Tuesday 16 February 2016

மாறா மரபு - 3

5 இவன்கண்

ஜெகன் தந்து கணினியை திறந்து பார்த்தபோது எல்லா பைல்களும் திறக்கமுடியாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். இது யாருடைய விஷமம் என அவனால் ஓரளவுக்கு யூகிக்கமுடிந்தது. நிச்சயம் டாக்டர் ராம் எவரையோ வைத்துதான் இதைச் செய்து இருக்க முடியும் என முடிவு செய்தான். நேராக தனது அலுவலகம் சென்று கணினி திறந்து பைல்கள் திறக்க முயற்சித்தபோது அதே பிரச்சினை கண்டு அவனுக்குள் எரிச்சல் கோபம் கொப்பளித்துது.

நேரடியாக தனது சூப்பர்வைசரை சென்று பார்த்தான்.

‘’நான் எனது ஊருக்கு ஒரு மாத விடுமுறையில் செல்ல வேண்டும், எனக்கு மனது சரியில்லை’’

‘’நான் திட்டினது உனக்கு கோபமா ஜெகன், என்னிடம் அனுமதி இல்லாமல் நீ என்ன என்னவோ ரீஏஜென்ட்ஸ் வாங்கி இருக்கிறாய், இதனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. எவ்வளவு பண விரயம், கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் செய்து இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. நீ தாராளமாக போய்விட்டு வா, நான் பேசி சமாளித்துக் கொள்ளவேண்டியதுதான். அதற்கு முன் எனக்கு நீ சில விசயங்களை சொல்ல வேண்டும்’’

‘’இனிமேல் அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’’

‘’அது இருக்கட்டும் அப்படி என்னதான் அந்த ரீஏஜென்ட்ஸ் வைத்து செய்தாய் என நான் தெரிந்து கொள்ள வேண்டும்’’

‘’நான் இன்ட்ரான் சம்பந்தபட்ட நமது ஆராய்ச்சிதான் செய்தேன்’’

‘’இல்லை ஜெகன், என்னிடம் நீ மறைக்க முயலாதே. நீ உபயோகப்படுத்திய சில ரீஏஜென்ட்ஸ் நமது ஆராய்ச்சிக்கு சம்பந்தமே இல்லாதது. அதுவும் அவை சற்று விலை கூடுதல் வேறு’’

‘’இன்ட்ரான் ரிமூவ் பண்ண வேண்டிதான் வாங்கினேன். வாங்கும் முன்னர் உங்கள் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது எனது தவறுதான்’’

‘’அதற்கு என்சைம் போதுமே, எதற்கு இந்த ரீஏஜென்ட்ஸ்?’’

‘’என்சைம் கிடைக்கவில்லை அதனால் இதை வாங்கினேன்’’

‘’இனிமேல் இதுபோன்று செயல்படாமல் இரு, நீ இப்போ ஊருக்கு போறது கூட எனக்கு நல்லதுதான். அப்படியே நான் சொன்னபடி திருச்சியில் அந்த வேலையை சேர்த்து முடித்துக்கொண்டு வந்துவிடு. எப்படியும் இரண்டு மாதங்கள் அங்கே ஆகும். நான் டாக்டர் புருசோத்தமனிடம் பேசிவிடுகிறேன். உன்னால் அடுத்த மாதம் அங்கு போக இயலும்தானே’’

‘’பிரச்சினை இல்லை சார் ’’

‘’நீ ஒரு நம்பத்தகுந்தவன் என்ற முறையில் தான் இம்முறை மன்னித்து அனுப்புகிறேன், கவனமாக இரு’’

ஜெகன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தான். வீடு வந்து சேர்ந்தபோது அப்பாடா என்று இருந்தது. தன்னிடம் இருந்த மெமரிஸ்டிக்  பத்திரமாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டான். தங்கராஜ் ஜெகனைப் பார்க்க வந்து இருந்தான்.

