Thursday 30 July 2015

ஏடு கொண்டார் எவர் கண்டார்

கல்வெட்டு ஒன்றைப் பார்த்து
இதில் எழுதப்பட்டு இருப்பது
உண்மையா என மனம்
எண்ணியபோது தானே பதிலாக
உண்மையாகவும் இருக்கலாம்
உண்மையற்றதாகவும் இருக்கலாம்
என்றே சொல்லி அமர்ந்தது

எத்தனையோ புத்தகங்கள்
எழுதப்பட்டு இருக்கிறது
கதைகளா, கற்பனைகளா என
மனம் வினவிக்கொண்டே
தனக்குள்
கதையாக  கற்பனைகளாக இருக்கலாம்
கதையற்றும் கற்பனையற்றும் இருக்கலாம்
என ஆசுவாசம் கொண்டது

ஆண்டாண்டு காலமாக
இறைவன் குறித்த பாடல்கள்
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா
என்ற மனதின் ஓசைக்கு
அதுவே இசையாய்
ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்
மறுத்துவிடவும் செய்யலாம்
என உருகி நின்றது

அவரவர் எண்ணம் கொண்டு
தான் அறிந்த அறிவின் பலம் கொண்டு
இந்த பரந்த பிரபஞ்சங்களின்
ஏடு கொண்டார் எவர் கண்டார்
ஏதுமே எழுதிவைக்காத
மனிதர் கொண்ட மௌனங்களுக்கு
அர்த்தம் நாம் அறியலாம்
அர்த்தம் நாம் அறியாமலும் இருக்கலாம்.




Wednesday 29 July 2015

களிமண் - மயர்வற மதிநலம்

களிமண் கொண்டு வந்து
ஒரு பொம்மை செய்து தர சொன்னான்
தண்ணீர் ஊற்றி
களிமண்ணில் ஒரு பொம்மை
செய்து தந்தேன்

அந்த பொம்மையை
 தண்ணீரில் கரைத்துவிட்டு
என்ன தண்ணீரில்
பொம்மை அழிகிறதே  என்றான்
நீ கொண்டு வந்த
களிமண் அப்படி என்றேன்

சிறிது நேரம் யோசித்தவன்
நான் எப்படிபட்ட களிமண்
கொண்டு வந்தாலும்
நீ அழியாத பொம்மை
அல்லவா செய்ய வேண்டும் என்றான்

அழியாத புகழோடு வாழ
வழி சொன்னான் அவன்
அழியாத கல்வியோடு மேன்மை
பெற சொன்னான் அவன்
அழியாத சிறப்பு குணம்
கொண்டிருக்க சொன்னான் அவன்

தன்  தேகத்து பெருமை பேசியிராது
பிறருக்கு அடிமையற்று இருந்திடவே
களிமண் கொடுத்துச் சொன்னான் அவன்

உள்ளத்தில் உயர்வு கொண்டு
கழிவிரக்க எண்ணம் அகற்றி
மதிநலம் சிறப்புற மனநலம் தானுயர
அழியாத வாழ்வு வாழச் சொன்னான் அவன்






Monday 27 July 2015

யாருமற்ற அநாதை பிரபஞ்சம்

சில தினங்களாகவே அந்த சாலை வழியில் பார்க்கிறேன்
ஒரு மரத்தின் நிழலில் அவ்விலங்கு படுத்து இருக்கிறது
எங்கிருந்து வந்து இருக்கும் என அதனிடம் கேட்டாலும்
உர்ரென்று முறைக்கும் அல்லது பாய்ந்து கடிக்கும்

என்னைப்போலவே பலரும் அவ்வழி செல்கிறார்கள்
அதே விலங்குதனை பார்த்தபடி நகர்கிறார்கள்
கல்லெடுத்து எறியும் சிறுவர் கூட அதை
கண்டுகொள்ளாமல் போய் விடுகிறார்கள் மௌனமாக

இப்படியாக இன்னும் சில தினங்கள் நகர்கின்றன
திடீரென ஒருநாள் அந்த விலங்கினை காணோம்
ஏதேனும் வேறு ஒரு மரம் தேடிப்  போயிருக்கும்
என்றே எனது மனமும் சமாதானம் சொல்கிறது

வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு தேடுகிறேன்
எந்த மரத்தின் கீழும் அந்த விலங்கு காணவில்லை
தனித்துக் கிடந்த அந்த விலங்கை வாரியணைத்து
என் வீட்டில் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்தான்.

Sunday 19 July 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா சேகர்


                                                                        ஆசியுரை 

இப்போதெல்லாம் கிராமங்கள் கூட நகரங்கள் ஆகி வருகின்றன. விவசாய நிலங்கள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டன. கிராம வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நகரில் வளரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமும் தெரிவதில்லை. இந்த நாவலைப் படிக்கையில் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் நம்மை ஒரு அழகிய கிராம சூழலுக்குள் அமிழ்த்தி விடுகிறார்.

கிராமத்தில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் முதல் தலைமுறையினர் படும் அல்லகளையும், அவர்களுக்கு நண்பர்களாலும் சூழ்நிலைகளாலும் நேரும் மனமாற்றங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளார் கதாசிரியர். படிக்க ஆரம்பித்தவுடன் கதை போல் அல்லாமல் சினிமாவைக் காண்பது போல் அவர் எழுத்து நம் கண் முன் விரிகிறது.

கருத்துரிமை மட்டுமே நம்மை ஐந்தறிவுள்ளப் பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு துடிப்புள்ள இளைஞன் வாழ்வில் ஏற்படும் சலனங்களையும், கேள்விகளையும் அதற்கான விடைத் தேடல்களையும் படிப்படியாக இக்கதையில் விவரித்திருக்கிறார் திரு.ராதாகிருஷ்ணன்.

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் மதங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ராதா அவர்கள் சமணம், சைவம், வைணவம் ஆகிய மதங்களை இக் கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் விளக்குவது நல்ல ஒரு உக்தி. கடைசியில் நாம் உணருவது அதையெல்லாம் விட அன்புள்ள மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது என்று! நல்லதொரு முத்தாய்ப்பு கதைக்கு!

அவரின் இந்த நாவலை பலரும் படித்து, சுவைத்து, மகிழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவரை வாழ்த்துகிறேன். எந்தப் படைப்பும் சரியான சிந்தனையாளர்கள், படைப்பைப் பாராட்டுபவர்கள் கைகளில் போய் சேர்ந்தால் தான் படைத்தவருக்கு ஆனந்தம். அது திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் பல நற்கதைகள் எழுதி பேரும் புகழும் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்பும் ஆசியுடனும்,
சுஷீமா சேகர்.

--------------------------------

மிக்க நன்றி அம்மா. எண்ணில்லா மகிழ்ச்சி கொண்டேன். 

Saturday 18 July 2015

அவளது சொந்தம்

வேண்டுவன எல்லாம் வேண்டுவன
விடுவன எல்லாம் விடுவன
தான் ஆண்டு தன் பிள்ளை ஆண்டு 
ஆண்டாண்டு காலங்கள் எவரும் இருப்பதில்லை

ஊர்வன எல்லாம் ஊர்வன

பறப்பன எல்லாம் பறப்பன 
கல்வியறிவு களவு அறிவு என 
எந்த அறிவும் கொண்டதில்லை 

நடப்பன எல்லாம் நடப்பன

கடப்பன எல்லாம் கடப்பன
கவலை ஆட்டுவித்து கவலை புரிந்து 
காலங்களில் எல்லாம் விழுந்து கிடப்பன

அவளது சொந்தம் என்று திரிவன

அவனது சொந்தம் என்று வருவன
ஒன்றுக்கொன்று வேறுபட்டு உழன்று 
உடைந்தும் ஒட்டுறவாக இருப்பன

சாமி கண்டேனென சொல்வன 

பொய்யாய் உலகம் வெல்வன
தானே உலகமும் சுற்றமும் என மறந்து 
ஏதோ எவரோ என ஓடி ஒளிவன

அழுவன எல்லாம் சிரிப்பன

சிரிப்பன எல்லாம் அழுவன
இன்பம் மட்டுமே கருதி வாழ்வில் 
துன்பம் கண்டால் நடுங்குவன

ஓடுவன எதையோ நாடுவன

நாடுவன எதையோ தேடுவன
மறதியில் எதையும் மறந்து திரிந்து
ஏதும் அறியாது சிவனாகி கிடப்பன

கண் பார்ப்பன காது கேட்பன

வாய் பேசுவன மூக்கு சுவாசிப்பன
காலமெல்லாம் இதையே நினைந்து

நினைந்து மூளை தோல் உணர்வன 
எது காப்பன எது தோற்பன 
அது அழிவன அதுவே ஆக்குவன
எல்லாம் உருமாறி உருமாறி எக்காலத்தும் 
வழி மாறாது இப்படியே இருப்பன 

எல்லா ன இருந்தாலும் பண ண இல்லாது
போனால் எவரும் எவரையும் மதிப்பன ரோ?

Wednesday 15 July 2015

பூமி சுற்றலும் அவள் சுற்றலும்

எங்கே சுற்றுப் பார்க்கலாம் என சுற்றச் சொன்னவுடன் சரசரவென சுற்றி தலை கிறுகிறுத்துப் போச்சு என எல்லாமே தன்னைச்சுற்றி சுற்றுவதாக சொன்னான்.  ஆமாம் இந்த பூமி எப்படி சுற்றுகிறது எனக் கேட்டால் சுற்றவேண்டும் எனும் வேண்டுதல் போல என சொல்லிவிட்டுச் சென்றான். அவனை மீண்டும் அழைத்து அப்படி என்ன வேண்டுதல் என்றேன். மனிதர்கள் பாப பரிகாரத்திற்கு பிரகாரம் சுற்றுவது போல என்றான். எதையுமே குதர்க்கமாக சொல்லிச் செல்லும் அவனை எனக்கு சிறு வயதில் இருந்தே பழக்கம். திடீரென சிறகுகள் இல்லை என்றால் பறவைகள்  இல்லைதானே என்பான். எத்தனையோ முறை என்ன என்னவோ சொல்லிவிட்டுப் போவான். எதற்கு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறான் என எனக்கு அவனுக்கு சித்தம் கலங்கிவிட்டதோ என எண்ணிக்கொள்வேன். ஆனால் இன்றுவரை அவன் அப்படி வேறு எவரிடமும் பேசியது இல்லை. 

என்னை நீ பைத்தியம்னு நீ நினைச்சல, இல்லைன்னு சொல்லாத எதுக்குனா உன்னை நான் பைத்தியமுன்னு நினைச்சேன் என்றான். சரி இருந்துவிட்டுப் போகட்டும். இந்த பூமி எப்படி சுற்றுகிறது என சொல்லிவிட்டுப் போ என்றேன். நான் பேசும்போது நீ குறுக்கேப் பேசக்கூடாது என கட்டளை இட்டான். நான் கேள்வி கேட்கலாமா என்றேன். உனக்கு ஒருதரம் சொன்னாப் புரியாது, கேள்வி கேட்கறது பேசறதுல ஆகாதா என்றவுடன் சரி என அமைதி ஆனேன். 

ஆமா, நீ அந்த புள்ளை  பின்னாலே சுத்திட்டு திரியற உனக்கு வெட்கம் மானம் ரோசம் எதுவும் இல்லையா என்றான். அவ என்னோட காதலி அதுக்கும் இதுக்கும் இப்ப என்ன சம்பந்தம் என்றேன். அவதான் உன்னை சுத்தி வரணும் ஆனா நீ அவளைச் சுத்தி வரியே. என்னைக்காவது நிலாவை சூரியன் சுத்தி வந்து இருக்கா என்றான். அவள் சூரியன், நான் நிலா அப்படின்னு வைச்சிக்கோ, விசயத்துக்கு வா என்றேன். இப்போ என்னோட தொனி வேறமாதிரி இருக்கும். அதனால சொல்றதை மட்டும் கேளு என அவன் ஆரம்பித்தான். 


துகள்கள் தூசிகள் சேர்ந்த போதே இந்த சுற்றுதலை தாம் உருவாகும் முன்னரே நட்சத்திரங்கள் கோள்கள் கற்றுக்கொண்டுவிட்டன. நேர்உந்து விசை. கோண உந்துவிசை என இரண்டு விசைகள் உண்டு. நேர்  உந்து விசை ஒரு பொருளின் வேகம் மற்றும் நிறை மட்டுமே சம்பந்தப்பட்டது. கோண உந்து விசை ஒரு பொருளின் நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோண வேகம் சம்பந்தப்பட்டது. 



                                                                               நன்றி கூகிள் 

நேராக எறியப்பட்ட பொருள் தான் கொண்ட நேர் உந்து விசையால் சுற்றிச்சுற்றி வராது. நேராக ஓரிடத்தில் சென்று விழும். வட்டப்பாதையில் நேர் எதுவும் கிடையாது. இது நேர் உந்து விசைக்கு உண்டானது. 


எப்போது நேர் உந்து விசையானது கோண உந்து விசை ஆகிறதோ அப்போது  எல்லா இடங்களிலும் ஒரே தன்மை கொண்டு இருக்க அந்த பொருளானது சீராக சுற்றிக்கொண்டே வரும்.அப்படித்தான் கோள்கள் உருவாக காரணமாக இருந்த இந்த துகள்கள் தமக்குள் சுற்றுத்தன்மையை உண்டாக்கின. "They started with spin and still spinning" அப்படி சுற்றியதால் உருண்டை வடிவம்தனை கோள்கள் கொண்டது. கோண உந்து விசை. பூமி இப்படித்தான் சுற்றுகிறது. 

எந்த ஒரு அணுவிலும் உள்ள எலக்ட்ரான்கள் இப்படித்தான் செயல்படுகின்றன. அவை புரோட்டான்களை மையம் கொண்டு சுற்றுபவை. சுற்றும்போது அவை ஒரே இடத்து நிலை கொள்வதில்லை. புரோட்டான்கள் கூட சுற்றுபவைதான் +1/2 -1/2 சுற்றுக்கொண்டவை.

தன்னைத்தானே சுற்றி சூரியனை சுற்றுவது பூமி. பூமியின் சுற்றுப்பாதையை பிற கோள்கள் நிலா சூரியன் இவற்றின் விசைகள் கூட தீர்மானிக்கின்றன. நிலாவானது பூமித் தன்னைத்தானே சுற்றுவதன் வேகத்தை வருடத்திற்கு இத்தனை வேகம் என குறைத்து பாதிக்கச் செய்கிறது. காலப்போக்கில் நாட்கள் நீள வாய்ப்பு உண்டு. ஒரு காலத்தில் நாள் என்பது ஆறு மணிநேரம். 

