Thursday, 11 February 2016

மாறா மரபு - 1

1. நோயற்ற மனித இனம்

‘’இந்த இன்ட்ரான்களை எல்லாம் உருவாக்கவே விடக்கூடாது’’ என்றான் ராம்.

‘’ஏதாவது உளறாதே, இன்ட்ரான்கள் நமது ஜீன்களில் முக்கியபங்கு வகிக்கிறது’’ என்றாள் சுபா.

அடுத்தமுறை உருவாக்கப்படும் கருவில் இன்ட்ரான்கள் இல்லாமல் செய்யப்போகிறேன் என்ற ராமினை நோக்கி சுபா முறைத்துப் பார்த்தாள். ராம் செய்வது தப்பு என்று சுபாவின் பேச்சை ராம் கேட்பதாகவே இல்லை. சுபாவுக்கு என்ன செய்வது என்று தெரியவும் இல்லை. இன்ட்ரான்கள் உருவாகாமல் எப்படி இவன் தடுக்க இயலும் என யோசித்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.

ஏன் ராம் இப்படி விபரீதமாக நினைக்கிறான். குழந்தை வேண்டி வருபவர்களுக்கு உருவாக்கும் கருவில் இவன் ஏன் இப்படி ஒரு விசயத்தை சோதிக்க வேண்டும். மீண்டும் ஆய்வகத்தில் சுபா நுழைந்தபோது, சுபா நாளை சுகுமார், தீபா தம்பதிகள் வருகிறார்கள். என் பரிசோதனை இங்கு இவர்களை வைத்துத் தொடங்க உள்ளேன். உடனிருந்து உதவி செய், உபத்திரவம் செய்யாதே. மீறி ஏதாவது செய்தால் நீயும் உடந்தை என பழி சொல்வேன் என்றான் ராம்.

இந்த ராம் நன்றாகத்தானே இருந்தான் என எண்ணிய சுபா சரி என தலையாட்டினாள். இப்படியே இரு என்றான் ராம். சுபா ராம் சென்றபிறகு தீபாவின் எண்களைத் தேடினாள். அன்று இரவு வீட்டிற்கு வந்து நான் டாக்டர் சுபா பேசறேன். நீங்கள் நாளைக்கு கிளினிக்குக்கு வர வேண்டாம். டாக்டர் ராம் கேட்டால் உடல் நலம் சரியில்லைன்னு சொல்லிருங்க என சொன்னதும் தீபா புரியாமலே சரி என்றாள்.

ராம் செய்ய இருக்கும் விசயங்களை எப்படி சொல்வது என சுபா விழித்தாள். தீபாவின் முகவரி வாங்கியவன் அன்று இரவே தீபாவினை பார்க்க விரைந்தாள்.

சுபாவின் வீட்டில் ஏன்மா இப்படி வந்ததும் வராததுமா எங்கே போற எனும் அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லாதவளாய் வந்து சொல்றேன் என தனது இரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பினாள். இருளை வெளிச்சம் விரட்டிக் கொண்டு இருந்தது. தீபாவின் வீட்டின் கதவைத் தட்டினாள்

டாக்டர் சுபா என்று அறிமுகப்படுத்தியவள் அவர்களிடம் ராம் செய்ய விரும்பும் திட்டத்தை சொல்லி இதனால் சற்று தாமதம் செய்யலாம் என சொன்னாள். எத்தனை வருஷம் என்ற தீபாவின் கேள்விக்கு சுபா பதில் சொல்லமுடியாமல் தவித்தாள். ஆகறது ஆகட்டும் டாக்டர் ராம் மேல நம்பிக்கை இருக்கு என்ற தீபாவின் பதில் வியப்பு அளித்தது. டாக்டர் நீங்க கவலைப்பட வேண்டாம் என்று சுகுமார் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. சுபா என்ன செய்வது என புரியாமல் கிளம்பினாள்.

