Friday 2 December 2011

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 12

பாதை 11  இங்கே.

12 . ஆராய்ச்சியும் குழந்தையும்

'விட்டிலிகோ' எனும் தோல் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அது. விட்டிலிகோ எனும் நோயினால் தோலானது ஆங்காங்கே வெள்ளையாக மாறிவிடும். இந்த தோலின் வெள்ளைத் தன்மையினால் வெயில் மூலம் பிற பிரச்சினைகள் தோலில் ஏற்பட வாய்ப்புண்டு. 



இந்த நோய் எதனால் ஏற்படுகிறது, எப்படி இதை தீர்ப்பது என்பதுதான் நான்கு வருடங்கள் மேல் நான் செய்த ஆராய்ச்சி.

இந்த நோய்க்கு மருந்து என எனக்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த ஒருவர் செய்த ஆராய்ச்சியை தொடர வேண்டிய சூழல் எனக்கு. ஏனெனில் சீனாவைச் சேர்ந்தவர் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டதாலும், மேற்கொண்டு ஆராய்ச்சி தொடர விருப்பமில்லாததாலும் எனது கைக்கு இந்த ஆராய்ச்சியானது  வந்து சேர்ந்தது. 

இந்த ஆராய்ச்சியின் பொருட்டு சொல்லப்பட்ட சில விசயங்கள் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை என்றாலும் மனதில் ஒருவித தைரியத்துடன் நிச்சயம் கற்று கொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தாகிவிட்டது. நான் இந்த ஆராய்ச்சியை எடுத்துக் கொண்ட நாள் 12-04-1999. 

சில மாதங்கள் முன்னர் தான் மனைவி கருவுற்றிருந்தார். அவர் தனது பிசினஸ் படிப்பில் இறுதியாண்டு படித்து கொண்டிருந்தார். வாழ்க்கையில் ஒரு நிலையை அடையும் முன்னரே குடும்பம் அமைத்தல் குறித்தான கேலி பேச்சுகள் நிறைய இருந்தன. கருவுற்ற குழந்தையை கலைத்து விடலாமா எனும் சிலரின் யோசனை இன்னமும் சில நேரங்களில் எரிச்சல் தந்து விட்டு போகும். எப்படி அவர்களால் இப்படி நினைக்க முடிந்தது என! பொதுவாகவே நமது வாழ்க்கையை பிறர் வாழ எத்தனிப்பதன் மூலம் தேவையில்லாத சங்கடங்கள் வந்து சேர்வது இயல்பு. நமக்கு அறிவுரை சொல்ல வருபவர்கள் பெரும்பாலோனோர் தங்களது வாழக்கையை திறம்பட செயல்படுத்த வழி இல்லாதவர்களாகவே இருக்க கூடும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்றுதான் இருக்கும். நாங்கள் கூட்டு குடும்பமாக இருந்த காரணத்தினால் எந்த பிரச்சினையும் எழவில்லை. 

கருவுற்ற நாளில் இருந்து மனைவிக்கு காலையில் வாந்தி வருவது நின்றபாடில்லை. அவர் சிரமப்படுவதைப் பார்க்க மிகவும் சிரமமாக இருந்தது. தினமும் அதிகாலை ஆராய்ச்சியின் பொருட்டு கல்லூரிக்கு செல்வதும், மாலை ஒன்பது மணிக்கு திரும்புவதும் என புதிய வாழ்க்கை ஒன்றை  சமாளிப்பது மிகவும் கடினமாகவே இருந்தது. புதிய வேலை என்பதாலும், பல விசயங்கள் கற்று கொள்ள வேண்டியது இருந்ததாலும் மிகவும் போராட்டமாகவே இருந்தது. 

இந்த சூழ்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி வேறொரு இடத்திற்கு மாறப் போகிறது என்று வேறு சொல்லி வைத்தது அதிக பயத்தை தந்துவிட்டு போனது. 

எனக்கு ஆராய்ச்சி என தரப்பட்ட முதல் பணி என்னவெனில் மிளகுதனில் இருந்து பைபெரின் எனும் மூலக்கூறை தனியாக பிரித்தெடுப்பதுதான். இந்த பணியை சீனா நபர் முன்னரே செய்து இருந்தாலும் எனக்கு பழக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அந்த பணியை செய்ய சொன்னார்கள். இதுவரை இந்த பணியை செய்தது இல்லை. எல்லாம் புதிதாக இருந்தது. 