                                                                                நன்றி கூகிள் 





மேலே காட்டப்பட்டுள்ள படங்களில் உள்ளதுபோல மையநோக்கு விசை (Centripetal force), மையவிலக்கு விசை (centrifugal force)  ஈர்ப்பு விசை (gravitational force) கோண உந்தம் (angular momentum) என்பதெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்த செயற்கை கோள் (satellite) பூமியைச் சுற்றிவருகிறது. நிலா மற்றும் பூமிக்கும் அதே நிலை எனினும் தனக்குள் இருந்த இருக்கும் Angular momentum (கோண உந்தம்) ஒன்றுதான் இந்த சுற்றும் கலையை பூமிக்கு கற்றுத்தந்தது.




Friday 10 July 2015

நுனிப்புல் பாகம் -3 9

பகுதி - 8

9. மரபியல் உலகம்

இவ்வுலகில் இந்த குழந்தைகள் விசித்திரம். எப்படி குழந்தைகள் ஒரு விஷயத்தை அறிந்து கொள்கின்றன எப்படி ஒரு பழக்க வழக்கத்தை பின்பற்றுகின்றன என்பது மற்றொரு அதிசயம். பசிக்காக மட்டுமே குழந்தை. பின்னர் தனக்கு இன்னது தேவை என கருதி அழும் குழந்தை. குழந்தைகள் உலகம் புரிந்து கொள்ள இயலாது.

இரட்டைக் குழந்தைகளுக்கு எல்லாவித மரபணுக்கள் ஒரேமாதிரி இருந்தாலும் அவர்களது செயல்பாடுகள் வேறுவிதமாக இருக்கும். சூழ்நிலையானது குழந்தைகளின் மனநிலையில் பெரும் மாறுபாட்டினை உண்டாக்கும். வாசன் இந்த இரண்டு குழந்தைகள் எப்படி வளர்ந்து என்னமாதிரியான மனிதர்களாக உருவாகி வருவார்கள் என யோசித்தான்.

மறுநாள் சாரங்கன் நேராக விநாயகம் பெரியவர் வீட்டிற்கு வந்து இருந்தார். விநாயகம் அவரை வீட்டுக்குள் வரவிடாமல் மந்தையில் சென்று பேசலாம் என அழைத்துச் சென்றார்.

''அவ்வளவு கோபமா உனக்கு''

''சாரங்கா, நீ பண்ணி இருக்கிற காரியம் தெரியுதா, இன்னும் நீ மாறலை''

''எனக்கு சம்பந்தம் இல்லை, இல்லைன்னா உன்னை எதுக்கு வந்து பார்க்கபோறேன்''

''சொல்ல வந்த காரியத்தைச் சொல்லு''

''இங்கே நிலம் விலைக்கு வாங்கணும்''

''நான் தரமாதிரி இல்லை, நீ வேணும்னா இங்கே யார் தராங்கனு கேட்டு வாங்கிப்போடு. எனக்கு எந்தவித ஆட்சேபணை  இல்லை''

''அவங்க வந்தப்ப நீ அப்படி சொல்லி இருக்கலாமே, எதுக்கு முத்துராசு அவங்க மேல கையை நீட்டினான். அதுதான் அவங்க கொலைபண்ண முயற்சி பண்ணி இருக்காங்க''

''அவங்க என்ன பேசினாங்க, நீ என்ன பேச சொல்லி அனுப்பின, வாசன் மேல அவங்க காட்டின மரியாதை. சாரங்கா உன்கிட்ட எனக்குப் பேச எதுவும் இல்லை''

விநாயகம் விறுவிறுவென அங்கிருந்து சென்றார். சாரங்கனை நோக்கி சிலர் யாருமே உனக்கு நிலம் இங்கே தரமாட்டாங்க, பேசாம வேற ஊருல நிலம் வாங்கிப்போட்டு வாழுற வழியைப் பாரு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முத்துராசு அங்கே வந்தார்.

''இன்னும் இங்கதான் திரியிற''

''ராசு, உன்னோட ஆட்டத்தை எல்லாம் வேற யார்கிட்ட வேணா வைச்சிக்கோ''

''இப்ப நீ கிளம்பலை, நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. ஊர்த் துரோகி''

சாரங்கன் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவர் இனி இந்த குளத்தூர் பக்கம் வரக்கூடாது என்கிற நினைப்புடன் போனாலும் மனதில் ஏற்பட்ட அவமானம் அவரை எப்படியேனும் வஞ்சம் தீர்க்க வேணும் என எண்ணிக்கொண்டே இருக்கச் செய்தது. வாசன் அவரை வழியில் கண்டான்.

