Thursday 15 December 2011

இவர்கள் எல்லாம் ஏன் எழுதுவதில்லை

சேவல் கூவும் முன்னர் எழுந்திருந்து, சூரியன் உதிக்கும் முன்னர் வாசல் தெளித்து, கோலம் இட்டு பழைய சோற்றினை பாங்காய் உண்டு களை எடுத்திட காட்டுக்கு விரைந்து நெற்பயிர்களும், சோலைக் கதிர்களும் வளர வழி செய்து, ஆட்டுக்கும், மாட்டுக்கும் புல் கட்டு சுமந்து ஓயாமல் ஆடியாடி ஓடியாடி வேலையே கதியென கிடக்கும் இவர்கள் ஏன் எழுதுவதில்லை?

பூமியை தோண்டி அதற்குள் சிமேண்ட்டையும், கற்களையும் குழைத்து போட்டு வீடு கட்ட செங்கலும், சுண்ணாம்பு கலவையும் சுமந்து திரியும் சித்தாள்களும், பிதாகரஸ் தியரம் தெரியாது போனாலும், அல்ஜீப்ரா, டிரிக்நோமேட்ரி என எதுவும் புரியாது போனாலும் விழுந்து விடாத வீட்டை வலுவாக கட்டி வைக்கும் கொத்தனார்களும் ஏன் எழுதுவதில்லை?

உயிருக்கு போராடும் மாந்தருக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாது இரவும் பகலும் கண் விழித்து வாந்தியையும் வாடையையும் பொருட்படுத்தாது உயிர் காப்பாற்ற உழைக்கும் நர்ஸ்களும், சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் அறுவை சிகிச்சை அறையிலேயே அடைந்து கிடக்கும் மருத்துவர்களும் ஏன் எழுதுவதில்லை?

மௌனமாய் மரத்தின் கீழ் அமர்ந்து மாபெரும் சோதி கண்டபின்னும் தான் கண்டது கடவுளென கூறாமல் கலையாத தவம் கொண்டோர்களும், குப்பை நிறைந்த சாலைகளை துப்புரவாக்கி, பசியென அலையும் பலருக்கு அன்னம் தயாரித்து சமூக சேவகமே தனது சிந்தனையாய் போராடுபவர்கள் ஏன் எழுதுவதில்லை?

உரிமைகள் தொலைந்தது என உயிரை தந்து உரிமை மீட்டிட ஒரு வாய் சாதம் கூட நிம்மதியாய் உட்கார்ந்து சாப்பிட வழியின்றி சமூக அவலங்களை துடைத்திட துடியாய் துடிப்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

கருமமே கண்ணாய், காரியமே கருத்தாய் கண்ணீர் துடைப்பதே செயலாய் முதியோர்களுக்கு குழந்தைகளாய், ஆளில்லார்க்கு ஆளாய் அவதியை இன்பமாய் பாவித்து வாழ்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

15 comments:

Thozhirkalam Channel said...

எங்கள் இளைஞர்கள் ஒரு புதிய முயற்சியாக இணையத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த தளம் ஒரு சிறு புள்ளியாக உங்கள் பார்வைக்கு இடப்பட்டுள்ளது. எங்கள் குறிக்கோள் தமிழ் பதிவில் சிறந்த் தளமாக cpede.com அமையப்பெற வேண்டும் என்பதே ஆகும். இந்த கூட்டுமுயற்சியானது நிச்சயமாக வெற்றிபெறும் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமும் இல்லை.

G.M Balasubramaniam said...

அவர்கள் வாய்ச்சொல் ( அல்லது ) எழுத்து வீரர்கள் அல்ல. செயல்வீரர்கள் .அதனால்தான் எழுதுவதில்லையோ என்னவோ.

Yaathoramani.blogspot.com said...

அவர்களுக்காகத்தானே நாம் யோசிக்கிறோம்
நாம் எழுதுகிறோம்
நமக்காக அவர்கள் எல்லாம் செய்வதைப் போல
அவர் அவர்கள் அவர்களால் முடிந்ததை சமூகத்திற்குச் செய்கிறார்கள்

சிலர் உடலால் ..சிலர் உணர்வால்.. சிலர் எழுத்தால்
எதுவும் குறைந்தத மதிப்புடையவை அல்ல
சிந்தனையை தூண்டிச் செல்லும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

த.ம 2

Radhakrishnan said...

நன்றி நண்பரே.

