Thursday 8 December 2011

எப்பவுமே சாம்பார் தானா!

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் இருக்கும் தீராத பிரச்சினை சமையல் பிரச்சினை.

கூட்டு குடும்பமாக இல்லாமல் தனிகுடித்தனகாரர்களாக இருந்தால் இந்த பிரச்சினை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

அதிகாலை எழுந்து சமையல் செய்து சாப்பிட்டு செல்லும் நிதானம் எல்லாம் இந்த ஊரில் இல்லை.

சாம்பார், கூட்டு என டிபன் கேரியரில் மதிய சாப்பாடுக்கு தூக்கி செல்லும் வழக்கம் எல்லாம் இங்கே இல்லை.

மாலை வேளையில் வந்து நிம்மதியாக சமைத்து சாப்பிடும் அளவிற்கு நேரமும் இல்லை.

எல்லாம் ஒருவித சோம்பலோ என எண்ணத் தோன்றினாலும் வேலைக்கு சென்று வரும் அலுப்பு, சமையல் பண்ணியதும் அந்த சமையல் பாத்திரங்களை அலச வேண்டும் என்கிற நினைப்பு பாடாய் படுத்தும். ஒரு போனை எடு. இது இது என சொல்லிவிடு. வாசலில் வந்து நிற்கும் சாப்பாடு எனும் வழக்கம் அதிகமாகவே உண்டு. இருப்பினும் அவ்வப்போது வீட்டு சமையலும் உண்டு, வார இறுதி நாட்களில் மனைவியின் கைவண்ணத்தில் அற்புத சாப்பாடு என்றும் உண்டு.

வார வேலை நாட்களில் இருப்பதோ மூன்று பேரு, எதற்கு சமையல் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் வருவது இயல்புதான். தோசையா, இட்லியா? மாவாட்ட தேவையில்லை. அரைத்த மாவே விற்பனைக்கு கிடைக்கிறது. அரைத்த மாவை வாங்கி தோசைக்கு சட்னி அரைத்து சாப்பிடும் முன்னர் சரவண பவனில் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டு பொழுது கழித்துவிடலாம் என்கிற நினைப்பு வரும். ஒரு பர்கர், ஒரு பிச்சா அதோடு கூடிய சிப்ஸ் வாழ்க்கை ரொம்பவே எளிதாக போனது.

இருந்தாலும் நம்ம ஊரு வழக்கப்படி சோறு ஆக்கியும் தீர வேண்டி வரும். அதற்கு என்ன குழம்பு வைப்பது. வேலையில் இருந்து வேகமாக வீடு சென்றுவிட்டால் சிரமம் பாராது சோறு ஆக்கி சாம்பார் வைத்து விடும் வழக்கம் உண்டு. எனக்கு சாம்பார் தவிர இதுவரை வேறு குழம்பு வைத்தே பழக்கம் இல்லை. நான் சமைத்தால் 'எப்பவுமே சாம்பார் தானா' என பையன் கேலி பண்ணும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

சரியென ஒரு நாள் அவனுக்கு அருமையான குழம்பு வைக்கலாம் என மிராவின் கிச்சன் பக்கம் போனேன்.

அங்கே ஒரு கத்தரிக்காய் கார குழம்பு இருந்தது. மிகவும் வசதியாக போய்விட்டது என வீட்டில் என்ன இருக்கிறது என தேடினேன். சிறிய பிஞ்சு கத்தரிக்காய் தேடினேன். இல்லை. பெரிய கத்தரிக்காய் இருந்தது, அதை பிஞ்சு பிஞ்சாக வெட்டி போட்டேன். சின்ன வெங்காயம் தேடினால் பெரிய வெங்காயம் தான் இருந்தது. அதை சின்ன சின்னதாக வெட்டி போட்டேன். பூண்டு இருந்தது. அப்பாடா என நினைக்கும்போதே தக்காளியை காணவில்லை. கடைக்கு சென்று தக்காளி வாங்கும் அளவுக்கு பொறுமை இல்லை. எனவே தக்காளி இல்லாமல் சமைப்பது என முடிவு கட்டினேன்.

தேங்காய் துருவலும் இல்லை, முந்திரியை அரைக்க மனசும் வரல்லை. கறிவேப்பிலையும் காணலை, தனியா தூளும் தனியாவே இல்லை. சோம்பு, உளுத்தம் பருப்பு எல்லாம் எங்கே என தெரியவும் இல்லை. காரக் குழம்பு வைக்க சொன்ன வகையில் பல பொருட்கள் வீட்டில் இல்லவே இல்லை. என்ன செய்வது, இந்த குழம்பு வைத்தே தீர்வது என இறங்கினேன்.

கொஞ்சூண்டு புளியை அதிகமாக தண்ணீரில் கரைத்து வைத்திருந்தேன்.

நல்லெண்ணெய் ஊற்றி கடுகையும், வெங்காயத்தையும் நன்றாக வதக்கினேன். அதோடு கத்தரிக்காய், பூண்டு தனையும் போட்டு வதக்கினேன். காத்திருந்த புளி தண்ணீர்தனை எடுத்து ஊற்றினேன். பார்க்க ரசம் போலிருந்தது. 'வத்தகுழம்பு பொடி' அலமாரியிலே தேமே என இருந்தது. அதை எடுத்து மூன்று ஸ்பூன்கள் போட்டேன். நன்றாகவே கொதிக்க விட்டேன். இரண்டு வத்தலை கிள்ளிப் போட்டேன். இன்னும் ரசம் போலிருந்தது.

என்ன செய்வது என முடிந்தவரை கொதிக்க வைத்துவிட்டு நிறுத்திவிட்டேன். பையனும் வந்தான், இணையதளத்தில் இருந்த படத்தை காட்டி இந்த குழம்பு வைத்தேன் என சொன்னேன். யாரது காஞ்சனா ராதாகிருஷ்ணன் என்றான். சமையல் சொல்லி தரும் அம்மா என்றேன். சிரித்தான். எனது பெயர் போலிருக்கவே யார் எனும் தேடல் அவனுக்கு.

நான் வைத்த குழம்புவையும், காஞ்சனா அம்மா வைத்த குழம்பு படத்தையும் பார்த்தான். 'அந்த குழம்பு போல இல்லையே' என்றான். 'எதோ எனக்கு தெரிஞ்சி வைச்சது' என்றேன்.

சாப்பாடு எடுத்து வைத்து குழம்பு (தண்ணீராகவே இருந்தது) ஊற்றி சாப்பிட்டான். நன்றாக இருக்கிறது என்றான். பாவம் பசி. கொஞ்சம் காரம் அதிகம் என்றான். தயிர் பக்கத்தில் வைத்து கொள் என்றேன். காளான் வறுத்து வைத்திருந்தேன்.

'எப்பவுமே சாம்பார் வைக்கிறேன் என சொல்வாய் அல்லவா, அதற்குதான் இந்த குழம்பு' என்றேன். சாப்பிட்டு முடித்த பின்னரும், அந்த படத்தில் இருப்பதை போல வைத்து இருக்கலாம் என்றான். 'இந்த சாப்பாடு கூட இல்லாமல் எத்தனையோ பிஞ்சு குழந்தைகள் வாடுகிறார்கள்' என எனது வழக்கமான பாடலைப் பாடினேன். 'அதற்காக எப்படி வேண்டுமெனினும் சமைப்பதா' என எதிர் கேள்வி கேட்டான். 'நன்றாக சமையல் கற்று கொள்ள வேண்டும்' என மனதில் உறுதி கொண்டேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மனைவி வந்தார். சட்டியை திறந்து பார்த்தார். என்ன குழம்பு என்றார். கத்தரிக்காய் கார குழம்பு இணையத்தில் இருந்து பார்த்து செய்தேன் என்றேன். 'பேசாம சாம்பாரே வைச்சிருக்கலாம்' என்றார். நான் அசடு வழிந்தேன்.

சாப்பிடு, இன்று வெளியில் சாப்பாடு வாங்கும் எண்ணம் இல்லை என்றேன். சாதம் எடுத்து வைத்து குழம்பினை ஊற்றி சாப்பிட்டார். சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்தேன்.

சாப்பிட்டுவிட்டு நன்றாக இருந்தது என்றார். கார குழம்பு செய்ய அனைத்து வகைகள் இல்லாவிட்டாலும் இருந்தவற்றை கொண்டு அன்போடு சமைத்த அந்த குழம்பு அன்று நிறையவே மணம் வீசிக் கொண்டிருந்தது.

 மிரா கிச்சன் நடத்தும் காஞ்சனா அம்மாவுக்கு நன்றி. 

7 comments:

Philosophy Prabhakaran said...

காஞ்சனா சமையல் குறிப்புன்னு சொல்லியிருந்தா எல்லாம் பயந்திருப்பாங்க...

ப.கந்தசாமி said...

பரவாயில்லீங்க, போகப்போக சரியாயிடும்.

Radhakrishnan said...

நன்றி ஐயா.

பலமான யோசனைதான் பிரபாகரன். நன்றி.

நம்பிக்கைக்கு நன்றி ஐயா.

Unknown said...

உண்மைதான் நமது அனுபவங்கள் இவை...
உணவோடு உலகையும் சேர்த்து ஊட்டும் நல்ல அப்பா நீங்கள்....
நல்லப் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே!

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.

SURYAJEEVA said...

ச.தமிழ்செல்வன் எழுதிய ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது புத்தகம் கிடைத்தால் படித்து பாருங்கள்... வெளியீடு:பாரதி புத்தகாலயம் என்று நினைக்கிறேன்

Radhakrishnan said...

புத்தக அறிமுகத்திற்கு நன்றி சூர்யா