Monday 6 July 2015

நமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்

ஜூலை மாத சிற்றிதழ் இங்கு 

என்னை மிகவும் பாதித்தது இராமானுஜரின் வாழ்க்கை. கணவன் மனைவி நேரெதிர் குணம் கொண்டு இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது இராமானுஜரின் வாழ்க்கையை சுசீமா அம்மா அவர்களின் இந்த தொடரில் படித்தபோது நிறையவே பயம் தொற்றிக்கொண்டது. Women from Venus, Men form Mars என்பது ஒருவேளை உண்மையோ என எண்ணும்  அளவிற்கு வெவ்வேறு கருத்துகள், வெவ்வேறு பிடித்தவைகள் என ஆண் பெண் என பேதம் கொண்டு இருக்கவே செய்கிறார்கள்.

கணவன் சொன்னால் மனைவி கேட்பதில்லை. மனைவி சொன்னால் கணவன் கேட்பதில்லை. இராமானுஜரோ வேறு மாதிரி இருந்து இருக்கிறார் என நினைத்தால் கடைசியில் துறவறம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். அவரது மனைவியின் செயல்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு உரியது என்று சொல்லிவிட முடியாது ஆனால் காலம் காலமாக வெகு சிலரே சமய, அரசியல், சமூக ஈடுபாடுகளில் இணைந்து உள்ளார்கள் எனும்போது பெண்களை குற்றம் சொல்ல இயலாது.

அதீத சமூக சிந்தனை உள்ள ஆடவரோ, பெண்டிரோ திருமணம் முடிக்கக்கூடாது. ஒன்று குடும்பம் பிள்ளைகள் என வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அல்லது ஊருக்கு என வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அன்பை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம் அல்லாடிவிடும். தனிப்பட்ட ஒருவரின் வாழ்வு குறித்த விமர்சனம் தவறுதான் என அறிந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இந்த உலகத்திற்கு தத்துவம் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன. எவருக்குத் தேவை பாவமும் புண்ணியமும், இறைபாதமும், இறைபாதமற்றதும். இதனால்தான் தனிப்பட்ட வாழ்வு பாராமல் இருக்கச் சொல்லிச் சென்றார்கள் அதுவும்  அழகாக அவரவர் தவறுகளை மறைத்து தப்பித்துக் கொண்டார்கள். 

ரமதான் மாதம் என்பதைக் குறிக்கும் வண்ணம் அட்டை வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆசிரியரின் எழுத்தில் உள்ள எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சிற்றிதழ் என்றாலும் எழுதுபவருக்கு நிறைய எதிர்பார்ப்பும், வாசிப்பவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும். எத்தனயோ தொழில்நுட்பம் பெருகிவிட்ட நிலையில் கஷ்டப்பட்டு ஒன்றை உருவாக்குவதைவிட எளிமையான வழி இருப்பின் அதைத் தொடர்வது நல்லது என்றே கருதுகிறேன். எப்படி கொண்டுவர வேண்டும் என எண்ணுகிறோமோ அப்படியே கொண்டு வந்துவிட வேண்டும்.

கான் அவர்களின் விதவை கவிதை வலி சுமக்கும் கவிதை எனில் ஃபாரிஜாவின் பெண்ணாக ஏன் பிறந்தோம் எனும் முதிர்கன்னி கவிதை அதையும் தாண்டிய வலி கொண்டது. இப்போது மேலே குறிப்பிட்ட இராமானுஜர் வாழ்வும் இந்த இரண்டு கவிதை நிலைகளும் எடுத்துக் கொள்வோம். இல்லறவாழ்வு இனிமையாகவோ இனிமையற்றதோ இருந்தாலும் தன்னுடன் வாழும் ஒருவரை இழத்தல் கொடியது. வண்ணங்கள் கலைந்த எனத் தொடங்கி உளி தொலைந்த என ஒவ்வொரு வார்த்தையில் திரும்பவே கிடைக்கப்பெறாத தொலைதல் சொல்லப்பட்டு இருக்கிறது. எவர் முதிர்கன்னி? வறுமைக்குப் பிறந்துவிட்ட கொடுமைகள் என வலி தொடங்கி, இந்த சமூகப்பார்வை குறித்த வார்த்தைகள் ஈட்டிபோல குத்துகின்றன.

