இல்லை. ஆனால் என்னோட ஆராய்ச்சி பத்தி நிறைய கேள்வி கேட்டார். அதுதான் எனக்கு நல்ல பழக்கம்''

''தப்பு நடக்குது சிவா''

''மணி பாரு ஒன்பது ஆச்சு. வா உன்னை வீட்டில விட்டுட்டு போறேன். தேவை இல்லாம குழப்பிக்காதே. ராம் என்ன வேணா பண்ணட்டும்னு இரு சுபா. உனக்கு எதுக்கு இவ்வளவு மன உளைச்சல்''

''முடியலை சிவா, மனசு எல்லாம் கிடந்து அடிச்சிக்கிது. ஆமா அவனுக்கு தமிழ் தெரியாதா''

''தெரியும், புரியும். அவங்க அப்பா அம்மா கூட ஸ்ரீரங்கம் தான்''

''அப்புறம் எதுக்கு அப்படி இங்லீஸ்ல பேசினான்''

''நீ அழகா இருந்தியா, அதான் பேசி இருப்பான்''

''நீயுமா சிவா''

''சரி வா போகலாம்''

பார்க் ஹையாட்  ஹோட்டலில் ஜெகனை டாக்டர் ராம் சந்தித்தார். ரம்மியமான சூழல். எப்போது வேண்டுமெனிலும் மழை விழும் போல இருந்தது. இருவருக்கும் காபி வரவழைத்து ஜெகன் அறையினில் அமர்ந்தார்கள். ஜெகன், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பான். வசீகரிக்கும் கண்கள். முகம் எல்லாம் மூடிய தாடி. ஆறடி உயரம். ஓங்கி எவரையேனும் அடித்தால் உயிர் போய்விடும் அளவிற்கு கைகள் கொண்ட பலம்.

''என்ன ஜெகன் பிரயாணம் எப்படி இருந்தது, விமானத்தை தவற விட்டுட்ட போல''

''ஆமா டாக்டர். சரி எதுவும் முயற்சி பண்ணினீங்களா, நான் இரண்டு மாசம் முன்ன உங்களுக்கு கொடுத்த கேப்ஸ்யூல் பத்திரமா இருக்குதானே''

''இப்போதான் ஒரு தம்பதிகள் கிட்ட முயற்சி பண்ணி இருக்கேன், பத்திரமா இருக்கு ''

''கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, யாருக்கும் விஷயம் தெரிய வேணாம். தெரியாதுதானே. என்னோட வேலை இடத்தில கொஞ்சம் பிரச்சினை''

''தெரியாது. நான் மட்டுமே இந்த வேலையைப் பார்க்கிறேன். அதனால யாருடைய தலையீடும் இருக்காது. எதுக்கு இவ்வளவு அவசரமா நேரில் பார்க்கணும்னு  வந்த''

''எனக்கு கேப்ஸ்யூல் கொஞ்சம் தேவைப்படுது. கிளினிக்ல இருக்கா, இல்லை வீட்டில் இருக்கா. எனக்கு கொஞ்சம் வேணும். போனவாட்டி மாதிரி இனி நான் அதை உண்டு பண்ண எப்படியும் பத்து மாசங்கள் ஆகும். உண்டு பண்ண முடியுமானு   தெரியலை. உங்ககிட்ட கொடுத்தப்பறம்  இப்ப நான் எதுவுமே பண்ணலை. நிறைய நெருக்கடி. இது எதுக்கு வாங்கின, அது எதுக்கு வாங்கின அப்படின்னு சூப்பர்வைசர் குடைஞ்சி எடுத்துட்டார்''

டில்லியில் ஒரு டாக்டர் கிட்ட டீலிங் பண்ணி இருக்கேன். எதேச்சையா பேசறப்ப அவர் யோசிச்சி சொல்றேனு சொன்னார். அவரும் போன வாரம் தான் சம்மதம் சொன்னார், 

நீங்க இந்த தம்பதியில் முயற்சி பண்ணுங்க, இன்னொரு தம்பதியில் அவர் முயற்சி பண்ணட்டும். பட்ஜெட் அதிகமா போயிருச்சி. சூப்பர்வைசர் கோவமா இருக்கார்''

