Friday 14 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 4

முதலில் நல்லியில் துணிகள் வாங்கலாம் என ஐயர் அழைத்து சென்றார். வேஷ்டிகளும், துண்டுகளும் மட்டுமே அதிகமாக வாங்கினார். நல்லியில் முடித்து கொண்டு லிஸ்ட் கொடுத்த பொருட்கள் வாங்க மீண்டும் அதே இடத்திற்கு சென்றோம். ஆடி கார்த்திகை என்பதால் கோவிலில் கூட்டம் நிறைந்து இருந்தது, அதோடு அந்த பாதையை அடைத்து வைத்து இருந்தார்கள். காரினை நிறுத்த எங்குமே இடம் இல்லை. என்ன செய்வது என புரியாமல் முழித்து நின்றோம். 

அப்போது ஒரு சின்ன கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்த பக்கத்தில் அப்படி அப்படியே கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடம் நோக்கி காரினை நிறுத்தினோம். ஐயர் பைக்கில் முன்னமே அந்த இடம் சென்று இருந்ததால், டிரைவர் நண்பர் காரிலிருந்து கடையை நோக்கி சென்றார். அப்போது ஒரு வேன் பக்கத்தில் வந்து நின்றது. மற்றொரு கார் எங்கள் கார் மறித்து நின்றது. எப்படி இந்த வேன், கார் எல்லாம் எடுப்பது என மலைப்பாக இருந்தது. 

நிறைய பொருட்கள் என்பதால் ஒரு சைக்கிள் ரிக்சாவில் கொண்டு வருகிறோம் என தகவல் வரவே காத்து இருந்தோம். அதே போல எடை நிரப்பும் வண்டி ஒன்றில் அனைத்து பொருட்களும் வந்து இருந்தது. அதற்கு முன்னர் அருகில் இருந்த வேன் மிகவும் குறுகிய இடைவெளியில் அந்த இடத்தை விட்டு சென்றது கண்டு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் காருக்கு முன் இருந்த கார் அப்படியே நின்று கொண்டு இருந்தது. 

சாக்கு மூட்டைகள் காரின் பின்புறம் ஏற்றினார்கள். துரியோதனன் தனது வீட்டினை வைக்கோல் மூலம் அடைத்து விட்டது போல காரின் பின்புறம் அடைக்கப்பட்டது. ஹோமம் கட்டைகள் சில வண்டியின் மேற்புறம் போட்டார்கள். அதே குறுகிய இடைவெளியில் கார் பயணித்தது கண்டு ஹூம் என்றே பெருமூச்சு விடத் தோணியது. எத்தனை நெரிசல்களிலும் லாவகமாக கார் ஓட்ட வேண்டுமெனில் இந்தியாவில் மட்டுமே கற்று கொள்ள இயலும். 

கார் பயணித்த சில வினாடிகளில் போக்குவரத்து போலீசார் காரினை ஓரம் கட்ட சொன்னார். மறுபடியும் குளிர் தாளுக்கு பிரச்சினையா என நினைக்க, டிரைவர் நண்பர் சென்று பேசிக்கொண்டே இருந்தார். என்ன பிரச்சினையோ என தெரியாமல் காருக்குள் அமர்ந்தே இருந்தோம். திரும்பி வந்தவர் காரில் லோடு ஏற்றியது குற்றம் என சொல்வதாக சொன்னார். அப்போது இன்சூரன்ஸ் படிவம் கேட்க இவரோ இரண்டு நாட்கள் காலாவதியாகிப் போன இன்சூரன்ஸ் படிவம் வைத்து இருந்தார். புதுப்பிக்கப்பட்ட இன்சூரன்ஸ் படிவம் வீட்டில் இருப்பதாக சொல்ல எனக்கோ 'அடக்கடவுளே' என்று இருந்தது. கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் வரை கேட்பதாக சொன்னார். சரி கட்டிவிட்டு வாருங்கள் என்றேன். அதெல்லாம் தேவையில்லை என சொன்னவர் போலிஸ் ஒருவருக்கு தொலைபேசி போட்டு பேசினார். 

அந்த நேரம் வந்த ஐயர் சென்று அவர்களிடம் பேச, அவர்களோ மிகவும் உறுதியாக இருப்பதாகவே தெரிந்தது. நம் மீது தான் குற்றம், இதில் அவர்கள் மீது என்ன கோபப்பட வேண்டி இருக்கிறது என்று நினைத்தே நான் எப்போதுதான் காரினை விடுவார்கள் என யோசித்தவாறே அமர்ந்து இருந்தேன். காரினை பிடித்து வைத்துக் கொள்வார்களா என்று அப்பாவியாய் கேட்டேன். இதோ வருகிறேன் என டிரைவர் நண்பர் சென்றார். அவர் கையில் வைத்து இருந்த போனை எடுத்து போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்தார். அவரும் சிறிது நேரம் பேசிவிட்டு இவரிடம் போனை கொடுத்தார். சிறிது நேரத்தில் டிரைவர் நண்பர் முன்னூறு ரூபாய் கட்டிவிட்டு வந்தார். அந்த ரசீது பார்த்தபோது வேகமாக சென்றதற்காக அபாரதம் போட்டு இருந்தது. ஹூம் இந்தியா. 

எல்லோரும் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள். நேர் வழியில் இங்கே வாழ்வது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் இந்த இந்தியாவை ஒருபோதும் சீர்திருத்த போவதில்லை. இன்சூரன்ஸ் படிவம் வைக்காத குற்றத்திற்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். லண்டனில் எல்லாம் இன்சூரன்ஸ் படிவம் எல்லாம் கையில் வைத்து இருப்பதில்லை. கார் எண் தட்டினால் போதும், காரின் மொத்த வரலாறும் தெரியும். இன்சூரன்ஸ் புதுபிக்கபட்டதா நகல் வேண்டும் என்று வேறு அந்த போலீசார் கேட்டாராம். அங்கேயே பேக்ஸ் வசதி வைத்து இருந்தால் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி ஏதேனும் தவறு எனினும் இத்தனை நாளுக்குள் நகல் அனுப்பி வை என விட்டுவிடலாம். காரினில் லோடு ஏற்ற கூடாது என்பதற்கான சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. 

எனக்கு இனி எத்தனை போலீசார் பிடிப்பார்களோ எனும் அச்சம் வேறு. அடுத்த நாள் ஹோட்டலில் இருந்து கிளம்பும் முன்னர் இன்சூரன்ஸ் படிவம் வந்தால் மட்டுமே காரை எடுத்து செல்லலாம் என நான் சொல்லி வைத்தேன். அதைப்போலவே டிரைவர் நண்பரின் அண்ணன் அங்கும் இங்கும் அலைந்து மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். கிராம பகுதியில் ஸ்கேன், பேக்ஸ் எல்லாம் வசதி ஒன்றும் பெருகிவிட வில்லை. டிரைவர் நண்பர் எவ்வளவோ சொல்லியும் நான் இன்சூரன்ஸ் படிவத்துடன் தான் செல்ல வேண்டும் என சொன்னது வீணான விசயமாகவே இருந்தாலும், முக்கியமான விசயமாகவே எனக்கு தெரிந்தது.  அதற்கு பின்னர் எவரும் காரை பிடிக்கவே இல்லை. 

நகரத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என நினைத்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு வரை செல்ல வேண்டிய நிர்பந்தம். எனவே மீண்டும் அதே போக்குவரத்து நெரிசல். விஜயகாந்த் வீடு சென்றபோது மாலை மணி மூன்று. சாலையில் குழி தோண்டி போட்டு இருந்தார்கள். அவரது வீட்டில் காவல் போடப்பட்டு இருந்தது. இருப்பினும் எவரும் எளிதாக செல்லுமாறு வீட்டின் வெளிவாயில் திறந்தே இருந்தது. 

சென்னையில் இருந்து கிராமம் நோக்கிய பயணம். நகரத்தை விட்டு வெளியேறவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிப்போனது. கார் சென்ற வேகம் மிரள செய்தது. இடம் செல்கிறார்கள், வலம் செல்கிறார்கள். ஒரு ஒழுங்கு முறை இல்லை. மெதுவாக செல்லும் வண்டி வலம் செல்கிறது. ம்ஹூம். போதும் போதும் என்றாகிவிட்டது. 

இரவெல்லாம் பயணித்து வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி ஒன்று. அப்பாடா என்று இருந்தது. தமிழகம் மட்டுமே இப்படியா! 

(தொடரும்) 

5 comments:

வவ்வால் said...

ரா.கி,

நல்லா அனுபவப்பட்டுட்டிங்க போல?

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் யு.கேவிலேயே பிறந்து வளர்ந்தவரா, அல்லது இதற்கு முன்னர் இந்தியா வந்துள்ளீர்களா? ஏன் எனில் எல்லாம்ம் முதன் முறை அனுபவம் போல விவரித்துள்ளீர்கள்.

முதல் அனுபவம் எனில் கடினம் தான் ,ஆனால் இந்தியா,தமிழகம் என வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இப்படித்தான் இந்தியா என பழகி இருக்கும்.

bandhu said...

இதில் டிராபிக் பிரச்சனையை மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் வந்தபோது இருந்ததை விட மிக அதிகமாக இருக்கிறது. பல விதங்களில் சென்னை வாழ்க்கை கொடுமையாக இருக்கிறது. விலைவாசியும் மிக மிக அதிகமாக ஏறிக்கிடக்கிறது. இருந்தாலும் என்னமோ ஒரு மாயம் இருக்கிறது. அடிக்கடி போக தோன்றுகிறது!

Radhakrishnan said...

ஹ ஹா வவ்வால். நான் இந்தியாவில் ஒரு கிராமத்தில் தான் பிறந்தேன். கிராமத்திலேயே வளர்ந்தேன். நகர அனுபவம் எல்லாம் நிறையவே குறைவு. பதினான்கு வருடங்கள் முன்னர் நான் பார்த்த இந்தியா இன்று நிறையவே வேறு வேறாக தெரிகிறது. பதினான்கு வருடங்கள் முன்னர் நான் பார்த்த சென்னையும், இன்று நான் பார்க்கும் சென்னையும் எனக்கு புதிது புதிதாக தெரிகிறது. ஐ சி எப் பேருந்தில் ஏறினால் பெசன்ட் நகர் சென்று இறங்குவேன். பெசன்ட் நகர் பேருந்தில் ஏறினால் ஐ சி எப் வந்து இறங்குவேன். அவ்வளவதுதான் எனக்கு சென்னை பழக்கம். நான் பைக் கூட இந்தியாவில் ஓட்டியது இல்லை. பழைய சுவடுகள் அழிந்து போய் இருக்கின்றன, எனது மனதிலும், இயற்கை வெளியிலும்.

Radhakrishnan said...

உண்மைதான் பந்து. என்னதான் இருந்தாலும் நமது தாய் நாடு, தாய் நாடுதான். எனக்கு எங்கள் கிராமம் மிகவும் அதிகமாக பிடிக்கும். வருடம் தவறாமல் இந்தியா செல்ல வேண்டும் என்றே நினைக்கிறேன்.

வவ்வால் said...

ரா.கி,

14 ஆண்டுகள் ஆயிற்றா ஒரு வனவாச காலம் தான் :-))

பிரச்சினைகளோட வாழ பழகியாச்சு இங்கே.

மேலும் பலரும் வெளிநாட்டில் இருந்தாலும் ஊர் நிலவரம் தெரிந்து இருக்கும், என்ற நினைப்பில் சொன்னேன்.

டிராபிக் ஜாம் ஆனால் மாற்று வழியைக்கண்டுப்பிடித்து போக கற்றுக்கொண்டாச்சு, மின்சாரம் இல்லையா இன்வெர்ட்டர், சோறு இல்லையா ,பீட்ஸா என சென்னை மக்களும் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டார்கள் எனலாம் :-))

சென்னையில் ஒரு சாண்ட்விட்ச் 150 ரூ என்றாலும் ஜஸ்ட் லைக் தட் வாங்கிட்டு மிடில் கிளாஸ் நாங்கன்னு சொல்லிக்க ஆரம்பிச்சுட்டாங்க :-))

எனக்கு அதுவே ஆச்சர்யமானது அந்த அளவுக்கு தான் நகரம் எனக்கு பழக்கம் :-))