இடியாப்பச் சிரிப்பு மிகவும் ரசிக்கும்தன்மை உடையதாக தற்போது மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதை பகடி பண்ணி எழுதப்பட்டவைகள் நிறைய. உண்ண  உணவு இன்றித் தவிக்கும் ஒரு பக்கம். தரப்படும்  உணவில் தரமில்லாமல் தந்து விடுவது ஒரு பக்கம். அப்படியே அதே பக்கத்தில் கணேஷ் அவர்களின் கவிதை யதார்த்தமாக அமைந்து இருக்கிறது. சூரியன் ஒரு ஓவியன். நல்ல ரசனை. நல்ல புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. அடுத்து கர்ணன் குறித்து ரவிக்குமார் அவர்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருக்கிறது. கர்ணன் சிந்திக்கும் அளவுக்கு அவனது புத்தி செயல்படவில்லைதான். அப்படி செயல்பட்டு இருந்தால் ஒரு மகாபாரதம் நடந்து இருக்காது, ஒரு மாபெரும் காவியம் கிடைத்து இருக்காது. வள்ளுவருக்குத் தெரியுமோ என்னவோ நுண்ணிய பல நூல்கள் கற்பினும் என சொல்லிச் சென்றுவிட்டார். ஒட்டுற மண்ணுதான் ஒட்டும். ஜீவா அவர்களின் உபதேசம் நல்லதொரு படிப்பினை கதை. ரசிக்கும்வகையில் இருந்தது. பெற்றோர் பிள்ளைகள் நிலை இப்படித்தான்.

சின்ன சின்ன வரிகளில் உலகம் சொல்லும் கருத்துக்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் எழுத்தும் அற்புதம். அதுவும் இந்த சிற்றிதழில் அவரவர் பெயர் அழுத்தினால் நேராக ட்விட்டர் சென்று விடும்  வடிவமைப்பு நிச்சயம் பாரட்டப்படக்கூடியதுதான். வாழ்த்துக்கள். பிரசன்னா அவர்களைப் பற்றி நாளேடுகளே பெருமை பேசி இருக்கின்றன. அவரது ஓவியங்களின் அலங்கரிப்பு இந்த நமது திண்ணை சிற்றிதழுக்கு பெரிய அங்கீகாரம். ஓவியங்கள் நம்முடன் பேசுவது போலவே இருக்கும் என்பதுதான் இவரது ஓவியங்களின் சிறப்பு.

கார்த்திக் அவர்களின் ஆலவாயன் பற்றிய நாவல் மதிப்புரை மிகவும் சிறப்பு. நிறைய நூல்களைப் படிக்கக்கூடியவர். மிகவும் தெளிவான எண்ணங்கள் கொண்டு இருப்பவர். மாதொருபாகன் எனும் நாவலின் தொடர்ச்சி இது. ஒரு நாவல் மனிதர்களின் மனதோடு ஒட்டிவிட வேண்டும். பல விசயங்களை இந்த நாவல் ஆசிரியர் சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

கிரேசி மோகன் அவர்களின் நேர்காணல். அடடா! சுசீமா அம்மா அவர்களின் கேள்விகள் சிறப்பு என்றால் கிரேசி அவர்களின் பதில்கள் வெகு சிறப்பு. இவர் குறித்து பல விசயங்களை அறியமுடிந்தது. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நிலை எனக்கு மன கஷ்டம் தந்தது. ஆஹா ஓஹோவென புகழப்படும் படைப்பாளிகள்  நிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்பது பாரதியார் காலத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது ஏன்  வள்ளுவரே கூட பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என சொல்லிவிட்டார். நிறைய வாசிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை எனக்கும் தான். மிகவும் பிடித்த வரி, எனது எழுத்துதான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு. ஜானகி ஆசிரியை, அட! தமிழ் மீது பற்றுக்கு ஒரு ஆசிரியை, ஆசிரியர் என அனைவருக்கும் இருந்து விடுகிறார்கள். வெண்பா! எழுத்தாளர் சொக்கன் அவர்களை நினைவுப்படுத்தினார். இது மட்டுமல்லாது, நண்பர் ரத்தினகிரி வெண்பா அருமையாக எழுதுவார், வெண்பா எப்படி எழுதுவது என கற்றுத்தந்த சூரியகாந்தி அவர்களை நினைவுபடுத்தியது. ஒவ்வொரு வெண்பாவும் அசத்தல்.

வருண் அவர்களின் நுரையீரலின் ஓலம் அந்த அழுகுரல் புகையில் கரைந்து போய்விடுவது சோகம். எவரேனும் செவிகொடுத்து கேட்கமாட்டார்களா? உமா க்ருஷ் அவர்களின் பாடல் பரவசத்தில் மலரே மௌனமா மிகவும் அற்புதமான பாடல் வரிசையில் ஒன்று என்றால் மிகையாகாது. அவர் எஸ்பிபி குறித்து சொன்ன தகவல் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்பதை விட எப்படி பாட வேண்டும் என்பதில் இருக்கிறது ஒரு பாடலின் வெற்றி. இசை அதற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அற்புதமான வரிகள் இருந்தும் சிதைத்துவிடும் இசையும், காண சகிக்காத காட்சியும் இல்லாமல் அனைத்துமே ஒருங்கிணைந்த ஒன்று என பரவசம் கொள்ளக்கூடிய பாடல் தான். மிகவும் அருமை.

கூட்டாஞ்சோறு என்பது சாதாரண சொல் என்றே நினைத்து இருந்தேன்.  கூட்டாஞ்சோறு என்றால் பழைய சோறு, புது சோறு என கலந்து உருவாக்குவது என நினைத்தால் மிகவும் அருமையாக அந்த சோறு எப்படி தயாரிப்பது என எழுதி இருக்கிறார் நண்பர் ரவி. புளியோதரை, எலுமிச்சை  சாதம், தயிர் சாதம் போல இந்த கூட்டாஞ்சோற்றில் பல காய்கறிகள் பங்குபெற்று விடுகின்றன, அத்தோடு புளி கரைசல், எலுமிச்சை எல்லாம் வந்து விடுகிறது. பிஸ்மில்லாபாத் என்பதுதான் இதுவோ?

ஆசிரியர் அவர்களின் கண்ணதாசன் குறித்து தெரிந்து கொள்ளமுடிந்தது. இன்று ஆசிரியர் இந்த சிற்றிதழை அச்சு வடிவில் கொண்டுவரலாம் என எண்ணியபோது எனக்கு சந்தோசமாக இருந்தது. செய்யலாம் என்றே சொன்னேன். ஆனால் பலர் வேண்டாம் என்று கூறினாலும் 'நாட்டாமை' என அனைவராலும் ட்விட்டரில் அறியப்படும் திருமாறன் அவர்கள் இன்னும் பல விசயங்கள் சேர்க்கப்பட வேண்டும் என சொன்னார். சரிதான், ஆனால் எவர் எழுத முன் வருகிறார்கள்? எழுதுவது என்பது ஒரு அர்ப்பணிப்பு. அதை எல்லோராலும் செய்ய இயலாது. இணையத்தில் பல விசயங்களை எழுதுபவர்கள் தனக்கென ஒரு வழி கொண்டு இருக்கும்போது இப்படி நூல்கள் எல்லாம் வெளியிட எழுத முன் வருவார்களா? நமது திண்ணைக்கு நல்ல எழுத்தாளர்கள் கிடைக்கவும் நிறைய நல்ல விசயங்கள் சேர்த்துக் கொள்ளவும் வாழ்த்துகிறோம்.





No comments: