Saturday, 30 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)

பயணம் - 2
அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு துபாய் பயணத்திற்குத் தயாரானோம். பொதுவாக இங்கு யாராவது ஒருவர், ஊருக்கு செல்பவரை விமானநிலையம் சென்று அனுப்பி வைத்து வருவதும், அழைப்பதும்தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அன்று வேலை நாள் ஆனதால் பலருக்கு முடியாமல் இருந்தது. அப்பொழுதுதான் கெளரிபாலன் தொடர்பு கொண்டார். ''எங்கள் வீடு வரை உங்கள் வாகனத்தில் வாருங்கள், விமான நிலையம் ஐந்து நிமிடங்கள் தான், நான் ஏற்பாடு செய்கிறேன்'' என அவர் சொன்னபோது 'அட' என மனதுக்குள் தோன்றியது என்னவோ உண்மை. 

ஆனால் உறவினர் ஒருவருக்கு இரவு வேலை என்பதால் அவர் விமான நிலையம் வருவதாக சொல்ல கெளரிபாலனின் உதவியை நாட இயலாது போனது. துபாய் எப்படி இருக்குமோ? அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு சென்று விமானம் தரையிறங்குகிறது, எப்படி ஹோட்டல் சென்று அடைவோம் என நினைக்கையில் சற்று பயமாகத்தான் இருந்தது. சகோதரி சுந்தராவும், புவனாவும் விமானநிலையம் வருவதாக சொன்னார்கள், நான் தான் 'நள்ளிரவு என்பதால் வர வேண்டாம், நாங்கள் ஹோட்டல் சென்று விட்டு காலையில் சந்திப்போம்' என சொல்லி இருந்தேன். 

துபாய்க்கு கிளம்பும் சில நாட்கள் முன்னர் புவனா ஒரு திட்டம் பற்றி கூறினார். அதாவது புவனாவும், அவரது தோழி மஞ்சுவும், சுந்தரா சகோதரி வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் அங்கே சந்திக்கலாம் எனவும் அதனால் எனக்கு சிரமம் இருக்காது என சொன்னார். நான் உடனே சரி என சொன்னேன். அவர்களுக்கு சிரமம் இருக்கும் என கொஞ்சம் கூட யோசனை வரவில்லை!!! நான் எதிர்பார்த்த துபாய் வேறு! 

இங்கே நினைத்தவுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டோ, பேருந்திலோ, இரயிலிலோ சென்று பழக்கப்பட்டுப் போனதால் அங்கேயும் அப்படித்தான் இருக்கும் என எண்ணினேன். ஷார்ஜாவிற்கும் துபாய்க்கும் 15-25 நிமிட பயணம் தான் என அறிந்து இருந்தேன், அதாவது போக்குவரத்து நெரிசல் இல்லாது இருந்தால்!

எனது மனைவிக்கும், மகனுக்கும் துபாய்தனை பார்க்க அதீத ஆர்வம் இருந்தது. ஒரு வித்தியாசமான பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் மூவர் மட்டுமே சேர்ந்து தொடங்கிய முதல் பயணம் இதுதான் என நினைக்கிறேன். 

எமிரேட்ஸ் விமானத்தில் தான் பயணம் செய்தோம். நள்ளிரவு 12 மணியை துபாய் அடைந்தபோது விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமிட ஆரம்பித்தது. தரையிறங்க வாய்ப்பில்லாமல், மழை பெய்வதாக விமானி அறிவித்துக் கொண்டே இருந்தார். சுற்றிய சுற்றில் என் மகன் நவீனுக்கு வாந்தி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்ட பின்னர் தரையிறங்கியபோது மணி 1.20 ஆகிவிட்டது. 

யாரிடம் கேட்டு ஹோட்டல் செல்வது என எண்ணிக்கொண்டே பிரமிப்புடன் அந்த விமான நிலையத்தில் நடந்து சென்றேன். அற்புதமான கட்டிட அமைப்பு. மிகவும் அழகாக இருந்தது. சிலமுறை துபாய் வழியே பயணித்து இருந்தாலும் துபாய் விமான நிலையத்திலிருந்து வெளிச் செல்ல நடந்தது இதுவே முதல் முறையாதலால் அற்புதம்தனை பார்க்க முடிந்தது.

விமான நிலையம்விட்டு வெளியே வர ஆச்சரியமூட்டும் வகையில் வரிசையாக 'டாக்ஸி' அணிவகுத்துக் கொண்டிருந்தது. அதை ஒழுங்குபடுத்தியும், வரிசையாக வந்த பயணிகளை 'டாக்ஸி' யில் ஏற்றி அனுப்பிய விதம் மிகவும் அருமை. 'டாக்ஸி' யில் நாங்கள் பதினைந்து நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் வந்தடைந்தோம். டாக்ஸி ஓட்டியவர் ஆங்கிலத்தில் பேசவில்லை, பொதுவாக பேசவே இல்லை. நான் காட்டிய முகவரி பார்த்தார், ஹோட்டலில் வந்து இறக்கினார். உரிய கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டுக் கிளம்பினார். ஹோட்டலில் ஆரஞ்சு பழச்சாறு தந்து வரவேற்றார்கள். வித்தியாசமாகத்தான் இருந்தது!

ஹோட்டல் அறைக்குச் சென்று பார்த்ததும் 'அப்பாடா' என இருந்தது. லதா குறிப்பிட்டபடி மிகவும் பிரமாதமான ஹோட்டலும் இல்லை, அதே வேளையில் மோசமானதும் இல்லை. துபாயில் முன் தினம் தான் நல்ல மழை எனவும் சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பப்பட்டதாகவும் பின்னர் ஹோட்டல் பணியாளர்கள் மூலம் அறிந்தேன். வெயில் அடிக்கும் ஊரில் இதுவும் வித்தியாசம்!!!(தொடரும்)

5 comments:

Paleo God said...

வெயில் அடிக்கும் ஊரில் இதுவும் வித்தியாசம்!!!//
படிக்கும்போதும் இதுதான் எனக்கும் தோன்றியது..:)) தொடருங்கள்.. :))

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள். தொடந்துவருகிறோம்..

http://niroodai.blogspot.com

Radhakrishnan said...

மிக்க நன்றி ஷங்கர்

மிக்க நன்றி மலிக்கா.

கலகலப்ரியா said...

//நாங்கள் மூவர் மட்டுமே சேர்ந்து தொடங்கிய முதல் பயணம் இதுதான் என நினைக்கிறேன். //

இல்ல இல்ல... வாழ்க்கைப் பயணம் எப்பவோ ஆரம்பிசிடுத்தே... =)

Radhakrishnan said...

ஆமாம் கலகலப்ரியா, அது என்னவோ உண்மைதான். :)