Wednesday 27 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 6

சிறிது நேர காத்திருப்புக்கு பின்னர் tablet device தந்தார்கள். மன நிம்மதியாக இருந்தது. நேராக அகநாழிகை புத்தக அங்காடிக்கு சென்று பொன்.வாசுதேவன் அவர்களை சந்தித்தேன். பல புத்தகங்கள் தந்தார். ஒரு வாரத்திற்குள் நுனிப்புல் பாகம் 2 அச்சில் ஏற்றப்பட்டு வந்து இருந்தது.

சிறப்பாக இருந்தது. சிறிது நேரம் அவருடன் உரையாடிவிட்டு கிளம்பினேன். மாலை 4.15 மணிக்கு விமானம். உறவினர் ஒருவர் வீடு செல்லும் முன்னர் வெகு நேரம் ஆனது. பழக்கப்பட்ட சென்னை. பழகிப்போன சென்னை. விமானத்தை தவற விட்டு விடுவோம் எனும் அச்சம் வேறு. சென்னை சாலையில் செல்லும் வாகனங்கள் இன்னமும் வியப்பூட்டுகின்றன. எத்தனை லாவகம். சரியான நேரத்தில் விமான நிலையம் வந்தோம். இந்தியா போன்ற ஒரு சிறப்பான நாடு நான் இதுவரை கண்டதே இல்லை. வசதிகள் அற்றபோதும் வாழ்ந்து காட்டிய எனது முப்பாட்டனார் எனக்கு தெய்வங்கள் தான். நாடு விட்டு நாடு போனாலும் நாட்டின் குடியுரிமையை மாற்றினாலும் ஊரின் மண் எப்போதும் மகிழ்ச்சி தரும் அதோடு மழையும் வரும். மழை வந்தது.

ஊழல், இத்யாதிகள் என குறைகள் சொல்லி சலித்துப் போகும் மக்கள் வாழும் பூமி. இங்கே இருக்கும் ஒருவித நிம்மதி பிறந்தபோது வந்தது. உறவுகள் ஒதுங்கிக் கொண்டார்கள் என்பதற்கு நானும் காரணம். இதோ என் எண், அழையுங்கள் என உங்களுக்கு தந்தது இல்லை. புத்தக வெளியீடு இம்முறை செப்டம்பர் 6 அன்று நடைபெற இருக்கிறது. அகநாழிகை வாசு அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்

ஒரு வாரம் மட்டுமே எனது ஊரில் இருந்தேன். சந்தித்தவரை நன்றாக பேசிய மக்கள். மன கஷ்டங்கள் இருக்கும். மன கஷ்டமாகவும் இருக்கும். எடுத்துக்கொண்ட வாழ்க்கை முறை அப்படி. இந்தியா என் தேசம்

(தொடரும்)

Tuesday 26 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 5

கோவில், உறவினர் அடுத்த நாள் பார்க்கலாம் என அன்று Sentosa Island போக முடிவு செய்தோம். முதலில் இங்குதான் ஹோட்டல் பார்த்தோம், பின்னர் எதற்கு என மனம் மாறி சிங்கப்பூரில் தங்க முடிவு செய்தோம்.

ஹோட்டலில் இருந்து அரை மணி நேரத்தில் அந்த தீவு அடைந்தோம். மிகவும் அருமையான தீவு. பல இடங்கள் சுற்றிப் பார்த்து மகிழும் வண்ணம் அமைந்து இருந்தது. சிங்கப்பூர் பெயர்க்காரணம் அறிந்து கொண்டேன். சிங்கம் ஒன்று அந்த தீவில் இருந்து சிங்கப்பூரை கண்காணித்து பாதுகாப்பதாக ஒரு கதை உண்டு. வீராச்சாமி என்பவர் பெயர் கூட அந்த கதையில் உண்டு. வீராச்சாமி சாலை ஒன்று சிங்கப்பூரில் உண்டு. சிங்கப்பூரா என்றே முன்னர் அழைக்கப்பட்டது என்பது அந்த நாட்டு வரலாறு. சிங்கப்பூர் தான் சிங்கப்பூரின் தலைநகரம். சிங்கம் ஒன்றின் வடிவமைப்பு. சிங்கத்தின் தலை மீன் உடல் கொண்ட உருவம் அது. மீன் அவதாரம், சிங்க அவதாரம். இது குறித்து நிறையப் படித்து பின்னர் எழுதலாம் என விட்டுவிடுகிறேன்.

அங்கிருந்து ஹோட்டல் வந்தோம். சென்னையில் இருந்து பதில் இல்லை. இரவு night safari சென்றோம். அரை மணி நேரம் tram வண்டியில் சுற்றி காண்பித்தார்கள். பல விலங்குகள். ஒரு யானை வணக்கம் காட்டி வரவேற்றது. சிங்கப்பூர் மற்றும் Sentosa தீவுக்கு ஒரு cable car இணைப்பு உண்டு. மலைகள் மரங்கள் என பார்த்த போது அத்தனை பேரின்பமாக இருந்தது. அங்கேயும் விலங்குகள் இருக்கக்கூடும்.

இரவு ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். சென்னை ஹோட்டலில் இருந்து மின்னஞ்சல் வந்து இருந்தது. Please collect your tablet device by showing your identity when you return from Singapore on Saturday morning என இருந்தது. உலகில் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருட்டு என்பது தனது தேவைக்காக செய்யப்படுவது. தனது தேவை இருந்தும் திருடாமல் வாழ்வது ஒழுக்க நெறிமுறை எனப்படுகிறது. அடுத்த நாள் கோவில் சுற்றினோம். முருகன் கோவில்கள். மாலை Chinatown நடந்தே சுற்றினோம். சிங்கப்பூர் அற்புதமான நாடு/நகரம். மிகவும் பிடித்து இருந்தது. அன்று இரவு உறவினர்கள் பார்க்க சென்றோம். 45 வருடத்தின் முந்தைய வாழ்க்கை வரலாறு பேசிக் கொண்டார்கள். சிங்கப்பூர் முற்றிலும் மாறிப்போனது, எதுவும் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதே பேச்சு. உறவினர்கள்களை பார்த்து முடித்தபோது இரவு ஒரு மணி. மற்றொரு உறவினர் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. அங்கிருந்து marina bay செல்லலாம் என காரை ஓட்டிட சுற்றி சுற்றி வந்தது. வழிகாட்டி எல்லா நேரமும் வழிகாட்டாது என ஹோட்டல் வந்தோம். இரவு மூன்று மணி. மொத்த சிங்கப்பூரை காரில் சுற்றி விட்டோம்.

எங்கு ஹோட்டல் எடுக்க நினைத்தோமோ அங்கேதான் உறவினர்கள் எனது மாமனார் மாமியார் இருந்த இடம் இருந்தது. மத்திய நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது என நினைத்து அங்கே தங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் மலேசியா சென்று விடலாம் என்பது போல் இருந்தது. அடுத்த நாள் marina bayவுக்கு வழிகாட்டியை நம்பாமல் வழி பார்த்து சென்றேன். பிரமாண்டம். மூன்று wheel chair எடுத்துக்கொண்டு பெற்றவர்களுக்கு சுற்றிக்காட்டினோம். உலகில் ஆச்சரியங்கள் நிறையவே உண்டு. தாவரங்கள் உலகின் பேரதிசயங்கள்.

இருபது நிமிடங்களில் விமான நிலையம் வந்து அடைந்தோம். மனதில் சிங்கப்பூர் நிறையவே நிறைந்து போனது. கார் தந்தவர் காரில் எல்லாம் சரியாக இருக்கிறது என பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் கிளம்பினார். திருப்திகரமான பயணம் முடிவுக்கு வந்தது. மீண்டும் செல்ல வேண்டும் எனும் ஆவல் தந்த நாடு அது.

சென்னையில் வந்து இறங்கினோம். இரவு 11 மணி. சிங்கப்பூரில்  எளிதாக இடம் கண்டுபிடிக்க முடிந்தது. செல்லும் நாடுகளில் இந்தியா ஒன்று மட்டுமே நான் வாகனம் ஓட்டாத நாடாக இருக்கப்போகிறது. அந்த இரவில் தட்டுத்தடுமாறி ஹோட்டல் வந்தோம். அடுத்த நாள் காலை tablet device தொலைத்த ஹோட்டல் சென்றோம். காத்திருக்கச் சொன்னார்கள்

( தொடரும்)

Monday 25 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 4

சென்னையில் தங்கி இருந்த ஹோட்டலுக்கு tablet device தொலைந்த விசயத்தை உடனடியாக மின்னஞ்சல் செய்தேன். நான் அதிகம் உபயோகிக்காத ஒன்று என்பதால் தொலைந்து போனது குறித்து அத்தனை கவலை இல்லை. மனைவி சொன்னார், கிடைக்கும் எனில் கிடைக்கும் என! Data roaming, SIM card change எல்லாம் இல்லை என்பதால் சிங்கப்பூர் ஹோட்டல் விட்டு வெளியேறினால் மின்னஞ்சல் பார்க்க வழி இல்லை. மறுநாள் காலை வரை சென்னையில் இருந்து எவ்வித பதில் இல்லை.

