Showing posts with label சிறுகதைப் போட்டி - உயிரோடை. Show all posts
Showing posts with label சிறுகதைப் போட்டி - உயிரோடை. Show all posts

Tuesday 30 June 2009

என் கூட வா!

உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.


மழை சொட்டு சொட்டாக பூமியில் பொட்டு வைத்துக்கொண்டிருந்தது. தனது சட்டையிலும் பொட்டு வைத்ததை உணர்ந்ததும் வெகுவேகமாக ஓட நினைத்தான் சிவபாலன். அவன் வெகுவேகமாக ஓட நினைத்தபோதே மழையும் வேகமாக வந்து சேர்ந்தது. எங்கே நனைந்துவிடுவோமோ என அதிவேகமாக ஓடினான். மூச்சு இறைத்தது. மழை அவனை நனைக்கும் முன்னர் சிவதாசினியின் வீட்டின் கதவைத் தொட்டான் சிவபாலன்.


கதவைத் தட்டினான், சிவதாசினியின் தந்தை கதவைத் திறந்தார். அவரது தந்தையை எதிர்பாராதவனின் மூச்சு மேலும் இறைக்கத் தொடங்கியது.


‘’என்ன வேணும்’’


‘’சாரி சார், தப்பான அட்ரஸுக்கு வந்துட்டேன், மழை வேற பெய்யுது’’


எதுவும் பேசாமலேயே கதவைச் சாத்திவிட்டுச் சென்றார் சிவதாசினியின் தந்தை. கால்களை மழை நனைக்க ஆரம்பித்தது. காற்றினால் வீசப்பட்ட சில தூறல்களும் முகத்தில் பட்டுச் சென்றது. ஓடிவந்ததில் உடலில் ஏற்பட்ட உஷ்ணம் வெளிப் பறக்க சில்லென்றே உணர்ந்தான். சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினான். இம்முறை சிவதாசினியின் தாய் வந்து கதவைத் திறந்தார்.


‘’யாரைப் பார்க்கனும்?’’


‘’சிவதாசினியோட வீடு…’’


‘’இதுதான், நீ யாரு?’’


‘’அவளோட கூடப் படிச்ச பெரண்டு, ஒன்னாப் படிச்சோம, அவளைப் பார்க்கனும்’’


‘’அவ இங்க இல்லை’’


சிவபாலனின் பதிலை எதிர்பார்க்காமல் சிவதாசினியின் தாய் கதவைச் சாத்திவிட்டுச் சென்றாள். சிவபாலனுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. மழையில் நனைந்து கொண்டே யோசனையுடன் திரும்பி நடந்தான்.


தனது நெருங்கிய நண்பன் சுப்புராஜன் தகவல் சொல்லியிருக்காவிட்டால் அவன் சிவதாசினியைத் தேடி டில்லியிலிருந்து இத்தனை அவசரமாக வந்திருக்கமாட்டான். கைப்பேசியின் மூலம் சிவதாசினியைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அந்த எண் உபயோகத்தில் இல்லை என அறிந்ததும் பதட்டம் கொண்டான்.


சிவபாலன் சுப்புராஜனைத் தொடர்பு கொண்டு பேசினான். அந்த ஒரு விபரத்தைத் தவிர சிவதாசினி எங்கு போனாள், என்ன ஆனாள் எனத் தனக்குத் தெரியாது, தெரிந்தால் சத்தியமாக தகவல் சொல்கிறேன் என்றான் சுப்புராஜன்.


பிறரிடம் விசாரித்தபோது எங்களுக்கெல்லாம் எந்த ஒரு தகவலும் தெரியாது, அப்படியா? என அனைவருமே ஆச்சரியமாகக் கேட்டதும் மனமுடைந்து போனான் சிவபாலன்.


இரண்டு நாட்களானது. சிவதாசினியைத் தேடி அலைந்து திரிந்தவன் தனது வீட்டில் இரவில் மாடியில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் தவறாகப் போகவே மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது வீட்டுக் கதவினைத் தட்டும் சப்தம் கேட்டு வெகுவேகமாக ஓடி வந்தான்.


வெளியே சுப்புராஜன் நின்று கொண்டிருந்தான். சுப்புராஜனின் முகமெல்லாம் வியர்த்து இருந்தது, உடலில் ஒருவித நடுக்கம் தெரிந்தது.


‘’சிவதாசினியைப் பார்த்தேன்டா’’


‘’எங்கேடா இருக்கு அவ வீடு’’


‘’அவ புருசன் அவளை வைச்சித் தொழில் நடத்துறான்டா’’


‘’சீ… இன்னுமாடா அந்தப் பழக்கத்தை நீ விடலை’’


‘’மாத்திக்க முடியலைடா, இதுதா அட்ரஸூ நீ போய் பார்த்துக்கோ, என் செல் புது நம்பர் மாத்திட்டேன்’’


வார்த்தை குளறி குளறிப் பேசிய சுப்புராஜன் இருட்டில் சென்று மறைந்தான். முகவரியினை சென்று அடைந்தான் சிவபாலன். கதவைத் தட்டினான். கதவைத் திறந்தவன் சற்று வயதானவன் போல இருந்தான்.


‘’லேட்டாயிருச்சி, நாளைக்கு வா’’


‘’கூடப் போட்டுத் தரேன்’’


உள்ளே அனுமதித்தான். சிவதாசினியைக் கண்டான். சுப்புராஜன் தகவல் சொல்லியே வந்ததாகவும் தன்னுடன் வந்துவிடுமாறும் கெஞ்சிக் கூத்தாடி அவளை அழைத்துக்கொண்டு திறக்கப்படாதப் பெட்டியுடன் அவசரமாக டில்லிக்கு சிவதாசினியுடன் கிளம்பிச் சென்றான் சிவபாலன். டில்லி வரும்வரை அவளிடம் அவன் எதுவும் கேட்கவில்லை, அவளும் எதுவும் சொல்லாமல் அழுத விழிகளுடனே இருந்தாள்.


காணாமல் போனவளை காவல் நிலையத்திலும் சொல்ல வழியின்றி அவளால் வந்த பணத்தையெல்லாம் கொண்டுபோய் விலைமகள் ஒருவளிடம் தந்து அழுது கொண்டிருந்தான் சிவதாசினியின் கணவன்.


டில்லியில் தனது அறையில் சிவதாசினியை அமர வைத்துவிட்டு பெட்டியைத் திறந்து சேலைகள், சுடிதார்கள், நகைகள் என எல்லாம் காட்டி அவளை குளித்துவிட்டு, பிடித்த சேலை, நகைகள் எல்லாம் போடச் சொன்னான். மனம் மரத்துப் போனவளாய் அவன் சொன்னவாறே சிவதாசினி செய்தாள்.


‘’இப்போதான் என் சிவதாசினி மாதிரி இருக்க’’


‘’சுப்புராஜன் கூட தெரிஞ்சே என்னை….’’


விக்கித்து அழுதாள். துடிதுடித்துப் போனான் சிவபாலன்.


(முற்றும்)