''ஐயா, என்ன இந்தப்பக்கம்''

''நிலம் வாங்கலாம்னு வந்தா யாரும் மரியாதை தரல, அந்த விநாயகம் என்னை ஒரு மனிசனா கூட மதிக்கமாட்டேன்கிறான். இந்த ராசு என்னை ஒரு எதிரியாகவேப் பார்க்கிறான். நீ என்ன என்னை சொல்லப்போற''

''உங்களை என்ன சொல்லப்போறேன் ஐயா. நீங்கதான் இன்னும் என் மேல கோவத்தில இருக்கீங்க. எப்படியும் நீங்க திரும்பி வரத்தான் போறீங்க. ஒவ்வொருமுறை ஏதேனும் திட்டம் இல்லாமலா வரப்போறீங்க. நிலம் வாங்குற அளவு உங்களுக்கு காசு ஏது''

''நீயும் என்னை எதிரியாப் பார்க்குற. எனக்கு காசு எப்படி வந்ததுனு உனக்கு கவலை வேணாம். நிலம் தர முடியுமானு சிலர்கிட்ட கேட்டு எனக்கு தகவல் சொல்லு, நான் வந்து வாங்கிக்கிறேன்''

''எனக்குத் தெரிஞ்சி உங்களுக்கு யாரும் நிலம் தரமாட்டாங்க. உங்களோட செய்கை எல்லாம் நல்லா இல்லை ஐயா''

''வாசா, உன்னை நான் எப்படியும் ஒழிச்சி கட்ட நினைச்சி இருந்தா அதை என்னைக்கோ செஞ்சிருக்க முடியும். எனக்கு அது தேவை இல்லை.''

''வேற என்னதான் உங்க எண்ணம்''

''நானும் இந்த ஊருல வாழணும். என்னை ராசு நீ அந்த விநாயகம் எல்லோரும் சேர்ந்து வெளியே அனுப்பிட்டீங்க''

''நீங்கதான் போனீங்க. மறந்துரவேணாம்''

முத்துராசு அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார்.

''எனக்குத் தெரியும் நீ இப்படிதான் பண்ணுவ''

கல் ஒன்றை எடுத்து சாரங்கனின் பக்கத்தில் எறிந்தார். சாரங்கன் படும் கோபம் கொண்டவராக அனுபவிப்பீங்க என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

''என்னண்ணே இப்படி பண்றீங்க''

''வாசா, உனக்குத் தெரியாது. இவன் விஷம். சரி நான் தோட்டத்திற்குப் போறேன்''

''வீட்டுக்கு வரை போயிட்டு வரேன்ணே''

வாசன் நேராக ஐவரதன் அஷ்டவரதன் இருவரையும் பார்க்க சென்றான்.

பூங்கோதையிடம் எப்படி இருவரையும் அடையாளம் காண்பாய் என்றான். ஐவரதன் வலது கையில் கட்டப்பட்ட கயிறு, அஷ்டவரதன் இடது கையில் கட்டப்பட்ட கயிறு என அடையாளம் காட்டினாள்.

நமது மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் இரண்டு இரண்டாக இருக்கும். இந்த மரபணு ஒன்று செயல்பாட்டு தன்மையும். மற்றொன்று அடங்கிய தன்மையும் கொண்டு இருக்கும். எந்த மரபணு வெளிப்படுகிறதோ அதன் குணாதிசயம் வெளிப்படும். இப்போது இந்த இரண்டு குழந்தைகளிடம் உள்ள மரபணு ஒருவருக்கு ஒன்று வெளிப்பட்டும், மற்ற குழந்தைக்கு மற்ற மரபணு வெளிப்பட்டும் இருந்தால் அதுவே வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டு இருக்கும்.

இவர்களுக்கு எப்படிப்பட்ட பழக்கம் உருவாகும் என இந்த மரபணுக்கள் தீர்மானிக்க இயலது எனினும் சில அடிப்படை இயல்புகள் மாற வாய்ப்பு இருக்கும் என்றே வாசன் நினைத்தான்.

''ரெண்டு பேரும் எதிர்மாறான குணம் கொண்டு இருந்தா என்ன செய்வீங்க பூங்கோதை''

''வளரட்டும்ணா பார்க்கலாம். அந்த செடிகள் எல்லாம் என்ன அண்ணா பண்ணி இருக்கீங்க''

''அப்படியேதான் இருக்கு. பார்க்கலாம்''

வாசன் தோட்டத்திற்கு திரும்பிச் சென்றான். முத்துராசு தோட்டத்தில் மயக்கமாகி விழுந்து இருந்தார்.

(தொடரும்)





Tuesday 7 July 2015

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 16

பாதை - 15

இதுவரை ஆராய்ச்சியில் என்ன செய்து இருக்கிறோம் என எவரேனும் கண்டுகொள்ள வேண்டுமெனில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவியல் கட்டுரைகள் மூலம் அறிய இயலும். நான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக ஆராய்ச்சி செய்வதால் அவர்கள் என்ன சொல்வார்களோ அதைத்தான் செய்ய வேண்டும். அதற்கு மீறி நமது சுய சிந்தனைகளுக்கு எல்லாம் அங்கே வேலை இல்லை. இது எல்லாம் தவறு, இது அவசியமா என்ற கேள்விகள் எழுப்பினாலும் இதோ இதைச் செய்தால் போதும் எனும்போது சரிதான் என தலையாட்டிவிட்டுப் போகத் தோன்றும்.

