Monday 15 September 2014

மாணிக்கவாசகரும் கோவில் கோபுரங்களும்

இந்தியாவில் சில நாட்கள் - 9

எனக்கு மாணிக்கவாசகர் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு. அவரது திருவாசகம் எனக்கு நிறையவே பிடிக்கும். எல்லாவற்றையும் வாசித்து முடித்து விட வேண்டுமென ஆவல் எழுந்தது. அப்படி வாசித்தபோது உருவானதுதான் அடியார்க்கெல்லாம் அடியார் எனும் நாவல்.

நரிகள் பரிகள், பிட்டுக்கு மண் சுமந்தது என பல கதைகள் படித்தாலும் அவர் பிறப்பிடம் பற்றி எல்லாம் அக்கறை தோணவில்லை. திருவாதவூர் எனும் ஊர் தான் அவர் பிறந்தது என அறிந்தபோது அது எங்கே இருக்கிறது என தேடுகையில் மதுரை அருகே அதுவும் திருமோகூர் வழி என சொன்னதும் ஆச்சர்யமாக இருந்தது.

நான்கு வருடங்கள் உத்தங்குடியில் படித்தபோது ஒத்தக்கடையில் சென்று அவ்வப்போது சாப்பிட்டு சனி தோறும் திருமோகூர் வரை சென்று வந்த நான் திருவாதவூர் சென்றதே இல்லை. இத்தனைக்கும் திருவாதவூர் பேருந்தில் தான் திருமோகூர் சென்று இருந்து இருப்பேன்.

எனக்கு இந்த திருவாதவூர் பற்றி பெரும் அக்கறை அப்போது இல்லைதான். இந்த முறை இந்தியா சென்றபோது திருமோகூர், திருவாதவூர் சென்று வர வேண்டும் என நினைத்து இருந்தேன்.

விடுமுறை நாட்கள் நெருங்கி முடிய திருவாதவூர் செல்ல முடியாதோ எனும் எண்ணம் மேலிட்டது. திருவரங்கம் சென்று அங்கே கோவில் பணிகள் பல பார்த்து, திருவரங்கமே மாறிப்போன ஆச்சர்யம் மறையாமல் திருவாதவூர் அடுத்த நாள் சென்றோம்.

திருமோகூர் கடந்து திருவாதவூர் சென்றபோது மணி பன்னிரண்டு. கோவில் நடை சாத்திவிட்டார்கள். மீண்டும் 4 மணிக்கு தான் திறப்போம் என சொன்னதும் கோபுரம் பார்த்து வணங்கிவிட்டு அங்கிருந்து மாணிக்கவாசகர் பிறந்த இடம் சென்றோம். அங்கே கோவில் கட்டப்பட்டு இருந்தது.

பூசாரி படுத்து இருந்தார், நாங்கள் சென்றதும் கதவை திறந்து தீபம் காட்டினார். அங்கே மாணிக்கவாசகர் குறித்தும் சிவபெருமான் குறித்தும் எழுதியதைப் படித்து பார்த்துவிட்டு பூசாரியிடம் மாணிக்கவாசகரின் உறவினர்கள் இன்னும் உண்டா என கேட்க அவரும் ஆச்சரியப்படாமல் இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது இப்போ இல்லை என்றார். எனது கிராமம் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் இப்போது அந்த கிராமத்தில் இல்லை, எனக்கு நெருங்கிய உறவினர்கள் எல்லாம் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இருநூறு ஆண்டுகள் பின்னர் அந்த கிராமத்தில் என் உறவினர்கள் எவர் என எவரேனும் தேடி சென்றால் இதே பதில் கிடைக்கும்.

மாணிக்கவாசகரை பற்றி பிரமித்துவிட்டு திருமோகூர் வந்தோம், அங்கேயும் கோவில் மூடி இருந்தது. கோபுர தரிசனம் பார்த்துவிட்டு திரும்பினோம். நான் அடிக்கடி சொல்லும் கோபுரங்கள் தரிசித்தால் போதும் கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது. ஆனால் கோவிலுக்குள் செல்லாமல் வருவது சற்று இடைஞ்சல்தான்.

எதற்கு திருவாதவூர் செல்ல இத்தனை ஆசை கொண்டேன் என்றால் எல்லாம் அந்த மாணிக்கவாசகருக்குத்தான். சிவனும், விஷ்ணுவும் நினைத்துக்கொண்டார்கள் போல என் அடியாரை நீ வணங்கினால் என்னை வணங்குவதுபோல என.