இந்த உலகில் குழந்தைகள் தரும் சந்தோசத்தை வெறும் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. டெஸ்ட் ட்யுப் மூலம் ஒரு குழந்தையை உருவாக்குவது அத்தனை எளிதான காரியமும் அல்ல. இதற்காக தம்பதியர்களுக்கு உண்டாகும் மன உளைச்சல் மிக அதிகம். அப்படி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் நம்மை தேடி வந்தவர்களுக்கு இப்படி ஒரு துரோகம் இழைக்க ராம் எப்படி துணிந்தான் என்ற எண்ணம் சுபாவுக்கு தூக்கம்தனை வரவிடாமல் தடுத்தது. 

இந்த 'பாக்யா வருணன் கிளினிக்' ஆரம்பித்து ஐந்து வருடங்கள் மட்டுமே ஆகிறது. டாக்டர் வருணன் சுபாவின் தந்தைக்கு பழக்கமானவர் என்பதால் சுபா தனது படிப்பை முடித்ததும் அந்த கிளினிக்கில் டாக்டராக பணிக்கு சேர்ந்தாள். டாக்டர் வருணன் இந்த கிளினிக்கை இரண்டு பிரிவாக வைத்து இருந்தார். ஒன்று சாதாரண நோயாளிகளை பார்ப்பது, மற்றொன்று மகப்பேறு மற்றும் டெஸ்ட் ட்யூப் குழந்தை உண்டு பண்ணுவது. டாக்டர் ராம் டெஸ்ட் ட்யூப் குழந்தை உண்டுபண்ணுவதில் அதிக நேரம் செலவழித்தான். எப்போதாவது குழந்தை இல்லை என வெகு சிலரே வருவார்கள். அதற்காக செலவாகும் நேரம், பணம் எனும் காரணிகள் எல்லாம் பார்த்துவிட்டு தம்பதிகள் குழந்தை வேண்டாம் என சென்றது உண்டு. அப்படி இருக்கும் பட்சத்தில் டாக்டர் ராம் முதன் முதலில் சென்ற வருடம் தான் ஒரு டெஸ்ட் ட்யூப்  குழந்தையை வெற்றிகரமாக உண்டாக்கினான். அதைத் தொடர்ந்து மேலும் சில தம்பதிகளுக்கு டாக்டர் ராம் வெற்றிகரமாக டெஸ்ட் ட்யூப் குழந்தை உருவாக்க அவனது புகழ் கொஞ்சம் வெளித்தெரிய தொடங்கியதும் மேலும் சில தம்பதிகள் வர ஆரம்பித்தார்கள். அப்படி நாளை வர இருப்பவர்கள் தான் சுகுமார் தீபா தம்பதிகள். 

இரவு ஆனதை பொருட்படுத்தாமல் தூக்கம் வராததை வைத்து டாக்டர் ராமுக்கு போன்  செய்தாள்  சுபா. 

''ராம், நீ இப்படி பண்ணுவதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு கிடையாது, நான் அந்த தம்பதிகளிடம் சொன்னேன் அவங்க உன் மீது நம்பிக்கை இருக்கிறது என சொல்லிட்டாங்க, அவங்க நம்பிக்கையை நீ கெடுக்காதே''

''சுபா, உனக்கு தூக்கம் வரலைன்னா  எனக்கு தூக்கம் வராதுனு  நினைச்சியா, மணி எத்தனை ஆகுது தெரியுமா?''