இந்த மருந்துகளுக்கு எல்லாம் முன்னோடி இயற்கையில் உருவாகும்  தாவரங்கள் தான் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த தாவரங்களின் பலனை அறிந்து கொண்டவர்கள் அதனை காயவைத்து அரைத்தோ, கொதிநீரில் கொதிக்க வைத்தோ மருந்தாக பயன்படுத்தி வந்தார்கள். இந்த அடிப்படை அறிவானது எப்படி நமது முன்னோர்களுக்கு வந்தது என்பது நமது சுற்றுபுறம் பற்றிய அக்கறையினால் விளைந்தது. ஆனால் இந்த தாவரம், இந்த தாவரம் இன்ன வியாதிக்கு உதவும் என்பதை புரிந்து கொள்ளும் திறன் இல்லாத காரணத்தினால் அனைத்து தாவரங்களில் இருந்து சேர்த்து ஒரு கலப்பு மருந்தாக உபயோகப்படுத்தினார்கள். 

அப்படி இந்த விட்டிலிகோவுக்கு மருந்தாக மாட்டு சாணம் போன்றவை முன்னாளில் உபயோகத்தில் இருந்து வந்தது. இந்த பைபெரின் போன்றவை நேரடியாக உபயோகத்தில் இருந்தது என சொல்லப்படவில்லை. ஆனாலும் சில நாட்டு வைத்தியங்கள், சீன மருத்துவ முறைகளில் பைபெரின் கொண்ட தாவரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்து இருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த பைபெரின் விடிளிகோவுக்கு ஒரு மருந்தாகும் எனும் ஒரு சிந்தனை எனது ஆசிரியருக்கு வந்து சேர்ந்தது. இவர் கேரளத்தை சேர்ந்த தமிழர், எனினும் இவரது வாழ்க்கை எல்லாம் கென்யா போன்ற நாடுகளில் இருந்தது. 

கருப்பு மிளகு எனப்படும் ரகத்தினை எத்தனால் எனும் திரவத்தில் கொதிக்க விட வேண்டும். இதனை பிரித்தெடுக்கும் முறை என சொல்வார்கள். இந்த விசயத்தை செய்ய அதற்கென தனி குடுவை எல்லாம் தேவைப்படும். குடுவையை சூடு பண்ணும்போது இந்த திரவம் அதி வெப்பத்தால் ஆவியாகும். அந்த ஆவியானது ஒரு குழாயின் மூலம் மேலே செல்ல அந்த குழாயானது குளிரூட்டப்பட்டு இருக்கும் காரணத்தினால் இந்த திரவம் மீண்டும் குடுவைக்கு வந்து சேரும். இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் இதே வேலையாக நடை பெறும். 


அதற்கு பின்னர் குடுவையில் இருக்கும் திரவத்தை வடிகட்ட வேண்டும். இப்பொழுது மிளகானது பிரிக்கப்பட்டு, மிளகில் இருக்கும் மூலக்கூறுகள் எல்லாம் திரவத்தில் இருக்கும். இதே போன்று திரவங்களின் தன்மையை பொருத்து மூலக்கூறுகள் பிரிந்து வரும். 

மூலிகையில் பெட்ரோல் தயாரிக்கும் முறை, பனை மரத்தில் கள் இறக்குதல், தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணை எடுத்தல் போன்ற பல விசயங்கள் பல்கலைகழகத்தில் கற்று கொண்டதல்ல. அவரவரின் அறிவு சார்ந்து ஒரு விசயம் செய்யப்படுவது உண்டு. என்ன ஒரு பிரச்சினை எனில் இவை எல்லாம் சாதாரணமாக செய்யும்போது சீர்படுத்த இயலாது. 

இந்த திரவத்தை எல்லாம் நீக்கிவிட பல மூலக்கூறுகள் நிறைந்த திரவம் இருக்கும். அதற்கு பின்னர் சுத்திகரிப்பு வேலையை செய்ய வேண்டும். இந்த சுத்திகரிப்பு வேலைக்கு முன்னர் நமக்கு தேவையான மூலக்கூறினை பிரித்தெடுக்க வேண்டும். 


இது மிகவும் சிரமமான காரியம் தான். நாம் பிரித்தெடுக்கும் மூலக்கூறு சரியானதுதானா என தொடர்ந்து அந்த மூலக்கூறினை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.  இதை முதலில் செய்ய குரோமொடக்ராபி எனப்படும் பிரித்தெடுக்கும் முறை கையாளப்படுகிறது. இதற்கு சிலிகா ஜெல் எனப்படும் பொருளானது அலுமினியம் தகட்டில் வைத்து உருவாக்கி இருப்பார்கள். இது ஒரு சோதனை முறை. இந்த முறையில் மூலக்கூறு நன்றாக பிரிந்து வந்தால் கண்ணாடியில் சிலிகா ஜெல் வைத்து அந்த மூலக்கூறினை பிரிப்பார்கள். 

