Thursday, 14 January 2010

வெறும் வார்த்தைகள் - கருத்துரை

தங்களின் "வெறும் வார்த்தைகள்" படித்தேன். முடித்ததும் வெறும் வார்த்தைகளா இவை? என்ற வினா எழுந்தது உண்மை. பதில். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. பெரும் வார்த்தைகள். மற்றவர்களும் பெற வேண்டிய வார்த்தைகள்.

ஆன்மீகம், அறிவியல், காதல், மனித நேயம், ஜீவகாருண்யம் என்று சொல்ல வந்த வார்த்தைகள் அடக்கத்திலும், ஆற்றலிலும் அடர்த்தி மிக்கவை.

உறங்'குகை'யில் உயிர் நிற்கும் இடமேது
உணர்வில்லா நிலையில் கூட
உன்னை மட்டும் உணர்தலுக்கு நிகரேது.
இல்லை நீயெனச் சொல்லுதற்கு சொல்லைத் தந்து விட்டு
எல்லையிலா அண்டவெளியில் மறைந்து நின்று
காத்து அருளிகின்றாயோ அறிவதற்கு...

இந்த வினாக்கள் மனத்தில் எழுப்பும் அதிர்வலைகளை வார்த்தகளுக்குள் வரையறுத்தல் சிரமம். உறங்குகையில் என்பதைக் கூட இருவிதமாகப் பொருள் கொள்ளத் தூண்டுகிறது. உறங்குதல் என்பது தூக்கம். அதையே பிரித்து (குகையை எண்ணிப்) பார்த்தால் புரியும் பொருளின் தளம் அர்த்தம் பெறுகிறது. சலனமற்ற நீர் வெளியில் வந்து விழும் கூழாங்கல் எழுப்பிச் செல்லும் அலைகளைப் போல் ஞான வட்டம் முடிவிலியாய் விரிந்து கொண்டே போகிறது.

உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்.

அரூபமான இறைவனைப் போற்ற ரூபங்கள் அவசியமல்ல. அவன் அத்தனை மொழிகளும் தெரிந்தவன். மௌனம் தரும் அடர்த்தியை பேச்சு மொழி தந்து விடாது. காதலின் பால பாடம் மௌனம் தான். அறியாமையை அறிந்து கொள்வது தான் ஆன்மத் தேடலின் ஆதி. இந்தச் சூட்சுமத்தை ஆங்காங்கே பொடி வைத்து வெடி வைத்திருக்கிறீர்கள்.

நிலத்தடியில் புதைந்த விதை. தருணம் வந்ததும் துளிர் விட்டுத் தளிர் விடுவது போல நிச்சயம் பலன் வரும் தங்கள் வார்த்தைகளுக்கு. அதற்கான நம்பிக்கையை நிறையவே விதைத்திருக்கிறீர்கள். வாய்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள நுண்ணிய திரையை உரசிப் பார்க்கும் கேள்விகளை நிறையவே எழுப்பியிருக்கிறீர்கள். சில கவிதைகளை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமே என்று சொல்கிறது வாசக மனம்.

"வெறும் வார்த்தைகள்" மனித மனங்களில் மாற்றத்தைப் பெற்றுத் தரும். அப்போது அவை அட்சர இலட்சம் பெறும்.

எல்லாருக்கும் பொதுவான இறைவனின் ஆசியையும், ஞானத்தையும் அனைவருக்கும் வேண்டியவனாய்.


வெறும் வார்த்தைகள் கவிதைத் தொகுப்பு பெற:

தமிழ் அலை
1, காவலர் குறுந்தெரு,
ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை
சென்னை ‍ 600 015
தொடர்புக்கு: 00919786218777

Post a Comment

15 comments:

தேவன் மாயம் said...

"வெறும் வார்த்தைகள்" மனித மனங்களில் மாற்றத்தைப் பெற்றுத் தரும். அப்போது அவை அட்சர இலட்சம் பெறும்.///

உண்மைதான்!!! பொங்கல் வாழ்த்துக்கள்!

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிக்க நன்றி டாக்டர், மீண்டும் பொங்கல் வாழ்த்துகள்.

Chitra said...

ிலத்தடியில் புதைந்த விதை. தருணம் வந்ததும் துளிர் விட்டுத் தளிர் விடுவது போல நிச்சயம் பலன் வரும் தங்கள் வார்த்தைகளுக்கு. ...........பாராட்டுக்குரிய வரிகள்.

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிக்க நன்றி சித்ரா அவர்களே.

இந்த கவிதைத் தொகுப்பில் 'கலர்கனவுகளுடன் கவிதை வருமாம்' என எழுதி இருக்கிறேன். கலர் என்பது தமிழ்வார்த்தை என எப்படி எனது என் மனம் எண்ணியது எனத் தெரியவில்லை.

வெட்கமாகத்தான் இருக்கிறது.

பலா பட்டறை said...

மன்னிக்கவும் இன்றைக்குத்தான் உங்கள் பக்கம் பார்க்க முடிந்தது.. தொடர்கிறேன்..

பொங்கல் வாழ்த்துக்கள்..:))

வானம்பாடிகள் said...

அழகான விமரிசனம் வெ. இரா. புத்தகம் எங்கு கிடைக்கும்? முகவரி போடலாமே.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

Thekkikattan|தெகா said...

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், திரு. வெ.இரா!!

ஓ! இது உங்களது கவிதை புத்தகத்தின் விமர்சனமா? அழகு!

அன்புடன்,
தெகா.

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிக்க நன்றி பலா பட்டறை அவர்களே.

மிக்க நன்றி ஐயா, முகவரிதனை இணைத்துவிட்டேன்.

மிக்க நன்றி அண்ணாமலையான் அவர்களே.

மிக்க நன்றி தெகா அவர்களே. ஆம், கருத்துரையை புத்தகத்திலும் இணைத்துவிட்டேன்.

ஜெஸ்வந்தி said...

அழகான நடையில் , ஒரு அழகான விமர்சனம் நண்பரே.

hayyram said...

நல்ல விமர்சனம். அழகு.

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிக்க நன்றி ஜெஸ்வந்தி மற்றும் ராம் அவர்களே.

வானம்பாடிகள் said...

முகவரிக்கு நன்றி சார்.:)

PLEASE HELP said...

நண்பரே நான் உதவி கேட்டு வந்துள்ளேன் இணையதளம் ஆரம்பிக்க ஒரு பெயரை தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன், என்னிடம் ஐஓபி வங்கி கணக்கு மட்டும்தான் உள்ளது அந்த பெயரை டாட் காம் என்ற புலத்துடன் பதிவு செய்ய முதலில் நான் என்ன செய்ய வேண்டும் இந்த ஒரே ஒரு உதவியை கேட்க்க please1helpme.plogspot.com என்ற தளத்தையே உருவாக்கியுள்ளேன் எல்லா திட்டங்களையும் வைத்துள்ளேன் ஆனால் வழிகாட்டுவதற்குதான் ஆளில்லை யாராவது உதவி செய்வீர்களா!

V.Radhakrishnan said...

கொஞ்சம் எனது வலைப்பூவில் இடது பக்கம் பார்த்தால் இணையதளம் ஆரம்பிக்க வேண்டுமா என ஒரு இணைப்பு இருக்கும். அங்கு நீங்கள் இணைந்து தொடங்கலாம். ஒரு ரூபாய் தான். :)