அடியார்க்கெல்லாம் அடியார் கதையை விரைவில் முடித்துவிடுவேன் மாணிக்கவாசகர் துணையுடன்.

(தொடரும்)

Monday 8 September 2014

திருவரங்கனும் கோடி ரூபாயும்

இந்தியாவில் சில நாட்கள் - 8

எனக்கு ஶ்ரீரங்கம் மிகவும் பிடிக்கும். அங்கே இருக்கும் ஶ்ரீரங்கநாதனை இன்னும் பிடிக்கும். ஆண்டாளுக்குப் பிடித்த ஶ்ரீரங்கன் அல்லவா. காவிரி, மாம்பழ சாலை, திருவானைக்கோவில் என அத்தனை ஆசை. அங்கேயே தங்கி ஶ்ரீரங்கனை மட்டுமே சேவித்து வாழ்ந்து விட முதுமை ஆசை உண்டு.

சனிக்கிழமை ஶ்ரீரங்கனை காண கிளம்பினோம். திருப்பதியை காண திட்டமிடாத காரணத்தால் ஶ்ரீரங்கம் போயே ஆக வேண்டும் என சென்றோம். திருச்சியை அடைந்தபோது மணி 1.15 இனி நடை சாத்தப்பட்டு இருக்கும் என உறவினர்களை திருச்சியில் பார்த்துவிட்டு ஶ்ரீரங்கம் அஅடைந்தபோது மணி மாலை 4. கூட்டம் அதிகமாக இருந்தது. சற்று முன்வரை கூட்டம் இல்லை என சொன்னார்கள். ரூபாய் 50, 100 என வரிசை அதோடு நியாய வரிசை.

வாய்ப்புதனை பயன்படுத்தும் வசதி. 250 ரூபாய் வரிசை நின்றோம். அதுவே சற்று கூட்டம் தான். அவசரமாக சென்றுவர ஒரு வழி. ஓரிடத்திற்கு நடந்து போகலாம், சைக்கிள், மோட்டார் வாகனம் என பல உண்டு. அவரவர் விருப்பத்திற்கேற்ப, வசதிகேற்ப ஒன்றை பயன்படுத்துவோம் ஆனால் அதை எவரும் திட்டுவதில்லை. இறைவழிபாடு மட்டும் விதிவிலக்கு. எனக்கு பணம் கொடுத்து போவது குறித்து தர்மசங்கடமில்லை. சென்றோம். சிறிது நேரம் நன்றாக வணங்கிச் செல்ல அனுமதி தந்தார்கள்

இறைவன், பணம். கோவில் சுற்றி முடிக்க முடிக்க பணம் மட்டுமே பிரதானம். ஆனால் ஶ்ரீரங்கனே கதி என பணம் எல்லாம். பொருட்டல்ல என வாழ்பவரும் உண்டு. லண்டனில் கட்டும் கோவிலுக்கு வழி கொடு என வேண்டுதல்.

ஶ்ரீரங்கத்தில் எனது கனவில் சென்ற வருடம் வந்து பின் சிலநாளில் இறந்து போன சின்ன அத்தை குறித்து விசாரிக்கப்போனோம். இரண்டு வருடங்கள் முன்னர் என்னை திருமணத்தில் சந்தித்த அந்த அத்தை பாகவதர் போல நாமத்துடன் நான் இருந்தது கண்டு வீட்டுக்கு வந்து சொல்லி இருக்கிறார். அந்த வீட்டில் முருகனுக்கு கூட நாமத்தை இட்ட படம் இன்னும் உண்டு. பெரிய அத்தையிடம் பல வருடங்கள் முன் ஒருவர் கேட்க பாற்கடலை கடைந்தபோது ராமத்தை இடாதோர் எவர் என சொல்ல அவர் அமைதி ஆனாராம்.

மீண்டும் திருச்சி. மக்கள் கூட்டம், இம்முறை கடைகளில். ஒருவழியாக இரவு 11 மணி ஊர் வந்தோம். இரு தினங்கள் பின் சென்னைக்கு கிளம்பி வர ஶ்ரீரங்கத்தில் உள்ள ஒரு அண்ணன் திடீரென அழைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செக் உள்ளது, ஒருவர் தருகிறேன் என்றார். லண்டனில் உபயோகிக்கலாம், சரி என்றால் சென்னைக்கு வரச் சொல்கிறேன். அவர் ஆசையை கெடுப்பானேன் என சரி என்றேன். உண்மையா பொய்யா என கேட்டு சொல்கிறேன் என்றபோதே எனக்குப் புரிந்தது

அவரவே இல்லை.  இன்னும் மனிதர்கள் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் இறைவன் முதற்கொண்டு இலவசமாக எவரேனும் உதவுவார்கள் என. இது பொருள் உலகம்

(தொடரும்)

Tuesday 2 September 2014

கிளி ஜோசியம்

இந்தியாவில் இனி சில நாட்கள் - 7

சென்றமுறை இந்தியா வந்தபோது கிளி ஜோசியம் பார்க்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி சுற்றி வந்தும் ஒரு கிளி ஜோசியரும் தென்படவில்லை. இம்முறையாவது கிளி ஜோசியம் பார்த்திட வேண்டுமென மதுரை வந்தோம்.

அதிசயமாக ஒரு கிளி ஜோதிடர் அமர்ந்து இருந்தார். ஆள் பார்க்க தாடி வைத்து, குங்கும பொட்டு இட்டு நன்றாக இருந்தார். இருபது ரூபாய் என வணிகம் பேசினார். எனக்குத் தெரிந்து நான் கிளி ஜோதிடம் பார்தது வருடங்கள் பல உருண்டோடி விட்டது. நெல்மணி போட கிளி வந்து ஒவ்வொரு சீட்டாக எடுத்துப் போட்டுவிட்டு ஒரு சீட்டு எடுத்துத்தரும். அதை வைத்து நிறைய விசயங்கள் முன்னர் சொல்லும் வழக்கம் உண்டு. இருபது வருடங்கள் முன்னர்
 நடந்தது இப்போது அப்படியே இருக்குமென எண்ணி அமர்ந்தேன்.

பெயர் சொன்னேன். பெயர் சொன்னதும் கிளி வந்தது. ஒரே சீட்டு எடுத்துக்கொடுத்துவிட்டுப் போனது. பார்த்தால் வெங்கடாசலபதி. இரண்டே வாக்கியங்கள் சொல்லிவிட்டு ஒரு சீட்டு எடுத்துத் தாருங்கள் என என்னை கிளி ஆக்கினார். ராமர், சீதை, லட்சுமணர் பட்டாபிஷேக படம். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். இப்படியாக ஐந்து பேர் பார்த்தோம். கிளி ஒரு சீட்டு. இரண்டு வாக்கிய பலன். அவரவர் ஒரு சீட்டு, இரண்டு வாக்கிய பலன்கள். நூறு ரூபாய் காணிக்கை வைங்க கை ரேகை பார்க்கலாம் என்றார். நான் கை காட்டி அமர்ந்தவுடன் சில வரிகள் சொன்னார். இருபது ரூபாய்
 மட்டுமே வைக்க கையை மூடுங்க, ஒரு விரல் காட்டுங்க என்றார். ஆள்காட்டி விரல் காட்டினேன். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். கிளி ஜோதிடம் முதல் அவர் சொன்ன விசயங்களில் சில தவறுகள் இருந்தன. சுட்டிக்காட்ட மனமின்றி எனது மொபைலில் முக அட்டைப்படமாக இருந்த வெங்கடாசலபதி படத்தை காட்டி எனது விபரம் சொல்லி நகர்ந்தேன். கை எடுத்து வணங்கினார்.

அடுத்த தெருவில் ஐந்து கிளி ஜோதிடர்கள் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். குறி பார்க்கும் பெண் ஒருவர். வாங்க யோகமான முகம், தெய்வாம்சம்
என்றே அந்த பெண் சொன்னார்கள். எல்லோரையும் கடந்து போகும் போது அடுத்தவர்களின் வாழ்க்கை குறித்து சொல்லும் தகுதி உள்ளவர்களாக பிறர் இவர்களை நினைக்க, தங்களை அவர்கள் நினைக்க எனக்கோ இவர்களது வாழ்க்கை குறித்து இப்படி வாழ்க்கையை முடக்கிக் கொண்டார்களே எனும் எண்ணம் மட்டும் சுற்றி சுற்றி வந்தது.

(தொடரும்)