பொதுவாக ஆராய்ச்சியில் என்ன காரணம் என அறியாமலே பல விசயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதுதான் காரணமோ என்ற சிந்தனையில் கூட ஆராய்ச்சி நடக்கின்றன. பொதுவாக செல்கள், திசுக்கள் என தொடங்கப்படும் ஆராய்ச்சியில் அத்தனை குற்ற உணர்வு இருப்பதில்லை. ஆனால் விலங்குகளில் செய்யப்படும் ஆராய்ச்சி குற்ற உணர்வு ஏற்படுத்தாமல் போனதே இல்லை. ஒரு உயிரைத் துடிதுடிக்க கொன்று அந்த உயிரில் இருந்து மூச்சுக்குழல் எடுத்து அதை வெளியில் பொருத்தி என செய்யப்படும் ஆராய்ச்சி சற்று மன சங்கடமாகவே இருக்கும். சங்கடப்பட்டால் முடியுமா என நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அப்படி என்னதான் ஆராய்ச்சி? வேறு ஒன்றும் இல்லை. Guinea pigs இல் இருந்து அதன் மூச்சுக்குழல் பிரித்து எடுக்க வேண்டும். அந்த மூச்சுக்குழலை சின்ன சின்னதாக ஒரு செமீ க்கு வெட்ட வேண்டும். அந்த சின்ன வளையங்களை மேல் கீழ் உள்ள கம்பி ஒன்றில் மாட்டி அதை இதற்கே உரித்தான  உப்புக்  கரைசலில் 37 டிகிரி செல்சியசில் வைத்து விட வேண்டும். எப்போதும் 5% கார்பன் டை ஆக்சைடு உள்ள காற்று செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். இப்போது சில மூலக்கூறுகள் இந்த வளையங்களை கடினமாக்கும். அப்படி ஓரளவு  ஆக்கியபின்னர் நாம் தயாரிக்கும் மூலக்கூறு இந்த கடினமாக்கலை எளிதாக்குமா என பார்க்க வேண்டும். இவ்வளவுதான் ஆராய்ச்சி. இதை எவர் வேணுமென்றாலும் செய்யலாம். இதற்கு முனைவர் பட்டமோ பட்டப்படிப்போ ஒரு அவசியமும் இல்லை. இது ஒரு சாதாரண வேலை.

ஆனால் இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் தான் இந்த ஆராய்ச்சியின் தன்மையை முடிவு செய்யும். கடினமாக்கும் மூலக்கூறுகள் வெவ்வேறு பிரிவு சேர்ந்தவைகளாக  இருக்கும். அப்படி வெவ்வேறு பிரிவு சேர்ந்தவைகள் கடினமாக்கும்போது அதை எல்லாம் நமது மூலக்கூறு எளிதாக்கினால் எப்படி சாத்தியம் என பல விசயங்களை வைத்து சிந்தித்து செயல்பட வேண்டும்.

எழுதவே முடியவில்லையே என்பதற்காக எழுதத் தொடங்கிவிட்டேன். தொடர்ந்து தொடர்வேன்.

(தொடரும்) 

Monday 6 July 2015

நமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்

ஜூலை மாத சிற்றிதழ் இங்கு 

என்னை மிகவும் பாதித்தது இராமானுஜரின் வாழ்க்கை. கணவன் மனைவி நேரெதிர் குணம் கொண்டு இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது இராமானுஜரின் வாழ்க்கையை சுசீமா அம்மா அவர்களின் இந்த தொடரில் படித்தபோது நிறையவே பயம் தொற்றிக்கொண்டது. Women from Venus, Men form Mars என்பது ஒருவேளை உண்மையோ என எண்ணும்  அளவிற்கு வெவ்வேறு கருத்துகள், வெவ்வேறு பிடித்தவைகள் என ஆண் பெண் என பேதம் கொண்டு இருக்கவே செய்கிறார்கள்.

கணவன் சொன்னால் மனைவி கேட்பதில்லை. மனைவி சொன்னால் கணவன் கேட்பதில்லை. இராமானுஜரோ வேறு மாதிரி இருந்து இருக்கிறார் என நினைத்தால் கடைசியில் துறவறம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். அவரது மனைவியின் செயல்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு உரியது என்று சொல்லிவிட முடியாது ஆனால் காலம் காலமாக வெகு சிலரே சமய, அரசியல், சமூக ஈடுபாடுகளில் இணைந்து உள்ளார்கள் எனும்போது பெண்களை குற்றம் சொல்ல இயலாது.

அதீத சமூக சிந்தனை உள்ள ஆடவரோ, பெண்டிரோ திருமணம் முடிக்கக்கூடாது. ஒன்று குடும்பம் பிள்ளைகள் என வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அல்லது ஊருக்கு என வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அன்பை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம் அல்லாடிவிடும். தனிப்பட்ட ஒருவரின் வாழ்வு குறித்த விமர்சனம் தவறுதான் என அறிந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இந்த உலகத்திற்கு தத்துவம் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன. எவருக்குத் தேவை பாவமும் புண்ணியமும், இறைபாதமும், இறைபாதமற்றதும். இதனால்தான் தனிப்பட்ட வாழ்வு பாராமல் இருக்கச் சொல்லிச் சென்றார்கள் அதுவும்  அழகாக அவரவர் தவறுகளை மறைத்து தப்பித்துக் கொண்டார்கள். 

