Saturday 31 December 2011

புதிதாக என்ன இருக்கிறது?

இன்றைய புதியவகைகள் நாளைய பழையவகைகள் ஆகின்றன. நேற்றைய புதியவைகள் இன்றைய பழையவைகள் ஆகின்றன. புதியவைகள் புதியவைகளாக என்றுமே இருப்பதில்லை. இருந்தும் புதியவகைகள் தரும் மோகத்திற்கு குறைவும் இல்லை.

புதிதாக வாங்கிய ஒன்று தொலைந்து போயிருந்தது. அதை தேடி கண்டெடுக்கும்போது அது பழையவையாக மாறியிருக்க கூடும். புதியவகைளை போற்றி பாதுகாக்க செய்யும் முயற்சியை போல பழையவைகளை போற்றி பாதுகாக்க மனம் முயல்வதில்லை. பழையதுதானே எனும் அலட்சியம் பரவலாகவே ஏற்படுவது உண்டு.

பழையவைகள் தம்மை புதியவைகளாக மாற்றி வலம் வருவதுண்டு.  இருப்பினும் தம்மிடம் இருக்கும் பழமையை முற்றிலும் அவை துறப்பது இல்லை. தாம் பழையவைகள் ஆகிவிடுவோம் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எண்ணற்ற புதியவைகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய சிந்தனைகள் எல்லாம் பழையவற்றில் இருந்தே தோன்றி அந்த புதிய சிந்தனைகள் மீண்டும் பழைய சிந்தனைகள் ஆகின்றன. சிந்தனையற்ற நிலையில் மனம் லயித்து கொண்டிருப்பது என்பது ஒரு கடினமான பயிற்சியாகவே இருக்க கூடும். தியானத்தில் கூட, உறக்கத்தில் கூட ஏதாவது ஒரு சிந்தனையில் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைப் பிடித்து உட்காரவைக்கும் திறன் எவர் கொண்டு இருப்பாரோ?

ஆதியும் அந்தமும் இல்லாத அனைத்திலும் நிரம்பிய இறைவன் மிக மிக பழையது. புதிதாய் தோன்றும் மனிதர்களால் இறைவன் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கிறான் அல்லது இறைவனை  புதுப்பிக்க புதிய புதிய விசயங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

நிறைக்கும் எடைக்கும் வித்தியாசம் உண்டு. மாற்றமில்லா நிறை இந்த பிரபஞ்சத்தில் எங்கும் ஒரே நிலையில் இருக்கும். அதே மாற்றமில்லா நிறையின் எடை கிரகத்துக்கு கிரகம் மாறும். இருக்கின்ற எல்லாமே பழையது. அதில் வந்து அமரும் சிந்தனை, சிந்தனையின் செயல் வடிவம் புதியது.

ஒரு பொருளுக்கு நிறை வந்தது எப்படி எனும் தேடல் புதியது. நிறை என்பது எந்த ஒரு பொருளுக்கும் பழையது. பொருளின் வஸ்து அளவை நிறையை கொண்டே கணிக்கப்படுகிறது. அந்த பொருளில் எத்தனை அணுக்கள் இருக்கின்றன, மூலக்கூறுகள் இருக்கின்றன என்பது மூலமும் எத்தனை சக்தியால் பின்னப்பட்டு இருக்கிறது என வஸ்துவின் அளவை கணிக்கிறார்கள்.

ஒரு பொருளின் சடத்துவதிணிவு என்பது ஒரு விசையை அந்த பொருளின் மீது செலுத்தும்போது அந்த பொருளானது தனது இடப்பெயர்ச்சியை எதிர்க்கும் சக்தியை பெற்று இருப்பதை பொறுத்தே அளக்கப்படுகிறது. ஈர்ப்பு பொருண்மை பொறுத்து பொருளின் வேகம் மாறுபடும். இதுபோன்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் பழையது. அதை தமிழில் மொழிபெயர்த்து சொன்னால் தமிழுக்கு புதியது.

இந்த கவிதை புதியது, அதில் இருக்கும் எழுத்துகள் பழையது.

புதிய ஆண்டுதான்
புதிய எண்கள்தான்
நாம் ஏனோ
பழையது போன்றே இருக்கிறோம்.

ஆசையுடன் வாங்கினேன்
புதிய ஆடை, புத்தாண்டு
என்னிடம் இருந்த
பழைய ஆடையும் புதிதானது
இல்லாதவன்
உடுத்தி கொண்டதால்.

பழையவைகள் எல்லாம் பொக்கிசங்கள்
பெருமிதமாய் சொல்லி வைத்தார்
பழையன கழிதல் என்றே
பொக்கிசங்கள் தொலைந்து போயின.

புதியது பழையது
எல்லாம் மனது
சொல்லி சிரித்தார்
அவரிடமே கேட்டேன்
இனி புதிதாக என்ன இருக்கிறது?


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
   (மொழி வாரியாக, இனம் வாரியாக, நாடு வாரியாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருவது புதிதான பழையது)

8 comments:

மகேந்திரன் said...

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

என்னிடம் இருந்த
பழைய ஆடையும் புதிதானது
இல்லாதவன்
உடுத்தி கொண்டதால் //.

மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Shakthiprabha (Prabha Sridhar) said...

நான் நினைத்ததையெல்லாம் நீங்கள் அழகாக எழுத்தில் கோர்த்துவிட்டீர்களே!! :)
உங்களுடன் பெரும்பாலும் பல கருத்துக்களில் ஒத்துப்போகிறேன் சகோ!

நன்றி :)

Shakthiprabha (Prabha Sridhar) said...

//இனி புதிதாக என்ன இருக்கிறது?
//
அண்ட சராசரம் முதல் எல்லாமே சுழற்சி...பழையது...ஆகவே

புதுதாய்(இதுவும் கூட வேறு உடை மட்டும் தான்...புதிதா என்பது சந்தேகம்) உடைமாற்றும் பழையவர்களுக்கு புது சிந்தனைக்கு புதுவருட வாழ்த்துக்கள் :)

SURYAJEEVA said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

Unknown said...

உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
பொய்மையையை சுமக்கும் தீமை பழையதாகட்டும்...
உண்மையும் நேர்மையும் என்றும் புதியதாகட்டும்...

////ஆதியும் அந்தமும் இல்லாத அனைத்திலும் நிரம்பிய இறைவன் மிக மிக பழையது./////
ஆதியும் அந்தமும் மட்டும் அல்ல காலத்துக்கும் கட்டுப்பட்டது அல்ல...
அதனால் இது பழையதாகாது... புதியதும் ஆகாது... காரணம் அது தோன்றினாள் புதிது..
இது தோன்றாது காரணம் இது தோன்றினாள் ஒரு நாள் அழியும்..
ஆகவே இந்த வரையறைக்குள் இதை வைக்க முடியாது..

மீண்டும் வாழ்த்துக்கள் நல்லக் கவிதைக்கு..:):).

Radhakrishnan said...

மிக்க நன்றி மகேந்திரன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மிக்க நன்றி ரமணி ஐயா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மிக்க நன்றி சகோதரி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மிக்க நன்றி நண்பரே, ஜீவா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மிக்க நன்றி தமிழ் விரும்பி ஐயா. :) ஆதி, அந்தம் இல்லாத... புதிது பழையது என இல்லாத. அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.