நன்றி ஜி எம் ஐயா. இருக்கலாம்.

நன்றி ரமணி ஐயா. இப்படியும் இருக்கலாம்.

Muruganandan M.K. said...

எழுதும் நாம் வாய்ச்சொல் வீரர்கள்
எழுதாது தொழிலோடு நிதம் வாழ்வோர்,
வயிறாற உணவுண்ண முழு நேரம் தொழிலாள்வோர்.
அன்றோல் மற்றோர் உயிர் வாழ தாம் உழைப்போர்
எனலாமா?

Unknown said...

எல்லோரும் எழுதுகிறார்கள் தான்
அவைகளை நாம் தான் வாசிக்கவில்லை...
அதாவது அவைகளின் வெளிப்பாடு அதுவாக இருக்கிறது!!!...

'எமக்குத் தொழில் கவிதை
நோடிபோழுதும் சோராதிருத்தல்'
என்றான் மகாகவி....
அவனுமே ஆயிரம் தொழில் என்று கூறி சிலவைகளை பட்டியலிட்டு... உழைப்பாளிகளை 'பிரம்மா தவன் கலை இங்கு நீரே' என்றும் விவசாயிகள் உள்பட சிலரைக் கூறி அவர்களை 'பார்மிசைக் காப்பவர் நீரே' என்றும் அடுத்ததாக நமது பிரிவுக்கு வருகிறான் பாட்டும், செய்யுளும்,பாரத நாட்டியக் கூத்து என்றும் இயற்கையை கண்டு அதில் இருக்கும் உண்மையைக் கண்டு (விஞ்ஞானிகளும் மெஞ்ஞானிகளும் அடக்கம்) சாத்திரம் படிப்பீரே என்றும் இவர்களை எங்கே வைக்கிறான் 'தேட்டம் இன்றி விழிஎதிர் காணும் தெய்வமாக விளங்குவீர் நீரே' என்கிறான். ஏதோ எழுதக் கூடாது... இந்த சமூகத்திற்கு அவசியமானதை எழுத வேண்டும் அது கடைசி ரகத்தின் பொறுப்பாக இருக்கிறது....

ஒவ்வொரு செயலும் கலையே அதிலே அன்பும், பண்பும், நேசமும், ஆத்ம திருப்தியும் இருக்கிறது... அதிலே பஞ்ச பூதங்களின் செயற்கையால் இந்த பிரபஞ்சம் அதைப் போலவே இந்தத் தொழில்கள் எல்லாம் சேர்ந்தது உலக வாழ்க்கை இது ஒற்றுமை....

எழுதுவது நமக்கு வசம் / வாய்ப்பு / அவசியம் இதுவே ஏற்பாடாக இருக்கலாம்... வாக்கில் தான் ஈசன் இருக்கிறான் என்கிறது உபநிடதம்...
சுருக்கமாக ஒருவரை சந்தோசப் படுத்த சில நேரங்களில் பெரிய செயல்களை செய்ய வேண்டி யுக்கிறது... அதே சமயம் ஓரிரு வார்த்தை அவருக்கு பெரிய மகிழ்ச்சியையும் தந்து விடுகிறது... மந்திரத்தின் சக்தி அது... இது மிக எளிதில் ஜீவனை தீண்டும்...

பாரதியின் பாடல் தந்து பின்னூட்டம் மிக நீண்டு போகுமோ என்றுத் தரவில்லை..
நல்ல சிந்தனையை தூண்டிய கவிதை அதை நீங்கள் வசனமாகவே தந்து விட்டீர்கள்!
மிக்க நன்றி நண்பரே!

தனிமரம் said...

அவர்களுக்கு செயல் செய்த களைப்பு இருக்கும் சில நேரங்களில் எழதனும் என்ற ஆர்வம் இருக்காத படியால் எழுதுவதில்லை  ஏழுதியவன் ஏட்டைக்கிழித்தான் என்பதன் பொருள் உணர்ந்தவர்கள் போலும் .நல்ல பதிவு நண்பரே!

PUTHIYATHENRAL said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்!

* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்! எப்படி எல்லாம் வீர வசனம் பேசி தேசபக்தி, ஒருமைப்பாடு என்று கூக்குரல் இட்ட உங்களையே விரக்தி அடைய வைத்து விட்டார்களே. இப்பவாவது உங்கள் தேசபக்தி போதை தெளிந்ததே சந்தோசம்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

:) hmm ...அவரவர்க்கு அவரவர் கடமைகள். நமக்கு எழுதுவது தான் கடமையா? அல்லது எழுதுவதும் கடமையா? அருமையான பதிவு.

Unknown said...

நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும்
அவர்களில் சிலரும் எழுதத்தான் செய்கிறார்கள்
வேலை பளுவின் காரணமாகவோ
அல்லது சில பணிகளில் உள்ளவர்கள் எழுத்தறிவோ படிப்பறிவோ இல்லாதவராக இருப்பதும் காரண மாகலாம்
தங்கள் பதிவு அருமையாக, நடையழகு உள்ளதாக உள்ளது!
நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Radhakrishnan said...

நன்றி முருகானந்தம் ஐயா. இருக்கலாம்.

நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா.

//எமக்குத் தொழில் கவிதை
நோடிபோழுதும் சோராதிருத்தல்'//
நன்றி தமிழ்விரும்பி ஐயா. சரிதான்.

நன்றி தனிமரம், விரைவில் தோப்பாக மாறிவிடுங்கள் அல்லது தப்பில் ஒன்றாய் இருந்துவிடுங்கள்.

நன்றி புதிய தென்றல். பாவம் விஜயகாந்து.

நன்றி சக்தி சகோதரி. எழுதுவது கடமையாக இருக்க கூடும்.
நன்றி புலவர் ஐயா. சரிதான்.

வவ்வால் said...

ரா.கி,

நல்லகேள்வி ,விடைதருவார் யார் ?

அவங்கலாம் எழுத ஆரம்பிச்சா நல்லாத் தான் இருக்கும், ஆனால் வாய்ப்பே இல்லை, அதிக வேலை ,குறைவான ஊதியம் , மேலும் முதுகொடியும் வேலை அவர்களுக்கு.அவர்கள் வருமானத்திற்கு கணினி,இணையம் எல்லாம் எட்டாக்கனி.பல பாட்டாளிகள் மாலை ஆனதும் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள டாஸ்மாக் தான் செல்கிறார்கள்.

நம்மை போன்றவர்களுக்கு நல்ல ஊதியம்,உபரியாக ஓய்வு நேரம் எல்லாம் இருப்பதால் தான் எழுதுகிறோம். பெரும்பாலோர் ஒன்றும் சிந்த்னை தூன்ட, சமுதாயத்தை மாற்ற, தமிழைக்காக்க ஒன்றும் இங்கே பதிவுகளில் எழுதுவது இல்லையே.

கில்மா, படம் , மொக்கைப்படம் என ஒன்று விடாமல் பார்த்து விமர்சனம் செய்யும் அளவுக்கு நேரம் மிச்சம் இருக்கு நம்மை போன்றோருக்கு, அப்படிலாம் செய்ய உழைக்கும் வர்க்கத்திற்கு முடியுமா?

அவங்களுக்காக தான் நாம எழுதுரோம் சொல்வது ஏமாத்து வேலை, அவன் பசிக்கு இவர் சாப்பிட்டேன் சொல்கிறார் :-))

அந்த காலத்தில் புலவர்கள் அமர காவியம் படைக்கவும் புரவலர்கள் தேவை என்பதைப்பார்த்தால் பசி இல்லை என்றால் தான் எழுத்தும் சிந்தனையும் வேலை செய்ய முடியும் என்பது தெரியும்.

உழைக்கும் வர்க்கத்திற்கு பிழைப்பே பெரும் பாடானா நிலையில் அவர்கள் எங்கே இணையம் வந்து எழுத முடியும்.

Radhakrishnan said...

//அந்த காலத்தில் புலவர்கள் அமர காவியம் படைக்கவும் புரவலர்கள் தேவை என்பதைப்பார்த்தால் பசி இல்லை என்றால் தான் எழுத்தும் சிந்தனையும் வேலை செய்ய முடியும் என்பது தெரியும்.

உழைக்கும் வர்க்கத்திற்கு பிழைப்பே பெரும் பாடானா நிலையில் அவர்கள் எங்கே இணையம் வந்து எழுத முடியும்.//

நன்றி வவ்வால். பல விசயங்கள் திறம்பட சொல்லி இருக்கிறீர்கள். புரிகிறது.

சசிகலா said...

நேரமின்மையாக இருக்கலாமோ ?

Radhakrishnan said...

நன்றி சசிகலா. ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கலாம்.