Saturday 11 February 2012

சுயநலவாதிகளால் ஆனது உலகம்

இதோ ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட அனைவருமே இது போன்ற நிகழ்வுகளை நேரிலோ, திரைப்படங்களிலோ கண்டு இருப்பீர்கள். ஓட்டு வீட்டின் முன்னே அரைமணி நேரம் முன்னர் இறந்து போன ஒருவரை நினைத்து அழுது கொண்டு, அரற்றி கொண்டு அவரது மனைவி, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், சுற்றங்கள், நண்பர்கள் என குழுமி இருந்தார்கள். அவர் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என ஒரு நண்பர் சொல்லிக் கொண்டு இருந்தார். இறந்து போனவருடன் பல நாட்கள் பகைமை பாராட்டிய ஒரு சிலரும் அங்கே வந்து வருத்தம் தெரிவித்து கொண்டிருந்தார்கள். இதோ வாழ்க்கை அவரைப் பொருத்தவரை முடிந்து போன ஒன்று. இவ்வுலகில் பிறப்பு எடுத்தவர்கள் எல்லாம் இறக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. 

இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள்? மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள், துரோகிகள், நண்பர்கள், எதிரிகள், நயவஞ்சகர்கள், குள்ளநரிகள், கபடதாரிகள், வேடதாரிகள், பிறன்மனை கள்வர்கள், விபச்சாரிகள், பித்தலாட்டகாரர்கள், முடிச்சவிக்கிகள், மொள்ளைமாரிகள், கேனையர்கள், கிறுக்கர்கள், அரக்கர்கள், தேவர்கள், மதவாதிகள், தீவிரவாதிகள், மிதவாதிகள், அகிம்சாவாதிகள், துறவிகள், முனிவர்கள், மற்றும் தூதர்கள் என பல்வேறு வகையாகவே பிரித்து பார்க்கிறது உலகம். தொழில் ரீதியாகவும் இந்த மனிதர்கள் பல்வேறு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பற்பல. ஆனால் இவர்கள் எல்லாமே சுயநலவாதிகள் எனும் ஒரு அடைப்புக்குள் ஒடுங்கிப் போகிறார்கள். இந்த உலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது. 

இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றே வைத்து கொள்வோம். நமது சூரிய குடும்பத்தை மட்டுமே இப்போதைக்கு பார்ப்போம். பிற கேலக்ஸிகள், நட்சத்திரங்கள் எல்லாம் இப்போது நமது பார்வைக்கு அவசியம் இல்லை. அப்படி கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் என வைக்க கடவுள் நிச்சயம் சுயநலவாதி தான். பிற கோள்களை எல்லாம் விட்டுவிட்டு பூமியில் மட்டும் உயிரினங்கள் படைத்த காரணத்தை கடவுள் இதுவரைக்கும் எந்த சுயநலவாதிகள் மூலமும் பேசியது இல்லை. மதங்களை, கடவுளின் நூல்களை உருவாக்கிய எந்த ஒரு சுயநலவாதியும் இதுகுறித்து மூச்சு விட்டதில்லை. எதற்கு படைத்தோம் என்கிற நோக்கமே இதுவரை தெளிவில் இல்லை. 

அடுத்ததாக பரிணாமங்கள் பேசும் கொள்கை சுயநலவாதிகள் என்ன சொல்கிறார்கள். இது குறித்து  கோல்டிலாக்ஸ் கோட்பாடு ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. அதாவது பூமியானது மிகவும் சரியான தொலைவில் சூரியனிலிருந்து இருப்பதாலும், நல்லதொரு தட்பவெட்ப நிலை நிலவுவதாலும்  அதோடு நிறைய தண்ணீரும் பூமியில் இருப்பதாலும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. வெள்ளி சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால், தண்ணீர் அதன் பரப்பில் இருக்க வாய்ப்பு இல்லை எனவும், அப்படியே தண்ணீர் இருந்தாலும் அவை எல்லாம் ஆவியாகக் கூடும் என்பதால் அங்கே உயிரினங்கள் வாழ வசதி இல்லை என்கிறது. அதோடு மட்டுமில்லாமல் செவ்வாய் சற்று தொலைவில் இருப்பதால் செவ்வாயின் பரப்பு மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் தண்ணீர் ஓட வசதி இல்லை. அங்கே தண்ணீர் எல்லாம் உறைந்து போகக்கூடிய சாத்தியம் மட்டுமே உண்டு. இந்த சூழலிலும் உயிரினங்கள் வாழ சாத்தியமில்லை என்றாகிறது. அப்படியெனில் இவ்வுலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது என்பது ஊர்ஜிதமாகிறது. 

தனக்கு ஏற்ப சூழலில் மட்டுமே வாழ பழகிக் கொண்ட உயிரினங்கள் சுயநலவாதிகள் தான். அதற்கு அடுத்து எவர் எல்லாம் இந்த உலகில் பிழைத்து கொள்வார்கள் என்பது குறித்து பரிணாமங்கள் அடிப்படையில் பார்த்தால் 'எந்த ஒரு உயிரினம் இந்த சூழலில் தன்னைப் பக்குவபடுத்தி வாழ முடியுமோ' அந்த உயிரினமே வாழ இயலும், அந்த உயிரினத்தின் சந்ததிகள் மட்டுமே வாழ இயலும். அதாவது ஒரு குறிப்பிட்ட சீதோசன நிலை மாற்றத்தை தாங்கி கொள்ள இயலாத உயிரினங்கள் மறைந்து அழிந்துவிடும் என்பது பரிணாம தத்துவம். 

