Wednesday 18 December 2013

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 15

2003ம் வருடம் ஒரு ஆய்வகத்தில் இருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு மாற்றம் ஆகி இருந்தது. அப்போதுதான் கிட்டத்தட்ட பல எலிகளை கொன்று முடித்து ஒரு ஆய்வு முடிந்து இருந்தது. புது ஆய்வகத்தில் விலங்கினத்துடன் வேலை செய்ய வேண்டிய சூழல் மறுபடியும் வந்தது. வேலை செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே கண்களில் எரிச்சல், இருமல் என வந்துவிட்டது. இதை இப்படியே விட்டுவிட்டால் சரிப்படாது என அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் சென்று விசாரித்தேன்.

நீ இந்த வேலையை விட்டுவிடு என்றும் வேறொரு வேலையை தேர்ந்தெடுத்துக் கொள் என்றும் சொன்னார். எனக்கோ இந்த வேலையை விட்டுவிட விருப்பமில்லை. மாசுக்கள் எல்லா இடங்களிலும் உண்டு, அதற்காக நாம் வீட்டிலேயா முடங்க முடியும் என அந்த மருத்துவரிடம் சொன்னதும் உனது உடல் நலனுக்காகவே சொல்கிறேன் என்றார். ஆனால் செத்தால் வேலை இடத்திலேயே செத்து விடுவது என முட்டாள்தனமான எண்ணத்துடன் மாற்று காரணி இருக்கிறதா என கேட்டேன். மாஸ்க் அணிந்து வேலை செய்து பார், ஏதேனும் பிரச்சினை எனில் என்னை வந்து பார் என்றார்.

மாஸ்க் அணிந்தவுடன் பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்தது என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் பிரச்சினைகள் சற்றே குறைய செய்தன. அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டு கொண்டே இருந்தது. கொடுமை, ஒருமுறை vertigo எனப்படும் நோய் போல வந்து தொலைந்தது. நடக்க முடியாது, தள்ளாடும். உடனடியாக மருத்துவரை அணுகினேன். ear imbalance என சொல்லிவிட்டு antipsychotic மாத்திரை கொடுத்தார்.  மூன்றே தினங்கள் உடல்நலம் சரியாகிவிட்டது.

அதற்கடுத்து அவ்வப்போது அலர்ஜி வரும். அதற்கென மாத்திரை ஒன்று தந்து இருந்தார்கள், அதை எடுத்துக்கொண்டு வேலை செய்ய சொன்னார்கள். நான் அந்த மாத்திரையை இதுவரை எடுக்கவும் இல்லை, எடுக்க துணிந்ததும் இல்லை. இப்போது எனது நுரையீரல் எப்படி இருக்கிறதோ என தெரியாது, ஆனால் அதிகம் சிரித்தால் மூச்சுப்பிடிப்பு போல வந்து தொலையும். பிரணாயமம் செய்ய நினைத்து தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்.

இந்த உலகில் நிறைய நபர்கள் தங்களது உடல்நலனை பொருட்படுத்தாது கடுமையான வேலைகள் செய்து வருகிறார்கள். அவர்களது நோக்கம் சம்பாதிக்க வேண்டும் என்றோ, சாதிக்க வேண்டும் என்றோ இல்லை. இவ்வுலக மக்களின் நன்மைக்காக மட்டுமே அவ்வாறு செயல்படுகிறார்கள். ஊர் உலகில் வேறு வேலையா இல்லை என்றே என்னை பலரும் கேட்டதுண்டு.

நான் படித்து முடித்த பார்மசி துறையில் ஒரு கடையை போட்டு என்னால் அமர்ந்து இருக்க முடியும். அன்றைய சூழலில் அது எளிதான காரியமாக இருந்தது. ஆனால் உள்ளிருக்கும் ஈசன் என்ன நினைத்தானோ அதுதானே நடக்கும். ஆராய்ச்சி துறையை தெரிவு செய்தேன். இன்று பல வருடங்கள் போராட்டம். எப்படியாவது ஒரு நல்ல மருந்தினை ஆஸ்த்மா சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கண்டுபிடித்துவிடலாம் என ஒரு நப்பாசை.

இந்த பணியில் எல்லாம் நிறைய சம்பாதிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். பணம் மட்டுமே குறிக்கோளாக நினைப்பவர்கள் வியாபாரம் செய்வதுதான் சிறந்தது. ஆனால் இந்த பணிக்காக  நிறைய பணம் இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது. உதாரணத்திற்கு ஒரு வினையூக்கி 5 மில்லிகிராம், நமது ஊருக்கு 2 லட்சம் ரூபாய். இந்த அளவை வைத்து என்ன செய்ய முடியும். கிராம் கணக்கில் தேவைப்படும்! இப்படியாக ஒவ்வொருமுறை பணம் வேண்டும் என பணம் தருபவர்களிடம் கையேந்தும் நிலைதான் இருந்து வருகிறது. அதுவும் பணம் தருபவர்கள் அத்தனை எளிதாக தந்துவிட மாட்டார்கள்.

இந்த மருந்து நோய்தனை தீர்க்கும் வல்லமை உடையது என கொஞ்சமாவது நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும். ஒரு சிலர் முழுதாக படிக்காமல் அவர்களது சொந்த கற்பனையில் தங்களது விளக்கத்தை எழுதிவிடுவார்கள். அவர்களை எல்லாம் என்ன செய்வது? ஆனால் ஆராய்ச்சி துறைக்கு நிறைய பெண்கள் வருகிறார்கள். அவர்களின் பொறுமைக்கு, சிந்தனைக்கு  இது ஒரு நல்ல வேலை தான்.

சமீபத்தில் என்னுடன் வேலை பார்த்த பெண் 'அவர் அழகாக இருப்பதால் வேலைக்கு செல்ல பயப்படுகிறேன் எனவும், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் எனவும் woman in science என எழுதப்போவதாக நாளிதழ் ஒன்றில் பேட்டி கொடுத்ததுடன் டிவியில் வந்து சொல்லிவிட்டார். ஆனால் உண்மை நிலை வேறு. அந்த பெண் குறித்து இங்கு மேலும் எழுதுவதை தவிர்த்து விடுகிறேன். பிழைத்துப் போகட்டும்.

ஆனால் உண்மையில் இந்த ஆராய்ச்சிக்கு வந்தபிறகு பலர் வெருண்டு ஓடியதை கண்டு இருக்கிறேன். மூன்று வருடம் முடித்த பின்னர் கூட சிலர் ஓடி இருக்கிறார்கள். நிறைய தோல்விகளே இந்த வேலையில் அதிகம். Depression is common in scientific research என்பார்கள். இன்னும் இந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கட்ட முயற்சி. பாதை கரடு முரடுதான் ஆனால் இலக்கு மிகவும் இனிமையான ஒன்று. அதற்காகவே பயணம் தொடரும்.

(தொடரும்)

No comments: