Wednesday 3 February 2016

தட்சாயினியும் கல்யாண உறவும் - 2

''என்ன தம்பி சௌக்கியமா இன்னைக்கு காய்கறி பக்கம் காணோமே'' அப்பா அருணைத்தான் விசாரித்தார் 

''வாழை இலை போட வந்தேன். நாளனைக்குத்தான் பறிக்கனும்யா''

''தம்பியைத் தெரியுதாம்மா உன்னோட படிச்ச தம்பிதான் அப்பவே எனக்கு நல்ல பழக்கம்''

''ம்ம் தெரியும்ப்பா''

அருண் அப்பாவோடு நல்ல பழக்கம் என்பது இதுவரை எனக்குத் தெரியாது. எனது காதலுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருப்பது இதுவும் ஒரு காரணமோ என நான்அந்த கணத்தில் எண்ணினேன். அருண் என்னைப் பார்க்க மறுத்தான். பொங்கல் நன்றாகத்தான் இருந்தது. சாப்பிடத்தான் பிடிக்கவில்லை. 

ரொம்ப நல்ல தம்பி என அருண் குறித்து அப்பா சொன்னார். அருணின் அப்பா அம்மா, விவசாயம், அவனது தங்கை என பேசினார். இவ்வளவு எல்லாம் என்னோடு அப்பா பேசியது இல்லை.

அம்மாவிடம் விபரங்கள் சொன்னேன். உங்கப்பாவுக்கு வேறு வேலை இல்லை சும்மா ஏதாச்சும் பேசுவார் என்றார் அம்மா. இது எனக்குப் புரியவில்லை. அருணின் ஊருக்குச் செல்லலாம் என தைரியம் வளர்த்துக்கொண்டேன். அடுத்தநாள் அருணின் ஊருக்குள் சென்றேன் மனம் படபடத்தது. யாரைப் பார்க்கனும் எனக் கேட்டார். ஒருவர். என்னோட தோழி ஒருத்தி என பொய் சொன்னேன் தப்பு செய்வதாக நாம் நினைக்கும்போது பொய் சொல்ல ஆரம்பிக்கிறோம் அதான்மா எந்த புள்ளை அது என்றார்.

என்னோட படிச்ச பொண்ணு என சொன்னபோது எனது கண்ணில் அருண் தென்பட்டான் ஒரு கைதிக்கு கிடைத்த விடுதலை போல உணர்ந்தேன் அதோ அங்கே இருக்காங்க என நான்அவரிடம் சொல்லிவிட்டு அருணை நோக்கி நடந்தேன். வீதியில் வேறு எவரும் இல்லை எனினும் பலர் என்னைப் பார்ப்பது போல ஒரு பிரமை உண்டாகியது. தட்சா என அழைத்த அருண் குரல் எனக்கு தந்த மகிழ்ச்சி நிறைய. நல்லா இருக்கியா என்ன இந்தப்பக்கம் என்றான். உன்னைப் பார்க்கவே வந்தேன் என்றதும் சிரித்தான்.

வா வீட்டுக்குப் போகலாம் என அழைத்துச் சென்றான். நான் மதிய வேளையில் சென்று இருந்தேன். வெயில் ஒன்றும் அவ்வளவாக இல்லை. ஊர்ல யாரையும் காணல என சொன்னபோது எல்லாம் வெளியூர் வேலை என்றான். 

அருண் என் காதலுக்கு நீ பதில் சொல்லலையே என்றேன் புன்னகைத்தவன் வீடு வந்துருச்சு என்றான். எங்க வீடு போன்று இருந்தது. 

யாருப்பா இது என்றது அருணின் அம்மாவாக இருக்கும் என நினைத்தேன். மரக்குளம் முத்தையா ஐயா பொண்ணு. முத்தையா மகளா வாம்மா என்று சொன்னபோது ஏதோ நெருங்கிய உறவு போல உணர்ந்தேன் உட்கார வைக்கப்பட்டதும் மோர் கொண்டு வந்து தந்தார். என்ன பண்றம்மா என எல்லாம் விசாரித்தார். உங்க அப்பா வியாபார சம்பந்தமா இங்க வருவாரு போவாரு. அப்பத்தான் இவனோட அப்பாவுக்கு பழக்கம் என்றார். எங்க மூலமாத்தான் எதுவும் இந்த ஊரில செய்வார் என்றதும் சரியெனக் கேட்டுக்கொண்டேன். என்ன விசயமா வந்தம்மா என்றதும் அருணின் மீதான எனது காதலை சொல்ல நினைத்தேன். ஊர் சுத்திப்பார்க்க வந்ததாக பொய் சொன்னேன். இங்க என்ன கிடக்கு, ஊரே காலியாகிரும்போல. இவன் ஒரு வேலைக்குப் போனா எல்லாம் வித்துட்டு கூடப் போயிரலாம்னு இருக்கோம் என்றதும் எனக்கு திக்கென்றது. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன் மொபைல் எண் கூட அருண் என்னிடம் தரவில்லை, நானாகத்தான் கேட்டேன்.

என் அம்மாவிடம் எனக்குத் திருமணம் முடிந்த பின்னர் ஊரை விட்டுச் செல்வீர்களாக எனக்கேட்டபோது இதே மண்ணுலதான் எங்க கட்டை வேகும் என்றார்கள். அருண் வீட்டிற்கு சென்று வந்ததை மறைத்து வைத்தேன் விற்பனை இடத்துக்கு அப்பாவுடன் சில சனிக்கிழமைகள் சென்று வர ஆரம்பித்தேன் எதுக்கும்மா சிரமம் என்றதால் செல்வதை நிறுத்திவிட்டேன். 

வேலை சம்பந்தமாக ஒரு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. அங்குதான் என் சகோதரனை சந்தித்தேன். என்னைப் பார்த்தவன் ஏதும் சொல்லாமல் போனான். அண்ணா என அழைத்து அவன் முன் நின்றதும் யார் நீ என்றான் நான் தட்சாயினி உன்னோட கூடப்பிறந்த தங்கை என்றேன் அது உறவு முறிச்சி வருசமாச்சி என்றான். அம்மாவை அண்ணி அடிச்சதால என்னால பொறுத்துக்க முடியலை என்றதும் போயிரு என விறுவிறுவென நடந்து போய்விட்டான்.

தாயை விட மனைவி ஆண்களுக்கு மிகவும் முக்கியமாகப்போய்விடுகிறது. அன்று நடந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் உடல் உள்ளம் கொந்தளிக்கிறது. நான் செய்தது சரிதான் என இதுவரை எண்ணி இருக்கிறேன். அன்பில்லாத உறவு அவசியமற்றது. போலித்தனமான வாழ்வில் என்ன இருக்கப்போகிறது. கிளம்பி வரும் போது எதிரே வந்தான். நான் அவனை காணாத மாதிரி கடந்தேன். தட்சா நில்லு. நின்றேன். என்னைப். பார்த்ததை அப்பா அம்மாகிட்ட சொல்லாத. அம்மா அப்பா என்றில்லாமல் அப்பா அம்மாவாம்.

முகத்தைப் பார்க்காமல் தலையாட்டிவிட்டு நடந்தேன். எத்தனை பாசமாக இருந்தான். தட்சா உனக்குத்தான் எல்லாம் முதலில் என அழ வைக்காமல் இருந்த அந்த அண்ணனா இவன். திரும்பிப் பார்த்தேன் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தான். அப்போதுதான் ஈரம் என் கண்களை நனைத்தது. வேகமாக நடந்து வெளியேறினேன். ந்த உலகம் எனக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. புரியவும் புரியாது. அன்று அம்மாவிடம் அண்ணன் வந்தா ஏத்துப்பியா என்றேன். நான் எங்க அவனை ஒதுக்கி வைச்சேன். அவன்தான் நம்மளை ஒதுக்கி வைச்சி பாசத்தில் விளையாடறான், நீ அன்னைக்கு பொறுமையா இருந்து இருக்கனும்மா ஆனா நீ பண்ணினது சரிதான் போறான் விடு. எங்கேயாச்சிம் நல்லா இருக்கட்டும். எங்களுக்கு கொள்ளி போட உன் மகன் வருவான் என்றதும் கல்யாணம் பண்ண வேண்டியதின் அவசியம் சற்று புரிந்தது.