இதுவே மதங்களின் அடிப்படையில் பார்த்தால் 'நானே எல்லாம், என்னை தொடர்பவர்கள் ஒருபோதும் பாவத்தின் வழி செல்லமாட்டார்கள், என்னை அணுகுபவர்களுக்கு சரணாகதி தருகிறேன்' என்பது போன்ற கூக்குரல்கள். ஆனால் எந்த இறைவனின் பாதம் தொட்டாலும் மரணம் என்பது மட்டும் எல்லா உயிர்களுக்கும் உறுதி என்பதை ஒருபோதும் எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுக்க முழுக்க சுயநலவாதிகளால் ஆனது. நிச்சயம் இது தவறான கூற்றாகவே முடியும். அது எப்படி இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது?

ஒவ்வொரு சீதோசன நிலைக்கும் என பறந்து செல்லும் பறவைகள் சுயநலவாதிகள். தனது உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என போராடும் எந்த ஒரு உயிரினமும் சுயநலவாதிகள் தான். அப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம், இருக்கிறார்கள். 

தியாகங்கள் குறித்து எதற்கு இதுவரை பேசவில்லை. ஒரு தியாகியை  சுயநலவாதி என சொன்னால் எப்படி இருக்கும். ஒரு அன்னை, ஒரு சேய். இங்கே உணவுப் போராட்டம் நடைபெறுகிறது. எவரேனும் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்க இயலும். அந்த சூழலில் அன்னை தனது உயிரை மாய்த்து கொண்டு சேய் உயிரை காப்பாற்றிட மட்டுமே முனைவார். இது எப்படி சுயநலமாகும்? இது போன்று எல்லா உயிரினங்களிலும் தனது நலம் கருதாது பிறர் நலம் பேணுபவர்கள் இல்லாமல் இல்லையா? இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது எனில் அந்த தாய் நிச்சயம் சுயநலவாதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்போது அதே தாய், வேறொருவரின் குழந்தை. இந்த தாய் தன்னுயிர் தருவாளோ? இந்த் இரண்டு சூழல்களிலும் எப்படி இருவரும் உயிர் வாழ்வது என சிந்திக்கும் உயிரினமே வாழ்வில் நிலை கொள்கிறது என்பதுதான் சுயநல தத்துவம். 

இப்போது மனிதர்களை சுயநலவாதிகள், பொதுநலவாதிகள், தியாகிகள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 

சுயநலவாதிகள் : அன்றாடம் தனது வேலை, தனது குடும்பம், தனது சுற்றம், தனது நண்பர்கள், தனது உறவுகள் என வாழ்ந்தே கழித்தவர்கள். முதல் பத்தியில் படித்த மனிதர் போன்றவர்கள்.

பொதுநலவாதிகள்: இங்கே தனது சுயநலத்தை முன் நிறுத்தாமல் பொது மக்களுக்கு என்றே அதாவது இன்ன பிரிவினர், இன்ன மதத்துக்காரர், இன்ன கட்சிகாரர் என எந்த பேதமும் பார்க்காமல் அனைவரும் பயன் பெறும்படி வாழ்பவர்கள். இவ்வுலகில் இது போன்ற ஆத்மாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

தியாகிகள்: தனது உயிரை தந்து பிறர் உயிரை காப்பவர்கள். காதலில் நடக்கும் இந்த கருமாந்திரம் எல்லாம் தியாகத்தில் சேராது. அதைத் தாண்டிய தியாகம். மிக மிக அரிதாகவே தென்படும். 

இந்த மூன்று பிரிவினைப் பார்த்தால் சுயநலவாதிகள் கூட்டமே அதிகம். அதனால் தான் இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது.

22 comments:

Robin said...

//ஆனால் எந்த இறைவனின் பாதம் தொட்டாலும் மரணம் என்பது மட்டும் எல்லா உயிர்களுக்கும் உறுதி என்பதை ஒருபோதும் எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை.// மரணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதும் இறைநம்பிக்கையேடு இருப்பதற்கு ஒரு காரணம்தான்.

சிந்திக்கவும்.

வவ்வால் said...

ரா.கி,

நல்லா அலசி இருக்கீங்க. பொது நலம் என்பதே தியாகம் தான் , ஒன்றை விட்டுக்கொடுத்தலே தியாகம் தான் அதுவும் பலன் எதிர்ப்பார்க்காமல். ஏன் சுயநலம் மிகுகின்றது என்றால் அதுவும் இயற்கையே,

விலங்குகளின் வாழ்வியல் நியதி,

survival of the fitest =சுயநலம் = animal insticts


மனிதர்களின் வாழ்வியல் நியதி,

common sense = human nature = பொது நலம் பேணுதல்.