''முடியாது ஜெகன். இது என்னோட கனவு. நான்தான் இந்த திட்டத்தையே உன்கிட்ட சொன்னேன். இப்போ வேற டாக்டர்கிட்ட போறேன்னு சொல்ற. எதுவும் பணம் தரேன்னு சொன்னாரா''

''சொன்னா கேளுங்க ராம். வம்பு பண்ணாதீங்க, அப்புறம் உங்க கிளினிக்ல சொல்ல வேண்டி இருக்கும்''

''சொல்லு, எனக்கு என்ன பயமா, உன்னோட சூபர்வைசருக்கு போன் பண்ண எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு நினைக்கிற, இதே கேப்ஸ்யூல் இங்கே என்னால உன்னை மாதிரி ஒருத்தனை வைச்சி உருவாக்க முடியும். பிரச்சினை  வரும்னுதான் உன்னை பிடிச்சேன். என்னமோ நீயே எல்லாம் பண்ணின மாதிரி இப்ப பேசிட்டு இருக்க. நான் கொடுத்த பணத்தை எல்லாம் நீ தின்னுட்டு உன்னோட சூபர்வைசர் பட்ஜெட்ல எதுக்கு கை வைச்ச. இங்க பாரு நீ என்கிட்ட போட்ட அக்ரீமெண்ட் இருக்கு மறந்துராத''

''ராம், எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு''

''நீ கிளம்பு. எனக்கு நேரம் ஆகுது''

''ராம், சரி, எனக்கு இன்னும் பணம்  கொடுங்க, நான் பண்றேன்''

''தேவை இல்லை ஜெகன். இப்போ இருக்கறது நாலு தம்பதிகளுக்கு வரும். குழந்தைக பிறந்தப்பறம் இதை உலகுக்கு தெரிவிச்சு நானே இங்க ஒருத்தரைப் பிடிச்சி பண்ணுவேன். உன்னோட உதவி போதும். நீ இப்படிபட்டவனு  முன்னமே  தெரிஞ்சி இருந்தா உன்னை வந்து பாத்து உதவி கேட்டு இருக்கமாட்டேன்''

''டாக்டர் ராம்...''

''இனி பேசாத. நான் இந்த ஹோட்டல் பில் கட்டிருறேன்.இதுக்கு மேல என்னைப் பேச வைக்காத''

டாக்டர் ராம் வெகுவேகமாக அறையை விட்டு வெளியேறினார். ஜெகன் தான் அவசரப்பட்டு விட்டோம் என எண்ணினான். காலையில் டாக்டர் ராம் ஜெகனை வழி அனுப்ப ஹோட்டலுக்கு வந்தார்.

''ஜெகன், நான் சொன்னது நினைவு இருக்கட்டும். நீ ஏதாவது  ஏடாகூடமா பண்ண நினைச்ச, அப்புறம் நடக்கறது வேற''

''பண்ணலை ராம்''

ஜெகன் டில்லி சேர்ந்த சில மணி நேரத்தில் டாக்டர் ராமிற்கு அழைப்பு வந்தது.

''சார் நான் ராஜ் பேசறேன். நீங்க சொன்னபடியே ஜெகனோட லேப்டாப்பில் இருந்த எல்லா டாக்குமெண்ட்ஸ் இன்பெக்ட் பண்ணிட்டேன்.  அவன் வேலை இடத்தில வைச்சி இருந்ததையும் சேர்த்து நான் இன்பெக்ட்  பண்ணிட்டேன்''

''சூப்பர் ராஜ், யாருக்கும் சந்தேகம் வராம பாத்துக்கோ''

''அதெல்லாம் பக்காவா நான் பண்ணிட்டேன் சார்.  அவனோட திட்டம் என்னனு தெரியலை. அவன்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன்''

''ராஜ் எப்பவும் போல என்னை உனக்குத் தெரியும்னு எந்த சூழ்நிலையிலும் காட்டிகிறாத, மெமரி ஸ்டிக்  சி டி ஏதாவது இருந்தாலும் கவனிச்சிக்கோ''

''நான் பார்த்துக்கிறேன் சார், வைரஸ் புரோகிராம் வைச்சி அட்டாக் பண்ணிதான் பண்ணினேன் அதனால அவனால எந்த சந்தேகமும் படமுடியாது''

