Thursday 5 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 1

அனைத்து மொழிகளின் தாய் தந்தை என எல்லாமே தமிழ் தான் என வாதிடுவோர் உண்டு. இது குறித்து பல இடங்களில் விவாதங்கள் நடந்தது கண்டது உண்டு. சமஸ்கிருதத்தை தேவ பாஷை என குறிப்பிடுகிறார்கள். இது குறித்து தமிழ் உணர்வாளர்கள் வெகுண்டு எழுவது உண்டு. மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்கள் பல இழிவானவை என கருதுபவர்கள் உண்டு. இப்படி பல விசயங்களை அடிப்படையாக கொண்ட மொழியின் மூலம் பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் தவிர்க்க முடியாதவை என இந்த காலகட்டத்தில் ஆகிப்போனது.

இது குறித்து பார்க்கும்போது லெவிட் எனும் அமெரிக்கரும், கு. அரசேந்திரன் தனது புத்தகத்திலும் தமிழே தொன்மையான மொழி என குறிப்பிட்டு உள்ளதாக கூறுகிறார்கள். தமிழ் மீது பற்று கொண்ட ஜார்ஜ் ஹார்ட் தமிழே தொன்மையானது என பல கருத்துகளை குறிப்பிட்டு வாதிடுகிறார்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என சொல்வது மிகவும் மிகைப்படுத்தக்கூடிய செயலாகத்தான் தெரிகிறது, இல்லையோ? இருப்பினும் இது குறித்து பலரது கருத்துகளை பார்ப்போம்.

முதலில் ஜார்ஜ் ஹார்ட் என்ன சொல்கிறார் எனில்... தொடரும். 

Wednesday 4 January 2012

ஜீரோ எழுத்து - 2

ஒரு வட்டம் போடும் போது ஒரு புள்ளி வைத்து தொடங்குவோம், அப்படியே அந்த புள்ளியினை கோடாக்கி மீண்டும் அந்த புள்ளியில் சேர்க்கும் போது வட்டம் உருவாகிவிடும். அப்படியெனில் புள்ளி தான் தொடக்கம், அந்த புள்ளி தொடக்கம் எனினும் புள்ளியில் இருந்து தொடங்கிய கோடு மீண்டும் புள்ளியை தொடும்போது எது தொடக்கம், எது முடிவு என்பது பின்வரும் நாளில் வரைந்தவருக்கே மறந்து போய்விடும்.

இது எந்த ஒரு மூடப்பட்ட சூழலுக்கும் பொருந்தும், சதுரம், செவ்வகம், முக்கோணம் என எந்த ஒரு வடிவத்தை எடுத்தாலும் தொடக்கம் எது, முடிவு எது என அறிவது மிகவும் கடினம், ஆனால் தொடக்கமும் முடிவும் அந்த கோடுக்குள் தான் இருக்கும் என்பது மிக மிக தெளிவு. அதே வேளையில் தொடங்கும் இடத்தில் ஒரு வண்ணத்தை வைத்து ஆரம்பித்துவிட்டு இப்பொழுது கோடு வரைவோம், மீண்டும் வண்ணம் இடத்திற்கே வருவோம், இப்பொழுது தொடக்கம் வரைந்தவருக்கு தெரிந்துவிடும். ஆனால் இதை புதிதாக பார்ப்பவர்க்கு தொடக்கத்திற்காக இடப்பட்ட வண்ண புள்ளியா, அல்லது முடிவுக்காக இடப்பட்ட வண்ண புள்ளியா என்பது புரியாது.

ஒரு வட்டம் போடத்தான் ஒரு புள்ளியை வைத்து தொடங்க வேண்டும். அதனால் வட்டத்தில் புள்ளி தொடக்கம் எது எனும் தேடல் அவசியமாகலாம், ஆனால் புள்ளியே வட்டமாக விரிவடைந்தால் அந்த புள்ளிதான் தொடக்கமும், எல்லாமும். இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் என்கிறது அறிவியல். இப்பொழுது இந்த புள்ளி இருக்க ஒரு இடம் இருக்க வேண்டும், காலம் இருக்க வேண்டும், நேரம் இருக்க வேண்டும், எல்லாம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு முன்னர் அப்படி ஒரு நிலை இல்லை எனும் கூற்று  அத்தனை எளிதாக ஏற்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேதங்களும் சொல்கிறது, அறிவியலும் சொல்கிறது. வேதங்களும், அறிவியலும் சொல்கிறது என்பதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. இருக்கின்ற தன்மை கொண்டு இல்லாத தன்மையை சிந்திக்கும்போது இது போன்ற நிகழ்வுகள் வாடிக்கை.

இப்பொழுது புள்ளி விரிவடைந்து கொண்டே செல்லும்போது ஒரு வெறுமை, எதுவுமற்ற தன்மை புள்ளிக்குள், அதாவது வட்டத்திற்குள், உருவாவது போன்ற தோற்றம் நமக்கு தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல, அந்த வட்டத்திற்குள் புலப்படாத விசயங்கள் இருக்கின்றது என்பதுதான் நமக்கு புரிந்து கொள்ள வேண்டிய அறிவு. இறைவனை பற்றி அல்லது ஒன்றை பற்றி சதா எந்நேரமும் சிந்தித்து  கொண்டிருக்கும் ஒருவரும் சரி, ஒரு கணத்தில் மட்டுமே இறைவனை அல்லது ஒன்றை பற்றி சிந்திக்கும் நிலையிலும் சரி அதற்குரிய சிந்தனை மிகவும் முக்கியத்துவம் ஆகிறது.

இறைவன் எங்குமே இல்லை என சொல்லும்போதே அந்த வார்த்தையில், வாக்கியத்தில் இறைவன் இருப்பதாகவே அர்த்தம் காட்டப்படும். இல்லாத ஒன்றை பற்றி எதற்கு எவரும் பேச வேண்டும்? அதோ அந்த இடத்தில் ஏதோ சத்தம் வருகிறது, என்னவென பார்த்து வருகிறாயா என எவரையேனும் அனுப்பி அவரை அந்த இடத்தை பார்த்து வர சொன்னால், அங்கே ஒன்றுமே இல்லை என அவர் சொல்வதன் மூலம் என்ன அர்த்தம் நமது மனதில் ஓடும் என்பது பொறுத்தே இந்த பிரபஞ்சத்திற்கான விடை இருக்கிறது.

நிறைய சிந்தனைவாதிகளை இந்த உலகம் தந்து இருக்கிறது. ஒவ்வொருவரின் சிந்தனைகளும் மிகவும் நேசிப்புக்கு உரியவையாக இருக்கின்றன.  இறைவன் நம்பிக்கை சரி, இறைவன் அற்ற நம்பிக்கை சரி, எந்த விசயம் எனினும் அது குறித்து திறம் படவே சிந்தித்து இருக்கிறார்கள். இருப்பினும் உலகம் எப்படி உருவானது என்பதற்கு இது விடை தெரியாத கேள்வி என்றே ஒதுங்கி கொள்கிறார்கள், இன்றல்ல, பல காலம் முன்னர் எழுதப்பட்ட ரிக் வேதம் கூட அதைத்தான் சொல்கிறது.

ரிக் வேதம் : 10 .129 (மொழி பெயர்ப்பு: ராதாகிருஷ்ணன்; தவறுகளுக்கும், தவறுதலான கருத்துக்கும் நானே பொறுப்பு; ரிக் வேதம் எழுதியவர் அல்ல) 


இருப்பு நிலையும், இல்லாத நிலையும் இல்லாதிருந்தது. காற்றின் ஆட்சியும் இல்லை, அதைத் தாண்டிய ஆகாயமும் இல்லை. என்ன, எங்கே மறைத்து இருந்தது? யார் அடைக்கலம் கொடுத்தது? தண்ணீர் இருந்ததோ? எந்த ஆழத்தில் இருந்ததோ?


இறப்பு நிலையும் இல்லை, இறவா நிலையும் இல்லை. எந்த ஒரு அறிகுறியும் இல்லை, இரவென்றும், பகலென்றும் பிரித்துணர. ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, அதைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை. 


இருள் இருந்தது. அந்த இருளில் ஒழுங்கின்மையுடன் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஒரு வெற்றிடமாய் மட்டுமே எந்த ஒரு தன்மையும் இன்றி இருந்தது. அந்த ஒரு நிலையிலே மிகப்பெரிய அன்பு நிறைந்த சக்தி/ஆற்றல் ஒரு தொகுதியாய் உருவானது. 


அந்த அன்பு நிறைந்த ஆற்றலில் ஒரு ஆசை பிறந்தது. அந்த ஆசைதான் முக்கிய காரணங்களில் மூல விதை. முனிவர்கள் இதயப்பூர்வமாக இதை தேடியபோது கண்டு கொண்டார்கள். இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என. 


அந்த நிலையானது குறுக்கே விரிவடைந்தது, அதற்கு மேலே என்ன இருக்கிறது, கீழே என்ன இருக்கிறது? உற்பத்தி திறன் இருந்தது, எல்லையில்லா சக்தி இருந்தது, சுதந்திரமான ஆக்கமும், ஆற்றலும் உலவியது


யாருக்கு முழுமையாக தெரியும், யார் அதை பிரகடனப்படுத்துவது, எப்பொழுது பிறந்தது, எப்பொழுது உற்பத்தியானது? கடவுளர்கள் எல்லாம் இந்த உற்பத்திக்கு பின்னே உருவானார்கள்? யாருக்கு தெரியும் முதன் முதலில் இங்கு எப்படி இயக்கத்திற்கு வந்தது என. 


அவனே, இந்த உற்பத்திக்கு முதலானவன், அவன் உருவாக்கினானா, இல்லை உருவாக்கவில்லையா, இந்த உலகத்தை சுவர்க்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருப்பவன், அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும், ஒருவேளை தெரியாமலே இருக்க கூடும். 

இப்பொழுது இந்த வாசகங்கள் எல்லாம் (தமிழ் படுத்தும் பாடு!) படிக்கும்போது மனிதர்களின் சிந்தனை எப்படி உலகம் உருவாகி இருக்கும் என்பது குறித்து அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அக்னி, வாயு, காயத்ரி, இந்திரன், சோமன் போன்ற கடவுள்கள் எல்லாம் பிற்பாடே தோன்றி இருக்கிறார்கள் எனும் தெளிவு அன்றே இருந்து இருக்கிறது. இந்த உற்பத்தியை கண்காணிப்பவனுக்கு கூட  ஒரு வேளை தெரியாது என்று எழுதி இருப்பதுதான் விசேசம். ஏனெனில் அத்தனை குழப்ப நிலையில் அன்றே மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இறைவன் பற்றிய சிந்தனை குறித்து ஒரு தெளிவே இல்லாமல் தான் இருந்து இருக்கிறது. அதிலும் இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என்பது கூட அறிவுக்கு எட்டாத ஒரு விசயம் என்பதால் மட்டுமே அப்படி எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரிக் வேதத்தில் எழுதியதைத்தான் அறிவியலும் குறிப்பிட்டு வருகிறது, ஒரு வேளை காலப்போக்கில்  மாறக்கூடும்.  ஆனால் இந்த வரி ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, மிகவும் யோசிக்க வைத்தது. ஒன்றுமே இல்லாமல் எதுவுமே உருவாகி இருக்க முடியவே முடியாது. உற்பத்தி நிலை குறித்து சிவவாக்கியர் எனும் சித்தர் குறிப்பிடும்போது

அண்ணலே அநாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாநீர் சுக்கிலம் சுருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?

இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில் ஒண்ணுமில்லை என சொன்னால் எப்படி? பதிலே இல்லாத கேள்வி இந்த பாரினில் இருக்கத்தான் முடியுமா? இந்த ஒரு கேள்விக்கு ஆன்மிகம் தேடி கண்டுபிடித்த விடை 'இறைவன்'. அறிவியல் தற்போதைக்கு  தேடிக் கொண்டு இருக்கும் விடை 'கடவுளின் துகள்'

ஒண்ணுமே இல்லாமல் தான் உயிரினங்கள் வந்ததா? அப்படி அதில் ஜீரோ சாதித்தது என்ன?

(தொடரும்)

Monday 2 January 2012

என் பதிவு திருடு போச்சே!

உங்க பதிவு ஒன்னு திருடு போச்சு, கவனிச்சீங்களா?

எப்பவோ சொல்லிட்டேனே, என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள் அப்படினுட்டு, அது சரி இந்த திருட்டை எங்க போய் எப்படி கவனிக்கிறது?

இந்த பதிவு நீங்க எழுதினதா அல்லது நீங்க திருடி எழுதினதா? 

எந்த பதிவு?


ஆமாம், நான் எழுதினதுதான். 

எப்படி நம்புறது, இதை கருப்புரோஜாக்கள் ராஜேஷ், தான் எழுதினது போல அவரோட வலைப்பூவில் எழுதி வெளியிட்டு தேன்கூடு அப்படிங்கிற ஒரு திரட்டியில இணைச்சி இருக்காரு, யுடான்ஸ் ல இணைச்சி இருக்கார். 

நான் எழுதின தேதி நவம்பர் 3, 2011. அவர் வெளியிட்ட தேதி நவம்பர் 18, 2011. தலைப்பை கூட மாத்தாம அப்படியே வெளியிட்டு இருக்கார். அழகான ஒரு படம் போட்டு இருக்கார். அந்த படம் தான்  வித்தியாசம். 

உங்களுக்கு கோவம் வரலையா?
எதுக்கு கோவம் வரனும்? அவருக்கு பிடிச்ச பதிவுகளை சேகரிச்சிட்டு வரார். என்னமோ போங்க, அடுத்தவங்க எழுதினதை தன்னோடது போல காட்டுறது அவருக்கு ஒரு சந்தோசம். இதுமாதிரி ரொம்ப பேரு பிடிச்ச பதிவுகளை தங்களோட பதிவு போல காப்பி பண்ணி பேஸ்ட் பண்றது ரொம்பவே சகஜம் தானே. சினிமா செய்திகள், செய்திகள் அப்படின்னு விசயங்களை பிற தளங்களில் இருந்து பகிர்ந்து கொள்வது தவறில்லைதான், ஆனா ஒரு நன்றி அப்படின்னு போட்டுட்டா குறைஞ்சிறவா போறாங்க. இப்படித்தான் கிராம வளர்ச்சி அப்படின்னு ஒரு சிறுகதை எழுதி தட்ஸ்தமிழ் இணையத்துக்கு அனுப்பினேன், அவங்க அந்த கதையை வெளியிட்டாங்க. அட பரவாயில்லையே அப்படின்னு நினைச்சு தேடுனப்ப ரெண்டு மூணு இணையத்தில வெளியிட்டு இருந்தாங்க, என்னோட பெயரோட. பரவாயில்லையேன்னு நினைச்சிகிட்டேன். அந்த கதை இந்த வலைதளத்தில இல்லை, அதை வேகமா இணைச்சிருறேன். 

உங்களை மாதிரி இருக்கறவங்க இப்படி பதிவுகளை திருடி வெளியிடுறவங்களை  ஊக்குவிக்கிறீங்கதானே! அவங்களுக்கு பிடிச்சி இருந்தா ஒரு இணைப்பு தந்தா போதாதா, அல்லது நன்றி சொல்லி போட்டா ஆகாதா! அவருக்கு மின்னஞ்சல் அனுப்பலையா?

நிச்சயமா நான் அவங்களை ஆதரிக்கவில்லை. எனக்கு என்னமோ இப்படி எழுதி என்னத்தை பெரிசா சாதிச்சி பேரு வாங்க போறோம், பொழுது போக்கு, ஆத்ம திருப்தி அப்படி இப்படின்னு எதோ தமிழ் தெரியும் அப்படிங்கிறதுக்காக எழுதிட்டு வரோம், அப்படிங்கிற நினைப்பு மட்டும் தான். இஷ்டபட்டா அவங்க பதிவா போட்டுட்டு போகட்டும், என்ன பண்றது. தப்பு அப்படின்னு தெரிஞ்சே செய்றவங்களுக்கு என்ன தண்டனை தந்தா திருந்துவாங்க? சொல்லுங்க. எதுக்கு மின்னஞ்சல்? பிறர் பொருள் கள்வர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது? 

உங்க வீட்டை என்னோட வீடு அப்படின்னு ஒருத்தர் சொன்னா, உங்க பொருளை என்னோட பொருள் அப்படின்னு மத்தவங்க சொன்னா சண்டைக்கு போக மாட்டீங்களா?. 

ஹூம், எது எதுக்கோ முடிச்சி போடறீங்க. நிச்சயம் சண்டைக்கு போகமாட்டேன், காவல் துறையில புகார் கொடுத்துட்டு என் வேலைய நான் பாத்துட்டு இருப்பேன். இப்போ நான் எழுதினதை எல்லாம் எடுத்து ஒரு புத்தகமா போட்டு அது மூலம் ஒருத்தர் லாபம் அடைஞ்சா எனக்கு எந்த வருத்தமும் வரப்போறதில்லை. என்னோட பெயர் இல்லாம போனாலும். 

பாரதியார், திருவள்ளுவர், கம்பர் இவங்க எல்லாம் புகழ், பெயர் வேணுமின்னு எழுதின மாதிரி எனக்கு தெரியலை. இந்த எழுத்து மூலம் நான் ஒருபோதும் புகழோ பெயரோ தேடிக்கிற போறதில்லை.  நினைச்சதை எழுதுவேன், புத்தகம் வெளியிடுவேன், அது குழந்தைகால கனவு. எல்லாருக்கும் தங்களோட கனவுகளை நனவாக்குற வாய்ப்பு கிடைக்கிறது இல்லை, அதனால புத்தகமா வெளியிட ஆசைப்படறவங்க எழுத்தை புத்தகமா வெளியிடற எண்ணம் எல்லாம் இருக்கு, காலம் கனியட்டும். 

நீங்க இனிமே எதைப்பத்தி எழுதப்போறீங்க? புது வருட புதிய கொள்கைகள்?

என்னது நீங்க திருந்திடீங்களா அப்படின்னு யாரும் என்னை கேட்ககூடாது. அப்படியேதான் இருக்கும் என் எழுத்து. மீண்டும் உறுதி அளிக்கிறேன், என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள், தயவு செய்து பிறர் பதிவுகளை திருடி எனது பெயர் பொறித்துவிடாதீர்கள், அது போதும்.