மனிதர்களுக்கும் , விலங்குகளுக்கும் வேறுபாடு எனச்சொல்லப்படுவது பகுத்தறிவு, பகுத்தறிவு மழுங்கும் போதே சுய நலம் என்ற மிருக குணம் தலைத்தூக்கும்,எனவே உலகில் மிருகங்கள் அதிகம்னு சொல்லிடுங்க :-))

---------

ராபின்,

// மரணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதும் இறைநம்பிக்கையேடு இருப்பதற்கு ஒரு காரணம்தான்.

சிந்திக்கவும்.//

பாவம் ,புண்ணியத்துக்கு ஏற்ற மேலுலக வாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கையே.மறுபிறவி உண்டு அது பாவம்,புண்ணியத்தின் அடிப்படையில் என்ற நம்பிக்கைகளே.ஹி..ஹி ஆனால் யாகம் செய்வது, உண்டியலில் காசு போடுவது என்று பாவக்கணக்கை சரி செய்யலாம்ம்னு வியாபாரம் ஆகிடுச்சு, அதையும் நம்புகிறான் மனிதன். அப்போ கடவுளுக்கும் லஞ்சம் உண்டு தானே :-))

முத்தரசு said...

சுயநலவாதிகள் விளக்கம் - அடேங்கப்பா....பகிர்வுக்கு நன்றி

ராஜ நடராஜன் said...

வவ்வால் இங்கே பற்ந்துகிட்டிருக்குதாக்கும்:)

நீங்க கோல்டிலாக்ஸ் கோட்பாடு பற்றி விபரிக்கும் போது எனக்கு இன்னும் ஒன்று தோன்றுகிறது.சந்திரன் சூரியனுக்கு அருகில் நீர் ஆவியாகவும்,செவ்வாய் உறைநிலைக்கும் மாறுகிறது.ஆனால் பூமி சரியான தட்ப வெட்பநிலையினால் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாகிறது என்றால் பூமிக்குள்ளும் சூரியனுக்குப் பக்கத்தில் மாதிரி உறைநிலை பூமியும்,ஆவிநிலை!பூமியும் இருக்கவே செய்கின்றன.உறைநிலை அண்டார்டிகா போன்ற இடத்திலும் உயிரினங்கள் வாழ்கின்றனவே.ஆவிநிலை மேற்கத்திய நாடுகளிலும் உயிர் வாழ்வு பெருகி விட்டதே!உறைநிலை,ஆவிநிலை இரண்டையும் கடந்த சகாரா,வளைகுடா சூட்டுநாடுகள் கூட உயிர் வாழ்தலை தக்கவைத்துக்கொண்டனவே.

சரியான சீதோஷ்ணநிலை இருப்பதால் இந்தியா,சீனாவின் ஜனத்தொகை அதிகரிக்கிறதா என்றால் மண்ணின் பரப்பளவிலான ஒப்பீடாக மட்டுமே கருத முடியும்.

ராஜ நடராஜன் said...

நீங்க நல்லவர் கெட்டவர் என அவ்வையார் பாடல் பாடியதை இரண்டே வரிகளில் மனிதம் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என வைரமுத்து கமல்ஹாசனுக்கு சொல்லி விட்டார்:)

ஆனாலும் நான் அவ்வையார் வாரிசு.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!உங்க பார்முலா

survival of the fitest =சுயநலம் = animal insticts

எனக்கென்னமோ ஈழம்=இந்தியா=இலங்கை என பெர்முடா முக்கோணம் மாதிரியே தெரிகிறது.

Robin said...

//ஆனால் யாகம் செய்வது, உண்டியலில் காசு போடுவது என்று பாவக்கணக்கை சரி செய்யலாம்ம்னு வியாபாரம் ஆகிடுச்சு, அதையும் நம்புகிறான் மனிதன். அப்போ கடவுளுக்கும் லஞ்சம் உண்டு தானே :-))// மனிதன் குறுக்குவழியில் கடவுளை சமாதானப்படுத்திவிடலாம் என்று நினைக்கிறான். ஆனால் லஞ்சத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர் என்ன டிராபிக் போலீசா? :)

வவ்வால் said...

ராஜ்,

உங்க கடைல புது வடை சுடக்காணோம் அதான் இங்கே எட்டிப்பார்த்தேன், வாங்க ரெண்டுப்பேருமா சேர்ந்து ரா.கி அவர்களின் பதிவை தானிப்பின்னூட்டம் போட்டு ஒரு வழி செய்யலாம் :-))

//சரியான சீதோஷ்ணநிலை இருப்பதால் இந்தியா,சீனாவின் ஜனத்தொகை அதிகரிக்கிறதா என்றால் மண்ணின் பரப்பளவிலான ஒப்பீடாக மட்டுமே கருத முடியும்.//

இதுக்கு கூட நான் புது தியரி வச்சு இருக்கேன்.

மனிதன் வெப்ப இரத்தப்பிராணி, எனவே சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பம் இருக்க வேண்டும். உடல் வெப்பம் அதிகம் ஆகாமல் இருக்க ,குளிர்விக்க இரத்தமானது சரும பரப்புக்கு நுண்நாளங்கள் மூலம் பாய்ச்சப்படும்.நம் சருமம் கார் ரேடியேட்டர் போல. இதற்கு வெஸ்டிலேஷன் என்று பெயர்.

