Wednesday 19 February 2014

ஆண் கேட்க வந்தவள்

அடேங்கப்பா ஆண்டாள் - 4

பெண் பார்க்க போறது எல்லாம் ஒரு வைபவம் மாதிரியே நடக்கும். முதலில காமிப்பாங்க, அப்புறம் ஜாதகம் பார்ப்பாங்க இதெல்லாம் சரியா இருந்தா பெண் பார்க்க போவாங்க. அப்புறம் பெண் பார்க்க போற இடத்தில் பெண்ணுக்கு என்ன என்ன தெரியும்னு கேட்டுட்டு பையனுக்கு என்ன வேலை, எவ்வளவு சம்பளம் வரைக்கும் பேசி அப்புறம் பலகாரங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொடுத்து அதோட ஒரு காப்பி கொடுப்பாங்க.

இந்த பொண்ணு அன்னைக்குன்னு சும்மா ஜெகஜோதியா அலங்காரம் பண்ணி உலகத்திலே இல்லாத வெட்கத்தை எல்லாம் ஒரு சேர முகத்தில் சேர்த்து அன்னப்பறவை நடை சேர்த்து குனிஞ்ச தலை நிமிராமல் அப்படியே பாத்தும்  பாக்காமல் காபி கொடுத்துட்டு போவாங்க. பொண்ணு பிடிச்சி இருந்தா அந்த நேரத்தில் பையன் முகத்தில் தெரியும் கலக்கமிகுந்த சந்தோசம் ஒருவித  வெட்கம்தான்.

இப்ப எப்படி ஊருல பொண்ணு பார்க்கும் வைபவம் எல்லாம் நடைபெறுகிறதுன்னு தெரியலை. இதே மாதிரிதான் கிட்டத்தட்ட இருக்கும்னு வைச்சிக்கிரலாம். கல்யாணத் தரகர் பண்ண வேண்டிய வேலையை திருமண இணையதளங்கள் பண்ணி கொடுக்குது இப்ப.

சில விசயங்கள் மனசுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு எல்லா வைபவங்களும் நடைபெறுது. எப்படினாலும் பெண் கேட்கும் படலம் இருக்கத்தான் செய்து. இது அந்த காலத்தில் கூட உண்டு. சீதையை பெண் பார்க்க வந்த அரசகுமாரர்களுக்கு போட்டி வைத்து அதில் வில் உடைத்து வென்ற ராமனே மணாளான். உண்மையிலேயே ராமன் வில் உடைத்தது அவருடைய பராக்கிரம உடல் வலிமை எல்லாம் கிடையாது. எல்லாம் சீதையின் கடைக்கண் பார்வை வந்த வலிமைதான். என் வலிமை பெண்ணால் வந்ததா அப்படின்னு ராமர் வருத்தப்படமாட்டாரு.

ஆனா ஒரு பெண் ஆண் கேட்க இந்த பூவுலகில் வலம்  வந்தாள். அவள் தான் நம்ம ஆண்டாள். உனக்கு எந்த மணாளன் வேண்டும் எடுத்துக்கொள் என்று எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்குப் பிடித்த மணாளானை தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள். ஆனால் அந்த மணாளானை தான் தேர்ந்தெடுக்கும் முன்னர் பட்ட பாட்டிற்கு தமிழ் பெருமை கொண்டது.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோராச் சோர்வேனை 
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே 

என்னை சேராதிருந்தால் அந்த திருவேங்கடத்தானுக்கு என்ன பெருமை, என்னை இப்படி அழ வைக்கின்றானே, என் பெண்மையை அழிக்கின்றான் என மேகங்களிடம் சொல்லித் தவிக்கும் ஆண்டாள் தவிப்பு மேகங்களிடம் ஆண் கேட்டவள். நீ உடன் இருக்க நான் வேண்டினேன் என்பதுவே இது.

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு 
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் 
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே 

மார்புடன் மார்பாக தான் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் பிறந்து இருக்கிறேன் என சொல்லுமாறு மேகங்களை பணித்த ஆண்டாள், வேங்கடவனின் மார்பில் அந்த நப்பினை பிராட்டி இருப்பதை தெரிந்தேதான் கேட்கிறாள். அடடே ஆண்டாள் பிறரின் கணவன் உனக்கு ஏனடி என்று பெற்ற அப்பா ஓங்கி நாலு அறைவிடாமல் எந்த மணாளன் வேண்டுமென சொல் என்றல்லவா சொல்லி இருக்கிறார் என்பது ஏனெனில் நப்பின்னையே ஒரு ஆண்டாள் உருவம் கொண்டு வந்ததுதான், ஆக அந்த பரந்தாமன் எழுந்தருள வேண்டியதுதான் பாக்கி.

தனக்கு என ஒரு மனைவி இருக்க எப்படியம்மா அவன் கீழிறங்கி வருவான் என்றே நாம் நினைக்க அந்த பரந்தாமன் அருள் பாலித்து வந்தான் என்றே சொல்கிறது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் காதல் தூய்மையானது.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் 
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே 

இந்த பாடலுக்கு ஏதோ ஆண்டாள் பரந்தாமனுடன் ஒருநாளேனும் வாழ்ந்து அதாவது கலவி செய்து விடவேண்டுமென ஆசைப்பட்டு அழைப்பது போல் ஓரிடத்தில் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டாளின் எண்ணம் கலவிக்காக அன்று. அது காதல். ஒரு நாளேனும் அவர் வந்து என்னை அரவணைத்துக் கொண்டால் எனது கொங்கைகளின் மேல் நான் தடவி இருக்கும் குங்கும பூச்சு அழியும், அந்த ஒருநாள் என் உடன் இருக்கும் அன்பு கூட போதும். நான் அந்த நப்பினை பிராட்டியின் அவதாரம் என்றே அந்த பரந்தாமன் அறியமாட்டாவோ என்பதற்கே ஒருநாள் போதும், என் உயிர் வாழும் என்கிறாள்.

அடேங்கப்பா ஆண்டாள், நீ கொண்ட அந்த பரந்தாமன் மீதான காதலில் உனது மார்புக்கு நீ கொடுத்த முக்கியத்துவம் எதற்கு என்றே எண்ணிப் பார்க்கிறேன். காரணம் உனக்கு தெரியாததா ஆண்டாள்.


(தொடரும்) 

No comments: