Sunday 25 December 2011

பெண்ணால் பாவப்பட்டேன்

இதோ இந்த இதழை வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தங்களிடம் தருகிறேன் என வீட்டு வாசற்கதவை தட்டிய முன் பின் தெரியாத இரு நபர்கள் தந்தார்கள்.

வாங்கி பார்த்தபோது எழுந்திரு என அந்த இதழின் பெயர் இருந்தது. அவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என புரிந்தது. இப்படி எப்போதாவது வந்து ஒரு சில தாள்களை தந்துவிட்டு போவார்கள். அதை மறுக்காமல் வாங்கி வைத்துவிடும் வழக்கம் உண்டு. சில நேரங்களில் என்ன எழுதி இருக்கிறது என மேம்போக்காக பார்ப்பது உண்டு, அவ்வளவுதான் ஆர்வம்.

சில வருடங்கள் முன்னர் என்னிடம் இது போல ஒரு காகிதம் தந்து இந்த உலகம் அமைதியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேட்ட ஒருவரிடம் அதிக நேரம் பேசியது உண்டு. இறைவன் வந்துதான் இந்த உலகத்தை பாவத்தில் இருந்து காக்க வேண்டுமெனில் அந்த பாவத்தை உருவாக்கிய இறைவன் தனை நீக்கினால் எல்லாம் சரியாய் போய்விடுமே என்று சொன்னதும் அவர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார். வீட்டில் அன்று எனக்கு நல்ல திட்டு விழுந்தது. எவரேனும் இது போன்று வந்தால் அன்பாக உபசரிக்காவிட்டாலும் அவர்களின் மனம் நோகுமாறு பேசாமல் அனுப்பி வைப்பது நல்லது என்றே சொன்னார்கள். அன்றிலிருந்து எவரேனும் வந்தால் பேசாமல் ஒரு புன்முறுவலுடன் வாங்கி வைத்து கொள்வேன்.

பத்திரபடுத்திய அந்த இதழை படிக்க வேண்டும் என நினைத்து பல நாட்கள் கடந்து போனது. இயேசு கிறிஸ்து நினைவுக்கு வந்ததால் அந்த இதழை நேற்று எடுத்து பார்த்தேன். கார்பன் கூட்டாளி எழுதியது போன்றே அந்த இதழில் மரபணுக்கள் பற்றி எழுதி இருந்தது. எப்படி இயற்கையாக இந்த மரபணுக்கள் எழுதி இருக்க முடியும் என கேள்வி இருந்தது. விஞ்ஞானிகள் குறித்து கேலியும் இருந்தது. டி என் ஏ வில் உள்ள இன்றான் எக்சான் குறித்து நேரடியாக சொல்லாவிட்டாலும் அது குறித்து எழுதியும் இருந்தது. தமிழ் ஆக்கம் பண்ணலாம் என நினைத்தேன், எதற்கு என விட்டுவிட்டேன். அதில் ஒரு விசயம் என்னை யோசிக்க வைத்தது. இந்த உலகை ஆறு நாளில் கடவுள் படைத்தார், ஆறாயிரம் வருடங்கள் முன்னர் என்பது போன்ற வசனங்கள் இந்த இறை நூல்களின் மதிப்புதன்மையை குறைக்கின்றன என எழுதி இருந்தது. அதே வேளையில் அந்த வாசகங்கள் சரியே என வாதம் புரிந்தது. ஒரு நாள் என்பது பகலும் இரவும் கூடிய ஒரு நாள் அல்ல என்பதே பொருள் என சொன்னது. ஆறு நாள் முடிந்தது, இப்போது ஏழாம் நாள் நடந்து கொண்டிருக்கிறது என கருத்து சொன்னது. எனவே ஆறாயிரம் வருடங்கள் என்பது பல மில்லியன் வருடங்களுக்கு சமானம் என கருத வேண்டும் என சொன்னது.

உடனே எனது புத்தி வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. யார் இந்த இயேசு கிறிஸ்து? என எண்ண தொடங்கிய மனது எனது பெயர் ஆபிரகாம் என வந்து நின்றது. உடனே விடுமுறையில் தானே இருக்கிறோம் இந்த கிறிஸ்துவ மதம் பற்றி சற்று தெரிந்து கொண்டால் என்ன என தொடங்கி ஆங்காங்கே தகவல்களை இணையத்தின் மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். ஆதாம், ஏவாள் பற்றி வாசித்தபோது கடவுள் ஆதாமை நோக்கி இந்த மரத்தை சாப்பிட்டதால் பாவி ஆகிவிட்டீர்கள் என்கிறார். அதற்கு ஆதாம் சொல்கிறான். 'இதோ எனக்கு துணையாய் இருக்க நீங்கள் என்னிடம் இருந்து உருவாக்கிய எனது மனைவி இந்த மரத்தை சாப்பிட சொன்னாள், அதனால்தான் நான் சாப்பிட்டேன்' என்கிறான். மரத்தில் இருந்த ஆப்பிள் என்பதெல்லாம் பிற்பாடு வந்த கட்டுக்கதை என்கிறார்கள் சிலர். ஆடை இல்லாமல் இருப்பது அத்தனை கேவலம் என அன்று நல்லது எது, தீயது எது என அறிவைத் தரும் மரத்தை தின்றதால் ஞானம் பிறந்து இருக்கிறது என படித்தபோது 'அட தாவரம்'. நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதைப் போன்றே உங்கள் எண்ணமும் இருக்கும் என முன்னோர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

மனைவியின் பேச்சு கேட்க கூடாது என அதனால் தான் சொல்கிறார்களோ என்னவோ? ஹூம்! சரி இயேசு கிறிஸ்து உண்மையா இல்லையா என தேடினேன். இயேசு கிறிஸ்து உண்மை இல்லை, அது ஒரு கதாப்பாத்திரம் என பத்துக்கு ஆறு பேரு சொன்ன கருத்தை கேட்டு ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் கிறிஸ்துவின் பெயரால் விடுமுறை கிடைப்பது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் இத்தனை வருடங்களாக பலரால் நினைவு கூறப்பட்டு வரும் கிறிஸ்து போற்றுதலுக்குரியவர் தான். சரி என எனது பெயர் ஆபிரகாம் என நினைத்தேன் அல்லவா. ஆபிரகாம் பெயரைத் தேடினேன். ஆச்சர்யம்.

இந்த ஆபிரகாம் இறைவனால் அனுப்பப்பட்டவர். இதற்கு முன்னர் நோவோ என்பவர் வாழ்ந்த போது ஏற்பட்ட பாவத்தினால் இந்த உலகை வெள்ளத்தில் அழித்து நோவோ குடும்பத்தை மட்டுமே காத்தாராம் இறைவன். அதற்கு பின்னர் மீண்டும் பாவங்கள் பெருகிய போது வெள்ளத்தினால் உலகை அழிக்கமாட்டேன் என உறுதி தந்த இறைவன் ஆபிரகாம் மூலம் ஒரு புது உலகம் உருவாக்குகிறார். இந்த ஆபிரகாம் பைபிள் மற்றும் குர்ஆனில் அதிகம் பேசப்படுகிறார். ஏறக்குறைய பல விசயங்கள் குரானிலும், பைபிளிலும் ஒன்றாகவே இருக்கிறது என ஓரிடத்தில் படித்தேன். எப்படியும் குரானையும் பைபிளையும் அடுத்த ஏப்ரலுக்குள் படித்துவிட வேண்டும் என இருக்கிறேன்.

இந்த ஆபிரகாம் கதை சுவாரஸ்யமாக இருந்தது. ஆபிரகாமுக்கு சாரா என்கிற மனைவி, சாரா என்கிற மனைவியின் மூலம் குழந்தை பாக்கியம் ஆபிரகாமுக்கு கிடைக்கவில்லை. அப்போது சாரா வீட்டில் வேலை செய்யும் ஹாஜர் எனும் பெண்ணை ஆபிரகாமுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் சாரா. சம்மதம் சொல்கிறார் ஆபிரகாம். ஹாஜர் கருத்தரிக்கிறாள், அதன் மூலம் கர்வம் கொள்கிறாள். இதனால் சாராவை நிந்திக்கிறாள். கோவம் கொண்ட சாராவின் செயலால் ஹாஜர் வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறார். கடவுளின் உத்தரவுபடி மீண்டும் வந்து ஆபிரகாமிடம் சேர்ந்து பிள்ளை பெறுகிறார்.  குழந்தை பெரும் காலகட்டத்தை கடந்த பின்னர் சாரா கருத்தரிக்கிறார். இப்படி இவர்கள் பெற்ற குழந்தைகள் ஐசாக், இஸ்மாயில் எனப்படுகின்றனர். ஹாஜரின் குழந்தையான இஸ்மாயில் சாராவின் குழந்தை ஐசாக் தனை கேலியும் கிண்டலும் செய்ய கோபமுற்ற சாரா அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற ஆபிரகாமிடம் சொல்கிறார். ஆபிரகாம் கடவுளிடம் ஆலோசனை கேட்டு அவ்வாறே செய்கிறார். ஹாஜர் தனது பையனுடன் ஆபிரகாம் தந்த ரொட்டி மற்றும் தண்ணீர் எடுத்து கொண்டு செல்கிறார் என போகிறது கதை. கடவுள் உனது பையன் ஒரு பெரிய நாடாவான் என சொல்வதாக அமைகிறது.

இந்த கதையை படித்ததும் பல சீரியல்கள் ஞாபகத்திற்கு வந்தது. எத்தனையோ வருடங்கள் முன்னர் நடந்த விசயங்கள் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. மேலும் மேலும் படிக்க தொடங்கினேன். அதில் ஆதாம் ஏவாளுக்கு காலையில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையும், மாலையில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையும் பிறந்ததாம். காலையில் பிறந்த ஆண் மாலையில் பிறந்த பெண்ணை மணம் முடித்ததாக அதே போல் மாலையில் பிறந்த ஆண் காலையில் பிறந்த பெண்ணை மணம் முடித்ததாக சொல்லப்பட்டு இருந்தது. இது எல்லாம் எத்தனை உண்மை என புக் ஆப் ஜெனிசிஸ் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது எனக்கு தரப்பட்ட இதழுக்கு திரும்புகிறேன். ஒரு நாள் என்பது எத்தனை மில்லியன் வருடம் எனில் ஒரு காலை என்பது எத்தனை வருடங்கள்? மாலை என்பது எத்தனை வருடங்கள்? புரியவில்லை.

மோசஸ் என்பவருக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் 900 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த 900  வருடங்கள் எந்த கணக்கு? ஏதேதோ கேள்விகள் எழுகின்றன. படித்துவிட்டு பேசலாம் என இருக்கிறேன். 


நன்றாக தெரிந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன். 


கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?

ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பரவாயில்லை சொல், கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி உனக்கு என்ன அக்கறை.

சும்மா சொல், கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் உணர்வதை உன்னால் உணர இயலாது, சொல்லி என்ன பயன்.

பரவாயில்லை சொல், கடவுள்?

உன்னைப் போல நம்பிக்கை இல்லாதவர்கள் பாவப்பட்டவர்கள்.

அந்த வாக்கியத்தில் என்னை பளாரென அறைவது போலிருந்தது. ஆதாமும் ஏவாளும் இறைவனிடம் நம்பிக்கையற்று போனதால் தான் இந்த உலகம் பாவப்பட்டது என்கிறார்களே! உண்மையோ!

16 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

உலகில் பல மதங்கள் இருகின்றன... அவைகள் பல நேரங்களில் தங்களை முன்னிலைப் படுத்த பல உத்திகளை கையாளுகின்றன... இதிலே சமூகத்தில் அங்கீகரிக்கப் படாத, தோல்வியில், விரக்தியில், அல்லது ஏமாற்றப்பட்டும், அடிமைப்பட்டும் நிற்கும் சமூகத்திடம் சென்று அவர்களை துயரைத் துடைத்து அவர்கள் மதம் என்னும் தனது அமைப்பில் அவர்களையும் சேர்த்து பெருக கூட்டமாக சேர்த்துக் கொள்ள முயலுகின்றன... அல்லது மற்றொன்றைக் குறை கூறி (குறை இல்லாத மதம் ஏது? இவைகள் மனிதன் உண்டாக்கியவைகள் தானே!) பெரும்பாலும் அங்கே இருப்பவர்கள் கொள்கை வெறியர்கள் ஆனால் பல நேரங்களில் நல்லவர்களும் அவர்களே!... இந்து மதம், புத்த மதத்தால் சரியும் அபாயத்தில்.. ஆச்சாரியார்கள் அதில் வரும் அபாயத்தைக் களைய செயல் பட்டார்கள்... இதிலே மகான்களின் போதனைகள் (அது புத்த, இந்து, தொட்டு எந்த மதமானாலும் சரி) சரியாகப் புரித்துக் கொள்ளாமையோ அல்லது நாளடைவில் அதன் தார்ப்பரியம் மறக்கப் படுவதோ அதில் சார்ந்து இருக்கும் நல்லவர்களான கொள்கை வெறியர்களின் அறிவிலித் தனமே என்பது சான்றோர்களின் எண்ணம்.

ஆள், சேர்ப்பது அவர்களின் விருப்பம்.... ஏதோ காரணத்திற்காக அவர்களோடு போவது அவர்களின் இஷ்டம்... ஆனால், ஓன்று மட்டும் உண்மை கடவுள் மருப்பாலர்களைவிட இந்தக் கொள்கை வெறியர்கள் (எல்லா மதமும் தான்) தாம் உலகில் நடக்கும் தீமைக்க்குக் காரணம்.

"அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது" என்றால் ஒளவை பாட்டி... ஆக... மனிதரைப் பிறப்பதற்கு நிறையப் புண்ணியம் செய்து தான் இங்கே வந்திருக்க வேண்டும்.. கஷ்டப்பட்டு படித்து பிளஸ்டூவில் நிறை மதிப் பெண் பெற்று கல்லூரிப் போனவன் வந்த வேலையை விட்டு வேறுவேலை செய்தால் நஷ்டம் அவனுக்கும் அவனுடைய முந்திய உழைப்பிற்கும் தான்.

Unknown said...

மனிதராய்ப் பிறந்து பிறந்து இறப்பதே கர்மம் தீராமை தான்.... அதை தீர்த்து இறைவனை சென்றடைய வேண்டும் என்பது வேதாந்தம் கூறும் லட்சியம். அதை ஒவ்வொரு மதமும் ஒவ்வொன்றாகவே கூறுகிறது... கீதையில் கிருஷ்ணன் யார் எப்படி வணங்கினாலும் அது நானே.. என்று சர்வ மத சமரசப் பிரகடனம் செய்கிறான்...

மேலே சொன்னக் கதைகள் எல்லாம் அவர்களின் நம்பிக்கை அது உண்மையா, பொய்யா என்று நிரூபிக்க வேண்டியதும் அவசியமா... அதை நம்புவதில் நஷ்டம் என்ன? நம்பாமல் இருப்பதால் வரும் நஷ்டம் என்ன? என்ற சிந்தனையை தூண்டி அதன் படியே நடப்பது நன்று.. இதில் உணர்வுகளை நோகச் செய்யாமல் இருப்பது அன்பாகும் காரணம் அது தான் கடவுளும் ஆகும். (வரையறை இல்லாத ஒன்றை இப்படி வரையறை செய்யச் சொன்னால் இதைத் தவிர வேறு வழியில்லை).

இந்து மதத்திலே வரும் புராண இதிகாசங்களையும் இப்படிக் கொண்டால்.... அதில் பலருக்கும் பலவிதமான அபிப்ராயம் இருந்தும், அவைகள் பிறந்ததன் நோக்கம் அளப்பறியாதது... ஆக, பலா பழத்தில் சுளையை மாத்திரம் உண்பது நேரமும் மிச்சம்... உடலுக்கும் நல்லது...

இது போன்ற விசயங்களை எண்ணக் கருத்துக்களை பகிரும் போது இருவரும் ஒரே பாசைப் பேசிக் கொள்ளவேண்டும்... அதாவது அடிப்படையான விசயங்களான.. மனிதனுக்கு அப்பாற்ப் பட்ட சக்தியில் நம்பிக்கை, மனித ஆத்மா, மறுபிறவி (கர்ம வினை) இவைகளைப் பற்றியக் கருத்து ஒற்றுமை இருந்தால் ஒரே பாசை என்பது அர்த்தம். இன்னொன்று ஒருவரின் கருத்தை மற்றவரிடம் திணிக்காமல் அவரவர் நம்பிக்கையை விளக்கினால் போதும்... இதுவே ஆரோக்கியமாக கருத்துப் பரிமாறுவது ஆகும். இதில் நான் தான் புத்திசாலி.. நாங்கள் தான் உயர்ந்த மதப் பிரிவினர் என்ற வாதம் வீணே! அது அரைவேக்காட்டுத் தனமே அன்றி வேறாகாது... நீ பாவப் பட்டவன், நான் புண்ணியம் செய்தவன் என்று கூறுவதே கடவுளுக்கு முரண்பாடானது... கடவுள் ஏற்பு, மறுப்பு இது வல்ல பக்தி அல்லது பக்தி மறுப்பு... பலனைப் பாராமல் கடமையை செய்வது.. அதாவது இயற்கையைப் போல். அன்பால் எல்லோரையும் அரவணைப்பது... இது தான் கடவுளத் தன்மை இவைகள் யார் செய்தாலும் அவர் மனிதரி உயர்ந்தவர் ஆகிறார். கடவுள் நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு சொர்கத்திற்கு போவதற்காக (சொர்க்கம் என்பது என்ன என்பதே வேறு ஒரு விவாதம்) புண்ணியம் செய்கிறேன் என்பது ஒரு பற்றை கொள்ளச் செய்வதே... அது கூட வீடு பேருக்கு உதவாது என்கிறது வேதாந்தம்.. ஆக, அன்பு செய்வது, கடமையைச் செய்வது அதுவும் பற்று இல்லாமல்... (பலன் எதுவானாலும் சரியென்று) அப்படிச் செய்யும் கடமை தான் இந்த மனித குலத்திற்கு காலகாலமாக உதவி இருக்கிறது... அவர்கள் தான் இறந்தும் இன்றும் வாழ்கிறார்கள்.

சரி, கோவில், குளம், பக்தி, வழிபாடு இவைகள் தாம் ஏன்? என்றால் ஆவிகள் ஆன்ம பலத்தை கூட்ட.. ஆன்ம பலம் கூடும் போது... பயம், பற்று.. தொட்ட அத்தனை குரோதமும் மறைகிறது... அப்போது உள்ளொளி பெருகுகிறது அது கடைசியில் ஒரு நேரத்தில் எங்கிருந்து வந்ததோ அங்கேயே / அதனோடு "சின்கொரனைஸ்" ஆகிறது அதையே ஜீவன் முக்தி என்கிறார்கள்... இது ஒருவகை இது போன்று பலவகை இருக்கிறது... அப்படிப்பட்டவர்கள் வரிசையில்.. ஞான, பக்தி, கர்ம என்ற சில மார்க்கங்கள் அப்படிப் பார்த்தோம் என்றால் இன்றைய உலகில் கர்ம யோகிகள் தாம் அதிகம் அவர்கள் தாம் இந்த மனித சமூகத்திற்கு தங்களது அறிவியல் கண்டுபிடிப் புக்களை தந்து சென்றும் உள்ளார்கள் என்றால் அது மிகையாகாது...

இப்போது சொல்லுங்கள் பெண்ணால் பாவப்பட்டது என்பது சிறுபிள்ளைத் தன்மானக் கூற்றா? இல்லை அந்தப் பெண் சொன்னதில் ஏதும் அர்த்தம் உண்டா? பெரும் பாலும் பிரச்சனையே தனது ஆன்ம பலத்தை கூட்டச் செய்யும் நடவடிக்கையில் தான் சர்ச்சையே... இந்த சர்ச்சையிலே ஆயுள் முடிந்து விடுகிறது... பிறந்ததன் நோக்கம் நிறைவேராமலேப் போய்விடுகிறது.... நோக்கமா? ஆம்.. ஆன்ம சுதந்திரம் தான் மனித ஜென்மத்தின் நோக்கம்.

தங்களின் பதிவு எனது எண்ணத்தைக் கிளறியதால் இந்தக் கருத்துக்கள் .. நன்றிகள் நண்பரே!

Yaathoramani.blogspot.com said...

தமிழ்விரும்பி அவர்களின் விரிவான அழகான
பின்னூட்டமே என் கருத்தும்
சிந்தனையை தூண்டிப் போகும் அழகான பதிவினைத்
த்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 2

Shakthiprabha (Prabha Sridhar) said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை....
நிறைய இருக்கிறது ராதாக்ரிஷ்ணன் படிக்க...தெரிந்து கொள்ள, எனக்கு நோவா கதை படித்த போது இந்து மதத்தின் "மச்ச அவதார" கதை நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடியவில்லை..

எல்லோரும் ஒன்றைத் தான் சொல்கிறார்கள்....சொல்லும் மொழியும் விதமும் வேறானது.

இறைவனோ எதோ ஒன்றோ இருக்கிறது. அதை நோக்கிய பயணம், அவரவர்க்கு விருப்பமான பாதையில் :) ...

தமிழ்விரும்பி கூறிய அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியது.

//அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது" என்றால் ஒளவை பாட்டி... ஆக... மனிதரைப் பிறப்பதற்கு நிறையப் புண்ணியம் செய்து தான் இங்கே வந்திருக்க வேண்டும்.. கஷ்டப்பட்டு படித்து பிளஸ்டூவில் நிறை மதிப் பெண் பெற்று கல்லூரிப் போனவன் வந்த வேலையை விட்டு வேறுவேலை செய்தால் நஷ்டம் அவனுக்கும் அவனுடைய முந்திய உழைப்பிற்கும் தான்.
//

இதையும் மற்ற பலதையும் வழிமொழிகிறேன்...

நல்ல சிந்தனை தரும் பதிவு. நன்றி !

Shakthiprabha (Prabha Sridhar) said...

//தமிழ்விரும்பி கூறியது: இந்த சர்ச்சையிலே ஆயுள் முடிந்து விடுகிறது... பிறந்ததன் நோக்கம் நிறைவேராமலேப் போய்விடுகிறது.... நோக்கமா? ஆம்.. ஆன்ம சுதந்திரம் தான் மனித ஜென்மத்தின் நோக்கம்.
//

முத்தாய்ப்பு !!

Mahan.Thamesh said...

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

நானும் அவர்கள் கொடுத்த புத்தகங்கள் படித்திருக்கிறேன்.. அவர்களின் தூய தமிழ் மொழிபெயர்புக்கள் (யாக்கோபு) பிடித்திருந்தது.

Radhakrishnan said...

நன்றி நண்பரே.

Radhakrishnan said...

//இதிலே சமூகத்தில் அங்கீகரிக்கப் படாத, தோல்வியில், விரக்தியில், அல்லது ஏமாற்றப்பட்டும், அடிமைப்பட்டும் நிற்கும் சமூகத்திடம் சென்று அவர்களை துயரைத் துடைத்து அவர்கள் மதம் என்னும் தனது அமைப்பில் அவர்களையும் சேர்த்து பெருக கூட்டமாக சேர்த்துக் கொள்ள முயலுகின்றன.//

//கஷ்டப்பட்டு படித்து பிளஸ்டூவில் நிறை மதிப் பெண் பெற்று கல்லூரிப் போனவன் வந்த வேலையை விட்டு வேறுவேலை செய்தால் நஷ்டம் அவனுக்கும் அவனுடைய முந்திய உழைப்பிற்கும் தான்//

தங்களுடைய கருத்துகளுக்கு தலை வணங்குகிறேன் தமிழ் விரும்பி ஐயா. என்னிடம் மறு கருத்து ஏதுமில்லை. அழகிய விசயங்களை பரிமாறிக் கொள்ளும் தங்களுக்கு எனது நன்றிகள்.

Radhakrishnan said...

//மனிதராய்ப் பிறந்து பிறந்து இறப்பதே கர்மம் தீராமை தான்.... அதை தீர்த்து இறைவனை சென்றடைய வேண்டும் என்பது வேதாந்தம் கூறும் லட்சியம். //


ஏனோ தெரியவில்லை, எதற்கு கர்மம் தீராமல் போகிறது? என்பதற்கான விசயங்கள் ஆய்ந்து அறிந்து கொள்ளல் இயலவில்லை. என்னை இப்படி இயக்குபவன் அவனே என வரும்போது எனது கர்மங்களின் செயல்பாட்டினை தீர்மானிப்பது நானா? இறைவனா? எனும் கேள்விகள் தொக்கி நிற்கின்றன!

//அன்பு செய்வது, கடமையைச் செய்வது அதுவும் பற்று இல்லாமல்... (பலன் எதுவானாலும் சரியென்று) அப்படிச் செய்யும் கடமை தான் இந்த மனித குலத்திற்கு காலகாலமாக உதவி இருக்கிறது... அவர்கள் தான் இறந்தும் இன்றும் வாழ்கிறார்கள்.//

//இப்போது சொல்லுங்கள் பெண்ணால் பாவப்பட்டது என்பது சிறுபிள்ளைத் தன்மானக் கூற்றா? இல்லை அந்தப் பெண் சொன்னதில் ஏதும் அர்த்தம் உண்டா? //

தங்களின் கருத்துகள் மிகவும் பயனுள்ளைவைதான் ஐயா. ஆன்ம பலம் தனை கூட்ட மதத்தின் பெயரால் நடத்தப்படும் சடங்குகள் அவசியமற்றதாகவே தென்படுகிறது. ஜீவன் முக்தி என்பது அத்தனை பேரும் முயற்சிக்கும் ஒன்றாகவும் தென்படவில்லை. அன்பு செலுத்துவது, உண்மைதான். அந்த பெண்ணின் கூற்று அந்த பெண்ணின் பார்வையில் இருந்து சரியாகவே இருக்கலாம், ஆனால் அர்த்தமற்றதோ எனவும் எண்ணத்தான் தோணியது.

//ஆன்ம சுதந்திரம் தான் மனித ஜென்மத்தின் நோக்கம்.//

இங்குதான் என்னால் எதுவுமே புரிந்து கொள்ள இயலவில்லை. ஆன்மா எதற்கு உயிர் எடுக்க வேண்டும்? சுதந்திரம் அற்ற ஆன்மா, சுதந்திரம் வேண்டி உயிர் கொண்டு உயிர் துறக்க முயல்கிறதோ?! மாணிக்கவாசகரின் 'எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என கூறி இந்த 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என ஔவையின் வாக்கு படி இந்த மனித பிறப்பு கொண்டதன் மூலம் இறைவன் உணர்ந்தேன் என்கிறாரே, அப்படியெனில் வேறு எந்த பிறப்பு மூலமும் இந்த ஆன்மா சுதந்திரம் அடைவது சாத்தியம் இல்லையா?

அற்புதமான கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

Radhakrishnan said...

மிக்க நன்றி ரமணி ஐயா.

மிக்க நன்றி சகோதரி, ஆம் சில நேரங்களில் என்ன சொல்வதென்றும், என்ன செய்வதென்றும் புரிவதில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல மச்ச அவதாரம் போன்ற விசயங்கள், இயேசுவும், கிருஷ்ணரும் ஒன்று எனப்படும் கதைகள் எல்லாம் பல வழிப்பாதைகள் ஒரு வழிப்பாதையாக காட்டும் முயற்சி எனவும் கொள்ளலாம். ஆனால் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பது மிகவும் சரியாகவே கணிக்க இயலவில்லை. ஆம் சகோதரி, தமிழ் விரும்பி ஐயாவின் கருத்து பரிமாற்றங்கள் மிகவும் பயன் அளிக்கிறது, அதுவும் என்னைப் போன்று இருப்போர்க்கு நிறையவே பல விசயங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.

மிக்க நன்றி தாமேஷ்.

மிக்க நன்றி சாய் பிரசாத். உண்மைதான், எழுதப்பட்ட தமிழ் கொஞ்சும்.

Unknown said...

////ஏனோ தெரியவில்லை, எதற்கு கர்மம் தீராமல் போகிறது? என்பதற்கான விசயங்கள் ஆய்ந்து அறிந்து கொள்ளல் இயலவில்லை. என்னை இப்படி இயக்குபவன் அவனே என வரும்போது எனது கர்மங்களின் செயல்பாட்டினை தீர்மானிப்பது நானா? இறைவனா? எனும் கேள்விகள் தொக்கி நிற்கின்றன! ////
கர்மம் ஏன் தீரவில்லை? என்பது கூட அவசியமற்ற ஆராய்ச்சியே.. நேர விரயம் தான்.
கர்ம வினைகளின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும்... அது தீரும் வரை செய்வது ஒன்றே ஓன்று. மீண்டும் தீய கர்மங்களை சம்பாதிக்காமல் இருப்பதோடு அந்த இறைவனின் அடியைப் பற்றி சதாகாலம் அவனையே தொழுது (பாரதி அதற்கு முதலில் சக்தியை போற்றி அவளின் உதவியோடு அவனில் கலப்பதே என்கிறான்....) அவனோடு இணைவது அல்லது அவனின் மலரடியில் அமர்வது... அதாவது எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்வது...

//// நானா? இறைவனா?////
இருவரும் ஒருவரே என்பது வேதாந்தம்...

Unknown said...

////ஆன்ம பலம் தனை கூட்ட மதத்தின் பெயரால் நடத்தப்படும் சடங்குகள் அவசியமற்றதாகவே தென்படுகிறது. ஜீவன் முக்தி என்பது அத்தனை பேரும் முயற்சிக்கும் ஒன்றாகவும் தென்படவில்லை. அன்பு செலுத்துவது, உண்மைதான். அந்த பெண்ணின் கூற்று அந்த பெண்ணின் பார்வையில் இருந்து சரியாகவே இருக்கலாம், ஆனால் அர்த்தமற்றதோ எனவும் எண்ணத்தான் தோணியது. /////

காலகாலமாக செய்து வரும் பக்தி யோகம்.... அதை செய்ய வழி இல்லாதவர்களுக்கு தான் கர்ம யோகம் (காந்தி, அன்னைதெரசா.... போன்று...)

ஜீவன் முக்தி என்பது அனைவரும் முயற்சிக்கும் ஒன்றே.. அதனின் அளவு மாத்திரமே வேறுபடுகிறது... நம் நாட்டில் தான் அது அதிகம்.. அதனால் தான் திருடப் போகின்றவன் கூட அவனுக்கென்று ஒரு தெய்வத்தைக் கற்பித்துக் கொண்டு அவனை வணங்கி விட்டே செல்கிறான்... எவ்வளவு கீழான செயலை செய்தாலும் தெய்வ சிந்தனை மாத்திரம் குறையவில்லை...

இதைத் தான் பாரதி... ஒருநாள் இந்தியா உலகிற்கு அளிக்கும் என்றான்.. அதிலும், ஆம்..; ஆம்..ஆம்...; அம..ஆம்..ஆம்.. என்று அடித்துக் கூறினான். அதாவது முக்தி பெரும் அந்த வழியை... அப்படித்தான் நமது "யோகா" உலகெல்லாம் பரவுகிறது...

சமீபத்தில் இறந்த "ஸ்டீவ் ஜாப்ஸின்" வாழ்க்கையும் அவரது கடைசி மணித்துளிகளையும் ஆராய்ந்தால் சிலவைகள் விளங்கும்....

இல்லை அந்தப் பெண்ணிற்கு அது சரியாகத் தோன்றியதால் கூறி இருக்கிறார்கள் என்பது உண்மையானாலும்.. உண்மை அது ஆகாது... இருந்தும் அவரும் அறிந்துக் கொள்ளவேண்டிய காலம் வரும் வரை அவரே அறிந்தும் கொள்வார்...

Unknown said...

////இங்குதான் என்னால் எதுவுமே புரிந்து கொள்ள இயலவில்லை. ஆன்மா எதற்கு உயிர் எடுக்க வேண்டும்? சுதந்திரம் அற்ற ஆன்மா, சுதந்திரம் வேண்டி உயிர் கொண்டு உயிர் துறக்க முயல்கிறதோ?! மாணிக்கவாசகரின் 'எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என கூறி இந்த 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என ஔவையின் வாக்கு படி இந்த மனித பிறப்பு கொண்டதன் மூலம் இறைவன் உணர்ந்தேன் என்கிறாரே, அப்படியெனில் வேறு எந்த பிறப்பு மூலமும் இந்த ஆன்மா சுதந்திரம் அடைவது சாத்தியம் இல்லையா?////

பிரபஞ்ச தோற்றம்.... சரி அதற்கு முன்பாக கடவுள் என்பவர் யார்... சரி அது கூட இப்போது வேண்டாம் அவர் எத்தகையவர் ஆதி அந்தம் இல்லாதவர்.... அதோடு அவர் சுதந்திரமானவர்.. இவைகளையெல்லாம் நாமே சொல்லிவிட்டு நாமே இந்தக் கேள்வியையும் கேட்கிறோம்? அவர் ஏன் இந்த உலகை படைக்க வேண்டும் என்று... அவர் இதைப் படைக்க வேறு ஒரு சக்தி இருந்துக் கொண்டு அவரைத் தூண்டினால் நாம் முன்பு கூறிய கூற்று தவறாகாதா என்று சுவாமி விவேகானந்தர் கேட்கிறார்... உண்மைதான் அவர் கேட்கும் கேள்விக்கு பதில் தான் என்ன? தர்க்க ரீதியில் கேட்கும் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முனையும் பொது இருப்பது ஒன்றே ஓன்று ஆம்.. அது தான் அவன் மட்டும் தான்.. அவனே இந்த பிரபஞ்சம்.... அதாவது இந்த பிரபஞ்சம் அவனின் உடல்.. இந்த பிரபஞ்சத்தின் ஆத்மா.. அது தான் கடவுள்...என்றும் பதிலளிக்கிறார்....

இல்லை தவறு.... ஆன்மா! எப்போதும் சுதந்திரமானது.... பிரபஞ்ச ஆன்மா கடவுள்; இயற்கையின் ஆன்மா சக்தி (ஈஸ்வரன்); அப்படியே மனிதனின் ஆன்மாவும் அப்படியே!.. ஆக, எல்லாமே அவன் தான்... ஆன்மா பிறப்பு இறப்பு அற்றது.... அதனால் பிறப்பதும் இறப்பதும்.. உடல் தான்... ஓரறிவிலிருந்து... ஆறறிவு வரையான பயணம் அது... (எனக்கு என்னமோ இந்த இம்சைகளை எல்லாம் உணருதல் (பகுத்தறிவு இருப்பதால்) மனிதனுக்கு மாத்திரம் தானோ? என்ற எண்ணமும் வருவதுண்டு... வேறு ஒரு பிறப்பிலும் சுதந்திரம் உண்டா? என்பது பற்றித் தெரியவில்லை.. ஆனால் புராண இதிகாசங்களில்.. ராமாயணத்திலே ஸ்ரீராமனின் கால் பட்டு ஒரு முனிவரின் மனைவிக்கு விமோட்ச்சனமும்... கிருஷ்ண அவதாரத்திலே மரங்களாய் நின்றவர்கள் அவரின் கட்டிய உரல் இடித்து விமோட்ச் சனம் அடைந்ததாக தெரிகிறது... இவைகள் கதைகள் தம் என்றால் அங்கே கூறப்பட்ட பீஷ்மர் கதையைக் கேட்ட அர்ஜுனன் மகன் பத்மவியூகத்தை உடைத்தான் என்பது பின்னாளில் கர்பிணிப் பெண்களின் குழந்தைகள் தாயின் செயலை உணர முடிகிறது என்பதும் இன்றைய அறிவியல் முடிவு../.... அகத்தியர் சுரக்கூட்டில் பிறந்தார் என்பது கூட இன்றைய குலோநிங்கோ என்றும் கொள்ளத் தோன்றுகிறது என்பாரும் உண்டு... ஏன்? சங்கரரின் வரலாற்றில் அப்படி சாபத்தில் பிறந்த முதலை விமோசனம் பெறுகிறது... எதுவானாலும் சரி ஆராய்ச்சியில் நேரம் வீணாகிறது... கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்ற கீதையின் உபதேசம் மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்...

ஒரு பெரிய விஷயம் என்ன என்றால் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க ஆரம்பித்ததே நாம் அந்த நோக்கம் வரப் பெறப்பட்டு அதன் வழியை தேடிக் கொண்டு தான் இருக்கிறோம் என்பது தான்... அவனின் கருணை.. அவனின் அருளால் அவன் தாள் பணிவோம்... நன்றிகள் நண்பரே!

Radhakrishnan said...

பல அருமையான கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றி, ராமன் மூலம் விமோசனம் பெற்ற கதையை நான் சென்ற மறுமொழியில் நினைத்திருக்க அதை நீங்கள் இங்கே குறிப்பிட்ட விதமும் அருமை. மிக்க நன்றி ஐயா. நோக்கங்கள் நிறைவேறட்டும்.