நமக்கு பகலில் குளிர்விக்க இரத்தம் சருமப்பரப்பிற்கு போகும், இரவில் உடல் உறுப்புகளுக்கு போகுது போல. ஆனால் குளிர்நாட்டில் உடலை சூடாக்க இரத்தம் சரும பரப்பிற்கு போகும்.அது பெரும்பாலும் இரவில்.

சருமத்திற்கு இரத்தம் பாய்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் என்னய்யா சம்பந்தம்னு கேட்கிறிங்களா? அதிகப்படியான இரத்தம் சருமப்பரப்பில் பாயும் போது உடல் உறுப்புகளுக்கு இரத்தம் கம்மியா பாயுமாம்! இப்போ புரியுதா , இரவில் ஆசிய மக்களுக்கு இரத்த ஓட்டம் உடல் உறுப்புகளுக்கு நல்லா பாயுது, அதான் மக்கள் தொகை அதிகம் ஆகுது ;-))

ஆனால் வெள்ளைக்காரன் வயாக்கரா சாப்பிட்டா தான் "உறுப்புக்கு "இரத்த ஓட்டம் அதிகம் பாயும் :-))

உயிரிருக்கு ஆபத்து என்னும் போது அட்ரினலின் இதான் செய்யுது, தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகம் செல்ல இரத்த நாளங்களை விரிவாக்கிவிடும்.அதிக இரத்த ஓட்டம் , அதிக பிராணவாயு, அதிக ஆற்றல் உற்பத்தி, அதிக சக்தி உடலுக்கு கிடைக்கும். இதுவே சிறுத்தையை விட வேகமாக மானை ஓட வைக்குது.

---------

//survival of the fitest =சுயநலம் = animal insticts

எனக்கென்னமோ ஈழம்=இந்தியா=இலங்கை என பெர்முடா முக்கோணம் மாதிரியே தெரிகிறது.//

அரசியல் முக்கோணவியல் அறிஞர் நீர் தான் :-))

வவ்வால் said...

ராபின்,

// மனிதன் குறுக்குவழியில் கடவுளை சமாதானப்படுத்திவிடலாம் என்று நினைக்கிறான். ஆனால் லஞ்சத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர் என்ன டிராபிக் போலீசா? :)//

வெள்ளிக்கிழைமை , இன்ன பிற விசேட நாட்களில் பாருங்க கோயில் இருக்க பகுதிகளில் டிராபிக் போலிஸ் வச்சு போக்குவரத்துக்கட்டுப்படுத்துவாங்க, அம்புட்டு கூட்டம், கலக்‌ஷென் :-))

வவ்வால் said...

ஹி..ஹி ஒரு சின்ன பிழை திருத்தம்,

///இதற்கு வெஸ்டிலேஷன் என்று பெயர். // அது வெஸ்டிலேஷன் அல்ல வாசோடயலேஷன். என திருத்தி வாசிக்கவும்.
Vasodilation :
Vasodilation refers to the widening of blood vessels[1] resulting from relaxation of smooth muscle cells within the vessel walls, particularly in the large veins, large arteries, and smaller arterioles. The process is essentially the opposite of vasoconstriction, which is the narrowing of blood vessels.

பின்னூட்டம் போட்டுட்டு போனதும் ஏதோ சொதப்பீட்டேன்னு மண்டைல ஒரு பெல் அடிச்சுது. ஒரு தடவை சரியானு கூகிளை கேட்டுப்பார்ப்போம்னு பார்த்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது மேட்டர். ஹி..ஹி பொதுவா நினைவில் இருந்தே சொல்வேன். பெரும்பாலும் சரியா இருக்கும், இது போல சிலசமயம் காலை வாரிவிடுவதும் உண்டு :-))

நல்லவேளை யாரும் கொட்டு வைக்கும் முன் நானே சொல்லிப்புட்டேன் :-))

Unknown said...

சுயநலம் என்பது என்ன?
அதற்கு முன்பு சுயநலம் இல்லாது போகின் என்ன ஆகும் என்றும் யோசிக்க வேண்டும். நிறைய இயக்கங்கள் நின்று போகும்...
நீங்கள் சொல்லும் சுயநலம் என்பது தன்னைத் தான் பேணுவதில்லை... அடுத்தவனுடையதை பிடுங்கி தன்னைத் தான் பேணுவது.

மனிதன் தனியாகப் பிறக்கிறான்... அவன் தனக்கென வாழாமல் இருந்தாலே போதும். அதாவது ஒரு குடும்பத்தில் எப்படித் தாய் தந்தை பிள்ளைகளுக்காக, மூத்த அண்ணன் மற்ற உடன்பிறப்புகளுக்காக, அல்லது மனைவி மக்களுக்காக என்று அவரவர் தனது குடும்பம் சார்ந்தவைகளை பேணும் நிலை வந்தாலே போதும்... அப்படி யாவரும் செய்யும் போது... பெரும்பாலும் சமூகம் சரியாகப் போகும். இப்போது அதுக்கே பிரச்சனை.?!

பொதுநலம் என்பதும் அப்படியே எங்கே சுயநலத்தில் தனிமனிதனோ இப்போது ஒரு சமூகமோ, நாடோ, கண்டமோ என்று விரிகிறது. இயற்கையை பொதுவில் வைத்து தேவைக்கு தகுந்தமாதிரி பங்கிட்டுக் கொள்வது... அதை சிலர் முன்னிற்று நடத்துவது....