‘’ஜெகன் எங்க போயிருந்த, ஆளையேக் காணோம் உன்னோட மொபைல் கூட இன்னைக்கு காலையில் இருந்து வேலை செய்யலையே’’

‘’சென்னை வரைக்கும் போயிருந்தேன், வரப்ப ஏர்போர்டில மொபைலை தொலைச்சிட்டேன், பக்கத்தில வைச்சிருந்தேன், எவனோ எடுத்துட்டுப் போயிட்டான் ’’

‘’இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்ப. என்ன விசயமாகப் போன’’

‘’டாக்டர் ராம் அப்படின்னு ஒருத்தரைப் பார்க்க போயிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. முன்னரே என் சார் சொன்னமாதிரி நான் இன்னைக்கே பஞ்சாப் போக வேண்டி இருக்கு’’

‘’என்ன விசயம்’’

‘’லேப் சம்பந்தமா வேலை ஒரு மூணு மாசத்திற்கு இருக்கு’’

‘’அப்போ டில்லி?’’

‘’மூணு மாசம் பிறகு வருவேன், இந்த வேலையைத்தான் அங்க செய்ய வேண்டி இருக்கு’’

‘’சரி நான் கிளம்பறேன்’’

‘’அதுக்குள்ளே கிளம்பிட்டே’’

‘’உன்னோட ரூம் திறந்து இருந்தது ஒருவேளை நீ வந்து இருப்பியோனு பார்க்க வந்தேன். வந்தப்ப நீ காணலை. நீ வேலைக்குப் போனியா’’

‘’போனேன் உடனே சார் என்னை கூப்பிட்டு பஞ்சாப் போகச் சொல்லிட்டார். அதான் அப்படியே திரும்பி வந்துட்டேன். ஆமா என்னோட ரூம் மேட் நீ பாத்தியா’’

‘’நேத்து இருந்தானே, அவன்தான் ஆறு மணிக்கு எல்லாம் வேலைக்குப் போறவன் ஆச்சே’’

‘’அவன் வந்தா நான் பஞ்சாப் போயிருக்கிறதா சொல்லு, புது மொபைல் வாங்கித்தான் அவனுக்கு தகவல் சொல்லணும். உனக்கும் நம்பர் அனுப்பறேன்’’

‘’பத்திரமாப் போயிட்டு வா, டிக்கட் லேப்டாப் மூலமா புக் பண்ணப் போறியா. உன்கிட்ட மெமரி ஸ்டிக் இருக்கா’’

‘’அது என்னோட சார் கிட்ட கொடுத்துட்டேன். அதில அவரோட வேலை சம்பந்தமான விசயங்கள் மட்டுமே இருந்தது. எதுக்கு கேட்ட. டிக்கட் இங்க புக் பண்ண நேரமில்லை, லேப்டாப் இங்கேயேதான் விட்டுட்டுப் போகப் போறேன். எதுக்கு தேவை இல்லாத சுமை. அலமாரில பூட்டி வைச்சிட்டேன் சாவி என்கிட்டதான் இருக்கு’’

‘’என்னோட பைல் மாத்தணும் வேலை இடத்தில வைச்சிட்டு வந்துட்டேன் அதான். சரி, நீ கவனமாப் போயிட்டு வா’’

தங்கராஜ் டாக்டர் ராமிற்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். அவசரத்தில் வந்து இருந்ததால் ஜெகன் எந்த சந்தேகமும் இல்லாதமாதிரி இருந்ததாக லேப்டாப், அலுவலக கணினி குறித்து எதுவும் பேசவில்லை என சொன்னான். டாக்டர் ராம் சந்தோசம் கொண்டார். அவனது புதிய எண் தந்ததும் தனக்குத் தரச் சொன்னவர்  மூணு மாசம் எனக்குப் போதுமானது என டாக்டர் ராம் தங்கராஜிற்கு நன்றி சொல்லிக்கொண்டார்.

ஜெகனுக்கு தங்கராஜ் மீது கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். நிச்சயம் இவனது வேலையாகத்தான் இருக்கும் என உறுதி செய்து கொண்டான். டாக்டர் ராம் தன்னை சந்தித்தபோது இவனை சந்தித்து இருக்கக்கூடும் என எண்ணம் கொண்டான். அப்போதே தேவையான பொருட்கள் எடுத்துக்கொண்டு டில்லி விமான நிலையம் விரைந்தான். சென்னைக்கு செல்ல அவனுக்கு ஒரு பயணச்சீட்டு கிடைத்தது. மொபைல் தொலைந்து போனதை தங்கராஜ் நம்பி இருக்க நிறைய சாத்தியங்கள் இருந்தன என எண்ணியவன் தனது தொலையாத மொபைலுக்கு அப்போதே வேறு ஒரு சிம்கார்டு வாங்கிக்கொண்டான். மெமரி ஸ்டிக் தப்பித்த விஷயம் தங்கராஜிற்கு தெரியப்போவது இல்லை என்பதே நிம்மதியாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்படியே திருச்சி சென்று விட வேண்டும் என திட்டம் போட்டான். சிவாவிடம் பேசினால் நல்லது என தோணியது.

‘’சிவா, நான் ஜெகன் பேசறேன். நீ நாளைக்கு ஸ்ரீரங்கம் வர முடியுமா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இன்னைக்கு நைட் கிளம்பினா நாளைக்கு வந்துருவதானே’’

‘’என்ன விஷயம் ஜெகன்’’

‘’இன்ட்ரான் பத்தியது. உன்கிட்ட நான் பேசி ஆகனும். தயவு செய்து வந்துரு. இந்த நம்பருக்கு போன் பண்ணு. யாருக்கும் நீ சொல்லாத’’

‘’ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் பக்கத்தில் வந்து நிற்கிறேன். அங்க வந்துரு’’

சிவராம் ஜெகனின் தொலைபேசி அழைப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் ஏதும் பிரச்சினை இருக்கும் என யூகித்தது சரியாகிவிட்டது. சுபா வேறு கேப்ஸ்யூல் கிடைக்காத நிலையைச் சொல்லி இருந்தாள். சுபாவுக்கு தகவல் சொன்னால் டாக்டர் ராம் சந்தேகம் கொள்ள சாத்தியம் இருப்பதாக எண்ணிக்கொண்டான்.

ஜெகன் சென்னைக்கு  மாலையில் வந்து இறங்கியதும் திருச்சிக்கு பேருந்தில் அங்கிருந்தே பயணம் செய்தான். ஜெகனுக்கு தான் செய்து கொண்டிருப்பது சரியா என புரியவில்லை. தான் ஸ்ரீரங்கம் வந்து இருப்பதுவோ சென்னையில் வேலை செய்ய இருப்பதுவோ டாக்டர் ராமிற்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது யோசனையாக இருந்தது. திருச்சி வந்தடைந்து அங்கிருந்து ஸ்ரீரங்கம் வீட்டிற்கு சென்றபோது இரவு பன்னிரண்டு மணி ஆகி இருந்தது.

மக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொண்டு இருந்தனர். ஸ்ரீரங்கத்து கோபுரம் அந்த இரவிலும் பளிச்சென இருந்தது. ஜெகனை அவனது வீட்டில் எவருமே எதிர்பார்க்கவில்லை. காவிரி ஆற்றில் ஓடும் சிறிது  நீர் கொண்டு வீசிய காற்று சில்லென்று வீசியது. தன்னை வீட்டில் எப்படி எதிர்கொள்வார்கள் என ஜெகன் அப்போதும் யோசித்து இருக்கவில்லை.

அப்பா பூரணசந்திரன், அம்மா பூரணி. இருவருமே ஆசிரியர் வேலை பார்த்து வருபவர்கள். ஜெகனுக்கு ஒரு தங்கை சத்யபாமா. மதுரை மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறாள். இந்த ஸ்ரீரங்கம் தான் அவர்களது பூர்வீகம் எல்லாம். இரண்டு பிள்ளைகள் பிறந்த போதும் தனியாக அவர்கள் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்து ஸ்ரீரங்கநாதர் அவர்களுக்கு துணை. மாலை, சனி ஞாயிறுகளில் கோவில் வாசம் அவர்களுக்கான வேண்டுதல், விரும்புதல்.

