Friday, 6 December 2013

ராமனின் சீதை தீ குளித்தாரா?

என் அம்மா இறந்தபின்னர் பத்து நாட்கள் எனது சின்னம்மா இரவில் ராமாயணம் புத்தகம் எடுத்து வைத்து படித்து கொண்டிருந்தார். அவரை சுற்றி சிலர் அமர்ந்து இருந்தார்கள். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அதுவும் எனக்கு எங்கள் வீட்டில் ராமயாணம் புத்தகம் இருக்கும் என்றே தெரியாது. ராமாயணம் புத்தகத்தை படித்தால் இறந்தவர்களின் ஆத்மா சொர்க்கத்தை அடையும் என்பது ஒருவகையான ஐதீகம் என பின்னர் தெரிந்து கொண்டேன். அன்று கூட ராமாயணம் படிக்க வேண்டும் என நினைத்தது இல்லை. நான் அதிகம் படித்த புத்தகங்கள் கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள், (அர்த்தமுள்ள இந்துமதத்தை பலமுறை படித்து இருக்கிறேன்) மற்றும் அகிலனின் சிறுகதை தொகுப்பு மட்டுமே. நண்பன் ஸ்ரீதர் கொடுத்த பட்டுகோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் கதைகள் என சில. பாடபுத்தகங்களை மட்டுமே அதிகம் படித்து வளர்ந்தேன்.

நான் இதுவரை ராமாயணம் முழுவதுமாக படித்ததே இல்லை. என்னிடம் இப்போது ராமாயணம் புத்தகம் இருக்கிறது. திடீரென சில பக்கங்களை புரட்டி அதில் இருக்கும் பாடல்களை எப்போதாவது வாசிப்பது வழக்கம். ஆனால் ராமாயணம் குறித்து பல விசயங்கள், விவாதங்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் 'விடிய விடிய கதை கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பானு  சொன்னானாம்' எனும் வழக்கு மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் இப்படித்தான் பலர் ராமாயணத்தை அரைகுறையாக தெரிந்து கொண்டு அதில் குறைகள் என குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது சரியா? என்பன போன்ற வாதங்கள என கேட்டு இருக்கிறேன். மூலக்கதையை சற்று தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப கம்பர் மாற்றி விட்டார் எனும் சொல் பேச்சும் கேட்டதுண்டு. ராவணன் மிகவும் நல்லவர், அவர் சைவ சமயத்தை சார்ந்து இருந்ததால் சைவ சமயத்தை மட்டமாக்க வைணவ சமயத்தை சேர்ந்த ராமனை உயர்த்தி சொல்ல எழுதப்பட்டது என்பார்கள்.

ராமாயாணத்தை கேலி செய்வதற்காக படிக்க தொடங்கிய நான் ராமாயாணத்தின் பெருமை பேச தொடங்கினேன் நான் என்றார் கன்ணதாசன்.
ஒரு கதாசிரியர் என்ன நினைத்தாரோ அதைத்தான் அவரால் எழுத முடியும், நாம் நினைப்பதை எல்லாம் எழுத கதாசிரியர் எதற்கு? ஒரு கதையின் தன்மை எழுதுபவரை விட புரிந்து கொள்பவர்களின் மன நிலையினை பொருத்தே அந்த கதையின் தன்மை இருக்கும், இல்லையெனில் திருக்குறளுக்கு இன்னும் பலர் உரை எழுதிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

அப்படித்தான் ராமாயணமும் சரி, மகாபாரதமும் சரி மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ராமன் தனது மனைவியை சந்தேகம் கொண்டதால் சீதை தீயில் குதித்து தனது புனித தன்மையை நிலைநாட்டினார் என்றே பேசப்படுகிறது.

இந்த விஷயத்தை வால்மீகியும் சரி, கம்பரும் சரி எப்படி எதிர்நோக்கினார்கள் அல்லது எப்படி எழுத்தில் வைத்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் சொன்ன கதையை இனிமேல்தான் சென்று இந்த நூல்களில் பார்க்க வேண்டும்.

ஒரு வண்ணான் ராமர் நகர்வலம் வந்தபோது தனது மனைவியிடம் 'என்னை என்ன ராமன் என நினைத்தாயா? எவனோ ஒருவன் வீட்டில் பலநாட்கள் இருந்துவிட்டு வந்தவளை பத்தினி என ஏற்றுக் கொள்ள என சொல்லிவிடுகிறான்' இதைக் கேட்ட ராமன் தன் மனைவிக்கு இப்படி அவப்பெயர் நேர்ந்து விட்டதே என மனம் கலங்குகிறான். ராமனுக்கு தெரியும் சீதை பத்தினி என. ஆனால் இங்கே கதாசிரியர் ராமனை ஒரு சாதாரண மனிதராகவே பாவிக்கிறார்.

ஊர் பழி நேர்ந்துவிட்டதே என நினைத்த ராமன் ஊருக்கு சீதை பத்தினி தான் என சொல்லவே தீக்குளிக்கும் வைபவம் நடைபெறுவதாக அந்த காவியத்தில் காட்டபடுகிறது. ராமன் தன மனைவியை சந்தேகபட்டுவிட்டான் என நினைப்பது நமது அறியாமை. ஊரின் சந்தேகம் போக்கவே அந்த நிகழ்வு என்பதை தெரிந்து கொளல் வேண்டும். மேலும் கதாசிரியர் ஊரின் வாயை அந்த வண்ணான் நிகழ்வை காட்டாமல் தவிர்த்து இருக்கலாம். ஆனால் பின்வரும் சந்ததியினர் ஒருவேளை இந்த கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என அதற்கும் பதில் வேண்டுமென்றே அந்த நிகழ்வை வைத்து இந்த தீக்குளிப்பு வைபவத்தை நிறைவேற்றி இருக்கலாம்.

எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். அதாவது பத்தினியாக இருப்பவர் தனது சீலையில் நெருப்பை வாங்கிக் கொண்டால் அந்த சீலை பொசுங்காது என! என்ன பைத்தியகாரத்தனம். கற்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் பொது, ஆனால் பெண்ணின் மீது அதை ஏற்றிவைத்து சமூகம் அழகு பார்த்தது. பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோ?நெருப்பு எதையும் எரித்துவிடும் தன்மை உடையது. பெண் நெருப்பை போன்றவள் என வசனம் எல்லாம் உண்டு.

நெருப்பை பொசுக்கிவிடும் சீலையை போலவே உரிய சாதனம் உடலில் பொருத்திக் கொள்ளாமல் நெருப்பில் குதித்தால் பொசுங்கி போவார்கள். நமது உடல் நிலை அப்படி. நமது தோல், செல் அமைப்பு எல்லாம் கருகிப் போய்விடும். இது கூட அறியாத சமூகத்திலா  நாம் இருக்கிறோம். தீயில் குதித்துதான் பாருங்களேன்.

அப்படி எனில் எப்படி சீதை தப்பித்து இருக்க இயலும்? அதுதான் கதாசிரியரின் வெற்றி. சீதையை தெய்வ அவதாரமாக காட்டவே இந்த யுக்தி. வால்மீகி இப்போது இருந்து இருந்தால் பல விளக்கங்கள் கேட்டு இருக்கலாம், அல்லது அயோத்தி காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சந்ததி இப்போது இருந்தால் அதையும் கேட்டு வைக்கலாம். ஆனால் எதுவுமே இல்லை. எனவே ஒரு காவியத்தை காவியமாக படித்துவிட்டு அதில் இருக்கும் விசயங்களை அதீத கற்பனைகளுக்கு விடாமல் அது ஒரு நிகழ்வு என கடந்து செல்ல பலரால் முடிவது இல்லை.

இந்த உலகில் நிறைய கருத்துகளுடன் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் என்ன செய்வது!

2 comments:

கோவி.கண்ணன் said...

//பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோ?//

:) மணவிலக்கு பெற்று இரண்டாம் திருமணம் செய்யும் பெண்களின் கற்பை பழைய கணவர் எடுத்துச் சென்றுவிடுவாரோ. அதையும் சேலையில் தீ வைத்து பார்த்து தான் கண்டுபிடிக்கனும் போல.

கற்புக் கனல் - என்று சொல்வதால் கற்பும் நெருப்பும் கலந்திருக்கும் போல. :)

Radhakrishnan said...

வணக்கம் கோவியாரே. அது சரி!