தியாகம் என்பது மேலேக் கூறப்பட்ட போது நலத்திற்கு முன்னின்று நடத்துபவர்கள் அது செயல் படுத்த முடியாது போகும் போது அதைச் சரி சியா வைராக்கியத்துடன் உடல் பொருள் கடைசியில் ஆவியை விடுவது...

சரி இதிலே கவனிக்க வேண்டியது... பொதுநல வாதிகள் சிறு அளவினர், தியாகிகள் இன்னும் சிலரே இருந்தும் அவர்களின் பொது நலம் வெற்றிப் பெறுவது யாரால் என்றால் முதலிலே சொன்ன சுயநல வாதிகளால். அவர்கள் ஒத்துழைக்காத பொது இவர்களின் பொது நலம் எப்படி சாத்தியம். அப்படியானால் அவர்களும் பொது நலவாதிகளே என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும் அல்லவா!

எதுவானாலும் ஒளவைப் பாட்டிச் சொன்னது போல்...
"இயல்பது கரவேல்"
இயற்கை எப்படி அதனதன் இயல்பை மறக்காமல் இருக்கிறதோ அப்படி மனிதனும் இருக்க வேண்டும்...
அறிவியலும் ஆன்மீகமும் ஒருங்கே வளர வேண்டும் அப்படி இல்லாத போது... இவர்களின் இயல்பு மாறும்.

பொதுவாக நான் நினைப்பதுண்டு... இந்த உலகம் மகாபாரதப் புராணக் கதைகளின் மாந்தர்களைப் போன்றே இருப்பதாக... பாண்டவர்கள் என்பவர்கள் ஐவரே! கெளவர்கள் நூறுபேர்... இருந்தும் இறைவன் நியாயத்தின் பக்கமே! இந்த விகிதம் தான் இருக்கிறது... என்பதே எனது எண்ணம்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று தான்.. விவேகானந்தர் உலக மக்களை எல்லாம் சென்று பார்த்து பேசினார்... அதையே மகாகவி பாரதியும் முழங்கினார்...

அதாவது அனைவரையும் அமர்களாக... வாழும் போது ஒளிபெற்றவர்களாக வாழச் செய்வது. விவேகானந்தரின் கூற்றுப் படி பாவம் புண்ணியம் எப்போதும் ஒரே அளவில் தான் இருக்கிறது என்கிறார்... எந்த ஒரு நாடும் ஆயிரம் வருடத்திற்கு மேலாக உச்சத்தில் இருந்ததில்லை என்றும் கூறுகிறார்...

கடவுள் சுதந்திரமானவர் அவர் இந்த பிரபஞ்சத்தைப் படைக்க எந்த காரணமும் தேவை இல்லை... காரண காரியங்களுக்கு அப்பார்ப் பட்டவர் என்பதால் அது போன்ற கேள்விக்கே இடமில்லை என்கிறது வேதாந்தம்.

கடவுளின் பாதத்தை தொட்டவர்கள் மரணிப்பதாக் கூறுவது எதை மரணம் ன்பது இந்த பஞ்ச பூத்தால் ஆனா உடல் அதனுள் உள்ள இயக்கம் ஆன்மா இறப்பதில்லை.. அது பிறந்த இடத்தில் சென்று சேர்க்கிறது... அரிதோ அறியாமலோ... அதை நோக்கியே அனைத்து உயிர்களின் பயணம் என்கிறது வேதாந்தம்.

தாங்கள் கூறும் சுயநலம், பொதுநலம், தியாகம் இவற்றிற்குப் பின்னால் அது தான் நிற்கிறது... இல்லைஎன்றால் அதைப் பற்றிய சிந்தனையே அவசியம் இல்லை... நமது நாட்டில் திருடனும், குடிகாரனும் எவ்வளவு கேவலமான தொழில் செய்பவனும் கூட தான் செய்யப் போகிற அந்த கேவலம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று கடவுளைப் பணிகிறான் அதற்கு வசதியாக, தனக்கென ஒருக் கடவுளைக் கற்பித்தும் கொள்கிறான் அதற்கும் இந்த எண்ணம் தான் காரணம்...

பொதுநலம், தியாகம் என்பதே சுய நலம் தான்... சொர்க்கம் போக வேண்டும்... வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் அல்லது நம்மை மிகவும் நல்லவன் என்று உலகம் மெச்ச வேண்டும்... இப்படி ஏதாவது ஒருக் காரணம் இருக்க வேண்டும்....

சுயநல வாதிகளின் ஒத்துழைப்பில் தான் பொதுநல வாதிகளும் வெல்கிறார்கள்... தியாகிகள் என்னும் போதே அதை பெருமையாக நினைப்பதே அந்த சுயநல வாதிகளும் தான்..
இந்த நலன்கள் இல்லாவிட்டால் உலகம் இயங்காது...

பிறருக்காக வாழும் யாரும் போது நல வாதிகளே.... என்ன அடுததவனை அடித்து பிழைக்காமல் இருந்தாலே போது மானது.

நன்றி...

Unknown said...

நீங்கள் கூறிய பொதுநல வாதிகளையும், தியாகிகளையும் கரைத்து கூற முயவில்லை.... அவர்கள் துணிச்சல் மிக்க சற்று விசாலமான புத்தியுள்ள சுயநல வாதிகள்... படைப்பின் தத்துவமே பிறருக்கென வாழ்வதே.... பூவில் தேனை வைத்தான் அதை வண்டுக்கும் சொல்லி வைத்தான்... இதில் யார் யாரால் பயன் பெறுகிறார்கள் இப்படி மனிதன் இருக்க வேண்டும்.. அது நியதி... அடுத்தவனை பிடுங்காமல் தனக்கென வாழாதவன் யாவரும் தியாகிகளே என்பது எனது எண்ணம்... அது தான் மனித குளத்தின் இயல்பும்... "இயல்பது கரவேல்"

சார்வாகன் said...

வண்க்கம் சகோ
நல்ல பதிவு,இமாதிரி தமிழர்களை சிந்திக்க வைக்கும் பதிவுல்கின் வருவது நன்மையே!!!!!!
நான் சொல்ல வந்த பல் கருத்துகளை நம்ம சகோக்கள் வவ்வாலும் இராஜராஜனும் சொல்லி விட்டர்கள் என்றாலும் கொஞ்சம் மிசம் மீதம் சொல்லுகிறேன்.

சுயநலம்,பொதுநலம் என்று பொத்தாம் பொதுவாக கூற முடியாது.
சுயம் என்பது எப்படி வரையறுக்கப் படுகிறது என்பதை பொறுத்தே அது பொதுநலமாகவும் இருக்கும் வாய்ய்ப்பு ஆகிறது. நான்,என் குடும்பம்,சுற்றம்,நண்பர்கள்,சாதி,மதம்,மாநிலம்,நாடு,உலகம் என்ற கொள்கை வளர்சியில் ஒவொருவரும் ஒரு கட்டத்தில் நின்று விடுதல் இயல்பே!!!!!!.
உலகில் உள்ள மனிதர்கள்,உயிரினக்கள் அனைவரையும் நேசிக்கும் மகாத்மாக்கள் இபோது யாரும் இருக்கிறர்களா என்பதை அறியேன்!

த்ன்னை மட்டும் மந்தில் இறித்தி செயல்கள் புரிவோரும் சிலரே!.இவர்கள் சரியான மனநிலையில் இருக்க வாய்ப்பு குறைவு.

ஆகவே மனிதன் ஒரு சமூக விஅலங்கு என்பதால், ஒரு குழுவாக ஐக்கியப் படுத்துகிறான்.குழுவிற்குள் ஒற்றுமை(பொதுநலம்) ,பிறகுழுக்களை விட தன் குழுவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயல்பும் கூட்டு சுயநல்மே!!!!!!!.

குழுவிற்காக் தன் தனிப்பட்ட நலங்களை விட்டுக் கொடுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட குழுக்கள் வளர்ச்சி பெறும்.

இப்படி வளர்ந்த குழுக்களில் சுயநல்வாதிகளே தலைவர்களாக் இருக்க முடியும்!!!!!!!!!
இந்த வரையறுப்பில் அனைத்து உல்க வரலாறும் அடங்கி விடுகிறாது

என்னே ஒரு முரண்பாடு.
நன்றி

ஹேமா said...

எல்லா உயிர்களுமே சுயநலத்தோடுதான் வாழ்கிறது.தன்னை முதல் காத்துக்கொண்டு கவனித்துக்கொண்டுதான் அடுத்த பிரச்சனையைக் கவனிக்கும்.
இதுதானே இயல்பு !

Radhakrishnan said...

அற்புதமாக கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

//Robin said...
//ஆனால் எந்த இறைவனின் பாதம் தொட்டாலும் மரணம் என்பது மட்டும் எல்லா உயிர்களுக்கும் உறுதி என்பதை ஒருபோதும் எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை.// மரணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதும் இறைநம்பிக்கையேடு இருப்பதற்கு ஒரு காரணம்தான்.

சிந்திக்கவும்.//

மனிதர்கள் இறை நம்பிக்கையோடு இருப்பதற்கு மரணம் ஒரு காரணமாக இருக்க இயலாது. ஏனெனில் எல்லா உயிரினங்களும் இறந்து போகத்தான் செய்கின்றன. அதைவிட இறை நம்பிக்கை இல்லாதவர்களும் இறக்கத்தான் செய்கிறார்கள் ராபின்.

அவதாரங்கள், தூதர்கள் என எல்லாருமே இறந்து போனதாகவே வரலாறு உண்டு அல்லவா.

Radhakrishnan said...

//வவ்வால் said...
ரா.கி,

நல்லா அலசி இருக்கீங்க. பொது நலம் என்பதே தியாகம் தான் , ஒன்றை விட்டுக்கொடுத்தலே தியாகம் தான் அதுவும் பலன் எதிர்ப்பார்க்காமல். ஏன் சுயநலம் மிகுகின்றது என்றால் அதுவும் இயற்கையே,

விலங்குகளின் வாழ்வியல் நியதி,

survival of the fitest =சுயநலம் = animal insticts


மனிதர்களின் வாழ்வியல் நியதி,

common sense = human nature = பொது நலம் பேணுதல்.

மனிதர்களுக்கும் , விலங்குகளுக்கும் வேறுபாடு எனச்சொல்லப்படுவது பகுத்தறிவு, பகுத்தறிவு மழுங்கும் போதே சுய நலம் என்ற மிருக குணம் தலைத்தூக்கும்,எனவே உலகில் மிருகங்கள் அதிகம்னு சொல்லிடுங்க :-))//

ஹா ஹா வவ்வால், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகம். மக்களை மாக்கள் என்று எத்தனை எளிதாக சொல்லிட்டீங்க.

தியாகம் என்பது வேறு, பொதுநலம் என்பது வேறு. தியாகம் சுயநலத்தின் காரணமாகவும் நடைபெறலாம் என்பதற்கான சாத்தியகூறுகள் நிறையவே உண்டு.

பாவம், புண்ணியம், உண்டியல், லஞ்சம். இறைவனுக்கு லஞ்சம் தரப்படுவதில்லை வவ்வால். எல்லாம் மனிதர்கள் மனிதர்களுக்காக செய்து கொள்வது. கோவில்கள் எல்லாம் பொது நலத்திற்கு என சேவை செய்தல் வேண்டும். கோவில்களின் நோக்கம் சிதைந்து போனதில் சுயநலவாதிகளுக்கு பெரும் பங்கு உண்டு.

Radhakrishnan said...

//மனசாட்சி said...
சுயநலவாதிகள் விளக்கம் - அடேங்கப்பா....பகிர்வுக்கு நன்றி//

ஆச்சர்யமோ, பரிகாசமோ சுயநலவாதிகளை விளங்கிக்கொள்வது அத்தனை எளிதில்லை மனசாட்சி.

Radhakrishnan said...

//ராஜ நடராஜன் said...
வவ்வால் இங்கே பற்ந்துகிட்டிருக்குதாக்கும்:)

நீங்க கோல்டிலாக்ஸ் கோட்பாடு பற்றி விபரிக்கும் போது எனக்கு இன்னும் ஒன்று தோன்றுகிறது.சந்திரன் சூரியனுக்கு அருகில் நீர் ஆவியாகவும்,செவ்வாய் உறைநிலைக்கும் மாறுகிறது.ஆனால் பூமி சரியான தட்ப வெட்பநிலையினால் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாகிறது என்றால் பூமிக்குள்ளும் சூரியனுக்குப் பக்கத்தில் மாதிரி உறைநிலை பூமியும்,ஆவிநிலை!பூமியும் இருக்கவே செய்கின்றன.உறைநிலை அண்டார்டிகா போன்ற இடத்திலும் உயிரினங்கள் வாழ்கின்றனவே.ஆவிநிலை மேற்கத்திய நாடுகளிலும் உயிர் வாழ்வு பெருகி விட்டதே!உறைநிலை,ஆவிநிலை இரண்டையும் கடந்த சகாரா,வளைகுடா சூட்டுநாடுகள் கூட உயிர் வாழ்தலை தக்கவைத்துக்கொண்டனவே.

சரியான சீதோஷ்ணநிலை இருப்பதால் இந்தியா,சீனாவின் ஜனத்தொகை அதிகரிக்கிறதா என்றால் மண்ணின் பரப்பளவிலான ஒப்பீடாக மட்டுமே கருத முடியும்.//

அதாவது மொத்த சூழலும் இங்கே விவரிக்கப்படுகிறது. தண்ணீர் ஆவியாதல், தண்ணீர் உறைநிலை அடைதல் எல்லாம் பூமியில் இருந்தும் இங்கே உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் ஆகின்றது என்றே கொள்ளல் வேண்டும். பாலைவனத்தில் வளரும் செடி. அதே பாலைவனம் போன்ற செவ்வாயில் எதற்கு இல்லை எனக் கேட்டால் அதுதான் சுயநல கோட்பாடு.

எனவே மண்ணுக்கு மட்டுமல்ல, விண்ணுக்கும், விண்ணைத் தாண்டிய உலகுக்கும் என எல்லாவற்றிற்கும் சுயநல கோட்பாடு நிறைவாகவே பொருந்தும்.

Radhakrishnan said...

ஹா ஹா,வவ்வால். மக்களின் ஜனத்தொகை பற்றி ஒரு அழகிய படம் எடுத்து அதோடு மட்டுமில்லாமல் தவறான வார்த்தையை எழுதியதற்கு திருத்தமும் கொடுத்து மிகவும் சிறப்பாகவே கருத்துகளை சொல்லிவிட்டீர்கள்.

தற்போது வீட்டுக்கு ஒன்று, அல்லது வீட்டுக்கு இரண்டு என குழந்தைகள் ஆகி குடும்பம் சுருங்கிப் போனதற்கு சீதொசன நிலை காரணம் அல்ல. சுயநலத் தன்மை அதிகம் ஆகிவிட்டது.

Radhakrishnan said...

//தமிழ் விரும்பி ஆலாசியம் said...
சுயநலம் இல்லாது போகின் என்ன ஆகும் என்றும் யோசிக்க வேண்டும். நிறைய இயக்கங்கள் நின்று போகும்...
நீங்கள் சொல்லும் சுயநலம் என்பது தன்னைத் தான் பேணுவதில்லை... அடுத்தவனுடையதை பிடுங்கி தன்னைத் தான் பேணுவது.

