Friday 17 February 2012

பன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்

முதலில் இந்த 'பன்முக பதிவர்' விருதினை எனக்கு அளித்து சிறப்பித்த சகோதரி ஷக்திபிரபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

பொதுவாகவே விருது என்றால் எனக்கு என்னை அறியாமல் பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி செல்லும் எழுத்துகள் காலப்போக்கில் சுயத்தை தொலைத்துவிடும் என்கிற அவசியமற்ற பயம் தான் அது. இதோ இவர்கள் கவனிக்கிறார்கள், அதோ அவர்கள் கவனிக்கிறார்கள் என ஒரு எண்ணம் மனதில் வட்டமிடும்போது அங்கே எதிர்பாராத ஒரு பயம் வந்து சேர்ந்துவிடுகிறது, எங்கே ஏதேனும் எவரேனும் சொல்லிவிடுவார்களோ என அத்தியாவசியமற்ற மனநிலை அனைவருக்கும் நிகழ்வது இயல்பு. ஆனால் அதை எல்லாம் தாண்டி பயமற்ற ஒரு எழுத்து என்பதுதான் ஒருவரின் சுயத்தை அடையாளம் காட்டும். ஒரு எழுத்தை மென்மையாக, இலைமறை காயாக வெளிப்படுத்துவது என்பதைத்தான் நாகரிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவர் சொல்லும் விதம் தனில் உங்களது முகம் சுளிக்கிறதா, விரிவடைகிறதா என்பதுதான் அந்த சொல்லிய விதத்திற்கு வெற்றி. ஆனால் எல்லா விதங்களில் எழுதுபவர்களைப் போலவே எல்லா விதங்களிலும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

உங்களை நீங்கள் எப்படி அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள் என எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். அனைவருமே தான் செய்யும் தொழில் சம்பந்தபடுத்தித்தான் தங்களை அறிமுகபடுத்துவார்கள்.  அதை எல்லாம் தாண்டி தனிப்பட்ட மனித குண நலன்கள் எல்லாம் எவருக்கு தேவை என்கிற போக்குதான் நம்மிடம் இருப்பது. இப்போது ஒருவர் பலதுறைகளில் புலமை பெற்றவராக இருப்பதால் ஒரு துறையில் தனித்தன்மை பெற இயலாது போகிறது என்றே சொல்வோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு தொழிலை முதன்மையாக வைத்து கொண்டு மற்ற விசயங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வோரும் உண்டு. முதன்மையான தொழிலை வைத்தே அவரது அடையாளம் பேசப்படும். இதுவரை என்னை நான் பதிவர் என எவரிடமும் அறிமுகமும் செய்தது இல்லை, நான் பதிவுகள் எழுதுகிறேன் என நேரடியாக எவரிடமும் சொல்லிக்கொண்டது இல்லை. எனக்கு இந்த பதிவு எழுதுவது எல்லாம் ஒரு எழுத்து விளையாட்டு போலத்தான். அப்படி எழுத்துவிளையாட்டில் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் பெரியது. ஏனெனில் சின்ன சின்ன பாராட்டு கூட மன மகிழ்ச்சியை தரும்.

நான் பதிவர்களுக்கு விருது தர வேண்டும் என ஆரம்பித்து இரண்டே இரண்டு பதிவர்களுக்கு மட்டும் தந்துவிட்டு நிறுத்தி கொண்டேன். விருது வழங்குவதை கூட ஒரு ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்கிற நினைப்பில் அப்படியே நிறுத்திவிட்டேன். இந்த வலைப்பூவில் நான் பெற்ற விருதுகள் என இந்த விருதுடன் சேர்த்து மூன்று விருதுகள். இந்த விருதை நான் எனக்குப் பிடித்த பதிவர் ஐந்து பேருக்குத் தந்தால்தான் நான் இந்த விருதை ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு சமம் என்ற வாசகம் என்னை சில நாட்கள் யோசிக்க வைத்துவிட்டது.

பொதுவாக மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் இப்படித்தான் வரும். இதை நான்கு பேருக்கு அனுப்புங்கள், எட்டு பேருக்கு அனுப்புங்கள் என. நான் அதுபோன்ற மின்னஞ்சல்களை இதுவரை கண்டுகொண்டதே இல்லை. ஒன்றை ஆத்மார்த்தமாக செய்வதற்கும், செய்ய சொல்லிவிட்டார்களே என செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. விருதுகள் பெற்ற நண்பர்கள் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களால் ஆத்மார்த்தமாக பதிவர்களை தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் பல பதிவர்களை மனதில் பரிசீலித்து கொண்டே இருக்கும்போதே அவர்கள் எல்லாம் விருதுகள் பெற்று கொண்டிருந்தார்கள். ஆஹா இப்படி வெட்டி வியாக்கியானம் நினைப்பு கொண்டிருந்தால் பதிவர்கள் மிச்சம் இருக்க மாட்டார்கள் எனும் நினைப்பு வந்து வெட்டிப் போனது. இருப்பினும் பரிசீலித்து கொண்டேதான் இருக்கிறேன்.

பன்முக பதிவர் என்றதும் எனக்கு 'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்' என்ற பாடல் மட்டுமே நினைவில் வந்தது. அந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னையறியாமல் ஒரு உணர்வு சில்லிட்டுப் போகும்.

எங்கிருந்தோ வந்தான்,
இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய்  மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான்

இப்படி பல வேசங்கள் தரித்து வாழும் வேடதாரியான நம்மில் பல விசயங்கள் பற்றி எழுதும் தன்மை இருப்பது இயல்போ என தெரியவில்லை. ஆனால் நம்மில் பலர் மிகவும் குறிப்பாக, ஒரு சம்பந்தப்பட்ட துறை மட்டுமே எழுதும் இயல்புடனும் இருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் பன்முக பதிவர் விருது பெரும் தகுதி அற்றவர்களா என்றால் அதுதான் இல்லை. ஒரே துறை பற்றி எழுதினாலும் அதில் கூட சில பல புதுமைகள் பற்றி எழுதுபவர்கள் கூட பன்முக பதிவர்கள் தான்.

நான் தேர்ந்தெடுக்க இருக்கும் ஐந்து பதிவர்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன். இந்த விருதினை நான் ஏற்று கொண்டேன் என முழு மனதுடன் உறுதி செய்கிறேன். அதற்கு முன்னர் எனக்கு பிடித்த ஏழு விசயங்கள் பற்றி சொல்லிவிடுகிறேன்.

1. எனக்கு சாப்பிடுவது மிக மிக பிடிக்கும்.

2. எனக்கு எழுதிக்கொண்டிருப்பது மிக மிக பிடிக்கும்

3. புராண காலத்து வேதங்கள், எழுத்துகள் எல்லாம் வாசித்து மகிழ்ந்திருக்க மிக மிக  பிடிக்கும்

4  மக்களுக்கு என்னை முன்னிறுத்தாமல் சேவகம் செய்வது மிக மிக பிடிக்கும்

5 . மலைகள், காடுகள், நாடுகள் என சுற்றிப் பார்க்க மிக மிக பிடிக்கும்

6  யாதும் ஊரே யாவரும் கேளிரும், நன்றும் தீதும் பிறர் தர வாராவும், இறைவனும் மிக மிக பிடிக்கும்.

7 பிடிக்காத விசயங்களை கூட 'வந்து இந்த பூமியில் வந்து பிறந்தோமே' என்பதற்காக செய்வது பிடிக்கும்.

6 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்..

ஆத்மார்த்தமாய் விருதுகளை அலசியதற்கு பாராட்டுக்கள்..

Yaathoramani.blogspot.com said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
இப்படி மனம் உணர்வதை மிகச் சரியாகவும் தெள்ிவாகவும்
எத்தனை பேரால் சொல்லிவிட முடிகிறது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

நன்றி ரத்னவேல் ஐயா.

நன்றி சகோதரி

நன்றி ரமணி ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

உங்களுக்குப் பிடித்ததை அழகாக சொல்லியுள்ளீர்கள். ரமணி சார் சொன்னதை வழி மொழிகிறேன். :)

Radhakrishnan said...

நன்றி சகோதரி