வீட்டின் அழைப்பு மணி அழுத்த வீட்டில் விளக்கு எரிய சில நிமிடங்கள் மேல் ஆனது. பூரணசந்திரன் தூக்க கலக்கத்துடன் வந்து கதவின் பக்கம் வந்து நிற்க ஜெகனைக் கண்டதும் ஆச்சரியம் ஏற்பட்டது. வேகமாக கதவைத் திறந்தார். ஜெகன் உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

‘’வாப்பா, என்ன ஒரு தகவலும் சொல்லாம வந்து நிக்கிற’’

‘’ஒரு முக்கியமான லேப் விசயமாக வந்தேன். இன்னும் இங்கேதான் ஒரு மூணு மாசம் இருக்கப் போறேன்ப்பா’’

அதற்குள் ஜெகனின் அம்மாவும் வந்து நின்றார்.

‘’எதுவும் சாப்பிட்டியாப்பா?’’

‘’ம்ம் சாப்பிட்டேன்மா, காலையில ஒரு ஆறு மணிக்கு எழுப்பமுடியுமா. இப்ப தூங்குறேன்’’

‘’காலையில் பேசிக்கிறலாம், தூங்குப்பா’’ என பூரணசந்திரன் சொன்னார்.

அன்று இரவு பத்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பேருந்து நிலையத்தில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்துவிட்டு பதினோரு மணிக்கு ஸ்ரீரங்கம் நோக்கி சிவராம் பயணம் செய்யத் தொடங்கினான்.

பேருந்தில் எங்கேயும் எப்போதும் படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த படத்தினை பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டான். சுபா மனதில் வந்து போய்க்கொண்டு இருந்தாள்.

‘சிவா, டாக்டர் ராம் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. குழந்தைகளோட வாழ்க்கையில் விளையாடுறார்’ என்ற வரிகள் அவனது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருளை பொருட்படுத்தாது பேருந்து வேகமாக சென்று கொண்டு இருந்தது. எங்கேயும் எப்போதும் படம் போல ஆகிவிட்டால் எனும் எண்ணம் அவ்வப்போது அவனுக்குள் வந்து போனது. சரியாக ஐந்து மணிக்கு எல்லாம் திருச்சி வந்து பாதுகாப்பாக இறங்கியாகிவிட்டதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஜெகன் ஐந்து மணிக்கு தானாகவே எழுந்து இருந்தான். ஆறுமணிக்கு எழுப்ப சொல்லிட்டு ஐந்து மணிக்கே எழுந்திட்டியா என அம்மா சொன்னார். திருச்சி வந்துவிட்டதாக சிவராம் தகவல் சொல்லி இருந்தான். ஜெகன் அவசரம் அவசரமாக கிளம்பினான். தனது நண்பர் ஒருவர் வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நேராக அம்மா மண்டபத்தில் சென்று ஜெகனை அழைத்துக்கொண்டு தனது வீடு வந்தான். சிவராமினை தயாராகச் சொன்னான் ஜெகன். அதற்குள் காலை உணவு எல்லாம் தயாராகி இருந்தது.

‘’என்னப்பா முன்னமே சொல்லி இருந்தா நாங்க லீவு போட்டு இருப்போமே’’

‘’அம்மா நீங்க வேலைக்குப் போங்க, இங்கதானே இருக்கப்போறேன், மதியம் நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன்’’

‘’சாதம் வடிச்சி வைச்சிருக்கேன்ப்பா’’

‘’சரிம்மா’’

அதிகாலை எழுந்து எல்லாம் தயார் செய்து வேலைக்கு செல்வது இன்று நேற்றல்ல பல வருட பழக்கம். அனைவரும் காலை உணவு உண்டார்கள். ஜெகன் சிவராமினை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

‘’சிவா நான் ஒரு பிரச்சினையில் மாட்டி இருக்கேன். டாக்டர் ராம் என்னை மிரட்டுறார்’’

‘’எந்த டாக்டர் ராம்’’

‘’பாக்யா வருணன் கிளினிக்ல வேலை செய்றார். டெஸ்ட் டியூப் பேபி பண்றவர்’’

‘’முந்தாநாள் பார்க்க வந்தியே அவரா’’