''ஆனா நீ பண்ணப்போற காரியத்தால குழந்தை எப்படி பிறக்கும், அந்த குழந்தை எப்படி இருக்கும் கொஞ்சமாச்சும் யோசிச்சிப் பார்த்தியா, அப்படி நீ பண்ண நினைச்சா நீ கல்யாணம் பண்ணி உனக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு நீ பண்ணலாமே''

''இங்க பாரு சுபா, நான் பண்ணப்போறது பண்ணப்போறதுதான், நீ தேவையில்லாம பேசறத நிறுத்து. என் கல்யாணம் பத்தி உனக்கு என்ன அக்கறை. நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு''

''ராம், உன்னோட ஐஞ்சு வருஷம் பழகி இருக்கேன். நீ எப்பவுமே இப்படி ஒரு விஷயத்தை என்கிட்டே பேசினது இல்ல. திடீர்னு இப்படி இன்ட்ரான்  இல்லாமல் குழந்தை உருவாக்குவேன் அப்படின்னு சொன்னா என்ன அர்த்தம். அது எவ்வளவு கஷ்டம். உன்னால எப்படி அப்படி பண்ண முடியும்''

''என்னால் பண்ண முடியும். சுபா நீ ஏன்  இப்படி அடம் பிடிக்கிற. அவங்களே சரின்னு சொன்னப்பறம் உனக்கு என்ன வந்தது''

''குழந்தை பிறந்தால் போதும்னு இருக்காங்க, அதை புரிஞ்சிக்கோ''

''இங்க பாரு சுபா, எனக்கு இப்ப தூங்கனும். நீ இப்படி பயப்படுறதால் சொல்றேன். நல்ல மூணு கரு எடுத்து அதில் இரண்டு இன்ட்ரான்  இல்லாமல் ஒன்று எப்பவும் போல சாதாரணமாக இருந்தால் உனக்கு சரிதானே. இப்போ திருப்தியா''

''இல்லை இரண்டு நல்ல கரு, ஒன்னு இன்ட்ரான் இல்லாமல் அவங்களோட  கருப்பையில் வைச்சிரு''

''சரி, இப்போ நிம்மதியாக தூங்கு''

எல்லா கருவையும் இன்ட்ரான்  இல்லாமல் ராம் வைத்துவிட்டால் என்ன பண்ணுவது என சுபா சந்தேகம் கொண்டவளாக தென்பட்டாள். அப்பாவிடம் சொல்லி டாக்டர் வருணனிடம் சொல்லி இதை எல்லாம் நிறுத்தினால் என்ன என தோணியது. 

இன்ட்ரான்  இல்லாமல் எதற்கு கரு உருவாக்க துடிக்கிறான் ராம் என சுபா நினைத்தாள். ஒரு உயிரினத்தின் இத்தகைய காம்ப்ளக்ஸ்சிற்கு இந்த இன்ட்ரான்கள் தான் காரணம் என்பதை அவன் அறியாமலா இருக்கிறான். ராம் தனது அறையில் எழுதி வைத்த ஒரு பலகை சுபாவின் நினைவில் வந்து ஆடியது. 

'உலகில் நோயற்ற மனித இனத்தை உண்டு பண்ணுவதே என் வாழ்வின் லட்சியம்' - டாக்டர் ராம் மார்த்தாண்டன் 


நமது ஜீன்களில் இன்ட்ரான்கள்  இல்லை என்றால் நோய் உருவாகாதா? என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் என்றே சுபா கண்கள் சுழற்ற அப்படியே உறங்கினாள்.

2. வெளி கருத்தரித்தல்

சுபா இன்னமும் உறங்கிக்கொண்டு இருந்தாள். மனதின் அசதி அவளை எழுந்துவிடாமல் செய்து கொண்டு இருந்தது. 

''சுபா, எழுந்திருமா'' என்ற அம்மாவின் குரல் அவளது உறக்கத்தை கலைத்தது. 

வழக்கம் போல் இந்த நாள் இருக்கப்போவதில்லை என்று எண்ணியபோது அவளுக்கு எழுவது சற்று கடினமாகவே இருந்தது. 

''என்னாச்சு சுபா, உடம்புக்கு முடியலையா?''

''அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா, அசதியா இருக்கு''

''எழுந்து குளிச்சிட்டு வா, அசதி எல்லாம் சரியாயிரும்''

''ம்ம்''

மணவாளன் சீதாலட்சுமிக்கு இரண்டாவதாக பிறந்தவள்தான் சுபா. சுபாவின் அண்ணன் ரகுநாதன் ராமலட்சுமியை திருமணம் முடித்து மதுரையில் இப்போது இரண்டு வருடங்களாக வசித்து வருகிறார்கள். முக்கியமான விழாக்காலங்களில் மட்டுமே ரகுநாதன் ஊருக்கு வருவது உண்டு. ரகுநாதன்  சுந்தரம் கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இன்னும் அவர்களுக்கு குழந்தை பெறும்  எண்ணம் ஏதுமில்லாமல் இருந்தது. 

''டாக்டர் இன்னைக்கு லேட்டா?'' என்றார் மணவாளன்

''இருபது நிமிஷம் கூட தூங்கி இருப்பா அசதியா இருக்காம்'' 

''நம்ம பையனை கூட டாக்டர் ஆஸ்பத்திரியில் என்ன ஏதுனு  பார்க்க சொல்லலாம்''

''கல்யாணம் முடிச்ச அடுத்த வருசமே குழந்தை பெத்துக்கிரனும்னு யார் சொன்னது, காலங்காத்தால மறுபடியுமா, பேசாம இருங்க''

சுபா கிளம்பி இருந்தாள். 

''என்னம்மா, இன்னைக்கும் இட்லியா?''

''தோசை சுட்டுத்தரவா?'' 

''இல்லைம்மா, இட்லி போதும்''

''எதுக்கு ஒருமாதிரி இருக்க, எதுவும் ஆஸ்பத்திரியில் பிரச்சினையா, அதுவும் ராத்திரி வந்ததும் வராததும் வேற வெளியில போன, எதுவும் சொல்லமாட்ற'' 

''ஒன்னும் இல்லைம்மா''

மணவாளன் இடைமறித்தார். 

''சுபா, வருணன் கிட்ட எதுவும் சொல்லணுமா? சொல்லும்மா நான் சொல்றேன்''

''எதுவும் வேணாம்ப்பா''

மூன்றே இட்லிகள் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள். 

''என்னைக்குதான் நல்லா சாப்பிடப் போறியோ''

''சாப்பிட்டேன்லம்மா''

சுபா எப்போதுமே அளவோடு சாப்பிடும் பழக்கம் கொண்டவள். உடல் எடை எல்லாம் குறைக்க வேண்டும் எனும் கவலை இல்லாதமாதிரியான உடல்வாகு. இயற்கையாய் அமைந்த நீலவிழிகள். வட்டமான முகம். நன்றாக வளைந்த புருவங்கள். எதையும் உன்னிப்பாக கவனிக்கும் அழகிய கண்கள். அதிகம் நீளம் இல்லாத மூக்கு. உடலுக்கு ஏற்ற உயரம். 

சுபா கிளினிக் அடைந்தபோது சரியாக ஒன்பது ஆகி இருந்தது. ராம் சுபாவின் முன் எதிர்பட்டார். 

''குட்மார்னிங் டாக்டர் சுபா''

''குட்மார்னிங் ராம்''

''இந்த நாள் எனது பொன்னாள் டாக்டர் சுபா''

''சரி ராம்''

ராமினை கடந்து சுபா தனது அறைக்குள் சென்று அமர்ந்தாள். இன்று வரும் தம்பதிகளிடம் பேசி அவர்களை தயார்படுத்திட எப்படியும் ஒரு மாதம் ஆகும். அதற்குள் வேறு வேறு தம்பதிகள் வந்தால் அவர்களிடம் இந்த முயற்சியை பின்பற்றினால் என்ன செய்வது என்றே சுபா யோசித்தாள். இதை டாக்டர் வருணனிடம் சொன்னால்தான் நல்லது என அவ்வப்போது சுபாவிற்கு தோணியது. 

அன்று காலை சில நோயாளிகளை கவனித்துவிட்டு சற்று மதிய நேரத்திற்கு முன்னர் டாக்டர் சுபா  மற்றும் டாக்டர் ராம் சுகுமார் தீபா தம்பதிகளை சந்தித்தார்கள். டாக்டர் ராம் பேசினார். 

''இன்னைக்கு குழந்தை இல்லாதவங்களுக்கு இந்த வெளி கரு தரித்தல் மருந்துமுறை ஒரு வெற்றிகரமான மருந்து முறையாக செயல்படுது. இதுதான் நமது முதல்நாள் சந்திப்பு அப்படிங்கிறதால நீங்க செய்ய வேண்டியது எல்லாம் வரிசையாக சொல்லிருறேன், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்க

மேடம், உங்களுடைய மாதவிடாய் காலத்தை குறைக்கும்பட்சமா இந்த ஸ்ப்ரே பன்னிரண்டு நாட்கள் நீங்க தவறாம உபயோகிக்கணும் அதற்கப்பறம் உங்களுக்கு இந்த கொனடொட்ராபின் ஹார்மோன் ஊசி தருவோம். அதை நீங்க பன்னிரண்டு நாள் தவறாம போடணும். நீங்க கிளினிக் வந்து போட்டுக்கிறதைதான் நாங்க விரும்புறோம். இந்த ஹார்மோன் உங்க அண்ட  செல்களை அதிகபடுத்த உதவும். 

பன்னிரண்டு நாள்களுக்கு அப்புறம் உங்க அண்ட  செல்களை எல்லாம் நாங்கள் எடுத்துக்கொள்வோம். இதை எல்லாம் டாக்டர் சுபா செய்வாங்க. அப்படி எடுக்கிறதுக்கு முன்னாடி அந்த அண்ட  செல்களை கருத்தரிக்க தயார்நிலை படுத்த மற்றொரு ஹார்மோன் ஊசி போடுவோம். ஒரு சின்ன நீடில் மூலம் அந்த கருத்தரிக்க தயாரான செல்கள் எல்லாம் அல்ட்ராசவுண்ட் உதவி மூலம் எடுப்போம். அதே வேளையில் உங்க கருப்பையை கருத்தரித்த அண்ட  செல்களை வைக்க தயார்படுத்த இன்னொரு ஊசி போடுவோம். மிக முக்கியமான விஷயம் இதோ இந்த இருபத்தி நான்கு நாட்களும் இந்த கேப்சுயூல்கள்  நீங்க கட்டாயம் எடுத்துகிரனும்.

சார், நீங்க உங்களோட விந்தணுக்களை என்னைக்கு அண்ட  செல்கள் எடுக்கிறோமோ அன்னைக்கு தந்தால் போதும். ஆனால் நீங்க இந்த இருபத்தி நான்கு நாள்கள் இந்த  கேப்சுயூல்கள் மறக்காம எடுத்துக்கோங்க. இதுக்கு எல்லாம் நீங்க தயாராக இருக்கிறேன்னு இதோ இந்த பார்ம்ல கையெழுத்து போடுங்க. உங்களுக்கு எந்தவித பிரச்சினை இல்லாமல் பாத்துக்கிறது எங்களோட பொறுப்பு, எதுவும் நீங்க சொல்லனுமா?''

''எங்களை இன்னைக்கு வரவேண்டாம்னு டாக்டர் சுபா சொன்னாங்க, ஏதோ எங்களுக்கு உருவாக்கப்போற குழந்தைக்கு ஆபத்து அப்படிங்கிறமாதிரி  பேசினாங்க, ஆனா உங்க மேல எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு டாக்டர், பார்ம்ல கையெழுத்துப் போடறோம் கொடுங்க''

''உங்க குழந்தைக்கு எந்தவித ஆபத்தும்  வராது, நீங்க கவலைப்படாதீங்க, டாக்டர் சுபா சொன்னமாதிரி எதுவும் அப்படி நடக்காது. என்னதான் இருந்தாலும் டாக்டர் சுபா ஒரு பொண்ணுதானே, அவங்களுக்கு எச்சரிக்கை உணர்வு ரொம்ப அதிகம், அதனால இருக்கும். கவலை வேண்டாம்''

பார்மில் கையொப்பம் இட்டவுடன் ராம் இருவருக்கும் கேப்சுயூல்கள் எடுத்துக் கொடுத்தான். டாக்டர் சுபா எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள். அவர்கள் வெளியே சென்றார்கள். 