சிங்கப்பூரில் ஒரு கோவில்தனை நடந்து பார்க்க சென்றோம். மாரியம்மன் கோவில் ஹோட்டலுக்கு அருகில் இருந்தது. வழிபட்டு முடிக்க, வழிகாட்டிதனை ஹோட்டலில் தந்து இருப்பதாக சொன்னார், அப்பாடா என இருந்தது. அதனை வந்து பெற்றுக்கொள்ள உறவினர் ஒருவர் எப்போது வீட்டுக்கு வருகிறீர்கள் என எனது மொபைலுக்கு (roaming இல்லாமல் பேச முடியும்) அழைத்து கேட்க முகவரி வாங்கிக்கொண்டு இப்போதே வருகிறோம் என காரில் சென்று இறங்கினோம். கார் பற்றி, கார் ஓட்டுவது குறித்து ஆச்சரியப்பட்டார். வழிகாட்டி இருக்க வாகனம் தானாக போகும் என்றேன். சிங்கப்பூர் உல்லாசமான ஊர். உறவினர்கள் அன்று முழுவதும் உடன் இருந்தார்கள்.

குப்பை இல்லாத நாடு என பெயர் பெற்ற நாட்டில் சாலையில் குப்பைகள் கண்டேன். இடத்தின் பெயர் Little Indiaவாம். கோமலா விலாஸ் சாப்பாடு. சீனிவாச பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், நகைக் கடை, துணிக்கடை என சிங்கப்பூரில் தமிழர்கள் பலர் கண்டேன், ஆம் கண்டேன். சிங்கப்பூர் என்பது சிங்களத்தின் திரிபு என பகடி செய்தேன். அன்று சுற்றிய அலுப்பில் இரவு பத்து மணி ஹோட்டல்  வந்து சேர்நதோம்.

மின்னஞ்சல் பார்த்தேன். We found a tablet in another room. Send me details எனும்படி ஒரு மெயில் சென்னை ஹோட்டலில் இருந்து வந்தது. விபரங்கள் அனுப்பினேன். அடுத்தநாள் காலை வரை பதில் இல்லை. கோவில் சுற்ற கிளம்பினோம். வாகனம் செலுத்துவது எத்தனை சௌகரியம் அங்கே!

(தொடரும்) 

Friday 15 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் -3

சிங்கப்பூர்!

நாடா? நகரமா?

இந்த நாடு பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேரில் சென்றுப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் அறிய இயலும். சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்று சேர்ந்த போது மணி மாலை 7.  முன்னரே, கார் எடுத்து சிங்கப்பூரில் ஓட்ட வேண்டும் என பதிவு செய்து இருந்தேன். ஏழு நபர்கள் சென்று இருந்தோம். அதில் இருவர் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.  விமான நிலையத்தில் இறங்கியதும் எங்களை வரவேற்க உறவினர் வந்து இருந்தார். அப்போது எனது மொபைல் ஒலிக்க எனக்கு சற்று ஆச்சரியம், பொதுவாக வெளிநாடுகளில் நான் லண்டன் மொபைல் உபயோகிப்பது இல்லை .

கார் கொண்டு வந்து இருக்கிறேன், கீழே நிற்கிறேன் வந்து பெற்றுக் கொள்ளவும் என சொன்னபோது புதிதாக இருந்தது. விமான நிலையத்தில் அவர்களது அலுவலகம் இல்லை என பின்னரே தெரிந்தது. கார் தந்தவர் வழிகாட்டி கொண்டுவர மறந்து போனார். அடக்கடவுளே என்று இருந்தது. உறவினர் உடன் வர காரில் இடம் இல்லை. ஹோட்டல் செல்லும் வழியை PIE CTE havelock road என வழி சொன்னார். வழிகாட்டி இல்லாமல் இரவு எட்டு மணிக்கு அதுவும் புதிய ஊர், தைரியமாகவே வாகனம் எடுத்தேன்.

அட! சாலைகள் அருமை! வாகனங்கள் நிதானம்! அவர் சொன்ன பாதை நினைவில் வைத்து சரியாக ஹோட்டல் வந்து அடைந்தேன். வழிகாட்டி இருந்தாலே சேருமிடம் வந்ததும் சுற்றும் நான் வழிகாட்டி இன்றி சரியாக சேர்ந்தது ஆச்சரியம். இரவு சாப்பாட்டிற்கு முருகன் இட்லிக்கடையை தொடர்பு கொண்டேன். அவர்களோ இன்னும் சிறிது நேரம் கடை மூடிவிடும் என்றார்கள். இரவு ஹோட்டலில் சாப்பிட்டோம். கார் நிறுத்தும் வசதி ஹோட்டலில் இருந்தது.

பண அட்டை ஒன்றை காரில் வைத்துக் கொண்டால் கார் நிறுத்தும் இடம், சில சாலைகள் என பணம் எடுத்துக் கொள்ளும் வசதி. மிகவும் பிடித்து இருந்தது. சாப்பிட்டு முடித்து ஹோட்டலில் பையை திறந்து பார்த்தேன் blog எழுத உதவிய tablet device காணவில்லை. தொலைந்து போனது!!!

(தொடரும்)Sunday 10 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 2

இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ விஷயங்கள் நடந்தேறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு முடிந்து போன கதை என கணக்கு எழுதலாம் என நினைத்தால் சில விசயங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நீ இல்லாமல் இருந்து இருந்தால், நான் இல்லாமல் இருந்து இருந்தால் போன்ற வசனங்களுக்கு குறைவில்லை. முடிந்து போன விசயங்களுக்கு கொண்டாடப்படும் உரிமைகள் என்றுமே மாறப் போவதில்லை.

2012ல் ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து சென்ற பின்னர் நவம்பர் மாதம் மகனுக்கு 2013ல் மிருதங்க அரங்கேற்றம் நடத்த வேண்டும் என சொன்னபோது பயம் நிறைய இருந்தது. மிருதங்க குரு முதலில் வேண்டாம் என சொன்னவர் நவம்பரில் கேட்டபோது சரி என சொன்னதும் அதிக பயம் ஒட்டிக்கொண்டது. ஒரு வருட முயற்சிக்கு ஏழு எட்டு வருட உழைப்பு இருந்தது. மகனும் துணிவாக அரங்கேற்றம் பண்ணுகிறேன் என சொன்னபோது 2013ல் இந்தியாவுக்கு வருவது தள்ளிப்போனது. இந்த மிருதங்க அரங்கேற்ற அனுபவம்தனை ஒரு தனி பதிவாக வைத்து விட இருக்கிறேன்

2012 வந்த போது மாமனார் மாமியார் சிங்கப்பூரில் முன்னர் வசித்து இருந்ததால் அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது என் மனைவியின்  ஆசை, ஆனால் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் செல்லவில்லை. இந்த வருடம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என முடிவு செய்து மாமனார் மாமியார் என் அப்பா என அழைத்து செல்ல முடிவு செய்து விமானபயண சீட்டு கேட்டால் அதிக விலை. எப்போதும்  இல்லாமல் எர் இந்தியா பதிவு செய்தோம்

வித்தியாசமான பயண அனுபவம் என சென்னை வந்து இன்று சேர்ந்தோம். ஹோட்டல் பக்கத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் போனால் சென்னையில் இருப்பது போல் இல்லை. விமான பயண அனுபவத்தை பின்னர் குறிப்பில் வைக்கிறேன். இப்போது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். நாளை சிங்கப்பூரில் இருப்போம்.

(தொடரும்)

Saturday 9 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் -1

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு இந்தியப் பயணம். ஊர் எப்படி இருக்குமோ? மக்கள் எப்படிப் பழகுவார்களோ என உள்ளூர அச்சம் இருக்கத்தான் செய்கிறது. சென்றமுறை வந்தபோது கோவில் கும்பாபிஷேகத்தில் நாட்கள் செலவழிந்தது. ஒரு பயணக்கட்டுரை எழுதாமல் விட்டுப்போனது அந்த ஒரு முறை மட்டுமே. இம்முறை எவ்வித கட்டுப்பாடுகள் அன்றி பயணம்.

நுனிப்புல் பாகம் இரண்டு அச்சடிக்கப்பட்டு விடும். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. அகநாழிகைப் பதிப்பகம் மூலம் நூல் வெளிவருவது உள்ளூர ஆனந்தம். சென்ற முறை வெளியிடப்பட்ட தொலைக்கப்பட்ட தேடல்கள் போது பலருக்கு நன்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். புத்தக வெளியீடு பின்னர் இந்தியா வந்தபோது கும்பாபிஷேக வேலை காரணமாக எவரையும் சந்திக்க இயலவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு.

ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் நிறைய எழுதினேன். என் எழுத்துக்கு இளமை அடையாளம் தந்தது காதல் வரிகள். நிறைய அறிமுகங்கள். முத்தமிழ்மன்ற உறவுகள் போல பலர் அங்கே. எவரைச் சொல்வது? எவரை விடுப்பது? இந்த இந்திய பயணத்தில் வேறு ஒரு சிறு பயணமும் உண்டு. நான் எப்போதுமே பயணம் தொடங்கும் முன்னர், பயணத்தின் போது எழுதிப் பழகியதில்லை. மொத்தமாக மனதில் வைத்துக்கொண்டு எழுதுவதே வழக்கம். இம்முறை சற்று மாற்றி அமைப்போம்.

நாளை சென்னையில் இருப்பேன்

(தொடரும்)

Friday 1 August 2014

நுனிப்புல் பாகம் 2 முன்னுரை

முன்னுரை

ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்த காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டுப் போகும். ஒரு கதை என்பது நடந்த நிகழ்வாக மனித மனம் நினைக்கத் தொடங்கும் போது பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. கதையை கதையாக எண்ணக்கூடிய மன நிலையில் நாம் இருக்க இயல்வதில்லை. அது எங்கோ நடந்த, என்றோ நடந்த ஒன்று என்கிற பிரமை நம்மை பிடித்து ஆட்டுகிறது. அதனால்தான் அந்த கதாப்பாத்திரங்கள் பெரும் பாதிப்பை நம்மில் ஏற்படுத்திச் செல்கின்றன.

வாசன் எனும் கதாபாத்திரம் மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையில் தோன்றியதுதான் என்றாலும் அந்த கதாபாத்திரங்களின் பாதிப்பு எங்கோ எப்படியோ தோன்றி இருக்க கூடும். இந்த நாவலை எழுதும் போதெல்லாம் எனது கிராமத்து தெருக்கள் என்னுள் நடமாடிக் கொண்டு இருந்தது என்பதை மறுக்க இயலாது. சில அறிவியல் விசயங்கள் எல்லாம் கதையில் எழுதும்போது அவ்வப்போது படித்து அதனால் எழுந்த பாதிப்புதான் இந்த நாவலில் வைக்கப்பட்டு இருக்கிறது, எனக்கென்று என்ன சிந்தனை இருந்துவிடப் போகிறது.

தமிழ்நாட்டில் வாழ்ந்து அந்த தமிழகத்தை கடந்த பதினைந்து ஆண்டுகளாக  பிரிந்த பின்னர் அங்கே உள்ள வாழ்வுமுறை எல்லாம் எனக்கு சற்று அந்நியமாகிப் போனது என்னவோ உண்மை. எனவே கதையில் நான் வாழ்ந்த அந்த இருபத்தி நான்கு வருடங்களின் பாதிப்பு மட்டுமே இருக்க இயலும். இன்றைய சமூகம் எத்தனை மாற்றம் அடைந்து இருக்கிறது என தமிழக்கத்தில் சில வருடங்களுக்கு ஒருமுறை என விடுமுறை காலத்தை கழித்து போகும் எனக்குப் புரியப் போவதில்லை.

கல்லூரி சூழல், மாணவ மாணவியர் பழக்கம் என எல்லாமே இப்போது புதிதாகவே இருக்கும் நிலையில் மாதவி, பாரதி, ரோகினி எல்லாம் சற்று அந்நியப்பட்டு போவார்கள். எத்தனை கதைமாந்தர்கள், அவர்களுக்கென ஒரு குணாதிசயம் உருவாக்கி அவர்களை நடமாட விட்டு அவர்களோடு வாழ்ந்து முடித்த காலங்கள் இப்போது எனக்கு வெகு தொலைவில் இருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த கதையின் தொடர்ச்சி குறித்து நான் சிந்திக்கவே இல்லை. என்ன எழுத வேண்டும் என்பதை எழுதும்போதே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றே அடுத்த பாகம் வரை நிறுத்தி வைத்து விட்டேன். இந்த நாவல் எழுதும்போது இருந்த மனநிலை வேறு, இப்போதைய மனநிலை வேறு, ஆனால் இறைவன் இறைவனாகவே இருக்கிறான்.

முதல் நாவல் படித்து விட்டு இப்படியா ஒரு நாவலை வெளியிடுவது என எழுந்த குறையைப் போக்க இந்த நாவலின் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் திருத்தித் தந்த திரு. என்.சொக்கன் அவர்களுக்கு நன்றித் தெரிவித்து கொள்கிறேன்.

‘உன்னை என்னுள் உருவாக்கி
என்னை நீதான் உருவாக்கியதாக
இன்னும் நம்பிக் கொண்டு இருக்கும்
மனதுக்கு உண்மை எதுவென
உரைத்து நிற்பாய்

வெ.இராதாகிருஷ்ணன்

இலண்டன்