‘’ஆமா, அவரை நான் டில்லியில் வைச்சி சந்திச்சேன். என்னோட ஆராய்ச்சி பத்தி பேசிட்டு இருந்தோம். அப்போதான் இன்ட்ரான் ரிமூவல் ப்ரம் ஸ்பெர்ம் அண்ட் எக் பத்தி பேசினார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. என்னைப்பத்தி சில ஆர்டிகல்ஸ்ல படிச்சி இருக்கேன்னு சொன்னார். என்னை மெனக்கெட்டுப் பார்க்க வந்தது போல இருந்துச்சி. ஆனா ஒரு மருத்துவ விசயமா வந்தேன்னு சொல்லிட்டு இருந்தார். நானும் தாராளாம பண்ணிரலாம்னு சொல்லிட்டேன். இட் இஸ் வெரி காம்ப்ளிகேட்டட் ஐடியா. ஆனா ரொம்ப சாதாரணமா சொன்னார்.  அண்ட செல், விந்து செல் இவற்றில் இருந்து இன்ட்ரான் நீக்கிட அவை இன்ட்ரான் அற்ற செல்களாக உருவாகும். பின்னர்  அவைகளை ஒன்று சேர வைத்தால் இன்ட்ரான் இல்லாத குழந்தை உருவாகும் அந்த குழந்தை எப்படி நடந்துகொள்கிறது என அறியலாம். இது என்னுடைய சிந்தனை. நீ ஒத்துழைப்பு தந்தால் நாம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அதை நீ எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. இது எனது கனவு. என்னால் தனியாக செய்ய இயலாது நீ இந்தவேலையில் இருப்பதால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உன்னை சந்தித்து ஒப்பந்தம் போட நினைக்கிறேன். என்ன சொல்கிறாய்? (Remove all introns from those gametes, then you will have intron free gametes. Make them fuse together, you will have a child without introns then you see how a child behaves. This is my idea, if you agree to help me we can sign an agreement and you should not breach this at any cost. This is my dream. I could not do this on my own, when I saw you are working on this field I took this opportunity to see you and make an agreement. What do you say?) நானும் யோசிக்காமல் சரி என சொல்லிட்டேன். ஒப்பந்தம்தனில் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்’’

‘’சரி ஆனா எப்படி இன்ட்ரான் நீக்குறது என்ன ரீஏஜென்ட்ஸ் (reagents) உபயோகம்  பண்றதுன்னு அவர் எழுதித் தந்தாரா?’’

‘’இல்லை. அது எல்லாமே என்னோட ஆராய்ச்சி. நான் திட்டமிட்டு பண்ணினது. நான் உருவாக்கி இருக்கிற  அந்த மூலக்கூறு நேரடியா ஸ்பெர்ம், எக் செல்களை அட்டாக் பண்ணும். ஐ மேட் திஸ் கான்செப்ட் டு அட்டாக் 23 குரோமொசொம்ஸ் செல்கள். ( I made this concept to attack those 23 choromosomes cells)’’

‘’ரிப்ளிகேஷன் (replication) ப்ராசெஸ் ட்ரான்ஸ்லேசன் (translation) ப்ராசெஸ் பத்தி யோசிச்சியா’’

‘’எஸ், எல்லாம் யோசிச்சி அட்டெம்ப்ட் பண்ணி இருக்கேன். இட் வில் ஒர்க் அவுட்’’

‘’அப்ப என்னதான் பிரச்சினை’’

‘’அக்ரீமென்ட். என்னால இதை உருவாக்கி வேற ஒருவருக்கு தர முடியாது. டில்லியில் ஒரு டாக்டர்கிட்ட பேசினேன். அவருக்கு ஆர்வம் வந்தது. ஆனா கேப்ஸ்யூல் கொண்டு வந்து தா நான் பரிசோதிச்சிட்டு உனக்கு இதைப் பண்ண மேற்கொண்டு பணம் தரேன்னு சொன்னார். அதை வாங்கத்தான் வந்தேன். ஆனா டாக்டர் ராம் தர முடியாது, இது என்னோட கனவு எல்லாமே நான் பண்ணினது நீ இல்லைனு சொல்லிட்டார்.’’