''சுபா, என்ன ஒண்ணும்  சொல்லாம உட்காந்து இருக்க''

''என்னை என்ன சொல்ற ராம், உன்மேல நம்பிக்கை வைச்சவங்களுக்கு நீ பண்ணப்போற துரோகம், ஆனா அதைப் புரியாம அவங்க உன்னை நம்பி பண்றாங்க, எப்படி இன்ட்ரான்  எல்லாம் ரிமூவ் பண்ணுவ ராம்''

''சுபா, பொறுமை பொறுமை, இன்னும் 24 நாட்கள், டாக்டர் ராம் மார்த்தாண்டன் வில் பீ லெஜண்ட்''

''என்கிட்ட நீ எதுக்கு சொன்ன ராம், நீ சொல்லாமலே செய்து இருக்கலாமே''

''சுபா, நீதான் அண்ட  செல்களை கலெக்ட் பண்ணப்போற, நீயேதான் அந்த கரு எல்லாம் திரும்பவும் கருப்பையில் வைக்கப்போற அதுவும் என்னோட இந்த குழந்தை உருவாக்கும் முயற்சியில் உன்னோட பங்களிப்பு எப்பவும் இருந்தது. அதனால் உன்கிட்ட சொல்லணும்னு  தோணிச்சி, நீ ஆவலாக இருப்பனு பார்த்தா இப்படி எதிரா திரும்புவனு எதிர்பார்க்கவே இல்லை''

''ராம், இப்பவும் சொல்றேன், நீ எதுவும் செய்யாதே''

''சுபா நம்மோட ஒப்பந்தப்படி கரு வைப்போம், போதுமா?''

''சரி, எனக்கு அந்த இன்ட்ரான் எப்படி ரிமூவ் பண்றதுன்னு மட்டும் சொல்லிக்கொடு''

''அது ரொம்ப சுலபம் இல்லை சுபா, நான் அதை மட்டும் யாருக்கும் இப்ப சொல்லமாட்டேன், எதுக்கும் நீ ஆர் என் பாலிமரேஸ் பத்தி நிறையப் படிச்சிப் பாரு, உனக்குப் புரியும்'' 

''நீ எப்படி பண்ணுவ, அதை சொல்லு''

''இன்ட்ரான்  இல்லாத கரு உருவாக்கியப்பின் சொல்றேன், இப்போதைக்கு எதுவும் கேட்காதே, இந்த உலக பரிணாம வரலாற்றில் டாக்டர் ராம் மார்த்தாண்டன் மட்டுமே இனி பேசப்படுவான் சுபா, டாக்டர் சுபாவும் பேசப்படணும்னு நினைச்சா அமைதியா இரு. அடுத்த திங்கள் ஒரு தம்பதியினர் வர இருக்காங்க, பாலகுரு-திவ்யா, அவங்களுக்கும் இதேமாதிரி சொல்லிட்டு இருக்காதே''

சுபாவுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. தலைவலிப்பது போல இருந்தது. அதற்குப் பின்னர் ராமிடம் பேசிக்கொண்டிருக்கப் பிடிக்கவில்லை. நோயாளிகளைப் பார்ப்பதும் அவர்களுடன் பேசி மருந்து மாத்திரைகள் எழுதி தருவதுமாக அன்று நாள் கழிந்தது. 

மாலையில் சுபா கிளினிக் விட்டு வெளியே வந்து நின்றவுடன் மழை பெய்தது. மழையில் நனைவதா, வேண்டாமா என யோசித்தாள். மழை நின்றுவிட்டது. 

(தொடரும்) 

No comments: