Sunday 18 December 2011

பின்னூட்ட புண்ணாக்கு

புண்ணாக்கு எனப்படுவது மாட்டு தீவனத்தில் ஒன்று. இந்த புண்ணாக்கு பொதுவாக எண்ணை நிறைந்த வித்துகளில் இருந்து எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படுகிறது. அதாவது தமிழில் சக்கை என சொல்வார்கள். இந்த சக்கையில் என்ன சத்து இருந்து விடப்போகிறது என நினைக்காமல் அதை ஒரு தீவனமாக பயன்படுத்திய முன்னோர்களின் அறிவு!

தாவரங்கள் ஒளியின் உதவியால் உணவை உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உட்கிரகித்து அவற்றை நீருடன் இணைத்து ஆக்சிஜனையும், குளுக்கோசையும் உருவாக்குகிறது.  இந்த உணவு உருவாக்கும் முறையானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று ஒளியின் உதவியால் நடைபெறுகிறது மற்றொன்று ஒளியின் உதவியின்றி நடைபெறுகிறது. நீரினை பகுத்திட ஒளி பயன்படுகிறது. அத்துடன் ஒளியின் வேலை முடிவடைந்து விடுகிறது. அதன் பின்னர் எலக்ட்ரான்கள் உயர் ஆற்றல் நிலை அடைவது, புதிய ஆற்றல் மூலக்கூறு நடைபெறுவது என வேலை தொடர்கிறது. அதற்கு பின்னர் ஒளியற்ற நிலையில், கால்வின் சக்கரம், குளுக்கோஸ் உருவாக்கப்படுகிறது. இலையின் பசுமை நிறத்து காரணியான குளோரோபில் எனப்படும் பொருளின் மூலமே இந்த உணவு தயாரிக்கும் முறை நடைபெறுகிறது, ஏனெனில் இந்த குளோரோபில் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. மனிதரின் செல்களில் இந்த குளோரோபில் போன்ற ஒன்றை உருவாக்க இயலுமா என்பதுதான் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சி கனவு. அதாவது மரங்களே இல்லாத சூழல் ஒன்று வருகிறது என வைத்து கொள்வோம், அப்பொழுது மனிதர் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கு தாங்களே உணவு தயாரிக்க இயலுமா என்பதுதான் பரிணாம, மரபணு வழியில் வந்த ஒரு புது சிந்தனை. பார்க்கலாம்.

ஒளி தாயரிப்பு எப்படி ஏறடுகிறது என்பதற்கான வேதிவினை இது.

                                                       ஒளி
கார்பன் டை ஆக்சைடு + நீர் --------------------------> குளுக்கோஸ் + ஆக்சிஜன்
                                                    குளோரோபில்

இந்த குளுக்கோஸ் பலவகையில் மாற்றம் கொள்கிறது. இந்த குளுக்கோஸ் செல்களில் உள்ள செல்லுலோசாக மாற்றம் கொள்கிறது. அதாவது பாலிமர் என இதை குறிப்பிடுகிறார்கள். இந்த குளுக்கோஸ் பல குளுக்கோஸ்களுடன் ஒரு இணைப்பு சங்கிலி ஏற்படுத்தி உருவாவதுதான் செல்லுலோஸ்.

மேலும் இந்த குளுக்கோஸ் எளிதாக நீரில் கரையும் தன்மை உடையதால் எதிர்கால சேமிப்புக்கு என இவை அப்படியே இருக்க முடியாது என்பதால் இவை ஸ்டார்ச் எனும் மற்றொரு பாலிமர் போன்று தன்னை மாற்றி கொண்டு சேமிப்பாக மாறிவிடுகிறது. இந்த ஸ்டார்ச் பிறிதொரு நாளில் தாவரங்கள் உணவு தயாரிக்க முடியாது போகும் பட்சத்தில் குளுக்கோஸாக மாற்றம் உடைந்து பயன்படுகிறது. இந்த ஸ்டார்ச் கரையும் தன்மை அற்றது. இந்த ஸ்டார்ச் அமைலோஸ், அமைலோபெக்டின் எனும் இரு பொருட்களால் ஆனது. இந்த இரண்டுமே பல குளுக்கோஸ் இணைந்து உருவான சிறிது வேறுபாட்டுடன் கூடிய இரட்டை பிள்ளைகள்.

இப்படியான குளுக்கோஸ் தாவர விதைகளில் எண்ணையாக மாற்றம் கொள்கிறது. மேலும் இந்த குளுகோஸ் பழங்களில் வேறொரு இனிப்பாக சுக்ரோஸ், பிரக்டோஸ் என மாற்றம் கொண்டு அதிக இனிப்பு தன்மையை உருவாக்குகிறது. மேலும் இந்த குளுக்கோஸ் நைட்ரெட் போன்ற தாது பொருட்களுடன் இணைந்து அமினோமிலங்கள் உருவாக்கி பின்னர் புரதம் உருவாக்குகிறது. மிக முக்கியமாக ஆற்றலை தருவது இந்த குளுக்கோஸ் தான். செல்களில் நடைபெறும் சுவாச வேதி வினையின் காரணமாக இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாறுகிறது.

குளுக்கோஸ் + ஆக்சிஜன் ------------------> கார்பன் டை ஆக்சைடு + நீர் + ஆற்றல் (சக்தி)

இப்படி தாவர விதைகளில் எண்ணையாக மாறிய குளுக்கோஸ் தனை விதைகளை நசுக்கி, பிழிந்து எண்ணையை பிரித்தெடுத்து விடுகிறார்கள். சில நேரங்களில் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணையை ஆவியாக்கி பின்னர் குளிரூட்டி பிரித்து விடுகிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சக்கையானது இந்த குளுக்கோஸ் மூலம் உருவான பல பொருட்களால் ஆனது. அதைத்தான் புண்ணாக்கு என அழைக்கிறார்கள். இது சக்கை என்றாலும் இதில் உள்ள பொருட்களை செரிக்கும் தன்மையை இந்த மாடு போன்ற விலங்கினங்கள் கொண்டுள்ளன. நம்மால் இந்த பொருட்களை செரிக்கும் திறன் கிடையாது, எனவேதான் கரும்பில் இருக்கும் திரவத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை துப்பி விடுகிறோம். வாழைப்பழ தோலை தூக்கி எறிவதும் இதன் காரணமே. ஆனால் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் இவைகளை உண்டு செரித்து கொள்கின்றன.

புண்ணாக்கு பெயர்க்காரணம் கூறுக. தாவர விதையை காயப்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள் என்பதால் புண்ணாக்கு என அழைக்கப்பட்டது. புண் + ஆக்கு = புண்ணாக்கு என கொள்ளலாம்.  பிண்ணாக்கு =பிண்ணம் +ஆக்கு , அதாவது சிதைத்து பின்னர் உருவாக்கியது, விதைகளை கூழாக நசுக்கி பின்னர் கிடைப்பது எனப்பொருள், ஹி..ஹி இது ஏதோ நினைவில் இருந்து எழுதுகிறேன், சரியானு தமிழ் ஆர்வலர்கள் தான் சொல்லனும்! (நன்றி வவ்வால்) இந்த புண்ணாக்கு கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு போன்ற எண்ணை விதைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

புண்ணாக்கு என ஒருவரை அழைப்பது அவரிடம் சரக்கு எதுவும் இல்லை என்பதை குறிக்கவே. அதாவது மிகவும் பயன்பாடான எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உள்ள சக்கையை போல அவர் இருக்கிறார் என சொல்லாலம், ஆனால் அது கூட ஒருவகை தவறுதான், ஏனெனில் புண்ணாக்கு கூட பயன்பாடான பொருளாகவே இருக்கிறது என்பதை அறிந்தோம். ஜீரோ எழுத்தில் எழுதப்பட இருப்பதை போல எந்த ஒரு பொருளும் ஒன்றும் இல்லாமல் இல்லை. அதாவது எதுவுமே இல்லாமல் எதுவுமே இல்லை.

மதிப்பிற்குரிய எனது நண்பர் ஒருவர் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது தவறு என சொன்னார். அதாவது இந்த வலைப்பூ எழுதுவதன் மூலம் பிறர் பயன்பட வேண்டும் என்றும் கருத்து பரிமாற்றம் நிகழ வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். பலர் வந்து மறுமொழியோ, பின்னூட்டங்களோ எழுத வேண்டும், அப்படி எழுதி கருத்துகளை பரிமாற வேண்டும். ஒரு எழுத்துக்கு  பின்னூட்டங்கள், மறுமொழிகள், எழுதுபவரை உற்சாகத்தில் வைத்திருக்கும், இல்லையெனில்  ஈ ஓட்டுவது, காற்று வாங்குவது என பொருள்படும் என்பது அவரது கருத்து. ஆனால் எனக்கு சொல்லி தந்த ஆசிரியரோ எவருமே செருப்பு அணியாத இடத்தில் சென்று செருப்பு விற்பவனே அதி புத்திசாலி என சொல்லிக் கொடுத்தார். ஒன்றை விரும்பாத, ஒன்றை அறியாத மக்களிடம் சென்று புதுமையை புகுத்துவது. அதன் மூலம் அவர்களை அந்த விசயத்திற்கு அடிமையாக்குவது என்பதாகும்.

நீங்கள் வலைப்பூக்களில் சென்று இடும் உங்கள் பின்னூட்டங்கள் புண்ணாக்கா? எண்ணையா?

5 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

டெம்ப்ளேட் கமெண்ட் முக்காலும் புண்ணாக்குகளே. நான் இடும் கமெண்ட்டுகள் அந்த வகையை சேராது. எண்ணைதான்.

வவ்வால் said...

ரா.கி,

//புண்ணாக்கு பெயர்க்காரணம் கூறுக. தாவர விதையை காயப்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள் என்பதால் புண்ணாக்கு என அழைக்கப்பட்டது. புண் + ஆக்கு = புண்ணாக்கு என கொள்ளலாம். //

உங்க பெயர் என்ன பாணப்பத்திர ஓணாண்டியா :-))

பிண்ணாக்கு =பிண்ணம் +ஆக்கு , அதாவது சிதைத்து பின்னர் உருவாக்கியது, விதைகளை கூழாக நசுக்கி பின்னர் கிடைப்பது எனப்பொருள், ஹி..ஹி இது ஏதோ நினைவில் இருந்து எழுதுகிறேன், சரியானு தமிழ் ஆர்வலர்கள் தான் சொல்லனும்!

இது ஏதோ என்னால முடிஞ்ச பின்னூட்ட புண்ணாக்கு!

எண்ணை எடுப்பதில் சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்‌ஷன்ல பிண்ணாக்கு திடப்பொருளாக வருவதில்லை. ஆனால் அதையும் கால்நடைத்தீவனத்துடன் கலந்து கட்டியாக முறுக்கு புழிந்து விற்றுவிடுவதாக கேள்வி.

Unknown said...

இல்லை நண்பரே! இரண்டும் இல்லை...
நான் இடும் பின்னூட்டங்கள் விதைகளை பின்னம் ஆக்கும் (பிண்ணாக்கு / புண்ணாக்கு(வழக்கு)) செக்காகவே இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அப்போது தான் இன்னும் கொஞ்சம் பிழியவும் செய்யலாம்.

"போடோசிந்தசிஸ்" / ஒளிச்சேர்க்கை பற்றிய அதிக விரிவானப் பலத் தகவல்களை அறியத் தந்துள்ளீர்கள்.. மிகவும் அருமை.... எனது குழந்தைகளுடன் குறுக்குக் கேள்விக் கேட்டு அறிவாளித் தனத்தை காண்பிக்க ஒரு வழியும் கிடைத்தது... உண்மையில் அருமையானத் தகவல்கள்....