‘’அக்ரீமென்ட் ரீட் பண்ணாமலா கையெழுத்துப் போட்ட’’

‘’எனக்கு அப்ப அந்த யோசனை இல்லை. நிறைய பணம் தரேன்னு சொன்னார்’’

 ‘’இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லு’’

‘’லுக் நான் எல்லா விபரங்களும் தரேன். நீ அதை இங்கே உருவாக்கு. எனக்கு நீ அனுப்பி வை. நான் அந்த டில்லி டாக்டர்கிட்ட கொடுத்து அடுத்த ப்ரோஜெக்ட்க்கு பணம் வாங்கிருவேன். நாம சேர்ந்து நிறைய செய்யலாம். நீ பண்ண ஆரம்பிச்சதும் பேடன்ட் உன்னோட பேருல அனுப்பிருவோம். டாக்டர் ராம் எதுவும் பண்ண முடியாது. அவர் என்ன பண்ணினார் தெரியுமா? என்னோட லேப்டாப்,வொர்க்  சிஸ்டம் இருந்த என்னோட டாட்டா எல்லாம் தங்கராஜ் அப்படின்னு ஒருத்தன் மூலமா இன்பெக்ட் பண்ண வைச்சிட்டார். அவன் ஒரு கம்ப்யூட்டர் வித்தகன். ஆனா நான் எல்லா விபரத்தையும் இந்த மெமரி ஸ்டிக் ல வைச்சி இருக்கேன். என்ன சொல்ற?’’

‘’எஸ். நான் உனக்கு உதவி பண்றேன், இது நமக்குள்ள இருக்கட்டும்’’

‘’ஐ  ஆம் சோ கேப்பி சிவா. பை த வே டோன்ட் சே டூ தட் கேர்ள் டூ. ஒரு நிமிஷம் இரு. உனக்கு எப்படி என்ன மூலக்கூறு எப்படி குரோமோசோம் எல்லாம் அட்டாக் பண்ணி இன்ட்ரான் ரிமூவ் பண்றதை காமிக்கிறேன். இட் இஸ் ஜஸ்ட் மிராக்கிள் ஹவ் திஸ் ஹுயூமன் ஸ்பீஸிஸ் டெவெலப்ட் யூ நோ’’

‘’ம்ம்’’

‘’ஆமா எப்படி பணத்திற்கு, ரீஏஜென்ட்ஸ் மேனேஜ் பண்ணுவ’’

‘’அதை நான் பாத்துக்கிறேன், ஐ வில் மில்க் சம் மணி பார் திஸ்’’

‘’அப்படின்னா நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டு வைச்சிக்கிருவோம்’’

‘’இல்லை ஜெகன் அது சரிப்பட்டு வராது. நானும் நீயும் இதில் சம்பந்தம் அப்படின்னு தெரிஞ்சா ராம் நம்ம மேல கேஸ் போட வாய்ப்பு இருக்கு. ஆமா ராம் கிட்ட இந்த வொர்க் காப்பி எதுவும் இருக்கா. எதுக்கு டெலிட் பண்ண சொல்லணும்’’

‘’எதுவும் இல்லை’’

‘’இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு ஜெகன். எப்படியும் இது சம்பந்தமான பைல் எல்லாம் தங்கராஜ் சேவ் பண்ணிட்டுதான் இன்பெக்ட்  பண்ணி இருக்க முடியும். நாளைக்கு இதே விஷயத்தை செய்யணும்னா எப்படி ராம் உடனே செய்ய முடியும். இது என்னோட முயற்சி அப்படின்னு எப்படி உரிமை கொண்டாட முடியும்’’

‘’இல்லை. குழந்தை உருவானா போதும். சக்செஸ் ஆயிருச்சினா என்கிட்டே பணம் கொடுத்தே பண்ண முடியும். வேற யாருகிட்டயும் போக வாய்ப்பு இல்லை. அக்ரீமென்ட் வில் வொர்க் பார் கிம். இப்போ என்னை மிரட்டி வைச்சி இருக்கார். நான் அதை யாருக்கும் தரக்கூடாது அதுதான் அவரோட திட்டம். இப்போ நான் சொன்ன ஐடியா வைச்சி நீ கேமிட்ஸ்ல இன்ட்ரான் ரிமூவ் பண்ண முடியாதா? கொஞ்சம் யோசிச்சா போதும். யூ கேன் டூ இட்’’

‘’இல்லை ஜெகன். என்னால யோசிக்க முடியலை’’

‘’சரி இதோ காட்டுறேன்’’


சிவராம் பேரார்வத்தில் அமர்ந்து இருந்தான். அப்போது சுபாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

(தொடரும்)  

No comments: