Wednesday 5 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா?

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்திய  விடுமுறை பயணம்  முடிந்து போன அலுப்பு மனதை அழுத்தத்தான் செய்கிறது. மீண்டும் விரைவில் இந்தியா செல்ல வேண்டும் எனும் ஆர்வம் இருப்பினும், எப்போது லண்டன் சென்று சேர்வோம் என்கிற மனநிலையை இந்த விடுமுறை பயணம் விதைத்து சென்றது. 

இரண்டு வருடங்கள் முன்னர் சென்ற பயண நினைவுகள் மனதை அழுத்த, காளையார்கரிசல்குளம் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்தனை முன்னிட்டே இந்த பயணம் முடிவானது. சென்னையில் எத்தனை நாட்கள் தங்குவது என்று சில மாதங்கள் போராட்டத்திற்கு பின்னர் மூன்று நாட்கள் தங்கி செல்லலாம் என முடிவானது. இந்த மூன்று நாட்களில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்வதாகவே திட்டம், அதோடு சென்னையில் கடைகள் எல்லாம் வேடிக்கைப் பார்த்து செல்லலாம் என நினைத்து தங்குவதற்கு ஹோட்டல் தேடினோம். சென்னையில் இருக்கும் உறவினர்கள் ஏதேனும் நினைப்பார்களோ எனும் எண்ணம் எட்டிப் பார்த்தாலும் ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்து தாஜ் ஹோட்டல் தெரிவு செய்தோம். இந்த தாஜ் ஹோட்டல் ஒன்று நகரத்திலும், மற்றொன்று நகரத்தை தாண்டியும் இருந்தது. நகரம் வேண்டாம் என முடிவு செய்து ஈ சி ஆர் சாலையில் கோவளம் கடற்கரையில் அமைந்து இருக்கும் விவான்டா தாஜ் ஹோட்டல் முன்பதிவு செய்தோம். 

பெரும் ஆவலுடன் லண்டனில் இருந்து கிளம்பி அதிகாலை சென்னை வந்தடைந்தது விமானம். என்றுமில்லாத திருவிழாவாக மேலும் இரண்டு விமானங்கள் துபாய் மற்றும் இன்னொரு இடத்தில் இருந்து அதே வேளையில் வந்து இறங்க விமானநிலையத்தை விட்டு வெளியே வரும் முன்னர் போதும் போதும் என்றாகிப்போனது. நேராக விளாச்சேரியில் உள்ள ஆள் இல்லாத உறவினர் வீட்டில் சென்று முதலில் இறங்கினோம். புதிதாக கட்டப்பட்ட வீடுகள். அந்த இடத்திற்கு செல்லும் பாதையோ கிராமப் பாதை போல் மோசமாக இருந்தது. 

காலை உணவு சாப்பிடலாம் என கடைக்கு சென்று பொட்டலம் வாங்க சென்றவர்கள் வர நாழிகை ஆகி கொண்டே இருந்தது. ஓரிரு மணி நேரம் பின்னர் அவர்கள் பொட்டலங்கள் வாங்கி வர, சாப்பாடு கடைகள்  எல்லாம் ஏழர மணிக்கு மேல் தான் திறப்பார்கள் என்றதும் இத்தனை தாமதமாகவா திறப்பார்கள் என்றே மனம் எண்ணியது. 

லண்டனில் இருந்து எங்களுடன் வந்து இருந்த உறவினர்கள் கிராமம்  நோக்கி கிளம்பி செல்ல நாங்கள் ஹோட்டல் நோக்கி சென்றோம். மதியம் இரண்டு மணிக்கு பின்னர் தான் அறை கிடைக்கும் என்றாலும், வாருங்கள் அறை காலியாக இருந்தால் தருகிறோம் என ஹோட்டல் பணியாளர் வர சொல்லவே தைரியமாக சென்றோம். 

இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய கார். சோளிங்கநல்லூர் அருகில் சென்றபோது சென்னையில் போக்குவரத்து நெரிசலை புரிந்து கொள்ள முடிந்தது. திடீரென எங்களது கார் நின்று போனது. எத்தனையோ முறை முயற்சி செய்தும் கார் கிளம்பவே இல்லை. சாலை நடுவே கார். இருபுறங்களிலும் வாகனங்கள் விலகி சென்று கொண்டு இருந்தது. காரினை தள்ளிவிட்டால் கிளம்பிவிடும், பேட்டரி பிரச்சினை என டிரைவர் சொல்ல எவர் வந்து தள்ளுவது என நினைக்க, எங்கள் இருவரை காரிலியே இருக்க வைத்துவிட்டு காரினை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் இறங்கி சென்றதும் திக் திக் என்று இருந்தது. பயமுறுத்திய கார். 

(தொடரும்)


6 comments:

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன் - இந்தியப் பயணம் வெற்றிகரமாக முடிந்திருக்கும் என நினைக்கிறேன். பயணக் கட்டுரை நன்று- நின்ற காரினை நினைத்தால் பாவமாக இருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கோவி.கண்ணன் said...

ரொம்ப நாளாகவே காணுமே என்று நினைத்தேன், நிறைய அனுபவங்களுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறீர்கள்.

G.M Balasubramaniam said...


விடுமுறைப் பயணம் முன்னும் பின்னும் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் . மற்றும் அவை நிறைவேறுவதிலோ , அல்லாததிலோ ஏற்படுகிறது. தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள்.... அறிந்து கொள்கிறோம்...

Radhakrishnan said...

நன்றி சீனா ஐயா.

நன்றி கோவியாரே.

நன்றி ஐயா.

நன்றி தனபாலன்.

வருண் said...

***சென்னையில் போக்குவரத்து நெரிசலை புரிந்து கொள்ள முடிந்தது.***

ஜனத் தொகையோட ட்ராஃபிக் போட்டி போட்டுக்கிட்டு இருக்கு!

இதப் பத்தியெல்லாம் யாரும் கவலைப் படுறமாரித் தெரியலை.

எப்படியாவது சூப்பர் பவரு ஆனாப் போதும்னு நிக்கிறா!! :)

என்னவோ போங்க!