ரமதான் மாதம் என்பதைக் குறிக்கும் வண்ணம் அட்டை வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆசிரியரின் எழுத்தில் உள்ள எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சிற்றிதழ் என்றாலும் எழுதுபவருக்கு நிறைய எதிர்பார்ப்பும், வாசிப்பவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும். எத்தனயோ தொழில்நுட்பம் பெருகிவிட்ட நிலையில் கஷ்டப்பட்டு ஒன்றை உருவாக்குவதைவிட எளிமையான வழி இருப்பின் அதைத் தொடர்வது நல்லது என்றே கருதுகிறேன். எப்படி கொண்டுவர வேண்டும் என எண்ணுகிறோமோ அப்படியே கொண்டு வந்துவிட வேண்டும்.

கான் அவர்களின் விதவை கவிதை வலி சுமக்கும் கவிதை எனில் ஃபாரிஜாவின் பெண்ணாக ஏன் பிறந்தோம் எனும் முதிர்கன்னி கவிதை அதையும் தாண்டிய வலி கொண்டது. இப்போது மேலே குறிப்பிட்ட இராமானுஜர் வாழ்வும் இந்த இரண்டு கவிதை நிலைகளும் எடுத்துக் கொள்வோம். இல்லறவாழ்வு இனிமையாகவோ இனிமையற்றதோ இருந்தாலும் தன்னுடன் வாழும் ஒருவரை இழத்தல் கொடியது. வண்ணங்கள் கலைந்த எனத் தொடங்கி உளி தொலைந்த என ஒவ்வொரு வார்த்தையில் திரும்பவே கிடைக்கப்பெறாத தொலைதல் சொல்லப்பட்டு இருக்கிறது. எவர் முதிர்கன்னி? வறுமைக்குப் பிறந்துவிட்ட கொடுமைகள் என வலி தொடங்கி, இந்த சமூகப்பார்வை குறித்த வார்த்தைகள் ஈட்டிபோல குத்துகின்றன.

இடியாப்பச் சிரிப்பு மிகவும் ரசிக்கும்தன்மை உடையதாக தற்போது மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதை பகடி பண்ணி எழுதப்பட்டவைகள் நிறைய. உண்ண  உணவு இன்றித் தவிக்கும் ஒரு பக்கம். தரப்படும்  உணவில் தரமில்லாமல் தந்து விடுவது ஒரு பக்கம். அப்படியே அதே பக்கத்தில் கணேஷ் அவர்களின் கவிதை யதார்த்தமாக அமைந்து இருக்கிறது. சூரியன் ஒரு ஓவியன். நல்ல ரசனை. நல்ல புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. அடுத்து கர்ணன் குறித்து ரவிக்குமார் அவர்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருக்கிறது. கர்ணன் சிந்திக்கும் அளவுக்கு அவனது புத்தி செயல்படவில்லைதான். அப்படி செயல்பட்டு இருந்தால் ஒரு மகாபாரதம் நடந்து இருக்காது, ஒரு மாபெரும் காவியம் கிடைத்து இருக்காது. வள்ளுவருக்குத் தெரியுமோ என்னவோ நுண்ணிய பல நூல்கள் கற்பினும் என சொல்லிச் சென்றுவிட்டார். ஒட்டுற மண்ணுதான் ஒட்டும். ஜீவா அவர்களின் உபதேசம் நல்லதொரு படிப்பினை கதை. ரசிக்கும்வகையில் இருந்தது. பெற்றோர் பிள்ளைகள் நிலை இப்படித்தான்.

சின்ன சின்ன வரிகளில் உலகம் சொல்லும் கருத்துக்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் எழுத்தும் அற்புதம். அதுவும் இந்த சிற்றிதழில் அவரவர் பெயர் அழுத்தினால் நேராக ட்விட்டர் சென்று விடும்  வடிவமைப்பு நிச்சயம் பாரட்டப்படக்கூடியதுதான். வாழ்த்துக்கள். பிரசன்னா அவர்களைப் பற்றி நாளேடுகளே பெருமை பேசி இருக்கின்றன. அவரது ஓவியங்களின் அலங்கரிப்பு இந்த நமது திண்ணை சிற்றிதழுக்கு பெரிய அங்கீகாரம். ஓவியங்கள் நம்முடன் பேசுவது போலவே இருக்கும் என்பதுதான் இவரது ஓவியங்களின் சிறப்பு.

கார்த்திக் அவர்களின் ஆலவாயன் பற்றிய நாவல் மதிப்புரை மிகவும் சிறப்பு. நிறைய நூல்களைப் படிக்கக்கூடியவர். மிகவும் தெளிவான எண்ணங்கள் கொண்டு இருப்பவர். மாதொருபாகன் எனும் நாவலின் தொடர்ச்சி இது. ஒரு நாவல் மனிதர்களின் மனதோடு ஒட்டிவிட வேண்டும். பல விசயங்களை இந்த நாவல் ஆசிரியர் சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

கிரேசி மோகன் அவர்களின் நேர்காணல். அடடா! சுசீமா அம்மா அவர்களின் கேள்விகள் சிறப்பு என்றால் கிரேசி அவர்களின் பதில்கள் வெகு சிறப்பு. இவர் குறித்து பல விசயங்களை அறியமுடிந்தது. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நிலை எனக்கு மன கஷ்டம் தந்தது. ஆஹா ஓஹோவென புகழப்படும் படைப்பாளிகள்  நிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்பது பாரதியார் காலத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது ஏன்  வள்ளுவரே கூட பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என சொல்லிவிட்டார். நிறைய வாசிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை எனக்கும் தான். மிகவும் பிடித்த வரி, எனது எழுத்துதான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு. ஜானகி ஆசிரியை, அட! தமிழ் மீது பற்றுக்கு ஒரு ஆசிரியை, ஆசிரியர் என அனைவருக்கும் இருந்து விடுகிறார்கள். வெண்பா! எழுத்தாளர் சொக்கன் அவர்களை நினைவுப்படுத்தினார். இது மட்டுமல்லாது, நண்பர் ரத்தினகிரி வெண்பா அருமையாக எழுதுவார், வெண்பா எப்படி எழுதுவது என கற்றுத்தந்த சூரியகாந்தி அவர்களை நினைவுபடுத்தியது. ஒவ்வொரு வெண்பாவும் அசத்தல்.

வருண் அவர்களின் நுரையீரலின் ஓலம் அந்த அழுகுரல் புகையில் கரைந்து போய்விடுவது சோகம். எவரேனும் செவிகொடுத்து கேட்கமாட்டார்களா? உமா க்ருஷ் அவர்களின் பாடல் பரவசத்தில் மலரே மௌனமா மிகவும் அற்புதமான பாடல் வரிசையில் ஒன்று என்றால் மிகையாகாது. அவர் எஸ்பிபி குறித்து சொன்ன தகவல் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்பதை விட எப்படி பாட வேண்டும் என்பதில் இருக்கிறது ஒரு பாடலின் வெற்றி. இசை அதற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அற்புதமான வரிகள் இருந்தும் சிதைத்துவிடும் இசையும், காண சகிக்காத காட்சியும் இல்லாமல் அனைத்துமே ஒருங்கிணைந்த ஒன்று என பரவசம் கொள்ளக்கூடிய பாடல் தான். மிகவும் அருமை.

கூட்டாஞ்சோறு என்பது சாதாரண சொல் என்றே நினைத்து இருந்தேன்.  கூட்டாஞ்சோறு என்றால் பழைய சோறு, புது சோறு என கலந்து உருவாக்குவது என நினைத்தால் மிகவும் அருமையாக அந்த சோறு எப்படி தயாரிப்பது என எழுதி இருக்கிறார் நண்பர் ரவி. புளியோதரை, எலுமிச்சை  சாதம், தயிர் சாதம் போல இந்த கூட்டாஞ்சோற்றில் பல காய்கறிகள் பங்குபெற்று விடுகின்றன, அத்தோடு புளி கரைசல், எலுமிச்சை எல்லாம் வந்து விடுகிறது. பிஸ்மில்லாபாத் என்பதுதான் இதுவோ?

ஆசிரியர் அவர்களின் கண்ணதாசன் குறித்து தெரிந்து கொள்ளமுடிந்தது. இன்று ஆசிரியர் இந்த சிற்றிதழை அச்சு வடிவில் கொண்டுவரலாம் என எண்ணியபோது எனக்கு சந்தோசமாக இருந்தது. செய்யலாம் என்றே சொன்னேன். ஆனால் பலர் வேண்டாம் என்று கூறினாலும் 'நாட்டாமை' என அனைவராலும் ட்விட்டரில் அறியப்படும் திருமாறன் அவர்கள் இன்னும் பல விசயங்கள் சேர்க்கப்பட வேண்டும் என சொன்னார். சரிதான், ஆனால் எவர் எழுத முன் வருகிறார்கள்? எழுதுவது என்பது ஒரு அர்ப்பணிப்பு. அதை எல்லோராலும் செய்ய இயலாது. இணையத்தில் பல விசயங்களை எழுதுபவர்கள் தனக்கென ஒரு வழி கொண்டு இருக்கும்போது இப்படி நூல்கள் எல்லாம் வெளியிட எழுத முன் வருவார்களா? நமது திண்ணைக்கு நல்ல எழுத்தாளர்கள் கிடைக்கவும் நிறைய நல்ல விசயங்கள் சேர்த்துக் கொள்ளவும் வாழ்த்துகிறோம்.