அவ்வாறு இந்த பைபெரின் தனை பிரித்து எடுத்து விட்டேன். வெறும் இரண்டு வரிகளில் எழுதிய இந்த விசயம் செய்து முடிக்க இரண்டு வாரங்கள் மேல் ஆகிவிட்டது. 



இந்த மூலக்கூறுகள் அந்த அலுமினிய தகட்டில் ஒரு புள்ளியாக வைக்க வேண்டும். அவை ஒரு பீகரில் திரவம் ஒன்றில் மூழ்கிவிடாமல் வைக்க வேண்டும், இந்த திரவத்தை தேர்ந்தெடுக்கும் முறையானது அத்தனை எளிதல்ல. ஒரே திரவம் அல்லது திரவங்களின் கலவையாக இவை மூலக்கூறினைப் பொருத்து அமையும். இந்த திரவம் அலுமினியம் தகட்டின் மீது மேலே செல்ல செல்ல மூலக்கூறுகள் பிரிந்து கொண்டே செல்லும். இப்படி தெரிந்த ஒன்றை வேறு வழியாக பிரிக்க முடியும். 

இதனை குழாய் குரோமொடக்ராபி என சொல்வார்கள். இந்த குழாய் குரோமொடக்ராபியில், நாம் உருவாக்கிய ௨ மில்லி லிட்டர் அளவே உள்ள திரவம் அடங்கிய மூலக்கூறுகளை ஊற்றி, அதன் பின்னர் ஒவ்வொரு திரவமாக ஊற்ற வேண்டும். இந்த திரவங்கள் எவை எவையென மூலக்கூறு பொருத்து அமைகிறது. அவ்வாறு தனித்தனியே பிரித்தெடுக்கப்படும் போது கலவையான மூலக்கூறுகள் தனியாக பிரிந்துவிடும். தனிதனி மூலக்கூறு மட்டும் உள்ள திரவம் எல்லாம் மொத்தமாக்கினால் ஒரு குறிப்பிட்ட அளவு மூலக்கூறு கிடைக்கும். அந்த திரவத்தை ஆவியாகிய பின்னர் இந்த பைபெரின் கிடைக்கும். 

அது பைபெரின் தானா எனும் சோதனைக்கு முன்னர் பைபெரின்தனை சுத்தபடுத்த சில வழிகள் உண்டு. அது என்னவெனில் குறைவான அளவுடைய ஒரு திரவத்தில் இந்த மூலக்கூறை கொதிக்க வைத்து பின்னர் மெதுவாக குளிரவைத்தால் இந்த பைபெரின் படிமங்களாக வெளிவரும். இதனை கிரிச்டளைசெசன் என சொல்வார்கள்.

இந்த சூழலில் எனக்கு சற்றும் பழக்கமில்லாத ஒரு துறைக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டி ஒரு ஆசிரியரை சந்திக்க வேண்டும் என எனது ஆசிரியர் அழைத்து சென்றார். மனதில் அதிக பயம் கவ்வி கொண்டது. அவர் இந்த கல்லூரியில் மிகவும் பிரபலமானவர், அவரை அதி புத்திசாலி என்றெல்லாம் சொல்லிக் கொண்டார்கள். அவரிடமா நாம் மற்றொரு வேலை பார்க்க போகிறோம் என நினைக்கும்போது என்னுள் ஏற்பட்ட அந்த உணர்வு... இந்த வேலை செய்ய உனக்கு பிரச்சினை இல்லை அல்லவா என்று எனது ஆசிரியர் கேட்டபோது சற்றும் யோசிக்கமால் பிரச்சினை இல்லை என்று சொல்லி வேலையைத் தொடங்க சம்மதித்தேன். அவரை சென்று சந்தித்தோம். என்னைப் பார்த்து நம்பிக்கையூட்டும் விதமாக அவர் பேசியதும், எனக்கென ஒரு தனி நபரை ஆய்வகத்தில் அமர்த்தியதும் என்னுள் அதிக தைரியத்தை வரவழைத்தன. அப்பொழுதே நான் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டு ஒரு இலக்கை கொடுத்தார்கள். 

வேதியியல் ஆய்வகத்தில் காலடி எடுத்து வைத்தேன். அந்த ஆய்வகத்தில் வேலை செய்பவர்கள் தங்கி இருக்கும் அறையில் ஓரிடம் தந்தார்கள். அந்த அறையில் நான் கண்ட ஒரு வரைபடம் என்னுள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை, கஷ்ட நஷ்டங்களை, வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், சாகும்போதுதான் ஓய்வு என்பதெல்லாம் சொல்லி தந்தது. அந்த வரைபடம் குறித்து இதே வலைப்பூவில் எழுதியதாக நினைவு. இருவர் காரில் செல்வார்கள். ஒரு மேடு வரும், அதை தாண்டியதும் 'அப்பாடா' என்பார் ஒருவர் அதற்குள் இன்னொரு மேடு தொலைவில் தென்படும். இதுதான் வாழ்க்கை. ஒரு பிரச்சனை தீர்ந்துவிட்டது என எந்த மனிதருமே நிம்மதியாக அமர முடிவதில்லை. ஏதேனும் ஒன்று முளைத்து கொண்டே இருக்க வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கிறது. 

அந்த வேதியியல் ஆய்வகத்தில் வேலை பார்த்தவர்கள் ஒன்றும் தெரியாத எனக்கு மிகவும் அக்கறையுடனே கற்று தந்தார்கள். முதலில் ஒரு வேதிவினையை உருவாக்கினேன். அந்த வேதிவினையானாது பெங்களூரில் இருக்கும் ஒரு ஆய்வகத்தில் முன்னரே செய்யப்பட்ட ஒன்று. பலமுறை செய்து பார்க்கிறேன், எதுவுமே பலன் கிடைக்கவில்லை. அவர்கள் சொன்ன மூலக்கூறு எனக்கு வரவே இல்லை, மாறாக வேறு மூலக்கூறு வந்து சேர்ந்தது. இதனை உறுதிபடுத்த அந்த ஆய்வகத்தில் இருந்த ஒருவர் தானே அந்த வேதிவினை செய்து பார்த்தார், நான் கண்டுபிடித்த மூலக்கூறுதான் வந்தது. உடனே பெங்களூருக்கு எழுதினோம், பதிலே வரவில்லை! அந்த மூலக்கூறு இதுவரை எவருமே கண்டுபிடிக்காத மூலக்கூறு என்பதால் புதிதாக பெயர் சூட்டும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. எனது மனைவியின் பெயரை மனதில் கொண்டு பார்வரின் என வைத்தேன். 

இந்த நேரத்தில் ஆய்வக இட மாற்றம் நடை பெற ஆரம்பித்தது. அப்படியே வேலைகள் சம்பித்தன. எல்லா பொருள்களை எடுத்து வைக்கவும், இடம் மாற்றவும் செய்யவுமே நேரம் சரியாக இருந்தது. மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனை செல்லவும், கர்ப்பிணிகளுக்கான வகுப்பு செல்லவும் நேரம் போய்க்கொண்டிருந்தது. அந்த தருணத்தில் எனது மனைவி தனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும் என சொல்ல, நானோ இல்லை இல்லை உனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என சொல்ல எங்களுக்குள் ஒரு சின்ன போட்டிம யார் சொல்வது பலிக்கும் என!. இதை வைத்துதான் உலகில் ஒரு தத்துவம் எனக்கு புரிந்தது. எல்லா விசயங்களிலும் ஒன்று அதுவாக இருக்க கூடும், அல்லது இதுவாக இருக்ககூடும். இரண்டும் இல்லா நிலை விதிவிலக்கே.  பொதுவாக மருத்துவமனைகளில் என்ன குழந்தை என சொல்லமாட்டார்கள், அதுவும் குறிப்பாக ஆசிய மக்களிடம். இதற்கு முக்கிய காரணம் ஆசிய மக்கள் பெண் குழந்தைகளை வேண்டாம் என ஒதுக்கிவிடுவார்கள் எனும் ஒரு பொல்லாத குற்றச்சாட்டு நிலவுவதுதான். என்ன குழந்தை என எங்களுக்கு சொல்லவில்லை, நாங்களும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. தினமும் வாந்தி வருவது நின்றபாடில்லை. பொதுவாக சில மாதங்களில் நின்று போகும் இந்த வாந்தி நிற்கவே இல்லை.

ஆய்வகம் மாறி வந்தாகிவிட்டது. வேறொரு மூலக்கூறு உருவாக்க சொல்லி இருந்தார்கள். அந்த வேளையில் வகுப்புகளுக்கு செய்முறை பயிற்சி சொல்லிக்கொடுக்க சொன்னார்கள். இப்படியாக இருக்க மூலக்கூறு உருவாக ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த வேதி வினை இலகுவானதாக இருந்தாலும் கடைசியில் வந்த மூலக்கூறு சரியில்லாமலே இருந்தது. மனைவிக்கு பிரசவ வலி இன்று வருமோ, அன்று வருமோ எனும் பயம் வேறு. கல்லூரி படிப்பை முடித்துவிட்டிருந்தார். நவம்பர் நான்கு என தேதி கொடுத்து இருந்தார்கள். நவம்பர் நான்கு தாண்டியது. பத்து வந்தது. வலி எதுவுமே இல்லை. 

மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அடுத்த நாள் வர சொன்னார்கள், எதுவும் நடக்கவில்லை. பன்னிரண்டாம் தேதி வந்தது. நாள் ஆகிவிட்டதால் இனி இது பெண் குழந்தைதான் என மனைவி சந்தோசப்பட்டு கொண்டார். பெண் குழந்தை என்றால் அத்தனை பிரியம் எனது மனைவிக்கு. எந்த குழந்தை எனினும் பரவாயில்லை, பிரசவம் ஆக வேண்டுமே என பயம் மனதில் ஒட்டிக் கொண்டது. ஆனாலும் இந்த செய்முறை பயிற்சி பாடம் இருந்ததால் கல்லூரி செல்வதை தவிர்க்க இயலவில்லை. 

இறுதியாக வலியை உருவாக்க வேண்டும் என எபிடூறல் ஊசி போட்டார்கள். மனைவியுடனே இருந்தேன். அவர் பட்ட சிரமத்தை பார்த்தபோது இனிமேல் குழந்தை வேண்டாம் என்று அன்றுதான் முடிவு செய்தேன். எனது தாய் அப்படி நினைத்து இருந்தால் நான் பிறந்து இருக்கவே மாட்டேன். நான் வீட்டில் பதிமூன்றாவது குழந்தை. அப்பொழுதெல்லாம் குடும்ப கட்டுப்பாடு, பொருளாதார கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எனது மனைவிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்கிற கவனமும், அவரது கதறலில் நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். அன்று இரவு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது அருகில்தான் இருந்தேன். போர்செப்ஸ் மூலம் குழந்தையை வெளி எடுத்தார்கள். என்ன குழந்தை என்றெல்லாம் பார்க்க தோணவில்லை. மனைவியின் தலையின் மீது எனது கரம் இருந்து கொண்டே இருந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. எத்தனை சிரமம்! எத்தனை துயரம்! குழந்தை பெற்று கொள்வது பெண்ணுக்கு மறு பிழைப்பு என சும்மாவா சொல்லி வைத்தார்கள். எனக்கு மறு பிழைப்பு போல் தான் இருந்தது. ஆண் குழந்தை என காட்டினார்கள். சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் மனைவியின் வேதனை மனதை வெகுவாக பாதித்து இருந்தது. நான் மருத்துவமனையில் தங்க முடியாது என சொல்ல, அன்றுதான் முதன் முதலில் மனைவியை விட்டு பிரிந்து தூங்கினேன். அதற்கடுத்த தினமே ஆய்வகம் செல்ல வேண்டியதாகிப் போனது. 

பல நாட்களாக உருவாக்க முடியாத மூலக்கூறினை உருவாக்கினேன். நான் தந்தை ஆனது ஆய்வகத்தில் அனைவருக்கும் தெரிந்தது. எனது ஆசிரியர்கள் எனது குழந்தைக்கும், மூலக்கூறுக்கும் சேர்த்து வாழ்த்து சொன்னார்கள். இனி வேதிவினை எளிதுதான் எனும் நம்பிக்கை பிறந்தது. 

ஒரு மூலக்கூறு எப்படி அதுதான் என தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கான நான் கற்று கொண்ட ஆய்வு மிகவும் வித்தியாசமாக இருந்தது. படங்கள்: நன்றி கூகிள் 

(தொடரும்)

2 comments:

Unknown said...

அருமையானக் கட்டுரை, அதிலும் சுவாரஷ்யமான நடை...
தன்முனைப்பு, விடா முயற்சி, கடும் உழைப்பு, வாழ்க்கைத் தத்துவம்,
குடும்பம், மன வாழ்க்கை, குழந்தைப் பேறு, மனித நேயம்... அப்பப்பா!
இத்தனையும் கலந்தக் அற்புதக் கலவை உங்களின் ஆக்கம்...

விடாமல் ஒரே மூச்சில் படித்தேன்... அதிலே உங்களையும் ரசித்தேன்.
'விட்டிலிகோ' பற்றி மேலும் அறிய ஆவலுடன்.....
அறிவியலும் அழகுத் தமிழும் கொஞ்சும் மகத்தானக் கட்டுரை பகிர்வுக்கு
நன்றிகள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.