Tuesday 13 December 2011

அணையை உடைச்சிட போறானுங்க

முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் தற்போது பெரிய அளவில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இரண்டு மாநில அரசியல் தலைவர்களின் மதி கெட்ட செயல்களால் பாதிப்புக்கு உள்ளாகப் போவது மக்கள் தானே தவிர அரசியல் தலைவர்கள் அல்ல. நீதியை முறையாக கடைபிடிக்கும் நாடாக, பிரச்சினைக்குரிய விசயங்களில் சமயோசிதமாக நடக்கும் நாடாக  இந்தியா இன்று இருந்து இருக்கும் எனில் பல பிரச்சினைகள் எளிதாக முடிந்து இருக்கும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக பல பிரச்சினைகள் இழுவையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு நீதி ஒன்றும் பொருட்டு அல்ல!

எதற்கு மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அரசு நடந்து கொள்ள மறுக்கிறது என தெரியவில்லை. இந்த அணை கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூற்றி பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது. சில வருடங்கள் முன்னர் இந்த அணையில் சிறு கசிவு ஏற்பட்டதால் அணையின் ஸ்திரதன்மை பாதிக்கப்பட்டு இருக்கலாமோ எனும் அச்சம் வருவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அதையே காரணம் காட்டி மொத்த அணையும் உடைந்துவிடும் என அடிப்படை காரணம் இல்லாமல் அவதூறு பரப்புவது நியாயம் இல்லை. இதற்கு தூபம் போடும் வகையில் வெளிவந்த ஒரு திரைப்படம் DAM999 இந்த படத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருந்து இருந்தால் இன்று இத்தனை பிரச்சினை வந்திருக்குமா என தெரியாது. இந்த திரைப்படத்தை தடை செய்வது முதற்கொண்டு இவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டு கொண்டார்கள். இன்று தேனி போன்ற மாவட்டங்களில் பெரும் போராட்டங்களும் கடை அடைப்புகளும் நடந்தேறி கொண்டிருக்கின்றன. இதற்கு தகுந்த தீர்வை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என இல்லை. அந்த அந்த பகுதி வாழ் மக்கள் புரிந்துணர்வுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம், ஆனால் தற்போது நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது போன்ற நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. நதிகள் தேசியமயமாக்கப்படுவது குறித்து மக்கள் புரட்சி செய்தாக வேண்டும். இப்பொழுது கூட கேரளா அரசு வேறு ஒரு அணையை கட்ட எவரும் தடை விதிக்க முடியாது எனும் ஒரு நிலை வந்தால் பெரும் பிரச்சினைதான். முல்லை பெரியாறு அணியின் பின்னணி சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

முதன் முதலாக கட்டப்பட்ட அணையானது வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பின்னர் பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னி குக் தலைமையில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் போராடி கட்டப்பட்ட அணை தான் இந்த முல்லைப் பெரியாறு அணை. ராமநாதபுரம் சமஸ்தானத்தை சார்ந்த பிரதானி முத்து இருளப்ப பிள்ளை என்பவர் தான் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் முன்னர் செயல்படுத்த திட்டமிட்டவர். இந்த் அணையின் மூலம் தமிழக மாநிலங்கள் பயன்பெறும் எனவும், ராமநாதபுரம் அதிக பயன் பெரும் எனவும் திட்டமிட்டவர். முத்துராமலிங்க சேதுபதி சிறுவராக இருந்ததால் முத்து இருளப்ப பிள்ளை ஆட்சி பொறுப்பினை ஏற்றார். ஆட்சிக்கு வந்த இந்த முத்து இருளப்ப பிள்ளை பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் முத்துராமலிங்க சேதுபதி தான் வளர்ந்த பின்னர் இவரின் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லி முத்து இருளப்ப பிள்ளையை ஒரு துரோகியாகவே சித்தரித்து இருப்பதாக வரலாறு சொல்கிறது. இதனால் வெறுப்புற்ற முத்து இருளப்ப பிள்ளை தனது அமைச்சர் பதவியை துறந்தார், அத்துடன் இவரது வரலாறு மறக்கடிக்கப்பட்டது.

பென்னிகுக் பற்றி அந்தோணி முத்து பிள்ளை அன்றைய காலத்தில் பெரிதாக போற்றினார். தண்ணீரில் உனது பெயர் எழுதப்பட்டு இருந்தாலும் இந்த பெரியார் ஆறு ஓடும் வரை உனது பெயர் இருக்கும் என்றார். அப்படிப்பட்ட பெரும் பாரம்பரியம் மிக்க பெரியார் அணையை இப்பொழுது ஏதேதோ காரணம் காட்டி உடைத்துவிட்டு புதிய அணையை வேறொரு இடத்தில் கட்ட இருப்பதாக கேரளா அரசு சட்டசபையில் மசோதா இயற்றி இருப்பது வேடிக்கைக்கு உரியது.

புதிய அணையை கட்டுவதைவிட இருக்கும் அணையை பராமரித்தல் என்பது ஒன்றும் பிரச்சினைக்குரிய விசயம் இல்லை. அணை கட்டப்பட்டு இருக்குமிடம் கேரளா என்றாலும் 999 வருட குத்தகைக்கு தமிழக அரசு இந்த அணை மற்றும் அணையை சுற்றியுள்ள இடங்களை பராமரிக்கும் பொறுப்பினை ஏற்று உள்ளதுதான் பிரச்சினை.

இந்த அணை உடைந்து போகும் அபாயம் என சொல்லி அவதூறு பிரச்சாரங்களை கேரளா அரசு மேற்கொண்டு வருவது மூலம் தமிழர்கள் மலையாளிகள் இடையே உள்ள நல்லுறவை குலைக்கும் வண்ணம் சிலர் செயல்படுவது கண்டனத்துக்குரியது. கேரளாவில் தான் படித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்றால் முட்டாள்களும் நிறைய இருக்கிறார்கள் என காட்ட இந்த கேரளா அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது வேதனைக்குரியது. செம்மறியாடு போன்ற குணங்கள் கொண்ட மக்கள் பலரை இரண்டு அரசுகளும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதனால் பொதுவுடைமை பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் பலர் ஈடுபடுவதால் பதட்டம் நிலவுவதை தவிர்க்க இயலாது. ஒருவர் உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார், மற்றொருவர் அதைப் பார்த்து உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். இந்த உண்ணாவிரதம் மூலம் இவர்கள் உயிர் போகாது என்பது இவர்களுக்கு தெரியும் என்பதால் இது போன்ற வித்தைகளை காட்டி மக்களுக்காக போராடுகிறேன் என பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

இந்த பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் உரிய வசதிகள் இல்லாமல் வாடும் ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசும் சரி, இதற்கு முந்தைய அரசுகளும் சரி என்ன செய்தது?

தண்ணீர் கொள்ளளவு 142 அடி என இருந்தால் பிரச்சினை வரும் என்கிறது கேரள அரசு. அணையானது வலுவாக இருப்பதாக சில மாதங்கள் முன்னர் ஆராய்ந்த குழு சொல்லியாகிவிட்டது. இந்த மாதம் கூட மேலும் ஒரு குழு சோதனைக்கு வர இருக்கிறதாம். ஒரு அணை வலுவா இல்லையா என்பதை எப்படி சோதிக்கிறார்கள்?

கேரளா அரசு தனது காரியத்தில் சாதிக்க வேண்டுமென நினைத்து எது வேண்டுமெனிலும் செய்துவிடுமோ எனும் அவசியமற்ற அர்த்தமற்ற அச்சம் எழத்தான் செய்கிறது. ஆனால் இதை அரசியல்வாதிகள் பேசினால் பெரும் பிரச்சினை ஆக வாய்ப்புண்டு. அதோடு மட்டுமில்லாமல் சோதனை செய்கிறேன் என செல்பவர்களும், போராட்டம் செய்கிறேன் என அணையின் மீது ஏறி நின்று போர்க்கொடி தூக்குபவர்களும் அணையை உடைச்சிட போறானுங்க எனும் கவலை மட்டுமே எஞ்சி நிற்கிறது ஒரு பாபர் மசூதியை தொலைத்தது போல!

3 comments:

Unknown said...

இறையாண்மையை தேச ஒற்றுமையை மானுட தேவையை விரும்பும் மக்கள் பிரதிநிதிகளின் பஞ்சம் அங்கே தலை விரித்தாடும் வேலை இதே... செக்கிச்ஹுத்தும், கல்லுடைத்தும், சிறைக் கம்பிகளுக்கு பின்னே வாழ்வைக் கழித்து, இந்தியத் திருநாட்டை அந்நியனிடம் காத்தது இந்த மாக்களிடம் கொடுத்ததும் இதற்காகவா?

வரலாறு படிக்காத வந்தேறிகள்
படித்தும் பதாரைப் போன புல்லுருவிகள்
இருட்டாய்ப் போன இதயம் கொண்ட
தலைவர்கள்.... இதோ உங்களின் காதுகளில்
அன்றைய நாளிலே ஒரு ஞானக் கிறுக்கன்
எழுதிய புதிய வேதத்தை கூறுவேன்...
நாம் வேறென்ன செய்குவோம்...
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்....

ஓ! மாகவியே.... உன்னத பொருளாதார மேதையே நூறாண்டுகள் ஆகியும் உன் உன்னதம், உனது உயரிய பாதையை காண்பாரில்லையே!

பதிவிற்கு நன்றிகள் நண்பரே!

முத்தரசு said...

நாட்டமை ஆமை போல இருக்கே..

Radhakrishnan said...

மிக்க நன்றி நண்பரே.

அருமையான கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா. பலரது கற்பனைகள் கற்பனைகளாகவே இருக்கின்றது.

இருந்து விட்டு போகட்டும். ஒருவர் பெரியார் நாடு உருவாகும் என்கிறார். ஒருவர் கலவரம் வெடிக்கும் என்கிறார். தீர்வு நோக்கிய பயணமாக இது தெரியவில்லை. நன்றி மனசாட்சி.