தங்கராஜ் டில்லியில் ஒரு கணினி நிபுணராக வேலை பார்த்து வருகிறான். அவனுக்கும் ஜெகனுக்கும் நல்ல பழக்கம். எப்போது ஜெகனை டாக்டர் ராம் சந்தித்தாரோ அப்போதே இந்த தங்கராஜினையும் டாக்டர் ராம் சந்தித்தார். ஆனால் ராஜிடம் எவரிடமும் அவர்களது சந்திப்பு குறித்து வெளித்தெரியக்கூடாது என சொல்லி வைத்தார். ஜெகனின் அலுவலகம் தங்கி இருக்கும்  வீடு என அவனது கணினி குறித்த எல்லா தகவல்களும் ராஜிற்குத் தெரியும். 

''ராம், உள்ளே வரலாமா?''

''வாங்க டாக்டர் சுபா, வழக்கம் போல லேட்டா?''

''என்ன ராம், எப்போ நான் லேட்டா வந்தேன். இப்போதான் பேசன்ட்டுக்கு இன்ஜெக்ஸன் போட்டுவிட்டு வந்தேன்''

''தினமும் கேப்ஸ்யூல் எடுக்கிறாங்களா டாக்டர் சுபா''

''ஆமாம் ராம். எடுக்கிறாங்க''

''டாக்டர் ராம் அப்படின்னு கூப்பிட்டு பழகு சொன்னா கேட்கமாட்டியா''

''எனக்கு கொஞ்சம் கேப்ஸ்யூல் தர முடியுமா, டாக்டர் ராம், இப்ப ஓகே  வா''

''இதை நீ கடையில வாங்கிக்கிரலாம், அதில் எல்லாம் என் அனுமதி இல்லாம நீ கைய வைக்காத, அதான் பூட்டி வைச்சிருக்கேன். உன்கிட்ட இருக்கிற கேப்ஸ்யூல் எடுத்து உபயோகி. அடுத்த தம்பதிகளுக்கு நான் வைச்சி இருக்கிறத தரலாம். என்ன விஷயம் நேத்துப் பார்க்க வரலாமானு கேட்ட''

''இன்ட்ரான் ரிமூவ் பண்ற டெக்னிக் எனக்குச் சொல்லித்தர முடியுமானு  கேட்கத்தான்''

''டாக்டர் சுபா, அதை எல்லாம் இனிமே பேசிட்டு இருக்க வேணாம். எனக்கு இப்போ அதில் இன்ட்ரெஸ்ட்  இல்ல. நான் எதுவும் ரிமூவ் பண்ணப் போறது இல்ல. நேத்து ஒரு டாக்டரைப்  பார்த்தேன். வெரி  காம்ப்ளிகேட் அப்படின்னு சொல்லிட்டார்''

''பார்க் ஹையாட்ல பார்த்தவரா''

''இல்லை இவர் டாக்டர் ஜெரால்டு''

''அப்போ பார்க் ஹையாட்?''

''உங்களோட வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க டாக்டர் சுபா, இப்போ நீங்க போகலாம்''

டாக்டர் ராமின் முகம் கோபத்தில் கொப்பளித்து கொண்டு இருந்ததை கண்டாள் சுபா. இனிமேல் இது குறித்து கேட்டால் பிரச்சினை வரும் என எண்ணி அந்த இடம் விட்டு நகர்ந்தாள். யார் இந்த டாக்டர் ஜெரால்டு. வேணுமென கதை சொல்கிறானோ என எண்ணினாள். வாழ்வின் லட்சியம் என சொன்னவன் நிச்சயம் கைவிடமாட்டான். இந்த கேப்சயூலில்  என்ன இருக்கும் எனத் தெரியாமல் தவித்தாள். அந்த தம்பதிகளிடம் என்ன பேசினாலும் நேராக டாக்டர் ராமிடம் சொல்லிவிடுவார்கள் என்பதால் என்ன செய்வது என யோசித்துக்கொண்டு இருந்தாள். 

அடுத்த தம்பதிகள் வரும்வரை காத்து இருக்க வேண்டியது மட்டுமே இப்போதைக்கான வழி என இன்ட்ரான்  அவளது தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு இருந்தது. 

(தொடரும்)