Showing posts with label கோவில். Show all posts
Showing posts with label கோவில். Show all posts

Sunday 19 June 2011

கோவில்


மனிதர்களின் நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது. திடமான நம்பிக்கை இருந்துவிட்டால் சாதிக்க முடியாத விசயங்களும் சாத்தியமாகும் வாய்ப்பு அதிகமாகிறது. இப்படிப்பட்ட நம்பிக்கை ஒருவரிடத்தில் இருந்து பலரிடத்தில் பரவும் பட்சத்தில் அந்த நம்பிக்கையின் மீதான பிடிப்பு அதிகரிக்கிறது.

இறைவன் என்பவர் யார் என்பற்கான விவாதங்கள் அதிகம் இருந்தாலும், மனிதர்களின் நம்பிக்கையில் இறைவன் மிகவும் பலமாகவே இருக்கிறார். அறிவு வளார்ச்சியில் ஆண்டவனின் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. 

நன்மை பயக்கவேண்டும் என நினைப்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம். பிரச்சினைகள் எளிதாக தீர்ந்துவிட வேண்டும் என எண்ணி நாம் பயணப்படுகிறோம். நமது கட்டுப்பாடுகளில் இல்லாத பல செயல்கள் நம்மில் பதில் பெற முடியாத கேள்விகளை எழுப்பி செய்கின்றன. 

''சாமிய கும்பிட்டாத்தான் நாம நல்லா இருப்போமா'' எனும் கேள்விக்கு 'ஆம் அல்லது இல்லை' என ஒருவர் பதில் தந்துவிடமுடியும். சாமியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ''ஆம்'' என சொல்லிவிட இயலும். ''அப்படின்னா சாமிய கும்பிடலைன்னா நாம நல்லா இருக்க மாட்டோமா'' எனும் கேள்வி எழும் பட்சத்தில் சாமியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ''ஆம்'' என்றே சொல்வார். இங்கே நம்பிக்கை விதைக்கப்படுகிறது. நன்றாக இருக்க வேண்டுமெனில் சாமியை கும்பிட வேண்டும் எனும் எண்ணம் ஆழமாக விதைகிறது. இருக்கிறது எனும் நம்பிக்கைக்கு இருக்கும் ஆற்றல், இல்லை என்பதற்கு இல்லை. அதனால் தான் அது அவ நம்பிக்கையாக கருதப்படுகிறது. 

ஏதேனும் தவறு நடந்து விட்டாலும் கூட ''நாம சாமிய சரியா கும்பிடலையோ'' எனும் ஒரு ஐயப்பாடு எழுந்து விடுகிறது. கஷ்டங்கள் என பல வந்தாலும் ''சாமி சோதனை செய்கிறார்'' என ஆறுதல் கொள்ள செய்கிறது. 

வாழ்வில் நடக்கும் சில பல விசயங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் ஏதோ ஒன்று நமது மேல் ஆதிக்கம் செலுத்துவது போன்று காணப்படும். வழி வழியாக வந்த இந்த இறைவன் எனும் எண்ணம் அனைவரையும் ஒரு முறையேனும் சிந்திக்க வைத்து விடுக்கிறது, அது நம்பிக்கையாகவும் இருக்கலாம், அவ நம்பிக்கையாகவும் இருக்கலாம். 

''கோவிலுக்கு போனா மனசு நிம்மதியாக இருக்கிறது'' எனும்போது கோவிலுக்கு செல்லாத சமயங்களில் மனசு நிம்மதியாக இல்லையா? எனும் கேள்வி எழுகிறது என வைத்துக் கொள்வோம். இந்த கேள்விக்கு நிம்மதி என வேறிடத்தில் இருந்தாலும் கோவிலில் ஏற்படும் நிம்மதி இருப்பதில்லை எனும் பதில் பொருத்தமாகிறது. சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மந்திரங்கள் என மனம் கொள்ளும் நம்பிக்கை மிகவும் அதிகமே. தனி மனிதர்களின் மீது வைக்கப்படும் நம்பிக்கைகளை விட தனி மனிதன் மூலமாக இறைவன் மீது வைக்கப்படும் நம்பிக்கைகள் மிகவும் உறுதியாக இருக்கிறது. 

உலகில் எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. உலகெங்கும் நிறைய பொருட்செலவில் புதிய கோவில்கள் கட்டப்படுகின்றன. இந்த கோவில்களினால் சமூகத்தில் எத்தகைய பலன்கள் ஏற்படுகின்றன, எத்தகைய சீரழிவுகள் ஏற்படுகின்றன என பட்டிமன்றம் வைத்து பேசுவதற்கு பக்தர்கள் தயாராக இல்லை. மனம் குளிர வணங்கிட ஒரு தெய்வமும், அங்கே கோவிலும் மட்டுமே பக்தர்களுக்கு முக்கியம். அப்படிப்பட்ட அவர்களின் நம்பிக்கையை நல்ல விதமாக நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என கோவிலை சார்ந்த அமைப்புகள் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகள் மிகவும் செழித்தோங்க வேண்டும்.

கோவில் மட்டுமே பிரதானம் அல்ல, கோவிலை சார்ந்து உருவாக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள், கலை அமைப்புகள் என மொத்த சமூகத்தையும் தூக்கி நிறுத்தக் கூடிய தெய்வங்கள் நமக்கு மிகவும் அத்தியாவசியம். மனிதர்களின் நம்பிக்கையினால் இந்த உலகில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்த இயலும். சாமியை கும்பிடுபவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் எனும் நம்பிக்கை முன்னொரு காலத்தில் இருந்தது. நாம் சாமியை கும்பிடுகிறோம் அதனால் தவறே செய்யக் கூடாது என்கிற பய பக்தியும் மனிதர்களிடம் இருந்தது. நாளடைவில் இந்த நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டன. ஆனாலும் ஆங்காங்கே நம்பிக்கை உடையவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  சமூக அமைதிக்காக , சமூக ஒற்றுமைக்காக இந்த கோவில்கள் தமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு சின்ன கனவு.

(தொடரும்)