சரி இதிலே கவனிக்க வேண்டியது... பொதுநல வாதிகள் சிறு அளவினர், தியாகிகள் இன்னும் சிலரே இருந்தும் அவர்களின் பொது நலம் வெற்றிப் பெறுவது யாரால் என்றால் முதலிலே சொன்ன சுயநல வாதிகளால். அவர்கள் ஒத்துழைக்காத பொது இவர்களின் பொது நலம் எப்படி சாத்தியம். அப்படியானால் அவர்களும் பொது நலவாதிகளே என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும் அல்லவா!


"இயல்பது கரவேல்"
இயற்கை எப்படி அதனதன் இயல்பை மறக்காமல் இருக்கிறதோ அப்படி மனிதனும் இருக்க வேண்டும்...
அறிவியலும் ஆன்மீகமும் ஒருங்கே வளர வேண்டும் அப்படி இல்லாத போது... இவர்களின் இயல்பு மாறும்.


கடவுள் சுதந்திரமானவர் அவர் இந்த பிரபஞ்சத்தைப் படைக்க எந்த காரணமும் தேவை இல்லை... காரண காரியங்களுக்கு அப்பார்ப் பட்டவர் என்பதால் அது போன்ற கேள்விக்கே இடமில்லை என்கிறது வேதாந்தம்.


தாங்கள் கூறும் சுயநலம், பொதுநலம், தியாகம் இவற்றிற்குப் பின்னால் அது தான் நிற்கிறது... இல்லைஎன்றால் அதைப் பற்றிய சிந்தனையே அவசியம் இல்லை...

பொதுநலம், தியாகம் என்பதே சுய நலம் தான்...

பிறருக்காக வாழும் யாரும் போது நல வாதிகளே.... என்ன அடுததவனை அடித்து பிழைக்காமல் இருந்தாலே போது மானது.//

மிக்க நன்றி தமிழ்விரும்பி ஐயா. அருமையான, விரிவான கருத்துகள். முதன் முதலில் எழுதிய நாவலில் பொது நலமும் சுயநலம் என ஒரு கருத்தை வைத்தேன். அது போன்றே அருமையாக எழுதி இருக்கிறீர்கள். ஆக உலகம் சுயநலவாதிகளால் ஆனது!

Radhakrishnan said...

//சார்வாகன் said...
வண்க்கம் சகோ
நல்ல பதிவு,இமாதிரி தமிழர்களை சிந்திக்க வைக்கும் பதிவுல்கின் வருவது நன்மையே!!!!!!
நான் சொல்ல வந்த பல் கருத்துகளை நம்ம சகோக்கள் வவ்வாலும் இராஜராஜனும் சொல்லி விட்டர்கள் என்றாலும் கொஞ்சம் மிசம் மீதம் சொல்லுகிறேன்.

சுயநலம்,பொதுநலம் என்று பொத்தாம் பொதுவாக கூற முடியாது.
சுயம் என்பது எப்படி வரையறுக்கப் படுகிறது என்பதை பொறுத்தே அது பொதுநலமாகவும் இருக்கும் வாய்ய்ப்பு ஆகிறது. நான்,என் குடும்பம்,சுற்றம்,நண்பர்கள்,சாதி,மதம்,மாநிலம்,நாடு,உலகம் என்ற கொள்கை வளர்சியில் ஒவொருவரும் ஒரு கட்டத்தில் நின்று விடுதல் இயல்பே!!!!!!.
உலகில் உள்ள மனிதர்கள்,உயிரினக்கள் அனைவரையும் நேசிக்கும் மகாத்மாக்கள் இபோது யாரும் இருக்கிறர்களா என்பதை அறியேன்!

த்ன்னை மட்டும் மந்தில் இறித்தி செயல்கள் புரிவோரும் சிலரே!.இவர்கள் சரியான மனநிலையில் இருக்க வாய்ப்பு குறைவு.

ஆகவே மனிதன் ஒரு சமூக விஅலங்கு என்பதால், ஒரு குழுவாக ஐக்கியப் படுத்துகிறான்.குழுவிற்குள் ஒற்றுமை(பொதுநலம்) ,பிறகுழுக்களை விட தன் குழுவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயல்பும் கூட்டு சுயநல்மே!!!!!!!.

குழுவிற்காக் தன் தனிப்பட்ட நலங்களை விட்டுக் கொடுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட குழுக்கள் வளர்ச்சி பெறும்.

இப்படி வளர்ந்த குழுக்களில் சுயநல்வாதிகளே தலைவர்களாக் இருக்க முடியும்!!!!!!!!!
இந்த வரையறுப்பில் அனைத்து உல்க வரலாறும் அடங்கி விடுகிறாது

என்னே ஒரு முரண்பாடு.//

மிக்க நன்றி சகோ. புரிந்து கொள்ள முடிகிறது. கூட்டு சுயநலம் பற்றிய அறிய தந்தமைக்கு நன்றி.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஹேமா. இயல்பு என சொல்லிக்கொண்டே நாம் சுயநலவாதிகள் ஆகிப்போனோம், அவ்வளவுதான்.