கவிஞர்கள் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு அதை சார்ந்து சுற்றியே அழகும், அறிவும் சார்ந்தக் கவிதைகளை வடிப்பார்.. அதைப் போன்றே! தாங்களும் புண்ணாக்கு என்று சமீபத்தில் உபயோகித்த வார்த்தைக் கொண்டு அதற்கான அறிவியல் மூலக்கூறுகள், அதன் தன்மை,பயன்பாடு என்று எத்தனையோ ஆராய்ச்சி சார்ந்த கலை பொக்கிசத்தை தந்துவிட்டீர்கள்...

மகாகவி இருந்தால் உங்களை மெச்சி உச்சி முகர்ந்திருப்பான்.... இதைத் தான் அவன் நம்மைச் செய்ய ஆணையிட்டான்.... அறிவியலை அழகு தமிழில் அற்புதமாகப் படைக்கும் தாங்கள் தான் "நவீனத் தமிழ் கலைஞர்". வாழ்க உமது தொண்டு. இது பலருக்கும் பயன்படும் என்பது ஐயமே இல்லை... "நுனிவ்ரைச் செல்" "மேலைநாட்டில் மெத்த வளரும் மேன்மைக் கலைகள் தமிழில் வேண்டும்" இவைகள் எல்லாமும் கூட பாரதி நமக்குச் சொல்லிச் சென்றதே....

////மனிதரின் செல்களில் இந்த குளோரோபில் போன்ற ஒன்றை உருவாக்க இயலுமா என்பதுதான் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சி கனவு. அதாவது மரங்களே இல்லாத சூழல் ஒன்று வருகிறது என வைத்து கொள்வோம், அப்பொழுது மனிதர் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கு தாங்களே உணவு தயாரிக்க இயலுமா என்பதுதான் பரிணாம, மரபணு வழியில் வந்த ஒரு புது சிந்தனை. பார்க்கலாம்./////

இங்கே எனக்கு ஒரு சிந்தனை... வேதகாலத்தில் முனிவர்கள் பலகாலம் அமர்ந்த இடத்திலே உணவுகூட எடுக்காமல் அமர்ந்து தியானம் செய்து இருக்கிறார்களே!... அவர்களுக்கு அவர்களின் தண்டுவடத்திலிருந்து ஒருவித நீர் சுரந்து அது அவர்களின் உணவுத் தேவையை சரி செய்தது என்னும் படியான விசயங்களையும் கேள்விப் படுகிறேன்... அதைப் பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் இருந்தால் பதிவிடுங்களேன்... அதுவும் மேல் சொன்ன தங்களின் சிந்தனைக்கு தொடர்பு படுமா?!...

அருமையானப் பதிவு.... ஆண்டவனின் ஆக்கத்தில் வீணென்று எதுவும் இருக்கவே வழியில்லை.. அதை உபயோகிக்க தெரியாமல் வேண்டுமானால் நாம் இருக்கலாம்.. காரணம் எல்லாமே அவன்தான்... ஜடமும் அவனே இயக்கமும் அவனே.... இருளும் அவனே ஒளியும் அவனே.... இன்பமும் அவனே துன்பமும் அவனே... அருவமும் அவனே.. உருவமும் அவனே...

பதிவிற்கு மீண்டும் நன்றிகள்...

Radhakrishnan said...

நன்றி நண்பரே

நன்றி ஜி எம் ஐயா.

நன்றி வவ்வால். ஹா ஹா! மிகவும் ரசித்தேன்.

நன்றி தமிழ் விரும்பி ஐயா. மிகவும் விரிவான விளக்கங்களுக்கும், முனிவர் சம்பந்தப்பட்ட விசயங்கள் மூலம் பல புதிய செய்திகள் அறிந்து கொள்ள முடிந்தது. மிகவும் அருமை. நீங்கள் குறிப்பிட்ட முனிவர் விசயங்கள் பற்றி தேடல் தொடரலாம் ஐயா. ஆழ்ந்து நோக்கும் பார்வையும், பாரதி பற்றிய அறிவு செழிப்பும் என்னை வியக்க வைக்கின்றன.