வேலை இடத்தில் நன்மதிப்பை பெற ஆரம்பித்து இருந்தேன். இந்த நேரத்தை எவராலும் பிடித்து வைக்க முடிவதில்லை. அருண் வீட்டிற்கு சென்றது அண்ணனைப் பார்த்தது எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. அப்பாதான் அருணுக்கு வேலை கிடைத்த விசயத்தை என்னிடம் சொன்னார். அப்பாவுக்கு அருணை மிகவும் பிடித்து இருக்க வேண்டும். அவர்கள் ஊரைவிட்டுப் போயிருப்பார்களோ என நினைத்தேன் அருணுக்கு எந்த ஊரில் வேலை என அப்பாவிடமும் கேட்கவில்லை.

இந்த உலகில் ஒன்று மட்டும் நிச்சயம். இதுதான் சரி என எதையும் எவராலும் நியாயப்படுத்திப் பேசிவிட முடியும் வலி என்பது நேரடியாக பாதிக்கப்பட்டவர்க்குத்தான் எனக்கு கதைகள் படிக்கப் பிடிக்கும். ஓவியம் வரைவது, பாடுவது, ஆடுவது என ஓரளவுக்குத் தெரியும் கற்றுக்கொள்ள ஊக்கம் தந்தது பக்கத்து ஊரில் பாடல் சொல்லி தந்த ஆசிரியை கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்கள் பிறரிடம் எதுக்கு கல்யாணம் என விட்டேத்தியாகப் பேசுவார்கள் என்னிடம் அப்படி சொன்னது இல்லை. ஒருவேளை நானும் அவரைப்போல கல்யாணம் பண்ணாமல் வாழ்வேனோ எனும் அச்சம் உள்ளூர அருண் தந்தது உண்டு. அருண் தான் அம்மையப்பனைத் தாண்டிய உலகம் என எண்ணி இருக்கிறேன் பாடல் ஆசிரியையிடம் கேட்கலாம் என நினைத்தேன் என்ன வாழ்வு இது அன்று மதியம் அவர்கள் இறந்து போனதாக தகவல் ஊருக்குள் வந்தது.

அதிர்ச்சியும் பயமும் ஒட்டிக்கொண்டது. அவருக்கு வயது 52 தான். அம்மா அப்பா நான் அங்கு இரவு சென்றோம். என்னால் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. உறவுகள் என அவர் சொல்லித்தந்த பிள்ளைகள் குடும்பம் தான் வந்து இருந்தனர். மூச்சடைத்து இருந்ததாக சொன்னார்கள். எவரோடும் அன்போடு இருக்க பழகிட வேண்டும் என அவர் சொன்னதுதான். ஊர்ப்பெரியவர் ஆசிரியை எழுதித்தந்த விபரங்கள் வாசித்தார் தனது சொத்து பணம் வீடு இல்லாத மக்களுக்கு சேரட்டும் என அவர் வாசித்தபோது எனக்கு அழுகை அதிகமானது. உறவுகளை நேசியுங்கள் இது தவிர வேறு எதுவும் இல்லை உலகில் என்றே முடித்து இருந்தார்கள் எனக்கு அப்படி ல்யாணம் எதற்கு எனப் பேசிய ஆசிரியையா என ஆச்சரியம். ஒருவேளை கல்யாணம் உறவுகளை சிதைக்கும் என நினைத்தாரோ. நாட்கள் கழிந்தது அவரது மரணம் மனதில் நிழலாடுகிறது.

வெள்ளி அன்று அண்ணனின் நிறுவனம் சென்றேன் அண்ணா நான் அண்ணியைப் பார்க்க வேண்டும் என்றேன் தட்சா எதுவும் வேணாம் போ என விரட்டினான். அண்ணனின் வீட்டு முகவரி ஒருவரிடம் வாங்கிக்கொண்டு அங்கு சென்றேன். கதவைத் திறந்த அண்ணியிடம் என்னை மன்னிச்சிருங்க அண்ணி என்றேன் வா தட்சா என உள்ளே அழைத்தார். எனது தயக்கம் எப்படியானது என நான் சொல்ல இயலாது. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றபோதும் மன்னிப்பு கேட்பது என்னஒரு செயல். உள்ளே சென்று அமர்ந்தேன். தண்ணீர் கொண்டு வந்தார். குடித்தேன். அண்ணி குழந்தை எங்கே என்றேன். இன்னும் பாக்கியம் இல்லை தட்சா என்றபோது அவருக்குள் சோகம் இருந்தது அத்தையை நான் அவமதிச்சி இருக்கக்கூடாது அந்த பாவம்தானோ என்னவோ நீ எப்படி இருக்க என் அம்மா கூட நீ பண்ணினது சரினு சொன்னாங்க அண்ணி, பெத்த அம்மா அதுவும் எப்படி எல்லாம் வளர்த்தாங்க என சொன்னபோது எனக்கு கண்ணீர் எட்டிப்பார்த்தது வீட்டுக்கு வாங்க அண்ணி என அழைத்தேன். உன் அண்ணன் நீ வந்தது பார்த்தது எல்லாம் சொன்னார். அன்னைக்கு நிறைய அழுதார். மனசில பூட்டி வைச்சி இருந்துருக்கார். வரோம் என அண்ணி சொன்னபோது சந்தோசப்பட்டேன் எதையும் மனசில வைச்சிக்க வேணாம் என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

இந்த பிரபஞ்சம் அழகிய மனிதர்களால் மட்டுமே என்றும் அலங்கரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் மட்டும் எப்படி இருக்கும். அண்ணியின் கோபம் இரண்டு விசயங்களால் மாறி இருக்கிறது ஒன்று பிள்ளைப்பேறு மற்றொன்று அண்ணனுடைய என் மீதான பாசம் அண்ணி அம்மாவை அடித்த போது அம்மா என்னை மன்னிச்சிரு தாயி என்றுதான் சொன்னார் நான் தான் அண்ணியை அறைக்குள் அழைத்துச் சென்று என் ஆதங்கம் தீரும்வரை அடித்து துவைத்தேன். உலகில் அவமானங்களோடு வாழப் பழகாதீர்கள் அன்புக்காக விட்டுத்தாருங்கள் தவறில்லை. என் அம்மா பொறுமையின் சிகரம். பொறுமைதான் அன்பின் வலிமை. அன்பு நிறைந்த மனிதர்கள் உலகில் காயப்படுத்தப்படுகிறார்கள். அன்பை அவமதிக்கும் போது நிராகரிக்கும் போது உள்ளூர மனம் குமுறும். அருண் விசயத்தில் நான் வமதிக்கப்பட்டதாக நினைக்கவில்லை. அனுமதிக்காக காத்திருந்தேன் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. வாரம் சில ஆகியும் அண்ணன் அண்ணி வரவில்லை.

அம்மாவிடம் சொன்னபோது விரிசல் விழுந்தது விழுந்ததுதான் போல என்றார் அண்ணனைப் பார்க்க வரமறுத்தார் அருணை ஒருமுறை சந்தித்தேன் அண்ணி விசயத்தை சொன்னேன் அவன் தட்சா பெருமையா இருக்கு என்றான் பெரியவர்களை மதிக்காதவங்க இருந்து என்ன பிரயோசனம் என்னோட காதலுக்கு பதில் இல்லையா என்றேன் என்னோட தங்கைக்கு கல்யாணம் இருக்கு இன்னும் ஆறு மாசம் தான் அதற்கு பிறகு நம்ம கல்யாணம் பத்தி பேசலாம் என்றான் நான் காதல் பற்றி சொன்னேன் அவன் கல்யாணம் பற்றி சொன்னான் காதல் பண்ணினால் கல்யாணத்தில் முடியனும்னு நினைக்கிறாங்க கல்யாணம் பண்ணினப்பறம் காதலை மறந்துருராங்க என்றான் என்ன சொல்ற என்றேன்.

காதல் பண்றேனு சொல்லிட்டு வேற பெண்ணை கல்யாணம் பண்றது தப்புதானே என்றான் ஆமா அருண். கல்யாணம் பண்ணிட்டு பிரியறது தப்புதானே என்றான். ம்ம்.கல்யாணம் பண்ண முன்னால் யோசிக்கலாம் கல்யாணம் பண்ணிட்டு யோசிக்கக்கூடாது என்றவனை வியப்புடன் பார்த்தேன் இப்படி அவன் பேசி கேட்டது இல்லை காதல் அதிகமானது ஆசை வார்த்தைகள் பேசி காதல் என சொல்லி கொச்சைப்படுத்தும் வகையில் அருண் இல்லை மகிழ்ச்சியாக இருந்தது இந்த உலகம் இப்படியானது இல்லை.

பெண்ணை ஒரு உலகம் எப்படி நடத்தும் என நான் அறியாதது இல்லை கேட்டால் இயற்கை என பேசுபவர்களை கண்டது உண்டு மதிப்பு கௌரவம் இல்லாத ஒன்று எதற்கு
மோசமான விசயம் பிடித்துவிட்டால் மனம் அதை கேவலமாக எண்ணுவது இல்லை அருண் நான் காத்து இருக்கவா என்றேன் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன் தட்சா என்றபோது இந்த பிரபஞ்சமே எனக்குத்தான் என்று இருந்தது அருண் பற்றி அப்பா பெருமையாகப் பேச ஆரம்பித்தார் விவசாயம்தனை விடமா வேலைக்குப் போற பையன் என்றபோது எனக்கு சந்தோசம் அருண் அவனது அப்பா ஒருநாள் வீடு வந்தார்கள் தங்கையின் திருமண பத்திரிக்கை தந்தார்கள் கல்யாணத்துக்கு சென்றோம் அருண் என்னைப்பற்றி அவர்கள் வீட்டில் சொன்னான் அடுத்த கல்யாணம் என எங்களுக்கு என்றார்கள்.

இப்போது ஒன்றை மிகவும் யோசிக்கத் தொடங்கினேன் காதல் என்பது அவசியமா? காதல் என்பது உண்மையா? காதல் அனுமதி பெற்றுத்தான் நடக்குமா? காதலின் வெற்றி கல்யாணம் தானா? அண்ணன் அண்ணி இன்னும் வரவே இல்லை எனது திருமணம் தேதி குறிக்கப்பட்டு அண்ணனுக்கு நானும் அப்பாவும் பத்திரிக்கை தரப் போனோம். வருகிறோம் என்றான் வந்தான் கல்யாணம் உறவை சிதைக்கக்கூடாது அண்ணியின் பிள்ளைப்பேறுக்காக ஒரு கிளினிக்தனை அறிமுகம் செய்தேன் எந்த பாவமும் இல்லை என புரியட்டும் அருண் என்னை காதலிக்கத் தொடங்கி இருந்தான்.

ஆமாம் அண்ணி ஏன் அம்மாவை அடித்தார்? அது ஒரு தனிக்கதை.

(முற்றும்)

No comments: